அமெரிக்க அதிகார வெறியை எதிர்க்கும் ‘நோ கிங்ஸ்’ போராட்டம்

அண்மையில் ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள போருக்கு எதிராக அமெரிக்காவில் மக்கள் திரள் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அதிக எண்ணிக்கையில் (கிட்டத்தட்ட எண்பது லட்சம்) மக்கள் வீதிகளில் இறங்கி போராடியதோடு டிரம்ப்பின் சர்வாதிகார போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 2025இல் தொடங்கப்பட்ட ‘நோ கிங்ஸ்’ போராட்ட வடிவம், தற்போது அமெரிக்காவின் ஏகாதிபத்திய வெறிக்கு எதிரான பரப்புரையாக உருமாறி உள்ளது. அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிகளவில் மக்கள் திரளும் போராட்டங்களில் ஒன்றாக இந்த போராட்டம் மாறி வருகிறது. இந்த போராட்டத்திற்குக் காரணமாக அமெரிக்காவின் போர்வெறியும் அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுமே காரணமாக கூறப்படுகின்றன.

எப்போதெல்லாம் அதிகார வெறி அதிகமாகிறதோ, அப்போதெல்லாம் சனநாயகத்தை ஆதரிக்கும் வகையில் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுப்பதே ‘நோ கிங்ஸ்’ போராட்டமாக அமெரிக்க வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. இப்போது ட்ரம்ப்பின் ஆட்சி முடியாட்சி போல் இருப்பதை எதிர்க்கும் மக்கள் ஒன்றாக இணைந்து ‘நோ கிங்ஸ்’ போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக இரண்டாம் முறை பதவியேற்றத்தில் இருந்து தனக்கு அதிகளவில் அதிகாரம் வரும் வகையில் பல சட்டத்திருத்தங்களை செய்தார் டிரம்ப். நீதித்துறை, நிர்வாகம், காவல்துறையில் ஊடுருவிய ட்ரம்ப்பின் செல்வாக்கு பண பரிவர்த்தனை ஆணையங்களையும் விட்டுவைக்கவில்லை. அதே வேளையில் அண்டை நாடுகளை சீண்டுவது, மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப திட்டம் வகுத்தது என்று சர்வாதிகாரமாக செயல்பட்ட ட்ரம்ப் ஒரு கட்டத்தில் தன்னைத்தானே மன்னன் என்று மிகைப்படுத்தி கூறிக்கொண்டார். (இதை வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ தளங்களும் வழிமொழிந்தன.)

(படம்: வெள்ளைமாளிகையின் சமூக வலைதள பக்கத்திலிருந்து)

இதன் அடுத்த கட்டமாக உலகம் முழுவதும் போர்ச்சூழலை உருவாக்கினார் டிரம்ப். தற்போது (2026இல்) ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்கா, 2025 முதலே மத்திய கிழக்கிலும் ஆப்பிரிக்காவிலும் போர்வெறியாட்டத்தை தொடங்கி விட்டது. காசாவில் குழந்தைகள் முதற்கொண்டு பாலஸ்தீனிய மக்கள் பலரைக் கொன்று குவித்து இனப்படுகொலையைத் தீவிரமாக்கியது. அதனைத் தொடர்ந்து வெனிசுலா மீது தாக்குதலை நடத்தி அதன் அதிபரான நிக்கோலாஸ் மதுரோவைக் கடத்திச் சென்று சிறை வைத்தது. (இந்தத் தாக்குதலில் வெனிசுலா பொதுமக்கள் உட்பட 83 பேர் கொல்லப்பட்டனர்.)

கரீபியன் கடற்பகுதியில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் கப்பல்களைத் தாக்கி 151 பேரைக் கொன்றதும் நைஜீரியா, சோமாலியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளை அமெரிக்கா தாக்கியதும் பெருமளவில் செய்திகளாக்கப் படவில்லை. இதைப்போன்றே ஏமன், சிரியா போன்ற நாடுகளைத் தாக்கும்போது பல்வேறு சர்வதேச விதிமீறல்களையும் போர்க்குற்றங்களையும் புரிந்தது அமெரிக்கா.

தற்போது உலகையே நெருக்கடி நிலைக்குத் தள்ளும் வகையில் ஈரானைத் தாக்கி வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவும் இசுரேலும் நடத்தும் தாக்குதல்களால் ஈரானில் குறைந்தது 1,937 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ‘அல்ஜசீரா’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உட்பட பலரைக் கொன்றதோடு ஆயிரக்கணக்கில் மக்களைக் காயப்படுத்தியும் வருகிறது அமெரிக்கா.

இந்தப் போரினால் ஆசிய கண்டத்தில் மட்டுமல்ல அமெரிக்காவிலுமே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படத் துவங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணையைக் கடந்து வரும் எண்ணெய் போக்குவரத்து குறைந்துள்ளதால் உலகம் முழுவதுமே பாதிக்கப்படும்போது அமெரிக்க மக்களும் அந்த பாதிப்பை எதிர்கொள்ளத் துவங்கியுள்ளனர். ட்ரம்ப் எடுத்த முடிவுகளால் தாங்களும் பாதிக்கப்படுவதை உணர்ந்த மக்களும் இளைஞர்களும் இப்போது ‘நோ கிங்ஸ்’ போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நியூயார்க்கில் பேரணி நடத்திய அம்மக்கள் அமெரிக்க கொடியை தலைகீழாகப் பிடித்தபடி ட்ரம்புக்கு எதிராக முழக்கமிட்டுருக்கின்றனர். மேலும் இசுரேலுக்கு எதிராகவும் முழங்கியிருக்கின்றனர்.

இத்தகைய ‘நோ கிங்ஸ்’ போராட்டம் அங்கு நடப்பது முதல்முறையல்ல. கடந்த 2025 ஜூன் மாதத்தில் நடந்த போராட்டம் ட்ரம்பின் குடியேற்ற விதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டது. குடியேற்ற விதிகளைக் கடுமையாகக் கடைபிடிக்கிறோம் என்ற பெயரில் பிற நாட்டு மக்களை வேட்டையாடியது அமெரிக்க அரசாங்கம். இதனை எதிர்த்து அப்போது ஐம்பது லட்சம் மக்கள் களமிறங்கினர். அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் (ACLU) போன்ற சில மனித உரிமை அமைப்புகளின் ஆதரவோடு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேரணிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில் இரண்டாவது போராட்டம் நடைபெற்றது. தற்போது மூன்றாவது முறையாக நடைபெறும் ‘நோ கிங்ஸ்’ போராட்டம் அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகின்றது. ரோமில் வலதுசாரி அரசாங்கத்திற்கு எதிராக நடந்த பேரணியில் ஈரான் மீதான போரை எதிர்த்து மக்கள் பதாகைகளை உயர்த்திப் பிடித்திருக்கின்றனர். இதே போன்று லண்டன் பேரணியில் நடந்திருக்கின்றது. அமெரிக்காவின் அண்டை நாடுகளான மெக்ஸிகோ, கனடா நாடுகளிலும் போராட்டத்தின் பொறி துவங்கியிருக்கிறது.

ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்திய போது ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் “இசுரேலிய மன்னர்கள் அமெரிக்க ஜனநாயகம் மீது ஆட்சி செய்கிறார்கள்” என்று கூறினார். ஈரானில் ஒரு பள்ளியைத் தாக்கி குழந்தைகளை கொன்றபோதும் அந்த கொடுங்கோல் மன்னர்களின் போர்வெறி அடங்காமல் இருந்த நிலையில் தற்போதும்  சர்வதேச விதிகளை மீறி ஈரான் மீது போரைத் தீவிரப்படுத்தி இருக்கின்றது.

அமெரிக்காவின் அதிபர் டிரம்ப்பும் இசுரேலின் அதிபர் நெதன்யாகுவும் தங்களை மன்னர்களாகவும் சர்வாதிகாரிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் உலகமெங்கும் அவர்களுக்கு எதிர்ப்புக்குரல் எழுந்திருக்கிறது. காசாவில் இனப்படுகொலையை நடத்தி செயற்கையாக பஞ்சத்தை உருவாக்கியபோது மாணவர் உட்பட பல அமைப்புகள் உலகெங்கும் போராடின. இப்போது ஈரான் மீதான போரை எதிர்த்து போராட்டங்கள் துவங்கி இருக்கின்றன. கொடுங்கோல் மன்னர்களின் அரியணையை மக்கள் குரல் புரட்டிப்போடும் காலம் தொலைவில் இல்லை என்பதையே இந்த போராட்டங்கள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »