இனப்படுகொலை போரை தொடங்கி ஓராண்டு ஆகியும் தொடர்ந்து பாலஸ்தீனம்-லெபனான் மீது போரை நடத்தி வருகிறது இசுரேல். இந்த போரை உடனடியாக நிறுத்திட வலியுறுத்தி, மே பதினேழு இயக்கத்தின் சார்பாக 05-10-2024 சனிக்கிழமை மாலை சென்னை எழும்பூரில் பேரணி மற்றும் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.
இப்போரை நிறுத்துமாறு வலியுறுத்தி சென்னை எழும்பூரில் பேரணியை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தியின் தலைமையில் நடத்தியது. சி.பி.எம். கட்சியின் தலைவர் தோழர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ கட்சியின் தலைவர் தோழர் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தோழர். வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர். அப்துல் சமது, மதிமுகவின் பொருளாளர் தோழர் செந்திலதிபன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் முன்னாள் ச.ம.உ தோழர் தனியரசு, தந்தை பெரியார் திகவின் தோழர். கு.இராமகிருட்டிணன், மனிதநேய சனநாயக கட்சியின் தலைவர் தோழர். தமீமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தோழர் அச.உமர்பாரூக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர். வன்னி அரசு, தமிழக மக்கள் சனநாயக கட்சியின் தலைவர் தோழர். கே.எம்.சரீப், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர். குடந்தை அரசன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை. திருவள்ளுவன், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் தலைவர் தோழர். எஸ்.ஆர்.பாண்டியன், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன், மக்கள் அதிகாரத்தின் வெற்றிவேல்செழியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன், சிபிஐ-எம்.எல் கட்சியின் விடுதலைகுமரன் உள்ளிட்ட தலைவர்கள் பேரணியை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார்கள்.
நூற்றுக்கணக்கான மக்கள் பங்கெடுத்தும், முழக்கங்களை எழுப்பியும், பறை முழக்கத்தோடு நடந்த பேரணி எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கண்டன உரைகளோடு முடிவுற்றது. இக்கண்டன உரையில் இசுரேலுக்கு ஆயுதத்தை ஏற்றுமதி செய்யும் மோடி அரசை கண்டித்தும், பாலஸ்தீன விடுதலையையும், ஈழத்தின் விடுதலையையும் ஆதரித்து முழக்கம் எழுப்பப்பட்டது.
இராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பாக நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை.
இந்தப் பேரணி ஒரு முக்கியமான அரசியலை தமிழ்நாட்டின் முன் வைத்திருக்கிறது. தமிழர்கள் இனப்படுகொலை என்கின்ற மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்திற்காக, கட்சி, இனம் கடந்து ஒன்று திரள்வார்கள் என்று பேரணி எடுத்துச் சொல்லியிருக்கிறது. அனைத்து கட்சிகளுடைய ஆளுமைகளிடம் இந்த பேரணியில் கலந்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன போது, இயக்கத்தின் கட்சியின் தலைமைகளே நேரடியாக இந்த பேரணியில் பங்கெடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள். அவர்கள் வாக்குறுதி கொடுத்தது போல பேரணியில் பங்கெடுத்தார்கள். அதுமட்டுமின்றி, சென்னையில் இல்லாத இயக்கங்களின் தலைவர்களும் இந்த பேரணியிலே பங்கெடுத்தார்கள்.
மனிதநேயமிக்க இனம் தமிழினம், ஈராயிரம் ஆண்டுகளாக இந்த மொழி நம்மை செம்மைப்படுத்தியிருக்கிறது, செழுமைபடுத்தியிருக்கிறது. ஆனால் நாம் இனப்படுகொலைக்கு உள்ளான இனமாக இங்கு நின்று கொண்டிருக்கிறோம். இனப்படுகொலைக்கு உள்ளான இனம் தான் இன்னொரு இனப்படுகொலையாகும் இனத்தை பார்த்து கொதித்தெழும் என்கிற வகையிலே, அடுத்து வரக்கூடிய மூன்று நாட்களில் இசுரேல் செய்யும் இனப்படுகொலையை கண்டித்து தமிழ்நாட்டிலுடைய பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறும் என உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இந்தப் போர் என்பது ஏதோ ஒரு மூலையிலே, கண்ணுக்கு எட்டாத தொலைவிலே நடக்கக்கூடிய அழிவாக நாம் பார்த்து கடந்து விடக்கூடாது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழப்பகுதியில் இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, தாயகத்தில் (மதிமுக தலைமை அலுவலகம்) பெண்கள் உண்ணா நிலை போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் போர் மிக உக்கிரமாக நடந்தது. ஒவ்வொரு நாளும் படுகொலை செய்யும் மக்களின் எண்ணிக்கை 5000-த்தை கடந்துக்கொண்டிருந்தது. இன்று பாலஸ்தீனத்தில் நடக்கும் படுகொலையின் விகிதத்தை விட தமிழர்கள் மீது அதிகமான விகிதம் நடந்தது. அப்போது நாம் கையறு நிலையில் நின்று கொண்டிருந்தோம். மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்தபோது தமிழர்கள் சொல்வதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது. தகவல்களை கொண்டு போய் சேர்ப்பதற்கு முடியவில்லை. மக்களை திரட்ட முடியவில்லை மாபெரும் எழுச்சியை சாத்தியப்படுத்த முடியாமல், நம் கண் முன்னே ஒன்றரை லட்சம் தமிழர்கள் துடிக்க துடிக்க படுகொலை செய்யப்பட்டார்கள்.
உலகத்தில் வேறு எங்கும் நடந்ததை விட மிக மோசமாக போரின் இறுதி மூன்று நாட்களில் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை தமிழர்கள் படுகொலைகள் செய்ததை நினைத்துப் பாருங்கள். அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டிருப்பார்கள்? குடும்பத்துடன் நிற்க வைத்து சுட்டு கொலை செய்யப்பட்டார்களா? அல்லது குண்டு வீசி கொலை செய்யப்பட்டார்களா? என்கிற தகவல் கூட நமக்கு கிடையாது. அவர்கள் உடல்கள் கூட எங்கே புதைக்கப்பட்டது? என தகவல் எதுவும் இன்றுவரை நமக்கு கிடையாது. இதற்கான புலனாய்வு செய்யும் வாய்ப்புகள் எல்லாம் உலகம் அமைத்து தரவில்லை, அதற்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்தியா பாதுகாப்பு அரணாக, இரும்பு கோட்டையாக, இலங்கையின் மீது எந்த விசாரணை வந்துவிடக் கூடாது என்பதற்காக நின்றது. ’இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச புலனாய்வு என எதுவும் இன்றுவரை தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தரவில்லை’.
இப்படிப்பட்ட கொடூர நிகழ்வுக்கு நீதி கேட்டு நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதைப் போல பாலஸ்தீனத்தின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என கொத்துக் கொத்தாக படுகொலை செய்வதை பார்க்கும்போது, நமக்கு 2009-ல் நடந்த கொடூர நிகழ்வு நம்மை கொல்கின்றன, நம்மால் உறங்க முடியவில்லை. உலகில் எங்கேயும் மனிதர்கள் இறந்தால் அல்லது படுகொலை செய்யப்பட்டால் அல்லது பெற்றோர்களின் பிணங்களைச் சுற்றி குழந்தைகள் அழுதால், அந்த துயரத்தை தாங்க முடியாது. ஆனால் தினமும் இந்த புகைப்படங்களும் காணொளிகளும் நம்மை வதைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த போர் எதற்காக நடக்கிறது?
உலகத்தில் இந்த போர் எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு இனவெறி நோக்கத்திற்காக மட்டும் நடக்கவில்லை தோழர்களே! 20 ஆண்டுகளுக்கு முன்பு தராகி சிவராம் ஒரு கருத்தை சொன்னார். இவர் ஈழத்திலே ஒரு தலைசிறந்த இராணுவ ஆய்வாளர், ஊடகவியலாளர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தவர். 20 வருடத்திற்கு முன்பு ஐரோப்பாவில் தங்கியிருந்த சமயத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது,”ஈழத்தினுடைய திரிகோணமலை கப்பல் தளத்தை அமெரிக்கா நிச்சயமாக கைப்பற்றுவதற்கான முயற்சி மேற்கொள்ளும், ஏனெனில் அமெரிக்கா ஈரானை தாக்க வேண்டும் என்றால் அவர்கள் கப்பற்படை நிறுத்துவதற்கு இந்திய பெருங்கடலில் வேறு எங்கும் அவர்களுக்கு தளம் கிடையாது. பனாமாவில் இருந்து ஐயாயிரம் கிலோமீட்டர் தாண்டி கப்பற்படை நகர்த்தி வந்து நின்று போர் புரிவது என்பதும், ஈரானை வீழ்த்துவதும் என்பதும் சாத்தியமில்லாததாக இருக்கிறது. ஆகவே அவர்களின் கப்பற்படையை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு திரிகோணமலையில் நிறுத்தினால் மட்டும் தான் ஈரான் மீது போர் நடத்த முடியும் என உறுதிப்பட சொன்னார்”. இதை சொல்லிவிட்டு இலங்கைக்கு சென்று ஒரு மாதம் ஆவதற்குள், அவர் கடத்தி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
அதைபோலவே 1980-களின் இறுதியில் இந்தியா-இலங்கை ஒப்பந்தம், அடிப்படையில் தமிழர்களுக்கு எதிராக கைசாதிட்ட பிறகு, விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும் இதே கருத்தை பதிவு செய்தார். இந்தியா எமது நிலத்தில் ஒரு ஆதிக்க அரசியலை நகர்த்துகிறது என்பதை தெளிவுபட கூறினார். அப்படிப்பட்ட அரசியல் தான் 2009-ல் இனப்படுகொலையாக, அந்த திரிகோணமலை கப்பல் தளத்தை அமெரிக்கா கைப்பற்றும் முயற்சியை, இந்தியா ஆதரிக்கும் விதமாக அமெரிக்காவுடன் கைக்கோர்த்தது. தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்தது.
இந்த தகவல்கள் எல்லாம் உலக அளவில் கொண்டு செல்ல முடியாத இனமானோம். தமிழீழம் எவ்வாறான ஒரு சிக்கலை எதிர்கொண்டு நின்றது என்றால், எந்த ஈரான் தாக்கப்படும் என்று விடுதலைப் புலிகள் அச்சப்பட்டு பேசினார்களோ, மேற்கு ஆசியா பாதுகாப்பு என்பது ஈழத்தில் (திரிகோணமலை) இருக்கிறது என்பதை குறித்து மிக விரிவாக ஆய்வுகளை வெளியிட்டார்களோ, அந்த தமிழீழப் பகுதியை தாக்குவதற்கு இலங்கைக்கு ஆயுதத்தை ஈரான் கொடுத்தது, இசுரேலும் கொடுத்தது என்கிற துயரத்தையும் வரலாற்று முரணையும் சேர்த்து தான், அதனை உள்வாங்கிக் கொண்டுதான், இன்று ஈரானுக்கும் மற்றும் பாலஸ்தீனுக்கும் ஆதரவாகவும், இசுரேலுக்கு எதிராகவும் நின்று கொண்டிருக்கிறோம்.
நாம் விரும்புவது ஒன்றுதான். எதிரிகளுக்கும் இந்த கொடுமை நிகழ்ந்துவிடக்கூடாது என்றுதான் தமிழினம் பரிதவித்து பேசுகிறது. உலகம் முழுவதும் அமைதி திகழ வேண்டும் என்றால் ”தமிழீழம் என்கிற நிலப்பரப்பு தமிழர்கள் இறையாண்மைக்குள் இருக்க வேண்டும், அந்த இடத்தில் அன்னிய படைகள் (ராணுவம்) நிலைநிறுத்தப்படக் கூடாது” என்பதை உறுதிபட தெரிவித்தார்கள் விடுதலைப்புலிகள்.
முள்ளிவாய்க்கால் போர் காலத்தில் ‘நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் மக்களை மீட்பதற்காக இலங்கை ராணுவத்தை தடுத்து, மக்களை பாதுகாப்பதற்காக களம் இறங்குகின்றோம்’ என்றது. அமெரிக்கா படை இறங்கினால், பிறகு அமெரிக்காவை இந்த கடல்பரப்பிலிருந்து ஒரு காலத்திலும் வெளியேற்ற முடியாது. நாங்கள் எங்களை பலி கொடுத்தாவது இந்த மண்ணை அமெரிக்காவின் பிடியிலிருந்து காப்போம். அதன் மூலமாக, உலகத்தின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் உறுதுணையாக இருப்போம்‘ சொல்லி, தமிழீழ விடுதலை புலிகள் தங்களை தாங்களே அழித்துக் கொண்டது ஒரு மாபெரும் வரலாறு.
ஆனால் இவையெல்லாம் இன்று பேசப்படவில்லை, இந்த விவரங்கள் இன்று வரை இந்தியாவில் எந்த முற்போக்கு இயக்கங்களும் கூட எடுத்துச் சொல்ல மறுக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளையும், தமிழீழத்தையும் அங்கீகரிக்க இடதுசாரிகள் மறுக்கிறார்கள் என்ற பெரும் துயரத்தில் நின்று பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆனாலும் ஒன்று சொல்கிறோம், உலகத்தில் எந்த மூலையில் எந்த இனம், எந்த மக்கள் விடுதலைக்காக போர் புரிகிறார்களோ, விடுதலைகாக துணிந்து நிற்கிறார்களோ, அவர்களோடு என்றும் துணிந்து நிற்போம் என்பதைத்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது தோழர்களே!
அந்த மரபில் நின்றுதான் நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். இன்றைக்கு பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கும் போர், வெறும் பாலஸ்தீன போர் மட்டும் நடக்கவில்லை. அவர்கள் காசாவின் ஆரம்பத்திலிருந்து மேற்கு கரையிலே அந்த போரை விரிவு செய்தார்கள், அதன்பின் லெபனான், சிரியா, ஈராக், ஏமன், ஈரான் வரை விரிவடைந்து போரை நடத்துகிறது இசுரேல்.
தற்போது மேற்காசியா முழுவதும் இசுரேல் போர் விரிவடைந்து கொண்டே செல்வதற்கு காரணம் என்ன?
ஹமாஸ் ஒரு தாக்குதலை நடத்தியது என்ற ஒற்றைக் காரணத்தை வைத்து இசுரேல் போர் நடத்துகிறது. அன்பார்ந்தவர்களே, இது ஹமாசுக்கு எதிரான தாக்குதல் அல்ல, ஒட்டுமொத்த மேற்காசியா பிராந்தியத்தில் அமெரிக்காவின் தளம் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான தாக்குதல். இந்த போர் மேலும் விரிவடையும், தெற்காசிய பிராந்தியம் போரில் சிக்குண்டு மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் என தமிழீழ விடுதலைப்புலிகளும், போராளிகளும் 40 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்களே, அது இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.
இந்த பேரணிக்கான காரணம் என்ன?
ஈரான் மீது இசுரேல் தாக்குதல் நடத்தியது. இசுரேல் ராணுவம் யாரெல்லாம் அமைதி பேச்சு வார்த்தைக்கு வருகிறார்களோ அவர்களை எல்லாம் படுகொலை செய்தார்கள். ஹமாஸ் தலைவர் ஹனியே அவர்கள் நாங்கள் போர் நிறுத்தத்திற்கு தயார் என்று சொன்னார், அவரை படுகொலை செய்தார்கள். இந்த மேற்கு ஆசியா பிராந்தியத்தில் போர் விரிவடையாமல் நாங்கள் தடுக்கிறோம் என்று ஈரான் சொன்னது, ஈரான் படைத்தளபதிகளை படுகொலை செய்தார்கள். லெபனான் மீது தாக்குதல் நடத்திய போது போர் நிறுத்தத்திற்கு நாங்கள் தயார் என ஹிஸ்புல்லாவின் படைத்தளபதி நசுருல்லா சொன்னார், இது ஈரானின் வழியாக அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டது, இதை சொல்லிய இரண்டு நாட்கள் கழித்து அவரும் படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் தளபதிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இசுரேலை ஆதரிக்கும் மோடி அரசிடம், மே 17 இயக்கம் கேட்க விரும்புவது ஒன்றுதான். யாரெல்லாம் போர் நிறுத்தத்திற்கு தயார் என்று அறிவிக்கிறார்களோ, யார் எல்லாம் அமைதியை விரும்புகிறார்களோ, அவர்களை எல்லாம் படுகொலை செய்யும் இசுரேலை ஆதரிக்கிறீர்களே, போரை விரிவடைய செய்ய துணை போகும் குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
யாரெல்லாம் அமைதியை முன்னெடுத்தினார்களோ அவர்களை எல்லாம் இலங்கை அரசின் ராணுவம் படுகொலை செய்தது. திரிகோணமலையை அமெரிக்க கப்பற்படை தளமாக மாற்றுவதற்கு இந்தியாவின் ஒப்புதலோடு அமெரிக்கா – இலங்கை ஒப்பந்தத்தில் கைசாத்திட்ட உடனே, அதே வருடத்தில் இந்திய அரசின் ஆதரவு அடிப்படையிலேயே தமிழீழத்தின் அமைதி செயலாளராக இருந்த பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். அவர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டாரோ அதைபோலவே ஹிஸ்புல்லா தலைவர் நசுருல்லாவும் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை எல்லாம் ஒரே மாதிரியாக தான் நடக்கின்றன.
’இலங்கை அரசு எப்படி இந்த போரை ஈழத்தின் மீது நடத்தியதோ அதேபோல் காசாவிலும் பள்ளிக்கூடம், மருத்துவமனை, ஐநா அலுவலகங்கள் மற்றும் குழந்தைகள் மீதும் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன’. மக்களையெல்லாம் ஒன்று கூட வைத்த பாதுகாப்பு வளையங்கள் மீதும் குண்டுகள் வீசி படுகொலை செய்தது இலங்கை. இசுரேல் இது போலவே மக்களை கூட வைத்து பாதுகாப்பு வலயங்கள் மீது குண்டுகள் வீசுகிறது. உணவு, மருந்து, குடிநீர் இல்லாமல் எவ்வாறு பட்டினி போட்டு தமிழர்களை படுகொலை செய்தார்களோ அதே போல் காசாவில், பாலஸ்தீனத்தில் கொத்து கொத்தாக பட்டினியால் மக்கள் படுகொலை ஆகிறார்கள். இந்த இரண்டு போர்களும் ஒரே மாதிரியானது.
”நான் பாலஸ்தீனை ஆதரிப்பேன், ஆனால் ஈழத்தை பற்றி அக்கறை கொள்ள மாட்டேன் என்று சொல்வது” ஒருபோதும் இடதுசாரி மரபு ஆகாது, சனநாயகமாகாது, முற்போக்கு நிலைப்பாடாக மாறாது. காரணம் என்னவெனில் தமிழீழத்தில் நடத்தப்பட்ட படுகொலை என்பது, இன்றைக்கு ஈரானை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கக்கிறது. அமெரிக்காவினுடைய போரின் அடித்தளமாக தான் அங்கே தமிழீழம் அளிக்கப்பட்டது. ஆக தமிழகத்தின் படுகொலை, பர்மாவில் நடந்த ரோகிங்கா படுகொலை பாலஸ்தீனத்தில் காசா படுகொலை எல்லாம், அமெரிக்கா ஆசியாவை முழுவதும் கைப்பற்றும் எண்ணம் கொண்டே நடக்கிறது. ஆக இந்த முயற்சியை முன்னெடுத்து கொண்டிருக்கும் தருணத்திலே தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைகளைத் தடுக்க முடியாத நாம், குறைந்தபட்சம் பாலஸ்தீனத்திலும், லெபனானிலும் நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற நோக்கத்தின் அடிப்படையில் தான் இந்த பேரணிக்கு திரண்டுள்ளோம்.
இந்தப் போர் விரிவடைந்து செல்கிறது. ”இரண்டு நாட்கள் முன்பு கூட சிரியாவில் இருக்கக்கூடிய ரஷ்ய இராணுவ தளத்தில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் என்னவெனில்,ரசியாவும், ஈரானும் இந்த போருக்குள் வரவேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. இந்த போரை இழுக்குகிறார்கள்”. மேற்காசியா பிராந்தியம் முழுவதும் போர் நடக்க வேண்டும் என்றால், ஈரானை போருக்கு இழுக்க வேண்டும். ஈரானிலிருந்து இசுரேலுக்கு செல்லும் ஏவுகணை 2000 கிலோ மீட்டர் வரை செல்லும் எனில், அமெரிக்கா கப்பற்படை அரபிக்கடலில் நிற்க முடியாது. இந்திய பெருங்கடலில் மேற்கு பகுதியில் நிற்க முடியாது, ஆகவே அமெரிக்காவின் கப்பல் படை பாதுகாப்பாக நின்று இந்த போரை நடத்த வேண்டும் என்றால் அது தமிழ்நாட்டிற்கோ அல்லது இலங்கை துறைமுகத்திற்கோ வந்து தான் நிற்க வேண்டும்.
இங்கு ”காட்டுப்பள்ளி துறைமுகத்தை, அமெரிக்காவின் கப்பல் ராணுவ நிறுத்தமாக, அங்கு அமெரிக்க கப்பல் பழுது பார்க்க செய்வதற்காக, இந்திய அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எடுத்துக் கொண்டுள்ளார்கள்”, இங்கே அமெரிக்க ராணுவ கப்பல்கள் வரும் என்றால் திரிகோணமலையில் நிறுத்தப்படும் என்றால், இந்த போர் விரிவடையும் என ஈரான் சொல்லியிருக்கிறது. ஏனெனில் எங்களை எங்கிருந்து தாக்குகிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நாங்கள்(ஈரான்) திரும்பும் தாக்குவோம் என்று சொன்னார். நாம் நம்மை அறியாமல், நாம் ஒப்புக்கொடுக்காமலும் நாம் பலியாவோம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது தோழர்களே.
மேற்காசியா போரில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி விமானப்படையின் முக்கிய தளபதிகள் கோயம்புத்தூரில் எதற்காக சந்தித்தார்கள்? என்ற கேள்வி எழுகிறது.
இங்கே தமிழ்நாடு /தென்னிந்தியாவில் நேட்டோ படைகளுக்கு என்ன வேலை இருக்க வேண்டியிருக்கிறது? அதானியினுடைய வியாபாரம் (ட்ரோன்/Trone) நடக்க வேண்டி இருக்கிறது என்பதற்காக, இங்கிருந்து இசுரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது மோடி அரசு. இதன்மூலம் நாளை நாம் தாக்குதலுக்கு உள்ளானால் எப்படி எதிர்கொள்வது! ஆகவே தான் தோழர்களே சொல்கிறோம், ”இந்த பிராந்தியத்தில் ராணுவ மையமாக மாறாமல் இருக்க வேண்டும். இரண்டாவது போர் நிறுத்தம் நிறைவேற வேண்டும், இவற்றையெல்லாம் விட முக்கியம் தமிழர்கள் அரசியல் பட வேண்டும்”.
இங்கு நடப்பது என்னவென்று புரிந்து கொள்ளவில்லை எனில், நான் ஈழத் தமிழர் சொல்வதை ஒன்று சொல்கிறேன் ”நாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என தெரிந்து கொண்டு எங்கள் இனம் படுகொலையானது, ஆனால் எதற்காக கொல்லப்படுகிறோம் என தெரியாமலேயே தமிழ்நாட்டு தமிழர்கள் அழிந்து போகப் போகிறார்கள்’ என்று சொன்னார். அந்த அச்சத்தில் நின்றே துயரத்தில் பேசுகிறேன்
ஆகவே தமிழ்நாட்டு இளைஞர்களே அரசியல் கொள்ளுங்கள், அரசியலோடு இங்கு நடக்கக்கூடிய நிகழ்வுகளை, சமகால அரசியலை தமிழ்நாட்டோடு இணைத்துப் பாருங்கள். இங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது குறித்தான தொடர்ச்சியான போராட்டத்தில் பங்கு எடுத்த தோழர்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறோம். ”தமிழ்நாடு அரசு வெளியுறவுக் கொள்கை வகுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை மே 17 இயக்கம் 15 ஆண்டுகளாக வைத்துக் கொண்டிருக்கிறது, நீங்களும் அந்த வேண்டுகோளை தமிழ்நாடு அரசிடம் வைக்க வேண்டும் “ என கேட்கிறோம்.
சட்டமன்ற உறுப்பினர் தோழர். வேல்முருகன் அவர்கள் இந்த கோரிக்கையை சட்டமன்றத்தில் முன்வைப்பார் என உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டில் ஒரு வெளியுறவுக் கொள்கை தேவைப்படுகிறது. இந்தியப் பார்ப்பனக் கூட்டத்தின் வெளியுறவுக் கொள்கை என்பது குஜராத் பனியாவின் லாபத்திற்காகவே தவிர, அந்த வெளியுறவு கொள்கையில் தமிழர்களுக்கு எந்தவித இடமும் நலனும் இல்லை. நாம் தமிழர்கள் நலனை முன்னிலைப்படுத்தி ஒரு வெளியுறவுக் கொள்கை வகுக்க வேண்டும். அந்த கொள்கை அடிப்படையில்தான் ஒன்றிய அரசு இயங்க வேண்டும். அப்படி இயங்கவில்லை எனில் இங்கே பாதுகாப்பு தாழ்வாரம் (defence corrider) வைக்கிறேன், ராணுவத்தளம் வைக்கிறேன் எனச் சொன்னால், அதை விரட்டியடிக்க வேண்டிய தேவை நமக்கு வரும். ஏனெனில் ”நாம் அறியாமல், நாம் ஒப்புக்கொடுக்காமல், நாம் உணராமல் நம் குழந்தைகள் மீது விழுகின்ற குண்டுகளை மோடி அரசும் சங்கிகளும் தடுக்க மாட்டார்கள் நாம் தான் எதிர்கொள்ள வேண்டும்”. அந்த இடத்தில் தான் நாம் நின்று கொண்டு இருக்கிறோம் தோழர்களே, எனவே இதையெல்லாம் உணர்த்துவதற்காகதான் இந்த பேரணியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
2009-ல் எதை விட்டோமோ, எதை சாதிக்க முடியாமல் போனதோ, அந்த அரசியலை கைக்கொண்டு நாம் இந்த பிராந்தியத்தின் அரசியலை முடிவு செய்ய வேண்டும். தமிழர்கள் இந்த பிராந்தியத்தை முடிவு செய்பவர்கள். தெற்காசிய பிராந்தியத்தின் வலிமைமிக்க ஒற்றை இனம் தமிழினம். தமிழீழத்தில் இருக்கின்றோம், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ் என எல்லா இடங்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள்.
இந்த தமிழ் இனத்தினுடைய வெளியுறவுக் கொள்கை, இந்த பிராந்தியத்தில் எவ்வாறு தமிழினம் காக்கப்பட வேண்டும், எவ்வாறு அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்கிற கொள்கை பிடிப்போடு இருக்க வேண்டும். இந்த பிராந்தியத்தில் ஆளுமை மிக்க இனமாக எழுந்து நிற்க வேண்டும்.
இந்த வெளியுறவுக் கொள்கை வகுப்பதற்கு பார்ப்பனர்களுக்கு எந்த யோக்கியதையும், அதற்கான எந்த அணுகுமுறையும் அவர்களுக்கு கிடையாது, குஜராத்திகளுக்கு இது குறித்து அக்கறையும் கிடையாது, ஆக சுயநல அரசியலுக்காக இந்த பார்ப்பன பனியா கும்பல் வெளியுறவுக் கொள்கையை ஆக்கிரமிக்கும் என்றால், அதை உடைக்க வேண்டிய அரசியலாக தமிழ்நாட்டிலிருந்து குரல் எழ வேண்டும். அதுதான் திராவிட மாடல் குரலாக இருக்கமுடியும் என்பதை உறுதியாக நம்புகிறோம். அப்படியான குரலை எழுப்ப வேண்டும். அதற்கு நாம் அனைவரும் கைக்கோர்த்து நிற்போம். இந்த அரசியலை முன்னெடுத்து என்றைக்கு தமிழீழம் அமைகிறதோ, அப்போது தான் தமிழர்கள் பாதுக்காப்பாக இருக்க முடியும் என்பதை சொல்லி, பாலஸ்தீன விடுதலை என்பதும், தமிழீழ விடுதலை என்பதும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டது. இந்த மக்கள்- நம்மக்கள், இந்த குழந்தைகள்- நம் குழந்தைகள், இந்த தேசம்- நம் தேசம் இவர்களுக்கான விடுதலைக்காக தொடர்ச்சியாக போராடுவோம்” – என தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் உரையாற்றினார்.
யுட்யூப் இணைப்பு