மாணவர்களை மனப்பாடம் செய்யும் கருவிகளாக மாற்றும் ஒன்றிய அரசின் பாடத்திட்டம்

நீட் தேர்வை தடை செய்யவும், ஒன்றிய பாஜக அரசு மாணவர்களின் கல்விக் கனவை தேர்வு முகமை மூலம் நசுக்குவதை எதிர்த்தும் நாடெங்கும் மாணவர்கள் போராடி வருகின்றனர். கடந்த ஜூன் 20, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற NEET, CUET எதிர்ப்பு போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் தொகுப்பு:

தோழர்களே, இந்த NEET, CUET உள்ளிட்ட தேர்வுகள் ஒரு தரப்பு கல்வித் தன்மைக்கு மட்டும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அந்த பயிற்சியின் மூலமாக ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்கள் மட்டும்தான், CBSE பாடத்திட்டத்தில் படிப்பதற்கான சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். நீங்கள் CBSE படிக்காமலோ அல்லது ICSE படிக்காமலோ அந்த தேர்வுகளில் வெற்றி பெற முடியாது. மாநில கல்வி திட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள் இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது பெரிய சிரமம். இதுதான் பிரச்சினையின் அடித்தளமாக இருக்கிறது.

நீங்கள் நீட் தேர்வு எழுத வேண்டுமெனில், CBSE/ICSE பாடத்திட்டத்தை மனப்பாடமாக படித்திருக்க வேண்டும். மாநில கல்வி திட்டத்தில் (State Board Syllabus) படித்துவிட்டு, அதில் சிறப்பான மதிப்பெண் பெற்றுவிட முடியாது. இது இந்த இரண்டு தேர்வு மட்டும் இல்லை, NIFT மற்றும் NIT தேர்வுகளும் இதே நிலைதான். எதெல்லாம் தேசிய அளவில் (National Testing Agency) வைக்கிறதோ, அந்த தேர்வுகள் அனைத்தும் ஒன்றிய அரசினுடைய கல்வி திட்டத்தின் கீழ்தான் இருக்கிறது.

ஒன்றிய அரசினுடைய (CBSE) கல்வி திட்டத்தை பார்த்தோமென்றால், அதில் குழந்தைகள் புரிந்து படிக்கும் அளவுக்கு ஏற்றதுபோல எந்த பாடத்தையும் கொடுத்திருக்க மாட்டான். நான் அறிவியல் துறையில்  படித்தவன். கடந்த ஆண்டு CBSE-ல் இருக்கக்கூடிய பாடத்திட்டங்களை எடுத்துப் பார்த்தோம். அதில் வேதியல் துறையில் ஒரு பாடத்தை எடுத்து படித்த போது, அதில் எந்த Parameter-க்கும் விளக்கமே சொல்லப்படவில்லை.

உதாரணமாக வெப்பதுக்கு கலோரி (Calorie) என்ற ஒரு Indicator-ஐ குறிப்பிடுகிறான். ஆனால் அந்த கலோரி என்றால் என்னவென்று குழந்தைக்கு சொல்லி தராமலே, Formula மட்டுமே கொடுக்கிறான். அதில் Problem-ஐ மட்டுமே அறிமுகம் செய்கிறான். அந்த குழந்தைக்கு இது என்னவென்று தெரியாது. ஆனால் இதெல்லாம் மனப்பாடம் பண்ணி பழகிக் கொள்ள வேண்டியதாகிறது. பிறகு 6-வது பக்கம் அல்லது 8-வது பக்கத்தில்தான் கலோரி என்றால் என்ன என்று எழுதுவான். எந்த அறிவியல் மாணவர்களாக இருந்தாலும் சரி, கணித பாடத்தை விரும்பும் மாணவர்களாக இருந்தாலும் சரி, அவர்களால் அதை முறையாக அடித்தளத்தோடு கற்றுக்கொள்ளவே முடியாது. அறிவியலை அறிவுப்பூர்வமாக அணுகக்கூடிய வகையில் அதில் விளக்கம் இல்லை.

நான் படித்த காலத்தில் (மாநில கல்வி திட்டத்தில்) புத்தகங்கள் இருந்தது. அந்த புத்தகத்தில் ‘tan theta’  என்னவென்று விளக்குவதற்கு 15 பக்கங்கள் இருந்தன. ஒரு தடவை படித்த பிறகு அது வாழ்நாள் முழுவதும் மறக்காது. கணக்கில் நீங்கள் ஒரு பெரிய ஆய்வாளராக மாறுவதற்கு அடித்தளம் கொடுத்திருப்பார்கள். இயற்பியலும் பௌதீகமும் மாநில கல்வி திட்டத்தில் அப்படித்தான் இருக்கும். ஆனால் இந்த மாதிரி எந்தவிதமான விளக்கப் பாடமும் இல்லாத பாடத்திட்டங்கள்தான் CBSE, ICSE. இவ்வகையான பாடத்திட்டத்தைப் படிப்பதற்கு யாரால் சாத்தியம் என்றால், எதுவும் புரியாமல் மனப்பாடம் செய்து எழுதக்கூடிய குழந்தைகளுக்கும், அதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கும்தான் இது பயன்படும்.

ஐஐடி தேர்வை அறிவாளி தேர்வு என சொல்கிறான். ஆனால் அது அறிவாளி தேர்வு அல்ல. அந்த மாதிரியான Pattern கேள்விக்கு நீங்கள் 3 வருட பயிற்சி செய்தால் மட்டுமே தேர்ச்சியடைய முடியும். உண்மையில் இயற்பியலில் ஒரு Problem-Solve செய்ய சுயமாக சிந்திக்கக்கூடிய அளவில் எந்த கல்வியும் கற்றுக் கொடுத்திருக்க மாட்டான். தொடர்சியாக 2 வருடம் அல்லது 3 வருடம் அதே Pattern-ஐ கற்றுக் கொடுத்திருந்தால், குழந்தைகள் இயல்பாக அந்த Pattern-ஐ கற்றுக்கொள்ளுமே தவிர, அந்த கேள்வியினுடைய அடித்தளத்தை கற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான் நம் ஊரில் IIT-ல் இருந்து வருபவர்களெல்லாம் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. எலான் மஸ்க் கண்டுபிடிக்கிறான். ஐஐடி படித்தவர்கள் எதைக் கண்டுபிடிக்கிறார்கள்? இவர்கள் சில நிறுவனங்களுக்கு சென்று “வருடத்துக்கு பல லட்சம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்கிறேன்” என்பதுதான் IIT-யுடைய விளம்பரங்களாக இருக்கிறது. வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்பதுதான் அந்த விளம்பரத்தில் போடக்கூடிய Preposition.

இத்தகைய பாடத்திட்டத்தை யாரால் படிக்க முடியும்? ஒரு பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி அளவில் படித்த பெற்றோராலேயே இந்த பாடத்தை சொல்லித் தர முடியாது. இவையெல்லாம் வகுப்பறைக்கு வெளியே பயிற்சி வகுப்பு/மையம் (coaching centre) போன்ற மையங்களில் பாடத்தைப் படிப்பதற்கு வழி வகுக்கும். இதற்காகத்தான் அந்த தேர்வுத் திட்டங்களை கொண்டு வருகிறது ஒன்றிய அரசு.

இதனால் என்ன ஆகுமெனில், மாநில கல்வி உரிமை என்பது முற்றிலுமாக ரத்து ஆகும். இன்று School of Excellence என்பது ஒன்றியத்தின் பல்கலைக்கழகங்களாகவே இருக்கிறது. பொறியியல், அறிவியல், சமூக அறிவியல், மானிடவியல், சட்டம் என்று எந்தத் துறையை எடுத்தாலும் எல்லாவற்றிலும் ஒன்றியத்தின் பல்கலை கழகம் மட்டும்தான் இருக்கிறது. அதில் படிக்க வேண்டுமெனில், ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தில் படித்திருக்க வேண்டும். அப்படியெனில் எந்த சமூகம், எந்த வர்க்கம் அங்கே படிக்கும் என்பது நமக்கு தெரியாததல்ல. மோடி அரசு அத்தகைய சூழலை உருவாக்குகிறது.

அவர்கள் (ஒன்றிய அரசு) சமூகத்தில் உயரடுக்கு ஒன்றை (Elite-ஐ) இவ்வாறு உருவாக்குகிறார்கள். அந்த Elite-ஐ உருவாக்குவதற்கு அடித்தளமாக இருப்பது என்னவென்றால் மாநில கல்வி உரிமையை முற்றிலுமாக ஒழிப்பதுதான் இவர்கள் திட்டம். மாநில கல்வி பாடத்திட்டத்தில் CBSE, ICSE போல கொண்டு வர முடியாதா? என கேட்கிறார்கள். மாநில கல்வி திட்டத்தை உருவாக்கும் ஆசிரியர்கள், இங்கே இருக்கக்கூடிய மாணவர்களுடைய சமூக பின்னணியில் இருந்து பாடத்திட்டத்தை எவ்வளவு தூரம் கற்றுத்கொள்ள முடியும் என்பதை புரிந்து கொண்டுதான் பாடத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் ஒன்றிய பாடத்திட்டம் அப்படி இல்லை.

எனக்கு தெரிந்த ஒரு ஆராய்ச்சி மாணவர் சொன்னார்: “NCERT பாடத்திட்டத்தை தயாரிக்க என்னை அழைத்தார்கள். பாடத்திட்டத்தை காலவரிசையில் (Chronology Order) தயாரிக்க வேண்டாம், படித்தால் எளிதில் புரிந்துக்கொள்கின்ற மாதிரி எழுத வேண்டாம்” என்றார்கள்.

நீங்கள் NCERT பாடத்திட்டத்தை எடுத்து படித்துப் பாருங்கள். அதை 13 வயது/ 15 வயது/ 17 வயது குழந்தைகளால் படித்து புரிந்து கொள்ளவே முடியாது. இவர்களால் ஒரு காலத்திலும் இந்தியாவில் ஒரு விஞ்ஞானியை உருவாக்கவே முடியாது. அப்படியான எந்தவிதமான பாடத்திட்டமும் ஒன்றிய அரசிடம் கிடையாது. ஆனால் இப்படிப்பட்ட ஒரு பாடத்திட்டத்தைதான் “ஒரு தரமான பாடத்திட்டம்” என்று நம்மீது திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதனோடு இந்தியை முன்னிலைப்படுத்தக்கூடிய ஒரு வேலை எல்லாவற்றிலும் நடக்கிறது.

சான்றாக இந்த ஆண்டு நடந்த NIFT தேர்வினைக் கூறலாம். தென்னிந்திய மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இருக்கக்கூடிய மாணவர்கள் ஒன்றிய அரசின் தேர்வுகளை எழுதக்கூடிய நிலையங்களை சென்று பாருங்கள். அங்கு அந்த குழந்தைகளை உளவியலாக எவ்வளவு சித்திரவதை செய்ய முடியுமோ, அவ்வளவு சித்திரவதை செய்து தேர்வு எழுதுவதற்கு அனுமதிப்பார்கள்.

பொதுவாக தேர்வு எழுதவதற்கு முதல் நாள் குழந்தைகளிடம் “நன்றாக படுத்து தூங்கு, பிறகு ஒரு அமைதியான மனநிலையில் தேர்வு எழுத போ, வருத்தப்படாதே” என நம் பெற்றோர்கள் குழந்தைகளை தயார் செய்து அனுப்புவார்கள். ஆனால் இவர்கள் தேர்வு மையத்திற்கு சென்ற உடனே அவர்களை சித்திரவதை செய்ய National Testing Agency-இல் இருந்து ஆட்களை அனுப்புகிறான். அவன் ஒரு இராணுவ அதிகாரியைப் போல  ஒவ்வொரு தேர்வு மையத்தின் வாசலிலும் இருந்து கொண்டு அந்த மாணவர்களை திட்டமிட்டு சித்திரவதை செய்கிறான்.

உதாரணமாக Design Department என்று சொல்லப்படும் ’வடிவமைப்பு’ துறை தமிழ்நாட்டில் ஒன்றும் கிடையாது. உற்பத்தித் தொழில் வளர வேண்டுமெனில் வடிவமைப்பு துறை முக்கியம். ஆனால் வடிவமைப்பு துறைக்கு தமிழ்நாட்டில் மாணவர்கள் உருவாக்கப்படுவது கிடையாது. பொறியியல் துறை இருக்கிறது, ஆனால் அதை வடிவமைத்து, பயனீட்டாளர் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு பொருளை வடிவமைக்கக்கூடிய வடிவமைப்பாளர்கள் கிடையாது. ஒரு குடுவையை  60 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி வடிவமைத்தார்களோ, இன்றைக்கும் அப்படியேதான் செய்கிறார்கள். அதை இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலுக்கு எப்படி வடிவமைப்பது என்பதைக் கற்றுக் கொடுக்கும் வடிவமைப்பு துறைக்கான கல்லூரிகள் தமிழ்நாட்டில் கிடையாது. இதற்கு வட இந்தியாவில்தான் (மும்பை, தில்லி) படிக்க செல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட தேர்வு எழுதுவதற்கான தேர்வுமையம் ஒன்றே ஒன்று தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. NIFT-க்கு ஒரே ஒரு மையம் மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள். NIFT தரமணியில் இருக்கிறது. ஆனால் அதற்கான தேர்வு மையத்தை 30 கிலோ மீட்டர் தள்ளி வைத்தார்கள். அதில் இரண்டு தேர்வுகள் காலை, மதியம் என இரு வேளை நடந்தது. அதன்பின் மேலும் ஒரு அமர்வு(Session) இருக்கும். காலை 8 மணிக்கு குழந்தை தேர்வு மையத்தின் உள்ளே போய்விட வேண்டும். வெளியூரிலிருந்து அல்லது வெளி மாவட்டத்திலிருந்து ஆறு மணிக்கு சென்னை வந்த  மாணவர்கள் 8 மணிக்கு மையத்தின் உள்ளே சென்று விட வேண்டும். அந்த மையத்தில் எந்தவிதமான காற்றோட்டம் (Ventilation) கிடையாது. 100 பேர் எழுதக்கூடிய இடத்தில் 300 பேரை எழுத வைக்கிறான். இவர்களை அழைத்துவரும் பெற்றோர்களுக்கு எந்த வசதியும் கிடையாது. வெளியே வெயிலில் நிற்க வேண்டும். அவர்கள் ஒதுங்குவதற்கு நிழல் கிடையாது, தண்ணீர் குடிக்க இடம் கிடையாது, சாப்பாட்டுக்கு அருகில் எந்த உணவகமும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு Industrial Estate-க்கு உள்ளே இருக்கக்கூடிய ஒரு பழைய கட்டடத்தில் தான் NTA தேர்வு நடத்தி இருக்கிறது.

காலை 8 மணிக்கு குழந்தை உள்ளே சென்றால், மாலை 6 மணிக்குத் தான் வெளியே வர முடியும். தேர்வு முடிந்து வெளியே வந்த குழந்தைகள் பாதி பேர் வாந்தி எடுத்தார்கள். அதோடு இரண்டாவது தேர்வாக மாதிரி உருவாக்கம் (Modeling) தேர்வை செய்ய சொல்கிறார்கள். அந்த Modeling-க்கான மூலப்பொருள் கொடுத்து, அதை வைத்து Model செய்ய கூறுகிறார்கள். ஒரு பழைய இந்தி செய்தித்தாள்தான் அந்த மூலப்பொருள். அதில் கிழித்து எடுத்து ஒரு Model செய்ய வேண்டும். இத்தகைய NIFT தேர்வுக்கு வந்த குழந்தைகள் எப்படி தேர்வாகி, அந்த படிப்பை படிக்க போவார்கள்? இதே நிலைமைதான் NIT-க்கும் இருக்கிறது. இதே நிலைமைதான் National Testing Agency நடத்தக்கூடிய அனைத்து தேர்வுகளிலும் இருக்கிறது.

நம் ஊரில் மேம்பட்ட கணினி அடிப்படையிலான தேர்வு நடத்துவதற்கான மையங்கள் நகரத்தின் எல்லைக்குள்ளே பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் அங்கே வைக்க மாட்டார்கள். இதுபோன்ற திட்டமிட்ட ஒரு மோசடி நடந்து கொண்டே இருக்கிறது. இதையெல்லாம் ஒழித்து கட்டுவதற்கான ஒரு பெரும் போராட்டம் தேவை. அதற்கான ஒரு மேடையாக இந்த மேடை உருவாகி இருப்பதிலே எங்களுக்கு பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் மேலும் எங்களால் இயன்ற பங்களிப்பை செலுத்துவோம் என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »