கருப்பு ஜூலை: தமிழர் குருதி குடித்த சிங்களம்

சிங்கள பௌத்த இனவெறியின் கோரத்தாண்டவம்

ன்று ஆங்கிலேயர்களிடமிருந்து இலங்கை விடுதலை அடைந்ததோ;  என்று  இலங்கையில் ஆட்சி அமைக்கும் அதிகாரம் சிங்களர்களுக்கே சேரும் என்று ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு ஒப்படைத்து விட்டுச் சென்றார்களோ அன்றிலிருந்து இன்று வரை இலங்கை சிங்கள  அரசின் வரலாற்று ஏட்டில் கருப்பு பக்கங்களே நிரம்பி இருக்கின்றன.   அந்த கருப்பு பக்கங்களில் தமிழர்களின் செங்குருதியால் வரலாறு எழுதப்பட்டுள்ளது.

1956ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட பண்டார நாயகா கொண்டு வந்த ‘ஒற்றை சிங்கள மொழி சட்டம்’ என்ற சட்டத்திற்கான எதிர்ப்பை தமிழர்கள் தெரிவித்த போது தொடங்கிய தமிழர்கள் மீதான தாக்குதல் 2009 இறுதிப் போரில் நடைபெற்ற இனப்படுகொலையில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டதைக் கடந்து இன்றளவும் தொடர்ந்து வருகிறது.  இலங்கையில் இன்று வரை படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உத்தேச எண்ணிக்கையைக் கூட உலக மனித உரிமை ஆர்வலர்களால் கணக்கிட முடியவில்லை.   சராசரியாக ஒரு நாளைக்கு 20 முதல் 35 தமிழர்கள் வரை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற யூகத்தை  மட்டுமே கூறிக் கொண்டிருக்கின்றனர்.  அந்த அளவிற்கு இலங்கை  சிங்கள அரசு  தமிழர்கள் மீது நடத்திய மனித உரிமை மீறல்களும்,  பல கட்ட இனப்படுகொலைகளும்  சர்வதேச சமூகத்தால் பராமுகமாகவே ஒருதலைபட்சமாய் கையாளப்பட்டிருக்கிறது.

இலங்கை சிங்கள-பௌத்த அரசு முன்னெடுத்திருந்த பல அழிவுச் செயல்களில் அனைவரும் நினைவு கூறும் வரலாற்றுப் பக்கங்களாக  யாழ்ப்பாண நூலக எரிப்பு, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலைகள்,  ஜூலை கலவரம் போன்றவை இருக்கின்றன.   தமிழர்கள் மீது நடத்தப்பட்ட அத்தனை வன்முறை செயல்களும் இலங்கை அரசின் 100% ஆதரவுடன்  காவல்துறை,  இராணுவம்,  ஆளும் அரசு மற்றும் நீதித்துறை ஆகிய துறைகளின் முழு பங்களிப்பையும் பெற்று  பௌத்த மதத்தின் ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது என்பது இங்குக்  குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதம்  இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்திருந்த தமிழர்களையும் நேரடியாகப் பாதித்த மாதமாகும்.   இலங்கை வாழ் தமிழர்கள்,  ஈழத் தமிழர்கள்,  மலையகத் தமிழர்கள்,  இஸ்லாமியத் தமிழர்கள் என யாரையும் விட்டு வைக்காத இரக்கமற்ற காட்டுமிராண்டித்தன  படுகொலைகள் நிகழ்த்தப்பட்டது 1983 ஜூலை மாதம். இதுவே, ‘கருப்பு ஜூலை’ என்று தமிழர்களால் அழைக்கப்படுகிறது!

ஜூலை கலவரம்
பொதுவாகவே இலங்கை சிங்கள  இனவெறி அரசு வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் தமிழர்கள் மீது கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்பது  வழக்கம்.   இதை TCHR (Tamil Center for Human Rights) வெளியிட்ட ஜூலை கலவரம் பற்றிய அறிக்கையில் “தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கொடுக்கப்படாமல் இருக்கக் காரணங்களைத் தேடிச்செல்வதே இலங்கையின் மரபாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.  அதற்குச் சான்றாக இலங்கையில் அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட போதெல்லாம் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொலை, கடத்தல் பற்றிய தரவுகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசின் தேவை, சிங்கள இளைஞர்களையும் இனவெறி கொண்ட பௌத்த பிக்குகளையும் தூண்டி விடுவதற்கான ஒரு காரணம் மட்டுமே.   அரசியல் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக “தமிழர்கள் இதைச் செய்து விட்டார்கள், அதைச் செய்து விட்டார்கள்” என்கிற வதந்திகளைக் கிளப்பினாலே இலங்கையின் சிங்கள-பௌத்த இனவெறி கும்பல் தமிழர் வாழ் பகுதிகளைத் தாக்கத் தொடங்கிவிடும்.

இத்தகைய வன்முறையும் வக்கிரமும் தனது பொது மனநிலையாகக் கொண்ட சிங்கள-பௌத்த  இனவெறி  கும்பல்களின் இரத்தவெறிக்குக் கிட்டிய பெரு வாய்ப்புதான் 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம்  23ஆம் தேதி தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் சடலங்கள்.  அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறிய அளவில் மட்டுமே விடுதலைப்புலிகள் கொரில்லா தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தனர். இதில் இறந்து போன ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமாகவும்,  ஒரே தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் எண்ணிக்கை இரண்டு அல்லது மூன்றாகவும் மட்டுமே இருந்திருந்தது. இத்தருணத்தில், முதல் முறையாக 13 இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட வேண்டிய சூழல் என்னவாக இருந்தது?

 1977 முதல் 1981 வரை நடந்த பல்வேறு கலவரங்களில் பாதிக்கப்பட்ட இலங்கை மற்றும் ஈழத் தமிழர்களின் புணர்வாழ்விற்காக இலங்கையில் பெரும் வியாபாரங்களைச் செய்து வந்த தமிழர் சமூகம் பல்வேறு மீள் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தது.   குறிப்பாக, காந்தீயம் என்ற நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்த புனரமைப்பில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் வாழ்வை மீட்டெடுத்து விட முடியும் என்ற நம்பிக்கையில் வாழத் தொடங்கினர். எங்கெல்லாம் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம்  இலங்கை இனவெறி இராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி தமிழர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

இந்நிலையில், 1983ஆம் ஆண்டு தேர்தலையொட்டி நடந்த மரணங்களைக் காரணம் காட்டி மே 18 ஆம் நாள் அவசர நிலை பிரகடனம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகிறது.   இலங்கையில் நடைபெற்று வந்த பத்திரிக்கைகள் மீது கடுமையான ஒடுக்குமுறை நிகழ்த்தப்பட்டது.   பல பத்திரிகைகள், குறிப்பாகத்  தமிழர்கள் நடத்திய பத்திரிகைகள் மற்றும் தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பிறமொழிப் பத்திரிகைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டு; அதன் உரிமையாளர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.   சுதந்திரன்,  சண்டே ரிவ்யூ போன்ற பத்திரிகைகளும் இதில் அடங்கும்.

இந்த அவசர நிலை பிரகடன சூழலைப் பயன்படுத்தி சிங்கள இராணுவம் தமிழர் பகுதியில் தனது வெறித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டது.  பல தமிழர்களைக் கொடுமைப்படுத்தித் தாக்கியது மட்டுமல்லாமல்,  மூன்று தமிழ் பெண்களை வன்புணர்வு செய்து அதன் வெறியைத் தீர்த்துக் கொண்டது.   அதில் ஒரு பெண் தற்கொலையும் செய்து கொண்டார்.  இந்த கொடூரச் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் செயல்திட்டமாகத் தமிழீழ விடுதலைப்புலிகள்,   யாழ்ப்பாண நகரின் திருநெல்வேலி பகுதியில் ரோந்து பணியிலிருந்த இராணுவ வாகனத்தைத்  தாக்கினர். இந்த  தாக்குதலில் 13 இராணுவத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இதைப் பயன்படுத்திக் கொண்ட சிங்கள அரசு தமிழர்கள் மீது தங்களுடைய வரலாற்று இனவெறியைத் தீர்த்துக் கொள்ள முடிவெடுத்தனர்.

கலவரத்தைக் கட்டமைத்தவர்கள்
ஜூலை கலவரம் பற்றிய முழுமையான ஆதாரங்களைத் தேடுவது பெரும் சிரமத்துக்குரியதாகவே இருக்கிறது.  அச்சமயத்தில் இலங்கையில் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை  இதற்கு முக்கிய காரணமாகஅமைகிறது.   இந்த காலகட்டத்தை  ஒட்டி வெளியாகிய  ஈழநாடு போன்ற நாளேடுகள்  கிடைப்பதும் அரிது.   இதன் காரணமாக ஜூலை கலவரத்தின் முழு வீச்சு விவாதிக்கப்படாமலே கடந்து போகவேண்டியுள்ளது.
(கட்டுரையின் முதல் பாகம் கலவரத்தின் போக்கைப் பற்றியும்,  இரண்டாம் பாகம் கலவரத்திற்கான சூத்திரதாரி மற்றும் வரலாற்றுப் பின்னணி பற்றியும்  பேசும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது)

ஜூலை கலவரம் தொடங்குவதற்கான முதற்புள்ளி யாழ்ப்பாணத்தில் இறந்து போன 13 இராணுவ வீரர்களின் உடலை யாழ்ப்பாண ராணுவ இடுகாட்டிலேயே நல்லடக்கம் செய்யாமல்,  கொழும்பிலிருந்த கணத்தை  எனும் இராணுவ இடுகாட்டில் அடக்கம் செய்யப் போவதாக அன்றைய அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே அறிவித்ததே ஆகும்.  அந்த உடல்களும் இராணுவ முறைப்படி சவப்பெட்டிகளில் வைக்கப்படாமல்,  அனைவரும் பார்க்கும் வண்ணம் பாலிதீன் பைகளில் சுற்றி எடுத்து வரப்பட்டது.   பொது மக்களின் பார்வையில் எளிமையாகப் படும் வண்ணம் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட இந்த ஊர்வலம் சிங்களவர்கள் மத்தியில் தமிழர்கள் மீது இனவெறியைத் தூண்டும் என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனே நம்பினார்.

ஆனால், அன்று நடந்ததோ வேறு.   இறந்து போன இராணுவ வீரர்களின் உறவினர்கள் தங்கள் பிள்ளைகளின் உடல்கள் கனத்தை இராணுவ மயானத்தில் அடக்கம் செய்வதற்குச் சம்மதிக்கவில்லை.  “இதுவரை இல்லாத பழக்கமாக இது ஏன் இப்படி நடக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினர்.   அந்த கணத்தில் பல இராணுவ வீரர்களும் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதே சரி என்றும், கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் உடலை இவ்வாறு காட்சிப்படுத்துவது அவர்களுக்குச் செய்யும் அவமரியாதை என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனே  இல்லத்தை நோக்கி பேரணியாகப் புறப்படுவது என்றும் முடிவெடுத்தனர்.   தான் முன்னெடுத்த திட்டம் தனக்கு எதிராகவே திரும்புவதை ஜே.ஆர்.ஜெயவர்த்தனே  உணர்ந்து கொண்டார். அப்பொழுது   இலங்கையின்பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசா இராணுவ வீரர்களின் உடலைக் கொழும்புக்குக்  கொண்டு வந்தால் அது கலவரத்தைத் தூண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து  உடல்கள் உறவினர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அதுவரையிலும்  கணத்தை மைதானத்தில் கூடியிருந்த பெரும் சிங்கள கூட்டம் கலைந்து செல்ல தொடங்கியது.   ஓரிரு இடங்களில் ஏற்பட்டிருந்த அடிதடிகளையும், வன்முறைகளையும்  இலங்கை காவல்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தனது திட்டம் நிறைவேறாது  போனதைக் கண்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனே  நேரடியாகத் தனது அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களைக் கொண்டே கலவரத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தார்.  ஜெயவர்த்தனேவின் ஐக்கிய தேசியக் கட்சி  அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்த சிறில் மத்தியூ (களுவாதுவாகே சிறில் மத்தியூ), போக்குவரத்து அமைச்சர் எம். எச். முகம்மது (  முகம்மது அனீஃபா மொகம்மது), மாவட்ட அமைச்சர் வீரசிங்க மல்லிமாராச்சி, துணை அமைச்சர் அனுர பஸ்தியான், தேசியமயமாக்கப்பட்ட சேவைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர்  காமினி திசாநாயக்க (முடியன்சே ராலஹாமிலாஜ் லயனல் காமினி திசாநாயக்க) ஆகியோர் நேரடியாகப் பங்கெடுத்தனர்.  அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர் லலித் அத்துலத்முதலி (லலித் வில்லியம் சமரசேகர அத்துலத்முதலி), நிதியமைச்சர் ரோனி டி மெல் (ரொனால்ட் ஜோசப் காட்ஃப்ரே டி மெல்) ஆகியோர் இந்த கலவரத்தை ஆதரித்துப் பேசியும் வந்தனர்.  இது தவிர ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு மட்ட தலைவர்களும், மாநகர உறுப்பினர்களும், அவர்களின் உறவினர்களும் இந்தக் கலவரத்தில் நேரடிப் பங்கு வகித்தனர்.

கொழும்பு, யாழ் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கலவரம் வெடிக்கத்தொடங்கியது.  மெல்ல இது இலங்கை முழுவதும் பரவியது. முதலில் நடந்த கலவரத்தை உள்ளூர் காவல்துறை தடுக்க முயன்றபோது ஜே.ஆர்.ஜெயவர்தனேவின் அமைச்சர்கள் நேரடியாக வந்து முன்னின்று இனவெறியர்களுக்கு ஊக்கம் அளித்தனர்.  இராணுவமும் உடன் இருந்ததால் சிங்கள-பௌத்த இனவெறிக் கும்பலுக்கு வசதியாகப்  போனது.

தமிழர்கள் அதிகம் வசித்த பதுளை, திம்பிரிகசாயா, வெள்ளவத்தை, தெகிவளை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டன. உயர் பாதுகாப்பு சிறையான வெலிக்கடை சிறை உள்ளே இருந்த டெலோ அமைப்பின் தமிழ் போராளிகள் உள்ளிட்ட 52 தமிழர்கள் சிங்கள இனவெறி சிறைக் கைதிகளால் கொல்லப்பட்டனர். திரிகோணமலையில் தமிழர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.  இதை இலங்கை கடற்படையே செய்தது.

வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தமிழர்கள் வீடுகளையும், கடைகளையும், தொழிற்சாலைகளையும் தீயிட்டுக் கொளுத்தியது சிங்கள இனவெறி கலவரக் கும்பல். இராணுவம், காவல்துறையோடு, புத்த பிக்குகளும் இணைந்து கொண்டு தமிழர்களைப் படுகொலை செய்தனர்.

தமிழர்கள் வாழும் பகுதியில் பீரங்கி டாங்கிகளை இறக்கியும், ஹெலிகாப்டர்களை பறக்கவிட்டும் இனவெறி இராணுவம் அச்சுறுத்தியது.  யாழ்ப்பாணத்தில் மட்டும் 13000 இலங்கை இராணுவத்தினர்  குவிக்கப்பட்டனர்.

கலவரம் முடிந்ததும் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவோ, பறிபோன அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவோ ஜெயவர்தனே அரசு கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை. மாறாக, இதைக் காரணம் காட்டி தனிநாடு கோரிய கட்சிகள் அனைத்தையும் தடை செய்ய இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் ‘6 வது சட்டத் திருத்தத்தை’ ஜெயவர்தனே கொண்டுவந்தார்.  பல கட்சிகள் தடை செய்யப்பட்டன.  அதில் ஜெயவர்தனே அரசியல் எதிரியாக இருந்த கட்சிகளும் அடங்கும்.

13 இராணுவத்தினரின் உடல்களை ஊர்வலமாகக் கொண்டுவந்த ஜெயவர்தனே அரசு, கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்களை அடையாளம் காணாமல் இராணுவத்தினரே எரிக்க ஆணையிட்டது.

கலவரத்தில் இறந்த தமிழர்களின் எண்ணிக்கை 350 மட்டுமே என்று அரசு அறிவித்தது.  ஆனால், உண்மை எண்ணிக்கை 3000க்கும் மேல் என்று கண்ணால் கண்ட சாட்சியங்கள் மற்றும் சர்வதேச பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன. TCHR அறிக்கையோ 5000 தமிழர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.  மேலும், ஒரு லட்சத்துக்கும் மேலான தமிழர்கள் ஏதிலிகளாக உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்தனர். பத்தாயிரம் கோடிக்கும் மேல் தமிழர்களின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.

யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற ஈழ மற்றும் இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்லாமல்; மலையகத்தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளின் நிலை இன்னும் மோசமாக இருந்தது.

(பகுதி 1 – முடிவு. இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் வெளியாகும்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »