
தமிழ்நாட்டில் தவெக கட்சி ஆட்சி அமைப்பதற்கு முன் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் விகடன் ஊடகத்திற்கு மே 9, 2026 அன்று அளித்த நேர்காணல். இதில் தவெக ஆட்சிக்கு இருக்கும் சவால்கள், அறிவுசார் கட்டமைப்புகளை வளர்க்கும் திட்டங்கள் குறித்தான தொகுப்புகள்:
பத்திரிக்கையாளர்: விகடன் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய சிறப்பு நேர்காணலில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்களை சந்திக்க இருக்கிறோம். வணக்கம்.
பத்திரிக்கையாளரின் கேள்வி: தவெக 108 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியில் ஐந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ளார்கள், போதுமான பலமில்லை என சொல்லி ஆளுநர் தொடர்ந்து பதவியேற்க அழைப்பு கொடுக்காமல் தவிர்க்கிறார். இந்த சூழலில் கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. தற்போதைய சூழலில் விஜய் அவர்கள் மீண்டும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
தோழர் திருமுருகன் காந்தியின் பதில்: வணக்கம். எல்லா வகையிலும் துணை நிற்கக்கூடிய தோழமை கட்சிகளுடன் செல்வது நல்லது. அப்படி ஒன்றாக போய் நிற்கும் போது ஆளுநரால் மறுக்க முடியாது, சட்ட விரோதமாக எதுவும் செய்ய முடியாது. தோழமைகள் உடன் நின்றால், திரு. விஜய்க்கு வழிக்காட்டுதல் செய்வதற்கான பொறுப்பு எடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதாக நான் பார்க்கிறேன்.
கேள்வி: இங்கு குதிரை பேரம் நடக்கிறது என்ற புகாரை டிடிவி தினகரன் அவர்கள் முன் வைத்தார். அப்படியான ஒரு விடயத்தை சொல்லி ஆளுநர் நிராகரிக்கக் கூடாது என்றுதான் எல்லா கூட்டணி கட்சி தலைவர்களும் போயுள்ளார்களா?
பதில்: இருக்கலாம், இத்தனை தலைவர்களும் வந்துள்ளார்கள் என்றால், எந்த குற்றச்சாட்டை சொல்லியும் ஆளுநர் தள்ளிபோட முடியாது. மேலும் தவெகவுக்கு ஆதரவு அளித்த தோழமை கட்சிகளுக்கு அனுபவம் இருக்கிறது. அதனால் மிக எளிமையாக கையாண்டு விடுவார்கள். வேறு ஏதாவது ஒரு விடயத்தை ஆளுநர் முயற்சித்தாலும் இத்தனை கட்சிகள் ஒன்றாக இருக்கும் போது, அது ஒரு பெரிய அழுத்தத்தை கொடுக்கும், அந்த வலிமை தேவை என நினைக்கிறேன்.
கேள்வி: ஒருபுறம் தவெக 108 எண்ணிக்கை இருக்கும் போதே ஆளுநர் இப்படியான ஒரு முடிவு எடுக்கிறார். மறுபுறம் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சி செய்கிறார்கள், அதற்கு திமுகவே தயாராக இருந்தார்கள் என்ற ஒரு பேச்சு வருகிறது. அதனால் கூட ஆளுநருக்கு எதிரான கருத்துக்கள் பெரிய அளவில் இங்கு வராமல் இருந்ததோ என்கின்ற ஒரு கேள்வியும் எழுந்து இருக்கிறதே?
பதில்: அது உறுதியாகத் தெரியவில்லை. என்னவெனில் திரு. விஜய் மே 5, 2026 (புதன்கிழமை) கடிதம் கொடுக்கிறார். அப்பொழுதே ஆளுநர் ஒத்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும். சட்டப்படி பாத்தாலே மிக தெளிவாகவே ”சர்காரியா கமிஷன்” சொல்லியிருக்கிறது. அதற்கு முன் 1971-ல் அதற்கான மாதிரி அறிக்கை போட்டுள்ளார்கள், ”பூஞ்சி கமிட்டி அறிக்கை” வந்துள்ளது, உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இருக்கிறது. பாஜக கர்நாடகத்தில் இந்த வேலையைத்தான் பார்த்தார்கள். இத்தகைய சூழலில் திரு. விஜய் கட்சி தரப்பில் மிக தெளிவாக சொல்லி இருந்தால், ஆளுநர் எவ்வளவு மெத்தனமாக நடக்கிறார் என்பதை எல்லாரும் புரிந்து கொண்டு இருந்திருப்பார்கள்.
நான் ஆளுநர் பற்றி பேச வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் ஆளுநருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இவர் மத்திய அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட நபர். பாஜக கட்சியிலிருந்த நபர். சட்டம் என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்துவதுதான் ஆளுநரின் வேலை. சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை எனில், அவர் மேல் நாம் மரியாதை வைக்க வேண்டும் என்கின்ற அவசியமே கிடையாது. அரசியல் சாசனம் என்ன சொல்கிறதோ அதற்குத்தான் நீங்களும் நானும் எல்லாரும் கட்டுப்படுகிறோம். அதை செய்யாத நபரை நாம் மக்கள் எதிரியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அது எந்த கட்சியாக இருந்தால் என்ன? மாநில உரிமை மேல் தேவையில்லாத நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் ஏன்?
கேள்வி: அன்றைக்கு 108 எண்ணிக்கை இருந்தது, தவெகவுடைய எம்எல்ஏக்கள் மட்டும் தனிப்பெரும் கட்சி என்கின்ற அடிப்படையில் முதலமைச்சர் பதவி ஏற்பதற்கான அனுமதி ஆளுநர் கொடுத்திருப்பார், ஆனால் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும் சேர்த்து கொடுத்திருந்தார்கள். அதனால் கூட்டணி எனும் போது, அதற்கு 118 இடங்கள் தேவை என்ற அடிப்படையில் ஆளுநர் நிராகரிப்பு செய்யலாம் அல்லவா?
பதில்: “இப்போது 108 என்றுதான் கொடுத்திருக்க வேண்டும். ஐந்தை காங்கிரஸ் கணக்கில் காட்டாதீர்கள்” அப்படித்தானே சொல்கிறார்? மொத்தம் 3 வகை:
- தேர்தலுக்கு முந்தைய கூட்டணி,
- தனிப்பட்ட முறையில் அதிக எண்ணிக்கை வைத்திருப்பவர்கள் (அது பெரும்பான்மை இல்லை என்றாலும் பரவாயில்லை),
- தேர்தலுக்கு பிறகு ஒரு கூட்டணி உருவாக்கி, அதில் பெரும்பான்மை காட்ட வேண்டும்
தவெக தனிப்பட்ட முறையில் அதிக எண்ணிக்கை வைத்திருப்பவர்கள் அல்லவா? அப்போது கடிதத்தில் “கூட்டணி சேர்ந்தால் 118 வரவேண்டும் அதனால் வேறு பெரும்பான்மை நீருபிக்க வேண்டும்” என்று கூறி வேறு கடிதம் கேட்டிருந்தால் வேலை முடிந்திருக்கும்.
கேள்வி: ஆனால் அவர் அப்படி அல்ல, ‘118 எம்எல்ஏக்களை கொண்டு வாங்க’ என்கிறாரே?
பதில்: அது அவருடைய வேலை இல்லை. ஒரு அரசுக்கு போதுமான பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா? என்று முடிவு செய்ய வேண்டியது சபாநாயகரும் சட்டசபை மன்றமும் தான். அதுவே மக்கள் கவனிக்கும் இடம். இதில் ஒரு தனிநபர் உட்கார்ந்து கொண்டு வாத்தியார் மாதிரி நடந்து கொள்வார் எனில், இந்த ஆளுநர் யார்?
கேள்வி: இப்படி விஜய் மேல் அவர்களுக்கு என்ன கோபம்?
பதில்: எது வேண்டுமானாலும் இருக்கலாம், அதாவது ஜோசப் விஜய் எப்படி முதலமைச்சர் ஆகலாம்? என கூட இருக்கலாம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஜோசப் விஜயோ, அல்லது முகமது விஜயோ, அல்லது முருகன் விஜயோ பிரச்சனை இல்லை. எங்களுக்கு பிடித்த ஒருவரை தேர்ந்தெடுக்கிறோம் என மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள். ஆனால் பிஜேபிகாரனுக்கு பிடிக்கவில்லை, மோடிக்கு பிடிக்கவில்லை. ‘ஜோசப் விஜய் எப்படி வரலாம்?’ என்ற ஒரு வெறுப்பு இருக்கலாம்.

கேள்வி: விஜய் அவர்களுடைய வருகை பிடிக்கவில்லையா? அல்லது காங்கிரசோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது பிடிக்கவில்லையா?
பதில்: இங்கு காங்கிரசு கொடுப்பது ஒரு சிறிய ஆதரவு மட்டுமே.
கேள்வி: ஆனால் அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வரை காங்கிரசு கூட்டணி தொடரும் என்ற ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். அதனை வைத்துக்கொண்டு இப்படியான விவாதங்கள் எழுகிறது, தடைகளும் வருகிறது, அடுத்து வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்கின்ற அடிப்படையில், பிஜேபி விஜய் முதல்வர் ஆவதை தடுக்க நினைக்கிறது என பார்க்கலாமா?
பதில்: திமுக, அதிமுக ஏற்கனவே பல காலமாக இருக்கக்கூடிய கட்சி. பாஜக இந்த கட்சிகளை எப்படி கையாள வேண்டும், இதற்குள் இருக்கிறவர்களின் பின்னணி என்ன? அவர்களுடைய சாதக பாதகமான விடயங்கள் என்ன? அதை வைத்து என்ன வழக்கு போடலாம்? என்ன மிரட்டலாம்? என்கின்ற ஒரு பட்டியல் வைத்து இருக்கும். ஆனால் தவெக என்பது புது கட்சியாக வந்து இருக்கிறது. இதற்கு அப்படி ஒரு பின்னணி எல்லாம் இல்லை. இதில் விஜய் மட்டும்தான் நன்கு அறிமுகமான ஒருவர். அவருக்கு நெருக்கடி கொடுத்துவிட்டு அந்த கட்சியை நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் என்கிற முயற்சிகள் இருக்கலாம். இந்த மாதிரியான ஒரு ஆற்றல் தேர்தல் அரசியல் வழியாக வருவதை பிஜேபி விரும்பவில்லை.
இதேபோல ஆம் ஆத்மி கட்சிக்கு எவ்வளவு நெருக்கடியை பிஜேபியினர் கொடுத்தார்கள். ஊழல் வழக்கு போட்டு முதலமைச்சர் & துணை முதலமைச்சர் அவர்களை சிறைக்கு அனுப்பினார்கள், இறுதியில் நீதிமன்றம் இருவரையும் நிரபராதி என சொல்லிவிட்டது. இருப்பினும் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவி இழந்தார், தேர்தலில் முறையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. துணை முதலமைச்சர் ஒன்றரை வருட காலமாவே சிறையில் இருந்தார். இவ்வளவு நெருக்கடியை அந்த கட்சிக்கு கொடுத்தனர் பாஜகவினர். இத்தனைக்கும் டெல்லி என்பது ஒரு சிறிய பரப்பளவிலான இடம், அது மாநில அளவுக்கு பெரிது கிடையாது. அதற்கே இவ்வளவு தூரம் பிஜேபியினர் வன்மத்தை காண்பித்தார்கள். அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
தமிழ்நாடு இந்தியாவில் மிகப்பெரிய ஒரு பொருளாதார சேமிப்பு கருவி (power bank). இந்திய பொருளாதாரத்திற்கே ஒத்துழைப்பு செய்யக்கூடிய ஒரு பெரிய மாநிலம். அப்படிப்பட்ட ஒரு மாநிலத்தை கட்டுப்பாட்டில் எடுக்க விரும்புகிறது பாஜக.
யோசித்துப் பாருங்கள்: இரண்டு அணிகள் உருவாகியுள்ளது. இந்த பக்கம் திமுகவுடைய அணி ஒன்று, அந்த பக்கம் தவெக அணி. இதில் அதிமுக எந்த இடத்தில் இருக்கிறது? பிஜேபிக்கு இன்னும் இடமே கிடையாது. இனி தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னவாக மாறும்?
இனி அதிமுக பிஜேபியை கழட்டி விட்டுத்தான் நிற்க முடியும். அப்போது அதிமுக, திமுக, தவெக என மும்முனை இடத்தில், பிஜேபிக்கு இடமே இருக்காது, எதிர்காலமும் கிடையாது. அப்போது மறுபடியும் அதிமுகவை உள்ளே கொண்டு வருவதும், அவர்களுக்கு சார்பான ஆட்களை வைத்து ஏதோ ஒன்று செய்ய முயற்சி செய்வார்கள்.
கேள்வி: இந்த இடத்தில்தான் சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவுடைய எம்எல்ஏக்கள் 35 பேர் தனியாக ஆலோசனை நடத்திக் கொண்டு இருக்கும் ஒரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. இந்த சூழலில் அவர்களும் என்ன முடிவெடுப்பார்கள் என்பது பெரிய குழப்பமாக மாறியிருக்கிறது!
பதில்: நிச்சயமாக அவர்கள் தவெகவோடு செல்வதற்கான லாபம் இருக்கும் என நம்பலாம். அதிமுகவை கையில் எடுக்க வேண்டும் என நினைக்கலாம். ஏனெனில் எம்எல்ஏக்களை கையில் வைத்துக்கொண்டு தானே எடப்பாடியார் அதிகாரத்தை கையில் எடுத்தார்!
கேள்வி: அப்போது அதே மாதிரி ஒரு முயற்சியை வேறு யாராவது எடுக்கலாம் என நினைக்கிறீர்களா?
பதில்: கட்சியை கையில் எடுக்கலாம் அல்லது அதிகாரத்தில் பங்கெடுக்கலாம். இது இரண்டுதான் செய்ய முடியும். அதிகாரத்தில் பங்கெடுத்த பிறகு கட்சி கையில் வரும் இல்லையா! இப்படிப்பட்ட ஒரு நிலையை கட்சியை கைப்பற்றுவதற்கான சூழ்நிலையாக நாம் பார்க்கலாம்.
கேள்வி: திருமாவளவன் அவர்கள் பேட்டியில் கூட தமிழகத்தில் ஒரு அரசியல் நெருக்கடியான சூழல் உருவாகி இருக்கிறது என்ற ஒரு கருத்தை முன் வைத்தார். மேலும் தமிழக அரசியல் சூழலுக்கு இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?
பதில்: இது ஒரு நல்ல விதமான விளைவுகளைக் கொடுக்கும் என்றுதான் பார்க்கிறேன். இந்த நெருக்கடியில் பாரதிய ஜனதா கட்சியினால் எந்தவிதமான இலாபத்தையும் எடுக்க முடியவில்லை. பொதுவாக தேர்தலுக்குப் பிறகு ஆளுங்கட்சிதான் உருவானதாக இருக்கும். நேராக ஆட்சி அதிகாரத்தை கையில் எடுப்பார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை. தவெக தற்போதுதான் உருவாகிறார்கள். எதிர்கட்சியானது (திமுக) உருவான ஒரு கட்சியாக இருக்கிறது. நிராகரிக்கப்பட்ட கட்சியும் உருவான ஒரு கட்சியாக (அதிமுக) இருக்கிறது. இது இயல்பாக குழப்பம் வரத்தான் செய்யும்.
விஜய் அவர்களுடைய இந்த தவெக எவ்வளவு தூரம் தன்னை ஆளுமையானதாக மாற்றிக் கொள்கிறது என்று பார்க்க வேண்டும். ஏனெனில் திமுக போன்ற கொள்கை ரீதியாக அணுகக்கூடிய ஒரு கட்சியை எதிர்க்கட்சியாக வைத்துள்ளீர்கள். அப்போது தவெக இன்னும் எவ்வளவு தூரம் வலுவாக மாறுவீர்கள் என்பது மிக மிக முக்கியமானது. தவெக திமுகவை ஓட்டு அடிப்படையிலோ அல்லது புகழ் அடிப்படையிலோ எதிர்கொண்டு விட்டீர்கள். இதற்குப் பிறகு கட்டுமான அடிப்படையில் எதிர்கொள்ள வேண்டும். அதற்குரிய செயல்பாடுகள், உங்களுடைய அறிவுசார் கட்டமைப்பு என்ன? திமுகவுடைய அறிவுசார் தள கட்டமைப்பு இந்தியாவில் வேறு எந்த கட்சிக்குமே கிடையாது. அதனால்தான் திமுகவால் பிஜேபியை எதிர்கொள்ள முடிந்தது, தமிழ்நாட்டில் பல திட்டங்களை யோசிக்க முடிந்தது, உருவாக்க முடிந்தது, எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடிந்தது.
அப்படிப்பட்ட ஒரு அறிவார்ந்த கட்டமைப்பை தவெக இனி உருவாக்கினால் தான் அதை செயல்படுத்த முடியும். அதை இயல்பாக உருவாக்கிவிட முடியாது. அதற்கு ஏற்ற கோட்பாடு இருக்கிறது. அதற்கான அறிஞர்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரி அறிஞர்களை உள்ளே கொண்டு வந்து தவெக அறிவார்ந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும். ஏற்கனவே அதை திமுக வலுவாக உருவாக்கி இருக்கிறது.
இந்த ஐந்து ஆண்டு காலத்தில் திரு. ஸ்டாலின் அவர்கள், ஒரு மிக அழகான அறிவு கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார். எந்த துறை எடுத்தாலுமே அதற்கான ஆட்கள் இருக்கிறார்கள். அதை செய்ய வேண்டிய ஒரு நெருக்கடி கால பெரிய சவால் தவெகவிற்கு இருக்கிறது. ஏனெனில் தேர்தல் அரசியல் என்பது கொள்கையை உருவாக்குவதுதான். அரசாங்கத்தை நடத்துவது அதிகாரிகள் தான். அந்த அதிகாரி எப்படி இயங்க வேண்டும்? எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது என சொல்வதற்குரிய ஒரு கொள்கைத் திட்டம் (policy system) நமக்குத் தேவை.
கொள்கை திட்டத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியை கூட வைக்க முடியாது. மக்கள் சார்பாக யோசிக்கக்கூடிய அறிஞர்களைத்தான் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்த முடியுமே ஒழிய, ஐஏஎஸ் அதிகாரி ஐபிஎஸ் அதிகாரி வைத்து அல்ல. அவர்களுக்குத்தான் அதிகாரத்துறை இருக்கிறதே, அதனால்தான் அதிகாரியாக இருக்கிறார்கள். அந்த அதிகார வர்க்கத்தை கையாளுவதற்குரிய ஒரு அறிவு கட்டமைப்பு/ சிந்தனையாளர் கட்டமைப்பு ஒன்றை திரு.விஜய் உருவாக்க வேண்டும். அதுதான் பெரிய சவால். அறிவு கட்டமைப்பு இருந்தால் வரும் நெருக்கடிகளை கையாண்டு விடுவார்கள்.
யோசித்துப் பாருங்கள், இப்படி ஒரு நெருக்கடியை விஜய் கட்சிக்குக் கொடுத்தது போல் திமுகவுக்கு நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? எத்தனை பேர் வந்து கையாண்டு இருப்பார்கள், பேசி இருப்பார்கள், மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை செய்திருப்பார்கள். தற்போது மக்களுக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை.
