2026 தேர்தல் முடிவுகளின் பின்னணி குறித்து தோழர் திருமுருகன் காந்தியின் நேர்காணல்

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும், தவெக தலைவர் திரு. விஜய் அரசியல் குறித்தும், ஒரு ஓட்டு வாங்கிய பாஜக பற்றியும் சர்மிளா டாக்கீஸ் ஊடகத்திற்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மே 5, 2026 அன்று வெளிவந்த நேர்காணலின் தொகுப்பு:

சர்மிளா டாக்கீஸ் நேயர்களுக்கு வணக்கம். இந்த நேர்காணலில் நாம் சந்திக்க இருப்பவர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள். வணக்கம்!

பத்திரிக்கையாளரின் கேள்வி: தவெக கடந்த இரண்டு வருடங்களில் ஒரு புதிய சக்தியாக உருவாகி, இன்றைக்கு ஆட்சி அமைக்கப் போகிறார்கள். ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இடங்கள் இல்லை என்பதால் சி.பி.எம், விசிக போன்ற முற்போக்கு சக்திகளினுடைய ஆதரவை தவெககேட்டால், சி.பி.எம், விசிக பரிசீலனை செய்வோம் என்றும், காங்கிரஸ் ஏற்கனவே பேச்சு வார்த்தை தொடங்கிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தமிழக வெற்றிக்கழகம் என்பது: ஒரு பக்கம் வேட்பாளர்களாக எளிய மக்களும் (தலித்) வந்துள்ளார்கள். ஆனால் அதை வைத்து மட்டுமே இவர்கள் நல்ல ஆட்சியை கொடுத்து விடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியுமா? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தோழர் திருமுருகன் காந்தி பதில்: வணக்கம். இந்த தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்வதற்கான போதுமான தகவல் வர வேண்டும். தவெக பொறுத்தவரை, வேட்பாளர்களைப் பார்த்து மக்கள் ஓட்டு போடவில்லை, விஜய் என்கின்ற பிம்பத்திற்கும், அவர் மீதான அன்பின் அடிப்படையில் தான் வாக்களித்து உள்ளார்கள்.

நாங்கள் பல இடங்களில் பிரச்சாரம் செய்துள்ளோம், தவெக துண்டறிக்கையை கூட பார்க்கவில்லை, எங்கேயுமே யார் வேட்பாளர் என பார்க்கவில்லை, அவர் என்ன பின்னணி கொண்டவர்? அவர் எளிமையானவரா? அல்லது தலித்தா? என பார்க்கவில்லை. நாம் எப்படி ஒரு தியேட்டருக்குள் போகும் பொழுது பக்கத்தில் யார் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று கவலைப்படுவதில்லையோ, (சினிமா பார்க்கும் இடத்தில் எந்த ஆளு/ சாதி/மதம் எல்லாம் பார்க்க மாட்டாமோ, அதே தன்மையில் தான்), எந்த வேறுபாடும் இல்லாமல் ஒற்றை முகம், ரசிகர் தன்மை, ஒரு நம்பிக்கை அடிப்படையில் வாக்களித்து உள்ளார்கள். இந்த வேட்பாளர்களை கட்சி விளம்பரப்படுத்தவில்லை, விஜய் தான் எல்லா வேட்பாளர்களுக்குமான வெற்றியை வாங்கி கொடுத்திருக்கிறார்.

கேள்வி: நீங்களும் பெரியாரை முன்னிறுத்திதான் அரசியல் செய்கிறீர்கள். விஜய்யும் பெரியார், அம்பேத்கர், இடதுசாரி அரசியலை தொட்டு அரசியல் செய்வதாக சொல்கிறார். ”திராவிடமும் & தமிழ் தேசியமும்” என்னுடைய இரு கண்கள் என சொன்னார். ஆனால் வரக்கூடிய காலங்களில் எந்த அளவுக்கு அவர் ஆட்சியில் பின்பற்றுவார் என நினைக்கிறீர்கள்?

பதில்: அது குறித்து கடந்த இரண்டு வருடமாக அவர் விளக்கமாக பேசினாரா எனில் இல்லை. ஆனால் எதிர்நிலையை எடுக்கவில்லை. அவர் பெரியார் சிலைக்கு மரியாதை செய்தார். மாவீரர் நாளில் ஒரு பதிவுதான் போட்டார். அவர் பிஜேபியை போலவோ, சீமானை போலவோ முற்றிலுமாக பெரியாரை அவமானப்படுத்துவது, கொச்சைப்படுத்துவது என்கின்ற ஒரு பண்பை வெளிப்படுத்தவில்லை.

தமிழ் தேசியமும் திராவிடமும் படிநிலைகள் என்பதை நீண்ட காலமாக (17 வருடமாக) நாங்கள் பேசிக்கொண்டுதான் வருகிறோம். அதே மாதிரி ஒரு அரசியலை திரு.விஜய் முன் வைக்கிறார். அவர் கொள்கை ரீதியாக விளக்கி பேசக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்தினால், நமக்கு அதை பற்றியான மதிப்பீடுகள் புரியும். ஆனால் பாரதிய ஜனதா கட்சி சொல்வதை போல, மதவெறியை முன்னிலைப் படுத்துவதோ, சாதியை முன்னிலைப் படுத்துவதோ போன்ற வெறுப்பு அரசியல் முன் வைக்கப்படவில்லை. எல்லாரையும் இணைக்கின்ற அரசியல் தான் முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ’திராவிடம்’ என்கின்ற அந்த அரசியலுக்கான ஒரு சூழல் இங்கே இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. திமுக அதிமுக இல்லாவிட்டாலும் கூட, அன்றைக்கு விஜயகாந்த் வந்தப்போதும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று தான் பெயர் வைத்தார். அதேப்போல தமிழக வெற்றி கழகத்திலும் திராவிடத்தை ஏற்றுக்கொண்டு, பெரியாரை ஏற்றுக்கொண்டுதான் அரசியல் செய்கிறார். அதனால் திராவிடம் தமிழ்நாட்டிலிருந்து விலகிப் போகவில்லை என்பதை நாம் ஓரளவுக்கு புரிந்துக்கொள்ள முடியும்.

கேள்வி: இந்த தேர்தலில் ”டெல்லி vs தமிழ்நாடு” என்கின்ற ஒரு பிரச்சாரத்தை திமுக முன்னெடுத்தது. திமுகவை தவிர இங்கு யார் ஆட்சி அமைத்தாலும் அது டெல்லியினுடைய ஆளுகைக்கு ஆட்பட்ட ஒரு அரசியல் கட்சியாகத்தான் நடத்த முடியும் என்றார் ஸ்டாலின் அவர்கள், அப்படியாகத்தான் விஜயை நாம் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட போகிறதா? அல்லது டெல்லியினுடைய அதிகாரத்திற்கு விஜய் போயிடுவார் என்று எதிர்கட்சிகள் விமர்சனம் வைப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: தமிழ்நாட்டுக்கு ஒரு தனித்துவமான அரசியல் இருக்கிறது. தனி தமிழ்நாடு அரசியலை கட்டமைத்த போது டெல்லி அரசுக்கும் தமிழர்களுக்கும் முரண்பாடு 60 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் இருக்கிறது. காமராஜர் (காங்கிரஸ்) ஆட்சி நீக்கப்பட்ட காரணம் டெல்லி அரசு தமிழர் உணர்வுகளை புரிந்து கொள்ளாதது.

தமிழ்நாடு இட ஒதுக்கீடுப் பற்றி கவலைப்படாமல் ஒன்றிய அரசு எதிர்நிலை எடுத்தது, தமிழ்நாடு என்ற பெயர் வைப்பதற்கு அனுமதிக்காமல் போனது, இந்தியை திணிப்பது போன்ற எதேச்சதிகாரமான வேலைகளை அன்றைய நேரு அரசு மேற்கொண்டது, சாஸ்திரி அரசும் அதையே செய்தது, அப்போதே அதை எதிர்த்து நின்றுதான் தமிழ்நாடு போராடியது. டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான முரண்பாடுகள் என்றைக்கும் நமக்கு இருக்கிறது. அதற்கு பிறகுதான் மாநிலத்துக்குள்ளாக இருக்கக்கூடிய கட்சிகளுக்கு இடையான வேறுபாடுகளை நாம் இரண்டாவதாக பார்க்கிறோம்.

இப்போது பாரதி ஜனதா கட்சி தமிழ்நாட்டை நசுக்க பார்க்கிறது, அதற்கு எதிரான ஆட்சியில் திமுக அரசு சண்டை என்கின்ற முதன்மை முரண்பாட்டை வைத்தார்கள். விஜய் முதன்மை முரண்பாடு பாஜகவுக்கு எதிரானது என்றாலும், அது குறித்து எதுவும் பேசவில்லை, அது குறித்தான தீவிரமான எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை, அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. அவர்கள்(தவெக) திமுகவுக்கு எதிரான அரசியலை மட்டுமே முன்னிலைப்படுத்தக்கூடியதாக பரப்புரை இருந்தது. அப்போது மாநில தேர்தலில் இந்த வாதம் மக்கள் கவனத்துக்குப் போனதாகதான் நாம் பார்க்க முடிகிறது. தற்போது முதன்மை முரண்பாடாக இருக்கக்கூடிய இந்திய அரசு உடனான முரண்பாடு என்ன? என்பதை குறித்து திரு. விஜய் இனிவரும் காலத்தில்தான் எதிர்கொள்ள போகிறார்.

ஏனெனில் அதிமுக ஆட்சி காலத்திலும் (எடப்பாடியார்) பாஜகவோடு நெருக்கமாக இருந்தப்போதிலும் தமிழ்நாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டேதான் வந்தது. அதையெல்லாம் அன்றைக்கு எடப்பாடியார் அரசு ஏற்றுக்கொண்டது. திமுக ஆட்சி காலத்தில் ஒன்றிய அரசு நமக்கான எல்லா உரிமைகளிலும் நெருக்கடி கொடுப்பதை வேலையாக வைத்தார்கள். நிதி கொடுக்காமலும், இந்தியை திணிப்பது போன்ற வேலைகள் எல்லாம் செய்தார்கள். சட்டமன்ற தீர்மானங்களை நிறைவேற்ற விடாமல் செய்தார்கள். இதனை எதிர்த்த சண்டையாகதான் ஐந்து ஆண்டுகள் கழிந்தன. அதனால் பாஜக என்பதை ஒரு முதன்மை முரண்பாடாக திமுக முன்வைத்தார்கள்.

ஆனாலும் இதுபோன்ற எந்த போராட்டத்திலும் பங்கெடுக்காத ஒரு நபராக அல்லது கட்சியாக ’தமிழக வெற்றி கழகம்’ இருக்கிறது. கடந்த 10 ஆண்டு காலமாக பாரதிய ஜனதா கட்சியினுடைய நெருக்கடி எதிலும் முகம் கொடுக்காத ஒருவராக விஜய் இருக்கிறார். இந்த நெருக்கடி குறித்து எந்த இடத்திலும் எதிர்வினை ஆற்றாத இடத்தில், அவர் தன் கட்சியை வளர்த்து எடுத்து விட்டார். இனிமேல் ஆட்சி அமைத்த பின்னால் எதிர்கொள்ள போகிறார். அந்த இடத்தில் இனிமேல் திமுகவையோ அல்லது அதிமுகவையோ குறை சொல்ல முடியாது.

நீங்கள்(தவெக) ஆட்சி அமைத்து விட்டீர்கள் எனில், இனி இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்ள போகிறார்? அல்லது இந்த நெருக்கடியை எப்படி பாஜக கட்டமைக்க போகிறது? அதற்கான விஜயின் எதிர்வினை என்னவாக இருக்கிறது? என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டி இருக்கும். அதனால் இந்த இரண்டு தன்மையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டியதாக நான்(திரு) பார்க்கிறேன்.

கேள்வி: இந்த தேர்தல் நீங்கள்(மே 17) திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்தீர்கள். ஆனாலும் சில இடங்களில் தோல்வி அடைந்துள்ளார்கள். இந்த தேர்தலை மே 17 இயக்கம் எப்படி பகுப்பாய்வு செய்கிறீர்கள்? தேர்தல் தோல்விகளை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: திமுகவுடைய கூட்டணி கட்சிகளுக்கு தான் பேசினோம். குறிப்பாக விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கம்யூனிஸ்டுகள், இஸ்லாமிய அமைப்புகள் இதுபோன்ற ஜனநாயக அமைப்புகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தோம். எனெனில் மக்களுக்காக போராட்ட களத்தில் இருக்கக்கூடிய அமைப்புகள் இவர்கள்.

கடந்த 2021 தேர்தலிலும், இப்போது நடந்த தேர்தலிலும் திமுக தரப்பில் ஒரு குறைபாட்டை பார்க்கிறேன். எனெனில் அவர்கள் அரசியலை முன் வைக்கவில்லை. அதாவது வெறும் நலத்திட்டங்களை முன் வைத்தனர். மக்கள் அதை மட்டுமே பார்ப்பதில்லை. தமிழ்நாடு மக்கள் அந்த கட்டத்தை தாண்டி விட்டார்கள். அன்றைக்கு பிரசாந்த்கிஷோர் உடைய வழிகாட்டுதல் இந்த தேர்தலிலும் தொடர்ந்தது. அது என்னவெனில் நன்மைகள், நல்லாட்சி, பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுவதுமாக இருந்தது. இது வட இந்தியாவுக்குதான் செல்லபடியாகும். எனெனில் வட இந்தியாவில்தான் அந்த மாதிரியான ஒரு சூழல் இருக்கிறது. உணவுக்கோ அல்லது அடிப்படை வசதிகளுக்கு, கட்டமைப்பு வசதிகளுக்கான ஒரு தேவை இருக்கிறது. அதனால் பிரசாந்த் கிஷோர் யோசனை அங்கேதான் செல்லுபடி ஆகும். இவர் மிக நுணுக்கமாக பாஜக எதிர்ப்பு அரசியலை தேர்தலில் வெளிய வராமல் பார்த்துக்கொண்டார்.

2021-ல் நாங்கள் திமுக கூட்டணிகளுக்கு (தோழர் வேல்முருகன், தோழர் ஜவாஹிருல்லா, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு) பரப்புரை செய்ய போன பொழுது, அன்றைக்கு இருந்த பிரசாந்த் கிஷோரின் தலைமையில் இருந்த அந்த அணி எங்களுடைய பரப்புரையை பல இடங்களில் தடுத்தார்கள்.

தமிழ்நாடு கொள்கை அடிப்படையில் தான் தேர்தலை எதிர்கொள்ளக்கூடிய மாநிலம், நலத்திட்டங்கள் அடிப்படையில் பார்க்காது என்று எச்சரித்து சொன்னோம். 2026 தேர்தலிலும் அதே நிலைப்பாடுதான் எடுத்தார்கள். ’இன்றைக்கு இருக்கும் முதன்மை முரண்பாடை பற்றி முதலில் பேசுங்கள்’ என சொன்னோம். வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் என்பது என்றைக்குமே தமிழ்நாட்டு தேர்தலைப் பொறுத்தவரைக்கும் மைய பொருள் அல்ல.

1960களில் இருந்து திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் நலத்திட்டங்கள் வரிசையாக அண்ணாவோ, கலைஞரோ, ஜெயலலிதாவோ, எம்ஜிஆரோ மாற்றி மாற்றி கொடுத்துதான் இருக்கிறார்கள். அதனால் நலத்திட்டங்கள், இலவச திட்டங்கள் கிடைக்கும் என்று மக்களுக்கு தெரியும்.

இரண்டாவது, மக்கள் வாழ்நிலை என்பது கடந்த 40/50 ஆண்டு காலத்தில் மாறி இருக்கிறது. திரு. ஸ்டாலின் அவர்களும் திராவிட மாடல் அரசில் தமிழ்நாட்டில் சமூக பொருளாதார நிலை வளர்ந்து இருக்கிறது என்று சொல்கிறார், அப்போது அந்த இடத்தில் இந்த நிலைப்பாடு எடுபடவில்லை. இன்னும் 1000 ரூபாய் மாதம் தருகிறேன், இலவசமாக பேருந்து பயணம் தருகிறேன் என்பது மக்களுக்கு ஒரு பெரிய உந்துதல் கிடையாது. ஒரு அரசு கொடுக்கக்கூடிய உதவி என்பதில் மகிழ்ச்சி. ஆனால் அது தேர்தலுக்கான ஒரு முழக்கம் கிடையாது என்று நினைக்கிறேன். அது பெண்களை கவர்ந்துவிட முடியும் என்று யாரோ ஒரு தவறான பரப்புரையை நம்ப வைத்திருக்கிறார்கள்.

இந்த 2026 தேர்தலில் திமுக சார்பில் எத்தனை பேர் பிரச்சாரர்களாக இறக்கப்பட்டார்கள்? தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் & துணை முதலமைச்சர் தவிர பெரிதாக யாருமே பேசவில்லை, என்ன கொள்கைகள் பேசப்பட்டது? குறிப்பாக எடப்பாடியார் குறித்தான எதிர்வினையை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் மட்டுமே பேசினார். அது அல்ல அரசியல். இன்றைக்கு திமுக அதிமுகவுக்கான ஒரு இடமாக மட்டும் இருந்தது. விஜய் இவர்கள் இரண்டு பேரையும் எதிர்த்து பேசினார். விஜய்யை எதிர்த்து யாரும் விமர்சிக்கவில்லை, அவர் கொள்கை என்ன? ஒரு விவாதத்திற்கு வர வேண்டும் அல்லவா?

திரு. விஜய் ஒரு ஆற்றலாக வருகிறார், கூட்டத்தை திரட்டி காண்பிக்கிறார், அவரை அப்படியே கடந்து போவதனால் நீங்கள் அரசியலில் வென்றுவிட முடியாது. நீங்கள் எவ்வளவு சிறியவராக இருந்தாலுமே, அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. விஜயிடம் அரசியல் கேள்வி வெளிப்படையான விவாதத்தை திமுகவோ, அதிமுகவோ வைத்திருந்தால், விஜய் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்திருக்கும்.

கேள்வி: அப்போது எதிராளியை குறைத்து மதிப்பீடு செய்து விட்டார்களோ?

பதில்: அரசியல் களத்துக்குள் ஜனநாயக தளம் என ஒன்று இருக்கிறது அல்லவா, அது யாராக இருந்தாலும் பதில் அளிக்க வேண்டும் அல்லது எதிர்வினை ஆற்ற வேண்டும் அல்லவா!

சீமான் பெரியார் குறித்து அவ்வளவு கீழ்த்தரமான அரசியல் பேசினார். அதற்கு திமுகவிலிருந்து யார் பேசினார்கள்? என்ன எதிர்வினை நடந்தது? இது அப்படியே மக்களிடம் விட்டுவிடுவீர்களா? இதெல்லாம் தேர்தல் கணக்கில் போட முடியாது. திரும்ப பதில் பேச வேண்டும். அந்த தன்மையை வளர்க்க வேண்டும்.

விஜய் பேசுகிறார் எனில், சரி நேராக விவாதத்துக்கு வாங்க, உங்கள் வேலை திட்டம் என்ன? சொல்லுங்க, நாங்கள் எப்படி சமூகத்தை பார்க்கிறோம், இந்த பிரச்சனையை எப்படி பார்க்கிறேன் என பேசுவோம் என்ற ஆரோக்கிய அடிப்படையில் நடக்க வேண்டும் அல்லவா!

விஜய் இரண்டு ஆண்டுகளாக (வெற்றி பெற்றதுக்கு பிறகும்) எந்த இடத்திலும் ஊடகத்தை சந்திக்கவில்லை. அதேபோல மோடியும் சந்திப்பதில்லை. ஊடகம் என்பது ஜனநாயகத்தில் முக்கியமானதாகும். அங்குதான் உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய இடமாக இருக்கிறது. விவாதிக்க வேண்டிய இடம் இருக்கிறது. அந்த விவாதத்துக்கு திரு. விஜயை அழைக்கவே இல்லை. விஜய்க்கு யாருமே பதிலே சொல்லவில்லை. அதிமுக, பாஜக, சீமான் இவர்கள் எல்லாம் திமுகவை மட்டுமே விமர்சித்து பேசினார்கள்.

கேள்வி: விஜயை குறைத்து மதிப்பீட்டு விட்டார்களோ?

பதில்: அதை உங்களை போன்ற ஊடகங்கள் தான் கேட்டு சொல்ல வேண்டும். அரசியல் களத்தில் பெரியதோ சிறியதோ சொல்ல முடியாது. எல்லாவற்றுக்கும் பதில் பேசிதான் ஆக வேண்டும். ஒரு கருத்து உங்களுக்கு எதிராக வருகிறதா, அதற்கு பதில் பேசிதான் ஆக வேண்டும். அதை ஜனநாயக மரபாக நான் பார்க்கிறேன்.

திமுகவுக்கு எதிராகவோ, திராவிடத்திற்கு எதிராகவோ பிஜேபி பல அவதூறுகளை பேசிக்கொண்டே இருக்கும், சீமான் பொய்யாக பேசிக்கொண்டே இருப்பார். அதிமுக சில கேள்விகளை எழுப்பும். கட்சிகள் பல வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வருகிறார்கள், அதனை நிறைவேற்றவில்லை அல்லது தீர்க்கப்படவில்லை எனில், அது மக்கள் மனதில் இருக்கும். அது சாராயப் பிரச்சனை, சிப் கார்ட் திட்டம், எட்டு வழி சாலை திட்டம், ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு போன்ற இந்தனை சிக்கல்களுக்கு திமுக நடவடிக்கை எடுக்காமல் போனது. இது எல்லாமே சேர்ந்து என்னவாகும்? ஒரு பக்கம் நியாயமான எதிர்ப்புகள். இன்னொரு பக்கம் அவதூறுகள்.

மேலும் ஊழலை ஒழிக்க வேண்டும் என பேசுகிறார்கள். அதை சீமானால் ஒழிக்க முடியாது, அதிமுக ஒழிக்க முடியாது, பிஜேபி ஒழிக்க முடியாது. ஆனால் இவர்கள் எல்லாம் ஊழல் பண்ணக்கூடிய ஆட்கள். அப்போது ஊழலை ஒழிப்பதற்கு இதுவரைக்கும் களத்தில் இல்லாத ஒருத்தர்(விஜய்) இருக்கிறாரே என அவருக்கு போய் விடுவார்கள்.

பெண்களுக்கான பாதுகாப்பு இல்லை என பேசுகிறார்கள், பிஜேபி ஆட்சியில் பெண்கள் நிலை என்ன? என இந்தியா முழுக்க பெண்கள் மீது வன்முறை நடப்பதை எல்லாரும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பிரச்சனை வந்தது, சீமானின் பாலியல் வழக்கு வந்திருக்கிறது. பெண்கள் மீதான வன்முறை என்பதோ, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இந்த கட்சிகள் எல்லாம் பேசியபோது, பெண்கள் மீதான பிரச்சனைக்கு இவர்கள் தீர்ப்பு தர முடியாது என்பதை  அவர்கள் நினைத்து முடித்து விட்டார்கள்.

பாலியல் வழக்கை வைத்துக்கொண்டு சீமான் எப்படி தீர்வு தருவார்? பொள்ளாச்சி பிரச்சனையை வைத்துக்கொண்டு அதிமுக எப்படி தீர்வு தரும்? ஊர் முழுக்க பெண்கள் மீதான வன்முறையை பிஜேபி செய்துக்கொண்டே எப்படி பெண்களுக்கான தீர்வோ, பாதுகாப்பு தர முடியும்? அதனால் தான் பெண்கள் பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு தீர்வை அவருக்கு (விஜய்க்கு) கொடுத்து விட்டார்கள். அவரும் அறுவடை செய்துவிட்டார்.

கேள்வி: மக்கள் விஜயை மாற்றாக யோசித்தார்கள் என சொல்லும்போது, அந்த மாற்று என்னவென்று அந்த தலைவர் பெரிதாக சொல்லவில்லையே?

பதில்: ஆமாம், இதை பற்றி எதுவுமே பேசவில்லை. அவருக்கு அது தெரியாது. இதெல்லாம் அறுவடையாக தனக்கு வரும் என்பதெல்லாம் அவருக்கு தெரியாது. ஒரு திரை உலகத்தில் இருப்பதால் ஒரு படத்தை பற்றியான ஒரு ஆர்வத்தை தூண்டுகின்ற வேலையை இரண்டு வருடமாக செய்தார். 35 வருடமாக திரையில் மட்டும் தான் பார்த்திருக்கிறோம். அவர் மேல் ஒரு அன்பு இருக்கிறது, எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை பாதுகாத்து இருந்தார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த பிரச்சனைகள் எல்லாம் பேசப்படும் பொழுது, அந்த பிரச்சனைகள் எல்லாம் விஜய் பேசவில்லை, மேலோட்டமாக தொட்டு காண்பித்துவிட்டு போனாரே ஒழிய, வேற ஒன்றும் செய்யவில்லை. விஜயை பார்க்க மகிழ்ச்சியாக வந்த கூட்டம் அது. பிரச்சனைகளை பற்றி பேசியது கட்சிகள். ஆனால் அறுவடை செய்தது விஜய். இதை திமுக கையாண்டு இருக்க வேண்டும்.

கேள்வி: ஆனால் இந்த விஜயினுடைய வெற்றியில் பார்ப்பனர்கள்/ உயர்சாதியினர் ஒரு சிலர் மிகுதியாக கொண்டாடுகிறார்கள். ”சனாதனத்தை ஒழிப்பேன் சொன்னீங்களேடா, இப்ப வாங்கடா” என்று சில நபர்கள் வீடியோ போடுவதை பார்க்க முடிகிறது, ’திராவிடம் அவ்வளவுதான் முடிந்தது’, ’கழகங்கள் இல்லா தமிழ்நாடு ஆக்கிட்டோம்’ என்று சிலாகித்து சொல்கிறார்களே, அதை எப்படி பார்ப்பது?

பதில்: திமுக, அதிமுக, தவெக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் திராவிடத்தை ஏற்று கொண்டவர்கள். மொத்தம் 234 தொகுதியில் 233 தொகுதியில் திராவிடம் வென்றுள்ளது. ஒரே ஒரு இடத்தில் பிஜேபி வென்றுள்ளது. இதுதான் பிஜேபிக்கான மரியாதை. இவர்கள் பெரியார் சிலை உடைப்போம் என்றார்கள், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவோம் என்று சொன்னார்கள், கலவரத்தை உருவாக்கினார்கள். நமக்கான கல்வி நிதியை நிறுத்தினார்கள், மெட்ரோ வேலைகளை தடுத்தார்கள், மசோதாக்கள் வரவிடாமல் நிறுத்தினார்கள், போன்ற எத்தனையோ நெருக்கடிகளை பிஜேபி உருவாக்கியது.

மத மாற்றம் நடக்கிறது என சொல்லி அந்த பள்ளிக்கூடத்தை மிக மோசமான பிரச்சனையாக மாற்றினார்கள். அண்ணாமலையை 24 மணி நேரமும் டிவியில் காண்பித்தார்கள். ஆனால் அவர் ஒரு போராட்டத்தையும் செய்யவில்லை. ஒரே ஒரு போராட்டத்துக்கு வந்தபோது போலீஸ் கைது செய்ய முயன்றபோது உடனே ஆட்டோவில் ஏறி தப்பித்து ஓடிவிட்டார்.

இந்த தேர்தலில் மோடி வந்தார், அமித்ஷா வந்தார், யோகி பேசினார், மகாராஸ்டிரா முன்னாள் முதல்வர் என எத்தனை பாஜகவினரை இறக்கினார்கள், ’அதிமுக கூட்டணி’ போய் தற்போது ’பிஜேபி கூட்டணி’ என மாற்றினார்கள், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக கட்சியை டெல்லிக்கு வரவழைத்து கூட்டணி பேசினார்கள், எடப்பாடியாரை முதலமைச்சராக அறிவிக்க முடியாது என சொல்லி தவிர்த்தார்கள், எஸ்ஐஆர்-ல் கிட்டத்தட்ட 79 லட்சம் வாக்குகளை நீக்கினார்கள், சனாதனம் பேசி நீதிபதியையும் & ஆளுநரையும் வைத்து அழுத்தத்தை கொடுத்தார்கள், இங்கு இருக்கக்கூடிய மக்களை எல்லாம் கொச்சைப்படுத்தியும் இழிவுப்படுத்தியும், இத்தனை அக்கிரமங்களை செய்தும், 234-ல் ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் அதிமுக போட்ட பிச்சையில் வென்றது பிஜேபி. இங்கு சனாதனமா வென்றது? அல்ல திராவிடம் தான் வென்றது.

கேள்வி: ஆனால் விஜயை கொண்டாடுவதற்கான (பார்ப்பனர்கள்) காரணம் என்ன?

பதில்: வேறு ஒன்றும் இல்லை, விஜயை பார்ப்பனர்கள் பக்கம் இழுக்க வேண்டும் என விரும்புகிறார்கள். (பாஜக+) 40 சீட்டில் ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது. நயினார் நாகேந்திரன், வானதி, தமிழிசை, எல்முருகனை மக்கள் மொத்தமாக துடைத்து எறிந்துவிட்டார்கள். அப்படி என்றால் மக்களுக்கு விஜய் பிடிக்கிறது, திமுக பிடிக்கிறது, அதிமுக பிடிக்கிறது என்று மக்கள் சொல்லிவிட்டார்கள். ஆர்எஸ்எஸ் பலமாக இருக்கக்கூடிய கன்னியாகுமரியில் வெல்லமுடியவில்லை, மதுரையில் கலவரம் செய்த திருப்பரங்குன்ற தொகுதியில் வெல்லமுடியவில்லை, கோயம்புத்தூரில் வெல்லமுடியவில்லை, அப்புறம் பிஜேபி கட்சி எங்கே சனாதானம் வென்றது என சொல்லமுடியும்? மக்கள் சனாதனத்தை தூக்கி போட்டு மிதித்து விட்டார்கள். பிராமண கடப்பாறை தூக்கிட்டு வந்த சீமானையும் தூக்கி வீசிவிட்டார்கள். அவ்வளவு தான் விடயம்.  

தவெக தொண்டர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. விஜயின் ரசிகர்கள் மதவெறியை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் தமிழ் மக்களுக்கு யாரை தேர்ந்தெடுக்க கூடாது என்பதில் தெளிவு இருந்தது. அந்த இடத்தில் தான் நான் இதை பார்க்கிறேன்.

நன்றி! நிறைய விடயங்களை பகிர்ந்து உள்ளீர்கள்.

நன்றி! வணக்கம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »