இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வும், மீன்வள மசோதாவும்

இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வும், மீன்வள மசோதாவும்

கடல்வளத்தை கொள்ளையடிக்க மீனவர்களை அப்புறப்படுத்தும் மோடி அரசு

இந்தியாவை பொறுத்தவரை மக்களுக்கு தேவையான சத்தான உணவு குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருப்பது கடல்சார்ந்த உணவுகள் தான். அதுவும் குறிப்பாக மீன் பெரும்பாலானவர்களின் விருப்ப உணவுகளில் ஒன்று. மேலும் இந்தியா உலகளவில் மீன் உற்பத்தியில் 7.58%பூர்த்தி செய்கிறது. மீன் ஏற்றுமதியின் மூலம் மட்டும் சுமார் 46,589கோடி வருமானம் கிடைக்கிறது. இப்படி மிக முக்கியமான சமூக பொருளாதார மதிப்புடைய தொழில் தான் மீன்பிடித்தொழில். இந்தத்தொழிலை அழிக்கத்தான் ‘இந்திய கடல் மீன்வள மசோதா 2021’ என்ற ஒரு மசோதாவை பாஜகவின் ஒன்றிய அரசு அவசர சட்டமாக தாக்கல் செய்திருக்கிறது.

உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO) ஒப்பந்தத்தின்படி மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்துதல் என்ற பெயரில் கடுமையான சட்ட திட்டங்களை மீனவர்கள் மீது கட்டவிழ்ப்பது, சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் ஆழ்கடல் கனிம வளங்களின் ஆய்வுகளை தொடங்குவது, மீனவர்களுக்கான மானியங்களை நிறுத்துவது போன்ற மறைமுக உள்ளடக்கங்களை கொண்டுள்ளது இந்த மசோதா. மேலும் இந்த மசோதா மீனவர்களை கடற்கரையை விட்டு வெளியேற்றி மீன்பிடி தொழிலை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதற்கான ஓர் செயல்திட்டமாக இருக்கிறது.

இதற்கு முன் இருமுறை இந்த மசோதாவை அமல்படுத்த முயற்சித்து மீனவ மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. தற்பொழுதும் பல்வேறு மீனவ அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் மோடி அரசிற்கு கண்டனத்தை தெரிவித்து போராடி வருகின்றனர்.

ஆனால், நடந்துகொண்டிருக்கும் மழைகால கூட்டுத்தொடரில் மோடியின் ஒன்றிய அரசு இதை அவசர சட்டமாக நாடாளுமன்றத்தில் அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. இந்தியப் பெருங்கடலில் நிலவும் வல்லாதிக்க போட்டியில் தன்னுடைய இருப்பை தக்கவைத்து கொள்வதற்கான கட்டாயத்தில் ஒன்றிய அரசு இந்த மசோதாவை கொண்டு வருகிறது. அவசரச் சட்டமாக இந்த மசோதாவை நிறைவேற்றியே தீர்வதென்று மோடி அரசு முடிவெடுத்திருப்பதற்கு காரணம், கடல் மீன்வள வணிகம் தொடர்பாக உலக வர்த்தக நிறுவனத்துடனும் (WTO), ஆழ்கடல் கனிமவள ஆய்வு (Deep Seabed Mineral Exploration) தொடர்பாக சர்வதேச கடல்பரப்பு அதிகார நிறுவனத்துடனும் (International Seabed Authority) இந்தியா ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களே.

மீனவர்களின் மீன்பிடி படகுகள்

நெடுங்காலமாக உலக வர்த்தக நிறுவனம் மீன்பிடி தொழிலை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று நிர்பந்தித்து வருகிறது. அதாவது மீனவர்கள் தங்கள் படகுகளை பதிவு செய்து கொண்டு, அரசின் அனுமதியுடன் குறிப்பிட்ட எல்லைக்குள், குறிப்பிட்ட ரக மீன்களை, குறைந்த அளவிலான மீன்களை மட்டுமே பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. இந்த கட்டுப்பாடுகளை மீறினால் அதை சட்டவிரோத செயலாக வரையறுக்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறது. மேலும் கடற்பகுதியில் மீன் வளம் குறைவதற்கு இந்த சட்டவிரோத, அதிகப்படியான மீன்பிடித்தலே காரணம் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் மீன்வளம் குறைவதற்கு முக்கிய காரணமாக பெருநிறுவனங்களின் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களே என்பது அனைவரும் அறிந்தது.

பெரு நிறுவனங்களின் மீன்பிடித்தல் முறை

1958 வணிக கப்பல் சட்டத்தின் கீழ் மீனவர்கள் தங்களுடைய நாட்டுப்படகு, விசைப்படகு, இயந்திரப்படகு என்று அனைத்தையும் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இது நாள் வரை பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் மட்டுமே பதிவு செய்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், இப்போது நம் மீனவர்களின் சாதாரண படகுகளும் பதிவு செய்யப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசை பொறுத்தவரை மீனவர்களின் சிறு குறு படகுகள் அனைத்தும் பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கு இணையானதாக கருதிக்கொள்கிறது. ஒரு நாட்டுப்படகுக்கு இணையாக ஓர் ஆழ்கடல் இயந்திரப்படகை எப்படி ஒரே தரத்தில் வைத்து அணுக முடியும்.

மேலும், நிர்வாக வசதிக்காக கடல் மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. கடற்கரையிலிருந்து 12 கடல் மைல் வரை அண்மைக் கடல் என்று கூறப்பட்டிருக்கிறது. மாநில அரசுக்கு உட்பட்ட இந்த பகுதியில் மீனவர்கள் ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்ற பிறகே மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 12 முதல் 200 கடல் மைல் வரை சிறப்பு பொருளாதார மண்டலமாகவும் (EEZ- Exclusively Economical zone), 200 கடல் மைல் தொலைவுக்கு மேல் சர்வதேச கடல் எல்லை என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது.

பிரிக்கப்பட்ட கடற்பரப்பு

12 முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்பு பொருளாதார மண்டலம் (EEZ), ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதை நிர்வகிக்க ஒன்றிய அரசின் அதிகாரிக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது. இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயல். மீனவர்கள் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் மீன் பிடிக்க கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட மீன் மட்டும் தான் பிடிக்க வேண்டும், அதிகளவு பிடிக்கக்கூடாது அதிலும் ஒரே ஒரு மீன்வலை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது 5000 முதல் 2லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், மேலும் ஒரு வருட சிறை தண்டனை என்று கடுமையான சட்ட திட்டங்களை கொண்டுள்ளது.

ஒன்றிய அரசின் கடலோர காவல்படை அதிகாரியின் செயல்பாட்டை எதிர்த்து கேள்வி கேட்க மீனவர்களுக்கு உரிமை கிடையாது, மீறி கேள்வியெழுப்பினால், ஒரு வருட சிறை தண்டனை என்பது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் மீனவர்கள் மீது திணிக்கப்படவில்லை. இந்தி மொழி பேசத்தெரியாதா என்று மீனவர்களை துன்புறுத்திய அதிகாரிகள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒன்றிய அரசின் அதிகாரிக்கு அனைத்து அதிகாரங்களும் கையளிக்கப்படுவது மீனவர்கள் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். கடுமையான சட்ட திட்டங்கள் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகிவிடும். மாநில அரசுக்கே கடல் மீன்வள தொடர்பான சட்ட திட்டங்களை நிர்வகிக்கும் உரிமை இருக்க வேண்டும் என்று மீனவ சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில் 50,000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் அனுமதி பெற்ற பிறகு தான் தொழிலுக்கு செல்ல வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் அதே வேளையில் மீன்களின் விலைகளும் பல நேரங்களில் குறைவான விலைக்கே விற்பனையாகிறது. இதற்கு நடுவில் 5000 முதல் 2 லட்சம் வரையிலான அபராதங்கள் மீனவர்களை முற்றிலுமாக முடக்கி தொழிலை விட்டே விரட்டிவிடும். இத்தகைய சூழலில் பன்னாட்டு மீன் பிடி நிறுவனங்கள் உள்நாட்டு தரகு நிறுவனங்களுடன் இணைந்து சிறு குறு மீனவர்களின் தொழிலை ஆக்கிரமித்துக்கொண்டு மீனவர்களை கடற்கரையை விட்டே வெளியேற்றி விடும் என்ற அச்சம் இருக்கிறது. இதை தான் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசும் விரும்புகிறது.

மேலும் மீன்படி தடை காலத்தை அரசு எப்போது வேண்டுமானலும் எந்த இடத்தை வேண்டுமானாலும் அறிவிக்கும் என்று வரையறைபடுத்தியுள்ளது. இதன் மூலம் கடல் பகுதியை இந்திய ஒன்றிய அரசு மீன்படி தொழிலுக்காக மட்டும் பார்க்கவில்லை, கனிமவள ஆய்வு, எண்ணெய் கிணறுகள், ஹைட்ரோகார்பன் எடுத்தல் போன்ற மற்ற பகுதிகளாகவும் பார்க்கின்றனர் என்பது உறுதியாகிறது.

ஆண்டுக்கு 6000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுதரும் எங்களை ஓர் குற்றவாளியைப் போல் பாவித்து இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது என்று மீனவ சங்க உறுப்பினர்கள் வேதனையடைகின்றனர்.

எரிமலை எச்சங்கள்

2016 செப்டம்பரில் ஆழ்கடல் கனிமவள ஆய்வு (Deep Sea Exploration) தொடர்பாக சர்வதேச கடல்பரப்பு அதிகார நிறுவனத்துடன்(ISA) இந்திய ஒன்றிய அரசு ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதில் இந்திய கடல் பரப்பில் 75,000 சதுர கி.மீட்டர் அளவில் Poly Metallic Nodules and Poly Metallic Sulphides என்ற தாதுக்களை மத்திய இந்தியப்பெருங்கடல் படுகையிலிருந்து வெளியே எடுத்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த Poly Metallic Nodules என்பது கடலின் அடிமட்டத்தில் இருக்கும் எரிமலைகளில் இருந்து வெளியே வந்த எச்சங்கள் (Magma Residues). சிறு கற்கள் வடிவில் இருக்கும் இவற்றில் தாமிரம், நிக்கல், அலுமினியம், மாங்கனீசு, துத்தநாகம், லித்தியம் மற்றும் கோபால்ட் போன்ற இயற்கையான தாதுக்கள் அடங்கியுள்ளன. இவை கைப்பேசி முதல் பேட்டரிகள் வரை பல மின்னணு இயந்திரங்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாக இருக்கின்றன. உலகம் முழுவதும் இந்த மூலப்பொருட்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்தியப் பெருங்கடல் கனிமாவளங்கள்

இயற்கையான முறையில் ஆழ்கடல் படுகையில் கிடைக்கும் இந்த தாதுக்கள் இந்தியப் பெருங்கடலில் தான் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நடத்தப்படும் கடல் பரப்பை தான் சிறப்பு பொருளாதார மண்டலமாக (EEZ – Exclusively Economic Zone) ஒன்றிய அரசு மீன்வள மசோதாவில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகவே 12 முதல் 200 கடல் மைல் தொலைவிலான மீன்பிடி தொழிலுக்கு இத்தனை கட்டுப்பாடுகளும், ஒடுக்குமுறைகளும் அறிவித்திருக்கிறது.

2021 மார்ச் மாதத்தில் இந்த ஆய்வு தொடர்பாக ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிவிட்டது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார். இதை தொடர்ந்து 2021 ஜூன் மாதத்தில் “ஆழ்கடல் திட்டம் (Deep Ocean Mission)” என்ற திட்டத்தின் கீழ் கடலை ஆராயவும் மற்றும் கடல் வளங்களின் நிலையான பயன்பாட்டிற்காக ஆழ்கடல் தொழில்நுட்பங்களை உருவாக்கவும் ஒன்றிய அரசு நில அறிவியல் அமைச்சகத்துக்கு (MoES) அனுமதி வழங்கியது. அடுத்த ஐந்து வருடகால ஆய்வுக்காக 4,000 கோடி ரூபாயும் இதனுடன் சேர்த்து ஒதுக்கியுள்ளது. 6000 மீட்டர் ஆழத்தில் கிடைக்கும் இந்த பாலி மெட்டாலிக் நோடுல்ஸ் (Poly Metallic Nodules) தாதுகட்டிகளை ஆய்வு செய்து, படுகையிலிருந்து மேலே தரைப்பகுதிக்கு கடத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் செயலில் சென்னையை சேர்ந்த தேசிய கடல்நுட்ப கல்வி நிறுவனம் (NIOT) ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கடல்பரப்பு அதிகார நிறுவனத்தின் படி 380 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான பாலி மெடாலிக் நோடுல்ஸ் (Poly Metallic Nodules) தாதுக்கட்டிகள் இந்தியப்பெருங்கடல் படுகைகளில் இருக்கிறது.

சீனா, கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகள் இந்த தாதுக்கட்டிகள் ஆய்வில் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் இந்திய ஒன்றியஅரசுக்கு இந்தியப்பெருங்கடல் பகுதியில் பிராந்திய ரீதியிலான முக்கியத்துவம் இதன் மூலம் கிடைக்கிறது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனா கடல் வழித் தகவல்தொடர்புகளைப் பாதுகாப்பதாக தனது நோக்கத்தைக் கூறினாலும், இந்தியப்பெருங்கடலில் தன் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள விரும்புகிறது. ஆனால் இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, கடல் வளங்களை அணுகுவதற்கான முயற்சி ஒன்றிய அரசின் பாதுகாப்பு அம்சத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கான ஆய்வாளர் ஸ்ம்ருதி பட்டநாயக் தெரிவிக்கிறார்.

கடலிலிருந்து கனிம வளங்களை எடுக்கும் தொழில்நுட்பம்

மற்றொருபுறம், இந்த ஆழ்கடல் கனிமவள ஆய்வு மூலம் கடல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்படக்கூடிய தீங்கு குறித்து பல சுற்றுச்சூழல் அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன. 95% கண்டறியப்படாத பல கடல்வாழ் உயிரினங்கள் இன்றும் ஆழ்கடலில் இருக்கிறது. இந்தியப்பெருங்கடல் படுகைகளை சுரண்டி எடுப்பதால் சுற்றுச்சூழல் அமைப்புகளில் அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் பல்லுயிர் இழப்புக்கு வழிவகுக்கும் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இது கடலில் கார்பன் மற்றும் ஊட்டச்சத்து சுழற்சிகளை பாதிக்கும் என்றும் மீன் வளத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என்று எச்சரித்துள்ளனர். மீன்பிடி தொழிலிருந்து மீனவர்களை விரட்டிவிட்டு, ஆழ்கடல் கனிமவள ஆய்வின் மூலம் மீன் வளத்தையும், பல்லுயிர் பெருக்கத்தையும் அழித்துவிட்டால், நாட்டு மக்களின் புரதச்சத்து தேவை கேள்விக்குறியாகி விடும்.

மீனவர்களின் முக்கியத்துவத்தை கணக்கில் கொண்டும், இந்தியர்களின் உணவுத்தேவை மற்றும் ஊட்டச்சத்து தேவை சார்ந்தும், அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக என செய்யவேண்டிய நலத்திட்டங்கள் ஆயிரமிருக்க, மோடி அரசோ பெருநிறுவனங்களின் வணிக நோக்கத்திற்காகவும், இந்திய பெருங்கடலில் தன் வல்லாதிக்கத்தை நிறுவிக்கொள்வதற்கான வழிமுறையாகவும் இந்த மசோதவை கையாளுகிறது. அண்டை நாடுகளுடனான வெளியுறவு கொள்கையில் தோல்வியுற்ற இந்திய அரசு, கடல் எல்லை பாதுகாப்பில் முன்களவீரர்களாக செயல்படும் உள்நாட்டு மீனவர்களை கடற்கரையிலிருந்து வெளியேற்றும் இந்த முயற்சி உள்நாட்டு பாதுகாப்புக்கும் இனி அச்சுறுத்தலாகவே முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »