
ஒன்றிய மோடி அரசால் மாணவர்களின் எதிர்காலம் மிக மோசமாக பாதிப்படையைப் போகிறது என்பதை அண்மையில் தேசிய தேர்வு முகமை (NTA), பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மற்றும் ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய தேர்வுகள் நிரூபித்துள்ளன. ஒன்றிய அரசுக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே இச்சிக்கலுக்கு தீர்வாக அமையும் எனும் கருத்து மக்களிடையே எழுந்துள்ளது.
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தேசிய தேர்வு முகமையால் (NTA) தேர்வுகளை முறையாக நடத்த முடியாது என்பது ஒருமுறை இருமுறை அல்ல பலமுறை உறுதியாகி உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்களின் கல்விக்கனவுகளோடு விளையாடி, அவர்களை மன உளைச்சலுக்குள் தள்ளியதன் விளைவே தற்போது தில்லியின் ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்துகின்றனர்.
நாடு முழுவதும் ஒரே தேர்வு முகமையைக் கொண்டு NEET, CUET, JEE போன்ற தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற நோக்கில் ஒன்றிய அரசால் கடந்த 2017இல் உருவாக்கப்பட்டது தான் இந்த தேசிய தேர்வு முகமை. ஆனால் இது உருவாக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பல்வேறு தேர்வுகளில் இதன் திறமையின்மை வெளிப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு, முறையற்ற மதிப்பெண் வழங்குதல், நிர்வாகச் சிக்கல்கள், தேர்வு மையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் எனப் பல குளறுபடிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
NTA-வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று இதற்கு முன்னரும் பல முறை குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. 2020இல் நடந்த நீட் தேர்வில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு மாணவி தோல்வி அடைந்ததாகக் கூறியது NTA. அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பின், அவர் தேர்வில் வெற்றி பெற்றதாக மாற்றிக்கூறிய மனித நேயமற்ற ஒரு நிறுவனம் தான் இந்த தேர்வு முகமை.
மிகவும் கெடுபிடிகளைக் கடைபிடிக்கிறோம் என்று கூறி மாணவர்களின் உள்ளாடை வரை பரிசோதனை செய்யும் தேர்வு முகமை, இந்த ஆண்டும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. கடந்த மே 3 அன்று நடத்தப்பட்ட நீட் தேர்வின் வினாத்தாள் முன்னரே கசிந்தது மட்டுமல்ல பல லட்சம் ரூபாய்க்கும் விற்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் ஒரு பெரிய வலைப்பின்னல் இதற்குப் பின்னால் வேலை செய்திருக்கிறது.

நீட் தேர்வின் சர்ச்சை அடங்குவதற்குள், ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) தேர்வில் குளறுபடிகள் தொடங்கின. பல தேர்வு மையங்களில் தொழில்நுட்ப இடையூறுகள் ஏற்பட்டதால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் இதற்கு முறையான விளக்கம் அளிக்காமல் ஹாக்கர்கள்(Hackers) தான் காரணம் என்று பழி கூறிவிட்டு தப்பிக்கப் பார்த்தது அந்த ஆணையம்.
இதே போன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான CUET தேர்விலும் நடந்தது. கணினி முறையில் நடந்த இத்தேர்வை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டு, பின் அதன் காரணமாகவே தொழில்நுட்பக் கோளாறு என்று கூறி பல லட்சம் மாணவர்களை அலைக்கழித்ததது.
இவையெல்லாம் கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள். இவர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவர்களும் ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்ட நிகழ்வுதான் சிபிஎஸ்இ தேர்வுகள். இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வை எழுதிய 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் புதிய ‘டிஜிட்டல் மதிப்பீட்டு முறை’யால் பரிசோதனை எலிகளாக மாற்றப்பட்டனர் என்றுதான் கூற வேண்டும்.
விடைத்தாளை திருத்தும் வழக்கமான முறைக்குப் பதிலாக இந்த ஆண்டு டிஜிட்டல் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது சிபிஎஸ்இ. முதலில் முறையான ஒப்பந்ததாரர் யாரும் வரவில்லை. எனவே தேர்வுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே இருந்த நிலையில், அவசர அவசரமாக ஹைதராபாத்தில் இருந்த ‘கோயெம்ட் எடு டெக்’ (COEMPT Edu Tech) என்ற நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கியது.

ஆனால் அந்த நிறுவனம் தேர்வு மதிப்பீட்டில் இதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கிய நிறுவனம். 2019-ல், தெலங்கானா மாநிலத்தில் ஒரு தேர்வை நடத்திய அந்த நிறுவனம் (அப்போது அதன் பெயர் குளோபரினா டெக்னாலஜிஸ்) சுமார் 40 சதவீத மாணவர்களை தோல்வி என்று அறிவித்ததால், சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பிற்குப் பிறகு தனது பெயரை ‘கோயெம்ட் எடு டெக்’ என மாற்றிக்கொண்ட அந்த நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறது சிபிஎஸ்இ. இந்த நிறுவனம்தான் இப்போது பல மாணவர்களுக்கு குறைந்த மதிப்பெண்களை வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடினமாக உழைத்து சிறப்பான மதிப்பெண் பெறக் காத்திருந்த மாணவர்களின் கனவுகளை ஒரு தனியார் நிறுவனம் மூலம் கலைத்து விட்டது ஒன்றிய அரசு. ஆனால் இது குறித்து கேள்வி எழுப்பிய மாணவர்களை ‘தேச விரோதிகள்’ என்று வழக்கம் போல் முத்திரை குத்தினர் பாஜகவினர். அதிலும் உச்சமாக, தனது விடைத்தாள்களில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டிய மாணவர்களில் ஒருவரை ‘பாகிஸ்தானியர்’ என்று குற்றம் சாட்டினார் தூர்தர்ஷன் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர்.
இவ்வளவு குளறுபடிகள் நடந்த பிறகும், மோடி அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. கண் துடைப்புக்கு சில அதிகாரிகளை இடமாறுதல் செய்தது.
பள்ளிக் கட்டணம் பல லட்சம், நீட் பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு ₹1.5 லட்சம் முதல் ₹4 லட்சம் (இதில் பல மாணவர்கள் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை நீட் பயிற்சி எடுக்கிறார்கள்) இப்படி பணத்தை வாரியிறைத்து சீட் கிடைக்குமோ கிடைக்காதோ என்று மன உளைச்சலிலேயே வாழும் மாணவர்களுக்கு மோடி அரசின் ஆதரவாளர்கள் கொடுத்த பெயர் தான் ‘தேச விரோதி’.
இப்போது இதனுடன் ஒரு புதுப் பெயரும் சேர்ந்துள்ளது. அது – ‘கரப்பான் பூச்சி’. வேலையில்லாத இளைஞர்களை ‘சமூகத்தின் ஒட்டுண்ணிகள்’ என்று கூறி கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டவர் தலைமை நீதிபதி சூர்ய காந்த்.
நீதிபதியின் சர்ச்சைக்குரிய இந்த வார்த்தைதான் இப்போது ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (Cockroach Janata Party) எனும் அரசியல் இயக்கம் உருவாகக் காரணமாக அமைந்தது. ஆம் ஆத்மி கட்சியில் இருந்த அபிஜீத் திப்கே என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் சில நாட்களிலேயே பல லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்த்திருக்கிறது. அண்மையில் இணையவழிப் பிரச்சாரங்கள் மூலம் இப்போது போராட்டத்திற்காக இவர்கள் ஒன்று கூடி இருக்கின்றனர். அவர்கள் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டத்தில் முழக்கமிட்டனர். இதில் இந்துத்துவவாதிகளின் கொலை மிரட்டலையும் மீறி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், இடதுசாரி மாணவர் சங்கத் தலைவர்கள் எனப் பலர் மாணவர்களுடன் ஒன்று சேர்ந்திருக்கின்றனர்.

இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு முறையான கல்வியும் வேலைவாய்ப்பும் ஒன்றிய அரசினால் கொடுக்க முடியவில்லை என்பதையே இந்தப் போராட்டங்கள் எடுத்துரைக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் நடந்த போட்டித் தேர்வுகளில் கிட்டத்தட்ட 90 தேர்வுகளில் வினாத்தாள் கசிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு நாட்டின் மிக முக்கியமான நுழைவுத் தேர்வுகளை நடத்தும் அமைப்பு மீண்டும் மீண்டும் தோல்வியடைகிறது என்றால், அது தனிப்பட்ட தவறு அல்ல; அமைப்பின் அடிப்படை கட்டமைப்பே தோல்வியடைந்துள்ளது என்பதற்கான சான்றாகும். ஒவ்வொரு முறையும் “விசாரணை நடத்தப்படும்”, “நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி மக்களின் கோபத்தை தணிக்க மோடி அரசு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒரு மாணவர் தனது வாழ்க்கையின் பல ஆண்டுகளை அர்ப்பணித்து தேர்வுக்குத் தயாராகிறார். குடும்பங்கள் தங்கள் வருமானத்தை செலவழித்து குழந்தைகளின் கல்விக் கனவுகளை உருவாக்குகின்றன. ஆனால் மாணவர்களின் உழைப்பையும் திறமையையும் விட, வினாத்தாள் கசிவுகள், நிர்வாக அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப தோல்விகள் முக்கியத்துவம் பெறும் நிலையை NTA உருவாக்கியுள்ளது. இது வெறும் நிர்வாகத் தவறு அல்ல; மாணவர்களின் கனவுகள் மற்றும் எதிர்காலத்தின் மீது பிஜேபி மற்றும் மோடி அரசால் நடத்தப்படும் அநீதி.
எனவே NTA எனும் அமைப்பு கலைக்கப்பட வேண்டும். மாநில மக்களின் கல்வி, மொழி, சமூக மற்றும் பொருளாதார சூழலை அறிந்த மாநில அரசுகளே தங்களது மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்தும் அதிகாரத்தை பெற வேண்டும். கல்வி தொடர்பான முடிவுகள் மாநிலங்களின் கையில் இருக்கும்போதுதான் பொறுப்புணர்வும் வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படும்.
ஆகவே, மாணவர்களின் உழைப்பையும் எதிர்காலத்தையும் சீரழித்து வரும் NTA அமைப்பை முற்றிலுமாக கலைத்து, தேர்வு நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கான முன்னெடுப்பை சனநாயக சக்திகள் ஒன்றுபட்டு நின்று வென்றெடுக்கவேண்டும்.