“இப்பயெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள், இந்த காலத்திலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என யாராவது கேட்டால், அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு போய் காட்ட நான் தயார்” – என்கிற இயக்குனரின் முன் ஒப்புதலுடன் தொடங்குகிறது நந்தன் திரைப்படம்.
பட்டியலினத்தவர்களுக்கு தனித் தொகுதியில் போட்டியிடும் அரசியல் அதிகாரம் கிடைத்தாலும், சமூகத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு உயர்ந்திருக்கிறதா எனும் கேள்விக்குறியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இடைநிலை ஆதிக்க சாதியினரும், பட்டியலினத்தவர்களும் வாழும் கிராமத்தின் பஞ்சாயத்து தலைவருக்கு நேரும் அவமானங்களைப் பல முறை செய்திகளில் பார்த்திருப்போம். ஆனால் அவர்களின் வலிகளை உணர்ந்திருக்க மாட்டோம். அந்த வலிகளையும், வேதனைகளையும் நமக்குள் கடத்தும் படமாக நந்தன் இருக்கிறது.
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முயற்சியால் பட்டியலின மக்களும் அரசியல் அதிகாரத்தை அடையச் செய்த ஏற்பாடே தனித்தொகுதிகள். பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடங்களில் அந்த மக்களே வேட்பாளராக நிறுத்தப்பட முடியும். அவ்வாறு வென்றவர்களே பதவி இருக்கையில் அமர முடியும் என்பது சட்டம். இந்தப் பின்னணியைக் கதைக்களமாகக் கொண்டிருக்கிறது நந்தன்.
வணங்காமுடி என்கிற பஞ்சாயத்து தொகுதியில், தந்தைக்குப் பின்பு பத்து ஆண்டுகளாக போட்டியே இல்லாமல் பஞ்சாயத்து தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் இடைநிலை ஆதிக்க சாதிக்காரரான கோம்புலிங்கம். அந்த சாதியினரிடையில் பஞ்சாயத்து தலைவராக யார் போட்டியிடலாம் என்கிற பஞ்சாயத்து நடக்கிறது. போட்டியின்றி அவரையே தேர்வு செய்ய அவர் பல தந்திரங்களை அந்த சாதியினரிடையே கூட செய்கிறார். அப்போது அங்கு வரும் பட்டியலினத்தை சார்ந்த படித்த இளைஞனான நந்தன், காலங்காலமாக ஒதுக்கப்படும் எங்கள் சாதிசனம் இந்தப் பதவிக்கு போட்டியிட வேண்டும் எனக் கேட்கிறான். அவனை மட்டப்படுத்திப் பேசி கோவப்படுத்தி அனுப்புகின்றனர். தன்னுடன் பேச தனது சமூகத்தினரே வர மறுக்கும் சீற்றத்துடன் செல்கிறான்.
தனது சமூகத்தினரின் உரிமைக்காக நிற்கும் அவன் பெயரே படத்தின் பெயராக இருக்கிறது. பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அரசு அலுவலகத்திற்கு அவன் பல முறை புகார் மனுக்களை எழுதுகிறான். இதனால் விபத்தை ஏற்படுத்தி அவனைக் கொல்கின்றனர், அந்தக் கொலையும், அந்த தொகுதி தனித்தொகுதியாக அரசினால் அறிவிக்கப்படுவதும் ஒரே சமயத்தில் நிகழ்கிறது.
நந்தனின் சடலம் கிடத்தப்பட்டிருக்கும் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டு, கோம்புலிங்கமும், அச்சாதியினரும் சேர்ந்து தங்களுக்கு அடிமையாக இருப்பவனை அப்பதவிக்கு தேர்ந்தெடுக்க தேடுகின்றனர். தாடி, மீசையுடன் அழுக்கான தோற்றத்தில் இருக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்த கோம்புலிங்கம், அந்த நபர் சவரம் செய்வதைக் கண்டதும் ஒதுக்கி வைத்து விட்டு, தன் வீட்டுப் பணியாளாக, எடுபிடியாக இருக்கும் கூழ்பானையைத் தேர்ந்தெடுக்கிறார். அம்பேத்குமார் என்னும் பெயரை அழைப்பதற்கு கூட மனம் வராமல் கூழ்பானை என்கிற பெயரைக் கொண்டு அழைக்கின்றனர். கூழ்பானை என்கிற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் சசிகுமார்.
நாற்காலியை தங்களின் சாதியக் கவுரவமாக கருதும் ஆதிக்க இடைநிலை சாதியினர், அந்த இருக்கையில் பஞ்சாயத்து தலைவரான சசிக்குமாரை அமர விடாமல் செய்யும் காட்சிகள் சாதிய வக்கிரத்திற்கு எடுத்துக்காட்டு. பதவி விலகல் கடிகத்தை நிர்ப்பந்தித்து அரசு அலுவலகத்தில் கொடுக்கச் செல்லும் ஒரு காட்சியில், முன் இருக்கையில் அமரச் சொல்கிறார் அரசு அலுவலர். சசிக்குமார் தயக்கத்துடன் அதில் அமர்கிறார்.
இதைப் பார்த்து பெரும் கோவத்துடன், கோம்புலிங்கமும், அவரின் ஆட்களும் சேர்ந்து சசிக்குமாரை காரில் ஏறச் செய்து, வெறியுடன் தாக்குவதும், வீட்டின் வாயிலில் மிதித்துத் தள்ளி விட்டு, மண்டியிட வைத்து, அதுவும் போதாமல், கழிவறைக்குள் தள்ளி பலமாக வெறியுடன் தாக்குவதும், ஊருக்கு முன் நிர்வாணப்படுத்தி மிதித்து, மனைவியின் தலைமுடியை அறுக்க இழுத்துச் சென்று, வீட்டையே அடித்து உடைப்பதும் என அந்த காட்சிகள் எல்லாம் பட்டியலின சாதியை சார்ந்த ஒருவர், தங்களுக்கு சரிசமமாக அமர்ந்து விடக் கூடாது என்று நினைக்கும் இடைநிலை சாதியினரின் வக்கிரங்களை படம் பிடித்து காட்டியது.
படித்தவனான நந்தனிடம் கடுமையாக நடந்து கொள்வதை விடுத்து மென்மையாக நடந்து கொள்வதாக கண்டிக்கும் சாதிக்காரர்களிடம், அவன் பிசிஆர் (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) சட்டப்படி வழக்கு தொடுத்தா யார் அலைவது என்று சொல்லி விட்டு, ‘பேயா இருந்தா அடிக்கலாம், பறையனா இருந்தா’ என்று நந்தனின் காதுபடவே கூறுவார் கோம்புலிங்கம். அதே சமயம் அவரும், அவராட்களும் சசிக்குமாரை, நாற்காலியில் அமர்ந்ததால் அடிக்கும் காட்சி முரணாக தெரிந்தது. ஆனால் படித்த இளைஞனான நந்தன் சட்டப்படியான நடவடிக்கைக்கு செல்லும் வாய்ப்பிருக்கிறது என்கிற நினைப்பும், தனக்கு அடிமையாக, எதற்கும் எதிர்த்து நிற்காத சசிகுமாரை அடித்து உதைத்தால் சட்டப்படி செல்வதற்கு வாய்ப்பில்லை என்று கோம்புலிங்கம் நினைப்பதே அந்த காட்சிக்கு காரணமாக இருந்திருக்க முடியும் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அதை ஒரு வசனமாக வைத்து தெளிவுபடுத்தி இருக்கலாமோ என்கிற எண்ணமும் அக்காட்சியில் தோன்றியது.
“தலித்துகளை முன்னேத்துறேன்னு ரிசர்வ் தொகுதிய கொடுத்துடுறானுங்க, எதிர்த்து நில்லு; எமனை வெல்லு; கிழித்து தொங்க விடுன்னு கூவிட்டு திரியறானுங்க, படிச்சவனை எப்பவும் நம்பக் கூடாது, புலி சிறுத்தையெல்லாம் நமக்கு ஆகாது” – நந்தன் திரைப்படத்தில் இடைநிலை சாதி கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் இவை. அரசியல், சமூக களத்தில் உலவும் சாதிய மனநோயாளிகள் நடைமுறையில் பேசும் வசனங்களையே படத்திலும் சற்று மாற்றி தந்திருக்கிறார்கள்.
சுயமரியாதை கொண்ட பெண்ணாக சசிகுமாரின் மனைவி, ஒப்பனையிடாமல் கிராமத்து பெண்ணாக வருகிறார். ‘நீ தான் அடிமையாயிருக்க, உன் பொறுப்பையும் ஏன் மாமா அடிமையாக்குன’ என்று சசிகுமாரின் தன்மானத்தை தூண்டும் கதாபாத்திரம்.
கோம்புலிங்கத்தின் அம்மாவாக வரும் அந்த ஆச்சி, ‘அவன் சக்தியில்லாமலா உன்ன அடிக்காம, அடிய வாங்கிட்டான், உனக்கு பதிலா அவன என் வயித்துல பெத்துருக்கலாம்’ என்று பேசுவதெல்லாம் கணவனின், மகனின் சாதிய இறுக்கத்தைப் பார்த்து அதில் வெறுப்பு ஏறியதைக் காட்டும் காட்சியாக தெரிந்தது.
சசிகுமாரின் அம்மாவாக வரும் பாட்டி, உடல் நலமில்லாமல் படுத்திருக்கும் போது பேசும் ஒரு காட்சி. தனது மகன் பள்ளியில் கொடியேற்றுவான் என்கிற மகிழ்ச்சியுடன் ‘உனது தாத்தாதான் அம்பேத்குமார்ங்கற பேர் வைத்தது, நான் மேல போய், நீங்க நினைக்கற மாதிரி இல்ல, இப்ப எல்லாம் மாறிடிச்சின்னு உங்க தாத்தா கிட்ட சொல்லுவேன், இப்ப நீ பிரசிடெண்ட், என்ன அடிச்சிக் கொட்டி அள்ளிப் போட்டுட மாட்ட’ என்று பேசுவதும், இறுதியில் சசிகுமாரை கொடியேற்ற விடாமல் செய்ததைக் கண்டு கண்ணீர் சிந்தி இறப்பதும் படத்தின் அழுத்தம் கூட்டும் காட்சியாக இருந்தது.
கொடி ஏற்றுவதைப் போல முந்தைய நாள் இரவில் பள்ளிக்கு சென்று ஒத்திகைப் பார்க்கும் சசிகுமாரை, அடுத்த நாள் கொடியேற்ற விடாமல் கோம்புலிங்கமே கொடியேற்றுவதும், அதே நேரம் பள்ளியில் சிதிலமடைந்திருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு கீழ்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” – என்கிற குறள் எழுதப்பட்டிருப்பதைக் காட்டுவதும் சிறந்த படிமம்.
சசிகுமாரின் மகன் புதைத்து வைத்த காட்டு ஆமணக்கு செடி, மீண்டும் மீண்டும் முளைப்பதைப் பார்த்து, ‘நம்ம எங்க போனாலும் பிழைச்சிப்போமுன்னு’ அவன் சொல்வது எல்லாம் அர்த்தமுள்ளவை.
இடைநிலை ஆதிக்க சாதியினரின் எரிமேடையில், கொட்டும் மழையில் கூட, சடலத்துடன் ஒதுங்க விடாமல் செய்வதும், ஐயாவிடம் கேட்டு விட்டு வருகிறேன் என செல்லும் சசிகுமாரை கோம்புலிங்கம் துரத்துவதும், அதுவரை மழையில் நனைய விட்ட அம்மாவின் சடலத்தை சேற்றினில் புதைப்பதும் என தொடரும் காட்சிகள், நடைமுறையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை கூட மறுக்கும் இடைநிலை சாதியினரின் சாதி வெறிக்குரிய பிரதிபலிப்பாக இருந்தது.
“ஆளுறதுக்குதான் அதிகாரம் தேவையின்னு இத்தனை காலமும் ஒதுங்கியிருந்தோம், ஆனா இப்பதான் புரியுது, இங்க வாழுறதுக்கே அதிகாரம் வேணும்னு” – என்று வட்டார வளர்ச்சி அலுவலரான சமுத்திரக்கனியிடம் சொல்லும் காட்சி, கொடிய மனம் கொண்ட சாதிய சமூகத்திடமிருந்து பட்டியலின மக்களை மீட்க அண்ணல் அம்பேத்தர் செய்த காரியங்களை நினைவூட்டும்படியானது.
கோம்புலிங்கமாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் அவர்கள் நடித்திருக்கிறார். காதல் என்கிற திரைப்படத்தில், ஒரு ஊரே சேர்ந்து காதலர்களைப் பிரிப்பதற்காக, அவர்களுக்கு செய்யும் சித்திரவதைகளை காட்சிப்படுத்தியவர். இடைநிலை சாதியவாதி கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தி அருமையாக நடித்திருக்கிறார். நடமாட முடியாமல் படுக்கையில் கிடந்தாலும், சாதி வெறியில் பேசும் அவரின் தந்தை கதாபாத்திரமாக ஜி.எம். குமார்.
இடைநிலைச் சாதியினராக ஆதிக்கம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் அனைவரும், உண்மையாகவே அவர்கள் காட்டும் உடல் மொழியுடன் சிறப்பாக நடித்திருந்தனர். பட்டியலின மக்களின் வேடத்தில் நடித்திருந்தவர்களும் படத்தின் தன்மைக்கேற்றபடி, படிக்காத பாமர மக்களைப் போன்றே அருமையாக நடித்துள்ளனர்.
இரா. சரவணன் போன்ற இயக்குநர்கள் தமிழ் திரையுலகின் நம்பிக்கைகள். படத்தின் ஏதோ ஒருசில காட்சிகளில் தொட்டு விட்டு செல்லாமல், படம் முழுமையும் காட்சிக்கு காட்சி சாதிய சமூகத்தை படம் பிடித்துச் சொல்லும்படியான கதையமைப்பு. படக்குழுவினரின் உழைப்பு வீணாகவில்லை. திரையரங்கில் வெளிவந்து பலரின் பாராட்டுதலைப் பெற்ற இப்படம் Prime OTT தளத்திலும் வெளியாகி இருக்கிறது. அனைவரும் தவற விடக்கூடாத திரைப்படம் நந்தன்.
இறுதியில், உண்மையாக பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கும் சிலர், தாங்கள் அனுபவிக்கும் அவமானங்களையும், வேதனைகளையும் பதிவு செய்வதுடன் படம் முடிகிறது. நந்தன் திரைப்படம் மிகைப்படுத்தி சொல்லப்பட்டவை அல்ல என்பதற்கு இவர்களின் பதிவுகளும், நம் நிகழ்காலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உண்மையான சம்பவங்களே சாட்சிகளாக இருக்கின்றன.
வாணியம்பாடியில் 2019-ல், பொதுப்பாதை மறுக்கப்பட்டதால் பட்டியலினத்தவரின் சடலங்களை நான்கு ஆண்டுகளாக கயிறு கட்டி பாலத்திலிருந்து இறக்கி கொண்டு சென்றது வெளிச்சத்திற்கு வந்தது. ஒன்றிரண்டல்ல இது போல ஏராளமான சம்பவங்கள் வெளியில் தெரிந்தும், தெரிய வராமலும் நடந்து கொண்டே தானிருக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தில் 2022ம் ஆண்டு அருந்ததிய சமூகத்தவர் ஒருவரின் சடலத்தை பொதுப் பாதையில் எடுத்துச் சென்றதற்காக இடைநிலை ஆதிக்கசாதிக் கும்பல் கிராமத்தையே சூறையாடியது. அதனைக் கள ஆய்வு செய்து, பொதுவெளிக்கு கொண்டு வந்தது மே 17 இயக்கம். மற்றொரு அருந்ததிய சமூகத்தவரும் அதே வாரத்தில் இறந்த போது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுப்பாதையில் எடுத்துச் செல்வோமென மே 17 இயக்கம் உறுதியளித்தது. அதன்படியே சனநாயக சக்திகளுடன் இணைந்து அந்த சடலத்தை பொதுப்பாதையில் கொண்டு செய்து சுயமரியாதையுடன் அடக்கம் செய்தது.
இந்த வருடம் 2024-ல் கூட சுதந்திர தின விழாவில் கூட கோவை வெள்ளாணைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரான கவிதாவை, துணை தலைவரான ராஜா கொடியேற்ற விடாமல், சாதிய ரீதியாக அவமானப்படுத்தியுள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர்களாக இருந்தும், அவர்களை கொடியேற்ற விடாமல் தடுப்பதைக் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2022-ல் நடத்திய ஆய்வில், 2020-ல் திருவள்ளூர் ஆத்துப்பாக்கம், 2021 இல் வில்லிசேரி, அயன் வடமலபுரம், ராமநூத்து அரியநாயகிபுரம், முத்தையாபுரம், கே. துரைசாமிபுரம் ஆகிய ஆறு ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் கொடியேற்ற முடியவில்லை என கூறியுள்ளனர்.
மேலும் அவர்களின் கள ஆய்வில் 42 ஊராட்சிகளின் ஊராட்சி தலைவர் பெயர் பலகை இல்லை, 22 ஊராட்சிகளில் நாற்காலியில் அமர முடியவில்லை, 32 ஊராட்சிகளில் அலுவலகத்தில் அமர முடியவில்லை, 14 ஊராட்சிகளில் அலுவலக சார்பில் தலைவருக்கு கிடைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
1996 -ல் மதுரை மேலூரில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முருகேசன் உட்பட 6 பேரை இடைநிலை ஆதிக்க சாதிய கும்பல் வெட்டிக் கொன்றது. 1996 முதல் 2006 வரை முதல் தலித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட மதுரை பாப்பாபட்டி, கீரிப்பட்டி மற்றும் நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்ற தொகுதிகளில் 19 முறையாக, முறைப்படியான தேர்தல் நடைபெறவில்லை. பாப்பாபட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின ஊராட்சி தலைவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். போலி வேட்பாளரை நிறுத்தி, கடைசி நாளில் வேட்புமனுவை திரும்ப பெற வைப்பதும், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகள் ஆட்களை நிறுத்தினாலும், போலி வேட்பாளரை நிறுத்தி, ஆதரவளித்து பின்னர் ராஜினாமா செய்ய வைப்பதும் தொடர்ந்தது.
கடலூர் மாவட்டம் புவனகிரி தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேசுவரியை, தரையில் அமர வைத்து அவமதித்ததற்காக 2020-ல் ஊராட்சி துணைத் தலைவரும், வார்டு உறுப்பினரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு நிறைய செய்திகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
சாதிய வன்முறை தடுப்பு சட்டங்கள் உடலியல் ரீதியான தாக்குதல்களை ஓரளவு தடுத்திருந்தாலும், உளவியல் ரீதியாக சாதியம் நடத்தும் வன்முறை திரைப்படங்களில் கூட காட்டி விட முடியாத அளவிற்கு கொடியதாக பரவியிருக்கின்றன. அனைத்தும் காட்சியாக கடத்தப்பட வேண்டும். இப்படத்தின் இயக்குனரைப் போன்ற துணிச்சலாக சாதியவாதிகளை அம்பலப்படுத்தும் இயக்குனர்கள் பெருக வேண்டும்.