கூவம் கரையோர மக்கள் வெளியேற்றமும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமும்

கூவம் கரையோர மக்கள் வெளியேற்றமும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமும்

ஆறுகள் சீரமைக்கும் பணிகளில் ஆற்றங்கரையோரக் குடியிருப்புகளை அகற்ற வேண்டியதே முதன்மையான நடவடிக்கையாக அரசுகள் தொடர்ந்து நிறுவ முயலுகின்றன. அதன் ஆழத்தில் படிந்திருக்கும் உண்மை காரணங்கள் பெரும்பாலும் வெளியே தெரியவதில்லை. நகர்ப்புற ஆறுகள் சீரமைப்புப் பணியில் மறைந்திருக்கும் முழுமையான பின்னணியை அறிவதற்கு அரசு செயல்படுத்தும் திட்டங்களை ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

கடந்த 2009 காலகட்டத்தில் ஒன்றிய, மாநில அரசுகளால் இரண்டு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அப்போதைய திமுக அரசால் ரூ.1200 கோடியில் “கூவம் ஆறு மறு சீரமைப்பு திட்டம்” அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை தொடர்ந்து ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையால் ரூ.1800 கோடியில் “சென்னை துறைமுகம் – மதுரவாயல்” அதிவிரைவு மேம்பால நெடுஞ்சாலைத் திட்டமும் தொடங்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் தொடங்கி சிந்தாரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு வழியாக திருவள்ளூர் மாவட்டத்தின் மதுரவாயலில் முடிவடைகின்றது. இதன்படி கூவம் ஆற்றின் மேலே வளைவுப் பாதையாக இந்த நெடுஞ்சாலை அமையும் படியாக திட்டமிடப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களையும் ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கையில் தான் குடியிருப்புகள் அகற்றப்படும் நோக்கம் புலப்படும்.

சாகர்மாலா திட்டம்

கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் சென்னையை அழகுபடுத்துவது, பூங்காக்கள் அமைப்பது, சுற்றுச்சூழல் மேம்படுத்துவது போன்ற மேற்பூச்சு காரணங்கள் முன் வைக்கப்பட்டது போல; மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தில் வாகன நெரிசலை குறைப்பது, அதிவிரைவுப் போக்குவரத்து போன்ற மேற்பூச்சு காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், சென்னைத் துறைமுகத்திற்கான சரக்கு போக்குவரத்தை தங்கு தடையின்றி நடத்திடவே ஒன்றிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. மோடி அரசு இத்திட்டத்தை தனது “சாகர்மாலா” திட்டத்தின் ஒரு பகுதியாக இணைத்துள்ளது.

சாகர்மாலா திட்டம் என்பது இந்திய தீபகற்பம் நெடுக்கிலும் சிதறிய “மணிகளாக” உள்ள துறைமுகங்களை அதிவிரைவு நெடுஞ்சாலை “நூல்களால்” மாலையாக கோர்ப்பது ஆகும். இதன்மூலம், மாநிலங்களின் இயற்கை வளங்களை தங்குதடையின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இந்திய மார்வாரி பனியா கும்பலின் கொள்ளை வர்த்தகம் சீராக நடத்திட முடியும். மேலும், கடற்கரைகளில் நட்சத்திர சொகுசு கேளிக்கை விடுதிகளை அமைத்திடவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தடையாக இருக்கும் கடலோர மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தி, மீன் பிடி தொழிலை கார்பரேட்களுக்கு தாரைவார்த்திட “மீன் வள மசோதாவை” ஒன்றையும்  திட்டமிட்டுள்ளது.

கார்பரேட்களுடன் கைகோர்த்து செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்களில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவது வழக்கமான ஒன்று. அடையாறு கழிமுகத்தை ஆக்கிரமித்து சென்னையின் பணக்காரர்கள் வசிக்கும் எம்ஆர்சி நகர், ராமாபுரத்தில் வடிகால் ஓடை மற்றும் அடையாறை ஆக்கிரமித்துள்ள மியாட் மருத்துவமனை, கூவத்தை ஆக்கிரமித்துள்ள நுங்கம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனை போன்ற பணக்காரர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு ஒருபோதும் முனைந்திடாது. அதாவது, ஒன்றிய அரசு கொண்டு வரும் சாலைத் திட்டத்திற்கு தேவையான நிலங்களை பறித்துக் கொடுக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கரையோரக் குடிசைகளை அகற்றுகிறது. அதற்கு ஆறுகள் சீரமைப்புத் திட்டம் என்கிற முகமூடியை அணிந்து வருகிறது.

ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2010-ம் ஆண்டு இந்த சென்னை துறைமுகம் மதுரவாயல் நெடுஞ்சாலைத் திட்டம் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை (Coastal Regulatory Zone) மீறுவதாக இருப்பதால் சுற்றுச்சூழல் அனுமதியை மறுத்தது. ஆனால் அதன் அனுமதி பெறுவதற்கு முன்பாகவே 2009ல் அப்போதைய பிரதமரான மன்மோகன் சிங்கினால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான வேலைகளும் துவங்கப்பட்டுவிட்டது.

கூவம் ஆற்றங்கரையோரம் நடைபெறும் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தின் பாலம் அமைக்கும் பணி

அப்பொழுதே இந்த திட்டத்தை சுற்றுச்சூழல் நிபுணர்களும், நீரியல் வல்லுநர்களும் எதிர்த்தனர். இத்திட்டத்தின்படி அமைக்கப்படும் பெரிய தூண்களால் கூவம் பகுதியில் ஆழமும், அகலமும் அதிகரிக்கப்படும். அதனால் கோடைக் காலங்களில் சாக்கடை நீர் தேங்கிடவும், மழைக் காலங்களில் அருகாமைப் பகுதிகளில் வெள்ளம் புகுந்திடவும் அபாயம் உள்ளதாக எச்சரித்தனர். இத்திட்ட வடிவமைப்பில் தொழில்நுட்பரீதியான குறைபாடுகளும் இருப்பதாக போக்குவரத்து பொறியாளர்களும், நகர்மய நிர்வாக வல்லுனர்களும் கருத்தரங்குகளை நடத்தினர்.

2012-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு இத்திட்டத்தை கிடப்பில் போட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் தொடர்ந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, டெல்லி சென்று அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தன் விளைவாக இத்திட்டம் மீண்டும் உயிர் பெற்றது. சுற்றுச்சூழல் நிபுணர்கள் எதிர்த்த காரணங்கள் இன்றும் அப்படியே தான் உள்ளன. ஆனாலும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதியும் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கியுள்ளன.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டு சென்னைக்கு சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி வந்தார். சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தின் வடிவம் மாற்றப்பட்டு தற்போது இரண்டு அடுக்குகள் கொண்ட மேம்பால நெடுஞ்சாலையாக ரூ.5000 கோடியில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 2020-ம் ஆண்டு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் இந்தத் திட்டத்தை வேகமாக  நிறைவேற்ற தேவையான நிலங்களை விரைவில் கைப்பற்றுமாறும் கூறிச் சென்றார். அதன்படியே குடிசைவாழ் பகுதிகளை அபகரிக்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது.

மீண்டும், 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் இத்திட்டம் வேகமெடுக்கத் துவங்கியிருக்கிறது. குடியிருப்புகள் அகற்றும் பணியும் இனி வேகமாக நடைபெறும். அரும்பாக்கம் குடியிருப்புவாசிகளை அகற்றிய நிகழ்வுகளே அதற்கு சான்று.

அரும்பாக்கத்தில் இடிக்கப்பட்ட வீடுகள்

கூவம் மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் 12,000 குடும்பங்களை இதுவரை வெளியேற்றி இருக்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இந்த பறக்கும் மேம்பால சாலை திட்டத்திற்காக 2009-ல் 1084 குடும்பங்களும் 2017-ல் 1876 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. மேலும், 4010 குடும்பங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் மையப்பகுதியில் வாழ்ந்த குடும்பங்களை மழைக்கால வெள்ளத்திலிருந்து காப்பாற்றவே வெளியேற்றுகிறோம் என்று அரசு கூறுகிறது. ஆனால், அவர்களை மழை வெள்ளம் வடிகால் பகுதிகளான பெரும்பாக்கம், கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற சதுப்பு நிலங்களை அரசே ஆக்கிரமித்து குடியமர்த்தி வருகிறது.

உலகத் தரத்திலான நகரங்களைக் கட்டியமைக்கவும், அந்நிய முதலீடுகளை ஈர்த்திடவும் செயல் திட்டங்களை தீட்டும் அரசுகள் குடிசை வாழ் மக்களை நகரத்திற்குள் வாழத் தகுதியற்றவர்கள் என்று எண்ணுகிறது. அதனால் அவர்களை அப்புறப்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுகிறது.

ஆற்றங்கரைகளை குடிசைகளின் ஆக்கிரமிப்புகளின்றி அரசால் அகற்ற முடிகிறது. அதனையடுத்து, அரசின் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக அப்பகுதியின் சந்தை மதிப்பும் உயரத்தொடங்குகின்றன. அந்த “சந்தை மதிப்பு” நட்சத்திர விடுதிகள், தொழிற்பூங்காக்கள், வணிக வளாகங்கள் போன்றவைகளை அரவணைத்து கொள்கிறது. மீண்டும், ஆற்றங்கரைகளின் மீதான புதிய ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. ஆனால், இந்த பணக்கார ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிட அரசுகள் முனைவதில்லை.

பல தலைமுறைகளாக உழைத்து சிறு பட்டினத்தை ஒரு சர்வதேச மாநகரமாக்கியவர்களின் வசிப்பிடமும் சிங்கார சென்னைக்குள் அமைவது தானே சமூக நீதி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »