நமீபிய இனப்படுகொலையும், சர்வதேச நீதியும்
இனப்படுகொலை என்பது ”மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் ஊடாக நாட்டின் பொருளாதார சமூக மேம்பாடு என்ற பெயரால் ஒரு குறிப்பிட்ட தேசிய இன மொழி பேசும் மக்களை, குறிப்பிட்ட சமயத்தை பின்பற்றுபவர்களை ஒட்டுமொத்தமாகவோ அல்லது பகுதியாக வன்முறையின் மூலம் அழித்தொழிக்கும் மனிதநேயமற்ற துன்பகரமான சொல் ஆகும்.”
“ஆரோக்கியமற்ற உடல் அல்லது சிதிலமைடைந்த தோட்டம் இவற்றை மேம்படுத்துவதற்காக ஒரு மருத்துவர் அல்லது தோட்டக்காரர் பயன்படுத்தும் பணிகளை போன்றதே ஒரு அரசு தனது கட்டுபாட்டு பகுதிக்குள் செய்யும் பணிகளும் என்று இனப்படுகொலையை நியாயப்படுத்துகிறது” பாமனின் கோட்பாடு. இது போன்ற அதீத சிந்தனைப் போக்கு மனிதர்களை இயற்கையிடமிருந்து அந்நியப்படுத்துவதோடு இல்லாமல் மனிதன் இயற்கையை கட்டுப்படுத்த எத்தணிக்கின்றான், சக மனிதர்களையும் ஆதிக்கத்திற்குள்ளாக்குகிறான். அந்த வகையில் “இனப்படுகொலைகளின் நூற்றாண்டு” என அடையாளப்படுத்தும் அளவில் எண்ணற்ற இனப்படுகொலைகளை தாங்கி நிற்கின்றது இருபதாம் நூற்றாண்டு.
ஆம். உலக நாடுகளிடையே இனப்படுகொலை என்ற சொல் அறிமுகமாகும் முன்னரே இருபதாம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலை ஆப்பிரிக்காவில் ஹிட்லரின் நாசி படையால் “ஜெர்மன் தென்மேற்கு ஆப்பிரிக்கா” (தற்போதைய நமீபியா) பகுதியில் அரங்கேறியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தங்கள் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட ஜெர்மனிய அரசு, பிரிட்டன் – ப்ரெஞ்சு படைகளுக்கிடையிலான போரை பயன்படுத்தி ஆப்ரிக்க பிரதேசங்களிலுள்ள தெற்கு பகுதிகளை தன்வசப்படுத்தியது. இது இனப்படுகொலை, போர், காலனித்துவம் மற்றும் ஜெர்மானியர்கள் குடியேற்றத்திற்கு வழிவகுத்தது. இது பல ஆண்டுகளாக ஏன் இன்றளவும் பூர்வீக மக்களை பெரிதும் பாதித்து வருகிறது. 117 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி அரசு நமீபியாவில் நடந்தது இனப்படுகொலை என்று ஒப்புக்கொண்டு அந்நாட்டின் வளர்ச்சிக்காக 1.3பில்லியன் டாலர் நிதியுதவி தருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையை மே 27, 2021 அன்று வெளியிட்டுள்ளது. அடுத்த 30ஆண்டுகளில் இந்த தொகை பகுதியாக பிரித்து விடுதலை அடைந்த நமீபியா நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கொடுத்து உதவுவதாக கூறியுள்ளது வரவேற்க வேண்டிய குறைந்தபட்ச சனநாயகமாகும்.
புவியியல் சூழல்:
ஆப்பிரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நமீபியா அதன் எல்லைகளாக வடக்கே அங்கோலாவையும், தெற்கு எல்லையாக தென்னாப்பிரிக்காவையும், கிழக்கு எல்லையாக பொட்சுவானாவையும், மேற்கே கடலையும் எல்லைகளாகக் கொண்டது. நமீபியாவில் இயற்கை வளங்களாக இரத்தினக்கல் (Diamond), யுரேனியம் (Uranium), செம்பு (Copper), தகரம் (Tin), ஈயம் (Lead) போன்ற கனிமங்களை கொண்டுள்ளது இன்றைய நிலையில் மூன்று லட்சத்துப் பதினெட்டாயிரம் (3,18000) சதுர மைல் பரப்பளவு கொண்ட நமீபியாவில் மக்கள் தொகை 14 லட்சம் ஆகும்.
ஆப்ரிக்க பழங்குடிகள்:
நமீபியாவில் மொத்தம் 12 பூர்வக்குடி இனக்குழுக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களில் ஒவோம்போ இனமக்கள், டமாரா இனமக்கள், நாமா இனமக்கள் முக்கியமானவர்கள். அதில் மக்கள் தொகை அதிகமுள்ளது கெரேரோக்களும் நாமாக்களுமே. 1897க்கு முன் கால்நடை வர்த்தகத்தாலும், விவசாயத்தாலும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுப்பெற்றிருந்ததனர். தங்கள் பொருளாதார பலத்தை சிதைக்கும் வண்ணம் ஏற்பட்ட ரிண்டர்பஸ்ட் நோய் (Rinderpest disease) காரணமாக 90% கால்நடைகள் இறந்து போயின, இதனால் உடல் மற்றும் மனரீதியாக சோர்வுற்று நலிவடைந்தனர். இதுவே காலனி ஆதிக்கத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
ஜெர்மனிய காலனித்துவம்:
ஐரோப்பிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதற்காக பிரிட்டனுக்கும் ப்ரெஞ்சு படையினருக்கும் நடைபெற்ற நெப்போலியப் போர்களில் (1803 – 1815) ஃப்ரெஞ்சு படை வீழ்த்தப்பட்டது. முறையே இரண்டு படைகளும் ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஆப்பிரிக்காவிலும் பேரரசுகளைக் கொண்டிருந்தனர். வைரம் மற்றும் தாமிர வளங்கள் தென்னாப்பிரிக்காவில் செழித்து விளங்கியதை அறிந்த ஜெர்மனி தன் பொருளாதார தீராப் பசியை போக்க முடிவு செய்தது.
தென்னாப்பிரிக்காவின் பகுதிகளில் ஜெர்மன் தன் படையினரையும், அதிகாரிகளையும் அனுப்புவதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளை கைப்பற்றி “ஜெர்மனிய தென்மேற்கு ஆப்ரிக்கா” என பெயரிட்டுக் கொண்டது . மேலும் அவர்களை பிரதேசங்களாகவும் / காலனிகளாகவும் நிர்வகிக்கவும் புது சட்ட்டங்களை உருவாக்கி ஆட்சி செய்யவும் உத்தரவிட்டது (தற்பொழுது லட்சத்தீவை பாஜக நிர்வகிப்பது போல). 1884 இல் ஜெர்மனி தென்னாப்பிரிக்கா பகுதிகளை ஒருங்கிணைந்த ஜெர்மனி அரசாக அறிவித்தது. ஜெர்மனிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சி 1914 வரை அங்கு நீடித்தது,
1800களின் இறுதியிலும் 1900 களின் தொடக்கத்திலும் (1884-1915) நமீபியா உட்பட பலநாடுகள் ஜெர்மனியின் ஒரு பகுதியாக அதன் பேரரசுகளது கட்டுப்பாட்டில் இருந்தது. தொழில்துறையில் ஏற்பட்ட தேவைகளுக்கும், தாதுப்பொருட்களின் தேவைகளுக்கும் காலனி பிரதேசங்களை பயன்படுத்திக்கொண்டது ஜெர்மனி. 1888ல் ஜெர்மனியர்களின் காலனி படைகள் அங்கு வாழும் பழங்குடியினரின் நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதாக கூறி நிலங்களை தன்வசப்படுத்தி மக்களை ஏமாற்றி பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் சிதைத்தது. நிலத்தை தர மறுத்தோரை சித்திரவதைக்குள்ளாக்கியும் பல அடக்குமுறைகளை பூர்வக்குடிகள் மீது கட்டவிழ்த்தது.
ஜெர்மானிய படைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்த பழங்குடிகள்:
இனக்குழுக்களிடையே சிறுசிறு சண்டைகள் நடப்பது வழக்கமே. அதை பயன்படுத்திய ஜெர்மனியின் காலனி படைகள் தன் கட்டுப்பாட்டில் இப்பிரதேசங்களை கொண்டு வந்தன. அங்கு வாழும் மக்களின் வாழ்வாதார உரிமைகள் மெல்ல மெல்ல பறிக்கப்பட்டது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஹெரேரோ இனம் காலனி படைகளுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
காலனியாதிக்கத்தை எதிர்த்து ஹெரேரோ இன மக்கள் முதல்முறையாக ஒகாண்டஜூ (Okahandju) என்னும் சிறு நகரத்தில் ஜெர்மனியர்களுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டார்கள். அது வன்முறையாய் வெடித்தது. ஜெர்மனியை எதிர்த்த குடிமக்களை அழித்தொழிக்க அப்போதைய ஜெர்மனிய குடியேற்றப் படைகளின் தளபதி ஜெனரல் லோதர் வான் ட்ராதா(General Lothar von Trotha) கட்டளையின் பெயரால் ஆயிரக்கணக்கான மக்கள் மனிதநேயமற்ற கொடுஞ்செயலுக்குட்பட்டு அழித்தொழிக்கப்பட்டனர். கிளர்ச்சியில் முன்னணியாக இருந்து செயல்பட்டவர் சாமுவேல் மஹரேரோ (Samuel Maharero) மக்களுடனே கொல்லப்பட்டார்.
அதைத்தொடர்ந்து 1905ல் நாமா இனமக்கள், ஹென்ட்ரிக் விட்பூய் (Hendrik Witbooi) வழிகாட்டுதலின் படி ஜெர்மனி படையை எதிர்த்து சண்டையிட்டனர். பிறகு ஜேகப் மாரெங்கோ(Jacob Marengo) இந்த சண்டையை கையிலெடுத்தார்.
பழங்குடிகளின் மீதான இனப்படுகொலை:
ஜெர்மனி அரசை எதிர்த்த பழங்குடியினர் மக்கட்தொகையில் பெருமளவு கொல்லப்பட்டனர். 1907-ல் ஜேகப் மாரெங்கோ மரணத்திற்கு பிறகு போர் முடிவுக்கு வந்தது, முடிவில் 100,000(80%) ஹெரேரோ இன மக்களும் 10,000(50%) நாமா மக்களும் கொல்லப்பட்டார்கள். சிறைபிடிக்கப்பட்ட பழுங்குடியினர் பலர் சிறையிலே இறந்து கிடந்தனர்.
ஜெனரல் ஜவான் உத்தரவின் படி காலனி படைகளால் தங்கள் நிலங்களையும் கால்நடைகளையும் இழந்த ஹெரேரோ மக்கள் கலஹாரி பாலைவனம் (Kalahari Desert) பகுதிக்குள் விரட்டப்பட்டார்கள். அவர்கள் நீரின்றி சாகவேண்டுமென்பதற்காகவே பாலைவனத்தில் இருந்த ஒரு சில தண்ணீர் கிணறுகளைக்கூட ஜெர்மானியப் படைகள் தகர்த்தெறிந்தது. ஆயிரக்கணக்கான ஹெரேரோ இன ஆண்களும் பெண்களும் நமீபிய கரையோரம் அமைந்துள்ள சுறாத் தீவு (Shark Island) வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். ஜெர்மானியப் பேரரசினால் நிறுவப்பட்ட வதை முகாம்கள் பல அமைந்திருந்த காரணத்தால் சுறா தீவில் உள்ள வதை முகாம்கள் ’மரணத்தீவு’ (“Death Island”) என்று அழைக்கப்பட்டது. இதில் தப்பித்து அடிமை உழைப்பாளிகளாக இருந்தவர்கள் தான், இன்றைய ஹெரேரோஸ்களும் நாமாகளும் என்பது வரலாற்றில் ஜெர்மனியின் கோரமுகம் அம்பலப்படடு நிற்பதற்கான சான்று.
பழங்குடியினர் விடுதலையும், நீதிக்கான சர்வதேச போராட்டமும்:
ஜெர்மனி ஆதிக்கத்திற்குப் பின்னர் சுமார் 75 ஆண்டு காலம் தென்னாப்பிரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. தென் ஆப்பிரிக்காவின் மோசமான இனஒதுக்கலால் மீண்டும் அங்கு விடுதலை போராட்டங்கள் 1950ம் ஆண்டின் கடைசிக் காலகட்டத்தில் வெடித்தன. அரசியல் கோரிக்கையை தென்னாப்பிரிக்க அரசு ஆயுத வழியில் நசுக்க முற்பட்ட போது நமீபிய மக்கள் ஆயுதப்போரட்டத்தையும் அதன் ஒரு பகுதியாக கொரில்லா போரையும் கையிலெடுத்தனர். (மிக நீண்ட இந்த விடுதலை போராட்டம் குறித்து தனியாக எழுதவேண்டிய தேவை இருக்கிறது எனினும், இந்த கட்டுரையின் நோக்கம் முதல் இனப்படுகொலை என்கிற படியால் இதை சுருக்கமாக இங்கே முடிக்கிறோம். வரும் நாட்களில் விரிவாக தனிகட்டுரையாக கொண்டுவரப்படும்) பல கட்ட போராட்டங்கள், சர்வதேச நாடுகளின் பல்வேறு சதிகள் இவை அனைத்தையும் நமீபியா மக்களின் ஒன்றுபட்ட போராட்ட குணத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் போக இறுதியில் மார்ச் 21,1990ல் நமீபியா சுதந்திர நாடாகியது. பிறகு ஹெரேரோ மற்றும் நாமாக்களும் ஒருங்கிணைந்த அரசியல் இயக்கமாகவும் கட்சியாகவும் இணைந்து நமீபியாவில் தங்களுக்கு நடந்த அநீதி இனப்படுகொலையே என ஐக்கிய நாடுகள் முன் ஐநாவிலே அரசியல் கோரிக்கை வைத்தனர். அது மட்டுமல்ல பல அடையாளப் போராட்டங்களையும் முன்னெடுத்தார்கள்.
இதன் விளைவாக 2004ல், நமீபியா நாட்டிற்கு வருகை தந்து ஜெர்மனி அமைச்சர் ஹெரேரோ மக்களிடம் மன்னிப்பு கேட்டதை அறிந்த ஜெர்மனி அரசு அந்த அமைச்சரை கண்டித்தது. 2006ல் ஜெர்மனி நமீபியாவில் நடந்தது இனப்படுகொலை என்று ஜெர்மனி அருங்காட்சித்தில் இருக்கும் ஹெரேரொ இன மக்களின் மண்டையோட்டை திருப்பிக்கொடுக்க ஆரம்பித்தார்கள். 2015ல் இரண்டு நாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில், “கடந்த கால காயங்களை குணமாக்குங்கள்” என்ற அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டு, பிறகு 2018ல் இன அறிவியல் பரிசோதனைக்காக (pseudo science racial experiment) வைத்திருந்த ஒரு டஜன் மண்டையோடுகள் நமீபிய மக்களிடமே ஒப்படைக்கப்பட்டது.
ஒரு நூற்றாண்டாக இனப்படுகொலையை ஒப்புக்கொள்ளாத ஜெர்மனிய அரசு, நமீபிய மக்களின் பல கட்ட சனநாயக போராட்டங்களுக்கு பிறகு கடந்த மே28, 2021அன்று நமீபியாவில் நடந்தது இனப்படுகொலை என்றும், தங்கள் முன்னோர்கள் செய்த வரலாற்றுப் பிழையை ஈடுகட்டும் வண்ணம் நமீபிய நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கு 1.3பில்லியன் டாலர் இழப்பீடு தருவதாக ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (Heiko Maas) பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார். இந்த இழப்பீட்டை நமீபிய அரசும் ஒப்புக்கொண்டது.
ஆனால் அரசினுடைய இந்த முடிவிற்கு எதிராக ஹெரேரோ மக்களுக்கான பாராளுமன்றத்தின் உறுப்பினர் வெகுய் ருகாரோ(Vekuii Rukaro) கூறுவதாவது, “நமீபியா அரசு மக்களின் உயிரை வியாபார நோக்கத்துடன் விற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் என் மக்களுக்கு செய்துள்ள துரோகம்.”என்று குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்திற்கு பிறகு நமீபியா நாட்டில் வாழ்ந்து வரும் 7% வெள்ளை இனத்தை சார்ந்தவர்கள் 60% விவசாய நிலத்தை தன் வசம் வைத்துள்ளார்கள் எனவே இந்த ஒப்பந்தம் அங்கு வாழும் ஜெர்மனியின் மைத்துனர்களுக்கே பயண்தருவதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னர் ஜெர்மனி அரசு நிதியுதவி தர முன்வந்தபோது மறுத்த நமீபியா அரசு இப்பொழுது பாதிக்கப்பட்ட இன மக்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமலே இந்த ஒப்பந்தத்தை ஏற்றுள்ளதால் நமீபிய மக்கள் கன்டனத்திற்கும் எதிர்ப்பிற்கும் ஆளாகியுள்ளது.
சமூக வளர்ச்சி என்ற பெயரால் வன்முறை மூலம் குறிப்பிட்ட இனத்தையே அழித்தொழித்துவிட்டு, சமூக சீரழிவை செய்த தரப்பு பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட தரப்பிடம் அரசியல் மன்னிப்பு கோருவதும், மீள கட்டமைக்க நிதி சேவைகள் செய்வதும் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்று தந்துவிடாது தான். ஆனால் இந்த நவீன 21ம் நூற்றாண்டில் செய்த குற்றத்தை உணர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பிடம் மன்னிப்பு கோருவது குறைந்தபட்ச அரசியல் ஜனநாயகமாக கருத வேண்டியுள்ளது. அந்த வகையில் ருவாண்டா மக்களிடம் ப்ரெஞ்சு அரசும் அதனைத் தொடர்ந்து நமீபிய மக்களிடம் ஜெர்மானிய அரசும் மன்னிப்பு கேட்டதுபோல், 2009ம் ஆண்டு ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழினத்திடம் சர்வதேசம் மன்னிப்பு கோரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.