அம்பலமான காவி பயங்கரவாதம்

பாரதிய ஜனதா கட்சி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின்னால் உள்ள மர்மங்களை உடைத்திருக்கிறார் பல்லாண்டுகளாக ஆர்எஸ்எஸ்-இல் உறுப்பினராக இருந்த ஒரு நபர். இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளான ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிசத் போன்ற சங்பரிவாரக் கும்பல்கள் பாஜக-வை வெற்றி பெற வைக்கும் நோக்கத்திற்காக பல இடங்களில் குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நடத்தியதாக ஆர்எஸ்எஸ்-இன் முன்னாள் உறுப்பினர் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் குண்டு வெடிப்புக்கு திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் நபர்களுக்கு ஜம்முவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களே ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும் அதிர்ச்சிகரமான செய்தியை தெரிவித்திருக்கிறார் அவர்.

ஆர்எஸ்எஸ்-இன் உறுப்பினராக 1990 முதல் இருந்தவர் யசுவந்த் சிண்டே. இவர் 2022, ஆகஸ்ட் 29 அன்று மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தின் நீதிமன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் ஆர்எஸ்எஸ் மீது பல தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், 2006-ம் ஆண்டு விசுவ இந்து பரிசத் அமைப்பின் இளைஞர் பிரிவான பஜ்ரங்கள் அமைப்பைச் சார்ந்த இருவர், மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியைத் தாக்க வெடிகுண்டு தயார் செய்த போது தவறுதலாக வெடிகுண்டு வெடித்ததால் இறந்தனர். இறந்த இருவரில் ஒருவரான இமான்சு பான்சே என்பவரோடு இந்துத்துவ சுற்றுச்சூழல் பிரிவில் சேர்ந்து பயணித்ததால் தனக்கு இது தெரியும் என்று யசுவந்த் சிண்டே கூறியுள்ளார்.

யசுவந்த் சிண்டேவின் பிரமாணப் பத்திரம்

1999-ஆம் ஆண்டில், ஆர்எஸ்எஸ்-இன் மூத்த நிர்வாகியான இந்திரேசு குமாரின் அறிவுறுத்தலின் பேரில், யசுவந்த் சிண்டே, இமான்சு பான்சேவையும் அவரது ஏழு நண்பர்களையும் ஜம்முவிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் இந்திய ராணுவ வீரர்களிடம் நவீன ஆயுத பயிற்சி பெற்றனர் என்றும் வாக்குமூலத்தில் சிண்டே பதிவு செய்கிறார்.

அதன் பின் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2003-இல், அவரும் பான்சேவும் புனேவில் உள்ள சிங்காட் அருகே நடைபெற்ற வெடிகுண்டு பயிற்சி முகாமில் கலந்துகொண்டதாகவும், பயிற்சிக்குப் பிறகு பான்சே மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் மூன்று குண்டுவெடிப்புகளை நடத்தியதாகவும், அவுரங்கபாத் மசூதியில் பெரிய அளவு குண்டுவெடிப்பு நடத்த இருந்த நிலையில் தான், தவறுதலாக குண்டு வெடித்து இருவர் இறந்ததாகவும் கூறுகிறார்.

முகாமில் நடந்ததாக சிண்டே கூறிய வாக்குமூலம்:

இந்திய இராணுவத்திடம் நவீன ஆயுத பயிற்சி பெற்ற பிறகு, புனேவில் வெடிகுண்டு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட போது நடந்த பயிற்சிகளை சிண்டே பின்வருமாறு கூறுகிறார்.

“காலை 10 மணிக்கு முகாமுக்கு வரும் பயிற்சியாளரான மிதுன் சக்கரவர்த்தி இரண்டு மணி நேரம் வெவ்வேறு குழுக்களாக பயிற்சியை நடத்துவார். பயிற்சியாளர்களுக்கு வெடிகுண்டுகளை தயாரிப்பதற்காக 3-4 வகையான வெடிமருந்துகள், குழாய் துண்டுகள், கம்பிகள், பல்புகள், கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன. பயிற்சிக்குப் பிறகு, ஏற்பாட்டாளர்கள் பயிற்சியாளர்களை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஒரு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதிக்கு வெடிகுண்டுகளை பரிசோதிப்பதற்காக அழைத்துச் செல்வார்கள். பயிற்சி பெறுபவர்கள் ஒரு சிறிய குழி தோண்டி, அதில் வெடிகுண்டை டைமர் வைத்து, அதை மண் மற்றும் பெரிய பாறைகளால் மூடி வெடிகுண்டை வெடிக்கச் செய்வார்கள்.”

“இந்த முகாமின் முக்கிய அமைப்பாளரான மிலிண்ட் பரண்டே என்பவர், இவர் தற்போது தற்போது விசுவ இந்து பரிசத்தின் தேசிய அமைப்பாளராக உள்ளார். முகாமில் முக்கிய பயிற்றுவிப்பாளராக மிதுன் சக்ரவர்த்தி என்ற புனைப் பெயருடைய ரவி தேவ் [ஆனந்த்] – அவர் இப்போது விசுவ இந்து பரிசத்தின் உத்தரகாண்ட் பிரிவுக்கு தலைவராக இருக்கிறார்.”

என வாக்குமூலம் அளிக்கிறார் சிண்டே.

1998-ல் யசுவந்த் சிண்டே, இந்திரேசு குமார் மற்றும் மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் சிறீகாந்த் ஜோசி

சிண்டே தனது பிரமாணப் பத்திரத்தில் குற்றம்சாட்டிய பெரும்பாலானவை, இந்த வழக்கில் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாகும். 2003-ஆம் ஆண்டு மிதுன் சக்கரவர்த்தி என்ற நபரிடம் பைப் வெடிகுண்டுகளை தயாரிப்பதில் பயிற்சி பெறுவதற்காக பான்சே புனே நகரத்தின் சிங்காட் பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு சென்றதாக குற்றப்பத்திரிகையிலும் கூறப்பட்டுள்ளது. ஆனால், 2013-இல் வழக்கை எடுத்துக் கொண்ட மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இந்த குண்டு வெடிப்பு எந்த அமைப்பின் தொடர்புமற்று தன்னிச்சையாக நடந்தது என்றே கூறியது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு தயாரிக்கும் முகாமில் இருந்த மற்ற நபர்களில், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகேஷ் தவாடேவும் இருந்தார். 2000-களில் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் மற்றும் 2008-இல் மாலேகான் குண்டுவெடிப்புகள் உட்பட 2000-களில் நாட்டில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்கள், நாந்தேட் குண்டுவெடிப்பின் அதே சதியில் இருந்து உருவானவை என்று சிண்டே பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

மாலேகான் குண்டுவெடிப்பு:

கடந்த 2006-ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முஸ்லீம்கள் அதிகம் வாழும் மாலேகான் பகுதியில் மோட்டார் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 7 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்துத்துவ ஊடகங்களும், இந்துத்துவ மதவெறி அமைப்புகளும் இஸ்லாமிய தீவிரவாதிகள் சதி என்று செய்திகளை பரப்பின. அப்பாவி இஸ்லாமியர்கள் பலர் அடாவடியாக கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படைக்கு (ATS) மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு மாற்றப்பட்டது. அதன் தலைவராக அப்பகுதி மக்களால் நேர்மையாளர் எனப் போற்றப்பட்ட ஹேமந்த் கர்கரே நியமிக்கப்பட்டார். அவரின் விசாரணையின் போது தான் அந்த மோட்டார் பைக் அபினவ் பாரத் அமைப்பை சார்ந்த பிரக்யா தாகூர் என்றும் காவி பெண் சாமியாருடையது என்று கண்டறியப்பட்டது. மேலும், இதில் இராணுவத்தில் புலனாய்வுப் பிரிவில் பணிபுரிந்து பின்னர் நாசிக் அருகில் போன்ஸ்லா என்ற இடத்தில் இராணுவக் கல்லூரி நடத்திக் கொண்டிருந்த சிறீகாந்த் புரோகித் என்பவரும் சம்பந்தப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார் கர்கரே.

சிறீகாந்த் புரோகித் மற்றும் பிரக்யா தாகூர்

புரோகித் வெடிகுண்டுகள் தயாரிப்பது, வெடி மருந்துகளை கையாள்வது போன்ற பயிற்சிகளை இந்துத்துவவாதிகளுக்கு அளித்தவர். இந்தப் பள்ளியில் நடைபெற்ற விசாரணையில், அங்கு பயிற்சியளித்த 1000-க்கும் மேற்பட்டவர்களை இந்தியாவின் முப்படைகளிலும் சேர்த்து விட்டிருப்பதாக பயிற்சியாளர் கூறியது குறிப்பிடத்தக்கது. தீவிர விசாரணையில் மேற்கொண்ட பல சாட்சிகளின் அடிப்படையில் 2008-ல் 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக ஆட்சிக்கு வந்ததும் இவர்கள் குற்றமற்றவர்களாக தீர்ப்பு சொல்லப்பட்டு வெளிவந்தனர்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கினை நடத்துவதில் உயிர் நாடியாக இருந்தவர் ஹேமந்த் கர்கரே. இவர் 2008 மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்டது பலத்த சந்தேகங்களை எழுப்பியது. ஆனால் எந்த வித விசாரணைகளும் இன்றி இவரின் மரணம் மர்மமாகிப் போனது.

சம்ஜவ்தா அதிவிரைவு ரயில் குண்டுவெடிப்பு:

சம்ஜவ்தா அதிவிரைவு ரயில் தில்லி மற்றும் பாகிஸ்தான் இடையே இயக்கப்படுகிறது. இந்த சம்ஜவ்தா ரயிலில் 2007-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பின் போது 68 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். இந்துத்துவ அடிப்படைவாதிகளும், உயர்சாதி ஊடகங்களும் எப்போதும் போல இஸ்லாமியர்களின் சதி என்று கதறின.

ராய் என்பவரின் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு (SIT) ரயிலில் செய்த சோதனையில் இரண்டு வெடிக்காத வெடிகுண்டுகள் பெட்டியில் இருப்பதைக் கைப்பற்றினர். தடயங்கள் அடிப்படையில் இந்தூரில் உள்ள ஒரு கடையில் விசாரித்ததில் அந்தப் பெட்டியை இரண்டு பேர் வந்து வாங்கியதாக தெரிவித்தனர். அவர்கள் இந்துக்கள் தான் என்றும் கூறினர். மேலும் SIT ஆய்வு செய்ததில் வெடிகுண்டின் ஒவ்வொரு பாகமும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரிலிருந்து தான் வாங்கப்பட்டிருப்பதாகவும் கண்டுபிடித்தனர்.

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை நடத்தியதில் இந்துத்துவாதிகளான சாமியார் அசீமானந்தா, சுனில் ஜோஷி, லோகேஷ் சர்மா, சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்ரா, ராஜீந்தர் சவுத்ரி மற்றும் கமல் சௌஹான் ஆகியோர் குற்றவாளிகளென அறியப்பட்டது. சாமியார் அசீமானந்தா ஒப்புதல் வாக்குமூலமே அளித்தார். இவை அனைத்தும் குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு (NIA) தவறிவிட்டதாக நீதிமன்றம் தீர்ப்பு கூறி இவர்களை 2019-ம் ஆண்டு விடுதலை செய்தது.

அசீமானந்தா நடத்திய குண்டுவெடிப்புகள்

ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு:

கடந்த 2007 மே 18-ஆம் தேதி ஐதராபாத் மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர். காவலர்கள் மசூதிக்கு வெளியே நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர்.

இந்து அமைப்பைச் சேர்ந்த சாமியார் அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று மத்திய புலனாய்வுத் துறை குற்றம் சாட்டியது. இந்த குண்டுவெடிப்பையும் சாமியார் அசீமானந்தா ஒப்புக் கொண்டார். உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லையென இதிலும் அனைவரும் 2018-ல் விடுதலை செய்யப்பட்டனர்.

ராசஸ்தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு 2007-ம் ஆண்டு நடந்தது. ரம்ஜான் நோன்பு திறப்பு வேளையில் நடந்த குண்டுவெடிப்பில் 3 இஸ்லாமியர்கள் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர். இதில், சாமியார் அசீமானந்தா உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த இந்த வழக்கின் தீர்ப்பில், சாமியார் அசீமானந்தா உள்ளிட்ட 7 பேரை விடுவித்தது ஜெய்பூர் சிறப்பு நீதிமன்றம்.

இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளில் சாமியார் அசீமானந்தா, பிரக்யா தாகூர், இராணுவ முன்னாள் அதிகாரி புரோகித் உட்பட பல இந்துத்துவ நபர்களின் தொடர்புகளை ஆதாரத்துடன் தீவிரவாதத் தடுப்புக் படையின் (ATS) தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே ஒரு சில நாட்களில் கொண்டு வருவதாகக் கூறினார். ஆனால் அதற்குள் நவம்பர் 26, 2008 அன்று மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என சிறப்பு விசாரணை அதிகாரியான (SIT) ராய் பத்திரிக்கைகளிடம் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத தடுப்புப் படையின் (ATS) சான்றுகள்:

ஐதராபாத் மெக்கா மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில், குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்த செல்போனும், அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதே முறையில் தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. பேட்டரிகளும் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட ஒரே வகையான பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது. குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இந்த தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் குண்டுவெடிப்புகள் அனைத்திலும் காவி மதவெறி பயங்கரவாத கும்பல் ஈடுபட்டுள்ளதென தீவிரவாத தடுப்புக் குழுவினர் கூறினர்.

ஹேமந்த் கர்கரே மரணம் பற்றிய மர்மங்கள்:

ஹேமந்த் கர்கரே

தீவிரவாதத் தடுப்புக்குழுவின் தலைவராக இருந்து, காவித் தீவிரவாதிகளின் வலைப்பின்னலை கண்டறிந்து, 4,000 பக்க குற்றப் பத்திரிக்கையை உருவாக்கியவர் ஹேமந்த் கர்கரே. இவரின் விசாரணை காவித் தீவிரவாதத்தின் அடி வேர் வரை சென்றது. இதனால் நச்சினை விதையாகக் கொண்டு வளர்ந்து நின்ற ஆர்எஸ்எஸ் ஆட்டம் கண்டது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சியைப் பிடிக்க, உயர்சாதி ஊடகங்கள் என்னும் கைப்பாவையுடன் சேர்ந்து இஸ்லாமியத் தீவிரவாதம் எனக் கட்டமைக்க நினைத்ததைக் கண்டறிந்து காவித் தீவிரவாதிகளைக் கையும் களவுமாக பிடித்தார் ஹேமந்த் கர்கரே. இதனால் தான் இவரின் மரணம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

பிராமினிஸ்ட்டுகள் குண்டு வைத்தார்கள் – முஸ்லிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்:

மராத்திய காவல் துறை அதிகாரியாக இருந்த எஸ்.எம்.முஷ்ரிஃப் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் பார்ப்பனியத்தின் கைவண்ணமே என்பதை தனது “பிராமினிஸ்ட்டுகள் குண்டு வைத்தார்கள் – முஸ்லிம்கள் தூக்கிலிடப்பட்டார்கள்” என்ற புத்தகம் வாயிலாக தெளிவுபடுத்துகிறார். இவர் “கார்கரேவைக் கொலை செய்தது யார்?”, ” இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு ” போன்ற புத்தகங்களை எழுதியவர்.

எஸ்.எம்.முஷ்ரிஃப்

பல நூறு குற்றப்பத்திரிக்கைகளையும், அந்தந்த குண்டுவெடிப்பு காலகட்டங்களில் வெளிவந்த பத்திரிக்கைகளையும் ஆய்வு செய்து, 2002 முதலே நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகள் யாவும் ஆர்.எஸ்.எஸ், அபிநவ் பாரத், பஜ்ரங்கள், ஜெய் வந்தே மாதரம், சனாதன் சாஸ்தா ஆகிய பார்ப்பனிய அமைப்புகளின் கைவண்ணமே என்று இந்த புத்தகத்தில் நிரூபிக்கிறார். மத்திய உளவுத்துறை (IB) தேசிய புலனாய்வு முகமை (NIA) ஊடகங்கள் போன்றவை பார்ப்பனியம் செய்த குண்டு வெடிப்புகளை சுலபமாக முஸ்லிம்களின் மீது போடுவதற்கு துணை நின்றதையும் விளக்குகிறார். ஊடக செய்திகளால் ஆட்கொள்ளப்பட்டே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியதாகவும் ஆதாரத்துடன் விளக்குகிறார்.

இந்த குண்டுவெடிப்பு வழக்குகள் அனைத்தும் 2014-க்குப் பிறகான மத்திய புலனாய்வுப் பிரிவின் கைக்குள் வந்ததும், வெடிகுண்டு கலாச்சாரத்தை நிறுவிய காவித் தீவிரவாதம் என்பது இஸ்லாமியத் தீவிரவாதமாக மாற்றப்படும் போக்கும் தீவிரமடைந்தது. இந்தத் தொடர் குண்டுவெடிப்புகள் சம்பந்தமான எந்த வழக்கிற்கும் எதிராக NIA மேல் முறையீடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் இயக்கமும், அதன் கிளை அமைப்புகளும் ஆரம்பித்து வைத்த வெடிகுண்டு கலாச்சாரத்தால் தான் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்பதையே மாலேகான் குண்டுவெடிப்பிலிருந்து தொடர்ச்சியாக நடந்த குண்டுவெடிப்புகள் ஊடாக அறிய முடிகிறது. அதனை சிண்டே போன்றவர்களின் வாக்குமூலமும் உறுதியாக்குகிறது. பெரும் பனிப்பாறையின் ஒரு முனை அளவு உண்மை தான் வெளியாகி இருக்கிறது. பார்ப்பனீய மேலாதிக்கத்தினை புதுப்பித்துக் கொண்டு, மனிதர்களை சமத்துவமற்ற பாதையில் இழுத்துச் செல்லும் சனாதன தர்மத்தை அரசியல் சட்டமாக மாற்றும் வஞ்சகமான ஒன்றே இந்து ராச்சியம். அரசியல் அதிகாரத்திற்கு பார்ப்பனியமும், பொருளாதார ஆதிக்கத்திற்கு பனியா, மார்வாடி, குஜராத்தி போன்ற வட இந்திய நிறுவனங்களும் எதிர்பார்த்திருந்த பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதற்காக ஆர்எஸ்எஸ் வன்முறைக் கும்பல் குண்டு வெடிப்புகளின் ஊடாக உதவி செய்திருக்கிறது. அதற்கு இஸ்லாமியர்களை பலியாக்கியதோடு, மொத்தப் பழியையும் அவர்கள் மீதே போட்டு அப்பாவி இந்துக்களின் மனதில் நஞ்சினை விதைத்திருக்கிறார்கள் இந்த அயோக்கியர்கள். இவர்களின் கொடூரங்களை உயிருக்கும் அஞ்சாது வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்எஸ்எஸ்-சின் முன்னாள் உறுப்பினரான சிண்டே.

இந்துக்களின் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் முகத்திரையை விலக்கி, உண்மையான முகமான காவி பயங்கரவாதிகள் என்பதை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். ஆர்.எஸ்.எஸ் என்னும் இந்துத்துவ கலவரக் கிருமியிடமிருந்து பரவும் மதவெறி நோய்த்தொற்றிலிருந்து இந்துவாக்கப்பட்ட அப்பாவி மக்களை காப்பாற்ற ஜனநாயக சக்திகள் வீரியமான தடுப்பு மருந்துகளாக மாற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »