காவல்துறை மற்றும் நீதித்துறையால் நடத்தப்படும் வன்முறை:
நாட்டில் கிட்டத்தட்ட 80% தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் புகாராக பதிவு செய்யப்படுவதில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக களத்தில் வேலை பார்க்கும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதற்கான காரணம் பெரும்பாலான வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் செய்தவர்களாலும், அவர்களின் ஆதரவளர்களாலும் தடுக்கப்படுகிறார்கள். அல்லது ‘சாதி பஞ்சாயத்து’களின் மூலம் தலித் பெண்களுக்கு எதிரான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இவற்றையெல்லாம் தாண்டி, பாலியல் வன்கொடுமை பற்றிய புகாரினைக் கொடுக்கச் சென்றாலும், தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினைச் சேர்ந்த பெண்கள் காவல்துறையாலும் நீதித்துறையாலும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வாரி தேவி என்பவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், அவர் புகாரளிக்க காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது,‘நிறையப் பெண்கள் பொய்யான புகார்களைத் தெரிவிக்கிறார்கள்’, என்றிருக்கிறார் காவல்துறை துணை கண்காணிப்பாளர். அவர் உடலில் இருக்கும் காயங்களைக் காட்டியபோது, ‘மேடம், உங்களுக்கு பாலியல் வன்கொடுமைக்கு அர்த்தம் தெரியுமா?’ என்று கேட்டிருக்கிறார் அதே அதிகாரி.
உயர்நீதிமன்றமோ, “நடுத்தர வயதைச் சேர்ந்தவர்கள் பாலியல் வன்கொடுமையினைச் செய்யமாட்டார்கள். அது பெரும்பாலும் பதின்வயது ஆண்களால் செய்யப்படுவது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்; அதில் ஒரு பார்ப்பனரும் இருப்பதால், [பன்வாரி தேவி] பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்று சொல்ல முடியாது. ஏனெனில், பன்வாரி ஒரு தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்” என்றது. அதாவது, உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை ’தீண்டத்தகாதவர்களாக’ பார்ப்பார்கள் என்ற சாதிய-சமூக கோட்பாட்டினை வைத்து, பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்ற தீர்ப்பினை வழங்கியது நீதிமன்றம்!
ராஜஸ்தானில் செல்வாக்குமிக்க இனமாகக் கருதப்படும் குஜ்ஜர் இனத்தை சேர்ந்த பிரிவினர் கிராமத்தில் வசதியானவர்கள். இச்சமூக மக்கள் சிறு வயதிலேயே திருமணம் செய்வது ராஜஸ்தான் மாநிலத்தில் பாரம்பரியமான வழக்கம் கூட, எனவே அந்த இனத்தை சேர்ந்த ஒன்பது மாத பெண் குழந்தைக்கு நடைபெறவிருந்த திருமணத்தை பன்வாரி தேவி தடுத்து நிறுத்தினார், அந்த கோபத்தின் காரணமாய் உயர் சாதியை சேர்ந்த அண்டை வீட்டாரால் பன்வாரி தேவியை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு 1992 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 -ஆம் நாளன்று ஆளாக்கப்பட்டார், சுமார் 30 ஆண்டுகாலமாக நீதிக்கான சட்டப்போராட்டதைக் நடத்திக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
மராட்டிய மாநிலத்தின் உள்ள கயர்லாஞ்சி வன்கொடுமை சம்பவத்தில் புகாரினைப் பதிவு செய்யவே 500 ரூபாய் லஞ்சம் தர வேண்டி இருந்திருக்கிறது. மேலும், அப்போதும் புகார் பதிவு செய்யப்படாமல், பல மணி நேரம் குடும்பத்தை இழந்த தந்தை காக்க வைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில், 2008 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், 6 பேருக்கு தூக்குதண்டனையும், இருவருக்கு 25 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆயுள் தண்டனையும் வழங்கியது. பின்னர், மேல்முறையீடுகளுக்குப் பிறகு 6 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையும் 25 வருடங்களுக்கு குறையாமல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதில் இன்னும் துயரமான விடயம் என்னவென்றால், ஒரு கிராமமே இணைந்து நடத்திய வன்முறையில் சாதிய ஒடுக்குமுறை கோணம் இல்லை என்று நீதிமன்றங்கள் தெரிவித்ததுதான்.
லாலசா தேவி வழக்கில் ஒரு காவல்துறை உயரதிகாரி, ‘இப்படியான வயதானப் பெண்ணை எப்படி பாலியல் வன்கொடுமை செய்வார்கள்?’ என்று கேட்டிருக்கிறார். அதே உயரதிகாரி ‘வழக்கினை திரும்பப் பெற்றால், ஒரு லட்சம் லஞ்சமாக குற்றவாளியின் சார்பில் தரப்படும்’ என்று லாலசாவின் தரப்பில் பேசி, தரகு வேலையில் ஈடுபட்டது கேமராவில் ரெக்கார்ட் செய்யப்பட்டு அது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியது. மேலும், குற்றவாளியின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ‘தலித் சமூகத்தைச் சேர்ந்த லாலசா தேவி ஆதாயத்துக்காக இந்த வழக்கினைத் தொடர்ந்திருப்பதாக’ நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறார்.
உத்திரப்பிரேதசாத்திலுள்ள மதுரா பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் “அந்த பெண் இதற்கு முன்பே பாலியல் உறவு கொண்டிருந்ததால், இந்த வழக்கில் அந்த பெண்ணின் சம்மதத்துடன்தான் காவலர்கள் பாலியல் உறவு கொண்டிருக்க முடியும்” என்று கூறி குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றம்.
பாலியல் வன்கொடுமை பற்றி தலித் பெண்கள் புகார் கொடுக்கச் சென்றால் அவர்களது நோக்கம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தலித் பெண் இறந்துவிட்டால், பிரேத பரிசோதனையானது அவசர அவசரமாக மருத்துவ உதவியாளர்களால் செய்யப்படுகிறது. அப்படியான பிரேத பரிசோதனை அறிக்கையானது ஒன்று குற்றவாளிகளுக்கு சாதகமாகவோ அல்லது தெளிவில்லாத அறிக்கையாகவோ கொடுக்கப்படுகிறது. ஹாத்ராஸ் மற்றும் கயர்லாஞ்சி கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தடவியல் அறிக்கை கையாளப்பட்ட விதம் இதற்கான சான்று.
‘குற்றவாளிக்கு வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் சாதி தெரியாது; வழிகெட்டு தவறாக செய்துவிட்டார்கள்; பழிவாங்குவதற்காக செய்யப்பட்டது’ என்ற மாதிரியான காரணங்களைச் சொல்லி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இந்த வழக்குகளில் பதிவு செய்யப்படுவதில்லை. Swabhiman Society என்ற குழுவால் 2009 முதல் 2020 ஆம் ஆண்டு வரை ஹரியானாவில் நடத்தப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வின்படி இது போன்று தலித் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை வழக்குகளில் 23.3% வழக்குகளில் மட்டுமே நீதிமன்றத்தால் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், மதுரா வன்கொடுமைச் சம்பவம், சிதம்பரம் பத்மினி பாலியல் வன்கொடுமை சம்பவம், வாச்சாத்தி வன்கொடுமை சம்பவம் போல, பல இடங்களில் தலித் பெண்கள் மீதும், பழங்குடியின பெண்கள் மீதும் வன்கொடுமையினை நிகழ்த்துவதே காவல்துறையாக இருக்கிறது.
“இந்த அரசியலமைப்புச் சட்டத்தை நாம் இயற்றுவதன் மூலம், நாம் ஒரு முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கையினுள் நுழையப் போகிறோம். அரசியலில் நமக்கு சமத்துவம் இருக்கும்; சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் நமக்கு சமமின்மை இருக்கும். அரசியலில் ஒரு நபருக்கு ஒரு ஓட்டு; ஒரு நபருக்கு ஒரு மதிப்பு என்ற கொள்கையினை அங்கீகரிப்போம். நமது சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில், நாம் சமூக பொருளாதார கட்டமைப்பின் காரணமாக, ஒரு நபருக்கு ஒரு மதிப்பு என்கிற கொள்கை தொடர்ந்து மறுக்கப்படும். இன்னும் எவ்வளவு காலம் இப்படியான முரண்பாடுகளோடு நம்மால் வாழ முடியும்?” என்று கூறியிருக்கிறார் அண்ணல் அம்பேத்கர். (1949 ஆம் ஆண்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மூன்றாவது வாசிப்பின் போது ஆற்றிய உரை)
தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையினை வெறும் பெண்களுக்கு எதிரான வன்முறையாக மட்டும் சிலரால் பார்க்கப்படுகிறது. தலித்துகள் மீதான வன்முறையைப் பற்றி கேள்வி கேட்கும்போது, அது சாதிய கட்டமைப்புக்கு எதிராகவும், அவர்கள் அனுபவிக்கும் ஆதிக்க சாதி சலுகையும் சேர்ந்தே கேள்விக்குள்ளாகிறது என்ற சிலரது பயம் இதில் வெளிப்படுகிறது. மேலும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் போது மட்டும், இந்தியாவின் கூட்டுமனசாட்சி 2012 ஆம் ஆண்டு நிர்பயா வழக்கில் எழுந்தது போல அரியலூர் நந்தினி வழக்கில் எழவதில்லை. அது அதிகபட்சம் கண்டனங்கள் அல்லது பதிவுகளோடு கடந்து சென்றுவிடுகிறது.
இந்தியா என்னும் முரணில், சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகள் அரசின் ஆதரவோடு கட்டமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. குறிப்பாக, மோடி அரசு பதவி ஏற்ற பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறையும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகியிருக்கிறது என்பதை இதற்கு முந்தைய மே17 இயக்கக் குரல் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறோம்.
இந்திய அரசு நிர்வாகம் சாதியக் கட்டமைப்பை பாதுகாக்கிறது; மனுதர்மத்தைப் பாதுகாக்கிறது; சாதிய-பாலியல் வன்முறைகளை பாதுகாக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான முடிவான தீர்வு சாதி ஒழிப்பும் பாலினம் பற்றிய புரிதலும் தான். சாதி ஒழிப்பும் பாலினம் பற்றிய புரிதலும் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான இறுதியான தீர்வாக இருக்க முடியும்.
இக்கட்டுரையின் முந்தைய பகுதிகள் :
https://may17kural.com/wp/sexual-violence-against-dalit-women-part-3/