ஈழத்தில் தமிழினத்தின் அடிப்படை அரசியல் விடுதலைக்காக அறவழியில் போராடியவர்களை அலட்சியம் செய்து, அவர்களை விலங்கினும் கீழாக நடத்தி, நடுவீதியில் குப்பையைப் போல் எரித்தது சிங்கள பௌத்த பேரினவாதம். இந்த அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் துவங்கிய விடுதலைப் புலிகளின் முன்களப் போராளிகளாக விளங்கியவர்களே கரும்புலிகள். தனது உயிரையே ஆயுதமாக்கிய விடுதலைப்புலிகளின் போர்க்கள எழுச்சிக்கு கரும்புலிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எண்ணிக்கை அளவில் அதிமாக இருக்கும் எதிரியின் படை பலத்தையும் கரும்புலிகள் மன பலம் உடைத்தெறிந்து விடும். போரில் அதிக எண்ணிக்கையில் போராளிகளை இழக்கும் நிலையை மாற்றி தற்கொடை தாக்குதல் மூலம் எதிரிகளை குலைநடுங்க செய்தவர்கள் கரும்புலிகள். இவர்கள் எதிரிகளை தாக்கும்போது கடுமையாக இருந்தாலும், உண்மையில் மிகவும் இளகிய மனம் படைத்தவர்கள்.
தன்னையும் தனது குடும்பத்தையும் விட இலட்சியத்தையும், தமிழின மக்களையும் நேசித்தனர். அதனால் தான் தனது இனத்தை அழிக்க நினைத்த துரோகிகளை அழிக்க தன்னையே ஆயதமாக்கி போராடும் மனநிலை பெற்றிருந்தனர்.
“முகத்தை மறைத்து, பெயரையும் புகழையும் வெறுத்து, இலட்சிய மூச்சாக தமிழீழ விடுதலைக்காற்றுடன் கலந்துவிட்ட இந்த சரித்திர நாயகர்களை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்” என்றார் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
ஆண்களுக்கு நிகராக பெண்களும் கரும்புலிகளாக வீரத்துடன் போரிட்ட வரலாறு தமிழீழத்திற்கே உரியது. அவ்வாறு கேப்டன் நளாயினி அவர்களின் தலைமையில் உருவான பெண் கரும்புலிகளின் அமைப்பில் சிறந்து விளங்கியவர் முதல் கடற்கரும்புலியான கேப்டன் அங்கையற்கண்ணி அவர்கள். இவரது இயற்பெயர் துரைசிங்கம் புஷ்பகலா என்பதாகும். யாழ்ப்பாணத்தில் மண்கும்பானை என்ற இடத்தில் பிறந்தவர் அங்கையற்கண்ணி.
தமிழீழ போராட்டத்தில் வீர மரணத்தை விரும்பி ஏற்ற முதல் கடற்கரும்புலிதான் அங்கையற்கண்ணி. பெண்கள் ஆண்களைவிட உடலளவிலும் மனதளவிலும் சளைத்தவர்கள் அல்ல, போர்க்குணமும் வீரமும் பெண்களுக்கும் உண்டு என உலகளவில் பெண்களுக்கான வீரத்தின் பெருமையை கொண்டு சேர்த்தவர் அங்கையற்கண்ணி என்றே கூறலாம்.
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவித்த தமிழர்களின் நிலை கண்டு போராளியாக உருப்பெற்றவர்தான் அங்கையற்கண்ணி. ஒருநாள் கடற்கரையின் மணற்பரப்பில் குழந்தைகளும் பெண்களும் இலங்கை அரசின் கடற்படை தாக்குதலுக்கு அஞ்சி இடம்விட்டு இடம் மாறிக்கொண்டு அலைந்ததைக் கண்டு மனம் பதறினார் அங்கையற்கண்ணி. அன்று தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, சிங்கள படையால் இழுத்துச் செல்லப்பட்ட தங்கள் உறவுகள் என்ன ஆனார்களோ என்ற தவிப்பும் சேர்ந்து துடித்துக் கொண்டிருந்தனர் தமிழர்கள். உணவிற்கும் வழியில்லாமல் குழந்தைகள் பசியுடன் தாயின் முகத்தை பார்க்க தாய்மார்களோ கண்ணீருடன் தலையில் அடித்து கொண்டு அழுவதை காண சகிக்காத அங்கையற்கண்ணி கண்ணீர் விட்டார். இவர்களின் கண்ணீருக்கு காரணமான இலங்கை கடற்படைக்குத் தக்க பதிலடி கொடுக்க நினைத்தே தான் ஒரு கரும்புலியாக மாற விரும்புவதாக தலைமைக்குத் தெரிவித்தார்.
மனதில் உள்ள ரணங்கள் அனைத்தையும் திரட்டி கடுமையான பயிற்சி மேற்கொண்டார் அங்கயற்கண்ணி. நீரில் உள்நீந்தும் பயிற்சியில் சிறந்து விளங்கினார். அதாவது பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ 35 கிலோ மீட்டர்கள்) சரியாக 8 மணி 27 நிமிடங்களில் கடந்து தனது கடுமையான பயிற்சியையும், திறமையையும் நிரூபித்தார். இதனைக்கண்டு பொறுப்பாளருக்கும், உடனிருப்பவர்களுக்கும் அவரால் எந்த இலக்கையும் சென்று சரியாக தாக்கமுடியும் என்ற நம்பிக்கை வந்தது.
பெண் கடற்புலிகளின் மூன்றாவது பயிற்சி பாசறையில் தனது திறமைகளைக் கூர்தீட்டினார் அங்கையற்கண்ணி. கடற்புலிகளில் ஆண் – பெண் போராளிகளுக்கிடையே நடத்தப்பட்ட போட்டி ஒன்றிலும் முதலவதாக வந்திருக்கிறார். லெப். கேணல். பாமா, சுகன்யா ஆகிய இருவருக்கும் இவரது திறமை நன்கு தெரிந்து இருந்தது. வரலாற்று புகழ்மிக்க “தவளை நடவடிக்கை” என்ற பணியின் போது இவரது செயல்திறனும் பண்பும் இவருக்கு எந்த பொறுப்புகளையும் தரலாம் என்ற நம்பிக்கையை பெற்றவர்.
இந்தச் சூழலில்தான் காங்கேசன்துறையில் 45 அடி ஆழத்தில் நின்றிருந்த இராணுவக் கப்பலைத் (தமிழ்மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பெருந்தடையாக இருந்த கப்பல்) தகர்ப்பதற்கான இலக்கு அவருக்கு வழங்கப்படுகின்றது. அது சாதாரண கப்பல் அல்ல. 6300 டன் எடை கொள்ளளவும், 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்ட அதி சக்தி வாய்ந்த ரேடார்கள் பொருத்தப்பட்ட நீரில் மிதக்கும் நடமாடும் தலைமையக கடற்படை கப்பல். அதை எளிதில் யாராலும் நெருங்கக் கூட முடியாது என்ற எண்ணத்தில் இறுமாப்புடன் சிங்கள கடற்படை இருந்தது. அந்தக் கப்பலைத் தகர்க்கும் பணிதான் அங்கையற்கண்ணிக்கு அளிக்கப்பட்டது.
தாக்குதலுக்குத் தயாரான அங்கையற்கண்ணி, வீட்டிற்குச் சென்று தந்தை தாயிடம் சிறிது நேரம் பேசிவிட்டு “நான் காத்தோட போயிருவேன்” என சொல்லி இருக்கிறார். அப்போது அந்தத் தாய்க்கு எதுவும் புரியவில்லை, சகோதரர்களுடன் தனது கடைசி நேரத்தை கழிக்கும் போது “நீங்கள் நல்லாப் படிக்க வேணும்” எனக்கூறி விடைபெற்று இருக்கிறார் அங்கையற்கண்ணி.
16.08.1994 அன்று கப்பலை தகர்க்க கரும்புலி உடையணிந்து வெடிகுண்டுகளை சுமந்து தயாராகி நின்ற அவரிடம் எதாவது சொல்ல வேண்டுமா என்ற கேட்டவுடன் “அன்னை (தேசியத் தலைவர் பிரபாகரன்) அவர்களின் அன்புதான் கடைசி வரை வேண்டும். எனது அன்பையும் மதிப்பையும் தெரிவித்துவிடுங்கள், இலக்கை அடையாமல் திரும்ப மாட்டேன்” என்று மட்டுமே கூறியிருக்கிறார்.
இலக்கைத் தகர்க்க கிளம்பியவருடன் சகபோராளிகளும் சிறிது தூரம் கடலில் நீந்தி சென்று பிறகு பிரியாவிடை கொடுத்தனர். அவர்கள் திரும்பி வந்து கடலை உற்று நோக்கி காத்திருந்த நேரத்தில், கப்பலில் பொருத்தி அழிக்க வேண்டிய வெடிமருந்துடன் தனியே நீந்திச் சென்று, தனது இலக்கை அதிகாலை சரியாக 12.35-க்கு பெரும் வெடி நெருப்பு சத்தத்துடன் எதிரியின் கப்பலை வெடிக்க செய்தார். இவ்வாறு கப்பலோடு சிங்களர்களின் இறுமாப்பையும் தகர்த்து, தமிழீழம் எனும் தேசியவிடுதலையில் தனது தற்கொடையின் மூலம் நீங்கா இடத்தை பெற்றுக்கொண்ட முதல் பெண் கடற்புலி அங்கையற்கண்ணி.
அங்கையற்கண்ணி பிறக்கும் போதே போராளியாகப் பிறக்கவில்லை. அவரும் சாதாரணமான பெண்களை போலவே வாழ்ந்து வந்தவர்தான். தாயின் துணையில்லாமல் இரவில் வெளியில் செல்லப் பயப்படும் மனநிலை கொண்டவராக வாழ்ந்தவர். சிங்களப்படையால் அவரது வாழ்வியல் சூழலில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளே அவரைப் போராளியாக்கியது எனலாம்.
இலக்கை அடைய செல்வதற்கு முன்பிருந்தே அவர் அடிக்கடி கூறியது, “நல்லூர் திருவிழா சமயம்தான் நான் இறக்கவேண்டும். அந்நேரத்தில்தான் என் அம்மாவிற்கு விற்பனை ஆகும். அப்போதுதான் கச்சான் விற்ற காசு இருக்கும். அந்தக்காசு வைத்துதான் என்னுடைய நினைவு நாளுக்கு வீட்டுக்கு வரும் பெண்களுக்கு அம்மாவால் சாப்பாடு கொடுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.
போராளிகள் தன் இறப்பை கருதி ஒருபோதும் கலங்கியதில்லை என்பதை அவர் கூறிய இந்த வார்த்தைகள் உணர்த்தும். கூடவே அவரது ஈகையையும், தனது குடும்பத்திற்கும் மேலாக தாய்நாட்டையும், உடனிருக்கும் போராளிகள் மீதான நேசத்தையும் அவரின் வார்த்தைகளால் அறியமுடிகிறது. மேலும் போராளிகளின் கடின வாழ்க்கைமுறையையும், அவர்களின் குடும்பத்தினர் அன்றாட உணவுக்குக்கூட கடினபட்ட நிலையையும் இந்த வார்த்தைகள் உணர்த்துகின்றன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த போராளிகள் தியாகம் வெளிப்படையாக யாருக்கும் தெரியாதது. எந்தவித விளம்பரமும் இல்லாது காற்றோடு காற்றாக, எதிரியை அழிக்க தானும் கடலிலே கரைந்து போனவர்கள் தான் கடற்புலிகள். இவர்களது அற்பணிப்பும், தியாகங்களும் சொல்லிலடங்கா காவியம். அது காலங்கள் பல கடந்தாலும் கலங்கரைவிளக்கமாக நின்று ஈழ விடியலுக்கான வெளிச்சத்தை ஒருநாள் தந்தே தீரும்.
தமிழீழ அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கும், தெரிந்தும் தெரியாமல் அதை எதிர்க்கும் நபர்களுக்கும் கரும்புலி அங்கையர்கண்ணி அவர்களை பற்றிய இந்த வரலாற்று கட்டுரை தேவையான தகவலாக இருக்கும், இந்த கட்டுரை தந்தமைக்காக மே17இயக்க தோழர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். 🖤💙❤