சாதி ஒழிப்பே சமூக மாற்றம் – தமிழர் எழுச்சி பொதுக்கூட்டத்தில் திருமுருகன் காந்தி உரை

நவம்பர் 26, அண்ணல் அம்பேத்கர் சட்டம் இயற்றிய நாள், தந்தை பெரியார் சட்ட எரிப்பு நாள் மற்றும் மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழர் எழுச்சிப் பொதுக்கூட்டம் கோவையில் பீளமேட்டில் நவம்பர் 26, 2026 அன்று நடைப்பெற்றது. இதில் கோவையில் மரணமடந்த அகிலனுக்கு நீதிக்கேட்டு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் போராட்ட உரையின் தொகுப்பு:

நவம்பர் 26 என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சட்டத்தை நமக்கெல்லாம் வழங்கி, நாம் அனைவரும் சம உரிமை கொண்ட மனிதர்கள் என்பதை உறுதிப்படுத்திய இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது.

இதே நவம்பர் 26ஆம் நாளில்தான், இந்திய அரசியலமைப்பில் சாதியைப் பாதுகாக்கக்கூடிய பிரிவுகள் நீக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து, தந்தை பெரியார் அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை எரித்தார். அதற்காகப் பல்லாயிரக்கணக்கான திராவிட இயக்கப் பெரியாரியத் தொண்டர்கள் சிறை சென்றார்கள். பலர் சிறையிலேயே உயிரிழந்தார்கள்.

இவை அனைத்தையும் விட, நாம் கொண்டாடுகின்ற மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு, தமிழின விடுதலைக்காகப் படை திரட்டி எதிரிகளைச் சிதறடித்த மேதகு பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் என்பதாகும். இந்த மூன்று ஆளுமைகளும் இந்த நாளில் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களையும், அவர்களின் பங்களிப்புகளையும் நினைவுகூர்வதற்காகவே நாம் இங்கே திரண்டிருக்கிறோம்.

உண்மையைச் சொல்லப்போனால், நம்மையெல்லாம் இன்றைக்கு ஒன்றிணைத்தவர் “தம்பி- அகிலன்”. நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு நெஞ்சைப் பதறச் செய்யும் வகையில் நாம் தம்பியை இழந்திருக்கிறோம்.

அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், மேதகு பிரபாகரன் ஆகிய மூவரும் நமக்குச் சொல்லிக்கொடுத்தது ஒன்றுதான். அடிமைத்தனம் நம்மீது திணிக்கப்பட்டால், எந்த விலையைக் கொடுத்தாவது அதை உடைத்தெறிய வேண்டும் என்பதுதான் அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம். நம்மை அடிமைப்படுத்தக்கூடிய எந்த மனிதராக இருந்தாலும், எந்தக் கட்டமைப்பாக இருந்தாலும், எந்த நிறுவனமாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதைத் தங்களுடைய வாழ்வின் மூலம் அவர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளைப் போலவும், தந்தை பெரியாரின் இயக்கத்தில் இருந்த பெரியாரியத் தொண்டர்களைப் போலவும், அண்ணல் அம்பேத்கருடன் அணிவகுத்த வீரர்களைப் போலவும் நாம் ஒன்றுதிரண்டு நிற்க வேண்டும். அந்த உறுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய நாள் இன்றைய நாள். அந்த உறுதியை ஏற்கவே நாம் இங்கு வந்திருக்கிறோம்.

மக்களின் சுயமரியாதையும் சம உரிமையும்:

இந்தப் பகுதியில் வாழ்கின்ற மக்களை, அவர்கள் வாழும் பகுதியின் பெயரைச் சொல்லியே இழிவாக நடத்தலாம்; அவர்களுக்கு மரியாதை தர வேண்டியதில்லை என்ற எண்ணம் சிலரிடம் இருக்கிறது. இனி நம்மையோ, நம் குழந்தைகளையோ, நம் குடும்பப் பெண்களையோ யாராவது அவமானப்படுத்த நினைத்தாலோ, அவமானப்படுத்தினாலோ, அதை எதிர்த்துக் கேட்போம். அதற்கான உறுதியை வெளிப்படுத்துவதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம்.

தம்பி அகிலனின் மரணத்திற்கு நீதி கேட்கும் துணிச்சலான போராட்டத்தை அவரது பெற்றோர்கள் முன்னெடுத்தார்கள். இதுவரை தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட துணிச்சலான பெற்றோரை நான் பார்த்ததில்லை. ஒரு துயரச் சம்பவம் நடந்துவிட்டால், எதிர்பாராத அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால், பலரும் அந்தத் துயரத்திலேயே மூழ்கிவிடுவார்கள். இனி இதைப் பற்றி என்ன யோசிப்பது? இப்படி நடந்துவிட்டதே, இதற்கு மேல் போராடி என்ன செய்ய முடியும் என்ற அவநம்பிக்கையில்தான் பலரை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அகிலனின் பெற்றோர்கள், “என் பிள்ளைக்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கக்கூடாது” என்ற பொதுநோக்கத்துடன் போராட்டத்தில் இறங்கினார்கள். துயரமான நாட்களில்கூடத் தங்களுடைய தனிப்பட்ட துக்கத்தை அடக்கிக்கொண்டு, கண்களில் கண்ணீர் வழிந்தாலும் அதைத் துடைத்துக்கொண்டு போராட்டக் களத்தில் துணிவுடன் நின்றார்கள். ஆறு நாட்கள் நாம் போராடினோம். குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு காவல்துறையிடம் மன்றாடினோம். சட்டப் பிரிவுகளையும் எடுத்துக்காட்டி, இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை ஏன் கைது செய்ய மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினோம்.

மாவட்ட ஆட்சியரிடம் பேச வேண்டும். காவல்துறை அதிகாரிகளிடம் பேச வேண்டும். வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பேச வேண்டும். இவ்வாறு பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டோம். ஆனால், எத்தனை பேரிடம் முறையிட்டும், குற்றவாளிகளைக் கைது செய்யமாட்டோம் என்பதில் இந்த அதிகார வர்க்கம் உறுதியாக இருந்தது.

அப்படியென்றால், நாளை நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் யார் உறுதிப்படுத்துவது என்பதுதான் நம்முடைய கேள்வி.

மாவட்ட ஆட்சியரிடமும் காவல் ஆணையரிடமும் நாம் கேட்கிறோம். உங்களை அதிகாரிகளாகப் பொறுப்பில் அமர்த்தி, உங்களுக்குச் சம்பளம் வழங்குவது எதற்காக? எங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும்; எங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தானே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது? அதுதானே உங்கள் கடமை? அதற்காகத்தானே சட்டமும் நீதிமன்றமும் இருக்கின்றன? இந்த அதிகாரிகள் ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில்தானே நாங்கள் உங்களிடம் வந்து நின்றோம்? ஆனால், இரண்டு மாணவர்களைக் கைது செய்ததோடு உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கிறார்கள் என்று நாம் குற்றம் சாட்டுகிறோம்.

கோவை மாவட்டக் காவல்துறையிடம் நாங்கள் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம். நீங்கள் சட்டத்தைக் காப்பாற்றவில்லை; நீதியை நிலைநாட்டவில்லை. இந்த இரண்டையும் செய்யத் தவறிவிட்டீர்கள். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இன்னும் சுதந்திரமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. உங்களை எது தடுக்கிறது? சட்டம் தடுக்கிறதா? அதிகாரம் தடுக்கிறதா? அல்லது நேர்மையற்ற முறையில் நடந்துகொள்கிறீர்களா? ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நீங்கள் செயல்பட்டிருக்கிறீர்கள் என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

இதே பிரச்சினை நாளை இன்னொரு குழந்தைக்கு ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்பது யார்? நாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கேட்டோம். நீங்கள் பொறுப்பேற்பீர்களா? காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா? யார் பொறுப்பேற்பது?

நீங்கள் பொறுப்பேற்கத் தயாராக இல்லையென்றால், எங்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும்.

குழந்தைகளின் உணவுப் பழக்கத்தையும் சாதியையும் இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது

அந்த அடிப்படையில்தான் இன்று நாங்கள் ஒரு முக்கியமான எச்சரிக்கையை முன்வைக்கிறோம். இனி எந்தப் பள்ளியிலாவது எங்கள் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தையோ, சாதியையோ ஆசிரியரோ அல்லது பள்ளி நிர்வாகத்தில் உள்ள அலுவலரோ இழிவுபடுத்தி, அவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்துகொண்டால், அதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.

காவல்துறையை அணுகுவதில் எங்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது. எங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கான நடவடிக்கைகளை நாங்களே முன்னெடுக்க வேண்டியிருக்கும் என்ற நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள். நீங்கள் உங்கள் பணியைச் சரியாகச் செய்தால், இதுபோன்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.

நாம் ஒரு குழந்தையை இழந்திருக்கிறோம். நாம் விலங்குகள் அல்ல; தலைகுனிந்து வாழ்வதற்கோ, அடக்குமுறைக்கு அடிபணிவதற்கோ பிறந்தவர்கள் அல்ல. நாமும் மனிதர்கள்தான்; அவர்களும் மனிதர்கள்தான். நாம் உண்பதைத்தான் அவர்களும் உண்கிறார்கள். நமக்கு இருப்பதைப் போலவே அவர்களுக்கும் இரண்டு கண்கள், இரண்டு கைகள், இரண்டு கால்கள் இருக்கின்றன. மனிதர்களாகிய நம்மிடையே எந்த அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பிக்க முடியும்?

நம்முடைய உழைப்பால்தான் இத்தனை கட்டடங்கள் உருவாகியிருக்கின்றன. இத்தனை நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் உருவாகியிருக்கின்றன. நாம் இல்லாமல் அவர்களுடைய தொழிற்சாலைகள் இயங்குமா? கல்லூரிகள் இயங்குமா? பள்ளிக்கூடங்கள் இயங்குமா? நம்மிடம் என்ன குறை இருக்கிறது? நம்மிடம் இருப்பது ஒற்றுமையின்மைதான். அதுதான் நம்முடைய மிகப்பெரிய பலவீனம்.

ஒற்றுமையே நமது பலம்!

நம்முடைய குடும்பத்தில், நம்முடைய ஊரில், நம்முடைய குழந்தைகளுக்கோ குடும்பத்தினருக்கோ ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், ஒட்டுமொத்த ஊரும் வீதிக்கு வர வேண்டும். நீதி கிடைக்கும் வரை அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற உறுதியுடன் நாம் நிற்க வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து போராடினால், இனி நம்மை அவமானப்படுத்தவோ, நம்மீது அடக்குமுறையை ஏவவோ எவருக்கும் துணிவு வராது.

நாம் எப்போது இவ்வாறு ஒன்றிணைகிறோமோ, அன்றுதான் நமக்கான அதிகாரமும் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்.

இனி இதுபோன்ற சம்பவம் எங்கே நடந்தாலும், ஒட்டுமொத்த மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டும். அந்த ஒற்றுமை நமக்குத் தேவை. அகிலனின் பெற்றோர்களைப் பாருங்கள். அவர்களுடைய துயரத்தை யாரால் சரிசெய்ய முடியும்? அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை யாரால் ஈடுசெய்ய முடியும்? இப்படியொரு சம்பவம் நிகழும் என்று அவர்கள் எதிர்பார்த்திருப்பார்களா?

இந்தச் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்றும், மக்களை அரசியல்மயப்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தவர் அகிலனின் தந்தை அசோக். தன்னுடைய குழந்தைக்கு இத்தகைய கொடுமை நிகழ்ந்த உடனேயே அவர் துணிச்சலுடன் போராட்டக் களத்தில் நின்றார். இவ்வளவு துணிச்சலுடன் போராட்டத்தில் நிற்பதற்கான காரணம் என்ன என்று நான் விசாரித்தபோது, அவர்கள் பெரியாரியத் தோழர்கள் என்றும், அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் என்றும் கூறினார்கள்.

அதனால்தான் அமைச்சர்கள் முதல் காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் வரை பலரும் பேசியபோதும், எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல் அகிலனின் பெற்றோர்கள் தலைநிமிர்ந்து நின்றார்கள். அவர்களுடைய உறுதியான நிலைப்பாட்டினால்தான் இந்தப் போராட்டம் தமிழ்நாடு தழுவிய போராட்டமாக மாறியது.

அகிலனுக்கு நீதி கோரும் போராட்டம்:

இந்தப் போராட்டத்தைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினோம். சென்னையில் போராட்டத்தை அறிவித்தோம். பல்வேறு அமைப்புகளிடம் பேசி அனைவரையும் போராட்டத்தில் பங்கேற்க அழைத்தோம். அன்று சென்னையில் நமது தோழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, போராட்டம் நடத்தினார்கள். காவல்துறை அவர்களைத் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது. ஆனால், காவல்துறை அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

நம்முடைய ஊரிலிருந்து ஆயிரம் பேர் வந்திருந்தால்கூட, குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இரண்டு பேரும் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார்கள். போராட்டத்தின் முதல் நாளிலேயே ஆயிரம் பேர் வீதிக்கு வந்திருந்தால், இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்காது. நம்முடைய ஒற்றுமையின்மையைப் பயன்படுத்திக்கொண்டுதான் இத்தகைய அநீதிகள் தொடர்ந்து நிகழ்கின்றன.

அதற்குப் பிறகு சாதிச் சங்கத்தினரை அழைத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, நம்மீது புகார் அளிக்கும் நிலைக்கும் சென்றிருக்கிறார்கள். என்மீது புகார் அளித்தால் அளிக்கட்டும். எங்கே வேண்டுமானாலும் புகார் அளிக்கட்டும். ஏற்கெனவே என் மீது ஐம்பது வழக்குகள் இருக்கின்றன. வழக்குகளுக்கெல்லாம் அஞ்சிப் பின்வாங்குபவர்கள் நாங்கள் அல்ல.

இந்தப் பிரச்சினையில் நாம் போராடியபோது நம்முடன் வந்து நின்று நியாயம் கேட்காத பாஜகவினர், அந்தப் பள்ளிக்கூடத்திற்காகவும் சாதிச் சங்கத்திற்காகவும் ஆதரவாகச் சென்று நிற்கிறார்கள். அவர்கள் யாருக்காகச் செயல்படுகிறார்கள் என்பது இப்போது நமக்குப் புரிகிறதா?

பள்ளிகளில் சாதியைக் கேட்பதன் அவசியம் என்ன?

நான் இதே கோபால்நாயுடு பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். என்னுடன் படித்த நண்பர்கள் பலரும் இந்தப் பள்ளியில் படித்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் அனைவருக்கும் உதவியாக இருந்தார்கள். எங்களை அழைத்துப் பேசினார்கள்; பாடங்களைக் கற்றுக்கொடுத்தார்கள். மாணவர்களின் சாதியைப் பார்த்து வேறுபடுத்தும் ஆசிரியர்கள் அப்போது இல்லை. ஆனால், இன்று என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது? சாதியைப் பார்க்கக்கூடிய ஆசிரியர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

நான் படித்த இதே கோபால்நாயுடு பள்ளிக்கூடத்தின் மாணவர் பள்ளி நாட்குறிப்பில் (School Diary), மாணவர்களின் சாதியைக் கேட்பதற்கான பிரிவை வைத்திருக்கிறார்கள். முதலாம் வகுப்புப் படிக்கும் குழந்தையிடம் எதற்காகச் சாதியைக் கேட்க வேண்டும்? பத்துவயதுக்குக் கீழுள்ள பச்சிளம் குழந்தைகளிடம் சாதியைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?

சாதிச் சான்றிதழ் என்பது இடஒதுக்கீட்டின் தேவைக்காக வழங்கப்படுவது. பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் சாதியை அறிந்துகொள்வதற்காக அல்ல.

சாதிச் சான்றிதழ் பள்ளியில் சேர்க்கையின்போது தேவையான நிர்வாகப் பதிவுகளுக்காகப் பெறப்படலாம். ஆனால், அது ஆசிரியர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான ஆவணம் அல்ல. ஒரு மாணவர் பள்ளியில் சேர்ந்த பிறகு, அவருடைய சாதியை ஒவ்வொரு ஆசிரியரும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஒரு மாணவரின் சாதியை அறிந்துகொண்டு அவரை வேறுபடுத்திப் பார்ப்பதற்கோ, இழிவுபடுத்துவதற்கோ எந்த ஆசிரியருக்கும் உரிமை கிடையாது. அதையும் மீறி ஓர் ஆசிரியர் மாணவரின் சாதியைக் கேட்டு, அதன் அடிப்படையில் பாகுபாடு காட்டினால், அதற்கு எதிராக நாம் உரிய முறையில் குரல் கொடுக்கவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்

குழந்தைகளின் பாதுகாப்பு நமது பொறுப்பு:

நம்முடைய பிள்ளைகள் ”அப்பா, அம்மா இருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் பார்த்துக்கொள்வார்கள்” என்ற நம்பிக்கையில்தான் குழந்தைகள் வாழ்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் பள்ளிக்கூடங்களுக்கும் செல்கிறார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை யார் உறுதிப்படுத்துவது? யார் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது? நாம்தான் அதைச் செய்ய வேண்டும். அந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்றத் தவறினால், அது நம்முடைய தவறாகிவிடும். நம்முடைய குழந்தைகளுக்குத் தைரியமும் பாதுகாப்பும் நாம்தான் வழங்க வேண்டும். நாம்தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

அகிலன் விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது காவல்துறை முறையான நடவடிக்கை எடுத்து, அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தால், அது மற்ற ஆசிரியர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருந்திருக்கும். ஆனால், இன்று என்ன நிலை ஏற்பட்டிருக்கிறது? எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சில ஆசிரியர்கள் தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் செயல்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இனிமேல் எந்த ஆசிரியராவது இதுபோன்று சாதியப் பாகுபாட்டுடன் நடந்துகொண்டால், அவர்களுக்கு உரிய பாடத்தைப் புகட்டுவதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதற்குத் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் தயாராக இருந்தால்தான் நாங்களும் உங்களுடன் உறுதியாக நிற்க முடியும். இந்தப் போராட்டத்தில் நான் முதல் ஆளாக நிற்பேன். முதல் வழக்கையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். நம்முடைய குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு நமக்கு ஒற்றுமை தேவை. ஊர் ஒற்றுமை தேவை. அனைவரிடமும் இதுகுறித்துப் பேச வேண்டும்.

சமூகப் பொறுப்பும் மக்கள் ஒற்றுமையும்:

நாம் அனைவரும் வேலைக்குச் செல்பவர்கள். நாள் முழுவதும் அரசியல் இயக்கப் பணிகளில் ஈடுபடுமாறு அனைவரையும் நான் அழைக்கவில்லை. எனக்கும் குடும்பம் இருக்கிறது; குழந்தைகள் இருக்கிறார்கள். அதேபோல ஒவ்வொருவருக்கும் குடும்பமும் குழந்தைகளும் இருக்கிறார்கள். நாம் அனைவரும் உழைத்துப் பிழைப்பவர்கள். ஆனால், விடுமுறை நாட்களில் மக்களுக்காக ஏதாவது செய்யலாம். சமூகத்திற்கு நல்லது செய்யலாம். அநீதி நிகழும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுக்கலாம். அதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணைந்து வர வேண்டும் என்று அழைக்கிறோம்.

இது குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு மட்டுமானது அல்ல. ஆண்கள் வேலைக்குச் செல்லும்போதும், பெண்கள் வேலைக்குச் செல்லும்போதும் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதற்காகவும் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இவ்வாறு பலமுறை நாம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒன்றிணைந்து நின்றால், இனி யாரும் நம்மிடம் அநியாயமாக நடந்துகொள்ளத் துணிய மாட்டார்கள்.

“இவர்களிடம் ஏதாவது பிரச்சினை செய்தால், நாளை நான்கு பேர் வந்து கேள்வி கேட்பார்கள்” என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட வேண்டும். அப்போதுதான் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கும் நிலை உருவாகும். நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல. நம்முடைய வாழ்க்கையையும் மரியாதையையும் பாதுகாப்பதற்காக நாம்தான் உழைக்கிறோம்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒரு இயந்திரத்தை இயக்கவில்லை என்றால்கூட, அந்தத் தொழிற்சாலை இயங்காது. ஒரு தொழிற்சாலையின் இயக்கத்திற்குத் தொழிலாளர்களின் உழைப்பே அடிப்படையாக இருக்கிறது. அந்த இயந்திரங்களை இயக்குவதற்காகத் தொழிலாளர்கள் தங்களுடைய உடல்நலத்தையும் உயிரையும் பணயம் வைக்கிறார்கள். ஆனால், அந்த நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இதேபோன்ற ஆபத்துகள் இருக்கின்றனவா? காயமடையும் அபாயம் அவர்களுக்கு இருக்கிறதா? இல்லை. இத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்வது தொழிலாளர்கள்தான்.

ஒவ்வொரு நாளும் உயிரைப் பணயம் வைத்து உழைப்பதால்தான் நிறுவனங்கள் இயங்குகின்றன. தொழிலாளர்கள் இல்லையென்றால் பல தொழிற்சாலைகள் இயங்க முடியாது. பொருட்களை ஏற்றி இறக்குவது முதல் அவற்றைக் கொண்டு செல்வது வரை அனைத்திலும் தொழிலாளர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. எனவே, இந்த ஊர் வளர்ச்சியடைகிறது என்றால் அதற்குக் காரணம் நம்முடைய உழைப்பு. ஊரில் அமைதி நிலவுகிறது என்றால் அதற்கும் நம்முடைய உழைப்பும் பங்களிப்பும் முக்கியக் காரணம்.

அப்படியென்றால் நீங்கள்தான் இந்தச் சமூகத்தின் முக்கியமானவர்கள். உங்களுடைய உழைப்பின் மதிப்பையும், சமூகத்தில் உங்களுக்குள்ள முக்கியத்துவத்தையும் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

சாதியப் பாகுபாட்டையும் அவமதிப்பையும் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!

நம்முடைய குழந்தைகளை வரவேற்று, அவர்களுக்குக் கல்வி வழங்கி, அவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய சமூக அமைப்புகள் அதற்கான பணியைச் செய்கின்றனவா? நம்முடைய குழந்தைகளைச் சில கோயில்களுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். பள்ளிக்கூடங்களில் படிப்பதற்குக்கூட இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள். இத்தனை அவமானங்களையும் நாம் எத்தனை காலத்திற்குத்தான் பொறுத்துக்கொண்டிருக்கப் போகிறோம்? எத்தனை நாட்கள்தான் பொறுத்துக்கொள்வது?

நியாயம் நம்முடைய பக்கம் இருக்கிறது. சட்டமும் நம்முடைய பக்கம் இருக்கிறது என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஓர் ஊரில் மட்டும் நடைபெறும் பிரச்சினை அல்ல. இதுபோன்ற பல்வேறு ஊர்களில் நிலவிய சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக நாங்கள் போராடி வெற்றி பெற்றிருக்கிறோம். பல ஊர்களில் ஆயிரக்கணக்கானோர் எங்களுக்கு எதிராகத் திரண்டிருக்கிறார்கள். ஆனால், அத்தகைய எதிர்ப்புகளைக் கண்டு நாங்கள் பின்வாங்கியதில்லை.

தேநீர்க் கடையில் நிலவிய இரட்டைக்குவளை முறை:

ஒரு ஊரில் தேநீர் கேட்டால், ஆதிக்கச் சாதியினருக்கு ஒரு குவளையிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வேறு குவளையிலும் தேநீர் வழங்கும் இரட்டைக்குவளை முறை நடைமுறையில் இருந்தது. இந்தப் பாகுபாட்டை எதிர்த்து நாங்கள் போராடினோம். சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து, அந்தப் பாகுபாட்டிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினோம்.

அப்போது எங்களுக்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. சுமார் இரண்டாயிரம் பேரைத் திரட்டி எங்களுக்கு எதிராக நிறுத்தினார்கள். ஆனால், நாங்கள் பத்துப் பேர், இருபது பேர் என்ற எண்ணிக்கையிலேயே நின்று போராடினோம். எந்தச் சூழலிலும் பின்வாங்கப் போவதில்லை என்ற உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்தோம். கடைசியில் அந்தக் கடையை மூடச் செய்யும் அளவிற்கு எங்களுடைய போராட்டம் சென்றது.

மளிகைக் கடை, முடி திருத்தும் நிலையம், தேநீர்க் கடை எனப் பல்வேறு இடங்களில் நிலவிய சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகப் போராடினோம். அந்தப் பாகுபாடுகளைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்பதை உறுதியாக எடுத்துரைத்தோம்.

வீரலூரில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல மறுத்த சாதியப் பாகுபாடு:

அதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் வீரலூரில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லக்கூடாது என்று தடை விதித்தார்கள். அதற்கு எதிராகவும் நாங்கள் போராடினோம். அமைச்சர்கள் உள்ளிட்டோர் தலையிட்டபோதும், எங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைத்தோம். இனி இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்குக்கூட யாராவது தடை விதித்தால், அதை எதிர்த்து நாங்கள் போராடுவோம் என்று அறிவித்தோம்.

அதன்பிறகு காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு, காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றப்பட்டார். புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவ்வாறு தொடர்ந்து போராடினால்தான் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நாகப்பட்டினத்தில் மாற்றுத்திறனாளிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு:

இதேபோன்று நாகப்பட்டினத்தில் மற்றொரு சம்பவம் நடைபெற்றது. பிள்ளையார் சதுர்த்தி விழாவின்போது, மாற்றுத்திறனாளியான ஒருவர் கோயிலுக்குச் சென்று பிரசாதம் கேட்டிருக்கிறார். அவரால் இயல்பாக நடக்க முடியாத சூழலிலும் அங்கு சென்று கேட்டிருக்கிறார். ஆனால், அவரைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட அவரது தாயார், நடக்க முடியாத தனது மகனை ஏன் இவ்வாறு அவமதிக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதற்குப் பிறகு, ஊர்த் தலைவர் தரப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் இருபது வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பெண்களிடம் அவமரியாதையாக நடந்துகொண்டு அவர்களது ஆடைகளைக் கிழித்ததாகவும் பேச்சாளர் குற்றஞ்சாட்டுகிறார். இவ்வளவு கொடுமைகள் நிகழ்ந்தபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்டும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படவில்லை.

அதனை எதிர்த்து மே 17 இயக்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. நீண்ட காலமாகத் தங்களை யாராலும் கைது செய்ய முடியாது என்ற இறுமாப்புடன் இருந்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடினோம். இறுதியில் அவர்கள் கைது செய்யப்படும் நிலையை ஏற்படுத்தினோம்.

கோயில் நுழைவு உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டம்:

அதே ஊரில் உள்ள கோயிலில் சாதிய அடிப்படையில் எல்லைகள் வரையறுக்கப்பட்டிருந்தன. நான் நேரில் சென்று பார்த்தபோது, கோயிலில் ஒரு கோடு போடப்பட்டிருந்தது. அந்தக் கோட்டைத் தாண்டி ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளே வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. கோயிலில் இருந்த மண்டபத்திற்குள்ளும் அவர்கள் செல்ல முடியாது. அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ, அமர்ந்து உணவருந்தவோ அனுமதிக்கப்படவில்லை. திருமணம் நடத்த வேண்டுமென்றால்கூட, கோயிலுக்கு வெளியே வாசலில் தாலி கட்டிவிட்டு மணமக்களை அழைத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இது ஓரிரு நாட்களாக நடைபெற்ற நடைமுறை அல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த சாதியப் பாகுபாடு. இதற்கு எதிராகவும் நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

கோயிலுக்குள் அனைவரும் சென்று வழிபடுவதற்கும், விழாக்களை நடத்துவதற்கும், மண்டபத்தைப் பயன்படுத்துவதற்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படாவிட்டால், அந்த மண்டபத்தை யாரும் பயன்படுத்த முடியாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினோம். இதன் தொடர்ச்சியாக அரசு அந்த மண்டபத்திற்கு முத்திரையிட்டு மூடியது. யாரும் அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த முடியாத இடத்தை மற்றவர்களும் பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

இதனால் ஆதிக்கச் சாதியினருக்கும் தங்களுடைய குடும்ப நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த ஊரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறொரு ஊருக்குச் சென்று மண்டபத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்பிறகு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தார்கள்.

அனைவரையும் அனுமதிக்கிறோம், எந்தவிதமான இடையூறும் செய்யமாட்டோம், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஒத்துழைக்கிறோம் என்று தெரிவித்தார்கள். இதன் விளைவாக, இரண்டு வாரங்களுக்கு முன்புகூட அந்த மண்டபத்தில் நம்முடைய மக்கள் அமர்ந்து உணவருந்தி, தங்களுடைய குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள்.

நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி, அந்த நிலைமையை மாற்றியிருக்கிறோம். இந்தச் சம்பவங்களை நாங்கள் எங்கும் விளம்பரப்படுத்தவில்லை. இதைச் சாதனையாகப் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், இன்றைய காலத்திலும் இதுபோன்ற சாதியக் கொடுமைகள் நடைபெறுகின்றன என்பதே நமக்கு அவமானமான ஒன்றுதான்.

இந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அங்கிருந்த சில நேர்மையான காவல்துறை அதிகாரிகளும் உதவினார்கள். அவர்களுடைய ஒத்துழைப்புடன் பல்வேறு பிரச்சினைகளைச் சரிசெய்ய முடிந்தது. எந்தப் பிரச்சினையையும் மாற்ற முடியாது என்று நினைக்க வேண்டியதில்லை. மாற்ற முடியாதது என்று எதுவும் கிடையாது. தொடர்ந்து போராடினால் அனைத்தையும் மாற்றிக் காட்ட முடியும்.

கோயம்புத்தூர் மாவட்டம் முன்னுதாரணமாக மாற வேண்டும்!

நம்முடைய ஊர், கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதற்கும் ஓர் எடுத்துக்காட்டான மாவட்டமாக மாற வேண்டும். நம்முடைய ஊரில் இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களில் படிக்கும் குழந்தைகள் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்களைப் பெற வேண்டும். நம்முடைய பள்ளிகளிலிருந்துதான் மாவட்டத்தின் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் உருவாக வேண்டும். நம்முடைய குழந்தைகள் சிறந்த கல்வியைப் பெற்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.

நம்முடைய குழந்தைகளைவிட அறிவாற்றல் மிக்க குழந்தைகள் வேறு எங்கே இருக்கிறார்கள்? அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளையும் கல்விச் சூழலையும் உருவாக்கிக் கொடுத்தால், நம்முடைய குழந்தைகளும் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

அடுத்த தலைமுறை கல்வியிலும் சமூகத்திலும் உயர்ந்து நிற்க வேண்டும்!

தமிழ்நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் நமது ஊரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். நமது குழந்தைகளுக்குத் தேவையான கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வோம். அவர்கள் நல்ல கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கும் துணை நிற்போம்.

நமது அடுத்த தலைமுறை நம்மைவிட உயர்ந்த நிலையை அடைய வேண்டும். தலைநிமிர்ந்து, தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். பிறருக்கு அடிபணிந்து நிற்கும் நிலை மாற வேண்டும். நமது குழந்தைகள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உயர்ந்து நிற்பதே அவர்களுக்கு நாம் அளிக்கக்கூடிய சரியான பதிலாக இருக்கும்.

“நீயும் மனிதன்; நானும் மனிதன். உன்னைவிட எங்கள் குழந்தைகள் உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள். எங்களுக்கு அறிவும் உழைப்பும் இருக்கிறது. நாங்கள் உழைத்து வாழ்பவர்கள்” என்ற சுயமரியாதை உணர்வுடன் நமது குழந்தைகள் வளர வேண்டும். அதற்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது.

கல்வி மூலம் தலைமுறையின் தலைவிதியை மாற்றுவோம்!

இங்கு பல பெரியோர்களும், மரியாதைக்குரிய தோழர்களும் இயக்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்து வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. இதுபோன்ற மாற்றங்களைப் பல்வேறு ஊர்களில் நாம் ஏற்கெனவே முன்னெடுத்திருக்கிறோம்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் ஊரில் சாதியப் பாகுபாட்டின் காரணமாகத் தாக்குதலுக்கு உள்ளான ஒரு மாணவர் கல்வியில் சிறந்து விளங்கினார். அவரைத் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சட்டக் கல்லூரியில் சேர்த்துப் படிக்கச் செய்து, இன்று சிறந்த வழக்கறிஞராக உருவாக்கியிருக்கிறோம். அந்த ஊரில் மக்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்காடி அவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தரக்கூடியவராக வளர்ந்திருக்கிறார்.

நாங்கள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும், எம்.பி. ஆக வேண்டும் என்று உங்களிடம் வாக்குக் கேட்டு வரவில்லை. நமது தலைமுறையின் தலைவிதியை மாற்றுவதற்கான பணியை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே வந்திருக்கிறோம்.

ஊரில் உள்ள அனைவருக்கும் நம்பிக்கை அளிக்க வேண்டும். எவ்வளவு காலம்தான் தலைகுனிந்து வாழ்வது? குடும்பத்தில் நான்கு பேர் இருந்தாலும் படுப்பதற்குப் போதிய இடமில்லாத வீடுகளில் ஏன் வாழ வேண்டும்? நமது குழந்தைகள் இதைவிடச் சிறந்த வீடுகளில் வாழ வேண்டும். நம்மைவிட உயர்ந்த வேலைகளுக்குச் செல்ல வேண்டும். நாம் பெறும் சம்பளத்தைவிடப் பல மடங்கு அதிகமாக அவர்கள் சம்பாதிக்க வேண்டும். அவர்கள் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். அதைச் செய்வதற்கான பொறுப்பு பெற்றோர்களான நம்மிடமே இருக்கிறது.

அகிலனின் கனவை நனவாக்குவது நமது கடமை!

அகிலன் நமக்கு ஒரு கனவை விட்டுச் சென்றிருக்கிறார். அவர் எதிர்கொண்ட பிரச்சினை ஊருக்குத் தெரிய வேண்டும் என்றும், இனி வேறு எந்தக் குழந்தைக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். அகிலனின் குடும்பம் நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு நாம் துணை நிற்க வேண்டும். அவர்களின் கோரிக்கையைச் செயல்படுத்திக் காட்ட வேண்டும். இனி எந்தக் குழந்தைக்கும் இதுபோன்ற அநீதி நிகழக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதுதான் நமது பொறுப்பும் கடமையும் ஆகும்.

அன்பான தோழர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! இவ்வளவு பேர் ஒன்றாக நிற்கும்போது நம்மை எவராலும் எளிதில் அசைக்க முடியாது. நாம் ஒற்றுமையாகவும் துணிச்சலுடனும் நிற்க வேண்டும். நாம் தவறு செய்யாதபோது யாரைக் கண்டு அஞ்ச வேண்டும்? குற்றவாளிகளைக் காப்பாற்றும் அதிகார அமைப்புகளைக் கண்டு நாம் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். யாரும் எல்லை மீறி மக்களை ஒடுக்குவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான தலைவர் பிரபாகரனின் நிலைப்பாடு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் சாதியப் பாகுபாட்டை எதிர்கொண்ட விதம் குறித்த ஒரு சம்பவத்தைப் பேச்சாளர் எடுத்துரைக்கிறார். வேறொரு ஊரிலிருந்து வந்த வயதான ஒருவர், வேலைக்கு அழைத்த நபரிடம் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு அவமதித்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் புகார் அளித்தார். அதன் பின்னர் அந்த முதியவரை அழைத்துப் பேசி, சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்துவது தவறு என்றும், இனி அவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது என்றும் எச்சரித்ததாகப் பேச்சாளர் விவரிக்கிறார்.

அதே நபர் மீண்டும் சாதிப் பெயரைக் கூறி அவமதித்ததாகவும், அதற்காக இயக்கம் அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கியதாகவும் பேச்சாளர் கூறுகிறார். இந்தச் சம்பவத்தை முன்வைத்து, சாதிய ஒழிப்பில் பிரபாகரன் தலைமையிலான இயக்கம் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக அவர் வலியுறுத்துகிறார்.

மேலும், இயக்கத்தில் இணைந்தவர்களின் சாதியை அடையாளம் காண முடியாத வகையில் அனைவருக்கும் இயக்கப் பெயர்கள் வழங்கப்பட்ட மரபையும் அவர் குறிப்பிடுகிறார். ஒருவரின் சாதி அல்லது ஊர் அடையாளத்தைவிட, அவர் ஏற்றுக்கொண்ட இலட்சியமும் போராட்டப் பங்களிப்புமே முக்கியம் என்ற கருத்தை அந்த மரபு வெளிப்படுத்துவதாகப் பேச்சாளர் விளக்குகிறார்.

நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாக அது விளங்குகிறது. மாவீரர்களின் நினைவிடங்களில் அவர்களின் இயற்பெயர்களுடன் இயக்கப் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாகப் பேச்சாளர் குறிப்பிடுகிறார்.

சாதியால் ஒடுக்கப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடந்த மக்களுக்கு உத்வேகம் அளித்து, உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு ஒரு இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர் பிரபாகரன் என்று அவர் புகழாரம் சூட்டுகிறார். அதேபோல், நம்மிடையே உள்ள சாதிய இழிவுகளையும் அடிமைத்தனத்தையும் அகற்ற நாம் ஏன் ஒன்றுபடக் கூடாது என்றும் கேள்வி எழுப்புகிறார்.

ஒற்றுமையே சமூக மாற்றத்திற்கான அடிப்படை!

இன்றைக்கு அந்தப் பள்ளிக்கு ஆதரவாகச் சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி வருகிறார்கள். அவர்களுக்காக நூறு பேர் திரள்கிறார்கள் என்றால், நமது தரப்பில் ஆயிரம் பேர் ஒன்றுகூட வேண்டாமா? நாம் பெருமளவில் ஒன்றிணைந்து நிற்கும்போதுதான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அன்பான பெரியோர்களே, தாய்மார்களே! இன்று நாம் அனைவரும் சந்தித்திருப்பது முக்கியமான நிகழ்வாகும். பல்வேறு தலைவர்கள் மே 17 இயக்கத்துடன் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை மனதார வரவேற்கிறோம்.

இயக்கத்தில் இணையும் தலைவர்கள் வெறுமனே உறுப்பினர்களாகவோ, பொறுப்புகளை ஏற்றுக்கொள்பவர்களாகவோ மட்டும் இருக்கக் கூடாது. தங்கள் பகுதிகளில் நிகழும் அநீதிகளை எதிர்த்து, மக்களின் உரிமைகளுக்காகச் செயல்படும் தலைவர்களாகவும் இலட்சியவாதிகளாகவும் இருக்க வேண்டும். இயக்கத்தில் இணைவது என்பது பெயருக்குப் பின்னால் ஒரு பொறுப்பைச் சேர்த்துக்கொள்வதற்காக அல்ல. இந்தப் பகுதியின் தலைவிதியை மாற்றுவதற்காக இருக்க வேண்டும். இதுவரை நிலவி வந்த அநீதிகளையும் பாகுபாடுகளையும் பழைய வரலாறாக மாற்ற வேண்டும். குழந்தைகள் கல்வியில் உயரவும், மக்கள் ஒற்றுமையுடன் வாழவும், இனி எந்தக் குழந்தைக்கும் அநீதி நிகழாத வகையில் சமூகத்தை மாற்றவும் அனைவரும் முன்வர வேண்டும்.

இந்த ஊருக்கு என்ன தேவையோ, அந்தத் தேவைகளை முன்வையுங்கள். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் ஒன்றிணைந்து மேற்கொள்வோம். இதுவரை பல்வேறு அநீதிகளைச் சந்தித்த நீங்கள், இனி அத்தகைய அநீதிகள் நிகழக்கூடாது என்ற உறுதியுடன் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

இது கட்சி அரசியல் அல்ல; சமூக மாற்றத்திற்கான இயக்கம்:

எங்களது நோக்கம் தேர்தலில் வாக்குக் கேட்பதோ, ஒரு தலைவருக்காக முழக்கமிடச் செய்வதோ அல்ல. இந்த ஊரின் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டும். குழந்தைகள் கல்வியில் முன்னேறுவதற்கு உதவ வேண்டும். அதற்குத் தேவையான அனைத்துச் செயல்பாடுகளிலும் நாங்கள் உங்களுடன் நிற்போம். வழக்கறிஞர் தேவைப்பட்டால் ஏற்பாடு செய்வோம். வழக்குகளை நடத்த வேண்டியிருந்தால் துணை நிற்போம். அதிகாரிகளைச் சந்தித்துப் பேச வேண்டியிருந்தால் உடன் வருவோம். காவல்துறையில் புகார் அளிக்க வேண்டியிருந்தாலும் உதவுவோம். குழந்தைகளின் கல்விக்குத் தேவையான உதவிகளையும் செய்வோம்.

நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல; கொள்கைவாதிகள். தந்தை பெரியார், மேதகு பிரபாகரன், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் வழியில் வந்தவர்கள். உங்களை வாக்குச்சாவடி முகவர்களாகவோ, கட்சிப் பணியாளர்களாகவோ உருவாக்குவது எங்கள் நோக்கம் அல்ல. இந்தச் சமூகத்தின் வரலாற்றை மாற்ற வேண்டும் என்பதற்காகவே உங்களைச் சந்திக்கிறோம்.

அனைவரையும் எண்ணிக்கைக்காக இயக்கத்தில் சேர்த்துக்கொள்வது எங்கள் நோக்கமல்ல. இந்தச் சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியும் துணிச்சலும் கொண்டவர்களையே இணைத்துக்கொள்ள விரும்புகிறோம். எண்ணிக்கையைவிடக் கொள்கை உறுதியும் செயல்பாடும் முக்கியம்.

அகிலனுக்காகப் போராடியபோது பெரிய அரசியல் கட்சிகள் எதிர்பார்த்த அளவில் களத்தில் வந்து நிற்கவில்லை. ஆனால் சில தோழர்கள் தொடர்ந்து பின்வாங்காமல் நின்றார்கள். எங்களுக்குத் தேவைப்படுவது அத்தகைய கொள்கை உறுதியுள்ள மனிதர்கள்தான்.

துணிச்சலும் உறுதியும் மாற்றத்தை உருவாக்கும்!

தனது உரையில் பேச்சாளர் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் இடம்பெற்ற ஒரு விமானத் தளத் தாக்குதல் சம்பவத்தையும் எடுத்துரைக்கிறார். அந்தச் சம்பவத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான போராளிகள், தங்களை விடப் பல மடங்கு அதிகமான பாதுகாப்புப் படையினரைக் கொண்டிருந்த இடத்தைத் தாக்கியதாக அவர் விவரிக்கிறார். அந்தச் சம்பவத்தை முன்வைத்து, எண்ணிக்கையைவிடத் துணிச்சலும் உறுதியும் முக்கியம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

அந்தப் போராளிகளும் தமிழர்கள்தான்; நீங்களும் தமிழர்கள்தான். உலகின் பல பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து எழுந்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்கள். அந்த ஆற்றல் நமக்கும் இருக்கிறது. நாம் ஒன்றுபட்டு நின்றால் சமூகத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும். அந்த நம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

கோயம்புத்தூரின் சமூக மாற்றத்தில் மக்களின் பங்கு:

கோயம்புத்தூர் சாதாரண நகரமல்ல. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய நகரம். இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் மக்களே முதுகெலும்பாக இருக்கிறார்கள். நாம் எண்ணிக்கையிலும் உழைப்பிலும் வலிமையானவர்கள். ஆனால் அந்த வலிமையை உணர்ந்து தன்னம்பிக்கையுடன் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

நம்மால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உருவாக வேண்டும். அந்த நம்பிக்கை வந்துவிட்டால் தமிழ்நாட்டின் வரலாறே மாறும். தேர்தலில் வாக்குக் கேட்பதற்காக நாம் இங்கு வரவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஒன்றுபட்டு நின்றால் அவர்களின் குரலைத் தமிழ்நாடு கேட்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.

நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. மே 17 இயக்கத்தில் அச்சத்திற்கும், பயத்திற்கும், சமரசத்திற்கும் இடமில்லை. துணிச்சலுடன் செயல்படுபவர்களே இந்த இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க முடியும். வழக்குகளுக்கும் சிறைக்கும் அஞ்சாமல், சமூக மாற்றத்திற்காக நாம் செயல்பட வேண்டும்.

இந்த ஏடி காலனி கோயம்புத்தூரின் தலைசிறந்த பகுதியாகவும், சிறந்த மாணவர்களை உருவாக்கும் கல்வி மையமாகவும் உயர வேண்டும். இங்குள்ள பள்ளிகளில் சேர்வதற்காக மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் விரும்பும் அளவுக்கு கல்வித் தரம் உயர வேண்டும். நமது குழந்தைகள் கல்வியில் மற்றவர்களைவிட உயர்ந்த நிலையை அடைய வேண்டும். அதற்கான உறுதியை இன்றைய நாளில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றத்தை நீங்களே முன்னின்று உருவாக்க வேண்டும்!

நாங்கள் வந்து எல்லாவற்றையும் மாற்றிக் கொடுத்துவிடுவோம் என்று கூறவில்லை. மாற்றம் உங்களிடமிருந்தே தொடங்க வேண்டும். நீங்கள்தான் இந்த மாற்றத்திற்குத் தலைமை தாங்க வேண்டும். நீங்கள்தான் இதனைச் செய்து முடிக்க வேண்டும். நீங்கள்தான் புதிய வரலாற்றைப் படைக்கப் போகிறீர்கள்.

நாங்கள் உங்களுக்குத் துணையாகவும், உங்களை ஊக்கப்படுத்துபவர்களாகவும், உங்களுடன் பயணிப்பவர்களாகவும் இருப்போம். அந்தப் பணியை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வோம்.

எனவே, நீங்கள் அனைவரும் துணிச்சலுடன் நில்லுங்கள். எதற்கும் அஞ்சாதீர்கள். மேதகு பிரபாகரன், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். அவர்களின் கொள்கைகளையும் துணிச்சலையும் வழிகாட்டியாகக் கொண்டு நமது வரலாற்றை நாமே மாற்றி எழுதுவோம்.

இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »