நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் மக்கள் எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்! தமிழர்களின் நிலம், வளங்களை கொள்ளையடித்து தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க மறுக்கும் என்.எல்.சி. நிறுவனம் தமிழர் விரோத நிறுவனமே! – மே பதினேழு இயக்கம்
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் பழுப்பு நிலக்கரி எடுக்க இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள வேளாண் நிலங்களை மக்கள் எதிர்ப்பையும் மீறி கையகப்படுத்தி வருகிறது. நிலத்திற்கு உரிய இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்காமல் தமிழர்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதோடு சுற்றுச்சூழலையும் சீரழிக்கும் தமிழின விரோத என்.எல்.சி. நிறுவனம் தனது விரிவாக்கப் பணிகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் எதிர்ப்பை மீறி நிலங்களை கையகப்படுத்துவதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டு மக்களுக்கு சொந்தமான பழுப்பு நிலக்கரி வளத்தை இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் என்.எல்.சி. நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக கொள்ளையடித்து வருகிறது. மக்களிடம் போலியான வாக்குறுதிகளை அளித்து நிலங்களை பிடுங்கி, நிலத்திற்கு உரிய இழப்பீடுகள் வழங்காமலும், என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வழங்காமலும், மாற்று குடியிருப்பில் அடிப்படை வசதிகள் கூட வழங்காமலும் இதுநாள் வரை ஏமாற்றி வந்ததோடு, தற்போது மேலும் கொள்ளையடிக்க சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொள்கிறது. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தற்போது என்.எல்.சி. நிறுவனம் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான ஒன்றிய அரசின் இழப்பீட்டுக் கொள்கையின்படி நிலத்தின் சந்தை மதிப்பில்; நகர்புறமெனில் 2 மடங்கும், கிராமப்புறமெனில் 4 மடங்கும் அளிக்க வேண்டும். இதன்படி, ஒரு ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பு கடலூர் மாவட்டத்தில் கிட்டதட்ட 15-25 லட்சம் வரை குறைந்தபட்சமாக இருக்கக்கூடிய நிலையில், 4 மடங்கு இழப்பீடு தர வேண்டுமெனில் குறைந்த பட்சம் 1 கோடி வரை அளிக்க வேண்டும். ஆனால், என்.எல்.சி. நிறுவனம் ஒரு சில லட்சங்களை மட்டுமே அளித்து நிலத்தை கையகப்படுத்துகிறது. சாமானிய மக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய இழப்பீட்டை வழங்கமால் என்.எல்.சி. நிறுவனம் ஏன் ஏமாற்ற வேண்டும்? யாருக்காக இதனை என்.எல்.சி. நிறுவனம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதேவேளை, என்.எல்.சி.யின் வருடாந்திர வரவு செலவு அறிக்கையில் ஒன்றிய அரசின் நட்ட ஈட்டுக்கொள்கையின் அடிப்படையில் கொடுக்க வேண்டிய நிதியை ஏன் கொடுக்கவில்லை என்று கேட்கவும் இல்லை.
நிலங்களை வழங்குபவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து நிலங்களை பெற்றுக்கொண்ட என்.எல்.சி. நிறுவனம், அவர்களுக்கான நிரந்தர வேலைவாய்ப்பை இன்றுவரை உறுதிபடுத்தவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய கோரியும், நிரந்தரம் செய்யும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் 50,000 வழங்க கோரியும் தற்போதும் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவளை, என்.எல்.சி. நிறுவனத்தின் உயர் பதவிகள் அனைத்தும் நிரந்த பணிகளாக மாற்றப்பட்டு, அதில் வட இந்தியர்களை மட்டுமே பணியமர்த்துகின்றனர். நிரந்தர பணி இருக்கும் தமிழர்கள் விகிதம் மிகக்குறைவு. உச்சநீதிமன்றம் தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று கூறிய பிறக்கும் ஒப்பந்த தமிழர்கள் ஊழியர்களாகவே பணியமர்த்தப்படுகிறார்கள். மிக சொற்பமான சம்பளத்தில் தமிழர்கள் சுரண்டப்படுகிறார்கள். நிலங்களை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, வேலைவாய்ப்பின்றி உள்நாட்டு அகதிகளாக தமிழர்கள் மாற்றப்படுகின்றனர்.
இந்த சூழலில், சுரங்க விரிவாக்க பணிகளுக்கு மேலும் 197 ஏக்கர் தேவை என்றும், இல்லையென்றால் தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை வழங்க முடியாது என்று என்.எல்.சி. நிறுவனம் அச்சுறுத்துகிறது. உண்மையில், மின்மிகை மாநிலமான தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 15,000-18,000 மெகாவாட் எனும் போது, தமிழ்நாடு உற்பத்தி செய்வதோ 36000 மெகாவாட். அதில், என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கு 1600 மெகாவாட் மட்டுமே. 3400 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் என்.எல்.சி. அதனை ஏற்றுமதி செய்து பெரும் லாபத்தை அடைந்து வருகிறது. சிங்கரேணியில் எடுக்கப்படும் நிலக்கரிக்கு ரூ.1000 கொடுக்கப்படும் இடத்தில், நெய்வேலி நிலக்கரிக்கு ரூ.3000 கொடுக்கப்படுகிறது. இந்த விலை மின்சாரத்தின் மீது ஏற்றப்பட்டது தமிழர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழர்களின் வளத்தை கொள்ளையடிப்பதை விரிவாக்கவே மேலும் தமிழர்களை ஏமாற்றி நிலங்களை கையகப்படுத்த தற்போது முயற்சிக்கிறது.
உலகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை நோக்கி மாறிக்கொண்டிருக்கும் நிலையில், பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்து நெய்வேலி அனல் மின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி விரிவாக்கத்திற்கு திட்டமிடுவது அறிவார்ந்த செயல் அல்ல. தமிழர்களின் வளத்தை கொள்ளையடிக்க வேண்டும் அதன் மூலம் தேவைக்கும் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்து பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து பொருளீட்டுவது என்பதனையே நோக்கமாக கொண்டுள்ளது. இதனால் ஏற்படும் காலநிலை மாற்றம், சுற்றுப்புறச் சீர்கேடு குறித்த கவலை ஒன்றிய அரசிற்கு இல்லை. ஏனென்றால் இதனால் பாதிக்கப்பட போவது தமிழ்நாடும் தமிழர்களும் தானே என்று உள்ளது. இல்லையென்றால், பருவநிலை மாற்றம் குறித்த 2021 கிளாஸ்கோ மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரதமர் மோடி, நிலக்கரி பயன்பாட்டை இந்தியா படிப்படியாக குறைக்கும் என்று கூறிவிட்டு, நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்திருப்பாரா?
இவற்றையெல்லாம் ஆராயும் போது, தமிழர்களின் வளத்தை கொள்ளையடித்து தமிழர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து, தமிழர்களை பலிகடாவாக்கி வட இந்தியர்களை பயனடைய வைக்கும் என்.எல்.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்பட வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஆகையால், என்.எல்.சி. நிறுவன விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் எனவும், விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு என்.எல்.சி. நிறுவனத்திற்கு அனுமதியளிக்க கூடாது எனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தமிழர்களின் வளம் தமிழர்களுக்கே என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பணி நிரந்தரம் வேண்டி போராடும் தொழிலாளர்களின் போராட்டம் வெல்ல வேண்டுமென வாழ்த்துகிறோம். அவர்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் துணைநிற்கும். தொழிலாளர்களின் உரிமை காக்கவும், தமிழர்களின் வளம்-வாழ்வாதாரம் காக்கவும் மே பதினேழு இயக்கம் தொடர்ந்து போராடும் என உறுதிகூறுகிறோம். இதனை முன்னெடுத்து செல்ல அனைத்து ஜனநாயக முற்போக்கு அமைப்புகளுக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.
மே பதினேழு இயக்கம்
9884864010