இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரியம், மக்களை அடிமைப்படுத்த புகுத்தியிருந்த மூட நம்பிக்கை பிரச்சாரம், பெரியாரின் தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகளால் அஞ்சியது. ஒரு மனிதன் தன்னம்பிக்கை கொள்ள பகுத்தறிவும், சுயமரியாதையுமே முக்கியமானவை என விவரிக்கும் சொற்பொழிவுகள், பெரியாரால் வீதிகள் தோறும் நடந்தது. தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு அவையே உரமாக அமைந்தது.
மக்களிடையே சாதி, மதம், வேதம், சடங்கு, சாஸ்திரம், ஜோதிடம், ஜாதகம் எனப் பல வடிவங்களில் மூட நம்பிக்கைகளை திணித்த ஆரியத்தை, மக்களை தன்னம்பிக்கை அடைய விடாமல் தடுக்கும் இம்மூடத்தனங்களை வாழ்நாள் வரை எதிர்த்து களம் கண்டவரே பெரியார்.
மக்களிடையே சமத்துவமின்மையை வளர்க்கும், தன்னம்பிக்கையை குலைக்கும் மூடத்தனங்களின் அடித்தளமாக, கடவுள் எனும் முழுமுதற் மூட நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆய்ந்தறிந்த பிறகே, கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வந்தார் பெரியார். அவரை கடவுளை மறுத்தவர் என்கிற குறுகிய வட்டத்தில் அடைத்து, வெகு மக்களிடமிருந்து அந்நியப்படுத்த, அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பனியம் போராடுகிறது.
கடவுள் மறுப்புக்கு தான் வந்த நிலையை பெரியாரே தெளிவுபடுத்துகிறார். “கஷ்டப்படும் மக்களின் துன்பம் நீங்கி அவர்களுக்கு, அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவைகளில் உள்ள கட்டுப்பாடை உடைத்து விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பதே நமக்கு முக்கிய கவலை. நம்முடைய முயற்சிகளில், பல கடவுளையும், மதத்தையும் குறுக்கே போட்டு விட்டதால் தான், நாம் அதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டியதாயிற்றே ஒழிய, உண்மையில் கடவுளையும் மதத்தையும் பற்றிப் பேச வேண்டும் என்கின்ற அவசியத்தையோ, ஆசையையோ கொண்டு நாம் அதில் பிரவேசிக்கவில்லை” – என்று மக்களின் விடுதலையை நேசித்த காரணத்தால்தான், கடவுளை மறுத்ததாக எடுத்துரைத்த இந்த விளக்கங்களை வாசித்த எவரும் பெரியாரை இகழத் துணிய மாட்டார்கள்.
மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் போது, அது கடவுளின் படைப்பு எனும் போது, அந்தக் கடவுள், ஏன்? என்கிற கேள்விகளை மக்களின் சார்பாக நின்றே அடுக்கடுக்காய் தொடுக்கிறார்.
“அரசன் ஏன்? குடிகள் ஏன்? ஏழை – பணக்காரன் ஏன்? மேல் ஜாதி – கீழ் ஜாதி ஏன் ? உழைப்பாளி அடிமையும் – சோம்பேறி எஜமானனும் ஏன்? பிச்சைக்காரன் – பிரபு ஏன்? இந்தத் தன்மைகளை ஏற்படுத்தவும், நிலை நிறுத்தவும், பாதுகாக்கவும் அல்லாமல் கடவுளால் கண்ட பயன் என்ன?” – என வினா எழுப்பிய இந்த கேள்விகளுக்கு பின்னால் சமத்துவம் நோக்கிய அவரின் இலக்கே தெரிகிறது.
இந்த கேள்விகளுக்கு, இவை எல்லாம் முற்பிறவியில் செய்த பாவ-புண்ணியத்தினால் ஏற்பட்டவை என்று சொல்வதையே ஆன்மீகவாதிகள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட மகாவிஷ்ணு என்ற நபரும், முற்பிறவியில் செய்த பாவத்தினால்தான், மனிதர்கள் குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள் என்று பேசியதும், அதனை சுயமரியாதை உள்ள ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியர் எதிர்த்ததும் நடந்தேறியது.
முற்பிறவியில் செய்த பலனை, மனித ஆன்மா இறந்த பின்பு, அடுத்த பிறவியில் அனுபவிப்பது போல, மற்ற ஜந்துக்களின் ஆன்மாக்களும் இறந்த பிறகு பலனை அனுபவிக்கிறதா? என்பதே பெரியாரின் ஆன்மா குறித்த கேள்வியாக இருந்தது. இந்த கேள்விகள், பெரியாரைப் படித்திருந்தால் அந்த மாணவிகள், ஆசிரியர்களிடம் எழுந்திருக்கும். தன்னம்பிக்கை ஊட்டுவதாக பள்ளிக்கு வந்த போலியான பேர்வழியின் பேச்சுக்கு, மாணவிகள் கண்ணீர் விட்ட அவலமும் நடந்திருக்காது.
“ஆன்மா என்பது ஆகாயத்தில் தளவாடம் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோட்டை” என்று எளிமையான நயத்துடன் பெரியார் உணர்த்தி விட்டு,
“நல்ல காரியத்திற்கு நல்ல பயன், கெட்ட காரியத்திற்கு கெட்ட பயன், என்பது எழுதி வைத்தவனின், சொந்த அபிப்ராயமே தவிர, அதன் மூலமும், அத்தாட்சியும் யார் சொல்ல முடியும்? – என வினவுகிறார்.
கடவுள் மூடத்தனத்தைப் பின்தொடர்ந்து வந்து, தன்னம்பிக்கையை முற்றிலும் தகர்த்த மத மூடத்தனத்தை பற்றி எடுத்துரைக்கும் போது,
“ஒரு உடலில் கடவுளுக்கும், ஆன்மாவுக்கும் இடையிலான சம்மந்தத்தையே மதம் போதிக்கிறது என்றும், அதனால் மதம் மனிதருக்கு அவசியமென்று உலகில் உள்ள அனைத்து மதங்களும் பேசுகின்றன” – என மதத்தின் தோற்றம் குறித்து கூறுகிறார்.
அன்றைய அரசியல் சூழ்நிலையில், இந்து – முஸ்லிம் ஒற்றுமை இந்துத்துவவாதிகளால் சீரழிந்து, பிரிவினைக்கு காரணமானது, வட்ட மேசை மாநாடு பார்ப்பனீய சூழ்ச்சியினால் உடைந்து போனது, இந்து – முஸ்லீம் ஒருவரை ஒருவர் நம்பாமல் தனித்தொகுதி கேட்டது போன்ற பல சம்பவங்களைத் தொகுத்து, இவற்றிற்கு மதம் காரணம் இல்லை என யாரேனும் சொல்ல முடியுமா? என வினவுகிறார்.
அது போல அன்றைய நாடாளுமன்றத்தில் இருந்த இந்துத்துவ கும்பல் மூர்க்கமாக எதிர்த்து பின்வாங்க வைத்த இந்து சீர்திருத்த சட்டங்களான, குழந்தைத் திருமண தடைச் சட்டம், தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்களுக்கு விவாகரத்து உரிமை, மறுமண உரிமை சொத்துரிமை வழங்கும் சட்டங்கள் என பெண்களுக்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் யாவும், மதத்தின் பேரால் புறக்கணிக்கப்பட்டதை எடுத்துக் கூறுகிறார்.
“பெரும்பான்மையான மக்களால் அவசியம் என்றும், அறிவுக்கு ஏற்றது என்றும் கருதப்படும் அனேக விசியங்களைப் பற்றி சட்டங்கள் செய்யவோ, சட்டங்கள் செய்தாலும், அமலுக்கு கொண்டு வரவோ, தடையாய் இருந்து வருவதற்கு மதங்களே காரணமாக சொல்லப்படுகின்றதா இல்லையா?” – என இந்தியாவில் மத மூடத்தனம் விளைவித்த கொடுமைகளை எடுத்துச் சொல்கிறார்.
சாதிய மூடத்தனம், தன்னம்பிக்கை குலைக்கும் முதல் எதிரியாக, சமத்துவமின்மை பரப்பும் கிருமியாக சமூகத்தில் மண்டிக் கிடக்கிறது. சாதிய இறுக்கத்தினால் உரிமை மறுக்கப்பட்ட சமூக மக்கள் மேலெழும்ப, சமூக ரீதியான வகுப்புரிமையே தீர்வு என்று மக்களைப் பற்றி சிந்தித்தே, காங்கிரசில் இருந்து நீங்கினார் பெரியார். சாதியைப் பாதுகாக்கும் சட்ட எரிப்பு போராட்டம் நடத்தி கைதானார். சாதித் தொழில் செய்வதற்கான குலக்கல்வி திட்ட எதிர்ப்பை சமரசமின்றி செய்தார். சாதியொழிப்பு மாநாடுகளை நடத்தி, தீர்மானங்கள் இயற்றினார். சாதி ஒழிப்பு சுயமரியாதை திருமணங்கள் நடக்க காரணமானார்.
வேதம், மனுதர்மம், ஆகமம், வர்ணம் எனப் பல வடிவங்களில் சனாதனம் நிலைநிறுத்திய சாதிய மூடத்தனத்தை பற்றிக் கொண்டு, மேலாதிக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது பார்ப்பனியம், இதனைத் தக்க வைக்கவே, இந்தியாவில் ஒற்றுமை உணர்வு வேண்டும் என பாசாங்கு பேசிய பார்ப்பன அரசியல்வாதிகளை நோக்கி, “நீ பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்கிறாய், என்னைக் காலில் பிறந்தவன் என்கிறாய், இந்த லட்சணத்தில் நான் உன்னோடு இணைந்தே இருக்க வேண்டும் என்று பலவந்தப்படுத்துகிறாய்” – என சாடுகிறார். சாதி ஒழிப்பின்றி சமூகம் முன்னேறாது, சூத்திரப் பட்டம் ஒழியாது என தனது இறுதிப் பேருரை வரை பேசினார்.
நரகமும், மோட்சமும் மூடத்தனத்தின் மொத்த குத்தகையாக, தன்னம்பிக்கையை முற்றிலும் அகற்றுவதற்காக மக்களிடம் பரப்பப்பட்டது. அவற்றை பணம் பறிப்பதற்கு புரோகிதர்களால் கட்டப்பட்ட கற்பனை உலகம் என்கிறார் பெரியார். ”சிறு குழந்தைகளுக்கு பூச்சாண்டி வருவதாக பயமூட்டி ஏமாற்றுவதைப் போல, புரோகிதர்கள் நரகத்தை காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். மிட்டாய், சாக்லேட் வாங்கி தந்து, தங்களது வழிக்கு திருப்புவதைப் போல மோட்சத்தை காட்டி மக்களிடம் பணம் பறித்து வருகிறார்கள்” என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார்.
“முதலாளிகள் தொழிலாளிகளையும், அரசன் குடிகளையும், எஜமான துரோகம், ராஜ துரோகம் செய்தால் நரகத்திலே விழுந்து கிடப்பாய் என்று மிரட்டி, அவர்களுக்கு தங்களின் நியாயமான உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் உதிக்காமலே ஏமாற்றி விடுவதற்கு பேராயுதமாய் நரகம் விளங்கி வருகிறது” – எனத் தெளிவூட்டி, மோட்சம், பேராசையின் பிரதி பிம்பம், நரகம் அடிமைத்தனத்திற்கும், பயத்திற்கும் பிரதி பிம்பம் என எடுத்துக் காட்டுகிறார். “சிறிதளவாவது மனிதன் இயற்கையின் இன்பத்தை நுகர வேண்டுமானால், மற்ற எல்லாவற்றையும் விட மனிதனுக்கு விதி, கர்மபலன் என்பதான உணர்ச்சிகள் கண்டிப்பாய் ஒழிய வேண்டும்” – என நரகம் – மோட்சம் மேல் கட்டப்பட்ட மூடத்தனத்தை விளக்குகிறார்.
சோதிடம் – ஜாதகம் வழியாகப் பரவும் மூடத்தனத்தைப் பற்றி கூறுகையில், “மனிதன் அவன் செய்யும் காரியங்கள் எல்லாம் ஜாதகப் பலன்படியும், ஜாதகப் பலன்கள் எல்லாம் விதிப்படியும், விதியெல்லாம் முன்ஜென்ம கர்மத்தின் பலன்படியும் நடப்பதாய் இருக்கையில், பாவ புண்ணியம் என்ற பாகுபாடும், நற்செய்கை, துர்செய்கை என்கின்ற பெயரும் எப்படி பொருந்தும்? மோட்சத்திற்கும் நரகத்திற்கும் அவசியம்தான் ஏது? அது எதற்காக இருக்க வேண்டும்? கடவுள் தான் ஆகட்டும், இந்த செய்கைகளுக்கு தீர்ப்புகளோ, விசாரணையோ, சன்மானமோ, தண்டனையோ எப்படி செய்ய முடியும்? என்பதை எல்லாம் யோசித்தால் ஜோதிடம் என்பதாக ஒன்று இருக்க முடியுமா?” என கேட்கிறார்.
சிலர் ஜோசியத்திற்கும், கடவுளுக்கும் சம்பந்தமில்லை, ஜோசியம் விஞ்ஞானப்பூர்வமானது, பிறந்த நேரம், நட்சத்திரம், கிரகம் பொருத்தது என்று பேசுகிறவர்களுக்கும் பெரியார், “சிலரது பேராசையும், மூடநம்பிக்கையும், அவர்களது மதக் கொள்கைகளையும், பகுத்தறிவையும் பறக்கச் செய்து விடுகிறது” – என கடவுளை நம்பாதவர்கள் கூட ஜோதிடத்தை நம்புவது என்பது பேராசையின் வெளிப்பாடு என அம்பலப்படுத்துகிறார்.
பெரியார் மூடத்தனங்களை வெளிச்சம் போட்டு காட்டியதில் இருந்து தொகுக்கப்பட்ட சில புரிதல்களே இவை. ஆயிரமாயிரம் பக்கங்களில் எழுதியும், தெருத்தெருவாக பேசியும் இந்த மூடத்தனங்களை அம்பலப்படுத்தினார், இவை மட்டுமில்லாமல், இன்னும் சடங்குகளாக, சம்பிரதாயங்களாக, சகுனங்களாக பெருகிக் கிடந்த மூட நம்பிக்கைகளை விரட்ட இறுதி வரை ஓடிக் கொண்டே இருந்தார் பெரியார்.
மனிதர்களிடம் தன்னம்பிக்கை வளர சுயமரியாதையும், பகுத்தறிவும் மேம்பட வேண்டும் என்பதை பெரியார், “மனிதன் கீழ்மை நிலையிலிருந்து மேம்பாடு அடைய வேண்டுமானால், முதலாவது தன்னம்பிக்கை உடையவனாகவும், தனது சக்தி என்ன என்பதை உணர்ந்தவனாகவும் இருக்க வேண்டும். இன்று மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லை, தன்னை, தான் நடத்துவதாக அவன் நினைப்பதில்லை, தனது காரியத்துக்குத் தானே பொறுப்பாளி என்பதில் நம்பிக்கை இல்லை. மனிதன் தான் கற்பித்துக் கொண்ட கடவுளையும், கடவுள் கட்டளையையும், கடவுள் சிந்தத்தைத்தையும் வெகு குளறுபடி ஆக்கிக் கொண்டான்” – என்கிற பெரியாரின் தத்துவ விளக்கமே ஆண்களுக்கும், பெண்களுக்கும், எவருக்கும் எக்காலமும் பொருந்தக் கூடியது.
ஆனால் இன்று பார்ப்பனர்களும், இந்துத்துவ அடிவருடிகளும், பல தளங்களிலும் தன்னம்பிக்கை என்ற முகமூடியில் ஒளிந்து கொண்டு மூட நம்பிக்கையை மக்களிடம் நுழைத்து வருகிறார்கள். இந்த ஆன்மீக வியாபாரிகள் பெண்களை இலக்காகக் கொண்டே செயல்படுகிறார்கள். பெண் விடுதலையே சமூக விடுதலை என்றார் பெரியார். பெரியாரின் வீரியமான சிந்தனைகளில் வளர்ச்சியடைந்த பெண்ணினத்தின் தன்னம்பிக்கையை குலைத்து, மூடத்தனத்திலேயே மூழ்கியிருக்கச் செய்யவே ஆன்மீகக் கூடாரங்கள் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்னும் பெயரில் கடை விரிக்கின்றன. சென்னையின் பெண்கள் பள்ளியில் மகாவிஷ்ணு என்னும் முட்டாள் பேர்வழி, தன்னம்பிக்கை பெயரில் மூடத்தனங்களை பரப்பியது இதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது.
பெரியார் வகுத்து வைத்து திராவிடக் கருத்தியலே மனிதரிடம் இருந்து மூட நம்பிக்கைகளை விலக்கி தன்னம்பிக்கை ஊட்டியது.
சமூக உளவியலில், புழுதிகளாக கிடக்கும் எண்ணங்களின் வேர்க்காரணம் வரை அறிந்து, தன்னம்பிக்கை ஊட்டும் சொற்பொழிவுகளால் சுத்தப்படுத்தியது.
உலக மக்களே குத்தகையெடுத்த மூட நம்பிக்கைகளை, அணு அணுவாய் துளைத்து அறிவுப் பூர்வமாக, அறிவியல் வழியாக, ஆதாரங்கள் ஊடாக விளக்கிய சொற்பொழிவாளரே பெரியார். மூட நம்பிக்கைகள் ஒழிந்து, தன்னம்பிக்கை பெற்று முன்னேறும் வழிகளைத் தேட மனித சமூகம் முதலில் நாட வேண்டியவர் பெரியார்.