பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் இளம்பெண் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமையைக் கண்டித்தும், கிருஷ்ணகிரி பகுதியில் பள்ளி மாணவிகளை என்.சி.சி. முகாம் என அழைத்துச் சென்று பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும் கடந்த ஆகஸ்ட் 24, 2024 அன்று சனிக்கிழமை மாலை, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் பெண்கள் மீது நடைபெறும் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு வலியுறுத்தவும் இந்த ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

ஒரத்தநாடு பகுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்ணின் குடும்பத்தினரை மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தோழர். குடந்தை அரசனுடன் சென்று சந்தித்தார். காவல் துறை மற்றும் அந்த பகுதியினரிடம் நிலவரங்களைக் கேட்டறிந்தனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக உறுதி கூறினார். மீண்டும்,  மே பதினேழு இயக்கத்தின் பெண் தோழர் லேகா மற்றும் பெண்ணிய செயல்பாட்டாளர் தோழர். கவிதா கசேந்திரன் அவர்களும் அந்தக் குடும்பத்தினரை சந்தித்து, அப்பெண்ணுக்கு நேர்ந்த கடுமையான சித்திரவதைகள் குறித்த தகவல்களைக் கேட்டறிந்தனர்.

மே பதினேழு இயக்கத்தின் பெண் தோழர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாலியல் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், பெண்கள் மீதான வன்முறையை தூண்டும் சனாதனம் வீழ்த்தப்பட வேண்டும், குற்றச்செயலுக்கு காரணமாக அமையும் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை பதாகைகள் ஏந்தி முழக்கமிடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பேசியவை :

ஒரத்த நாடு பகுதியிலே பெண்ணுக்கு நிகழ்ந்திருக்கக்கூடிய கூட்டு பாலியல் வன்புணர்வை தமிழ்நாட்டில் அமைதியாக அனைவரும் கடந்து சென்று விட்டார்கள். சமூக அக்கறை கொண்டவர்களும் தங்கள் எதிர்ப்பையோ கவலையையோ பதிவு செய்யவில்லை. இந்தப் பெண் எவ்வாறு பாதிக்கப்பட்டவர் என்பதை களத்தில் நேரில் சென்று சந்தித்த தோழர்கள் பதிவு செய்தனர். ஆனால் இதற்கு பின்னரும் எதிர்ப்பு வருமா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

சமூக சிக்கலை குறித்து கேள்வி கேட்டால் அது திமுக ஆட்சிக்கு எதிராக  திரும்பி விடுமா? சமூக சிக்கலைத் தீர்ப்பதற்கு கோரிக்கை வைத்தால், அது பாஜகவிற்கு ஆதரவாக போய்விடுமோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பல சமூக செயற்பாட்டாளர்கள் அமைதி காக்கிறார்கள். போர்க்குணத்தோடு கேள்வி எழுப்பினால் அது பாஜகவிற்கு ஆதரவாக மாறிவிடுமோ? என்கிற அளவில் தமிழ்நாட்டில் பெரும்பான்மை சமூக செயற்பாட்டாளர்கள் அமைதி காக்கின்றார்கள். திமுக-விற்கு எதிரான விடயங்களை விமர்சிப்பதற்காக யூ-டூபில்(Youtube) காணொளி வெளியிடக்கூடியவர்கள், கட்டுரை எழுதக்கூடியவர்கள் சமூக சிக்கல்களுக்காக ஏன் எந்த பதிவும் செய்வதில்லை?

ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முற்போக்குக் கருத்து பேசுகிறது என்பதற்காக சமூகம் தன்னுடைய நோயைத் தானே தீர்த்துக் கொள்ளுமா? ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் சமூகத்தின் எல்லா பிரச்சனையும் தீர்ந்து விடுமா? நீங்கள் சமூகப் பிரச்சினையை கையில் எடுக்கும் பொறுப்பை கை கழுவினால், அந்த ஆட்சியால் எந்த பிரச்சினையும் தீர்க்க முடியுமா?

ஒரத்தநாடு பிரச்சனை, மாஞ்சோலை பிரச்சனை, மீனவர் பிரச்சனை, சங்கரலிங்கபுரம் தீண்டாமை சுவர் பிரச்சனை பற்றி பேசவில்லை என்றால் திமுக ஆட்சியை காப்பாற்ற முடியாது. ஆட்சிக்கு வரும் ஒரு கட்சி, பாஜகவிற்கு எதிராக, இந்துத்துவத்திற்கு எதிராக, சனாதனத்திற்கு எதிராக இயங்கினால் மகிழ்ச்சி. ஆனால் அந்தக் கட்சி நம் சனநாயக கோரிக்கைகளை நிறைவேற்றுகிறதா? என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒரு கட்சி தானாகவே அனைத்து பிரச்சினையையும் தீர்க்க முடியாது.

ஆட்சி முறை என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்கின்றார்களா என்பதை கவனிப்பது. ஒரு நாட்டில்  ஆட்சியை செயல்படுத்துவது அதிகாரிகள். இந்த அதிகாரிகள் ஒழுங்காக  வேலை செய்கிறார்களா? என்பதை கவனிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களும் அமைச்சர்களும் இருக்கிறார்கள், பணி செய்கிறார்கள். இந்த எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும், முதலமைச்சர்களும் முறையாக ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்பதை பார்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இந்த பொறுப்பை நாம் கைகழுவி விட முடியாது.

மீனவர் பிரச்சனையில் அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தால்தான் அது சமூக நீதி ஆட்சியாக இருக்க முடியும். அமைச்சர் அங்கு நேரில் களத்திற்கு செல்லவில்லை என்றால் அது எவ்வாறு சமூக நீதி ஆட்சியாக இருக்கும்?

மாஞ்சோலைத் தொழிலாளர் பிரச்சினை நூறாண்டுகளுக்கும் மேலாக தொடரும் பிரச்சினை. ஆனால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அங்கு நேரில் செல்லவில்லை. சமூக செயற்பாட்டாளர்களும் இது குறித்து பேசாமல் இருந்தால் மாஞ்சோலை பிரச்சினைக்குத்  தீர்வு கிடைத்து விடுமா?

ஒரத்தநாடு பிரச்சினையில் காவல்துறை முறையாக செயல்படவில்லை என்று ஊர்மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். நானும் தோழர் குடந்தை அரசனும் அங்கு நேரில் சென்ற போது ஊரில் கடையடைப்பு நடந்து கொண்டிருந்தது. சாதி, மதம் கடந்து இந்த பாலியல் வன்முறைக்கு எதிராக போராட்டம் செய்து கொண்டிருந்தார்கள்.

போராட்ட மேடையிலே அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் இருந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் பெருமளவில் போராட்டத்தை ஒருங்கிணைத்தார்கள். இவ்வாறு அனைவரும் அந்த ஊரில் நடக்கும் போதைப் பொருள் பிரச்சனையை தடுக்க வேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். ஆனாலும் காவல்துறை இந்த மேடையில் ஒலிப்பெருக்கி (Mike) வைப்பதற்கு அனுமதி மறுத்து இருக்கிறது.

பாப்பாநாடு காவல்துறை ஒழுங்காக வேலை செய்யவில்லை என்கிற காரணத்தினால்தான் அந்த பெண்ணிற்கு இத்தகைய சீரழிவு நடந்திருக்கிறது. ஒலிப்பெருக்கி வைப்பதற்கு அனுமதி மறுத்தால் இந்த பிரச்சினையை மூடி மறைத்து விட முடியுமா? இது குறித்து நானும் தோழர் குடந்தை அரசனும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பார்க்க சென்ற போது அவருக்கு எதையும் கேட்கும் பொறுமை இல்லை. சமூக செயற்பாட்டாளர்களாகிய நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகதான் சென்றோம். தொடர்ச்சியாக சாதி இறுக்கம் இருந்து கொண்டிருக்கிற இடமாக அந்தப்பகுதி தெரிகிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஒரு காணொளி ஒளிபரப்பப்பட்ட நிகழ்வுக்கு நானும் தோழர் அரங்க குணசேகரனும் சென்றபோது பிணையில் வர முடியாத வழக்கை என் மீது பதிவு செய்தது காவல்துறை.

இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலே இரட்டைக் குவளை முறை இருந்திருக்கிறது. ஒரத்தநாடு கிளாமங்கலம் பகுதியில் நான்கு வருடங்களுக்கு முன்பு டீக்கடையில் தேநீர் கேட்டால், “நீங்க என்ன ஆளுங்க?” என்பதை விசாரித்து பேப்பர் கப்பிலோ கண்ணாடி டம்ளரிலோ தேநீர் தருவார்கள். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பேப்பர் கப்பிலே டீ தருவார்கள். இதை நான் நேரடியாகவே பார்த்தேன். எங்கள் தோழர்கள் இதை காணொளியாக பதிவு செய்தார்கள். இரட்டைக் குவளை முறைக்கு எதிராக வழக்கு பதிவு செய்தால், வழக்கு பதிவு செய்தவர்களுக்கு எதிராக அனைத்து வேலைகளையும் இங்கு காவல்துறை செய்தது. ஆதிக்க சாதியினர் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக ஆட்களை குவித்தார்கள். மாவட்ட கண்காணிப்பாளரிடம் ஆதாரங்களை நாங்கள் சமர்ப்பித்த பிறகுதான், காவல்துறை அங்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுத்தது. இல்லையென்றால் அங்கு பெரிய சாதி கலவரம் நிகழ்ந்திருக்கும்.

ஒரத்தநாடு விடயத்திலும் இதுபோன்றே நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பெண் தஞ்சாவூர் மருத்துவமனையில் இருப்பதாக முதலில் என்னிடம் தெரிவித்தார்கள். நான் தஞ்சைக்கு சென்றபோது  திருச்சிக்கு அப்பெண்ணை மாற்றி விட்டதாக கூறினார்கள். திருச்சிக்கு சென்றபோது வேறு இடத்திற்கு மாற்றி விட்டதாக கூறினார்கள். நாங்கள் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று, அந்த பெண்ணின் உறவினர்களை சந்தித்து பேசிவிட்டு வந்தோம். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஆறு பேர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். அவர்களில் இருவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. போதைப்பொருள் பழக்கம் அங்கு அதிகமாக இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட  ஆறு பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் இரண்டு பேரை கைது செய்யவில்லை. ஏன்  என்று கேட்டால் “அவர்கள் ஏன் நண்பராக இருக்கக் கூடாது?” என்று கேட்கிறார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவன் போதை பொருள் வியாபாரம் செய்கிறவன் என்று ஊரே கூறுகிறது. ஆனால் அது போதை பொருள் தானா என்று காவல்துறை கேட்கிறது. இதை காவல்துறை எஸ்.பி-யிடம் கூறினால் அவர் காதில் வாங்குவதற்கு தயாராக இல்லை. காவல் துறையினர்  ஆட்சியாளர்களின் பரப்புரைக்கு  உதவியாக இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் காவல்துறைக்கு உதவியாக இருக்கிறார்கள்.

இங்கு சமூக செயற்பாட்டாளர்களில் பலர் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்து விட்டோம் என்பதற்காக அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் மக்களுக்காக தான் நாங்கள் களத்திற்கு வருகிறோம். ஏதோ ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, பிரச்சனையை தீர்த்து விடும் என்பதற்காக நாங்கள் களத்திற்கு வரவில்லை. நாங்கள் கட்சிக்கு சென்று விட்டால் பணம் சம்பாதிக்கலாம். வழக்கு வாங்காமல், சிறைக்கு செல்லாமல் இருக்கலாம். நல்ல பெயர் எடுக்கலாம். வாய்ப்பு, வசதிகள் உருவாக்கலாம். ஆனால் நாங்கள் மக்களுக்காக நிற்கிறோம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்காக நிற்கிறோம். இதுதான் இயக்கம்.

எதிர்த்து பேசுவதாலும் போராட்டம் நடத்துவதாலும் பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று நினைத்தால் அந்த அளவிற்கு தான் இந்த ஆட்சி பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். மாஞ்சோலையில் 500- 600 குடும்பங்கள் உணவிற்கு வழி இல்லாமல் கஞ்சித்தொட்டி திறந்திருக்கிறார்கள். கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக தேயிலைத் தோட்ட நிறுவனம் (BBTC) அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டது. SDPI தோழர்கள் மற்றும் சில சமூக செயற்பாட்டாளர்கள் அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள். இந்த மக்களை பசியும், பட்டினியாக விட்டுவிட்டு நிறுவனம் வெளியேற துடிக்கிறது. இதற்கு  ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள். திமுகவும் துணை போகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றேன்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் என் மாஞ்சோலை செல்லவில்லை? மீனவர்  நலத்துறை அமைச்சர் ஏன் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களை சந்திக்கவில்லை? பெண்கள் நலத்துறை அமைச்சர் ஏன் ஒரத்தநாடு, கிருஷ்ணகிரி செல்லவில்லை? எல்லா இடங்களுக்கும் அமைச்சர் செல்ல வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இது போன்ற நேரங்களில் அமைச்சர் பாதிக்கப்பட்டவர்கள் உடன் நிற்கவில்லை என்றால் அந்த அமைச்சரே தேவையில்லை.

ஆறு பேர் சீரழித்து வன்கொடுமை செய்த பின்னரும் அந்த பெண் துணிச்சலாக போராடுகிறார், அந்தப் பெண்ணை பாதுகாப்பதுதான் திராவிட மாடல். அந்தப் பெண்ணை கொண்டாடுவதுதான் திராவிட மாடல். இதை விடுத்து பத்திரிக்கை, யூ-டியூப் முதலியவற்றில் ஆதரவு திரட்டி ஆட்சி நடத்தி விட முடியாது. மக்களை சென்று சந்திக்காதவர்கள் youtubeல் புரட்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களை நம்பி ஆட்சி நடத்தினால் அந்த ஆட்சி அழிந்து விடும்.

கோடான கோடி துன்பப்படுகின்ற மக்களுடன் யார் நிற்கிறார்களோ அவர்களிடம் தான் அறம் இருக்கும். யூ-டியூபில் ஒரு லட்சம் லைக்ஸ்(likes) வாங்கியவரை நம்பி ஆட்சி நடக்கக் கூடாது. ஆனால் இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி சமூக வலைத்தளத்தில் இருப்பவர்களை மட்டுமே நம்பி ஆட்சிக்கு வந்தவர் தான் நரேந்திர மோடி. மோடி மாடலை இங்கு காட்டாதீர்கள். மோடியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை  நாம் செய்து முடித்து விட்டோம். எந்த சமூக ஊடகமோ, பத்திரிக்கையோ, youtube-ம் இல்லாமல் மோடியை வீட்டுக்கு அனுப்பும் வேலையை சாமானியர்கள் செய்தார்கள். அதை காங்கிரஸ் செய்யவில்லை, ராகுல் காந்தி செய்யவில்லை. “இன்று வரை CAA வழக்கு பதியப்பட்டவர்களை பற்றி, UAPA  வழக்கு பதியப்பட்டவர்களை பற்றி ராகுல் காந்தி பேசவில்லை. ‘உமர் காலித் பற்றியும் பீமா கோரேகான்’ பற்றியும் பேசுவதற்கு ராகுல் காந்திக்கு துணிச்சல் இருக்கிறதா? இஸ்லாமியர் வீடுகளை இடிப்பதை பற்றி அவர் பேசி இருக்கிறாரா?”

மோடி நாடகத்திற்கு கொட்டகை போட்ட கூட்டம் இன்று ராகுல் காந்திக்கு நாடக கொட்டகை தயார் செய்து கொண்டிருக்கிறது. டெல்லிக்காரன் எவரையும் நாங்கள் நம்பப் போவதில்லை. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதானே! பாஜக இதே செயலை இன்னும் அதிகமாக செய்கின்றது.

எனவே சமூக சீரழிவுக்கு எதிரான போராட்டத்தை ஒரு கணம் கூட நாங்கள் நிறுத்த முடியாது. நாம் தொடர்ந்து உங்களுடன் போராடுவோம். மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டிய மிகப்பெரிய கடமை இருக்கிறது. அதேபோன்று  யூ-டுயூபில் செயல்படும் போலிக் கும்பலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

பெண்களைப் போகப்பொருளாக காட்டியது முதலாளித்துவ சந்தை கூட்டம். முதலாளியிடம் பணம் வாங்கி விட்டால் முதலாளித்துவத்திற்கு எதிராக நிற்க முடியாது. பெண்களை வன்கொடுமை செய்பவன், அவனுக்கு துணை இருக்கும் சாதி அமைப்பு, முதலாளித்துவ அமைப்பு – இவற்றுடன் பின்னி பிணைந்திருக்கக்கூடிய அதிகாரிகள், அதிகாரிகளின் தயவுகளை எதிர்பார்த்து ஆட்சி நடத்தக்கூடிய ஆட்சியாளர்கள்- இந்தக் கூட்டணியோடு கைகோர்க்கும் கார்ப்பரேட் ஊடகம், இவர்களோடு இப்பொழுது புதிதாக யூ-டியூப் புரட்சியாளர்கள் இணைந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தை எதிர்க்க வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அரசாங்கம்  வேலை செய்ய வில்லை என்றால் பெண்கள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. கையிலே கருவி எடுக்க வேண்டி இருக்கிறது என்று எனக்கு முன் பேசிய பெண் தோழர் நேர்மையாக பேசினார். பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்க சென்றால் அந்தப் புகாரை வாங்க மறுப்பவரிடத்திலே அதிகாரத் திமிர், சாதியத் திமிர் இருக்கிறது.

2022-ல் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்த வழக்குகளின் எண்ணிக்கை 4,45,000. இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 51 வழக்குகள் பதிவாகின்றன. ஆனால் பெண்கள்/ குழந்தைகள் மீதான 90 சதவீதம் வழக்குகள் இன்னும் முடித்து வைக்கப்படவில்லை”.

பெண்கள் அமைப்பாக திரண்டால் மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். ஆணாதிக்கம் வன்புணர்வு செய்தவனிடம் மட்டும் இல்லை. புகார் வாங்காத காவல்துறை, பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருப்பி அனுப்பிய மருத்துவத்துறை, இதைப்பற்றி பேசாத சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரிடத்திலும் இருந்திருக்கிறது. இதைப் பற்றி எழுதாத பத்திரிக்கை துறையிலும் இருக்கிறது.

இவ்வாறு ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் எதிர்த்து ஒரு சாமானிய பெண் எவ்வாறு இயங்க முடியும்? எனவேதான் பெண்கள் இயக்கமாக மாற வேண்டும். ஆண்களை நம்பி சமூக-பொருளாதார விடுதலையை பெண்கள் பெற்றுவிட முடியாது. எனவேதான் பெண்கள் அமைப்பாக மாற வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றரை கோடி பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் மீதான வன்முறையாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை 4,45,000 இருக்கும்போது பதிவு செய்யப்படாத வழக்குகள் எத்தனை இருக்கும்?

பெண்கள் திருப்பி அடிக்காமல் தீர்வு கிடையாது. நமக்காக யாரும் அக்கறை கொள்ளாத போது, நமக்கான தீர்வை நாமே தான் தர வேண்டும். சமூகத்தை சீர்திருத்தது என்பது ஒரு கட்சிக்கு ஓட்டு போடுவது கிடையாது. தத்துவத்தை கையில் எடுத்துக் கொண்டு அமைப்பாக மாறி போர்க்குணத்தோடு பெண்கள் போராடவில்லை என்றால் தீர்வு கிடைக்காது.

CAA போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் இசுலாமிய பெண்கள். எனவே பெண்கள் அமைப்பாவதுதான் அவர்களுக்கு பாதுகாப்பைத் தரும். ஒரத்தநாடு வழக்கிலே பாதிக்கப்பட்ட பெண் சார்பாக வழக்கறிஞர் பா.ப.மோகன் உடன்பட்டு இருக்கிறார். அதோடு தோழர்கள் களத்திற்கு நேரடியாக சென்று பேசி விட்டு வந்திருக்கிறார்கள். இந்த சமயத்திலே இது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயம்.

இந்த வழக்கை நாம் எடுத்து நடத்துவோம். அந்த பெண்ணுக்கு ஆதரவாக நிற்போம். அந்த பெண்ணுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டியது சமூகநீதி திராவிட மாடல் திமுக அரசு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். இதுவரை அமைதியாக இருக்கக்கூடிய சமூக செயற்பாட்டாளர்களும் உங்கள் மௌனத்தை கலையுங்கள் என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன். – இவ்வாறு தோழர். திருமுருகன் காந்தி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைத் தமிழப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், ஜனநாயக மக்கள் கட்சியின் தோழர் இரா.தாயுமானவன், எழுத்தாளர் தோழர் அமரந்த்தா, பெண்ணிய செயற்பாட்டாளர் தோழர் கவிதா கஜேந்திரன், பச்சை தமிழகம் கட்சியின் தோழர் அருள்தாஸ், நேஷனல் காங்கிரஸ் கட்சியின் சரண்யா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள். மேலும் மே பதினேழு இயக்கத்தின் தோழர். மரகதம் ஆர்ப்பாட்ட முழக்கமிட்டார். அதனை தொடர்ந்து தோழர். கீதா, தோழர். சுகுமாரி ஆகியோர் உரையாற்றினர். தோழர். லேகா ஒரத்தநாடு பெண் குடும்பத்தினரை சந்தித்த கள ஆய்வினைப் பற்றிப் பேசினார். தோழர். திருமணி கவிதை வாசிக்க, தோழர். பிரியா நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »