ஹிஸ்புல்லா இசுரேலின் ராணுவ நிலையை அழித்திருக்கிறது. ஏமன் இசுரேலின் கப்பலை சிறைபிடித்திருக்கிறது. அரபு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சீனாவின் உதவியை நாடி இருக்கிறார்கள். ஆனால் காசாவில் படுகொலை நின்றபாடில்லை.
ஈராக்கில் அணு ஆயுதங்கள் உள்ளன என்று க்ராபிக் படம் காட்டி லட்சக்கணக்கான ஈராக்கியர்களை படுகொலை செய்தார்கள். ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கில் அமெரிக்காவின் குண்டுவீச்சுகளுக்கு பலியானார்கள். போர் எதிர்ப்பு போராட்டங்கள் அன்றும் தீவிரமாக நடந்தன, வியட்நாம் போரின் போது நடந்த போர் எதிர்ப்புப் போராட்டங்களைப் போல இன்று இசுரேலை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கின்றன. இப்போராட்டங்கள் தீர்வான முடிவை நோக்கி அரசை நகர்த்துமளவு வலிமையைப் பெறவேண்டுமெனில் இசுரேல் மேலதிகமாக தனிமைப்பட வேண்டும். அப்படியான முடிவினை நோக்கி நகராமல், இசுரேலை அரபு தேசங்களே பாதுகாக்கின்றன.
இசுரேல் மீது பொருளாதாரத் தடையும், இசுரேல் விமானங்கள் பறப்பதற்கான தடையையும், கச்சா எண்ணை குழாயை தடுப்பது என எதுவும் நடைபெறவில்லை. இசுரேலை முடக்குவது அரபு தேசங்களுக்கு கடினமான காரியமல்ல. துருக்கி வீர வசனம் பேசுகிறது. எகிப்து நயவஞ்சக நாடகமாடுகிறது. சவுதி நடித்துக்கொண்டிருக்கிறது. பாலஸ்தீனப் படுகொலை நடந்துமுடிய வேண்டுமென மேற்குலகம் காத்திருக்கிறது.
உலகளாவிய அளவில் ஆயுதக்குழுக்கள் என்பது மேற்காசியாவில் தீவிரமாக இயங்குகின்றன. ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுத்தீஸ் போன்ற வலிமையான அமைப்புகள் உலகில் மக்கள் போராட்டங்களுக்கு கிடையாது. 9/11 நிகழ்விற்கு பின்னர் இம்மாதிரியான மக்கள் அமைப்பு போராளி குழுக்களை உலகெங்கும் அழித்தார்கள். இசுலாமிய பெயரால் இயங்கும் அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்கள் தீவிரமடைய மேற்குலகு பாதை வகுத்தது. இக்குழுக்கள் இசுலாமிய மக்கள் மீதே தாக்குதல் நடத்தின. இவர்களின் கரங்கள் என்றுமே இசுரேல் மீது நீண்டதில்லை.
ஈரான் அல்லாத பிற அரபு தேசங்கள் காசாவோடு ஹமாஸ் புதைக்கப்பட வேண்டுமென விரும்புவதாகவே நகர்வுகள் காட்டுகின்றன. காசாவை போருக்குப் பின்னர் பாலஸ்தீன அத்தாரிட்டி அப்பாஸின் கீழ் கொண்டுவரப்போவதாக அமெரிக்க சொல்லுகிறது. சவுதியும், இதர நாடுகளும் இதை ஆமோதிப்பதைப் போல அமைதி காக்கின்றன. மேற்குலகும், அரபு தேசங்களும் காசாவை பலிகொடுத்து உலக ஒழுங்கை மாற்றியமைக்க விரும்புவதாக தோன்றுகிறது.
இப்போரில் இசுரேல் வெற்றிபெறுமெனில், மேற்காசியாவின் தாதாவாக இசுரேல் கோலோச்சும். ஆனால் காசாவில் அது நடத்தும் போரில் அரசியல் மற்றும் இராணுவ இலக்குகள் வெற்றிபெற வாய்ப்பில்லை. ஹமாசின் தலைமை காசாவில் இல்லை. ஹமாசின் அரசியல், இராணுவ தலைமையை அழிக்காமல் ஹமாசை அழிக்க இயலாது. ஈழத்தில் அழித்ததைப் போல ஹமாசை ஒட்டுமொத்தமாக அழிக்க வழியில்லாமல் நிற்கிறது இசுரேல். ஆனால் பாலஸ்தீன மக்களின் பொருளாதார கட்டமைப்பினை முழுவதுமாக அழிப்பதன் மூலம் ஈழத்து மக்களைப் போல மீண்டெழும் வலிமையற்றவர்களாக இரு தலைமுறைக்கு மாற்றிவிட முயலுகிறது.
உலகெங்கும் இசுரேல் நிகழ்த்தும் வன்முறையின் மீதான கோபம் அதிகரிக்கிறது. இதை மட்டுப்படுத்த ஆண்டி-செமிட்டிசம் விவாதத்தை முன்வைத்து ஐரோப்பிய அரசுகள் கூப்பாடு போடுகின்றன. ஹமாசின் எதிர்ப்பு போரின் வலிமை என்னவென இதுவரை எவராலும் அறிய இயலவில்லை. கொரில்லா படையணிகளால் தீவிர இழப்புகளை ஒரு இராணுவத்தின் மீது கொண்டுவர இயலும், ஆனால் முழுமையாக வெற்றிகொள்ள, நீண்டநாள் தாக்குப்பிடிக்கும் யுத்தமே சாத்தியமாகும் என்பதை ஆப்கானிஸ்தான் காட்டியது. இசுரேலின் பொருளாதாரத்தை அமெரிக்காவால் பாதுகாக்க இயலுமென்றாலும் எத்தனை தூரம் இப்போரை நடத்திட இயலுமென தெரியாது. யுக்ரேனைப் போல நீடித்த போருக்குள் இசுரேல் சிக்குமானால், பாலஸ்தீனத்திற்கு சாதகமான சூழல் உருவாகும். இப்படியான நிலைவரை ஹிஸ்புல்லா காத்திருக்கலாம்.
போரை விரிவடையவைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அமெரிக்கா இதில் சிக்காமல் தவிர்க்க நினைக்கிறது. இது நீண்டகாலம் சாத்தியப்படாது. மேற்காசியாவின் மக்கள் எழுச்சிக்கு ஈடுகொடுக்க அமெரிக்க சார்பு அரபு தேசங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமெனும் நிலையிலேயே சீனாவை நாடி உள்ளன. சீனாவிற்கு இப்போர் விரிவடையுமெனில் சிக்கலை உண்டாக்கும். கச்சா எண்ணை கிடைப்பதோ, கடல் வழித்தடம் அடைபடுவதோ சீனாவை மிக நெருக்கடிக்குள்ளாக்கும். அதே நேரத்தில் சீனாவின் வழியாக தீர்வைப் பெற அரபு தேசங்களின் முயற்சி என்பது அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக அமையும். அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தை எம்மாதிரியான முடிவுகளை கொடுக்கும் என்பது பைடனின் சீன எதிர்ப்பு பேச்சு கோடிட்டு காட்டலாம். பைடனிடம் இருப்பது அமெரிக்க திமிர். இது போரை மட்டுமே நம்புகிறது. ஆதிக்க ராணுவ தீர்வை மட்டுமே சிந்திக்கக்கூடிய ஆபத்தான அணுகுமுறை கொண்டவர். பைடன் வெளிப்படையாக சீனா அதிபர் பயணத்தின் பொழுதே சீனாவை விமர்சித்து ஊடகத்திடம் பேசியது பைடனின் அணுகுமுறையை காட்டுகிறது.
அமெரிக்கா-ஐரோப்பாவின் அரசியலுக்காக பேரழிவை காசா எதிர்கொண்டிருக்கிறது. இதை தடுக்கும் வலிமையற்று உலகளாவிய மக்கள் திரள் போராடிக்கொண்டிருக்கிறது. காசாவில் நிகழும் ஒவ்வொரு கொடுமையும் அரசுகளை தனிமைப்படுத்தும். இப்போர் இன்னும் சில மாதங்களுக்கு நீடிக்குமெனில் உருவாகும் சூழல் மேற்குலகிற்கு உவப்பானதாக இருக்க இயலாது.
ஹமாஸ் உலகோடு சனநாயக உரையாடலை நிகழ்த்தாமல் போகுமெனில் பாலஸ்தீனப் போராட்டத்தில் அதன் பிடி தளர்வடையும். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் பாலஸ்தீனத்திற்காக உலகமே போராடுகிறது. பாலஸ்தீனத்தின் அரசியல் வலிமையடைந்திருக்கிறது; விரிவடைந்திருக்கிறது. இப்போராட்டத்தை உலகளாவிய விவாதமாக சாமானிய மனிதர்கள் மாற்றியுள்ளனர். அவர்கள் மேலதிக சனநாயக விவாதத்தை ஹமாசிடம் கோருவார்கள். இசுரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவர இசுரேல் இயலாது போன நிலையில், இதற்கான தீர்வை ஹமாஸ் முன்வைப்பதை உலகம் எதிர்பார்க்கும். அப்படியான சூழலில் ஹமாஸ், மேற்குகரை அப்பாஸை விட அங்கீகரிக்கப்பட்ட தலைமையாக மாறும். அப்படியான சூழலை ஏற்படுத்த ஹமாசின் விவாதங்கள் விரிவடைய வேண்டும். இச்சூழலை 2006ல் ஹிஸ்புல்லா எதிர்கொண்டது. இல்லையெனில் தாலிபான்களைப் போல தனிமைப்பட்ட சூழலை எதிர்கொண்டுவிடுவார்கள். ஆப்கானிஸ்தான் எனும் பெரும் நிலப்பரப்பு தாலிபான்களை காத்தது. மிகச்சிறிய நிலப்பரப்பில் போராடும் ஹமாஸ், மிகவிரைந்து உலகளாவிய அளவில் தொடர்புகளை உருவாக்கி சனநாயக தீர்வுகளை முன்வைக்கும் நிலை விரைவில் உருவாக்கப்படவில்லையெனில் பாலஸ்தீன போராட்டத்திற்கு பின்னடைவை கொடுக்கும். அதுவரையில் நிகழும் அழிவை தடுக்க, தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்புவதும், போராடுவதும் நம் அனைவரின் வரலாற்றுக்கடமை.
ஒவ்வொரு தேசத்திலும் இசுரேல் மீதான பொருளாதார தடைக்கு கோரிக்கை வைத்து போராட்டம் தீவிரமடைவதும் அவசியம். மேற்குலகில் இசுரேலின் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டம் நடக்க ஆரம்பித்துள்ளது. இது விரிவடையும். உலகளாவிய அளவில் நடைபெறும் யுக்ரேன், இசுரேல் அழிவுப் போர்கள் மிகமோசமான எதிர்காலத்தை நமக்கு காட்டுகிறது. தற்போது அர்ஜண்டீனாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வலதுசாரி அரசு, தெற்கு உலக கூட்டமைப்பை பலமிழக்க வைக்க முயலுகிறது. டாலர் மதிப்பை கூட்ட வழி சொல்லியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலேயே அமெரிக்க சார்பாகவும், ப்ரிக்ஸ் கூட்டமைப்புக்கு எதிராகவும் பேச தொடங்கியுள்ளார் அதன் புதிய அதிபர்.
உலக வரலாற்றில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு மிகத்தீவிரமான சூழலில் நாம் வாழ்கிறோம். இச்சூழலுக்கும் நமக்கும் தொடர்பில்லை என நகர்ந்துவிடுமளவு எளிமையாக எதுவும் இல்லை. ஈழத்தின் படுகொலைக்கான நீதியும், ரொஹிங்க்யா மக்களுக்கான நீதியும் கிடைக்க வழியில்லையெனில் பாலஸ்தீனமும் இப்பட்டியலில் இணைந்து கொள்ளும். இன்று ஈழத்தில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளான். போனவரும் ஒரு பெண் இதே போல விசாரணை என்று கொண்டு செல்லப்பட்டு படுகொலையானாள். பாசிச அரசுகள் வீழ்த்தப்படுவதற்கான வலிமையான மக்கள் இயக்கங்கள் இல்லாத காலகட்டம் இன்னும் மோசமானது. மோடி ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்தும் தேவையை இவை இன்னும் கூர்மைப்படுத்தி உள்ளன.