மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முனைப்புடன் மே 17 இயக்கம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சென்னையில் ஜுன் 22, 2024-ல் ’மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்’ நடத்தியது. அதையடுத்ததாக, திருநெல்வேலி பாளையங்கோட்டையில் சனநாயக கட்சிகள், அமைப்புகளுடன் இணைந்து ஜூலை 21, 2024 அன்று ‘மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கான வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு’ நடத்தியது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாநாட்டு நிகழ்வினை மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி நெறிப்படுத்த, தோழர் மாரித்துரை வரவேற்புரை ஆற்றினார். நிகழ்விற்கு தலைமையேற்ற ஒருங்கிணைப்பாளர் தோழர் புருசோத்தமன் அவர்கள் நோக்கவுரையாற்றினார்.
இம்மாநாட்டில் தமிழ்நாட்டு அரசுக்கு வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள் :
- மாஞ்சோலையை விட்டு வெளியேறும் பாம்பே – பர்மா டிரேடிங் கம்பெனி, ஆண்டுக்கு 150 முதல் 200 நாள் வரையான சம்பளம் எனும் விகிதத்தில் வேலை செய்த ஆண்டுகளை கணக்கிட்டு, நட்ட ஈட்டை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு உறுதி செய்ய வேண்டும்.
- மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று தொடர்ந்து நடத்த வேண்டும்.
- மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தை தமிழ்நாடு ஏற்று நடத்தாவிடில், அதைக் கூட்டுறவுப் பண்ணையாக மாற்றி தொழிலாளர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும். அப்படி உருவாக்கப்படும் கூட்டுறவுப் பண்ணையை தமிழ்நாடு அரசு ’TANTEA’ விற்பனைத் துறையோடு இணைக்க வேண்டும்.
- மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சுமார் 10 ஏக்கர் விகிதம் மாஞ்சோலைத் தேயிலை தோட்டத்தில் உள்ள நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.
- மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, சமவெளிப் பகுதியில் ஐந்து ஏக்கர் நிலம் வரை வழங்க வேண்டும்.
- மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வேலை நிறுத்தப்பட்டு இருப்பதால், வறுமைக்கு தள்ளப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
- மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்வு காண, அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை தமிழ்நாடு அரசு உடனடியாக அமைத்திட வேண்டும்.
இம்மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் :
தமிழர்களை அடிமைகளாக உலகெங்கும் கொண்டு சென்றவர்கள் வெள்ளையர்கள். தமிழர்களின் உழைப்பால்தான் வெள்ளையர்களின் பொருளாதாரமே இயங்கிக் கொண்டிருந்தது. வெள்ளையர்களை எதிர்த்து போர் புரிந்த இனம் தமிழினம் என்பதற்காக தமிழர்களை ரப்பர் தோட்டத்திற்காக, மலேசியா கரும்பு தோட்டத்துக்காக, நெல் பயிரிடுவதற்காக பர்மா, பிஜூ தீவுகள், கரீபியன் தீவுகள், தென்னாப்பிரிக்கா எங்கும் கொண்டு சென்றார்கள். நாம் ஆதிக்கத்தை எதிர்த்து நின்றோம் என்பதற்காக தான் உலகெங்கும் அடிமைகளாக கொண்டு சென்றார்கள்.
தமிழ் தொழிலாளர்களை கூலியாக வெள்ளையர்கள் மாற்றினார்கள். ’கூலி’ என்ற வார்த்தையில் பொதிந்திருப்பது என்னவென்றால், ”ஒரு நிலத்தை குடும்பத்தோடு பிணைத்து தலைமுறை தலைமுறையாக அடிமை வேலை செய்வதை எடுத்துக் காட்ட சொல்லப்பட்ட சொல்லே கூலி”. எனவே ஆங்கிலத்தில் அந்த கூலி என்ற தமிழ்ச்சொல் இருப்பதனால் நாம் பெருமை கொள்ள முடியாது. அது நம் அடிமை வரலாற்றின் எச்சமாக இன்னும் அந்த சொல் அங்கே இருக்கிறது.
இலங்கையில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்குவதற்காக தனுஷ்கோடி வரை தமிழர்களை நடத்தே அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு படகில் ஏற்றி மன்னாரில் இருந்து அடர்ந்த காடுகளின் வழியாக இழுத்துச் சென்றதில், பாதி பேர் போகும் வழியிலேயே இறந்தும் போனார்கள். இதுதான் பர்மாவில், மலேசியாவில் என எங்கும் நடந்தது. அங்கு போன எந்த தமிழர்களுடனும் நம்மால் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அப்படியான ஒரு இனமாக இழிவு செய்யப்பட்டவர்கள் நாம். அப்படி இழிவு செய்யப்பட்டதன் அடையாளம் தான் மாஞ்சோலை. ’வெள்ளையர்களால் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டோம் என்கிற அடையாளமாகவே மாஞ்சோலையாக இருக்கிறது’. ஆகவேதான் மாஞ்சோலை என்பது ஒரு மானப் பிரச்சனை, அதோடு சேர்ந்து தொழிலாளர் பிரச்சினை என்று சொல்கிறோம். இதை குறிப்பிட்ட சாதி சமூகத்தின் பிரச்சனையாக சித்தரிக்க முயல்வர்கள் தமிழின விரோதிகள்.
நான்கு தலைமுறையாக மாஞ்சோலையில் வேலை செய்து இருக்கிறார்கள் என்றால், அவர்களின் குடும்பத்தில் யாராவது அதன் உயர்ந்த பொறுப்பில் வந்திருக்க வேண்டும். வேறு நிறுவனங்களென்றால், பணி காலத்திற்கேற்ப இப்படியான உயர் பொறுப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் இங்கு கூலி வேலை மட்டும்தான் என இழுத்துச் சென்று அடிமைகளாக ஆக்கப்பட்டதன் வரலாறுதான் மாஞ்சோலை வரலாறு.
இந்த வரலாற்றை பாட புத்தகங்களில் சேர்த்திருக்க வேண்டும். தமிழர்கள் எவ்வாறு உலகம் எங்கும் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டு இழிவுபடுத்தப்பட்டதை, நம் தலைமுறைகள் இந்த மண்ணில் இருந்து எவ்வாறு துண்டிக்கப்பட்டது என்பதை நாம் வரலாற்றுப் புத்தகத்தில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் உலக வரலாறெல்லாம் சொல்லப்பட்ட பாடப் புத்தகங்களில் உள்ளூர் வரலாறுகள் சொல்லப்படவில்லை. அதனால் நமக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே நாம் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறோம்.
வெள்ளையர் காலத்தில் தமிழர்களை சாதிகளாகப் பார்த்து எல்லாம் அடிமைகளாக இழுத்துச் செல்லவில்லை. அனைத்து சாதியினரும் இழுத்துச் செல்லப்பட்டனர். எல்லா சாதிக்காரர்களும் அடிமைகளாக தோட்டங்களில் பூட்டி வைக்கப்பட்டிருந்தனர். எந்த தமிழர்களைப் பார்த்தாலும், நீங்கள் என்ன சாதிக்காரர்கள் என்று கேட்கும் இழி நிலை ஒழிந்தால்தான் தமிழர்கள் உருப்படுவார்கள். மாஞ்சோலையில் அனைத்துச் சாதிக்காரர்களும் இருக்கிறார்கள். பர்மா, மலேசியா என எல்லா இடத்திலும் இதே நிலைதான். உலகம் முழுக்க அடிமையாக இழுத்துச் செல்லப்பட்ட இனம், இன்னும் சாதி என்னும் மலத்தை தலையில் சுமந்து அலைந்து கொண்டிருக்கிறது என்றால், அரசியல் விடுதலை பெறுவதற்கு அதற்கு தகுதியும் இல்லை, வாய்ப்பும் இல்லை.
இதை நான் பேசவில்லை. மேதகு பிரபாகரன் சொல்லியிருக்கிறார், பெரியார் சொல்லி இருக்கிறார். இவர்கள் பெருந் தலைவர்களாக உருவானதற்குக் காரணம், சாதி கடந்து சாதியை ஒழித்து தங்கள் அமைப்புகளைக் கட்டினார்கள் என்பதுதான். அப்படி சாதியை ஒழித்து, நம்மால் அமைப்பைக் கட்ட முடியாததனால்தான் மக்கள் மாஞ்சோலையில் வஞ்சிக்கப்படுகிறார்கள், ஸ்டெர்லைட்டில் படுகொலை செய்யப்பட்டார்கள், கூடங்குளத்தில் மக்கள் போராட்டம் நசுக்கப்பட்டது, தமிழ்நாடு முழுவதும் மக்களின் உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றன. மீனவர்கள் பிரச்சனை, மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, மற்ற தொழிலாளர்கள் பிரச்சனைகள் என நிகழும் அனைத்து பிரச்சனைகளையும், சாதியாகப் பார்த்து ஒதுங்கினால் ஒரு உரிமையும் தமிழர்களுக்கு கிடைக்காது.
அன்றைய திமுக ஆட்சியின் போது, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டம் நடத்தியதால் 17 பேர் கொல்லப்பட்டார்கள். அதற்காக திமுக அரசு இன்று வரை குற்றவுணர்ச்சியோடு இல்லை என்பதாகவே நான் பார்க்கிறேன். அன்று அந்த தொழிலாளர்கள் கேட்ட கூலியை விட இரண்டு மடங்கு வாங்கி கொடுத்திருந்தால் அது திராவிட மாடல் ஆட்சியாக, சுயமரியாதை ஆட்சியாக இருந்திருக்கும். அது எழுதப்பட்ட வரலாறு. அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் இன்றைய திமுக அரசுக்கு அந்த கருப்பு வரலாற்றை மாற்றி எழுத வாய்ப்பு வந்திருக்கிறது.
அதிமுக எடப்பாடி அரசு ஸ்டெர்லைட் ஆலைக்காக காவல்துறையை கூலிப்படையாக ஏவி தமிழர்களை சுட்டுக் கொன்றது. அனைவரின் மீதும் வழக்கு போட்டது. என்னையும் சிறைக்கு அனுப்பியது. அதற்காக அந்த அரசை ஒழித்துக் கட்டிவிட்டு உங்கள் அரசை கொண்டுவர இங்கு இருக்கும் அனைவரும் உழைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நாங்கள் திமிரோடு நெஞ்சை நிமிர்த்தித்தான் கேட்போம். திமுக அரசு இதை செய்தாக வேண்டும்.
’அடித்தட்டு மக்களின் அரசியலை பேசுவதுதான் திராவிட கோட்பாடு’. 1999-ல் இதனைப் பேசியிருந்தால் அந்த மக்களுக்கு நீதி கிடைத்திருக்கும். அன்றைக்கும் பேச மறுத்தீர்கள் இன்றைக்கும் பேச மறுக்கிறீர்கள். இன்றைக்கு நீதிமன்றத்தில் ஒரு அதிகாரியை வைத்து பதில் மனு போட்டிருக்கிறீர்கள். மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். நாமெல்லாம் ஒன்று சேர்ந்தே இந்த ஆரியப்படையெடுப்பை தடுத்து நிறுத்துகின்ற முனைப்பில் இருக்கிறோம். நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல, சகோதரர்கள். எங்கள் உரிமையை உரிமையோடு தான் கேட்கிறோம். கெஞ்சிக் கேட்டு எங்களுக்குப் பழக்கமில்லை.
நாங்கள் திமுகவுக்கு வாக்கு கேட்கவில்லை. அதனால் எங்கள் மீது ஏகப்பட்ட அவதூறுகளை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட பேசினார்கள். எங்கள் மீது முத்திரை குத்தினார்கள். அதைப் பற்றி எல்லாம் கூட எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அவர்கள் இந்த மக்களின் கோரிக்கையை திமுக அரசிடம் கொண்டு சென்று நிறைவேற்றிக் காட்டுங்கள். சமூக நீதி அரசு அமைந்து விட்டால், சமூக நீதிக்கு எதிரானதை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல பொறுப்பேற்றவர்கள் ஏன் இன்னும் பேசவில்லை? திமுக அரசுக்கு எதற்கும் முட்டு கொடுத்துக் கொண்டே இருப்பதால் மட்டும் எதையும் காப்பாற்றி விட முடியாது.
மாஞ்சோலை பிரச்சனை ஒரு காலனிய காலப் பிரச்சனை. நூற்றாண்டு பிரச்சனை. அடிமை முறையின் எச்சம். உங்கள் கடந்த கால வரலாற்றின் கருப்பு வரலாறு. இதை முடித்து அந்த மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான ஒரு வாழ்வாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் நாங்கள் கொண்டாடுவோம். எங்களுக்கான அரசு இதை செய்து கொடுத்தது என்று நாங்கள் பேச ஒரு வாய்ப்பு கொடுங்கள்.
ஸ்டெர்லைட்டில் படுகொலை செய்த அதிகாரிகளை, ஒரு நிறுவனத்திற்கு கூலி வேலை பார்த்திருக்கிறீர்கள் என்று உயர்நீதிமன்ற நீதிபதியே சொல்லி விட்டார். அன்று ஸ்டெர்லைட்டைப் போல, இன்று மாஞ்சோலை. வடக்கு வாழ்கிறது, தெந்து தேய்கிறது என்று பேசிய அண்ணாவின் திராவிட கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள், வடநாட்டு முதலாளிகளுக்காக கூலி வேலை பார்த்தால், அதனை எப்படி திராவிடம் மாடல் அரசு என்று சொல்ல முடியும்?
முதல்வருக்கு, நான் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். நீங்கள் அதிகாரிகள் சொல்வதை கேட்டீர்கள் என்றால் உங்கள் அரசு நிலைக்க வாய்ப்பு இல்லை. மக்கள் மன்றத்தில் எழும் கோரிக்கைகளை காது கொடுத்து கேளுங்கள். மாஞ்சோலை மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தபோது முறையாக நடந்து கொள்ளவில்லை என அந்த மக்கள் சொன்னார்கள். அப்படியாக நடந்திருந்தால் மாவட்டத்தின் ஆட்சியராக நடந்து கொள்ள அவர் தகுதியற்றவர் என்பதை இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.
அதனால்தான் திமுகவிற்கு சொல்ல கொள்ள விரும்புகின்றேன், உங்கள் கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேயக் கட்சி, முஸ்லிம் அமைப்புகள் என எல்லாரும் இருக்கிறார்கள். மக்கள் மன்றத்தில் செயல்படக்கூடிய செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இணைந்த ஒரு கூட்டுக் குழுவை உருவாக்குங்கள். பாம்பே – பர்மா டிரேடிங் கம்பெனிக்கு வக்காலத்து வாங்கி உங்கள் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அவன் ஓட்டு போடப் போவதில்லை, உங்களுக்காக பிரச்சாரம் செய்யப்போவதில்லை.
பாம்பே – பர்மா டிரேடிங் கம்பெனி பிரிட்டானியா பிஸ்கட் தயாரிக்கிறது. அதன் மூலம் 16,000 கோடி வருமானம் ஈட்டுகிறது. அதைப் போல மாஞ்சோலைத் தேயிலையால் ஆண்டுக்கு 2200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறது. அது மட்டுமல்ல ’பாம்பே டையிங்’ போன்ற பல 100 கம்பெனிகளில் நடத்துகிறார். இதன் மூலம் கிடைக்ககூட வருமானம் பல லட்சம் கோடி ரூபாய். இப்படியிருக்க அவர்களிடம் கேட்டு வாங்கித் தருவதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்?
சென்னையில் ’போர்டு’ (Ford) நிறுவனத்தில் வேலை செய்த எங்கள் மே 17 இயக்கத் தோழர்கள், அந்த நிறுவனம் மூடப் போவதாக அறிவித்ததும், அந்த நிறுவனத்திற்குள் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி நட்ட ஈட்டைப் பெற்றார்கள். ஒரு வருட வேலையில் 15 நாள் கூலி என்ற விகிதத்தில், எத்தனை வருடம் வேலை செய்கிறார்களோ, அந்த கூலியை கொடுப்பதையே தொழிலாளர் நட்ட ஈடாக வைத்திருக்கிறார்கள். அதற்குரிய தீர்வு பேசப்படுகிறது.
ஆனால் எங்கள் தோழர்கள், “ஒரு வருடத்திற்கு 150-200 நாள் கூலி என 10 வருடத்திற்கு 2000 நாள், 20 வருடத்திற்கு 4000 நாள் கூலி என கேட்டு வாங்கினார்கள் இதுதான் நட்ட ஈடு”. ஒரு நிறுவனம் அடைந்த லாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு இருக்கிறது. அந்தப் பங்கை கொடுத்துவிட்டுத்தான் நிறுவனத்தை மூட வேண்டும். மாஞ்சோலைத் தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறவில்லை. நிறுவனம்தான் மூடுவதாக சொல்லுகிறது. அப்படி என்றால் உரிய நட்ட ஈட்டை கொடுத்துதான் தீர வேண்டும். இதை BMW கார் நிறுவனம், Ford கார் நிறுவனம் செய்திருக்கிறது. அன்று திமுக அரசு இதை ஆதரித்து அந்த நிறுவனத்திடம் பேசி வாங்கி கொடுத்தார்கள். அதனால் தொழிலாளர்களுக்கு 30-70 லட்சம் வரை நட்ட ஈடு கிடைத்தது. ஆனால் இங்கு இரண்டு லட்சத்தோடு முடிக்கப் பார்க்கிறார்கள். இங்கு உரிய நட்ட ஈட்டை வாங்கித் தருவதற்கு திமுக ஏன் தயங்குகிறது?
நாடு சுதந்திரம் அடைந்து விட்டது என்று லட்டு கொடுத்தால் மட்டும் பத்தாது. அன்றைக்கே நிலத்தை பங்கிட்டு மக்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். அந்த நிலம் மக்களுக்கு சொந்தமாக்கப்பட்டிருக்க வேண்டும். பாம்பே – பர்மா டிரேடிங் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு பதிலாக, இங்கே கூட்டுறவு பண்ணைகள் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும். அதில் தொழிலாளர்களை பங்குதாரர்களாக மாற்றியிருக்க வேண்டும். அதுதான் சமூகநீதி.
அந்த மக்களுக்கு சமவெளி பகுதியில் குறைந்தபட்சம் ஐந்து ஏக்கர் நிலம் கொடுக்க வேண்டும். அதுதான் நீதியாக இருக்க முடியும். இந்த நிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழக்கூடிய தமிழனுக்கு சிறு துண்டு நிலம் கூட சொந்தமில்லை என்றால் அது ஆட்சியாளர்களுக்கு இழுக்கு. ஆனால் வடநாட்டு கம்பெனிக்கு 8000 ஏக்கர் நிலம் இருக்கிறது என்றால் அது அவமானம் இல்லையா?
இந்த தெற்கு பஜார் என்பது அய்யா தொ.ப அவர்களின் நினைவை கொடுக்கக்கூடிய இடம். நாங்கள் அறிவைப் பெற்றுக் கொண்டது ஐயா. தொ.ப அவர்களிடத்தில்தான். இந்த உணர்வுப்பூர்வமான இடத்தில் இருந்து ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். “மாஞ்சோலை பிரச்சனை என்பது ஒரு மானப் பிரச்சனை. 25 ஆண்டுகளுக்கு முன்பாக கூலி உயர்வுக்குப் போராடியவர்கள் இந்த ஆற்றங்கரையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்கள். அந்த கறை இன்றும் இருக்கிறது. அப்படி வஞ்சிக்கப்பட்ட மக்களுக்காக சாதி கடந்து எல்லோரும் ஒன்றாக திரள வேண்டும்“.
நாமெல்லாம் தமிழர்கள், நமக்கான உரிமை வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வேண்டும். அந்த உணர்வில் தான் அன்று, அன்றைய வீரபாண்டிய கட்டபொம்மன், ஒண்டிவீரன், பூலிதேவன், தீரன் சின்னமலை போன்ற நம் போராளிகள் வெள்ளையளுடன் போராடி உயிர் கொடுத்தார்கள். அவர்கள் சாதிகளைப் பார்த்திருந்தால் படை கட்டியிருக்க முடியாது. சாதிகளை கடந்தே படைகளாக வெள்ளையர்களை எதிர்த்து நின்றார்கள். நாமும் சாதி, மதம் கடந்து மாஞ்சோலை மக்களுக்கு உரிய நீதியை வென்றோம் என்றால், இனி தமிழினத்தை வஞ்சிப்பதற்கு எவனுக்கும் துணிச்சல் வராது.
திமுக அரசு, இந்த மக்களின் கோரிக்கையை தங்களின் கொள்கை ரீதியாக பரிசீலனை செய்து, இந்த மக்களுக்கு உரிய நட்ட ஈட்டையும், நீதியையும் பெற்றுத் தந்து, அதன் மூலமாக நாங்கள் நன்றி தெரிவிக்கும் எழுச்சியான கூட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்பையும் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இதில், எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் தோழர் நெல்லை முபாரக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் வன்னியரசு, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தோழர் தி.மு. இராஜேந்திரன், ஏஐடியுசி பொதுச்செயலாளர் தோழர் ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் கே.எம். சரீப், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன், தியாகி இம்மானுவேல் பேரவையின் முதன்மை செயலாளர் தோழர் வேல்முருகன், ஐந்திணை மக்கள் கட்சியின் தலைவர் தோழர் தேவதாஸ், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், மாஞ்சோலை மக்கள் நலச்சங்கத்தின் செயலாளர் தோழர் அரசு அமல்ராஜ், விடுதலைத் தமிழப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் ரேடியோ வெங்கடேசன், மனிதநேய மக்கள் கட்சியின் துணை செயலாளர் ஆ.காஜா, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில துணை செயலாளர் தோழர் பிலால், மூணார் தோட்டத் தொழிலாளர் போராளி தோழர் கோமதி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நிகழ்வினிடையே, 1999 -ம் ஆண்டு தாமிரபரணியில் கொல்லப்பட்ட மாஞ்சோலை தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் நினைவுக் தூண் எழுப்பப்பட்டு சுடர் ஏற்றப்பட்டது. இறுதியில் தோழர் முத்துக்குட்டி நன்றியுரையாற்றினார்.