ஐயா வைகோ தலைமையில் ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தோழர் திருமுருகன் காந்தி உரை

திருவள்ளுவர் உருவத்திற்கு காவி உடை அணிவித்து சனாதனி என்று இழிவுப் படுத்திய ஆளுநரை கண்டித்து ஐயா. வைகோ அவர்கள் தலைமையில், சென்னை சைதாப்பேட்டையில் ஜூன் 7, 2026 அன்று மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:

தமிழ்நாட்டிலே போராட்டக்களம் புயலாய் மையம் கொண்டுவிட்டது. நான்கு நாட்களுக்கு முன்பாக மேக்கேதாட்டு அணைக்கு எதிரான ஒரு புரட்சிகரமான கண்டனப் போராட்டம், நேற்று (06.06.2026) செண்பகவள்ளி அணையை மறு உருவாக்கம் செய்து தர வேண்டும் என்று தெற்கிலே ஒரு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் வாசுதேவநல்லூரிலே வீசிய புயல், இன்றைக்கு சைதாப்பேட்டையிலே ஆளுநரை அடித்து விரட்டுகின்ற அந்த எழுச்சியான போராட்டம் நடக்கிறது.

“ஆட்டுக்குத் தாடி, நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை” என்று சொன்ன அறிஞர் அண்ணாவினுடைய வழியிலே, அவரினுடைய மொழியை கொள்கையாக உயர்த்திப் பிடித்து, முழக்கத்தை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஐயா வைகோ அவர்கள் தலைமை ஏற்று ஒரு எழுச்சிகரமான போராட்டமாக மாற்றிக் காட்டியிருக்கிறார்.

தமிழ்நாடு மெல்ல மெல்ல போராட்டக் களமாக மாறி வருவதனுடைய அடிப்படைக் காரணம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தோழர்கள், ஐயா வைகோ அவர்களுடைய தலைமையில் தமிழ்நாட்டினுடைய அனைத்துப் பகுதிகளிலும் ஒரு புயலைப் போல திரண்டு போராட்டக் களத்தை அமைத்து வருகிறார்கள். சனாதனத்தை சதிவழியிலே இங்கே திணிக்கலாம் என்று முயலுகின்ற இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம், இந்த ஆட்சிக் காலத்தில் ஒரு முதன்மையான புரட்சிகர முழக்கம். இங்கே இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது.

ஆளுநர் என்கின்ற பதவியே தேவையில்லை. இந்த ஆளுநர் பதவி என்பது காலனிய காலத்தில், வெள்ளைக்காரன் காலத்தில், மாநிலத்தினுடைய உரிமையெல்லாம் நசுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட பதவி. இந்தப் பதவி தேவையா இல்லையா? என்கின்ற விவாதம் வந்து அன்றைக்கு அரசியல் நிர்ணய சபையிலே, “இந்தப் பதவி தேவையில்லை” என்கின்ற முடிவெடுக்கப்பட்டபோது, சிறப்புக் குழுவை உருவாக்கி, அதன் மூலமாக இந்துத்துவவாதிகள், “ஆளுநர் பதவி தேவை” என்று அவர்கள் வாதிட்டு, சூழ்ச்சிகரமாக இந்தப் பதவியை தக்கவைத்துக் கொண்டார்கள்.

காரணம் என்ன? இங்கே மாநிலங்கள் என்பது தேசிய இனங்களாக இருக்கிறது. தேசிய இனங்களினுடைய அடையாளமாக இருக்கிறது. பல்வேறு மொழி பேசுகின்ற மக்களுடைய, எளிய மக்களினுடைய ஆட்சி அதிகாரமாக இருக்கிறது. இந்த எளிய மக்களினுடைய, பல்வேறு மொழி பேசுகின்ற தேசிய இனங்களினுடைய ஆட்சி அதிகாரத்தை எல்லாம் இந்துத்துவ அரசியலில் நுழைப்பதற்காக, அந்த மாநிலங்களுக்கு பிஜேபியால் அனுப்பப்பட்டிருக்கக்கூடிய ஆளுநர் ஒரு ஆர்எஸ்எஸ்காரர். இந்த தேசத்தினுடைய விடுதலைக்காகப் போராடிய தேசத்தந்தை காந்தியடிகளை படுகொலை செய்த ஆர்எஸ்எஸ்காரர்தான் இங்கே ஆளுநராக அனுப்பப்பட்டிருக்கிறார். அந்த பயங்கரவாத அமைப்பினுடைய உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர் எப்படி ஜனநாயகவாதியாக இருக்க முடியும்?

இந்த மண்ணினுடைய விடுதலைக்காகப் போராடியவர்களை எல்லாம் கொச்சைப்படுத்துகின்ற அந்த இயக்கத்திலிருந்து வந்துவிட்டு, உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு நாகரிகங்கள், உயர்ந்த நாகரிகங்கள் எல்லாம் அடிமை மக்களை வைத்துப் பிழைத்துக்கொண்டிருந்த சமயத்திலே, “அனைத்து உயிர்களும் சமம்” என்று சொன்ன திருவள்ளுவரை சனாதனத்தின் கீழாகக் கொண்டுவர முயற்சிக்கக்கூடிய இந்த ஆளுநரை நாம் நிச்சயம் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றியாக வேண்டும். இந்த ஆளுநருக்கு இந்தப் பதவியும் தேவையில்லை. இந்த ஆளுநர் இந்தப் பதவியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டையும், தமிழர்களையும், திருவள்ளுவரையும், திருக்குறளையும் கொச்சைப்படுத்துவதை மானமுள்ள தமிழன் எவனும் அனுமதித்துக்கொண்டிருக்க மாட்டான் என்பதற்கு ஒரு அடையாளமாகத்தான் இங்கே சைதாப்பேட்டையில் இந்த மிகப்பெரும் எழுச்சிகரமான கண்டனப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.

நாங்கள் இங்கே நிற்கிறோம், ஆளுநரே எச்சரிக்கிறோம்: எங்கள் குரல் உங்களை எட்டும் என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் மொழி உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் எங்கள் உணர்வு, “உன்னை வெளியேற்ற வேண்டும்” என்கின்ற அந்த கொந்தளிப்பில் இருக்கிறது என்பது உனக்குப் புரியாமல் போகாது. ஆளுநருக்கு இந்த இல்லத்தைத் தரக்கூடாது என்றுதான் நாம் நீண்ட காலம் சொல்லி வருகிறோம். ஆளுநர் பதவியும் தேவையில்லை, ஆளுநர் மாளிகையும் தேவையில்லை. இந்த நகரத்தினுடைய மையப்பகுதியில் 150 ஏக்கர் நிலத்திலே இந்த நபருக்கு எதற்காக இங்கே மாளிகை கொடுக்கப்பட்டிருக்கிறது? இந்த நபருடைய பொறுப்புகள் என்ன? தமிழ்நாட்டிற்குச் செய்த நலத்திட்டங்கள் என்ன? அவர் அன்றாடப் பணிகளாக எதைச் செய்கிறார்? ஆளுநருக்கு எதற்கு இத்தனை கோடி சலுகைகள் கொடுக்கப்படுகின்றன? அந்தப் பதவி ஒழிக்கப்பட வேண்டும். ஆளுநர் வெளியேற்றப்பட வேண்டும்.

இங்கே திரும்பத் திரும்ப திருவள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசுகின்ற அந்தக் கொடுஞ்செயலை ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவர் “அனைத்து உயிரினும் சமம்” என்று சொன்னவர். உலகப் பொதுமறையை அடையாளப்படுத்தியவர். உலகத்திற்கெல்லாம் அறிவுரை சொல்லக்கூடிய, உலக மக்கள் எல்லாம் கண்டு தெளிந்து தங்கள் வாழ்க்கையை, தங்கள் ஆட்சி முறையை நடத்துவதற்கான வழிகாட்டுதலை உருவாக்கிக் கொடுத்த ஒரு மாபெரும் சிந்தனையாளன் திருவள்ளுவர். அவருக்கு காவிச் சாயம் பூசி இந்துத்துவவாதியாக, சனாதனவாதியாக, சங்கியாக மாற்றுகின்ற முயற்சியை எல்லாம் தமிழ்நாடு ஒருபொழுதும் அனுமதிக்காது. பாரதிய ஜனதா கட்சியினுடைய சங்கிகளே, உங்களுக்கு தமிழ் மக்கள் ஒரு கவுன்சிலர் சீட்டைக் கூடத் தரத் தயாராக இல்லை. அப்படிப்பட்ட ஒரு கட்சியைச் சேர்ந்த நீங்கள், எங்களது அடையாளமாக இருக்கக்கூடிய, எங்களது குரலாக இருக்கக்கூடிய, எங்களது மான உணர்வாக, சிந்தனையின் செயல் ஊற்றாக இருக்கக்கூடிய திருக்குறளை அவமதிப்பதை ஒரு காலத்திலும் அனுமதிக்க மாட்டோம்.

ஆளுநர் மாளிகைக்குள் நின்றுகொண்டு அந்தக் குரல் வந்தாலும், ஆளுநர் மாளிகை தேவை என்றால், அந்தக் கதவைக் கடந்து உள்ளே சென்று அந்தக் குரலை அடக்கக்கூடிய வலிமை தமிழினத்திற்கு இருக்கிறது. அந்த வலிமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. அப்படிப்பட்ட படையை வழிநடத்தக்கூடிய ஒரு துணிவு ஐயா வைகோ அவர்களுக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட வகையிலே இந்தப் போராட்டம் ஒரு எழுச்சிகரமான போராட்டம். இந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். ஆளுநருடைய அந்த கொழுப்பு அடக்கி ஒடுக்கப்படும் என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »