மாணவர் அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு மறியல் போராட்டம் – மே 17 இயக்கம்

மாணவர் அகிலன் மரணத்திற்கு காரணமான கோவை கே.கே.நாயுடு பள்ளி ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமையாசிரியர் அருண்குமார் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மே 17 இயக்கம் சார்பாக அக்டோபர் 26, 2026 திங்கள்கிழமை அன்று சென்னை அண்ணாசாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில், தோழர் கொண்டல்சாமி, தோழர் கீதா உள்ளிட்ட மே 17 பதினேழு இயக்கத் தோழர்களும், பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் தோழர்களும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில், குற்றவாளிகளான ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும், பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படக் கூடாது, பள்ளிகளில் சாதியக் கொடுமைகளை தடுக்க நீதிபதி சந்துரு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பதாகைகளாக ஏந்திக்கொண்டும், முழக்கமிட்டுக்கொண்டும் தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை கைது செய்தனர்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் அவர்கள் ஆற்றிய உரை:

அனைவருக்கும் வணக்கம்.

1962-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் உள்ள எல்லாப் பள்ளிகளிலும் ”நாட்டு உறுதிமொழி” (National pleadge) எடுக்கச் சொல்வார்கள். அதில் “இந்தியா எனது நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது உடன்பிறந்தோர்” என்று இருக்கும்.

ஆனால் இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பும், விடுதலை பெற்று 1962-ல் இருந்து இன்று வரை 60, 70 ஆண்டுகள் ஆன பிறகும், இந்த இந்து சனாதன சக்திகளால், சங்க பரிவார் அமைப்புகளால் அந்த “அனைவரும் உடன்பிறந்தோர்” என்பது, குறிப்பாக சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும், குறிப்பாக தலித், பட்டியலின தோழர்களுக்கும் இன்னும் முழுமை அடையவில்லை என்பதற்கு சான்றுதான், கோவையில் உள்ள கே.கே. நாயுடு பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்த ”அகிலன்” என்ற மாணவனின் இறப்பு.

அவரது இறப்பு என்பது நிறுவனத் தவறு மட்டுமல்ல, அரசியல் தவறு என்று நாங்கள் பார்க்கிறோம். ஏனெனில் அந்தப் பிள்ளை பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தவன். கோவை வானூர்தி நிலையத்தைச் சுற்றி எட்டு கிலோமீட்டருக்கு பத்தாம் வகுப்புக்கு மேல் பதினொன்று, பன்னிரண்டு படிக்க அரசுப் பள்ளியே இல்லை. அரசு உதவி பெறும் பள்ளிகள் என்ற பெயரில் ’நாயுடு நிறுவனங்கள், பி.எஸ்.ஜி குழுமம்’ போன்றவைதான் அங்கு உள்ளன. அத்தனை பள்ளிகளின் பெயர்ப் பலகையிலும் பின்னால் சாதிப் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பிள்ளை ஐந்து மாதங்களுக்கு முன்புதான் அந்தப் பள்ளியில் சேர்ந்துள்ளான். சேர்ந்த நாள் முதல் சாதியைச் சொல்லி இழிவுப் படுத்தப்பட்டுள்ளான். மாணவர்கள் மட்டுமல்ல, தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களுமே இதைச் செய்துள்ளனர்.

நாம் எல்லோரும் பள்ளியில் படித்தோம். கல்லூரிக்குச் சென்றோம். ஆனால் கே.கே. நாயுடு பள்ளியில் இளமழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் ’பள்ளிக் குறிப்பேடு’ கொடுக்கிறார்கள். அதில் பெயர், தாய் தந்தை பெயர், தொலைபேசி எண், குருதி வகை இருக்கும். ஆனால் அங்கு சாதியின் பெயரை எழுதச் சொல்கிறார்கள். இது தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியிலாவது நடந்ததுண்டா? நாம் படிக்கும்போது பக்கத்தில் இருப்பவன் என்ன சாதி என்று தெரியுமா?

நாயுடு என்று பெயர் வைத்த அந்த நிர்வாகம் இளமழலையர் வகுப்பு பிள்ளைக்கே “நீ இந்த சாதிக்காரன்” என்று ஊட்டுகிறது.

அங்குள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று “யாரெல்லாம் உதவித்தொகை மாணவர்கள்?” என்று கேட்டுள்ளனர். அதைக் கேட்டவர் விஜயகுமார் என்ற ஆசிரியர். பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பில் உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் சென்று “யார் தலித் மாணவன் எழுந்து நில், யார் உதவித்தொகை வாங்குகிறாய் எழுந்து நில்” என்று கேட்க, அகிலன் எழுந்து நின்றுள்ளான்.

அவன் எழுந்ததும் தலைமை ஆசிரியர் வெளியே சென்ற பிறகு, “நீங்களெல்லாம் மாட்டிறைச்சி தின்பவன்தானே, எதற்கு இங்கு படிக்க வருகிறீர்கள்?” என்று கேட்டுள்ளார்.

இப்போது நாம் பள்ளி, கல்லூரி, வீடு வாடகை என்று போனால் “சைவம் மட்டும்” என்று எழுதி வைக்கிறார்கள். அப்படியானால் நாங்கள் “நீங்களெல்லாம் மாட்டு மூத்திரம் குடிப்பவன்” என்று கேட்க முடியுமா? உணவு என்பது அவரவர் உரிமை. உணவுக்கு இந்திய அரசோ, இங்குள்ள அரசோ தடை விதித்துள்ளதா? ஆனால் சங்க பரிவார் அரசியல் எங்கெல்லாம் உள்ளதோ, இந்துத்துவ சக்திகள் எங்கெல்லாம் காலூன்றுகிறதோ அங்கெல்லாம் உணவையே அரசியலாக்குகிறான்.

என்னிடம் நூறு ரூபாய் இருந்தால் கையேந்தி உணவகத்தில் உண்பேன், இருநூறு இருந்தால் சரவணா பவனில் உண்பேன், ஐநூறு இருந்தால் பெரிய விடுதியில் உண்பேன். நான் என்ன உண்ண வேண்டும் என்று சொல்ல எவனுக்கும் அதிகாரம் இல்லை.

இதைக் கேட்டு மனமுடைந்த அகிலன் பள்ளி நிர்வாகத்திடமும், நூலகத்திடமும், தலைமை ஆசிரியரிடமும் முறையிட்டுள்ளான். ஆனால் சாதியை எல்லோர் முன்னும் சொன்ன பிறகு சாதி உணர்வுள்ள மாணவர்கள் ஒரு நாள், ஒரு வாரம், பத்து நாள் அல்ல, கடந்த இரண்டு மாதமாக சாதிப் பெயரைச் சொல்லி துன்புறுத்தியுள்ளனர்.

தாங்க முடியாமல் அவன் பெற்றோரிடம் சென்று “இந்தப் பள்ளியிலிருந்து என்னை வெளியேற்றி விடுங்கள், எனக்குப் படிப்பு வேண்டாம்” என்று கையெடுத்துக் கும்பிட்டுள்ளான். அப்போது அவனது பெற்றோர் “நாங்கள் இருவரும் படிக்கவில்லை, கூலி வேலை செய்கிறோம், ஆனால் நீ படிக்க வேண்டும் மகனே, இந்த ஒரு ஆண்டு மட்டும் பல்லைக் கடித்துப் படித்துக்கொள், பன்னிரண்டாம் வகுப்பில் வேறு பள்ளியில் சேர்க்கிறேன்” என்று உறுதி கொடுத்ததால் அந்தப் பிள்ளை தொடர்ந்து சென்றுள்ளது.

ஆனால் நிர்வாகத்தின் ஏமாற்றம், யாரையும் கேள்வி கேட்காத தலைமை, இதனால் வெறுப்படைந்த மாணவன் “என் மீது சாதியைப் பூசுகிறார்களே, என் உணவை கேள்விக்குறியாக்குகிறார்களே” என்று தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். இது ”நிறுவனப் படுகொலை” என்று நாங்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறோம்.

நீதியரசர் சந்துரு குழு மிகத் தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளது. எந்தப் பள்ளியிலும், கல்லூரியிலும் சாதிப் பெயர் இருக்கக்கூடாது, நீக்குங்கள் என்று 2024-ல் பரிந்துரை செய்துள்ளது. உயர்நீதிமன்றமும் 2026-2027 முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர்கள் நீக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. ஆனால் கடந்த அரசும், இந்த அரசும் எந்த பரிந்துரையையும் செயல்படுத்தவில்லை.

இது எங்கள் பிள்ளைகள், நம் பிள்ளைகள் சாதியின் பெயரால் துன்புறுத்தப்படுகிறார்கள். சாதியைச் சொல்லக்கூடாது. ஒரு பள்ளியில் மூன்று நிர்வாகம் இருக்கும். ஒன்று அலுவலகம், அங்கு மட்டும்தான் நீங்கள் என்ன வகுப்பு என்று கொடுப்பீர்கள். இரண்டாவது ஆசிரியர்கள், மூன்றாவது மாணவர்கள். ஆசிரியர்களுக்கு நான் என்ன சாதி, எந்த இருக்கையில் உள்ளேன், என்ன உண்கிறேன் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை.

ஆனால் அந்தக் கல்லூரி நிர்வாகம் இப்படிப்பட்ட ஒன்றை ஏற்படுத்திய பிறகு, கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பள்ளிக் கல்வித்துறை என்ன செய்து கொண்டிருந்தது? கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்களை கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கக்கூடிய ஆட்சியர் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? வருவாய்த்துறை என்ன செய்து கொண்டிருந்தது? ஒரு சாதியின் பெயரால் நடக்கக்கூடிய இந்தக் கொடுமையை தட்டிக் கேட்க முடியவில்லை என்றால் எதற்கு அரசு அதிகாரிகள்?

பிள்ளை இறந்த உடனே காவல்துறையிடம் ஓடுகிறோம், வழக்குப் பதிவு செய்யுங்கள் என்று. ஆனால் காவல்துறை யாரிடம் சம்பளம் வாங்குகிறது? பி.எஸ்.ஜி குழுமத்திடமா? கே.கே. நாயுடு பள்ளிக்கூடத்திலா? அப்படி எதுவும் நடக்கவில்லை என்கிறது. எப்படி அப்படி எதுவும் நடக்கவில்லை என்று சொல்வீர்கள்? இறந்தவனின் பெற்றோர் ஓடி வருகிறோம், எங்களை அரவணைக்க வேண்டும், எங்களுக்கு நீதி வாங்கித் தர வேண்டும் என்று. ஆனால் எடுத்த உடனே கோவை மண்டலத்தில் இருக்கக்கூடிய காவல்துறையை நேரடியாக குற்றம் சாட்டுகிறோம். இல்லை என்றால் அந்த நிர்வாகம் இதைச் செய்திருக்காது. அந்தப் பள்ளிக்கூடம் எல்லாம் பெரிய இடத்துப் பள்ளிக்கூடம், நாங்கள் எல்லாம் வழக்குப் போட முடியாது என்றால், நீ சம்பளம் தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வாங்குகிறாயா? பி.எஸ்.ஜி நிறுவனத்திடம் வாங்குகிறாயா? என்ற கேள்வியை நாங்கள்(மே 17) வைக்கிறோம். இன்று இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு வார காலமாக தோழர் திருமுருகன் காந்தி தலைமையிலே கோவையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இன்று அனைத்து சனநாயக அமைப்புகளும் அங்கு போராட்டத்தை தொடர்கிறார்கள். இடைக்கால தீர்வாக அது தீர்வு கிடையாது. சி.பி.சி.ஐ.டி என்பது எங்களுக்கு ஒரு ஏமாற்றம்தான். ஆனால் எங்களுக்குத் தேவை என்பது, தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் சாதியின் பெயரால் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இதே ஒரு மாதம் முன்பு அமுதன் என்ற மாணவர் போதைப் பொருள் தொடர்பாக சொல்லப்பட்டபோது, கல்லூரி நிர்வாகமும், பள்ளிக்கூட நிர்வாகமும் செவி சாய்க்கவில்லை. அரசு நிறுவனமும் செவி சாய்க்கவில்லை. அந்த மாணவன் கொலை செய்யப்பட்டான். அப்போதும் காவல்துறை மௌனமாக இருந்தது. இப்போதும் சாதிப் பெயரால் வன்கொடுமை நடக்கிறது, ஒரு தற்கொலை நடந்திருக்கிறது. அரசாங்கம் அமைதியாக இருக்கிறது என்றால் எதற்கு இந்த அரசு?

எட்டு பேர் அமைச்சர் ஆனால் என்ன?, இருபது பேர் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் என்ன?, எனக்கு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், முதல்வரை விட இந்த நாட்டின், தமிழ் மண்ணின் ஒரு மாணவனின் உயிர் முக்கியமானது. அதனால் அரசு உடனடியாக அங்கு இருக்கக்கூடிய அந்த தலைமை ஆசிரியரையும், அந்த ஆசிரியரையும் கைது செய்ய வேண்டும். இது ஒரு பாடமாக அத்தனை கல்லூரிகளுக்கும், அத்தனை பள்ளிகளுக்கும் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அவர்களிடம் நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம்.

தவெக கட்சி தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கிறோம், திராவிடக் கட்சிகள் அதிமுகவோ, திமுகவோ தலித்துகளுக்கு முன்னுரிமை தரவில்லை என்று. ஆனால் உங்கள் ஆட்சியில் இப்படி நடக்கிறதே, ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? உங்கள் மௌனம் என்பது தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக பார்க்கிறோம். உங்களுக்கு தாராபுரத்திலும், மதுரையிலும் வாக்களித்தது தலித் மக்கள், பட்டியலின தோழர்கள் என்பதை நீங்கள் மறந்து விடாதீர்கள். உங்கள் அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. பொறுப்பில்லாமல் வாய் மூடி இருப்பது என்பது பாசிசத்தின் மனநிலை.

தமிழ்நாட்டு மக்கள் சார்பாக தமிழ்நாடு அரசு இருக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. ஒரு புறம் இருந்தாலும் உடனடியாக கோவை, கொங்கு மண்டலத்தில், குறிப்பாக கோவை மாநகரத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்த கல்வித்துறையின் தோல்விக்கு அரசாங்கம் தலையிட்டு ஒட்டுமொத்த நபர்களையும் அங்கிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும், உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு ஒருவேளை அங்கிருந்த காவல்துறை மீதோ, இதற்கு பொறுப்பெடுக்க வேண்டிய கல்வித்துறை மீதோ, ஆட்சியர் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அந்தந்த ஆட்சியர்களை, அந்தந்த வருவாய்த்துறையை, அந்தந்த கல்வி நிர்வாகத்தை நாங்கள் முற்றுகையிடுவோம், அவர்களை அம்பலப்படுத்துவோம்.

இனி நாங்கள் உட்கார்ந்து போராட்டம் எல்லாம் செய்து கொண்டிருக்க மாட்டோம். அவர்களின்(சாதி பாகுபாடு காட்டும் நபர்கள்) முகத்தை போட்டு சுவரொட்டி தயார் செய்து, ஊர் முழுவதும் ஒட்டி “இவன் சாதியவாதி, இவன் மனநிலை சரியில்லாதவன்” என்று சுவரொட்டி ஒட்டுவோம். எங்கள் பிள்ளையின் சாவுக்கு நீ நக்கல் அடித்துக் கொண்டிருப்பாயா? அவன்(அகிலன்) அப்பா அம்மாவுக்கு வயிற்று வலி, காய்ச்சல் இருக்கும்போது நீ நக்கல் அடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாயா?

இரண்டு மாதமாக துன்புறுத்தி அவனை சாகடித்திருக்கிறீர்கள். ஒரு மனசாட்சி இல்லாமல் இந்த நிர்வாகமும், இந்த நிறுவனமும், இந்த அரசும் நடந்து கொண்டிருக்கிறது. அதைக் கண்டித்து இன்று மே 17 இயக்கம் சென்னையில் ஒரு மாபெரும் மறியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்தப் போராட்டத்தில் கேட்ட உடனே பல்வேறு சனநாயக சக்திகள் பங்கு பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பெயரை வாசிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதே நேரத்தில் இந்தப் போராட்டம் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டிருந்தாலும், மே 17 இயக்கம் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் அத்தனை இடத்திலும் மறியலும், ஆர்ப்பாட்டமும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எங்களுக்கு தீர்வு தரும் வரை, அந்த மாணவனுக்கு தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: இந்த போராட்டதில் மே 17 இயக்கத்தோழர்களுடன் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் N.A.கிச்சா, அம்பேத்கர் மக்கள் படையின் தலைவர் டாக்டர் மு.மதிப்பறையனார், தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் சௌ.சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு ஜனநாயக கட்சியின் தலைவர் வழக்கறிஞர் புருஷோத்தமன், தயா அமைப்பின் மாநிலத் தலைவர் தோழர் அருண்குமார், MRPS கட்சியின் மாநிலத் தலைவர் தோழர் லோகேஷ், டாஸ் அமைப்பின் மாநிலத் தலைவர் தோழர் இஸ்ரேல், டாக்டர் அம்பேத்கர் பகுத்தறிவு இளைஞர் இயக்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் சுப்பிரமணி, பீம் இந்தியா இயக்கத்தின் மாநிலத் தலைவர் பீம் குமார், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் மாநிலத் தலைவர் பிபி சுப்பிரமணி உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »