குற்றங்களுக்கான விசாரணை நீதித்துறையின் வசமே செல்லாமல், காவல் துறை அதிகாரிகளே முடிவெடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களை சுட்டுக் கொல்லும் சட்ட விரோத செயல்பாடே என்கவுண்டர்கள். கூட்டு மனசாட்சிகளின் உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கு இரை போட செய்யப்படும் இந்த என்கவுண்டர்களால் ஒரு நிரபராதி கொல்லப்படுவதும், கொன்ற காவல் அதிகாரிக்கு ஏற்படும் குற்றவுணர்ச்சியும், உண்மையான குற்றவாளியைக் கண்டறிய அவர் மேற்கொள்ளும் முயற்சிகளுமே வேட்டையன் திரைப்படம்.
இப்படத்தின் கதாநாயகன் ரஜினி ஒரு காவல் துறை அதிகாரி. அவர் அடிக்கடி சொல்லும் பஞ்ச் வசனமாக ‘குறி வைச்சா இரை விழணும்‘ என்பதை வைத்திருக்கிறார்கள். ஆனால் பொது சமூகத்தின் உணர்ச்சிக் கொதிப்புக்கு இரையாக நிரபராதிகளும் குறியாகிறார்கள் என்பதை வைத்து பின்னப்பட்டது இப்படம்.
பொதுமக்கள், ஊடகம், அரசியல்வாதி என பலதரப்பட்டவர்கள் அங்கம் வகிப்பதே பொது சமூகமாக இருக்கிறது. அந்த பொது சமூகம் உணர்ச்சி வசப்பட்டு, குற்றச் செயலை அணுகினாலும், காவல் துறையினரின் அதிகாரம் அவர்களின் கொதிப்புகளுக்கு ஏற்ற நடவடிக்கைகளில் இறங்கினால், சில சமயங்களில் நிரபராதிகளும் தண்டிக்கப்பட்டு விடுகிறார்கள் என்பதை வேட்டையன் திரைப்படம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதே நீதித்துறை விசாரணையின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதேயே முதன்மையான நோக்கமாகக் கொண்டு நீதித்துறை விசாரிக்கிறது. குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களே தவிர, அவர்கள் குற்றவாளிகளா, இல்லையா என்பது நீதிமன்ற விசாரணையில் தான் நிரூபணமாகும். அவ்வாறு நிரூபிக்கப்படுவதற்குள் தண்டனை வழங்குவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் காவல் துறையின் குற்றமாகும். இவற்றை விளங்கிக் கொள்ளும் பக்குவமற்ற மனங்களுக்கு இத்திரைப்படம் பக்குவமாக விளக்கும் பாடமாக இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
படத்தின் முதல் காட்சியே இரண்டு நிமிட குறும்படம் சொல்லும் விதமாக ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பும், பின்புமாக இருந்த சமத்துவமற்ற மக்களின் வாழ்க்கை நிலையையும், சமத்துவத்தின் முதல் முயற்சியாக சமத்துவமான கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மெக்காலே என்பதையும் வரைகலை படத்தின் மூலம் வெளிப்படுத்தியது சிறப்பான ஆரம்பம். சட்டமும், கல்வியும் சமத்துவமாக அனைவருக்கும் கிடைப்பதே நமக்கான இலக்கு என்று காவல் அதிகாரிகளுக்கான பயிற்சியாக முன்னாள் நீதிபதியும், இன்று மனித உரிமைகள் ஆணையத் தலைவராகவும் இருக்கும் அமிதாப்பச்சன் பாடம் எடுப்பதாக ஆரம்பிக்கிறது.
அமிதாப்பச்சன், ரஜினி என இரு சூப்பர் ஸ்டார்கள் கொண்ட படம். திரையுலகின் உச்ச நடிகர்கள் இருவருக்குமான கதாபாத்திரத் தேர்வும், அவர்களின் நடிப்பும் இப்படத்தின் சிறப்பு.
வணிக நோக்கத்திற்காக, கதாநாயக பிம்பம் கூட்டுகின்ற ரஜினியின் திரைப்பட பாணியை கொண்டிருந்தாலும், இதில் சமூக, அரசியல் சூழலில் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பல பிரச்சனைகளின் தொகுப்பையே கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
ஒரு ஆசிரியை கொலை செய்யப்படும் பின்னணி விசாரிப்புகளே படத்தின் மையக் கதை. இந்த அதிவேகமான தகவல் தொழில் நுட்ப காலத்தில் எங்கோ ஒரு இடத்தில் இருந்து சித்தரிக்கப்பட்டு வரும் செய்திகள் திட்டமிடப்பட்டு ஒளிபரப்பப்படும் வலைப்பின்னலை இயக்குனர் எளிமையான காட்சிகளின் மூலம் நமக்குள் கடத்தி விடுகிறார்.
குப்பத்து இளைஞன் பொறியாளர் பட்டமே பெற்றிருந்தாலும், அவனின் தலை அலங்காரம், உடல் தோற்றத்தைக் கொண்டே குற்றவாளி என முத்திரை குத்துவது, குப்பத்தில் இருப்பவர்களை நம்பக்கூடாது என சொல்லும் காட்சியில், மாடியில் இருப்பவர்களெல்லாம் நல்லவர்களா என்று ரஜினி கேட்பது போன்ற காட்சிகள், எப்போதும் அங்கிருப்பவர்களை ரவுடிகளாக, அடியாட்களாக காட்டி தமிழ் திரையுலகம் வெகு மக்களின் பொதுப் புத்தியில் ஊறச் செய்திருக்கும் காட்சிப் பிம்பங்களை சற்று கலைக்கும் என நம்பலாம்.
NAT அகாடமி என்ற பெயரில் ஒரு பெரிய பயிற்சி நிறுவனம் தனது கல்வி வணிகக் கொள்ளைக்காக மறைமுகமாக, எந்தளவுக்கு கீழிறங்கி வேலை செய்கிறது என்பதைப் பற்றி இப்படத்தின் மூலமாகப் பேசி, நீட் என்னும் மருத்துவ நுழைவுத் தேர்வின் கொள்ளையை படம் பிடித்துக் காட்டுகிறார் இயக்குனர். திடீரென சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் அரசுப் பள்ளி மாணவர்களின் தவறான நடத்தை காட்சிகள், அதற்குப் பின்பாக தொலைக்காட்சிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு பயிற்சிக்கான வாய்ப்பின்மை, அவர்களின் கவனமின்மை போன்ற விவாதங்கள், அதனால் அரசுக்கு ஏற்படும் நெருக்கடி, அதைப் பயன்படுத்திக் கொண்டு NAT அகாடமியுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் என இவ்வளவு வலைப்பின்னலும் மருத்துவக் கல்வி வணிகக் கொள்ளையின் பின்புலத்தில் கட்டமைக்கப்படுவதை தெளிவாக்கி விடுகிறார் இயக்குனர்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிலர் செய்யும் தவறுகள் பரவும் அளவிற்கு, தனியார் பள்ளிகளில் நடப்பவைகள் அவ்வளவு வேகமாக பரவுவதில்லை என்கிற கேள்வியையும் இப்படம் நம்மிடம் எழுப்பி விடுகிறது. கடவுளின் அவதாரம் என சொல்லிக் கொண்ட சிவசங்கர் பாபா நடத்திய உறைவிடப் பள்ளியில் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு, சென்னையில் Y.G. மகேந்திரன் மகள் நடத்திய PSBB பள்ளியில் ஆசிரியர்கள் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு, கலாசேத்ரா நடனப் பள்ளியில் நடன ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல் குறித்து எழுந்த மாணவிகளின் போராட்டம், கே.கே.நகரில் உள்ள பத்மா ஷேஷாத்திரி பாலபவன் பள்ளியில் 5 வயது பள்ளி சிறுவன் நீச்சல் குளத்தில் மரணம் என தனியார் பள்ளி, கல்லூரிகளில் தொடரும் அவலங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளி மாணவர்களின் நடத்தைகள் குறித்த சித்தரிப்பு போல முத்திரை குத்தப்படுவதில்லை என்பதையும் இணைத்து இப்படம் சிந்திக்க வைத்து விடுகிறது.
இது மட்டுமில்லாமல், NAT அகாடமி மூலம் நடுத்தர, வறுமை சூழலில் உள்ள பெற்றோர்கள், மாணவர்கள் இடையில் உருவாகும் மன உளைச்சல்களையும் வெளிப்படுத்திய விதம் நீட் தேர்வு தரும் மன உளைச்சல்களையும், அதன் பின்புலத்தில் குடும்பங்கள் அனுபவிக்கும் வேதனைகளையும் படம் பிடித்துக் காட்டியது. 8 லட்சம் கடன் வாங்கி தங்கையை படிக்க வைக்கிறான் ஒரு அண்ணன். அந்த பெண் சிறிது நேரம் பொழுதுபோக்கும் போதும், பணத்தை நினைவுபடுத்தி அம்மா மகளை திட்டுகிறார். தூக்கம் தொலைத்து அந்த மாணவி படிக்கிறாள். ஓய்வின்றி பயிற்சி வகுப்பு, பள்ளி வகுப்பு என அவளின் உளவியலை சிதைகிறது. மேலும், பயிற்சி வகுப்பு ஆசிரியரால், இதெல்லாம் டாக்டராகி என்ன ஆகப் போகிறது என்கிற அவமானத்தையும் எதிர்கொள்கிறாள். அனைத்தும் ஒன்று சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள அந்த மாணவி முடிவெடுக்கிறாள். இந்த காட்சிகள் அனைத்தையும் கோர்த்து பார்க்கும் போதே, நீட் தேர்வு பயிற்சி செல்லும் வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் குடும்பத்திற்குள் நடக்கும் உளவியல் நெருக்கடிகளை பொருத்திப் பார்த்து விடலாம் என்பது போன்ற காட்சியமைப்புகளாக விரிந்தன.
ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞானவேல், அப்படத்தைப் போல இப்படத்திலும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். 2016-ல் ரயில் நிலையம் அருகே வெட்டிக் கொல்லப்பட்டு பெரும் பரபரப்பை உருவாக்கிய சுவாதி வழக்கில் ராம்குமாரை இணைத்து விடுவதற்கு சிசிடிவி-யில் காட்டப்பட்ட காட்சிகள் போல இப்படத்திலும் என்கவுண்டர் செய்யப்படும் நிரபராதியை சித்தரித்து எடுக்கப்படும் ஒரு காட்சி வருகிறது. ராம்குமார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய இறுதி வரை ராம்குமாரின் பக்கம் உள்ள நியாயம் வெளிவராமல் அரசியல், அதிகார மட்டங்கள் அமுக்கி விட்டது. ஆனால் இப்படத்தில் நேர்மையான காவல் அதிகாரியான ரஜினி குற்றவுணர்ச்சி கொண்டு, இதற்கான வலைப்பின்னலை கண்டறிகிறார்.
நட்சத்திரப் பட்டாளங்கள் பலர் அவரவருக்குரிய பாத்திரங்களை நிறைவு செய்திருக்கின்றனர். விரைவான நீதியே தேவையே தவிர, அவசரமான நீதி தேவையில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது வேட்டையன் திரைப்படம். ஜெய்பீம் படத்தில் நீதிமன்றக் காட்சிகளின் வாதங்கள் அதிகம் பேசப்பட்ட அளவுக்கு இப்படத்திலும் வைத்திருந்தால், அதிகார மட்டங்களின் முடிவுகளை விட சட்டத்தின் முடிவுகளே நீதி உறுதிப்படும் வழி என்பதை வலுவாகப் பதிவு செய்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றியது.
சமீபத்தில் வந்த அமரன் திரைப்படம் போன்று, கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த சர்வதேச சட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு ராணுவ வீரனை போர்க் குற்றவாளியாக்குகிறோம் என்பதை கூட அறியாமல், லாப நோக்கத்திற்காக ராணுவ முலாம் பூசப்பட்ட திரைப்படங்களின் சந்தையை பயன்படுத்திக் கொண்டு படமெடுக்கும் சமூகப் பொறுப்பற்ற இயக்குனர் போல் அல்லாமல், பெரிய கதாநாயகனை கொண்டிருந்தும் கூட்டு மனசாட்சிகள் விரும்பும் என்கவுண்டரை நியாயமாகக் கட்டமைத்து படம் எடுத்து லாபம் பார்க்க விரும்பாத இயக்குனர் ஞானவேல் போன்றவர்களே தமிழ்ச்சமூக கலைப் படைப்பிற்கு உரியவர்கள். அவர்களை வாழ்த்துவோம், ஊக்கப்படுத்துவோம். இப்படம் Amazon Prime OTT தளத்தில் இருக்கிறது. அனைவரும் காண வேண்டிய அருமையான திரைப்படம் வேட்டையன்.