தமிழ்ப் பெண்களை துன்புறுத்திய ஆந்திர காவல்துறை

விசாரணையென்று தமிழர்களை பாலியல் வன்கொடுமை செய்த காட்டுமிராண்டிகள்

தமிழகக் காவல் துறையிடம் எந்தவித முன் அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாகத் தமிழ்நாட்டின் பழங்குடியினப் பெண்களை ஆந்திரக் காவலர்கள் இழுத்துச் சென்று மிருகத்தனமான வன்புணர்வை நடத்தியிருக்கிறார்கள். தமிழ்ப் பெண்களை மட்டுமல்ல, தமிழகத்தின் இறையாண்மையையும் அவமானப்படுத்தியிருக்கும் இந்த செயலுக்கு கடும் எச்சரிக்கையும், கண்டனமும் தெரிவித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அரசு மெளனமாக இருக்கிறது.

இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் மேலாகியும், முறையான நடவடிக்கையைக் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எடுக்க முயற்சிக்கவில்லை என ஆந்திரக் காவலர்களால் பாதிப்புக்குள்ளான பெண்கள், சென்னையில் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து சூலை 21, 2023-ல் புகார் அளித்துள்ளனர். அங்குக் கூடிய செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண்கள், ஆந்திரக் காவலர்கள் நடத்திய கொடூரமான பாலியல் துன்புறுத்தல்களைக் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். அவர்கள் துன்புறுத்தப்பட்ட விதத்தைக் கேட்ட அனைவரும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாயினர்.   

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியாண்டப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ஐயப்பன். இவர் பழங்குடி சமூகமான நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இவரை ஒரு திருட்டு வழக்கிற்காக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி ஆந்திர மாநிலக் காவலர்கள் கைது செய்ய வந்தனர். ஐயப்பன் இல்லாததால் அவரின் வீட்டு பெண்கள், ஏழு வயது சிறுவன் உட்பட ஏழு பேரை ஜூன் 11, 2023 ல் கைது செய்துள்ளனர். இதனால் ஐயப்பனின் தாயார் இணையம் (online) மூலமாக ஒரு புகார் அளிக்கின்றார். இது குறித்து கிருஷ்ணகிரி காவல்துறை துணை ஆய்வாளர் ஆந்திராவின் சித்தூர் காவல்துறையிடம் கேட்கிறார். இதனால் கோவமடைந்த சித்தூர் காவல் துறையினர் மீண்டும் இங்கு வந்து ஐயப்பனின் மனைவி, அம்மா, அப்பா ஆகியோரை ஜூன் 12, 2023-ல்,  ஆந்திராவின் போத்தலாம்பட்டு காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்கின்றனர். அங்கு வைத்துதான் இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஆந்திரக் காவல் துறையின் குண்டர்கள் அரங்கேற்றி இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட ஐயப்பன் மற்றும் குடும்பத்தினர்.

காவல் நிலையத்தின் பின்புறம் இருந்த ஒரு பாழடைந்த அறைக்கு ஒரு பெண்ணை கூட்டிச் சென்று அடித்து துன்புறுத்தியதோடு, நிர்வாணப்படுத்தி தொங்க விட்டிருக்கின்றனர். இரும்புக் கம்பியை பிறப்புறுப்பில் செருகி,  மிளகாய் பொடியைத் தூவியுள்ளனர். பின்னர் பலவந்தமாக இரு கைகளையும் அழுத்தி வன்புணர்வு செய்திருக்கின்றனர். கேட்கவே மனம் பதைக்கக்கூடிய இந்த கொடூரத்தை வெளியே சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். ஐயப்பனின் மனைவியை எட்டு காவலர்கள் கைகளையும், கால்களையும் அழுத்திப் பிடித்து நிர்வாணமாக்கியுள்ளனர். அந்த காட்சியைப் படமெடுத்து ஆபாச இணையதளத்திற்கு அனுப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். ஒரு காவலர் கட்டாயப்படுத்தி வன்புணர்ந்திருக்கிறார்.

இந்தக் கைது விவகாரத்தைக் கேள்விப்பட்ட மலைவாழ் பழங்குடியினர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இது குறித்து சித்தூர் சென்று, அங்குள்ள கட்சியினருடன் பேசி ஏழு பேரை விடுவிக்கும் வேலையை செய்தனர். திருட்டு குற்றம் சாட்டப்பட்ட ஐயப்பனும், அவர் மனைவியும் மட்டும் அங்கு அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து ஐயப்பனின் மனைவி வெளியே விடப்பட்டிருக்கிறார். இந்த நிலையில்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (DIG) அலுவலகத்திற்கு வந்திருந்தனர். ஆந்திரக் காவலர்கள் மீது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தும் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறையினர் அலட்சியம் காட்டுகிறார்கள் எனப் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் செய்தியாளர்களிடம் பேசிய போதுதான் இந்த வன்கொடுமைகளை எல்லாம் கூறியுள்ளனர். மேலும், திருட்டுக் குற்றத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் கஞ்சா வழக்கில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டிய செய்தியையும் தெரிவித்தனர். 

இந்த விவகாரம் பற்றி அறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், இதற்கான கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாகக் காசி புதிய ராசா தலைமையில் செங்கல்பட்டில் நடந்தது. அதில் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் பங்கேற்று தமிழ்ப் பெண்களுக்கு நடந்த இந்த அநீதிக்கு நீதி வேண்டும் எனத் தனது கண்டனங்களைப் பதிவு செய்தார்.

தமிழர்களின் மீதான ஆந்திரக் காவல் துறையின் வன்மம் இன்று நேற்றைக்கல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. தமிழர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபடுகிறார்கள் எனக் குற்றம் சுமத்தி 30-க்கும் மேற்பட்ட தமிழர்களைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். 2015ம் ஆண்டு ஏப்ரல் 7ம் நாள் தமிழர்கள் நினைவில் மறக்க முடியாத நாள். ஆந்திராவின் திருப்பதியை ஒட்டிய வனப் பகுதியில் செம்மரம் கடத்த வந்தார்கள் எனக் கூறி 20 தொழிலாளர்களை செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப் படை கொலை செய்தது. அவர்கள் அனைவரும் மிகவும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்தனர் என்பது அவர்களது உடலங்களின் தடயங்களே வெளிப்படுத்தியது. மரத்துண்டுகளைப் போல உடல் முழுதும் ரணங்களோடு, பாதி எரிக்கப்பட்டுக் கிடந்த உடல்களைப் பார்த்த தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதற்குப் பிறகும் கொலைகள் நிறுத்தப்படவில்லை.

2015ல் ஆந்திர காவல்துறையால் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்கள்.

2018-பிப்ரவரி 18-ல் கடப்பா ஒண்டி மிட்டா ஏரியில் இடுப்பளவு நீரில் 5 தமிழர்கள் கொல்லப்பட்டுக் கிடந்தனர். ஆந்திரக் காவல்துறை, “அவர்கள் செம்மரக் கடத்தலின் போது காவலர்கள் துரத்தியதால் தப்பியோடும் போது ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம்” எனக் கொழுப்புடன் கூறியது. ஆனால் அவர்களின் உடல்களில் பலத்த காயங்கள் இருந்தன. அதன் பிறகும் ஆந்திராவின் காளகஸ்தி அருகில் கொல்லப்பள்ளி என்ற வனப்பகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாக  2018, ஜனவரி மாதம் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஏழை, எளிய மக்களை மரம் வெட்டும் வேலை எனக் கூறி ஒப்பந்தக்காரர்கள் அழைத்துச் செல்கிறார்கள். மரங்களைப் பற்றியோ, அதன் விலைகளைப் பற்றியோ எந்தப் புரிதலும் இல்லாத சாமானிய மக்கள்  சொற்ப கூலிக்கு மரம் வெட்டச் சென்று விடுகின்றனர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பல கோடிகள் பெறுமானமுள்ள செம்மரக் கட்டைகளை, தமிழக எல்லையோரத்தில் கூலி வேலை செய்பவர்கள் கடத்த முடியுமா? இதனைக் கூறித்தான் ஆந்திரக் காவல்துறை சுட்டுக் கொல்கிறது. கொள்ளையர்களுக்குக் கூலிப்படையாக மாறுவதற்கு ஆந்திரக் காவல்துறை செம்மரக் கடத்தல் கணக்கைத் தமிழக தொழிலாளர்கள் தலையில் ஏற்றுகிறார்கள். சர்வதேச வலைப்பின்னலில் செம்மரக் கடத்தல் மாஃபியாவாக செயல்பட்டு கோடிகளைக் கொள்ளையடிக்கும் ஆந்திர அரசியல், அதிகாரப் பின்னணி கொண்டவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன் எளிய மக்களைப் பலிகடாவாக்குகிறார்கள்.

ஆந்திரக் காவல்துறை 2015-ல் 20 தமிழர்களைக் கொன்றதைக் கண்டித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கண்டனம் குறித்த செய்தி.

சர்வதேசச் சந்தையில் குறிப்பாகச் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் ஒரு டன் செம்மரம் ஒரு கோடி வரை விலை போகக்கூடியது. ஆந்திராவில் சேஷாசல காடுகளைத் தவிர, உலக அளவில் வேறெங்கும் பெரும்பாலும் காணப்படாத அழிந்து வரும் மரமான செம்மரத்தைக் காக்கவே கடுமையான சட்டங்கள் ஆந்திராவில் ஏற்படுத்தப்பட்டன. அந்த சட்டங்கள் கூலித் தொழிலாளர்களைக் காவு வாங்குகிறதே ஒழிய, செம்மர மாஃபியாவை அழிக்க முடியவில்லை. ஏனென்றால், அதிகாரிகளே கொள்ளைக் கும்பலுடன் சமரசம் செய்து கொள்கிறார்கள். அதேவேளையில், நேர்மையான ஆந்திர அதிகாரிகள் மாஃபியா கொள்ளைக் கும்பலால் கொல்லப்படும் சம்பவங்களும் நடக்கிறது.

ஆந்திராவில் காவல்துறை செம்மரக்  கடத்தல்காரர்களைக் கைது செய்தாலும்,   பணம் படைத்த, அரசியல் செல்வாக்கு உடையவர்களுக்கு உடனடியாக பிணையும் கிடைத்து விடுகிறது. நில அபகரிப்பு வழக்கில் கே.ஆர். வெங்கடேஷ் என்பவர் ஜூன், 2023-ல் கைதானார். இவர் பாஜகவின் முக்கியப் பிரமுகர். பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் செயலாளராக இருந்தவர். 40 செம்மரக் கடத்தல் வழக்கில் கைதாகி எளிதாக பிணை கிடைத்து வெளியே வந்துவிட்டார். எளிய கூலித் தொழிலாளர்கள் தான் பல ஆண்டுகளாகச் சிறையில் விசாரணை கூட இல்லாமல் வதைபடுகிறார்கள். விசாரணையுமின்றி, பிணைக்குக் கொடுக்கும் பணமுமின்றி சுமார் 3000 தமிழர்கள் ஆந்திர சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.

ஆந்திராவின் நெல்லூர், கடப்பா மற்றும் திருப்பதியின் சிறைச்சாலைகளில் மட்டுமே சுமார் 1000 ஆண்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என 2018 -ல் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிக்கையில் ‘கைதிகள் உரிமைகள் மன்றத்தின்’ செயல்பாட்டாளரும், வழக்கறிஞருமான பி.புகழேந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக் கைதிகளை ஆந்திரக் காவல்துறை செய்யும் சித்திரவதைகளைக் குறித்தும் பி.புகழேந்தி கூறியுள்ளார். கைதிகளை தலைகீழாகத் தொங்கவிட்டு, நகங்களைப் பிடுங்கி, மின்சாரம் பாய்ச்சி துப்பாக்கி முனையில் மிரட்டுவதால் பலரும் பேசுவதற்கே அச்சப்படுகின்றனர் என அவர்களின் நிலையை வருத்தத்துடன் விவரிக்கிறார்.  

சாமானிய தொழிலாளர்கள் பல சோதனைச் சாவடிகள், வனத்துறை காவலர்கள், செம்மரத் தடுப்பு அதிகாரிகளை எல்லாம் கடந்து செம்மரத்தைக் கடத்துவது சாத்தியமா? என்பது தமிழக ஜனநாயக சக்திகளின் கேள்வியாக இருக்கிறது. கடந்த காலங்களில் ஆந்திராவில் உள்ள தமிழ்நாட்டுக் கைதிகளின் வழக்குகளுக்காக திமுக, அதிமுக அரசுகள் வழக்கறிஞர் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் கைதான தொழிலாளர்களின் வழக்குகளை நடத்தினர். அது போல இப்போதும் தமிழ்நாடு அரசு, பிணை கூட வாங்க இயலாத வசதி, வாய்ப்பற்ற தமிழ்நாட்டுக் கைதிகளுக்கென தனியான குழுவினை ஏற்படுத்தி இவர்களின் வழக்குகளைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் ஜனநாயக ஆற்றல்களின் கோரிக்கையாக இருக்கிறது.

செம்மரக் கடத்தல் என்றாலே தமிழர்கள் தானென்று பதிய வைத்துக் கொண்ட ஆந்திரக் காவல்துறை, எந்தக் குற்றம் நடந்தாலும் அதற்கும் தமிழர்களுக்குப் பங்குண்டு என நினைத்து அத்துமீறி தமிழர்களைப் பிடித்துச் செல்கின்றது. அப்படியான எண்ணவோட்டத்தில் தான் தமிழ்நாட்டில் அத்துமீறி நுழைந்து இழுத்துச் சென்று தமிழ்ப் பெண்களை சொல்லொணா வேதனைக்கு ஆளாக்கி இருக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு மெளனம் கலைந்து ஆந்திர அரசுக்கு வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்வதோடு; குற்றம் புரிந்த ஆந்திர காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். மேலும், ஆந்திர காவல்துறை  இனி தமிழ்நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக செயல்படும் போக்கை தடுத்து நிறுத்தி தமிழர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »