அச்சுறுத்தும் எல் நினோ – கவலை கொள்ளாத அரசுகள்

உலக வானிலை மையம் ‘எல் நினோ’ என்னும் பேரிடரை எதிர்கொள்ளத் தயாராகுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. போர்களைத் திணித்து இயற்கை வளங்களை சுரண்டி வல்லரசு நாடுகள் நிகழ்த்தும் செயற்கைப் பேரிடருடன், இந்த இயற்கைப் பேரிடருடம் இணையப் போகிறது. இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் எல் நினோவினால் ஜூலை – ஆகஸ்ட் வரை கடும் வெப்ப அலைகள் ஏற்படும் எனவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போகும் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த காலகட்டத்தைத் தாண்டி 2026-27 வரையிலும் ‘சூப்பர் எல் நினோ’ உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் சில சுற்றுச்சூழல் நிபுணர்கள் அதிர்ச்சியளிக்கின்றனர்.

பசிபிக் பெருங்கடலில் கிழக்கு மற்றும் நடுப்பகுதிகள் வழக்கத்தை விட அதிகமாக வெப்பமடையும் நிகழ்வே எல் நினோ. இதனால் ஆசியா ஆஸ்திரேலியா பக்கமுள்ள நாடுகளில் தீவிர வெப்பமும் தென் அமெரிக்க நாடுகளில் கனமழையும் உருவாகும்.

இதை கடலுக்குள் ஏற்படும் தீவிர காய்ச்சல் என்றே விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.  சாதாரண நேரத்தில் கடலின் மேல் வீசும் கிழக்குக் காற்று (Trade winds) சூடான நீரை ஆசிய, ஆஸ்திரேலிய பகுதிகளில் தள்ளும். அப்போது தென் அமெரிக்கப் பகுதிகளில் கடலுக்கு அடியிலிருந்து நீர் மேலே வந்து கடலின் மேற்பகுதி குளிர்ச்சியாகும். இயல்பாக கடலில் நடக்கும் இந்த வானிலை தலைகீழ் மாற்றம் அடைவதே எல் நினோ. சூடான நீரைத் தள்ள முடியாமல் கடலின் மேற் காற்று பலவீனடையும். இதனால் சூடான நீர் தள்ளப்படாமல் திரும்பி தென் அமெரிக்கப் பகுதிக்கே சென்று விடும். அதனால் சூடான நீர் ஆவியாகி அதிக மேகங்கள் உருவாகி அந்த இடத்தில் மழைப் பொழிவை தரும். அதே சமயம் கடலின் மற்றொரு பக்கம் மேகங்கள் உருவாகாத நிலை ஏற்படும். மழை மேகங்கள் உருவாகாமல் போனால் மழை இல்லை. இதனால்தான் உலகின் ஒரு புறத்தில் அதிக வெப்பமும், அதன் மறுபக்கம் அதிக குளிர்ச்சியும் உருவாகும். ஆசியக் கண்டத்திற்குள் இந்தியா இருப்பதால் எல்நினோவின் தாக்கத்தை எதிர் கொள்ளப் போகிறது.

எல் நினோவை விட இன்னும் வீரியமானது ‘சூப்பர் எல் நினோ’. பசிபிக் பெருங்கடல் மேற்பகுதி 2 டிகிரி செல்சியல் வரை உயர்வதே ‘சூப்பர் எல் நினோ’.

இந்த விளைவு 2015-16-ம் ஆண்டு நிகழ்ந்தது. 2026-27 ல் 4 டிகிரி செல்சியஸ் வரை கூட உயரலாம் என சில நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்தியா முழுவதும் 1876-78-ல் நிகழ்ந்த தாது வருட பஞ்ச காலத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்ததே இதுவரை பதிவானதில் அதிகமானதாகும். இந்த உயர்வினால் கடும் வறட்சியும், பஞ்சமும் மக்களைத் தாக்கியது. சுமார் 50 லட்சத்திலிருந்து 1 கோடி வரையான மக்கள் பசி பட்டினியால் மரணித்ததாகக் கூறப்படுகிறது.   

இந்த நிகழ்வு கடலில் நடக்கும் இயற்கையான பேரிடர் என்றழைக்கப்பட்டாலும், இதற்கு வீரியத்தை செயற்கையாக அளிப்பது முதலாளித்துவத்தின் பேராசைகளே. காலநிலை மாற்றத்தின் துண்டுகோலாக அவர்களே இருக்கின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் பெட்ரோல், டீசல், கனிம வளங்களை சுரண்ட, போர்களை மூட்டுகின்றனர். அப்போர்களின் பயன்படுத்தும் ஆயுதங்களினால், ரசாயனத் தொழிற்சாலைகளினால் வெளியேறும் மாசுக்களினால் கடலின் வெப்பம் அதிகரிக்கிறது. வெப்பமான கடலும், பலவீனமான காற்றும் எல் நினோ உருவாக மறைமுகமான காரணமாக அமைகிறது.

2022-ல் துவங்கிய ரஷ்யா உக்ரைன் போரினால் 230 மில்லியன் டன் அளவிற்கும், அமெரிக்கா தூண்டிய இசுரேல் – பாலஸ்தீனம் – ஈரான் போரினால் 38 மில்லியன் டன் அளவிற்கும் கார்பன் டை ஆக்சைடு வெளியேறி உள்ளதாக உலகத் தர ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எல் – நினோ பாதிப்புக்கு காரணமான வர்த்தகக் காற்று (Trade wind) பலவீனமாவதற்கு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதும்  ஒரு காரணமாகும்.       

எல் நினோ இயற்கை பேரிடரிலிருந்து தற்காத்துக் கொள்ள நீர் நிலைகள் அதிகரிப்பும், மலைகளின் பாதுகாப்பும், மரங்கள் வளர்ப்பும் ஓரளவு தீர்வாகும் என சூழலியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் வளர்ச்சி என்று சொல்லி சூழலியலை பலி கொடுக்கும் நாடுகளினால் இந்த தீர்வுகள் கண்டு கொள்ளப்படுவதில்லை. நீர் நிலைகளை ஆக்கிரமித்தே கான்கிரீட் வளர்ச்சிகள் நடக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியும் நீரைப் பலிகொடுத்தே துவங்கப்படுகின்றன.

இன்றைய தொழில்நுட்பத்தின் பாய்ச்சலான Al தொழில்நுட்பத்தின் தரவு சேமிப்புக்கு (Data centre) 9.3 லட்சம் கோடி லிட்டர் தண்ணீர் செலவாகும் எனவும், இந்த தண்ணீர் 130 கோடி மக்களின் ஓராண்டு தண்ணீர் தேவையின் அளவாகும் எனவும், மின் பயன்பாடு கணிக்க முடியாத அளவுக்கு உயரும் எனவும் ஐநா சமீபத்தில் தெரிவித்துள்ளது. Al தொழில்நுட்பத்தின் GPU சிப்ஸ் (கிராபிக்ஸ் செயலி) அதிக அளவிலான வெப்பத்தை வெளியிடுகிறது. அதைக் குளிர்விக்க அதே அளவுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. தொழில்நுட்பத்தின் அதிவேக பயன்பாட்டுக்கு ஏற்ப மின்சாரமும், தண்ணீரும் உறிஞ்சப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்நுட்பத்தை அதிகப்படியாக பயன்படுத்தும் நாடாக இருக்கிறது. ஆனால் அதற்கு ஏற்ப தண்ணீர் தேவைகளைப் பெருக்கும் நடவடிக்கைகளில் பெரும் தோல்வியை மோடி அரசு சந்தித்திருக்கிறது. மேலும் இவற்றிற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க அனல் மின் நிலையங்கள் அதிகமே பயன்படுத்தப்படுகின்றன. நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையங்களினால் காற்று மாசும் அதிகரித்து எல் நினோவை ஊக்கப்படுத்தும் காரணியாகின்றன.

கடலின் மேற்பரப்பில் வீசும் காற்றோட்டம் குறிப்பிடத்தக்க அளவு பலவீனமடைய காடுகளை அழிப்பதும் ஒரு காரணமாகும். வளர்ச்சி பெயரால் மரங்களை அழிப்பதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிக்கிறது. மலையும் வனமும் பின்னிப் பிணைந்த வடஇந்தியாவின் பச்சை நுரையீரல் என்று அழைக்கப்பட்ட ஆரவல்லி மலைத் தொடர்களை கனிம சுரங்கம் அமைப்பதற்காக மோடி அரசு பலி கொடுக்கத் துணிந்தது. 100 மீட்டர் அளவுக்கு கீழுள்ள தொடர்கள் மலைகள் இல்லை என உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்த விந்தையும் நிகழ்ந்தது. இந்த வரையறையின் படி ராஜஸ்தானில் உள்ள 12800 மலைத் தொடர்களில் 1048 தான் ஆரவல்லி மலைத் தொடராக முடியும். மீதத்தை குஜராத்தி கார்ப்பரேட்டுகளின் கனிம வளச் சுரண்டலுக்காக இடித்துத் தள்ள ஆயத்தமாயிருந்தது மோடி அரசு.  வடமாநில மக்கள் விழித்துக் கொண்டனர். கடும் போராட்டத்தை நடத்தி இடைக்காலத் தடை வாங்கினர். இன்னமும் அந்த சர்ச்சை தீரவில்லை. விசாரிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆரவல்லி மலைத் தொடர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பழங்குடிகள் காப்பாற்றிய பசுமை வனத்தையும், மலைகளையும் அரிய வகை கனிம வளங்களுக்காக அழிப்பதோடு, வளர்ச்சிக்கு தடையாய் இருப்பதாக பழங்குடிகளையும் வேட்டையாடியது மோடி அரசு. ‘காடு மற்றும் சுற்றுச்சூழல் (2023)’ சட்டத்தை திருத்தியது. அதன் படி வளர்ச்சி திட்டம் என்ற பெயரில்  நிலத்தை அபகரித்துக் கொள்ளலாம் என்ற வகையில் சட்டம் திருத்தப்பட்டது. அந்தமான் நிகோபார் தீவுகளின் பெரு வனத்தை அழிக்க ‘கிரேட் நிகோபார் கிரேட் திட்டம்’ என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. 13 ஆயிரம் ஹெக்டேர் மழைக் காட்டை அழிக்கும் திட்டம் இது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் வனங்களை அழித்தே காலநிலை மாற்றத்திற்கு விதை போடுகின்றனர். பூமி வெப்பமாவதற்கு துணை போகின்றனர். உலகின் 2வது கார்பன் வெளியேற்ற நாடு அமெரிக்கா. ஆனால் உலகத்தின் பல நாடுகள் இணைந்து கார்பன் வெளியீடைக் குறைக்க வேண்டும் என்று கையெழுத்திட்ட, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா. பெட்ரோல், டீசல், நிலக்கரியில் தன்னிறைவு அடைவதற்கும், அமெரிக்காவின் பொருளாதரத்திற்கு தடையாக இருப்பதாகவும் இதிலிருந்து வெளியேறுவதற்கு காரணமாக டிரம்ப் கூறினார்.

அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளும் அந்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை. ‘நெட் ஜீரோ 2070’ இலக்கு என்கிற கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தை நிர்ணயித்த மோடி அரசு, 2024 – 26ல் நிலக்கரி உற்பத்தி இலக்கை 1 பில்லியன் டன்னாக உயர்த்தியிருக்கிறது. மாற்று எரிபொருள் ஊக்குவிப்பை கைகழுவியது. நிலக்கரி கார்பனை அதிகமாக உமிழக் கூடியது. இவ்வாறு அனைத்து நாடுகளும் கார்பன் வெளியேற்றத்தை குறைக்காமலிருப்பதால் காற்றில் நச்சுத்தன்மை கூடுகிறது. இவை அனைத்துமே எல் நினோ காய்ச்சலால் பாதிக்கப்படும், கடல் பரப்பிற்கு மேலும் பல நோய்களை அளிக்கும்  காரணிகளாகின்றன. 

2026-27 ல் வலிமையான எல் நினோவாக மாறுமானால் இந்தியாவுக்கு $1 டிரில்லியன் (சுமார் 83 லட்சம் கோடி) வரை இழப்பு ஆகும் என்று ஆய்வுகள் அமெரிக்காவின் டார்ட்மவுத் பல்கலைக் கழகத்தின் 2023 ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆனால் இதனை எதிர்கொள்ளும் ஆற்றல் மோடி அரசிடம் இல்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.

எல் நினோவினாலும், சூப்பர் எல் நினோ வினாலும் ஏற்படும் வறட்சியினால் பாதிக்கப்படுவது எளிய சாமானிய மக்களே. அன்றாடத் தேவைக்காக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை செய்வர்கள் இவர்களே. இதனால் தண்ணீர் பற்றாக்குறையும் வறட்சியும் ஏற்படும். விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். அமைப்பு சாராத் தொழிலாளர்களாக இருக்கும் சுமார் 80% மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். வெப்ப அலையினால் ஏற்படும் நோயின் தாக்குதலுக்கும் ஆளாவார்கள்.

குசராத்தி பனியா கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக இந்திய வளங்களை பலியிடும் இந்திய அரசு இந்த எல் நினோ பாதிப்பை சரி செய்வதை மாநிலங்களின் கடமையாக ஒதுக்கி விட்டு கடந்து விடுகிறது. இத்தகைய தீவிரத் தன்மையை தமிழ்நாட்டின் தவெக அரசும் உணர்ந்ததாக தெரியவில்லை. சுற்றுச் சூழல் நிபுணர்களை அழைத்து இந்த சூழலை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளவில்லை.

எல் நினோ தாக்குதலில் இருந்து மக்களைக் காக்க வேகமான நடவடிக்கைகள் தேவை. புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தவெக இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »