“ஆப்கனை கைவிடுவது” அமெரிக்காவின் தீர்வுகளில் இடம்பெறுமா?
சுமார் ரூ.168 லட்சம் கோடி ($2.26 ட்ரில்லியன்), 20 ஆண்டுகள் கடந்து; 2500 அமெரிக்க படையினர் மற்றும் 4000 அமெரிக்க ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழப்பிற்கு பிறகு, அமெரிக்கா தாலிபன்களிடம் இருந்து 2001ல் பறித்த ஆட்சியை மீண்டும் 2021ல் தாலிபன்களிடமே ஒப்படைத்துவிட்டு வெளியேறியுள்ளது.
2001ல் உலக மனித வள குறியீட்டு பட்டியலில் 162ஆம் இடத்தில் “தாலிபன் ஆண்ட” ஆப்கனிஸ்தான் இருந்தது. 2020ல், 20 ஆண்டுகளாக மேற்குலகம் கட்டமைத்த ஆப்கன், 168வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் வறுமையில் வாடும் மக்கள்தொகை இரட்டிப்பாகியுள்ளது, ஓப்பியம் போதை பொருள் உற்பத்தி மூன்று மடங்காக வளர்ந்துள்ளது.
ஆப்கனிஸ்தான் நாட்டை கட்டியெழுப்புகிறோம் என்று 20 ஆண்டுகளாக தொடர்ந்து அமெரிக்காவும், நேட்டோ உறுப்பு நாடுகளும் கூறி வந்த நிலையில், 2020ல் ஆப்கனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் ரூ.1.48 லட்சம் கோடிகள் ($20 பில்லியன்) மட்டுமாகவே உள்ளது. அப்படியானால், மேற்குலகம் ஆப்கனில் செலவழித்ததாக சொல்லப்படும் ரூ.168 லட்சம் கோடிகள் என்னவாயின?
புரிதலுக்கு சொல்ல வேண்டுமென்றால், 2020ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.146 லட்சம் கோடி. இந்தியாவின் பொருளாதாரத்தில் சுமார் 1% மதிப்புடைய ஆப்கன் நாட்டை கைப்பற்ற கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் ஆண்டு உள்நாட்டு உற்பத்தியை விட (ரூ.168 லட்சம் கோடிகளை) அதிகமாக அமெரிக்கா செலவழித்ததற்கான காரணம் என்ன?
“அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரி வருவாய் குவியலை ஆப்கானிஸ்தான் வாயிலாக மீண்டும் பன்னாட்டு பாதுகாப்பு ( இராணுவ தளவாட நிறுவன ) முதலாளிகளிடம் கொண்டு சேர்ப்பதே (ஆப்கன் போரின் நோக்கம்) ஆகும். போரின் இலக்கு வெற்றி அல்ல, ஓயாத போர் மட்டுமே!” என்று 2011ல் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே ஆப்கான் போர் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
2010ல் “ஈராக் போர் குறிப்புகள்”, “ஆப்கன் போர் குறிப்புகள்” என்ற அமெரிக்க ஏகாதிபத்திய போர்களை அம்பலப்படுத்திடும் இரகசிய ஆவணங்களை “விக்கி லீக்ஸ்” இணைய வழியே அசாஞ்சே வெளியிட்டார். இதில், ஆப்கன் போர் குறித்து 91,000 இரகசிய ஆவணங்கள் வெளியானது. ஆப்கன் போரில் அமெரிக்க படையினர் பொதுமக்களை கொல்வதும், பல்வேறு ஆயுத குழுக்களிடம் தோல்வியை சந்திப்பதும் இந்த ஆவணங்கள் உலகிற்கு தெரியப்படுத்தின. அமெரிக்க படை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு அம்பலமாகியது.
அமெரிக்க ஏகாதிபத்திய போர்களின் சீரழிவுகளை உலகிற்கு அம்பலப்படுத்திய காரணத்திற்காக குறிவைக்கப்பட்டு பல்வேறு பொய் வழக்குகளின் கீழ் அசாஞ்சே கடந்த 2019 முதல் இங்கிலாந்து சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அசாஞ்சாவிற்கான நீதி கேட்டு குரல் எழுப்பிடுவது அனைத்து சனநாயகவாதிகளின் கடமை என்பதை இத்தருணத்தில் நாம் நினைவுபடுத்திட வேண்டி உள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்தது என்பதை போன்று அமெரிக்காவின் பொருளாதாரம் “போர் பொருளாதாரம்” (War Economy) என அழைக்கப்படுகிறது. அதாவது, அமெரிக்க பொருளாதார பங்களிப்பில் இராணுவ போர் தளவாட ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் பங்களிப்பு முதன்மையானது. ஆகவே, உலகில் போர் நடைபெறுவது அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது. குறிப்பாக, அமெரிக்காவின் அரசியலை தீர்மானிக்கும் இராணுவ தளவாட பாகாசுர நிறுவனங்களின் லாப வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது. இந்த பொருளாதார நலனிற்காக தான் அமெரிக்கா “நீண்ட நெடிய, முடிவில்லா போர்” நடத்துவதில் ஆர்வம் காட்டுகிறது.
அசாஞ்சே கூறியதைப்போல அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் மற்றும் கார்பரேட்கள் கொழுத்திட ஆப்கன் போர் தொடரப்பட்டாலும், போரின் காரணமாக தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அமெரிக்கர்களிடையே கவலையை உருவாக்கியது.
கடந்த 20 ஆண்டுகளில், அமெரிக்கா நாளொன்றுக்கு ரூ.223 கோடிகளை ஆப்கானிஸ்தானில் இறைத்து வந்துள்ளது. மேலும், தொடரும் அமெரிக்க படையினர் உயிரிழப்புகள். இவை இரண்டும் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் பெரும் பிரச்சனையாகவே உருவெடுத்தது.
“ஆப்கனுக்கு உதவ நினைப்பவர்கள் அமெரிக்க அரசுக்கு வரி செலுத்தினால் போதும்” என்று கிண்டல் செய்யும் அளவிற்கு அமெரிக்க மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஆப்கனைவிட்டு அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க தலைவர்கள் பேச தொடங்கினர்.
2001ல் ஜார்ஜ் புஷ் தொடங்கி வைத்த போரை ஒபாமா தனது பத்தாண்டுகளில் முடிக்க தயாராக இல்லை. 2017ல் அமெரிக்க அதிபராகிய ட்ரம்ப் “அமெரிக்கா பர்ஸ்ட்” என்கிற கொள்கை அடிப்படையில் அமெரிக்காவிற்கு பலனளிக்காத திட்டங்களை, போர் செலவினங்களை குறைக்கப்போவதாக அறிவித்தார். அதனடிப்படையில், பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறியது, அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவது, ஆப்கனை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறுவது போன்றவை முக்கிய முடிவுகளாக கருதப்படுகின்றன.
இராணுவரீதியாக ஆப்கனை கட்டுப்படுத்திடும் திட்டத்தை கைவிட்டு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் கட்டுப்படுத்திடும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது.
தாலிபன் மற்றும் பல்வேறு பழங்குடியின ஆயுத குழுக்களால் கட்டுப்படுத்தப்படும் பிராந்தியங்கள் முழுவதையும் ஆப்கன் அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது சாத்தியமில்லை. இதை தாமதமாக உணர்ந்த அமெரிக்கா, ஆப்கன் அரசும், பழங்குடியின ஆயுத குழுக்களும் அதிகாரத்தை பகிர்ந்து ஆட்சிபுரியுமாறு பரிந்துரைத்தது. இதை ஏற்கமறுத்த ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனியின் அரசை புறக்கணித்து அமெரிக்கா நேரடியாக தாலிபன்களுடன் கத்தார் தலைநகர் தோஹாவில் 2018ல் பேச்சுவார்த்தையை தொடங்கியது.
“மே 1, 2021 தேதிக்குள் ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்ப பெறுவது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 29 பிப்ரவரி 2020 அன்று தாலிபன்களுடன் நேரடியாக ஒப்பந்தமிட்டார். இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஆப்கன் அரசு பங்கேற்காதது இன்றைய கனியின் ஆட்சி கவிழ்ப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இத்தோடு தனது 20 ஆண்டுகால ஆப்கன் போரை முடித்து கொண்டு அமெரிக்கா கிளம்புகிறதா என்று யோசித்தால் பல விடையில்லா கேள்விகள் நம் முன்னே அந்தரத்தில் தொங்குகின்றன!
இன்றைய தாலிபன்
1990-களின் தாலிபன்களை போன்று 2021-ல் அவர்கள் இல்லை. அவர்கள், பழைய ரசிய ஆயுதங்களை விடுத்து அமெரிக்காவின் அதிநவீன துப்பாக்கிகளை ஏந்தி ஜொலிக்கும் ஜப்பானிய பிக்-அப் டிரக்குகளில் வலம் வருகின்றனர். வெறும் ஆயுதங்களை மட்டுமே நம்பி போரிடாமல் ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தள பிரச்சாரங்களை போர் தந்திரோபாயமாக பயன்படுத்தியுள்ளனர். இதில், ரசியாவின் பங்கு கவனிக்க வேண்டியுள்ளது. பல்கலைக்கழக பட்டதாரிகளை தாலிபன் போராளிகளாக இணைத்து கொண்டதன் பெரும் பலனை இன்று அது அடைந்துள்ளது.
இன்றைய தாலிபன்கள் தாங்கள் ஆப்கனிஸ்தானின் முறையான அரசாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள். ஊடகங்களை சந்தித்து ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார்கள். சர்வதேச சமூகத்திடம் “நற்பெயர்” பெற்றிட நினைக்கிறார்கள். அதற்காக, தங்களுக்கு எதிராக போராடியவர்களுக்கும் அவர்களுக்கு உதவியவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர். அரசு கட்டமைப்பு, நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்திட விழைகிறார்கள். அதற்காக கடந்த அரசுக்கு பணிபுரிந்த அரசு ஊழியர்கள் அனைவரையும் தொடர்ந்து தங்கள் பணிகளை தொடருமாறு கூறியுள்ளனர்.
மிக முக்கியமாக, ஆப்கனில் “தீவிரவாத” குழுக்களுக்கு பயிற்சி அளித்திட இடமளிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். மேற்குலக நாடுகள் இதை தங்களுக்கான வெற்றியாக பேசுகின்றன.
இன்றைய தாலிபன்கள் தங்களையும் சர்வதேச அரங்கில் மற்ற நாடுகளுக்கு இணையாக மதித்து நடத்திட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால், கருத்தியல் அடிப்படையில் இவர்கள் 1990களின் இறுகிப்போன தீவிர இசுலாமிய மத அடிப்படைவாதிகளாகவே உள்ளனர். மற்ற மத அடிப்படைவாத நாடுகளை போல தங்களையும் சர்வதேச அளவில் நிறுவிட முயற்சி செய்து வருகிறார்கள்.
அதேபோல், ஆட்சியை கைப்பற்றிய விதமும் அசாதாரணமாகவே உள்ளது. இது பல சந்தேகங்களை எழுப்புகின்றன. 90 நாட்களில் ஆப்கன் ஆட்சி கவிழும் என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால், வெறும் 5 நாட்களில் கவிழ்ந்தது.
எந்த எதிர்ப்புகளுமின்றி தாலிபன்கள் தங்கள் பிக்-அப் வாகனங்களில் வந்து இறங்கி காபூலை கைப்பற்றியுள்ளனர். அவர்கள் நாட்டை கைப்பற்றிட ஏதுவாக ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறுகிறார், அமெரிக்கா வழிவிட்டு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறது. இதை உறுபடுத்திடும் விதமாக, ஆப்கன் அதிபர் கனி நாட்டைவிட்டு வெளியேற தாமதம் செய்ததால் தான் அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் அரசை பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்திடாமல் தாலிபன்களுடன் அமெரிக்கா நேரடியாக ஒப்பந்தமிட்டது; ஆப்கன் அதிபர் கனி நாட்டைவிட்டு வெளியேற காத்திருந்தது என்கிற இரண்டு நிகழ்வுகளும் அமெரிக்கா தாலிபன்களை ஆட்சியில் அமர்த்திட திட்டமிட்டு முடிவெடுத்துள்ளதாகவே புலப்படுகிறது.
உலகெங்கிலும் மத அடிப்படைவாதிகளுடன் இணைந்து செயல்படுவதையே அமெரிக்க ஏகாதிபத்தியம் விரும்புகிறது. மத அடிப்படைவாதிகள் ஒருபோதும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திரள மாட்டார்கள் என்பதற்கு “சவூதி அரேபியா – அமெரிக்கா” உறவு நல்ல உதாரணம். அந்த வகையில் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆப்கன் அதிபர் கனியின் அரசுடனான உறவு தொடர்வதை காட்டிலும் மத அடிப்படைவாதிகளுடன் இயங்குவதையே அமெரிக்கா தனக்கு சாதகமாக நினைக்கிறது.
அமெரிக்கா தனது மக்களை வெளியேற்ற வழிவிட்டு தாலிபன்கள் மவுனமாக காத்திருக்கின்றனர். காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைத்தளமாக ஆகத்து மாத இறுதி வரை பயன்படுத்திட அனுமதித்துள்ளனர். ஆகையால், அமெரிக்க – தாலிபன் உறவு சுமுகமாக இருப்பதாகவே தெரிகிறது. இது, கூடிய விரைவில் இணைந்து செயல்படுவதற்கான சமிக்ஞை என்றும் கருத்திடலாம்.
அப்படியானால், ஆப்கனில் அமெரிக்காவிற்கு நீடிக்கும் ஆர்வம் என்னவாக இருக்குக்கூடும்? மத்திய ஆசியாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மற்றும் பொருளாதார நலன்களை ஆராய வேண்டியுள்ளது.
ஆப்கனின் புவிசார் இடம்
உலகின் மிகப்பெரிய கண்டமான ஆசியாவின் இருபுறத்தையும் இணைத்திடும் சமவெளியின் மீது ஆப்கனிஸ்தான் அமைந்துள்ளது. “மேற்கு – மத்திய” நிலப்பரப்பை “கிழக்கு – தெற்கு” பகுதியுடன் ஆப்கானிஸ்தான் இணைக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனித போக்குவரத்துகளை கண்ட சமவெளி மற்றும் வணிக பரிவர்த்தனைகள் பயணித்து வந்த நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் செலுத்திட பல்வேறு அரசுகளிடையே கடும் போட்டி வரலாற்று காலம் முதலே தொன்றுதொட்டு இருந்துள்ளது. “பேரரசுகளின் சவக்குழி!” என்று வரலாற்றாசிரியர்கள் ஆப்கனிஸ்தானை வர்ணிக்கிறார்கள்.
இன்றைய வடக்கு ஆசியாவில் வளம் கொழுக்கும் பெரிய நிலப்பரப்புடைய வல்லாதிக்க நாடான ரசியா தனது இயற்கை எரிவாயுவை தெற்காசிய சந்தைக்கு கொண்டு சேர்க்க ஆப்கன் நிலப்பரப்பு மிக முக்கியமானதாக பார்க்கிறது. அதன் பிரதான சந்தையான ஐரோப்பாவுடன் தொடர்ந்து வளர்ந்து வரும் முரண்பாடுகள் காரணமாக மாற்று சந்தைகளை நாடுவது ரசியாவிற்கு அவசியமாகவும் உள்ளது.
மறுபுறம், உலகின் உற்பத்தி ஆலையான சீனா கிழக்கு ஆசியாவில் இருந்து தனது உற்பத்தி பொருட்களை இந்திய பெருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்வதில் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. முதலாவதாக, கடல் வழி சரக்கு போக்குவரத்து செலவு அதிகமாவது; இரண்டாவதாக, இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக சீனா பண்டைய பட்டு வழிச்சாலையை மீட்டெடுக்க முனைகிறது. இந்த திட்டம், நிலம் மார்கமாக ஆப்கன் வழியாக மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா சந்தைகள் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பா சந்தைகளை அடைந்திட முடியும். இந்த திட்டம் வெற்றிபெற்றால் சரக்கு போக்குவரத்து செலவு குறைவதுடன் அமெரிக்காவின் அச்சுறுத்தல் நிறைந்த கடல் மார்க போக்குவரத்தை நம்பி சீனா இருக்க வேண்டியதில்லை. இத்திட்டங்களை குறித்து மேலும் விரிவாக இக்கட்டுரையில் வாசிக்கலாம்.
ரசியா மற்றும் சீனாவின் வர்த்தகத்திற்கு ஆப்கன் சமவெளி எவ்வளவு முக்கியமோ அதே அளவு, அந்நாடுகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி தனது உலக வல்லாதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டிட துடிக்கும், அமெரிக்காவிற்கும் ஆப்கன் முக்கியமாகிறது.
இந்த வல்லாதிக்க நாடுகள் தங்கள் சண்டையில் இந்தியாவை துண்டாக ஆப்கன் பாலைவன வெயிலிலும் குளிரிலும் தொங்கவிட்டு சென்றுள்ளன. இந்தியாவின் சர்வதேச புவிசார் அரசியலில் ஆப்கனிஸ்தான் மிக முக்கியமான இடத்தை வகித்துவந்தது. இப்படியான ஆப்கன் விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் படுதோல்வி குறித்து ஏற்கனவே இக்கட்டுரையில் விரிவாக வெளியாகியுள்ளது.
பரந்து விரிந்த மத்திய ஆசிய நிலப்பரப்பில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களை கட்டுப்படுத்துவதில் ஆப்கனிஸ்தான் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மேற்குலகம் கருதுகிறது. அதைவிட குறிப்பாக, ஆப்கனிஸ்தானில் குவிந்துள்ள அரியவகை இயற்கை வளங்களையும் இழந்திட மேற்குலகம் தயாராக இல்லை.
“லித்தியம்”ன் சவூதி அரேபியா
மத்திய ஆசியாவின் புவிசார் அரசியலில் முக்கிய இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தானில் உலகின் மிகவும் அரியவகை கனிம வளங்கள் குவிந்து கிடப்பதாக “அமெரிக்க புவியியல் ஆய்வு” மையம் தெரிவித்துள்ளது.
சுமார், 220 கோடி டன் இரும்பு, 6 கோடி மெட்ரிக் டன் தாமிரம் போன்ற கனிம வளங்கள் ஆப்கானிஸ்தானில் குவிந்துள்ளது. முக்கியமாக, 14 லட்சம் டன் லந்தனம், சீரியம், நியோடிமியம், அலுமினியம், தங்கம், வெள்ளி, துத்தநாகம், பாதரசம், லித்தியம் ஆகிய அரியவகை கனிமங்கள் உள்ளன.
உலகின் அதிகமான லித்தியம் புதைந்திருக்கும் பொலிவியா நாட்டிற்கு இணையான அளவில் லித்தியம் ஆப்கனின் “காஸ்னி” மாகாணத்தில் மட்டுமே இருப்பதாக அமெரிக்காவின் இராணுவ தலைமையகம் பென்டகன் கண்டறிந்துள்ளது. உலகிலேயே மிக அதிகமான அரியவகை கனிம வளங்கள் ஆப்கனிஸ்தானில் மட்டுமே இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அரியவகை கனிமங்கள் இன்றைய கைபேசிகள், தொலைக்காட்சிகள், கணினிகள், லேசர்கள், பேட்டரிகள், ஹைபிரிட் யந்திரங்கள் முதல் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு தேவைப்படும் மிக முக்கிய கனிமங்கள் ஆகும். இன்றைய அனைத்து மின்னணு கருவிகளும் லித்தியம் பேட்டரிகளால் இயக்கப்படுகின்றன. மின் சக்தி மூலம் இயங்கிடும் வாகனங்களில் மின் சக்தியை சேமித்து வைக்க லித்தியம் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. பருவநிலை மாற்றம் காராணமாகவும், கார்பன் உமிழ்வு கட்டுப்படுத்திடும் நோக்கத்திலும் உலக நாடுகள் மின் வாகன பயன்பாட்டை பரிந்துரைக்கின்றன. இதன் விளைவாக, பேட்டரி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருளான லித்தியமிற்கு எதிர்காலத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கனிம வளங்களை கட்டுப்படத்துவதன் மூலம் எதிர்கால தொழில்நுட்பத்தையே கட்டுப்படுத்திட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
உலக வல்லாதிக்க போட்டியில் வெற்றி பெற நினைக்கும் நாடுகளுக்கு எதிர்கால தொழிநுட்பத்தையும் அதற்கு தேவைப்படும் மூலப்பொருட்களையும் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம். இதன் காரணமாக, லித்தியம் கனிம வளம் கிடைக்கும் சுரங்கங்களை கட்டுப்படுத்திட அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது, சீனா உலகின் 40% லித்தியம் வளத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவை பெரும் பின்னடைவுக்கு தள்ளிவிட்டு முன்னேறியுள்ளது. இது, மேற்குலகிற்கு பெரும் கலக்கத்தை தந்து வருகிறது.
“கச்சா எண்ணெய்” வளத்திற்கு சவூதி அரேபியாவை போன்று “லித்தியம்” கனிம வளத்திற்கு ஆப்கானிஸ்தான் என்று அமெரிக்காவின் பென்டகன் வர்ணித்துள்ளதை இந்த புள்ளியில் இருந்து நாம் கவனிக்க வேண்டும்.
இந்த கனிம வளம் தனக்கு கிடைக்காவிட்டாலும் தனது போட்டியாளர்களான ரசியா, சீனாவிற்கு கிடைக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா உறுதியாக இருக்கும் என்பதை மட்டும் தெளிவாக கூறலாம்.
ஆப்கானை கைவிடுவது ஒரு தீர்வா?
இராணுவ ரீதியாக ஆப்கனிஸ்தானில் தொடர்வதற்கு உள்நாட்டில் ஏற்படும் எதிர்ப்புகள் காரணமாக அமெரிக்கா அரசியல் தீர்வுகளை தேடியது. ஆப்கனின் வளங்களை சுரண்டி பொருளாதார லாப அடைந்திட அமெரிக்காவிற்கு இது அவசியம்.
தற்போது, ஆப்கனில் உள்ள கனிமவள சுரங்கங்களை பல்வேறு பழங்குடியின போர் தலைவர்களும், ஆயுத குழுக்களும் கட்டுப்படுத்தி வருகின்றன. இந்த வளங்கள் சூறையாடப்படுவதை மேற்குலகம் நிறுவிய “சனநாயக” ஆப்கன் அரசால் கட்டுப்படுத்திட முடியவில்லை. பல்வேறு இனக்குழுக்களாக நாடு முழுவதும் சிதறுண்டு கிடக்கும் ஆப்கன் சமூகத்தை ஒற்றை ஆப்கன் அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா படுதோல்வியை தழுவியது. இந்நிலையில் தான் அமெரிக்கா “சண்டைக்காரன் காலில் விழுவதாக முடிவெடுத்து” தாலிபன்களை போன்று போராடும் ஆயுத குழுக்களிடம் பேரம் பேசத்தொடங்கியது. அந்த பேரத்தின் விளைவாகவே அதிபர் கனியின் ஆட்சியை அமெரிக்கா கைகழுவிட்டது.
ஆப்கனில் கொட்டிகிடக்கும் கனிம வளங்கள் சுமார் ரூ.223 லட்சம் கோடி ($3 ட்ரில்லியன்) வரை இருக்கலாம் என்று அமெரிக்க ஆய்வுகள் கணித்துள்ளன. இதுவரை, அமெரிக்கா ரூ.168 லட்சம் கோடிகளை ஆப்கானிஸ்தானில் கொட்டியது வெறும் பிராந்திய கட்டுப்பாட்டிற்கு மட்டுமல்ல கனிம வளங்களையும் குறிவைத்தும் தான் என்பது தெளிவாகிறது.
சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சனநாயக அரசை விரட்டிவிட்டு தாலிபன்கள் அதே சர்வதேச அங்கீகாரத்துடன் தங்கள் மதவாத ஆட்சியை நிறுவ முனைகின்றனர். இதையே அமெரிக்காவும் எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிகிறது. ஆனால், தாலிபன்களின் ஆட்சிக்காலமும் சண்டை சச்சரவுகள் நிறைந்தவையாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. தாலிபன்களுக்கு எதிராக போராடும் “ஐஎஸ்ஐஎஸ் – கோரசான்” போன்ற பல்வேறு ஆயுத குழுக்கள் தொடர்ந்து அரசுக்கு நெருக்கடிகளை வழங்குவார்கள். இந்த போராட்டக்குழுக்கள் எந்த வல்லாதிக்க சக்திகளுக்கு வளைந்து கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆப்கனில் அமெரிக்கா இன்று ஒரு தற்காலிக பின்னடைவை சந்தித்தாலும் அது மீண்டு வரும் என்பதில் சந்தேகம் இல்லை. தாலிபன் அமெரிக்காவின் வளர்ப்பு குழந்தை. ரசியாவிற்கு எதிராக போராட அமெரிக்காவால் பயிற்சியளிக்கப்பட்ட மத அடிப்படைவாத ஆயுதப்படை தான் தாலிபன்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். மேலும், மதரீதியாக தாலிபன்களுடன் மிக நெருக்கமாக இயங்கும் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் இணைந்து பயணித்த வரலாறு தான் அதிகம்.
ஒரு தீவிர மதவாத அரசை வைத்து சவூதி அரேபியாவின் கச்சா எண்ணையை அனுபவித்து வரும் அமெரிக்காவிற்கு தாலிபன்களை வைத்து ஆப்கனின் லித்தியம் மற்றும் அரியவகை கனிமங்களை சுரண்டுவதில் எந்த பிரச்சனையும் இருக்கப்போவதில்லை.
இன்று, சீனா, ரசியாவின் கை ஓங்கியுள்ளதாக தென்பட்டாலும் அது வெகு காலம் நீடித்திட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனென்றால், ஆப்கனை கைவிடுவது அமெரிக்காவிற்கு ஒரு “தீர்வாக” இடம்பெற சாத்தியமில்லை!
Hi…
i like this post… good article.