தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடத்த முயன்றதற்காக 2017-ல் சிறைப்படுத்தப்பட்ட 17 தோழர்கள் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். அதைக் குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் முகநூலில் டிசம்பர் 2, 2024 அன்று பதிவு செய்தது.
2017ல் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்றதற்காக 17 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டோம். தோழர்கள் டைசன், இளமாறன், அருண்குமார், தனஞ்செயன், சிவா , சுரேஷ், வேலு, ஹரி, தஞ்சை தமிழன், மாரி, நரேன், சுரேஸ், கலை என 17 தோழர்கள் என்னுடன் சிறைப்பட்டார்கள். பொது சொத்திற்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட பலவேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. நினைவேந்துவது எமது தமிழர் பண்பாட்டு உரிமை என வாதங்களை முன்வைத்து வழக்கறிஞர்கள் குழு மூத்த வழக்கறிஞர் தோழர்.பழனிவேல் தலைமையில் வழ.பெரியசாமி, பிரபு, நஃவீஸ் உள்ளிட்ட தோழர்கள் 7 ஆண்டுகளாக வழக்காடினார்கள். காவல்துறை தரப்பில் சிறப்பு பலனாய்வு பிரிவான CBCID வழக்கை நடத்தியது.
இந்நிலையில் நினைவேந்தும் உரிமையை நிலைநாட்டுவதும், காவல்துறையின் பொய்க்குற்றச்சாட்டை முறியடிக்கும் விதமாக வழக்கை நடத்தினோம். 7 ஆண்டுகளாக நடந்த வழக்கில் இன்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. காவல்துறை தரப்பட்ட குற்றச்சாட்டினை நிராகரித்து 17 தோழர்களையும் விடுதலை செய்தது நீதிமன்றம். குற்றமற்றவர்கள் என்று காலை அமர்வில் பெருநகர தலைமை குற்றவியல் நீதியரசர் உத்திரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
2017 நினைவேந்தல் பலவேறு நெகிழ்வான நினைவுகளை கொடுக்கிறது. கடுமையான அடக்குமுறையை மீறி ஆயிரக்கணக்கான தோழர்கள் நினைவேந்த திரண்டனர். ஐயா.ஓவியர் வீரசந்தானம் அவர்களுடன் இறுதியாக பங்கேற்ற நிகழ்வு அது. அடக்குமுறையை கட்டவிழ்த்தது காவல்துறை. என்னை தனிமைப்படுத்தி காவலர்கள் தாக்குவதை கண்ட தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், இளமாறன், அருண்குமார் உள்ளிட்ட தோழர்கள் எனக்கு அரணாக நின்றார்கள். அதனால் அவர்களும் என்னுடன் சிறைப்பட்டனர்.
எங்கள் நால்வர் மீது கடுமையான மேலதிக பிரிவுகளில் வழக்குகளை பதிவதாகவும், மன்னிப்பு கடிதம் கொடுத்தால் பிணை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தோம். இரண்டு வாரத்தில் தோழர் அருண்குமாருக்கு திருமணம் உறுதிசெய்யப்பட்டிருந்தது. 4 வருட போராட்டத்திற்கு பின் இருவீட்டாரின் ஆதரவுடன் திருமணம் நடக்க இருந்த சமயத்தில்தான் அவர் சிறைப்பட்டிருந்தார். எங்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது. 17 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் எங்கள் நால்வரை தவிர மற்றவர்களுக்கு பிணை கொடுத்தார்கள். அருண்குமார் திருமணம் நின்று போனது. அவரது இணையர் உறுதியோடு ஆதரித்து நின்றார். சிறைமீண்ட பின்னர் அவர்கள் திருமணம் நடந்தது. சிறையிலிருந்த 4 மாத காலகட்டத்தில் பிணை எடுக்க இயலாமலும், வழக்கறிஞருக்கு வாய்ப்பில்லாமல் இருந்த 25-30 அப்பாவி ஏழை சிறைவாசிகளுக்கு பிணை ஏற்பாட்டினை செய்து கொடுத்தோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பொழுது கைது செய்யப்பட்டு 8 மாதமாக அவர்கள் சிறையிலிருந்தவர்கள். எங்கள் மீது பொய்யாக புனையப்பட்ட குண்டர் சட்டத்தை உடைத்து மூத்த வழக்கறிஞர், தோழர் என்.ஆர்.இளங்கோ அவர்கள் பிணை கிடைக்கச் செய்தார்.
சிறையிலிருந்து மீண்டபொழுதில் சிறைக்கு எதிரேயிருந்த பெரியார், அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டோம், பின்னர் ராயப்பேட்டை பெரியார் சிலைக்கும் மாலையிட்டோம். இதற்காக மூன்று தேசதுரோக வழக்கை அப்பொழுதே பதிவு செய்தார்கள். 3 தேசதுரோக வழக்குகளுடன் வீடு திரும்பினோம். இதன் பின்னர் 27 வழக்குகளை என்மீது பதிவு செய்தார்கள். இவற்றில் பெரும்பாலான வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டோம். குறிப்பாக காவேரிக்காக ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக நடத்திய போராட்டம், மோடி கருப்புகொடி ஆர்ப்பாட்டம், பாலஸ்தீன ஆதரவு போராட்டம், சேலம் சிறுமி பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம், கருப்பு பண ஒழிப்பை கண்டித்த போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், சீர்காழி அம்பேத்கர் பிறந்தநாள் பொதுக்கூட்ட வழக்கு, ஒக்கிபுயல் வழக்குகள் என மக்கள் கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் இதில் அடக்கம்.
இச்சமயத்தில் எங்கள் மீது மாரிதாஸ் உள்ளிட்ட சங்கிக்கூட்டம் என பெரும்பட்டாளம் அவதூறுகளை பரப்பியது. எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல் உறுதியுடன் நின்ற தோழர்கள், வழக்கறிஞர்கள், எங்கள் விடுதலைக்கு ஆதரவளித்து போராட்டம் நடத்திய அனைத்து கட்சி-இயக்க தலைமைகள், புலம்பெயர் தோழமைகள், மனித உரிமை அமைப்புகள், ஊடக நண்பர்கள், மே17 இயக்க தோழமைகள் என எங்கள் விடுதலைக்கு பங்களித்த பட்டியல் மிக நீளமானது. உடன் நின்று ஆதரவளித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்களுக்கான எங்கள் களப்பணியும், போராட்டமும் தொடரும்…
குறிப்பு: நாங்கள் ‘குற்றவாளிகள் அல்ல’ எனும் தீர்ப்பு செய்தியாக ஊடகத்தில் வரும்போது சங்கி எச்.ராஜா ‘குற்றவாளி‘ என தீர்ப்பு வருவது என்பது அவர் நம்புகிற கடவுளின் செயலாக இருக்கலாம்.
தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
திசம்பர் 02, 2024