Welcome to மே 17 இயக்கக் குரல்   Click to listen highlighted text! Welcome to மே 17 இயக்கக் குரல்

“ப்ளாச்சிமடா” மையிலம்மா, “இடிந்தகரை” சுந்தரி : சூழலியல் போராட்டத்தில் பெண்கள்

“ப்ளாச்சிமடா” மையிலம்மா, “இடிந்தகரை” சுந்தரி : சூழலியல் போராட்டத்தில் பெண்கள்

சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக எத்தனையோ சட்டங்களும் கட்டுப்பாடுகளும் விதிக்கபட்டாலும், இன்றும் தாராளமயம் தனியார்மயம் என்ற பெயரால் நாட்டின் வளங்கள் பெரும் முதலாளிகளால் சுரண்டப்பட்டு வருகின்றன.  அவர்களை எதிர்த்து அழிவில் இருந்து இயற்கையை காப்பாற்ற மக்கள்  தன்யெழுச்சியாக  நடத்திய சில போராட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இன்றைய சூழலில்  இயற்கையாக நிகழும் பஞ்சம் என்பது மிக மிக அரிதே. சில இடங்களில் அரசு உதவியுடன் பெருமுதலாளிகள் செயற்கையாக உணவு மற்றும் தண்ணீர் பஞ்சத்தை உருவாக்குகின்றனர். அப்படி முதலாளிகளின் தண்ணீர் சுரண்டலால் பாதிக்கப்பட்ட “கேரளாவின் நெற்களஞ்சியம்” என்று புகழப்படும் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள  “பிளாச்சிமடா” எனும் கிராமமும் ஒன்று.

பழங்குடி சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழும் பிளாச்சிமடா கிராமத்தில்,  கைக்கு எட்டும் தூரத்தில் கிணற்றில் தண்ணீர் பார்த்த ஊர் மக்கள் 2001 ஆம் ஆண்டு தண்ணீருக்காக 5 கிலோ மீட்டர் வரை நடந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்நிலைக்கு காரணம் இங்கு ஜனவரி 2000 ஆண்டில் தொடங்கப்பட்ட “ஹிந்துஸ்தான் கோகோ-கோலா பேவரேஜஸ் பிரைவேட் லிமிடெட்” என்னும் அமெரிக்க நிறுவனத்தின் தொழிற்சாலையே. இந்த பெரும் கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக மக்களை திரட்டி, அறவழியில் போராடி, வெற்றி பெற்றவர் 56 வயதான பழங்குடியின பெண் மயிலம்மா.

“ப்ளாச்சிமடா” மையிலம்மா

திருமணமாகி 13 வயதில் பிளாச்சிமடா வந்த மயிலம்மாவுக்கு இருபத்தொரு வயதில் மூன்று ஆண் ஒரு பெண் குழந்தைகள் பிறந்திருந்தது.   27 வயதில் மயிலம்மாவின் கணவர் காச நோயால் இறந்துபோகிறார். அன்று முதல் அவர் வாழ்க்கை போராட்டம் ஆரம்பமானது.

1998ஆம் வருடம் பிளாச்சிமடாவில் 34 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கிய கோகோ கோலா நிறுவனம், 2000 ஆம் ஆண்டு  அதன் தொழிற்சாலையைத் தொடங்கியது.

ஆனால் அடுத்த 6 மாதத்தில் கிணற்று தண்ணீர் நிறம் மாறுவது, தண்ணீரின் சுவை மாறுவது என்று அந்த தண்ணீரைப் பயன்படுத்தி சமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அதை பயன்படுத்தியவர்கள் தோல் எரிச்சல், களைப்பு, மயக்கம், வயிறு கோளாறு போன்ற பல நோய்களால் அவதிப்பட்டனர்.   மறுசுழற்சி செய்யப்படாத தொழிற்சாலை கழிவுகளை உரம் என்று இலவசமாக கிராமவாசிகளுக்கு அந்நிறுவனம் வழங்கியது. செயற்கை ரசாயனம் மிகுந்த  இந்த கழிவை விவசாய நிலத்தில் பயன்படுத்தியதன் விளைவாக தாங்கமுடியாத துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. தொடர்ந்து விவசாய நிலங்கள் வறண்டு பயிரிட பயன்படாமல் போனது.

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்த மக்களுக்கு இயற்கை அழிக்கப்படுவது புரிந்தது. இனி அமைதியாக கடந்து செல்ல முடியாது என்ற நிலையில் அறவழிப் போராட்டத்தை நடத்த  ஆயத்தமாகினர். இந்நிறுவனத்திற்கு எதிராக கிராமத்தை சேர்ந்த  மயிலம்மா மக்களைத் திரட்டி 2002 ஏப்ரல் 22 அன்று  தொழிற்சாலைக்கு எதிரில் பந்தல் அமைத்து போராட்டத்தை தொடங்கினார்.

கோகோ-கோலா நிறுவனத்திற்கு எதிராக போராடும் கிராம மக்கள்.

24 மணி நேரமும் போராட்ட பந்தலில் தங்கி இருந்தார். பல அறவழி போராட்டங்களை நடத்தினர்.  ஓராண்டு முழுவதும் மயிலம்மாவின் வாழ்க்கை போராட்டம், ஊர்வலம், பேரணி, பிரச்சாரம் என கழிந்தது.

ஜூலை 25, 2003 இல்  ஓர் ஆவணப்படம் மூலம்  இப்போராட்டத்தின் கோரிக்கை ஆதாரங்களுடன் உலகிற்கு அம்பலமாக்கியது.  பி.பி.சி. அங்குள்ள தண்ணீரை கொண்டு நடத்திய ஆய்வில் புற்றுநோய்க்கான காரணிகள் அதில் அதிக அளவில் இருப்பதை தெரிவித்தது. மேலும், அந்த தொழிற்சாலை உரம் என்று கொடுத்த கழிவுகளில் புற்று நோய் மற்றும் நரம்பு நோய் உருவாக்கும் காரணிகள் இருப்பதும் அம்பலமானது. இதனையடுத்து, பல சர்வதேச ஊடகங்கள் மயிலம்மாவிற்கும், அவர் போராட்டத்திற்கும் ஆதரவாக குரல் எழுப்ப தொடங்கின.

கோகோ-கோலா விளம்பரம் எதிரே காலி கூடங்கள்.

கேரள அரசால் ஒரு நாளைக்கு வெறும் ஐந்து லட்சத்து 61 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்க அனுமதி  வழங்கப்பட்டது. ஆனால், இந்த கொக்ககோலா நிறுவனம் அசுர தாகத்துடன் ஒரு நாளைக்கு 8 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சியது தெரிய வந்தது. நிலத்தடி நீர் அதிகமாக சுரண்டப்பட்டு உள்ளது என்று பெரும்பட்டி பஞ்சாயத்து 2003ம் ஆண்டு கொக்ககோலா நிறுவனத்திற்கான உரிமத்தை ரத்து செய்தது.

கிராம பஞ்சாயத்தின் இந்த முடிவை எதிர்த்து கொக்கக் கோலா  நிறுவனம் வழக்கு பதிவு செய்தது. அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஒரு பகுதியின் இயற்கை ஆதாரங்களின் மீதான உரிமை அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களைச் சேர்ந்தது. அவர்களது உரிமையைப் புறக்கணித்து விட்டு இயற்கை வளங்களை  வணிகம் செய்வது மக்கள் விரோத நடவடிக்கை என்று  தீர்ப்பு வழங்கியது. இது மயிலம்மாவின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

கோகோ-கோலா நிறுவன வாயிலில் அமர்ந்து போராடும் மக்கள்.

அம்மக்களின் தொடர் போராட்டத்தால் 2005யில் அந்த நாசகார தொழிற்சாலை மூடப்பட்டது.  தொடர்ந்து, கிராமவாசிகள் தங்களுக்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .

2010ல்  கேரள மாநில அரசால் அமைக்கபட்ட தனிக்குழு கிராம மக்களுக்கு இழப்பீடாக ரூ.21,626 கோடி நிவாரணம் வழங்குமாறு “சிறப்பு குடிமக்கள் தீர்ப்பாயத்திடம்” மசோதா சமர்பிக்கப்பட்டது. அந்த ஏழை கிராம மக்களுக்கு நீதி கிடைத்ததை காணும் முன் 16 சனவரி 2007ல் தன் 70வது வயதில் மயிலம்மா இயற்கை எய்தினார்.

ஒரு பழங்குடி பெண் கனவில் நினைத்திட முடியாத சாதனையை மயிலம்மா நிகழ்த்தி காட்டினார். பிளாச்சிமாடா போராட்டத்தின் முகமான  மயிலம்மாவை காலமும் சூழலும் போராட்ட நாயகியாக முன்னிறுத்தியது.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மக்கள்  நடத்தும் போராட்டத்தின் வீரியம் குறையாது என்பதற்கு மற்றொரு சான்று தமிழ்நாடு, இடிந்தக்கரையில் நடந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்.

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரையில் போராடும் மக்கள்.

மரபு சார்ந்த நிலக்கரி மின் உற்பத்தி முதல் தற்போது, சுற்று சூழலுக்கு இணக்கமான, மரபுசாரா வழிமுறைகள் வளர்ந்து வரும் நிலையில் சூழலியலுக்கு பேராபத்தான அணுஉலைகளை அமைப்பது பெருந்துயரம்.  அதுவும், ரூ.14,500 கோடி  மதிப்பீட்டில் சுமார் அரைநூற்றாண்டு பழைய ரஷ்ய தொழில்நுட்பத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகளை இந்திய ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இதனால் உற்பத்தியாகும் அணுகழிவுகள்  செயலிழக்க லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும். கழிவுகளில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அபாயம் மட்டுமல்ல முறையாக பாதுகாக்கப் படாவிட்டால் அது எந்த நேரமும் கசிந்து பரவும் ஆபத்து உடையது. இதன் விளைவுகள் தமிழ்நாட்டில் மிக மோசமாக இருக்கும் என்று 2011 ம் ஆண்டிற்கு முன் இருந்தே சமூக ஆர்வலர்கள் பிரச்சாரம் செய்து வந்தனர்.

ஆனால், 2011 மார்ச் 11 அன்று சப்பானில் புக்குசிமா (fukushima) அணு உலை விபத்திற்கு பின்னரே தங்கள் கண்முன் இருக்கும் ஆபத்தை ஊர் மக்கள் உணர்ந்தனர். கடலையே வாழ்வாதாரமாக நம்பி வாழும் மக்கள்  இந்த ஆபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்திட அணுசக்திக்கு எதிரான இயக்கத்தை ஏற்படுத்தினர். இந்த மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், முகிலன் மற்றும் ஜேசுராஜின் உதவியுடன் போராட முடிவு செய்ததாக அணுஉலை எதிர்ப்பு போராளி தோழர் மெல்ரெட் கூறினார்.

அணு உலைக்கு எதிராக இடிந்தகரை போராட்டம்.

இந்திய ஒன்றியம் மற்றும் மாநில அரசுக்கு எதிராக நடக்கும் இந்தப் போராட்டத்தை பெண்களே முன்னின்று சாதி மத வேறுபாடுகளை கடந்து அறவழியில் போராட வேண்டும் என்று தீர்மானித்தனர்.

இதைத்தொடர்ந்து 2011 ஆகத்து மாதம் 128 பேர் உண்ணாவிரத போராட்டத்தை இடிந்தகரையில் தொடங்கினார்கள். போராட்ட பந்தல் அமைத்து மக்கள் அங்கேயே அமர்ந்து அறவழி போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர். குறிப்பாக, 2012 செப்டம்பர் 9ம் நாளன்று நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரை வழியாக அணு உலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள். இவர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்காத அரசு அன்று கண்ணீர் புகைகளை வீசியும் தடியடி நடத்தியும் மக்களைத் விரட்டினர். தொடர்ந்து, 6 பெண்கள் உட்பட பல போராளிகளை சிறையில் தள்ளியது மாநில அரசு.

இடிந்தகரை போராட்டதில் போராடிய தோழர் சுந்தரி

அந்தப் போராட்டத்தில் கைதாகி 98 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தவர் தோழர் சுந்தரி. அதுவரை, சமூக பிரச்சினைகளை பற்றி கண்டு கொள்ளாத 35 வயது நிரம்பிய சாமானிய குடும்ப பெண்ணான சுந்தரி தனது 2 குழந்தைகளுடன்  முதல்முறையாக போராட்டத்தில் பங்கெடுத்திருந்தார்.

தங்களது போராட்ட அனுபவத்தை பற்றி தோழர் சுந்தரியும், தோழர் மெல்ரெட்டும் சொல்லும் போது,

 போராட்டம் தொடங்கிய நாள் முதல் தினமும் காலையில் இருந்து இரவு வரை போராட்டப் பந்தலிலேயே இருந்தோம். ஊரே சேர்ந்து போராடினாலும் ஒரு பெண்ணாக போராட்டத்திற்கு செல்லக்கூடாது என்று தன்னை கொச்சையாகப் உற்றார் உறவினர்கள் பேசினார்கள். அனைவரையும் எதிர்த்துதான் தினமும் போராட்டக் களத்திற்கு சென்றேன். எங்கள் ஊரில் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் எங்கள் குழுவில் இருந்த பெண்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்.  பல கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் எங்களுக்கு ஆதரவாக பல இடங்களில் அறவழி போராட்டங்களை நடத்தினர். அதே போல ஒரு பெண் கனவிலும் நினைக்காத துன்பங்களையும் நாங்கள் சிறையில் அனுபவித்தோம். சிறை யில் இருந்து விடுவிக்கப்பட்டதும் உடல்நலம் பாதிக்கப்பட்டு எங்கள் சகபோராளி ரோசெலின் உட்பட 4 பேர் உயிர் இழந்தனர்.

தொடர் போராட்டம் நடத்தியதற்காக ஊரில் 144 தடை உத்தரவு விதிக்கபட்டு, உணவு பால் எதுவும் இல்லாமல் குழந்தைகளுடன் அவதிப்பட்டோம். தமிழகத்தில் ஒரு முள்ளிவாய்காளாகவே அன்று இடிந்தக்கரை இருந்தது.

சில ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் காரணத்திற்காக ஒருங்கிணைப்பாளர்கள் குழு கலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகும் பெண்கள் இந்த போராட்டத்தை அதே வேகத்துடன் நடத்தினோம்.

2016ல் ஆலைய விழாவிற்காக பந்தலை அகற்றும் சூழ்நிலை உருவானது. மக்களுக்காக போராடிய எங்களைத் தீவிரவாதி என்று அரசு முத்திரை குத்தியது. மேலும், 24 தேசதுரோக வழக்கு உட்பட 250க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது பதிவாகி உள்ளது. 10 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை வழக்கை எதிர்கொள்ள நாங்கள் அனைவரும் நீதிமன்றம் சென்று வருகின்றோம்.

அரசு எங்கள் கோரிக்கையை ஏற்று அணு உலையை மூடாவிட்டாலும், மீனவ கிராம மக்களாகிய நாங்கள் இந்த உலகிற்கே எங்கள் பிரச்சனையை கொண்டு சென்றுள்ளோம். இனி எங்கேயும் புது அணு உலை கட்ட மக்கள் அனுமதிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை  உலகிற்கு ஏற்படுத்தி உள்ளோம். இதுவே எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த மிக பெரும் வெற்றி. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் எங்கள் கோரிக்கையில் இருந்து நாங்கள் உறுதியாக பின்வாங்க மாட்டோம்.

தாங்கள் வாழும் சுற்றுசூழலை பாதுகாக்கவும் தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் எளிய மனிதர்களால், குறிப்பாக பெண்களால், நடத்தப்படும் போராட்டங்களே வலிமையாகவும் உறுதியாகவும் முன் நகர்கின்றன. சல்லிக்கட்டு புரட்சியை போன்று போராட்ட கோரிக்கைகளை வென்றெடுக்கவும் செய்கின்றன.

பணக்கார நாடுகள் தங்கள் லாபத்திற்காக மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளை நெருக்கடிகளுக்குள்ளாக்கி அந்நாட்டு மக்கள் மீது தங்கள் அடக்குமுறைகளையும் சுரண்டலையும் “உலகமயம், பொருளாதார வளர்ச்சி” என்ற பெயரில் தொடர்ந்து வருகின்றன.

மக்கள் அதிகம் வசிக்கும் மற்றும் மீன்பிடி வாழ்வாதாரம் சார்ந்துள்ள நிலபரப்பில் அம்மக்களின் அனுமதியின்றி பேராபத்தும் காலாவதியுமான அணுஉலை தொழில்நுட்பத்தை அவர்கள் மீது திணிக்கும் ஆட்சிமுறையை   “மக்கள் ஆட்சி” என்று அழைத்தால் நகைமுரண் தானே!

இப்படியான ஆட்சி முறையிலும் தங்கள் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திடும் போராட்டங்களில் தோழர்கள் மயிலம்மா, சுந்தரி, மெல்ரெட் போன்ற எளிய பெண்கள் தான் களவீரர்களாக, கதாநாயகர்களாக வரலாற்றில் நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

Translate »
Click to listen highlighted text!