
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்றுள்ள சூழலில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக உடன் கூட்டணி சேர்ந்தது குறித்தும், இந்தத் தேர்தலில் தலித் வாக்குகள் ஆற்றிய பங்கு குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மே 24, 20206 அன்று ‘சவுத் பீட்’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல்:
பத்திரிக்கையாளர்: ‘சவுத் பீட்’ அன்பு உறவுகளுக்கு வணக்கம். நான் பெலிக்ஸ் இன்பவொளி. இந்த நேர்காணலில் நாம் சந்திக்க இருப்பவர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள். வணக்கம்.
பத்திரிக்கையாளர் கேள்வி: தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆட்சி, அதுவும் கூட்டணி ஆட்சியாக அமைந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான அரசியல் சூழ்நிலையில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளனர். இன்று அவர்கள் அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி என்பது ஒரு புதிய விடயம்தான்.
நீங்கள் (திருமுருகன் காந்தி) திராவிட அரசியலின் முன்னோடி அண்ணாவை மேற்கோள் காட்டுவதைத் தொடர்ச்சியாகப் பேசி வருகிறீர்கள். “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற அந்த முழக்கம் இன்று சிதைந்துவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாமா, அல்லது மாற்றம் பெற்றுள்ளது என்று எடுத்துக்கொள்ளலாமா? இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
தோழர் திருமுருகன் காந்தி பதில்: “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பதில் மாநில சுயாட்சி என்பது கூட்டாட்சியாக மாறவில்லை. சுயாட்சி வேறு, கூட்டாட்சி முறை வேறு. கூட்டணி ஆட்சி என்பது ஆட்சி தவறு என்று கிடையாது. அடிப்படையில் அதில் பிரச்சனை இல்லை.
கேள்வி: ஆனால், இப்போது தேர்தலுக்குப் பின்பு அமைந்துள்ள கூட்டணி என்பதில் ஒரு விமர்சனம் உள்ளது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: அந்த விமர்சனம் எங்களுக்கும் உள்ளது. ஏனென்றால், த.வெ.க. எந்தவிதமான கொள்கை அடிப்படையை முன்வைத்து தேர்தலை அணுகியது? மாறாக, அவர்கள் தி.மு.க. எதிர்ப்பை மட்டுமே முன்வைத்து செயல்பட்டனர். தமிழ்த் தேசியம், திராவிடம் என்று சொன்னாலும், அந்த இரண்டையும் குறித்த தெளிவான விளக்கத்தை அவர்கள் தரவில்லை. திராவிடத்தின் வழியாக ஆட்சி செலுத்தப்படுவது எப்படி இருக்கும்? தமிழ்த் தேசியத்தின் வழியாக ஆட்சி அமைப்புகள் எப்படி இருக்கும்? என்பதை எல்லாம் அவர்கள் விளக்கவில்லை. தி.மு.க. ஆளுங்கட்சிக்கு எதிரான அரசியல் என்கிற மேலோட்டமான அரசியல் தன்மையில் இருந்து மட்டுமே தேர்தலைக் கொண்டு சென்றனர்.
தி.மு.க. கூட்டணி என்பது முற்போக்கு, மதச்சார்பற்ற கூட்டணி என்றும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கொள்கைரீதியான அணி என்றும் முன்வைக்கப்பட்டு தேர்தலை எதிர்கொண்டது. இந்தத் தளத்தில், தி.மு.க.வின் முற்போக்கு, மதச்சார்பற்ற கொள்கைக்கு த.வெ.க. எதிரானதாக அவர்கள் இந்த இடத்தில் பேசவே இல்லை. தி.மு.க. என்கிற ஆளும் கட்சிக்கு எதிராக மட்டுமே தங்களை ஒரு கொள்கைத் திட்டமாக முன்னிறுத்திக் கொண்டார்கள்.
கேள்வி: தேர்தலுக்கு முன்பிருந்து இப்போது நடந்த நிகழ்ச்சிகள் வரை கவனித்துப் பார்த்தால், “மதச்சார்பற்ற கூட்டணி நாங்கள்தான்” என்று உரிமை கோருவதற்காகத்தான் த.வெ.க. முயற்சி செய்திருக்கிறதா?
பதில்: த.வெ.க. மதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை. ஆனால், மதவெறி அரசியலுக்கு எதிரான அரசியலையும் அவர்கள் செய்யவில்லை. இந்த இரண்டையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மதவெறிக்கு எதிரான அரசியலைச் செய்ய வேண்டிய சூழல் இருந்தபோது அதைத் தவிர்த்தார்கள்; மௌனமாக இருந்தார்கள். முருகன் பிரச்சனையை வைத்து அவர்கள் பேசியபோதும், திருப்பரங்குன்றம் பிரச்சனையின்போதும் அமைதி காத்தார்கள். இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின்போதெல்லாம் பெரிய அளவில் கண்டனங்கள் வெளியே வரவில்லை. மதவெறிக்கு எதிரான அரசியலை தவெக உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், அதே சமயத்தில் அவர்கள் மதச்சார்பற்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தார்கள். எந்த மதத்தையும் முன்னிறுத்தி அரசியல் செய்யவில்லை..
கேள்வி: ஒரு பாதுகாப்பான அரசியலை முன் எடுத்தார்களா?
பதில்: அ.தி.மு.க. தன்மையிலான ஒரு அரசியல் என சொல்லலாம், சினிமா பிரபலமான அரசியலாக இருக்கக்கூடியது, ஒரு தனி நபரை மட்டும் பிம்பமாக வைத்து இயங்குவது என்பது ஒருசார்பாக இயங்க முடியாது.
ஏனென்றால், அவர்களுடைய ரசிகர்களாக வரக்கூடியவர்கள் எல்லா மதத்திலிருந்தும் இருப்பார்கள், எல்லா சாதியிலிருந்தும் இருப்பார்கள். அதனால் தனித்து எடுத்துவிட முடியாது, எந்தப் பிரிவையும் அடையாளப்படுத்த முடியாது. இதுதான் அதனுடைய இயல்பு. ஒரு சினிமா தியேட்டருக்குள் எல்லா சாதியினரும் இருப்பார்கள், எல்லா மதத்தினரும் இருப்பார்கள். அங்கு இருக்கக்கூடிய ரசிகர்களை, உங்கள் வாடிக்கையாளர்களை நீங்கள் பிரித்துவிட முடியாது. அது அப்படியே அரசியலாக மாறும்போதும் அதே தன்மைதான் தொடரும். பார்ப்பதற்கு அதில் வெளிப்படையான முற்போக்குத் தன்மை இருந்தாலும், உள்ளீடாக அதற்கான கருத்துத் தெளிவின்மைதான் அதன் அடிப்படையாக இருக்கும். எம்.ஜி.ஆர். காலத்திலும் அதே மாதிரிதான் இருந்தது.
கேள்வி: இதெல்லாமே சமூகம் மாறவில்லை என சொல்கிறீர்களா?
பதில்: சமூக மாற்றம் என்பதற்கான பிரச்சாரமே வேறு. சமூக மாற்றத்திற்கு உங்களுடைய மனநிலையை மாற்றுவது வேறு, உங்களுடைய ரசிகத்தன்மையை எடுத்துக்கொள்வது வேறு. உங்களுக்கு என்னைப் பிடிக்கலாம். ஆனால், என்னுடைய சாதி உங்களுக்குத் தடையாக இருக்கலாம். அல்லது உங்கள் சாதியைக் கடந்து நீங்கள் என்னுடையதை ஏற்றுக்கொள்ளக்கூடியவராக இருக்கலாம்.
கேள்வி: இங்கு இருக்கக்கூடிய ஒரு முற்போக்கு அரசியல் இருக்கிறதல்லவா? கொள்கை சார்ந்து தி.மு.க. பேசுவதாக இருக்கட்டும், வி.சி.க. பேசுவதாக இருக்கட்டும், கம்யூனிஸ்டுகள், இஸ்லாமிய இயக்கங்கள் முன்வைக்கிற அந்த முற்போக்கு அரசியலைக் கடந்து, ஒரு கதாநாயக பிம்பத்தின் மீதான பெரிய மாற்றம் நடந்திருக்கிறது, பெரிய எழுச்சி நடந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இதில் முற்போக்கு இயக்கங்களுக்கும் பங்கு இருக்கிறதல்லவா?
பதில்: தவறவிட்டதில் முற்போக்கு இயக்கங்களுக்குப் பங்கு இல்லை. யார் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்களோ, அவர்களிடம்தான் கேள்வி கேட்க வேண்டும். இன்றைக்கு தி.மு.க. கூட்டணி என்ற ஒன்று இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் கட்சி ரீதியான கூட்டணி என்பதைவிட, கொள்கை அடிப்படையிலான ஒரு கூட்டமைப்பு உருவானது. கருப்பு – பெரியாரியம், சிவப்பு – மார்க்சியம், நீலம் – அம்பேத்கரியம் என்ற இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அமைப்புகள் ஒன்றாக வந்தன. அத்துடன் சிறுபான்மை அமைப்புகளாக இருக்கக்கூடியவர்கள் இணைந்து நின்றார்கள். அதுதான் கொள்கைக் கூட்டணி என்ற இடம்.
அந்த ரீதியிலான ஆட்சி அமையும்போது இத்தனை கொள்கைகளுக்கும் பிரதிநிதித்துவம் இருந்ததா? கொள்கைப் பிரதிநிதித்துவம் ஆட்சியில் இல்லை, தேர்தலில் இருந்தது. இதை நாங்கள் அப்போதே சொல்லியிருக்கிறோம். அதாவது தேர்தலை எதிர்கொள்வதில் கொள்கைக் கூட்டணி இருக்கிறது. ஆட்சியை நடத்துவதில் கொள்கைப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்றால் இல்லை. மார்க்சியத்துக்கு அதில் இடம் இல்லை, அம்பேத்கரியத்துக்கு இடம் இல்லை.
கேள்வி: அதன் மதிப்பை அமைச்சரவையில் சொல்கிறீர்களா நீங்கள்?
பதில்: ஆம், அதிகாரத்தில் என்ன பங்கீடு கொடுத்தீர்கள் என்பதுதான். இதில் இருக்கக்கூடிய இன்னொரு பார்வையை நாம் பார்க்க வேண்டும். இதை நாங்கள் நீண்ட காலமாகவே சொல்லி வருகிறோம். அதனால், அதிகாரத்தைப் பகிர்வதில் கூட்டாட்சி, கூட்டணி ஆட்சி, சுயாட்சியில் கூட்டணி என்பது தவறு இல்லை என்று சொல்வதன் அர்த்தத்தை நான் சொல்கிறேன்.

இப்போது இந்தக் கூட்டணி (திமுக) தோல்வியுற்றதில் இருக்கக்கூடிய பிரச்சனை என்ன? இயக்கங்களினுடைய பங்களிப்பு என்ன? என்று நீங்கள் ஒரு கேள்வி வைக்கிறீர்கள். இப்போது இயக்கங்களைப் பார்த்தோமானால், நாங்கள் 2021 தேர்தல் முடிந்தபோதே பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு: ஒன்று தி.மு.க. ஆதரவு அணியாகவும், இன்னொன்று தி.மு.க. ஆதரவற்ற பா.ஜ.க. எதிர்ப்பணியாகவும் இருந்தது. இதுதான் வெளிப்படையாகவே இருந்த விடயங்கள்.
தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அதிகாரம் திமுக கையில் இருக்கிறது. எப்போதும் போல மக்கள் பிரச்சனைக்காகப் போராட்டங்களை நடத்துவோம் என்று சொன்னோம். நாம் எப்போதுமே எதிர்க்கட்சியாக, மக்களுடைய குரலாக இருப்போம் என்று சொன்னோம். அதில் கருத்து வேறுபாடுகள் இருந்தன, எங்களை (மே 17) பெரும்பாலான சக திராவிட இயக்கங்களின் மேடைகளில் பார்க்க முடியாது. எங்களை அழைத்ததே கிடையாது. அவர்கள் தி.மு.க. ஆதரவை மட்டும்தான் அளவுகோலாக வைத்திருந்தார்கள். மக்கள் போராட்டங்களில் சேர்ந்து நிற்க வேண்டும் என்ற அளவுகோலாக வைக்கவில்லை. சில தலித் இயக்கங்களும் எங்களைப் பெரிய அளவில் அந்த இடத்தில் அங்கீகரித்தால், தி.மு.க.விடம் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அதாவது எங்களை தி.மு.க.வின் எதிரியாகவே சக அமைப்புகள் நினைத்துக்கொண்டன.
நாங்கள் தி.மு.க.வை எதிரியாகவோ, வேறு ஒரு மாநிலக் கட்சியை எதிரியாகவோ பார்க்கவில்லை. மக்கள் சார்ந்த கொள்கைகளை, நம் மக்களின் கோரிக்கைகளை நாம் பேசுவதுதான் நம்முடைய பொறுப்பு.
நமக்கான பொறுப்பு என்ன? மக்கள் சார்ந்த கோரிக்கைகளை அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதை அவர்கள் எதிர்த்தால் போராடிச் சொல்ல வேண்டும். அல்லது ஆதரவு மனநிலையில் இருப்பவர்களுக்கு கவன ஈர்ப்பைக் கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டுதான் நமக்குத் தேவை.
நமக்கு மக்கள் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். இதில்தான் முரண்பாடுகள் இருந்தன. அதனால், எங்களை முழுவதுமாகத் தனிமைப்படுத்துவது என்கிற வேலை கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்தது. நாங்கள் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எங்களுடைய போராட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க, இஸ்லாமிய அமைப்புகள் போன்ற கட்சி சார்ந்தவர்கள் எங்களோடு இயங்கினர். இயக்கங்களாக இருந்தவர்களிடம்தான் அந்தச் சிக்கல் இருந்தது.
நாங்கள் தி.மு.க. தவறு செய்தால் தி.மு.க. தவறு என்று சொல்வோம். தி.மு.க. சரி என்றால் தி.மு.க. சரி என்பதை ஏற்றுக்கொள்வோம். சரியாக இருப்பதைப் பாராட்டுவது மட்டுமே நம்முடைய வேலையாக இருந்துவிட முடியாது. தவறாக இருக்கக்கூடிய இடங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்னோம்.
குறிப்பாக, பட்டியல் சமூகத்தின் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக நடக்கிறது. இது குறித்த கவனப்படுத்தல் தேவை. நமக்குச் சாதகமான ஒரு ஆட்சி அமைப்பு வருவதை எதற்காக விரும்புகிறோம்? பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காகத்தான். அந்தப் பிரச்சனைகள் கூர்மையடைந்துகொண்டே போகிறது என்றால், அந்த இடத்தில் நாம் எடுத்துப் போராட வேண்டிய தேவை இருக்கிறது என்பதைப் பலமுறை எடுத்துச் சொன்னோம்.
இன்னும் தெளிவாக சொன்னால்: எதிர்க்கட்சி வேலையை முற்போக்கு அமைப்புகள் செய்யவில்லை என்றால், அந்த இடத்தை வலதுசாரிகள் அல்லது எதிர்ப்புரட்சியாளர்கள் அல்லது கருத்தியல் அல்லாதவர்கள் ஆக்கிரமிப்பார்கள் என்பதை நாங்கள் 2021, 2022இல் பேசினோம்.
கேள்வி: அப்போது தி.மு.க. மேடைகளில் உங்களைப் புறக்கணிக்கிறார்களா?
பதில்: அதுமட்டுமல்ல, தி.மு.க.வை ஆதரித்த இயக்கங்களின் மேடைகளில் கூட எங்களுக்கு இடமே கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தத் திராவிட, பெரியாரிய அமைப்புகளில் எங்களுக்கு எத்தனை இடங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்? எடுத்துப் பாருங்கள். அப்படி எதுவுமே கிடையாது. அவர்கள் தி.மு.க. ஆதரவை மட்டுமே அளவுகோலாக வைத்திருக்கிறார்கள்.
நாங்கள் பெரியாரிய இயக்கமாகத்தான் இருக்கிறோம், திராவிட இயக்கத்தினுடைய அதே பணிகளைத்தான் மேற்கொள்கிறோம். அப்படியானால் என்ன தடை இருக்கிறது? தி.மு.க.வுக்குத் தடை இருக்கலாம், மற்றவர்களுக்கு என்ன தடை இருக்கப் போகிறது? எங்களை விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., இஸ்லாமிய அமைப்புகள் அழைக்கின்றன.
இயக்கங்களுக்கு என்ன பிரச்சனை? இயக்கங்களின் சிக்கல் என்ன? அவர்களுக்கு தி.மு.க. தங்கள் மீது வருத்தப்படுமோ என்பதுதான். அந்த நிலை முற்போக்கு அரசியலுக்குப் பயன்படாது. இன்றைக்கு இயக்கங்களுக்கு இடம் இல்லாமல் போய்விட்டதல்லவா?
கேள்வி: அப்போது அந்த இயக்கங்களுக்குள் நீங்களும் இருக்கிறீர்கள் அல்லவா?
பதில்: அதைத்தான் சொல்கிறேன். இயக்கங்களுக்குள் இருக்கக்கூடிய பிரிவுகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது இந்த இடத்தில் நாங்கள் சொல்வது எதிர்க்கட்சி வேலையை நாம் செய்ய வேண்டும். அதை எடப்பாடி கையில் கொடுத்துவிட முடியாது. அவர் பாரதிய ஜனதா கட்சியினுடைய கையாளாக இருக்கிறார். அண்ணாமலை ஒரு போராட்டத்தையும் செய்யவில்லை. எப்படி அண்ணாமலை வளர்ந்தார்?
கேள்வி: இப்போது தி.மு.க. ஆட்சியிலேயே சி.பி.எம்., வி.சி.க போராடுகிறதே?
பதில்: நான் திரும்பச் சொல்கிறேன், கட்சிகள் எங்களோடு நின்றார்கள். அதில் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை. எங்களுடைய எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
கேள்வி: அப்படியானால் இயக்கங்கள் என்றால் யாரைச் சொல்கிறீர்கள்?
பதில்: தமிழ்நாட்டில் 100, 150 அமைப்புகள் இருக்கின்றன. அதில் பெயர் சொல்வதால் இது தனி நபர் பிரச்சனையாக மாறிவிடக்கூடாது. தனி இயக்கங்கள் சார்ந்து நாளைக்குச் சேர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இதை ஒரு கருத்தாக வைக்கிறோம். ஒரு தனி நபருடைய அல்லது ஒரு தனிப்பட்ட இயக்கத்தினுடைய பிரச்சனையை நாம் முன்வைக்க விரும்பவில்லை. இன்றைக்கு எத்தனை மார்க்சிய இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்கள், திராவிட இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள் இருக்கின்றன? இதில் எத்தனை அழைக்கப்பட்டன? எத்தனை அழைக்கப்படவில்லை என்பது எல்லாருக்குமே தெரிந்த விடயம்தான்.
கேள்வி: தி.மு.க. ஆட்சியில் ”இங்கே என்ன பொற்கால ஆட்சியா நடக்கிறது”? என்று சி.பி.எம். மாநிலச் செயலாளர் கேட்டார். வி.சி.க. தொடர்ந்து பல பிரச்சனைகளில் போராட்டக் களத்தில் இருந்துகொண்டேதான் இருக்கிறது! அதையெல்லாம் நீங்கள் கவனிக்கவில்லையா?
பதில்: வி.சி.க.வோ, கம்யூனிஸ்டுகளோ போராட்டக் களத்தில் இருந்தார்கள், எங்களோடு சேர்ந்து இருந்தார்கள். நாங்களும் அவர்களோடு சேர்ந்து நின்றோம். நான் தேர்தலில் இல்லாத அமைப்புகளைப் பற்றி பேசுகிறேன்.
கேள்வி: அப்போது அதுவும் சேர்ந்துதான் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?
பதில்: இப்போது இயக்கங்களின் பங்களிப்பைக் கேட்டீர்கள் என்றால், அதைச் சொன்னேன். தி.மு.க. கூட்டணியின் பிரச்சனை என்ன? தி.மு.க. கூட்டணி தோல்வியடைகிறது என்றால் அதற்குப் பெரிய காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று, எதிர்க்கட்சி என்பது வலிமையாக இல்லாமல் போனது. தி.மு.க.வுக்கு எதிரான பல்வேறு அவதூறுப் பிரச்சாரங்களை பாரதிய ஜனதா கட்சியும், நாம் தமிழர் கட்சியும் செய்தது.
கேள்வி: த.வெ.க செய்யவில்லையா?
பதில்: அதை யார் அறுவடை செய்தார்கள் என்று நான் சொல்கிறேன். பாரதிய ஜனதா கட்சியும், நாம் தமிழரும் செய்த பெருமளவிலான, நீண்ட காலப் பிரச்சாரங்களான திராவிட வெறுப்பு, ஒவ்வாமை, பெரியாரிய வெறுப்பு போன்றவை இருந்தன, அப்படியானால் இது எந்தப் பக்கம் போகிறது?
இன்னொன்று, தி.மு.க. மீதான விமர்சனங்கள் இருந்தன. சாம்சங் விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் போராடினார்கள், வேங்கைவயலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் போராடினார்கள். இப்படிப்பட்ட இடங்களில் போராடாத அமைப்புகள், எதிர்க்கட்சியாக நின்று அந்த அழுத்தத்தைத் தராத அமைப்புகளின் இடத்தை இவர்கள்தான் கையாண்டார்கள்.
அதாவது வேங்கைவயல் பிரச்சனையை மூச்சுக்கு முந்நூறு தடவை சீமான் பேசுவார், பா.ஜ.க. பேசும். ஆனால் இவர்கள்தான் போராடவே போராடாத அமைப்புகள். இதேதான் த.வெ.க.வும். இவர்கள் மூன்று பேரையும் எடுத்துக்கொண்டால், த.வெ.க. சமீபத்தில் வந்தது. பாரதிய ஜனதா கட்சியோ, நாம் தமிழரோ அவதூறுப் பரப்புரைகளைச் செய்வதும், எதிர்க்கட்சி வேலைகளாகக் களத்தில் இறங்கி மக்களுக்காகப் போராடாத வேலைகளைச் செய்துவிட்டார்கள். ஆனால், அவதூறைப் பரப்பும் வேலையைச் செய்தார்கள். இது ஒரு இடத்தில் எதிர்ப்பாகச் சேரும்போது, நிராகரிப்பு திமுகவுக்கு நடந்திருக்கிறது. த.வெ.க. என்பது தெரியாத, புரியாத சக்தியாக இருந்தது. இந்த இடத்தை த.வெ.க. பயன்படுத்துகிறது.

த.வெ.க.வை எதிர்த்து என்ன பரப்புரை நடந்தது? த.வெ.க. வைக்கக்கூடிய அவதூறுகளை அல்லது ‘தீய சக்தி’ என்று விஜய் சொன்னதை தி.மு.க.வில் இருந்து யார் சவால் செய்தார்கள்? அப்போது உங்கள் அமைதி என்ன சொல்கிறது? விஜய் பின்னால் இளைஞர் கூட்டம் இருக்கிறது, ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. ரசிகர் கூட்டத்துக்குத் தலைவன் சொல்வதெல்லாம் வேத மந்திரமாக எடுத்துக்கொள்வார்கள். அப்போது அந்த இடத்தில் அதை உடைக்க வேண்டிய பொறுப்பு யாருடையது? கூட்டணிக் கட்சிகளுடையது கிடையாது. எந்தக் கட்சியை நோக்கி அவர்கள் ‘தீய சக்தி’ என்று சொன்னார்கள்? கம்யூனிஸ்ட்களைத் தீய சக்தி என்று சொல்லவில்லை, இஸ்லாமியர்களைத் ‘தீய சக்தி’ என்று சொல்லவில்லை. தி.மு.க.தான் தீய சக்தி என்று சொன்னார்கள். தி.மு.க. கூட்டணி தீய சக்தி என்று சொல்லவில்லை. அப்போது தி.மு.க.வில் இருந்து இதை யார் எதிர்கொண்டார்கள்? ஏன் இதை எதிர்கொள்ளவில்லை?
கேள்வி: தி.மு.க. எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இப்போது அரசியல் களத்தில் பா.ஜ.க.வை எந்த அளவுக்கு எதிர்த்தீர்களோ, அந்த அளவுக்கு த.வெ.க.வை நீங்களே (மே 17) எதிர்க்கவில்லையே!
பதில்: பாரதிய ஜனதா கட்சிக்கு மதவெறிக் கொள்கை என்று ஒன்று இருந்தது. பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது, கொள்கைத் திட்டங்களைக் கொண்டு வருகிறது. பா.ஜ.க.வின் கொள்கைத் திட்டங்களைத்தான் எதிர்க்கிறோம். பா.ஜ.க. செய்த திருப்பரங்குன்றம் பிரச்சனை, நீட் பிரச்சனை, இந்தித் திணிப்பு – இதெல்லாம் நடைமுறையில் நடக்கிறது. இதை எதிர்த்து நாம் போராட்டம் செய்கிறோம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அ.தி.மு.க. போராடுவது கிடையாது. நாம் தமிழர் சீமான் பெரியாரை எதிர்த்துப் பேசினார், போராட்டம் செய்தோம்.
விஜய் என்ன பேசினார்? தி.மு.க.வை எதிர்த்துத்தான் அவர் பேசினார். அதற்கு தி.மு.க.தான் பேசியிருக்க முடியும். தி.மு.க. தீய சக்தி இல்லை என்று சொல்லி மே 17 இயக்கமா சொல்ல வேண்டும்? அல்லது விடுதலைச் சிறுத்தைகளோ, கம்யூனிஸ்ட் சொல்ல வேண்டுமா? அதைச் சொல்ல வேண்டியது யார்? திமுக.
2021 தேர்தலையும் 2026 தேர்தலையும் பாருங்கள். 2021 தேர்தலில் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் சார்ந்த குரல்கள் தி.மு.க. கூட்டணி பிரச்சாரத்தில் இயங்கினார்கள். உதாரணமாக, கரு. பழனியப்பன் போன்றவர்கள் எல்லாம் ஒரு கூர்மையான உரையை மக்களிடம் வைத்தார்கள், அரசியல்படுத்தினார்கள். இந்தத் தேர்தலில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தவிர வேறு யார் பிரச்சாரம் செய்தார்கள்? உங்களால் யாரையாவது சொல்ல முடியுமா?
கேள்வி: நடிகர் பிரகாஷ் ராஜ் வந்தாரே?
பதில் பிரகாஷ்ராஜை கம்யூனிஸ்ட் கட்சி ஒரே இடத்தில் கூட்டத்துக்குக் கூப்பிட்டார்கள். அவர் சென்று பேசினார். அவ்வளவுதான்.
கேள்வி: இல்லையே! மூன்று இடங்களில் பேசினாரே?
பதில்: மூன்று இடங்களில் பேசுவதை வைத்து நீங்கள் பிரச்சாரம் என்று சொல்ல முடியாது. 234 தொகுதிகள் இருக்கின்றன. திமுக கட்சி சார்ந்து எத்தனை பேர் இறங்கினார்கள்? கட்சியோடு சேர்ந்து இயங்கக்கூடிய எத்தனை பேர் இயங்கினார்கள்? என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.
தேர்தல் பரப்புரையை தவறாகவே எதிர்கொண்டார்கள். 2021இல் வளர்ச்சியைச் சொல்லி முன்வைத்தீர்கள், “நாங்கள் வளர்ச்சியைக் கொண்டு வருவோம்” என்று சொல்லி வைத்தீர்கள். நாங்கள் அப்போதே சொன்னோம், பொருளாதார வளர்ச்சித் திட்டம் தேர்தல் பரப்புரை ஆகாது. வட மாநிலங்களில் அது எடுபடலாம். பிரசாந்த் கிஷோர் வட மாநில உத்தியை தென் மாநிலத்தில் கொண்டுவந்து வைத்தார். வட மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி இல்லை, அவனுக்கு அது தேவை. இங்கே இருக்கும் அபிலாசைகள் வேறு.
கேள்வி: வேலைவாய்ப்பு என்பது இங்கேயும் தேவைப்படுகிறது அல்லவா?
பதில்: அதைப் பேசலாம். பா.ஜ.க. வேலைவாய்ப்பு கொடுக்கிறேன் என்று சொன்னால், அவனுக்கு ஓட்டுப் போட்டுவிடுவீர்களா? அதை யார் வேண்டுமானாலும் சமம் செய்ய முடியும். திமுக 1000 ரூபாய் கொடுத்தது எனில், தற்போது 2000 ரூபாய் கொடுக்கிறேன் என்று விஜய் பேசிவிட்டுப் போய்விட்டார் அல்லவா? இதுமாதிரி யார் வேண்டுமானாலும் சமம் செய்ய முடியும். வளர்ச்சித் திட்டம், வளர்ச்சியைக் கொண்டு வந்தோம் என்கிற பிரச்சாரத்தை பற்றி பேசினார்கள். அன்றைக்கு மதவெறிக்கு எதிரான, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியினுடைய சமூகநீதிக் கொள்கைக்கு எதிரான பரப்புரையை திமுக செய்யவில்லை. அதைச் செய்வதற்கான எங்களை, பிரசாந்த் கிஷோரின் அணி பேசவிடாமல் தடுத்தார்கள். அதை அன்றைக்கே பேசியிருக்கிறோம்.
அதே வேலையை 2026 தேர்தலில் ‘பென் டீம்’ செய்தது. ‘பென் டீம்’ அரசியலற்ற தேர்தலை உருவாக்கியது. அது அரசியலற்ற பிரச்சாரத்தை வடிவமைத்தது, “திமுக 1000 ரூபாய் கொடுத்தோம், அதை கொடுத்தோம், இதைக் கொடுத்தோம்” என்பதைத்தான் திரும்பத் திரும்பப் பேசினார்கள். வளர்ச்சி நலத்திட்டங்கள் இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, அது கிட்டத்தட்ட காமராஜர் காலத்திலிருந்தே இருக்கிறது. இங்கே எல்லா மக்களுக்கும் தெரியும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நலத்திட்டங்கள் இருக்கிறது. அது எப்படி மக்களை இணைக்கும்? எப்படி தனித்துவமான முன்முடிவை கொடுக்கும்?

பீகாரில் 10,000 ரூபாய் கொடுத்தது பா.ஜ.க, அது முடிந்ததல்லவா? அவனால் கொடுக்க முடியாத விடயத்தைத்தான் திமுக பேச வேண்டும். கொடுக்க முடியாத விடயம் என்ன? சமூகநீதி சம்பந்தமாக பேசுங்கள். விஜயால் கொடுக்க முடியாத விடயம் என்ன? அதைப் பேச வேண்டும்.
கேள்வி: அப்போது எதைப் பேசியிருக்க வேண்டும் என்கிறீர்கள்?
பதில்: திமுக அரசியலைப் பேசியிருக்க வேண்டும். எதற்காக, இந்த அரசியலை எடுக்கிறோம்? திருப்பரங்குன்றத்தைப் பற்றி தி.மு.க. எங்கே பேசியது? எனக்குத் திருப்பரங்குன்றத்தில் பரப்புரையை ரத்து செய்தார்கள்.
கேள்வி: திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? அதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
பதில்: நிலைப்பாடு ஒரு பக்கம் இருக்கட்டும். வழக்கு நடக்கிறது. பரப்புரைக்கும் ஒரு அரசு நடவடிக்கைக்கும் உள்ள தொடர்பும் வேறுபாடும் இருக்கிறதா இல்லையா? ”தொடர்பு என்பது நிலைப்பாடு. வேறுபாடு என்ன? அரசியல்படுத்துவது”, மக்களைப் பொறுத்தவரை அது பத்தோடு பதினொன்றாவது வழக்காக போய்விடும். ஆனால், மக்களிடம் இந்த வழக்கு ஏன் முக்கியம்? என்கிற பரப்புரையைப் பேச வேண்டிய தேவை இருக்கிறது. மக்களுக்காக போராடும் இயக்கத்துக்கு இருக்கிறது. அதற்கான அனுமதி இல்லை, அதற்கு நடக்க முடியவில்லை என்கிற இடத்தில் சிக்கல் வருமா வராதா? மக்களை அரசியல்படுத்த வேண்டும் அல்லவா?
கேள்வி: இந்த வழக்கில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் மனிதச் சங்கிலி நடந்ததல்லவா? அதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள்தானே? இப்போது யாரையும் போராட விடவில்லை என்கிறீர்களே?
பதில்: இதெல்லாம் எத்தனை போராட்டத்துக்குப் பின்னால் நடந்தது தெரியுமா? நான் சொல்வது என்னவென்றால், இது தேர்தல் பரப்புரையாக மாறி இருக்க வேண்டும், திருப்பரங்குன்றம் பிரச்சனையில் பாஜக எப்படி இந்த மக்களை உடைப்பதற்காக முயற்சி செய்தது, அதை எப்படி திமுக தடுத்தது என்பதை இந்த தேர்தலில் பேசியிருக்க வேண்டும்.’இந்த தேர்தலில் அரசியல் பிரச்சினை என்ன?’ அப்படியான பிரச்சினை எதுவும் பேசவில்லை.
நாங்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டம் செய்தோம். திமுக இந்தி எதிர்ப்பை மேடையில் பேசிக்கொண்டே இருந்தீர்கள். மே 17 இயக்கம் இந்தி எழுத்துகளை அழித்தோம். எங்களின் தோழர் சிவா திலீபன் உயிர் கொடுத்தார். இப்போது அந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு எல்லாரும் வந்திருக்க வேண்டும். ஏனென்றால், இந்தித் திணிப்பு நடந்துகொண்டே இருக்கிறது. இன்றைக்கும் பி.எம். ஸ்ரீ தான் முதல் பிரச்சனை, த.வெ.க.வுக்கு முன்னால் நாம் எழுப்புகிற பிரச்சனையும் கூட, அப்போது இந்தப் பிரச்சனையில் முன்களத்தில் நிற்பது மே பதினேழு இயக்கம்.
நாங்கள் போராட்டக் களத்தில் நிற்கிறோம். அப்போது அந்தப் போராட்டத்தை வலுப்படுத்தாமல் போனது யார்? இது பற்றிய செய்தி தி.மு.க.வின் ஊடகத்தில் வரவில்லை. தி.மு.க. ஊடகத்தில் விவாதமே நடக்கவில்லை. தமிழ்நாட்டில் 35 இடங்களில் இந்தி எழுத்துகளை நாங்கள் அழித்தோம், தமிழ்நாடு ரயில்வே நிலையங்களில் அழித்தோம். இது வட இந்தியா வரை பரவியது. நான் கேட்பது என்னவென்றால், தி.மு.க. ஊடகத்தில் ஏதாவது ஒரு ஊடகம், ஏதாவது ஒரு சேனல் இதைப் பற்றிப் பேசியதா?
கேள்வி: யாரும் செய்யவில்லை என்பதை பேசுகிறீர்கள், இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை இது ஒரு சிந்தாந்த சண்டை இல்லை என்று நீங்களே சொல்கிறீர்கள் அல்லவா?
பதில்: ஆமாம், சிந்தாந்த சண்டையாக வராமல் தடுத்தது யார்? தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான பிரச்சனை என்று முடித்துவிட்டுப் போய்விட்டது திமுக. இந்தி திணிப்பு குறித்து எங்கே தேர்தல் பரப்புரையில் நடந்தது?
கேள்வி: அது எடுபடவில்லையே!
பதில்: அப்படியல்ல, இது குறித்து எங்கும் பிரச்சாரமே நடக்கவில்லை. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மக்கள் ஆதரித்தார்கள். கிட்டத்தட்ட 35 இடங்களில் அழித்திருக்கிறோம். எந்த இடத்திலும் மக்கள் எங்களைப் போய்ப் பிடித்துக் கொடுக்கவில்லை. மக்கள் கை தட்டி வரவேற்றார்கள், பாராட்டியிருக்கிறார்கள். இதெல்லாம் வீடியோவாகவே இருக்கிறது. அப்போது திமுக அணிகளை போராட்டத்தில் இறக்கவில்லை. உங்களுடைய கலைஞர் டி.வி.யில் இது விவாதமே வரவில்லை, சன் டி.வி.யில் விவாதமே ஆகவில்லை.
ஒருவர் உயிர் இழந்திருக்கிறார், செய்தியானதா முதலில்? அவருடைய இறுதி நிகழ்வில், தன்னுடைய கணவருடைய உடலை வைத்துக்கொண்டு மனைவி வந்து “போராட வாங்க” என்று சொல்லக்கூடிய உரை எங்கே நடந்தது? மகள் வந்து நின்று பேசுகிறாள், “எங்கள் அப்பா உயிர் கொடுத்துவிட்டார், போராட வாங்க” என்று. எங்கே நடக்கும் இது? தி.மு.க. சார்பான ஊடகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் வந்ததா? அல்லது திராவிடம் சார்ந்து பேசக்கூடிய யாராவது ஒருவர் வந்து அதை நின்று எடுத்துப் பேசினார்களா? இல்லை. அப்போது அரசியலாக இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளையுமே திமுக நிராகரித்தார்கள். அதுதான் நாங்கள் ‘பென் டீம்’ பற்றி சொல்கிறோம்.
திமுக அரசியலற்றதாகத்தான் இருந்தார்கள். “நாங்கள் 1000 ரூபாய் கொடுத்தோம், மக்களுக்குப் பேருந்து இலவசம்” – இதுதான் எல்லா இடத்திலும் பேசப்பட்டது. நான் தேர்தலில் கிட்டத்தட்ட 70, 80 கூட்டங்களில், 15-18 தொகுதிகளில் பரப்புரை செய்துள்ளேன். எனக்குத் தெரியும் என்ன நிலை என்று.
கேள்வி: அப்போது அந்த நேரத்தில் த.வெ.க. வெற்றி பெறுவார்கள் என்று நினைத்தீர்களா?
பதில்: அப்போது தி.மு.க.வின் பிரச்சாரத்தில் தவறு இருக்கிறது என்று சொன்னேன். த.வெ.க. கணிசமாக வருவார்கள் என்று தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி வரும் என்று நாம் யாருமே எதிர்பார்க்கவில்லை, கணிக்கவில்லை. ஆனால் பெரிய கட்சிகளான காங்கிரசுக்குத் தெரிந்திருக்கிறது, தி.மு.க.வுக்குத் தெரிந்திருக்கிறது.
கேள்வி: இப்போது காங்கிரஸ் 1967க்குப் பிறகு அமைச்சரவையில் இடம் பெறுகிறார்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: காங்கிரஸ் மேல் எங்களுக்குப் பெரிய நல்ல அபிப்பிராயம் கிடையாது, என்றைக்குமே கிடையாது. அது மாநில உரிமைக்காகப் பேசிய கட்சி அல்ல. மாநில உரிமைகளை நசுக்கிய கட்சிதான் என்று பேசியிருக்கிறோம். தமிழர்களுக்கு எதிரான எல்லா நிலைப்பாடுகளையும் எல்லாக் காலகட்டங்களிலும் தொடர்ச்சியாக எடுத்த கட்சி காங்கிரசு.
கேள்வி: நீங்கள் சொன்ன அதிகாரப் பகிர்வு காங்கிரசுக்கும் நடந்திருக்கிறதல்லவா?
பதில்: ஒரு தேசிய கட்சியை இங்கே அமைச்சர்களாகக் கொண்டு வருவதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. நாங்கள் இதை ஏற்கவில்லை.
கேள்வி: இடதுசாரிகள் எடுத்த நிலைப்பாட்டை ஆதரிக்கிறீர்களா? அவர்களும் தேசிய கட்சிதானே? முஸ்லிம் லீக் தேசிய கட்சி.
பதில்: இடதுசாரிகள் தேசியம் பேசவில்லை. அவர்கள் பேசக்கூடியது உழைப்பாளர் ஒற்றுமை, வர்க்க ஒற்றுமை, வர்க்க விடுதலை பேசுகிறார்கள். காங்கிரஸ் பேசுவது தேச ஒற்றுமை. அவர்களுக்கு இந்தி பெருமை, இந்தியா பெருமை – இதெல்லாம்தான் அவர்களுடைய பெருமைகள். காங்கிரஸ் என்றால் காந்தி பெருமை, நேரு பெருமைதான் பேசுவார்கள். தமிழ்நாட்டுக்குள் மட்டும் காமராஜர் பெருமை பேசுவார்கள். தமிழர்களுடைய அரசியலைக் குறித்து அவர்கள் என்றைக்குமே கவலை கொண்டதில்லை.
அந்தக் காலத்திலிருந்தே ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்கக்கூடாது, இந்தி திணிப்பில் இருந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். அவர்களுடைய கடந்த கால வரலாற்றைப் பார்த்துவிட்டோம். தமிழ்நாட்டுக்கான கட்சியாக நாங்கள் இன்றைக்குமே அதைப் பார்த்ததில்லை. 2009இல் நடந்த இனப்படுகொலை சார்ந்து இருந்தாலும் சரி, அதற்குப் பிறகு இன்றைக்கு வரைக்குமே, பேரறிவாளன்தான் அவர்களுக்குத் துன்பமாக இருக்கிறது ஒழிய, வேறு பிரச்சனைகளை பேசியதில்லை.
2021 தேர்தல் முடிந்ததற்குப் பிறகு, காங்கிரசை கூட்டணியில் வைத்தது தவறானது, ராகுல் காந்தியை தவறான நபராக பார்க்கிறோம் என்று சொன்னோம். அந்த இடத்தில் கூட்டணிக் கட்சிகளைக் கையாளுவதில் தவறு இருக்கிறதாகப் பார்க்கிறோம் என்று சொன்னபோது, தி.மு.க.வினுடைய ஆதரவாளர்கள் எங்களைப் பிடுங்கி எடுத்தார்கள். எங்களை ‘ஃபாசிஸ்ட்’ என்று மட்டும்தான் பேசவில்லையே தவிர, மற்ற எல்லாவற்றையும் பேசினார்கள் தி.மு.க.வின் ஆட்கள்.
இன்றைக்கு காங்கிரசு தவெகவிடம் போய்ச் சேர்ந்ததை எதிர்த்து பேசுகிறார்கள். தி.மு.க.வுக்காகப் பேசக்கூடிய பல அறிவுஜீவிகள், அன்றைக்கு எங்களுக்கு எதிராகப் பேசினார்கள், இன்றைக்கு என்ன சொல்கிறார்கள்? நாங்கள் அன்றைக்கே சொன்னோம், பிரசாந்த் கிஷோரை வைத்து மோடி செய்தார், சுனில் கோலுகை வைத்து ராகுல் காந்தி செய்கிறார் – எல்லாம் பி.ஆர். வேலை என்று மே 17 இயக்கம் சொன்னோம். இங்கே கருத்தியல் சார்ந்த வேலை இருக்கிறது என்று சொன்னோம்.
”மாநிலக் கட்சிகள்தான் இந்திய அளவில் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்கான கூட்டணிக்குத் தலைமை தாங்க வேண்டும், அது ராகுல் காந்தி அல்ல” என்று சொன்ன ஒரே அமைப்பு மே பதினேழு இயக்கம்தான்.
வட இந்தியாவில் லாலு பிரசாத் யாதவோ, தென்னிந்தியாவில் தி.மு.க.வோ அல்லது கம்யூனிஸ்டுகளோ – இவர்கள்தான் பா.ஜ.க.வுக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள். இவர்களெல்லாம் தலைமை தாங்க வேண்டும் என்று சொன்னதற்காக, இன்றைக்குச் சொல்லக்கூடிய ஊடகங்கள், மருதையனில் இருந்து அரண்செய் ஊடகத்தில் இருந்து, இங்கே இருக்கக்கூடிய திராவிட அறிவுசார்ந்து பேசக்கூடிய, அத்தனை பேருமே எங்களை எதிர்த்துப் பேசினார்கள். இன்றைக்கு அவர்களெல்லாம் எங்கே போய் முகத்தை வைத்துக் கொள்ளப் போகிறார்கள்? நாங்கள் அன்றைக்கே இவ்வளவு தொகுதிப் பங்கீடு தரக்கூடாது, இது தவறு என்று சொன்னோம்.

“திமுக ராகுல் காந்தியை இந்தியாவினுடைய இன்னொரு தலைவராக முன்னிறுத்தாதீர்கள். மறுபடியும் தேசிய கட்சியைப் போய் நிறுத்தாதீர்கள். மாநிலக் கட்சிகளை நிறுத்தினால்தான் ‘கூட்டாட்சி’ அல்லது ‘கூட்டமைப்பு’ பேச முடியும்” என்று இத்தனையும் மே பதினேழு இயக்கம் பேசியிருக்கிறோம். இத்தனையுமே ஆவணமாக இருக்கிறது. இந்த தோல்வி என்பது இதனுடைய விளைவுதான்.
இன்றும் ஊடகத்தில் பாருங்கள்: கடந்த ஐந்து வருடத்தில் எந்த ஊடகத்திலுமே இங்கே இருக்கும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு இடம் கிடையாது. வெறும் பத்திரிகையாளர், பத்திரிகையாளர், பத்திரிகையாளர் – இதைத் தி.மு.க. தெளிவாகச் செய்தது, பா.ஜ.க. தெளிவாகச் செய்தது. இரண்டு கட்சியும் சேர்ந்துதான் இங்கே சமூக செயல்பாட்டாளர்கள் ஊடகத்துக்கு வரக்கூடாது என்று முடிவெடுத்துச் செய்தார்கள்.
ஊடகங்களில் பேசக்கூடிய, அழைக்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்குக் கொள்கை, திட்டம் ஒன்றும் கிடையாது. பார்வை கோணம் இருக்கும், இன்றைக்குக் காலையில் அவர்கள் தி.மு.க.வுடையது அருமையான பார்வை என சொல்வார்கள். மதியம் “பா.ஜ.க. செய்வதில் சில விடயங்கள் நல்லது நடக்கலாம்” என்று சொல்லி குழப்பிவிட்டுப் போவார்கள். மாலை “விஜய்தான் அசைக்க முடியாத சக்தி” என்று பேசுவார்கள். ஒரே பத்திரிகையாளர், ஒரே நாளில் மூன்று நிலைப்பாடு எடுத்துப் பேசுவார். இப்போது மக்கள் குழம்புவார்களா மாட்டார்களா? இத்தனை பேரைக் கொண்டுவந்து முன்னிறுத்தி, ‘பென் நிறுவனம்’ இந்த வேலையைப் பார்த்தது. கருத்தியல் தெளிவைக் கொடுக்கவில்லை.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ஒரு நடிகரைக்கூட அங்கே போராட்டக் களத்தில் நின்றவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை, தற்படம் (Selfie) எடுக்கவில்லை. உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அங்கே இருந்த ஒரு தமிழன் கூட, ஒரு நடிகரிடம் சென்று தற்படம் எடுத்தோ, பாராட்டியோ, பின்னால் போய் நிற்கவோ இல்லை.
ஏழு வருடத்துக்குள் இப்படிப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வந்தது யார்? ஊடகங்களில் அரசியலற்ற ஆட்களைக் கொண்டுவந்து, “இவர்கள்தான் கருத்து சொல்வார்கள், எல்லாவற்றையும் பற்றிப் பேசுவார்கள்” என்று, இந்தப் பத்திரிகையாளர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருந்தால், வேறு சமூக செயல்பாட்டாளர்கள் இறந்தா போய்விட்டார்கள்? நாங்கள் களத்தில் நிற்கிறோம், போராடுகிறோம். அவர்களை (சமூக செயல்பாட்டாளர்கள்) யாரையுமே ஊடகத்தில் கொண்டு வரவே இல்லை.
கேள்வி: போராட்டத்திலேயே சினிமா நட்சத்திரங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைத்தது!
பதில்: அது சேனலில் வந்தது, சேனல்கள் அப்படி நடத்தினார்கள். நடிகர் லாரன்சை சுற்றித்தான் அத்தனை பேரும் உட்கார்ந்திருந்தார்கள் என்று கூறினார்கள். நாங்கள் தள்ளி இருந்தோம். எங்களைச் சுற்றி ஒரு 10,000 பேர் இருந்தார்கள். இன்றைக்கும் அதெல்லாம் ஆவணமாக இருக்கிறது. சேனல்காரர்கள் தான் போய் நேராக நடிகர்களிடம் நேர்காணல் எடுக்கிறார்கள்.
‘தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு வந்தார், முதல் முதலில் மாநாடு நடத்தினார். அதற்கு அவர் நின்றார், நகர்ந்தார், கையை எப்படி வீசினார்’ – இப்படி எல்லாவற்றையுமே செய்தியாக மாற்றினார்கள். சேனல்கள் எல்லாம் ‘பணம் செலுத்தப்பட்ட ஊடகம்’ (Paid).
கேள்வி: “எல்லாரையும் எப்படி பெய்டுன்னு சொல்லுவீங்க?” “
பதில்: ஊடகங்கள் ஒரு தலைவரைக் கொள்கை ரீதியாக பேசலாம், விமர்சிக்கலாம். ஆனால் அவர் கையை வீசினார், முகத்தைத் திருப்பினார், மேலே விழுந்த துண்டு, அங்கே தூக்கி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில், அவர் மருந்து எடுத்துப் போட்டார், அவரே செருப்புப் போட்டார், அவரே மூச்சு விட்டார், அவரே கண்ணைத் திறந்து பார்வையை அவரே பார்த்தார் – இதெல்லாம் பிரபல பொழுதுப்போக்கு சேனல்கள் செய்யலாம். விஜய் டி.வி. செய்யலாம். ஆனால் அதை ஒரு நியூஸ் சேனல் செய்யலாமா? அது எதற்கு? நியூஸ் சேனல் எதை செய்ய வேண்டும்? இந்த மாதிரி பி.பி.சி. சேனல் செய்கிறதா? அல்ஜசீரா சேனல் செய்கிறதா? இல்லையே! தீவிரமாக வலதுசாரியாக இருக்கக்கூடிய சி.என்.என். சேனல் செய்கிறதா? அப்படி எதுவுமே செய்யவில்லை. வெளிநாட்டு ஊடகங்கள் கூட அப்படிச் செய்யவில்லை. தமிழ்நாடு சேனல்கள் எப்படிச் செய்கிறீர்கள்?
ஜல்லிக்கட்டு போராட்டம் போல் எந்த நடிகருக்கும் பெரிய முக்கியத்துவம் தராத போராட்டங்கள் இங்கே நடந்திருக்கின்றன. விஜய்யின் திரைப்படங்கள் திரையரங்கில் இருக்கும் வரைக்கும் ரசிகர்கள் போகிறார்கள், பார்க்கிறார்கள், போய்விடுகிறார்கள். விஜயை எல்லாக் குடும்பத்துக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு போய்ச் சேர்த்தது யார்?
கேள்வி: சோசியல் மீடியாவா?
பதில்: அவருடைய கடந்த 10 படங்களை வெளியிட்டது ‘சன் பிக்சர்ஸ்’. அவர்கள்தான் வீடு வீடாக கொண்டு போய்ச் சேர்த்தார்கள், பாட்டு போட்டார்கள், காமெடி போட்டார்கள், படம் போட்டார்கள். ‘சர்கார்’ திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ்-சில் தயாரிப்பு செய்தார்கள். அப்போது வணிகம் சார்ந்த இடத்தில், எங்கே திராவிடத்துக்கு இடம் இருந்தது? திராவிடம் சம்பந்தமாக என்ன படம் எடுத்தீர்கள்? இயக்குநர் ரஞ்சித் ‘சார்பேட்டா’வில் திராவிடம், தி.மு.க. என்ன செய்தது என்பதைச் செய்தார். எத்தனை இடங்களில் அந்த மாதிரிப் படங்கள் வந்தன? அதற்கு எத்தனை பேர் ஒத்துழைப்பு செய்தார்கள்? அந்த மாதிரிப் படங்கள் வரவில்லையே!

கேள்வி: ‘மாமன்னன்’ வந்தது, அதில் உதயநிதி நடித்தாரே!
பதில்: உதயநிதி நினைத்தால் எத்தனை சமூகநீதி படங்களை செய்திருக்க முடியும்? தமிழ்நாட்டில் கொண்டு வந்திருக்க முடியும்? திராவிட, தமிழ் தேசிய அரசியல் பேசக்கூடிய ”திரைப்பட இயக்கம்” இருக்கிறது. இயக்குநர்களான ரஞ்சித்துக்கோ, வெற்றிமாறனுக்கோ, ராமுக்கோ, தியாகராஜன் குமாரராஜாவுக்கோ, மிஷ்கினுக்கோ, அமீர் போன்றவர்களுக்கு என்ன படம் செய்ய கொடுத்தீர்கள்?
கேள்வி: இவர்கள் எல்லாம் திராவிட இயக்க அரசியலுக்கு சில சமயம் எதிராக இருந்திருக்கிறார்கள்!
பதில்: எதிராக இல்லை, எதிராக விமர்சித்திருக்கிறார்கள். ”விமர்சித்தால் எதிராக இருக்கிறார்கள்” என்று அர்த்தம் இல்லை. அப்படிக் கேட்டோமென்றால், தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திராவிடக் கொள்கை சம்பந்தமாகத் தெளிவாகப் பேசுகிறார். இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான ஒரே குரலாக, சமரசமற்ற குரலாக இருக்கிறார். அதுதான் நமக்கு பெருமையாகவும் இருந்தது. அப்படி ஒன்றாக அவர்கள் அமைச்சர்கள் இருக்கிறார்கள்? திராவிடம் என்றீர்களே, உங்கள் கட்சியில் திராவிட எதிர்ப்பாளர் எத்தனை பேர் இருக்கிறார்கள்? எத்தனை விகிதம் இருக்கிறது என்பதை கணக்குப் போடுங்கள்.
கேள்வி: வெகுஜன கட்சியாக இருந்தால் அப்படித்தான் செயல்பட முடியும் என்று சொன்னீர்கள்?
பதில்: நான் அ.தி.மு.க.வைச் சொன்னேன். ”கொள்கைக் கட்சி” என்று அ.தி.மு.க. சொன்னதா? இல்லை, த.வெ.க. அப்படியெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. திமுகதான் சொல்கிறீர்கள்.
உங்கள் கட்சியில் திராவிட எதிர்ப்பாளர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அதாவது சமூக நீதி கடைப்பிடிக்காத ஆட்கள், சாதியைக் கடைப்பிடிக்கிற ஆட்கள், கடவுள் பக்தியை மட்டும் முன்னிலைப்படுத்தக்கூடிய ஆட்கள், மூட நம்பிக்கையை முன்னிலைப்படுத்தக்கூடிய ஆட்கள், பெண் அடிமைத்தனத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய ஆட்கள் என்று எடுத்துக்கொண்டால், அத்தனை பேரும் திராவிட எதிர்ப்பாளர்தான். திராவிட எதிர்ப்பாளர் என்பது “திராவிடத்தை எதிர்க்கிறோம்” என்று சொல்பவர் மட்டும் திராவிட எதிர்ப்பாளர் இல்லை. திராவிடம் முன்வைத்த கொள்கைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளாதவன் திராவிட எதிர்ப்பாளர்தான். அதேபோல பார்ப்பனரை வைத்து தன் குடும்ப நிகழ்ச்சி நடத்துகிறவர்கள் எல்லாமே திராவிட எதிர்ப்பாளர்தான்.
அப்போது அந்தக் கட்சியில் இருந்துகொண்டு, அமைச்சர்களில் எத்தனை பேர் திராவிட ஆதரவாளர் என்று கூறுவீர்கள்? திராவிட இயக்கத்தில் இருக்கக்கூடிய குறைகள் அல்லது திராவிடக் கட்சிகள் செய்த குறைகளைச் சொல்லக்கூடியவர்கள் “திராவிட எதிர்ப்பாளர்” என்று பேசினார்கள். உங்கள் கட்சிக்குள் எத்தனை பேர் திராவிட ஆதரவு/எதிர்ப்பாக இருந்திருக்கிறார்கள் என்று பட்டியல் போடுங்கள்.
ஏன் வேங்கைவயலுக்குத் தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை? இது அடிப்படைப் பிரச்சினை. இந்திய அளவில் தலித்துகளினுடைய வாக்குகளை ஒதுக்கி நிறுத்தினால்தான், தனிமைப்படுத்தினால்தான் பா.ஜ.க. ஜெயிக்க முடியும் என்ற யுத்தத்தை நடைமுறைப்படுத்தியது. இதை நான் நீண்ட காலமாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன்.
வட இந்தியாவில் மாயாவதியை பிஜேபிக்கு எதிரான ‘பெரும் கூட்டணி’க்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியதால்தான் பா.ஜ.க. உத்தரப் பிரதேசத்தில் பெரிதாக வெற்றி பெற்றது. ராம்விலாஸ் பஸ்வானை அதேபோல ஜனதா தள கூட்டணியில் இருந்து வெளியேற்றி நிறுத்தினார்கள். வட இந்தியாவில் இருக்கக்கூடிய தலித் என்கிற வாக்கு வங்கியைத் தனிமைப்படுத்தி, பா.ஜ.க. எதிர்ப்பு அணிக்குள்ளாக தலித் வாக்குகள் போய்விடக்கூடாது என்பதில் மிக தெளிவாக பா.ஜ.க. வேலை பார்த்தது. இதே நிலைதான் மாஞ்சியைத் தனிமைப்படுத்தி மொத்தமாக முடித்துவிட்டார்கள்.
தலித் வாக்குகள்தான் இந்தியாவில் அரசியலை முடிவு செய்யக்கூடிய வாக்குகள் என்பது நன்றாகவே தெரியும். ஆனால், அப்படிப்பட்ட தலித் அமைப்புகளை “நாங்கள் கூட்டணி சேர்த்துக்கொள்ள மாட்டோம்” என்று முடிவு செய்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் தேர்தலில் தோற்றுப் போனார்கள். ராஜஸ்தான் தேர்தலில் தோற்றுப் போனார்கள். உத்தரப் பிரதேசத் தேர்தலில் தோற்றுப் போனார்கள். மகாராஷ்டிர தேர்தலில் தோற்றுப் போனார்கள். பீகாரில் அந்த நெருக்கடியைச் சந்தித்தார்கள். இது அவர்களுக்கு ஒரு பாடமாக இருந்தது.
பா.ஜ.க. இந்த வேலையைச் செய்வதற்காகத் தமிழ்நாட்டுக்குள்ளாக விடுதலைச் சிறுத்தைகளை நோக்கி அவ்வளவு நெருக்கடிகள் கொடுத்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க. கூட்டணியில் இருந்ததால் எதிர்கொண்ட அவதூறுகள் ஏராளமானவை. தோழர் திருமாவைக் குறித்து எச். ராஜா எத்தனையோ முறை அசிங்க அசிங்கமாகப் பேசியிருக்கிறார். பா.ஜ.க.வில் தமிழிசை அவர்களும் அவ்வாறு தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள். எல்லாருமே திருமாவை மட்டும்தான் குறி வைப்பார்கள். வேறு யாரையும் குறிவைக்க மாட்டார்கள்.
இந்தியாவில் “கம்யூனிஸ்ட்கள்தான் கொள்கை எதிரி” என்றும், “அம்பேத்கர் எங்களுக்குக் கொள்கைத் தலைவர்” என்று பேசுவான். ஆனால் இங்கே வந்து அண்ணல் அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்கக்கூடிய திருமாவை குறிவைப்பான். கம்யூனிஸ்ட் பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டான். திராவிட கழகத்தை பற்றி கூட பேச மாட்டார்கள். ஏனென்றால், தலித் அமைப்பு தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்கிற ஒரு நோக்கம் நீண்ட காலமாகவே இருந்தது. அதனால்தான் தலித் மக்கள் மீதான தாக்குதல் தீவிரமடைந்துகொண்டே போன சமயத்தில்கூட தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு விடுதலைச் சிறுத்தைகளின் கொடியைக்கூட நட முடியாத நிலைமை இருந்தபோது, அதற்கு தி.மு.க. இறங்கியிருக்க வேண்டும். இதுவும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் 22% தலித் வாக்குகள். இந்தத் தலித் வாக்குகள் எந்தப் பக்கம் அசைகிறதோ, அங்கேதான் ஆட்சி அதிகாரம் செல்கிறது. இதற்குத்தான் விடுதலைச் சிறுத்தைகளை காங்கிரஸ் கூட்டணியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள், த.வெ.க. கூட்டணியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள், பா.ஜ.க. கூட்டணியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார்கள். இல்லையெனில் “பா.ஜ.க. கூட்டணியில் வரவே வேண்டாம், நீ தனியாகவாவது நில்” என்றார்கள்.
கேள்வி: கூட்டணிக்கே போகாதபோது கூட தலித் வாக்குகள் த.வெ.க.வுக்குத்தான் விழுந்திருக்கிறது, இல்லையா?
பதில்: இது ஏன் நடந்தது? தலித் மீதான தாக்குதல் தீவிரமடைந்தபோது வேங்கைவயலுக்குத் தீர்வு வரவில்லை. எங்கள் அமைப்பு மட்டுமே கடந்த ஐந்து வருடத்தில் தலித்திய பிரச்சினைகளுக்காக ஏகப்பட்ட இடங்களுக்கு ஆய்வு செய்ய போயிருந்தோம். எல்லா இடங்களிலும் எங்களுக்கு ஏதோ ஒரு வகையில் தி.மு.க.வுடைய மாவட்ட அமைச்சரோ, மாவட்டச் செயலாளரோ ஆதரவாகவே இருக்க மாட்டார்கள்.
தென் மாநிலத்தில், தென் மாவட்டத்தில் மிகப்பெரிய ஒரு அடையாளமாக இருக்கிற பிரச்சனை மாஞ்சோலை பிரச்சனை. ஏன் மாஞ்சோலை பிரச்சனையை தி.மு.க. தீர்க்க முடியாதா? அதில் திமுக அரசு கூட பணம் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை, அந்த பாம்பே பர்மா கம்பெனிக்காரன் தலையில் கொட்டி, அம்மக்களுக்கு அவர்களுக்குரிய பணத்தை பெற்றுக் கொடுத்திருந்தால், மிகப் பெரிய ஒரு மரியாதையை பெற்றிருக்க முடியும். அது எந்தச் சமூகத்துக்கு எதிரானதும் கிடையாது. ஒரு கார்ப்பரேட் கம்பெனியைத்தான் எதிர்க்கிறோம். அதைக்கூட தி.மு.க. செய்யத் தயாராக இல்லை. இது மிக எளிமையான வேலை. அந்தக் கம்பெனிக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் அங்கே சொத்து இருக்கிறது. அதைப் பிடுங்கி, அந்த மக்களுக்குக் கொடுத்து செட்டில் செய்திருக்கலாம். அதைக்கூட செய்யாமல் இருந்தார்கள்.
ஏன் தலித்துகள் மேல் தாக்குதல் தி.மு.க. காலத்தில் தீவிரமடைந்தது என்றால், அந்தக் கூட்டணியில் இருந்து தலித்துகளை அப்புறப்படுத்த வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும், வெளியேற்ற வேண்டும் என்கின்ற ஒன்று நடந்தது. தலைமை (தோழர் திருமா) நகராமல் உறுதியாக “பா.ஜ.க. எதிர்ப்பில் உறுதியாக நிற்போம்” என்று திரும்பத் தெளிவாகச் சொன்னார்கள்.
“என்ன ஆனாலும் பரவாயில்லை, அதிகாரத்தில் பங்கு தரவில்லை என்றாலும் பரவாயில்லை, விசிக இந்த முற்போக்குக் கூட்டணி/ பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம்” என்று திரும்ப உறுதியாகச் சொன்னதற்குப் பின்னால் என்ன நடந்தது? சில தலித் intellectualsகளை வைத்து திருமாவுக்கு எதிராகப் பேச வைத்தார்கள். அவதூறுகளைப் பரப்ப ஆரம்பித்தார்கள். தலித்துகளுக்கு இடையே தாக்குதல் நடக்க ஆரம்பித்தது. இதை எல்லாம் கையாள வேண்டிய பொறுப்பு தி.மு.க.வுடையது. அவர்களிடம்தான் ஆட்சி அதிகாரம் இருந்தது.
அப்போது திமுகவின் சட்டத்துறை அமைச்சர் என்ன செய்தார்? சமூக நலத்துறை அமைச்சர் என்ன செய்தார்? எத்தனை அமைப்புகள் உள்ளே வைத்திருக்கிறீர்கள், அவர்களெல்லாம் என்ன செய்தார்கள்? அப்போது அதிகாரம் முழுக்க உங்கள் கையில் இருந்தது. கூட்டணி வாக்குகளை மட்டும்தான் வி.சி.க. கொடுத்தது. ஆனால் அதிகாரம் உங்கள் கையில்தான் இருந்தது. அப்போது அந்த வேலையைச் செய்திருக்க வேண்டும். உங்கள் காவல்துறை அதிகாரிகள் எத்தனை இடங்களில் சேலத்தில் கொடிக்கம்பத்தைப் பிடுங்கிப் போட்டார்கள், மதுரையில் பிடுங்கிப் போட்டார்கள். இதையெல்லாம் யார் தடுத்திருக்க வேண்டும்? அந்த இடத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் நின்று கேள்வி கேட்டிருக்க வேண்டும், அமைச்சர் கேள்வி கேட்டிருக்க வேண்டும். அதிகாரிகள் எத்தனை இடங்களில் நெருக்கடி கொடுத்தார்கள்? அப்போது இதையெல்லாம் செய்திருந்தால் அந்த மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கும்.
திமுக எத்தனை நல்ல விடயம் செய்தீர்கள், நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நீங்கள் பொருளாதார ரீதியாக உதவி செய்வது, கட்டமைப்பு ரீதியாக உதவி செய்வது ஒருபுறம். வெளிப்படையான சாதிய வன்முறை இருக்கிறதல்லவா? அதிலிருந்து பாதுகாப்பு செய்ய தவறியது ஏன்? அவை அன்றாட வாழ்க்கையில் அவர்களுடைய சுயமரியாதை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், சாதியப் பிரச்சனைகள். தி.மு.க. சில இடங்களில் சொன்னபோது செய்தார்கள், சில இடங்களில் செய்யவில்லை.
நான் கள்ளக்குறிச்சி பிரச்சனையைப் பற்றிப் பேசியபோது உடனடியாக நடவடிக்கை எடுத்துப் பேசினார்கள். நாகப்பட்டினத்தில் சாதியப் பிரச்சனை, கோடியக்கரை பிரச்சனை வந்தபோதெல்லாம் தி.மு.க.வில் அங்கே இருக்கிறவர்கள் ஒத்துழைப்பு செய்தார்கள். ஏனென்றால் அந்தப் பிரச்சனை செய்தவர்கள் தி.மு.க.காரர்கள். அவர்களை கைது செய்யும் அளவுக்கெல்லாம் ஒத்துழைப்பு செய்தார்கள். அதே மாதிரியான ஒரத்தநாடு பக்கத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைக்கும் எங்களுக்கு உதவி செய்தார்கள். அதே சமயத்தில் பெரும்பாலான பெரிய பிரச்சனைகள் நடந்த மற்ற இடங்களில் அது நடக்கவில்லை. எந்த இடத்தில் நாங்கள் நின்று சண்டை போட்டுச் சரி செய்ய முடிந்ததோ, அதுதான் செய்ய முடிந்திருக்கிறது. மற்ற இடங்களில் செய்ய முடியவில்லை.
கவின் ஆணவ கொலையில் என்ன நடந்தது? தென் மாவட்டங்களில் மட்டும் இதை தடுக்க முடியுமா என்றால், முடியும். தலித்துகளை தி.மு.க.வுடைய வாக்கு வங்கியில் இருந்து பிரித்துவிட்டால் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியும். இது எளிமையான வழி. அதை தொடர்ச்சியாகச் செய்தார்கள். ஒவ்வொரு முறையும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருந்தோம், “பண்ணாதீர்கள், பண்ணாதீர்கள், பண்ணாதீர்கள்” என்று கூறினோம். அதற்கு “நீலச் சங்கி” என்று முத்திரை குத்தினார்கள். இதில்தான் திருமா தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளானார். அவர் சொந்தச் சமூகத்துக்குள்ளும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார். எல்லாப் பக்கத்திலும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டார்.

எல்லாருமே “நீங்கள்தானே கூட்டணியில் இருக்கிறீர்கள், வேங்கைவயலுக்குத் தீர்வு காண மாட்டீர்களா?” என்றார்கள். வேங்கைவயலுக்கு அவர்தான் அதிகமாகப் பெரிய போராட்டம் நடத்தியது. வடகாடு பிரச்சனைக்கும் அவர்தான் பெரிய போராட்டத்தைச் செய்தார். வேறு எந்த அமைப்பு செய்தது? ஒரு அமைப்பும் செய்யவில்லை. ஆனால் கெட்ட பெயர் இவருக்குத்தான் வந்தது. ஏனென்றால், இவர் கூட்டணியில் இருந்தார். கூட்டணியில் இருக்கிறவர்கள் என்ன செய்தார்கள் என்றால், இந்தப் பிரச்சனை தீர வேண்டும் என்றால், அங்கே ஆதிக்க சாதியாக யார் இருந்தார்களோ, அவர்களுக்குச் சாதகமாக அமைச்சர் இருந்தார் அல்லது மாவட்டச் செயலாளர் இருந்தார், அல்லது அந்தப் பகுதி எம்.எல்.ஏ. யாராவது ஒருவர் இருப்பார். தி.மு.க. தரப்பில் இருந்து பிரச்சனையை நகரவிடாமல் செய்துவிடுவார்கள். இது நடந்துகொண்டே இருந்தது.
அப்போது இந்த அழுத்தம் என்ன ஆனது என்றால், ஒரு இடத்தில் “சரி, நாம் வந்து தி.மு.க. பக்கம் போக வேண்டாம்” என்று முடிவானது. அதற்காக பா.ஜ.க. பக்கம் போக வேண்டும் என்று அந்த மக்கள் முடிவெடுக்கவில்லை. அ.தி.மு.க. பக்கம் போக வேண்டும் என்று அந்த மக்கள் முடிவெடுக்கவில்லை. நாம் தமிழர் பக்கம் போக வேண்டும் என்று அந்த மக்கள் முடிவெடுக்கவில்லை. ஜனநாயகமாக முடிவெடுத்தார்கள். அதனால் விசிலுக்கு வாக்கு செலுத்தியிருக்கலாம்.
நீங்கள் மறுபடியும் இவர்களை குறை சொல்லி, இவர்கள் மேல் ஒரு வன்மமான தாக்குதலைச் செய்வதால், மாற்றிவிட முடியாது. மக்கள் தி.மு.க. மேல் ஒரு வெறுப்பில் எல்லாம் விசிலுக்கு ஓட்டுப் போடவில்லை. அதிருப்தி இருந்திருக்கிறது. அதிருப்தி எப்போது மாறும்? அவர்களை எதிரியாகப் பார்த்துவிடாதீர்கள். அவர்கள் (விசிக) உங்களுக்குப் போன தேர்தலில் ஆதரவளித்தவர்கள். ஆனால் இப்போது தேர்தலுக்குப் பிறகான இந்தக் கூட்டணி இருக்கிறதல்லவா? இதில் இரண்டு முனையிலுமே வார்த்தைப் போர், தாக்குதல்கள் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
தி.மு.க. தரப்பில், முதலமைச்சர் மிக கண்ணியமான ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுதான் வழிகாட்டுதலாக இருக்க முடியும். அந்த அடிப்படையில்தான் அந்தக் கட்சியின் நிலைப்பாடு இருக்க முடியும். கூட்டணி இன்றைக்கு, நாளைக்குப் போகலாம். கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணிதான். நீங்கள் கொள்கைக் கூட்டணி வைத்தீர்கள் என்றால், அதிகாரத்திலும் பங்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கவில்லை. அதிகாரத்தை பொறுப்பெடுத்து வேலை செய்திருக்க வேண்டும். அதை திமுக செய்யவில்லை. இப்போது த.வெ.க. ஒரு அனுபவமே இல்லாத, யார் என்றே தெரியாத, அரசியல் பங்களிப்பே இல்லாத நபர்களாக வருவது நமக்குக் கவலையாகத்தான் இருக்கிறது.
கேள்வி: அதை ஒரு நல்ல விடயமாகப் பார்க்கிறீர்களா நீங்கள்?
பதில்: ஒரு புதிய கவலையோடுதான் பார்க்க முடியும். இனிமேல் நல்ல விடயம் நடக்கும்போது நல்லதாகப் பார்க்கலாம். அதுவரைக்கும் ஒரு கவலை இருக்கிறதல்லவா? சமூகத்திதின் மீது ஒரு அக்கறை இருக்கிறதல்லவா! மாநிலக் கட்சி வந்திருக்கிற வகையில் சரி, பா.ஜ.க. வரவில்லை, நாம் தமிழர் வரவில்லை. அதுவரை மகிழ்ச்சி. இவர்கள் இரண்டு பேர்தான் தி.மு.க. எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தார்கள். இப்போது த.வெ.க.வின் வெற்றி என்பது பல்வேறு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவாகத்தான் வந்திருக்கிறது. அது ஒரு ‘லக்’ என்று சொல்ல முடியாது. இந்த விளைவுகளை எல்லாம் கணிக்கத் தவறியதன் விளைவாகத்தான் வெளியே வந்திருக்கிறது. அதனால் அதற்கு வாக்களித்தவர்களை வெறுப்பாக நாம் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
தி.மு.க.வுக்கு இந்தத் தோல்வி என்பது சில கசப்பான பாடங்களைக் கற்றுக்கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக நாம் பார்க்கலாம். ஆனால் நீண்ட காலமாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்ட கட்சி அது. அதனால் அந்தக் கட்சிக்கென்று ஒரு முகம் இருக்கிறது, அவர்களுக்கென்று பேசுவதற்கு நல்ல திட்டங்களைச் செய்திருக்கிறார்கள். பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கொள்கை ரீதியாகப் பேசுகிறார். அமைச்சர் மட்டத்தில் அது கிடையாது. ஒரு சில அமைச்சர்கள் மட்டும்தான் கொள்கை சார்ந்து இருக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அப்போது அந்த மட்டத்தை சரி செய்ய வேண்டும்.
ஏனென்றால் அதுதான் அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. அது உண்மை, அது எதார்த்தம். அவர்களுடைய சிக்கலை கணக்கில் நிராகரித்துவிட்டு நாம் பேச முடியாது. அதனால் இந்தக் குறைகள் இருக்கிறது, நிறைகள் இருக்கிறது. குறை நிறைகளைப் பார்த்துவிட்டுத்தான் நாம் பேச முடியும். ஆனால் மறுபடியும் ஒரு முற்போக்குக் கூட்டணிக்குள் சண்டை வருவதை நான் விரும்பவில்லை. இதைத் தற்காலிகமானதாக நான் பார்க்கிறேன். இதையெல்லாம் சரி செய்துவிட்டு மறுபடியும் நாம் எல்லாருமே சரியாகி நிற்க வேண்டும்.
மோடி இன்னும் ஆட்சியில்தான் இருக்கிறார். பா.ஜ.க. இன்னும் ஆட்சியில்தான் இருக்கிறது. வட மாநிலத்தில் ஜார்க்கண்டைத் தவிர எல்லா இடங்களிலும் அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான ஒரு சூழலில் நாம் இன்றைக்கு நிற்கிறோம். தி.மு.க.வினர் வி.சி.க.வுடைய வெற்றிக்கு உழைத்திருக்கிறார்கள். வி.சி.க.வினர் தி.மு.க. வெற்றிக்கு உழைத்திருக்கிறார்கள். தன் தொகுதி உட்பட பிற தொகுதிகளிலும் வி.சி.க.வினர் உழைத்ததைத்தான் பார்த்திருக்கிறோம். எட்டு தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெறுவதற்காக தி.மு.க.வினரும் உழைத்திருக்கிறார்கள். கம்யூனிஸ்டுகள் உழைத்திருக்கிறார்கள். ம.தி.மு.க. எல்லா இடங்களிலும் உழைத்திருக்கிறது. நான்கு தொகுதியில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்கள். அவர்களும் எல்லா இடங்களிலும் எல்லா ஊர்களிலும் அமைப்பு வைத்திருக்கிறார்கள். எல்லா ஊர்களிலும் கூட்டாக உழைத்திருக்கிறார்கள்.
ஆனால் இன்றைக்கு இருக்கின்ற சூழல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இது வேறு ஒரு ஆட்சிக்குப் (ஆளுநர் ஆட்சிக்கு) போய்விடக்கூடாது. வேறு ஒருவர் கையில் பிரித்துக் கொடுத்துவிட முடியாது. இன்றைக்குத் தமிழ்நாட்டைப் பாதுகாப்பது என்கிற இடத்தில் இருந்து முடிவு எடுக்கலாம். இன்றைக்குப் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கக்கூடிய அமைச்சர்கள் மீது நமக்குப் பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. அதைச் சரி செய்வதற்கும், அவர்கள் ஆட்சி நடத்துவதற்கும் ஒரு காலத்தைக் கொடுப்போம். அவர்கள் தட்டுத் தடுமாறி ஒரு விடயத்தைச் சரி செய்ய வேண்டும். சரி செய்வதற்கு அல்லது நெறிப்படுத்துவதற்குப் போராட்ட வழிமுறைதான் என்றால் போராடி நிச்சயமாக நெறிப்படுத்தலாம்.
அதனால் இங்கே இருக்கும் நட்பு ரீதியான அந்த விமர்சனங்கள், விவாதங்கள் வரவேண்டும். அது முரண்களாக, பகையாகப் போய்விடக்கூடாது என்கிற கவலை எனக்கு இருக்கிறது. இது பகையாகப் போனால், நாளைக்கு மறுபடியும் தேவைப்படுகின்ற ஒரு கூட்டணியாக உருவாவது என்பது சாத்தியமில்லாமல் போய்விடக்கூடாது. அதை கவலைக்குரிய விடயமாகப் பார்க்கிறேன். இந்த விவாதங்களை நிறுத்திவிட்டு நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பத்திரிக்கையாளர்: உங்கள் நேரத்துக்கு மிக்க நன்றி!
தோழர் திருமுருகன் காந்தி: நன்றி!