நாங்கள் (மே 17) ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்தோம். ஆனால் பாதிக்கப்படுகிற அந்த கட்சி வந்து பேசி இருந்தாலோ, அல்லது அந்தக் கட்சியில் இருந்து நான்கு அறிஞர்கள் வந்து பேசி இருந்தாலோ, இன்னும் பலமாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. இது தவெகவிற்கு பெரிய வெற்றிடமாக இருப்பதாக நான் பார்க்கிறேன். இது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
கேள்வி: இன்னொரு பக்கம் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய விசிக, கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு என்கிற ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளார்களே, இதை எப்படி பார்ப்பது?
பதில்: ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கேட்டிருந்தால், ஆட்சி அதிகாரத்துக்காகத்தான் இந்த கூட்டணியிலிருந்து அந்த கூட்டணிக்கு போய் விட்டார்கள் என்ற அவதூறு வரும். அரசியலாக சொன்னால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும்.
இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றால்தான் தொழிலாளர் உரிமை சார்ந்த ஒரு கொள்கை முடிவை எடுக்க வைப்பதற்கு உதவ முடியும். அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு மிகப்பெரிய கள அனுபவம் இருக்கிறது. அன்றாடம் போராட்ட களத்தில் இருக்கக்கூடிய கட்சி, அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்குள் போனால்தான் களத்தில் நடக்கக்கூடிய விடயங்களை மாற்ற முடியும். இவ்வளவு காலம் அந்த வாய்ப்பு இல்லை. இன்றைக்கு அதை விசிக பயன்படுத்தலாம், தவறு கிடையாது. தவெக போன்ற புதிதாக வந்திருக்கும் கட்சிக்கு பெரிய அளவுக்கு அறிவார்ந்த ஒரு கட்டமைப்பை தயாரிப்பதற்காக பயன்படும். ஐயூஎம்எல் மாதிரியான கட்சிகள் இஸ்லாமியர்கள்/ சிறுபான்மை மக்களுடைய பிரநிதியாக பங்கெடுத்து கவனம் செலுத்த முடியும் என நான் நம்புகிறேன். இது காலத்தின் தேவையாக நான் பார்க்கிறேன்.
கேள்வி: ஆனால், அவர்கள் திமுக கூட்டணியில் தொடர்கிறோம். ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்கிற முடிவை எடுத்துள்ளர்களே?
பதில்: அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும். ஏனெனில் திமுக என்பது பாஜகவை எதிர்கொள்ளக்கூடிய கொள்கை தளத்தில் இயங்குகிறார்கள். அதற்கு இந்திய அளவில் கூட்டணியையும் உருவாக்கினார்கள். இந்திய அளவில் உருவான ’இந்திய (INDI) கூட்டணியில்’ ஒரு பொறுப்பை வகித்தார்கள். திமுக மாதிரி ஒரு முதிர்ந்த அனுபவமுள்ள கொள்கை ரீதியான கட்டமைப்பை கொண்டிருக்கக்கூடிய கட்சியோடு இணைந்திருப்பது என்பது தேவையான ஒன்றுதான். ஆட்சி அதிகாரத்தில் பங்கு எடுப்பது ஒன்றும் தவறு கிடையாது.
கேள்வி: அப்போது திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய தேவை இருக்கும் இல்லையா?
பதில்: ஆட்சி அதிகாரத்தில் வெளியில் இருந்துவிட்டு, போராட்ட களம் மட்டும் எங்களுடையது எனில், எப்படி மாற்றத்தை கொண்டு வருவீர்கள்? என்ன முடிவு எடுப்பீர்கள்?
கேள்வி: அதில் அவர்களுக்கு ஒரு தயக்கம் இருக்கிறதா? என கேட்கிறேன்.
பதில்: அந்த கூட்டணியிலிருந்து ’அதிகாரத்தில் பங்கு’ என சொன்னால் வெளியே இருந்து பார்க்க கூடியவர்கள் எப்படி பார்ப்பார்கள், பதவிக்காக போய் விட்டார்கள் என்ற ஒரு பார்வை வரும் என நினைக்கலாம். சரி, கொஞ்ச நாள் கழித்தாவது ஒரு முடிவு எடுக்கிறார்களா என பார்ப்போம்.
நான் இந்த சமயத்தில் ஒன்றை சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ”ஒரு அழகான வரைப்படத்தை கொடுத்திருக்கிறார்”. தமிழ்நாட்டில் அவர் முதலமைச்சர் என்கின்ற பதவியை கடந்த ஒரு தலைவராக பயணித்துள்ளார். கட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவராக இன்று அறியப்படக்கூடியவர். அவரை ஒரு கட்சியின் தலைவராகவோ ஒரு முதல் அமைச்சராகவோ மட்டுமே நாம் பார்க்க முடியாது.

ஏனெனில் பிஜேபி மிக மோசமான ஒரு ஆட்சியை செலுத்திக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், மாநில உரிமை நசுக்குகின்ற சமயத்தில், ஒரு மாநிலத்திற்கான பார்வையை கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதே மாதிரி மாநிலத்துக்கு குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை செய்தவர் ஸ்டாலின் அவர்கள். அதற்கடுத்து கேரளா முதல்வர், கர்நாடக முதல்வர், மேற்கு வங்க முதல்வர் பேசியிருக்கிறார்கள். இதில் கொள்கை ரீதியாக நின்று பேசிய ஒரு குரலாக ’திரு. ஸ்டாலின்’ அவருடைய குரல் இருந்தது. அது கட்சி கடந்து தமிழ்நாட்டினுடைய குரலாக இருந்தது. அதே மாதிரி தமிழ் சமூகத்தில் இருந்த அறிஞர்கள், கொள்கை ரீதியான உருவாக்க வேலை செய்தவர்கள், நீண்ட அனுபவத்தை பெற்றவர்களை எல்லாம் ஆட்சி அதிகாரத்துக்குள் கொண்டு வந்து, அவர்களுடைய ஆலோசனை பெற்று பல திட்டங்களை உருவாக்கி இருந்தார்.
அதை ஐந்து வருடத்துக்குள் நடைமுறைப்படுத்த முடியாது. அவருக்கு நிச்சயமாக ஒரு வலி இருக்கும். ஒரு திட்டத்தை வடிவமைத்து உள்ளீர்கள், அது முழுமை பெறுவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக திரு. ஸ்டாலின் அவர்கள் பாதியில் வெளியேறி இருக்கிறார். அவருடைய அறிக்கைகள் மூலம் அந்த உணர்வை நான் பார்க்கிறேன். அத்தகைய திட்டமிட்ட நல்ல வேலையை தவெக செய்வார்களா? என்பது பெரிய சவால்.
தமிழ்நாட்டினுடைய மிகச் சிறந்த அறிஞர்கள் எல்லாம் திரு. ஸ்டாலின் உடன் இருக்கிறார்கள். தொல்லியல் என்பதை இன்றைக்கு வெகு மக்களோடு நெருக்கமாக கொண்டு போனது, ’கீழடி, பொருணை’ ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தது, பெண்கள் பொருளாதார ரீதியில் முன்னேறுவது எவ்வளவு முக்கியமானது என்பதை ஆய்வு செய்து அதற்கான ஒரு வேலை திட்டத்தை உருவாக்கி கொடுத்தது, நூலகங்களை இன்றைக்கு மறுக்கட்டமைப்பு செய்து அனைவரும் உட்கார்ந்து படிக்க முடிவதாக மாற்றியது, மேலும் சமூகவியல், தொல்லியல், மானுடவியல், கல்வெட்டியல் போன்ற பல்துறை சார்ந்த துறைகளை மேம்படுத்தியதும், அறிஞர்கள் பேசுகின்ற பல கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடத்துவதும், கல்லூரிகளில் அறிவுசார்ந்த விவாதங்கள் நடத்துவது போன்ற புதிய விடயத்தை ஆரம்பித்தார்.
அவர்களுடைய திட்டக்குழுவில் நாம் பெரிதும் மதிக்க கூடியவரான ஜெயரஞ்சன் அவர்கள், மருத்துவத்ததுறையில் மிக முக்கியமான ஒரு ஆளுமையான அமலோற்பவன் அவர்கள், மருத்துவர் சிவராமன் அவர்கள் போன்றவர்கள் வெறும் அதிகாரிகளாக தங்களை நிறுத்திக் கொள்ளாமல், சாதாரணமாக நாம் பார்க்க கூடியவராவே இருப்பார். ஏழை எளிய மக்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்த பொழுது இவர்களிடம் நேராக சொல்ல முடிந்தது. அது நடைமுறை ஆனது. அதேபோல டாக்டர் எழிலன் அவர்களிடம் நிறைய உதவிகள் கேட்டுள்ளோம். எளியவர்களுக்கு மருத்துவ பிரச்சனை வரும்போதும், தொந்தரவாக இருந்த டாஸ்மாக் கடையை மூடவும் அவர் உதவினார். அவர் தொகுதிகளில் வீடுகளை இடிப்பது போன்ற நிகழ்வுகள் நடக்கவில்லை. அத்தகைய பிரச்சனை வந்தபோது அவர் நின்று சண்டை போட்டார். இப்படி நிறைய விடயங்களை செய்தார்.
கேள்வி: ஆனால் தவெகவும் நிறைய விடயங்களை சொல்லி இருக்கிறார்களே?
பதில்: சொல்வது வேறு. ஆனாலும் திமுகவில் சில குறைகளும் இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த குறைகளை தவெக நிவர்த்தி செய்ய வேண்டும். அத்தகைய பெரிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஒப்பந்த ஊழியர்கள், மாஞ்சோலை தொழிலாளர்கள், விவசாயிகள் சம்பந்தமாக நிறைய குறைபாடுகளைப் பார்க்கிறோம். அதை தவெக நிவர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த கட்சி வந்தாலும் ஒரு நல்லது நடக்க வேண்டும் என நாங்கள் (மே 17) விரும்புகிறோம். ஆனால் எல்லா பிரச்சனையையும் 5 வருடத்தில் தீர்க்க முடியாது. அந்த வகையில் ஸ்டாலின் அவர்கள் இந்த பிரச்சனைகளை எல்லாம் கவனித்து வந்தார். அதை நாம் மறக்க முடியாது. அவரிடம் தவெக ஆலோசனை கேட்பது தவறில்லை. அவரை எதிரியாக பா்க்க வேண்டாம் என நினைக்கிறேன்.
ஒரு நெருக்கடி சமயத்தில் தவெக தலைவர் யாருடன் வேண்டுமானாலும் பேசலாம். நம் தமிழ்நாடு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அந்த அடிப்படையில் இந்த அறிவுசார் கட்டமைப்பை வளர்த்திடுங்கள். இதை பாதுகாத்திடுங்கள். அந்த கவலை எனக்கு இருக்கிறது.
திருப்பரங்குன்ற பிரச்சனைக்காக திமுக சட்ட ரீதியாக நடத்தும் போராட்டங்கள் இருக்கிறது. இதை எல்லாம் தவெக தொடர வேண்டும். ஏட்டிக்குப் போட்டி அரசியல் பண்ணாதீர்கள்! அதைத்தான் இந்த சமயத்தில் வேண்டுகோளாக நான் வைக்கிறேன். அப்படி தமிழ்நாட்டு நலன் சார்ந்து கள ரீதியாகவோ கருத்துகள் ரீதியாகவோ தேவைப்பட்டால் மே 17 இயக்கமாக நாங்கள் என்னவெல்லாம் பங்களிக்க முடியுமோ, அளிப்போம். நிச்சயம் மாற்றங்களை கொண்டு வரலாம்.
பத்திரிக்கையாளர்: உங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி!
தோழர் திருமுருகன் காந்தி: நன்றி!
காணொளி: