எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்களது இல்லத்தில் என்.ஐ.ஏ. சோதனை! சிறுபான்மை இஸ்லாமிய அமைப்புகளை அச்சுறுத்தி முடக்க முயற்சிக்கும் செயல்! மோடி அரசின் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்
இந்திய ஒன்றிய மோடி அரசின் ஏவல்துறையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகாமை (என்.ஐ.ஏ.), ஜனநாயகரீதியாக செயல்படும் எஸ்.டி.பி.ஐ. தமிழ்நாட்டு தலைவர் தோழர் நெல்லை முபாரக் அவர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளின் இல்லங்களில் இன்று சோதனை மேற்கொண்டுள்ளது. எவ்வித முகாந்திரமும் இல்லாமல் மக்கள் மத்தியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்த அச்சத்தை உருவாக்கும் நோக்கத்தில் இச்சோதனையை மோடி அரசு ஏவியுள்ளது. இதன்மூலம் சிறுபான்மை இஸ்லாமிய அமைப்புகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிட முடியும் என மோடி அரசு கனவு காண்கிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மீதான மோடி அரசின் இந்த அடக்குமுறையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு, குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர் நலனை முன்னிறுத்தி செயல்படும் முக்கியமான கட்சிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் ஒன்று. மக்களின் ஆதரவைப் பெற்று ஜனநாயகரீதியாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காகவும், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், தமிழீழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து தீவிரமாக போராடி வருகின்றது. சிறுபான்மை இஸ்லாமியர்களாது நலன் என்பதனை தாண்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி செயல்படுவதானாலேயே அக்கட்சி மீது ஒன்றிய மோடி அரசு அடக்குமுறையை ஏவியுள்ளது.
இந்தியாவில் பயங்கரவாதத்தை நிகழ்த்துவதில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் உள்ளன. சிறுபான்மையினர் மீது, குறிப்பாக இஸ்லாமியர்கள் மீது வன்முறையை ஏவுவதிலும், பயங்கரவாத செயல்களை நிகழ்த்தி அதனை இஸ்லாமியர்கள் மீது பொய்யாக கட்டமைப்பதிலும் ஆர்.எஸ்.எஸ். முன்னின்று செயல்படுகின்றன. ஆனால் இந்த ஆர்.எஸ்.எஸ். மீது என்.ஐ.ஏ. கவனத்தை திருப்புவதே இல்லை. இன்று மணிப்பூரில் இந்ததுத்துவ பயங்கரவாதிகள் சிறுபான்மை பழங்குடியினர் மீது நிகழ்த்தும் வன்முறையை என்.ஐ.ஏ. கண்டுகொள்ளவில்லை. மாறாக, இந்த இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகள் மீது சோதனை என்ற பெயரில் முடக்க முயற்சிக்கின்றன. குறிப்பாக, இஸ்லாமிய அமைப்புகளை குறிவைத்து செயல்படுகிறது. சொல்லப்போனால், என்.ஐ.ஏ. இந்ததுத்துவ பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பு போலவே செயல்படுகின்றன.
பாசிச பாஜக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினை சந்தித்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒன்றிய தேர்தலில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் ஜானநாயக ஆற்றல்கள் மீது அடக்குமுறையை ஏவும் வேலையை மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் என்.ஐ.ஏ., சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், சில நேரங்களில் நீதித்துறை மூலம் அச்சுறுத்தி மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாசிச சக்திகள் அதிகாரத்தை இழக்கும் சூழலில் ஜனநாயகத்தின் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும். அப்படியான நிலையைதான் இன்று ஒன்றிய பாசிச பாஜக அரசிடம் காண முடிகிறது.
ஒன்றிய பாசிச பாஜகவின் இந்த ஜனநாயக விரோத போக்கை ஜனநாயக ஆற்றல்கள் அனைத்தும் ஒன்றிணைத்து எதிர்கொள்ள வேண்டும். மோடி அரசின் பாசிச செயலை முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் கண்டிக்க முன்வர வேண்டும். மக்கள்விரோத என்.ஐ.ஏ. தமிழ்நாட்டில் செயல்படுவதற்கான அனுமதியை இரத்து செய்ய வேண்டும்என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. அடக்குமுறையை எதிர்கொள்ளும் இந்த சூழலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மே பதினேழு இயக்கம் துணைநிற்கும் என்பதை கூறிக்கொள்கிறோம். இந்த அடக்குமுறைக்கு எதிரான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் மே பதினேழு இயக்கத்தின் தோழர்கள் உடன் நிற்பார்கள், போராட்டத்தில் பங்கெடுப்பார்கள். ஒன்றுபட்டு அடக்குமுறையை எதிர்கொண்டு வீழ்த்துவோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010