சட்ட வரைவுக்கு உட்பட்டு போராடும் மாணவர்களுக்கு தவெக அரசு இடம் ஒதுக்கி தர வேண்டும் – திருமுருகன் காந்தி

ஒன்றிய அரசின் பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் அடையும் இன்னல்கள் குறித்தும், தமிழ்நாட்டில் ‘நீட் எதிர்ப்பு’ போராட்டத்தை காவல்துறை ஒடுக்க முயற்சிப்பது குறித்தும், தில்லியில் நடந்த மாணவர் போராட்டம் குறித்தும் ‘சவுத் பீட்’ ஊடகத்திற்கு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஜூலை 2026 அன்று அளித்த நேர்காணல்:

தொகுப்பாளர்: சவுத்பீட் நேயர்களுக்கு வணக்கம்.

நம்முடன் கலந்துரையாட அமர்ந்திருப்பவர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்.

தொகுப்பாளர்: வணக்கம்! சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டத்தை நடத்தியிருக்கிறீர்கள். “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்பதே உங்கள் கோரிக்கை. ஆனால் நாடு முழுவதும் வேறு வகையான கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக இந்த நீட் தேர்வை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று சில அமைப்புகள் தலைநகரில் போராட்டம் நடத்துகின்றன. இது எங்கு போய் முடியும்? கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் போராடுகிறீர்கள் என்ற விமர்சனமும் எழுகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

திருமுருகன் காந்தி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தக் கோரிக்கை தனித்துவமானது. இந்தக் கோரிக்கையை முதன்முதலில் தொடங்கியதே தமிழ்நாடுதான். நம்முடைய நிலைப்பாடு தெளிவானது. “நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்பதே ஆகும். கல்வி என்பது மாநிலப் பட்டியலிலும் ஒன்றியப் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. இரு அரசுகளும் சட்டம் இயற்றலாம். ஒன்றிய அரசு கொண்டுவரும் சட்டத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளலாம், அல்லது தனக்கென தனிச் சட்டத்தை இயற்றலாம்.

“நீட்” தேர்வை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தது. தமிழ்நாடு அரசு அதிலிருந்து விலக்கு கேட்டது. ”ஏன் கேட்டோம்” என்பது மிக முக்கியமானது. நீட் தேர்வை நடத்துவது ஒன்றிய அரசு. அவர்கள் வைத்திருக்கும் பாடத்திட்டத்திலிருந்துதான் வினாக்கள் வரும். அது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், இந்தியப் பள்ளிக் கல்விச் சான்றிதழ் போன்ற ஒன்றியப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால் தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். முன்பு நம்மிடம் இருந்த நுழைவுத் தேர்வுகள் எப்படி இருந்தன? தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் இருந்து வந்த வினாக்கள்தான் அவை. இப்போது நாம் கேட்பது என்னவென்றால், ஒன்றிய அரசு நடத்தும் கல்லூரிகளில் இடம் வேண்டுமென்றால், ஒன்றிய அரசு நடத்தும் தேர்வை எழுதி உள்ளே செல்லலாம்.

எடுத்துக்காட்டாக இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) என்பது ஒன்றிய அரசின் கல்வி நிறுவனம். அங்கே சேர பனிரெண்டாம்(+2) மதிப்பெண்கள் மட்டும் போதாது. ஒன்றிய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வை எழுதித்தான் செல்ல வேண்டும். ஆனால் அண்ணா பல்கலைக்கழகம், மற்ற பொறியியல் கல்லூரிகள் எப்படியெனில், பனிரெண்டாம்(+2) மதிப்பெண்கள் அடிப்படையில்தான் சேர்கிறோம். ஏனெனில் அவற்றை நடத்துவது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டு மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு நடத்துகிறது. எனவே தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள்தான் அங்கே செல்வார்கள்.

ஆனால் ஒன்றிய அரசு என்ன செய்தது? மருத்துவக் கல்லூரி நம் ஊரில் இருந்தாலும், உதாரணத்திற்கு மதுரையில் இருந்தாலும் கூட, அங்குள்ள மதுரை மாணவன் இடம் பெற வேண்டுமென்றால், டெல்லி பாடத்திட்டத்தில் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்கிறார்கள். (அதாவது டெல்லி பாடத்திட்டத்தைப் படித்து அதற்கான தேர்வை எழுத வேண்டும்.)

இதனால் தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில், தமிழ் வழியில், கிராமங்களில் படித்த குழந்தைகள், முதல் தலைமுறை பட்டதாரிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தைப் படிக்கவோ, பயிற்சி எடுக்கவோ வாய்ப்பே இல்லாமல் போகிறது. நீட் தேர்வில் இவர்கள் அனைவரும் வடிகட்டப்பட்டு விடுகிறார்கள். இருபது, முப்பது இலட்சம் பேர் தகுதி இருந்தும் வெளியேற்றப்படுகிறார்கள். குறிப்பாக அனிதா. அவர் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவி. ஆனாலும் ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தைப் படிக்க அவருக்கு வாய்ப்பில்லை. அவருடைய ஊரில் அதைக் கற்பிக்க ஆசிரியர் இல்லை. அந்தப் பாடநூல் என்னவென்றே தெரியாது. அது ஒன்றிய அரசுப் பள்ளிகளுக்கான பாடநூல். அது ஆங்கிலத்தில் இருக்கும். அதைப் படித்துப் புரிந்துகொண்டு, அந்தப் பாடத்திட்டத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு தேர்வு எழுத வேண்டும். தேர்வும் ஆங்கிலத்தில்தான் வரும். அப்படியானால் தமிழ் வழியில், தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், ஒன்றிய அரசின் ஆங்கிலப் பாடநூலை வாங்கி எப்படித் தேர்வு எழுத முடியும்?

மதுரை மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவதற்கும், கோவை மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவதற்கும், வேலூர், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவதற்கும் ஏன் டெல்லிப் பாடத்திட்டத்தைப் படிக்க வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இதுதான் நீட் பிரச்சினை. தமிழ்நாட்டில்தான் மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. மருத்துவ இடங்கள் அதிகமாக இருப்பதும் இங்கேதான்.

தொகுப்பாளர்: இந்நிலையில் ரங்கராஜ் பாண்டே போன்றவர்கள்: “நீங்கள் பொறியியல் நுழைவுத் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழுத் தேர்வு எல்லாம் எழுதுகிறீர்களே. அவையும் தேர்வுகள்தானே” என்று கேட்கிறார்.

திருமுருகன் காந்தி: நானும் JEE பொறியியல் நுழைவுத் தேர்வு எழுதியவன்தான். என் காலத்தில் அது எப்படி இருந்தது என்று எனக்குத் தெரியும். அது பனிரெண்டாம்(+2) பாடத்திட்டத்தில் இருந்து வராது. அதற்குத் தனிப் பயிற்சி எடுக்க வேண்டும். நான் சொல்வது 35, 36 ஆண்டுகளுக்கு முன்னால். அதற்குக்கூட தனியாக பயிற்சி மையத்திற்குச் சென்று படிக்க வேண்டியிருந்தது. நான் தமிழ் வழியில் படித்தவன். தமிழில் “முடுக்கம், விசை” என்று படிப்போம். ஆங்கிலத்தில் அதற்கு “Acceleration” என்று இருக்கும். “Force” என்று இருக்கும். இதுவே என்னால் புரிந்துகொள்ள முடியாது. அதற்குப் பிறகு நீங்கள் ஒரு சிக்கலான இயற்பியல் வினாவைத் தீர்க்க வேண்டும். அதை ஆங்கிலத்தில் படித்துப் புரிந்துகொள்வதே கடினம். அந்த வினாவைத் தீர்கும் முறை தெரிந்திருக்கலாம். ஆனால் மொழி தெரியாது. பயிற்சி இருக்காது. அப்போது நான் இயற்பியலில் அந்த வினாவைத் தீர்க்க முடியாது. வேதியியலிலும் தீர்க்க முடியாது. “Precipitate” என்று ஆங்கிலத்தில் சொல்வதை தமிழில் என்னவென்று சொல்வது? ஒரு குழந்தை முதலில் மொழியையும் மொழிபெயர்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். 12-ஆம் வகுப்புத் தேர்வு முடித்தவுடன் இரண்டு மாதத்தில் தேர்வு வருகிறது என்றால், இரண்டு மாதத்திற்குள் எப்படி ஒரு பாடத்திட்டத்தைப் படிப்பீர்கள்?“

தொகுப்பாளர்: “சிறந்தவர்களை உருவாக்க வேண்டும், தகுதியானவர்களை உருவாக்க வேண்டும்” என்கிறார்களே!

திருமுருகன் காந்தி: இங்கே என்னவென்றால், இந்த தேர்வர்கள் மருத்துவக் கல்லூரிக்கான பாடப்புத்தகம் இருக்கிறதல்லவா? முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு பாடத்திட்டம். அந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் தேர்வு எழுதவில்லை. இவர்கள் 11-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பில் வரக்கூடிய இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியலில்தான் தேர்வு எழுதப் போகிறார்கள். 11-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பில் இருக்கக்கூடிய கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியலில் அடிப்படைக் கல்விதான் இருக்கப் போகிறது. இந்தக் கல்வியைப் பொறுத்தவரை ஒன்றிய அரசு வேறு மாதிரி சொல்லித் தருகிறது, மாநில அரசு வேறு மாதிரி சொல்லித் தருகிறது. சரி, இதைப் படித்து நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே நான் மருத்துவர் ஆகிவிட்டேன் என்று அர்த்தமில்லை. இன்றுவரை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா மூத்த மருத்துவர்களும் நீட் எழுதாமல் வந்தவர்கள்தான்.

ரங்கராஜ் பாண்டேவின் கருத்துப்படி பார்த்தால், ரங்கராஜ் பாண்டே உடல்நலம் சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்ல கூடாது. ஏனென்றால்  “நீட் தேர்வு படித்துவிட்டு வந்த மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள்தான் சிறந்தவர்கள்” என்கிறார். நீட் தேர்வு எழுதி மருத்துவத்தில் நுழைந்தவர்கள் கடந்த ஆறு, ஏழு ஆண்டுகள் தான் மருத்துவப் பயிற்சி செய்திருப்பார்கள். அவர் கருத்துப்படி மூத்த அறுவை சிகிச்சை நிபுணர், சிறந்த மருத்துவரை ரங்கராஜ் பார்க்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் எல்லாரும் தற்போதைய நீட் தேர்வில்லாமல் தான் மருத்துவம் பார்க்கிறார்கள்.

மூத்த மருத்துவர்களை, சிறந்த மருத்துவர்களை தமிழ்நாடு உருவாக்கி உள்ளது. சிறந்த மருத்துவர்களை மருத்துவக் கல்லூரிதான் உருவாக்குகிறது. சிறந்த பள்ளி மாணவரை பள்ளிதான் உருவாக்குகிறது. நாம் கேட்பது சிறந்த மருத்துவ மாணவர்களைத்தான். அது மருத்துவக் கல்லூரியின் தரத்தைச் சார்ந்தது.

அப்போது இவர்கள் (ரங்கராஜ் போன்றோர்) என்ன செய்கிறார்கள்? “நீட் தேர்வில் தேர்ச்சி வந்தவுடன் மருத்துவர் ஆகிவிட்டீர்கள் என்று திசை திருப்புகிறார்கள். நீட் தேர்வு முடித்தவுடன் ஊசி போடப் போகிறானா, அறுவை சிகிச்சை செய்யப் போகிறானா” என்று கேட்கிறேன். நீட் ஒரு பெரிய மோசடி. இது பெரிய ஊழல்.

ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடப்புத்தகத்தை எடுத்துக்கொண்டால், அதில் இருக்கக்கூடிய அடிப்படை அறிவியல், வேதியியல், உயிரியல், இயற்பியலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பாடப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு, யாராவது ஒரு சாதாரண பட்டதாரி/ முதுகலைப் பட்டம் பெற்றவர், அல்லது இயற்பியல், வேதியியல் படித்தவரால் அதைப் புரிந்துகொள்ள முடியுமா? என்று சொல்லுங்கள். நான் வெளிப்படையாக சவால் விடுகிறேன். புரிந்துகொள்ள முடியாது.

ஏனெனில் புரிந்துகொள்ள முடியாதபடிதான் பாடத்தை எழுதி வைத்திருக்கிறார்கள். நீங்கள் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தை எடுத்து, வெப்பம், வெப்ப இயக்கவியல் குறித்தான பாடத்திட்டத்தை எடுத்தால், அதில் வரக்கூடிய அளவுகள், வாய்ப்பாட்டில் நான்கு எழுத்துகள் போடுவார்கள். f என்று போடுவார்கள், r என்று போடுவார்கள், k என்று போடுவார்கள். ஏதோ ஒன்று போடுகிறார்கள். இது என்னவென்று சொல்லாமல் முதலிலேயே வாய்ப்பாடு வந்துவிடும். அந்த வாய்ப்பாட்டின் தொடர்பைப் பற்றி விளக்குவார்கள். ஆனால் அந்த அளவு (parameter) என்னவென்று சொல்ல மாட்டார்கள். அதை நான்காவது பக்கத்தில் சொல்லியிருப்பார்கள். அப்போது நான்கு பக்கங்களையும் ஒன்றும் புரியாமல் கடந்து போய், நான்காவது பக்கத்தைப் படித்துவிட்டு திரும்ப வந்துதான் அதைப் படிக்க வேண்டும்.

நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். இப்படித் திட்டமிட்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் பாடத்திட்டத்தை சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாதபடி எழுதுகிறார்கள். பயிற்சி வகுப்புக்குச் சென்றால்தான் புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இப்போது “கலோரி” என்று ஒன்று இருக்கிறதல்லவா? வெப்பநிலையில் “செல்சியஸ்” என்று ஒன்று சொல்கிறோம். செல்சியஸ் என்பது என்னவென்றே விளக்காமல், செல்சியஸைப் பயன்படுத்தி ஒரு வாய்ப்பாட்டைக் காட்டிவிடுவான். கலோரியைப் பயன்படுத்தி வாய்ப்பாடு காட்டிவிடுவான். அந்த k என்பதோ அல்லது கலோரி என்பதோ என்னவென்பதை ஆறாவது பக்கம், ஏழாவது பக்கத்தில் சொல்லியிருப்பான். அப்போது இந்த வாய்ப்பாட்டை எப்படி நீங்கள் புரிந்து உள்வாங்குவீர்கள்? மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்தை எடுத்து ஒவ்வொரு பக்கமாகப் படியுங்கள். நான் வேண்டுமானால் படித்துக் காட்டுகிறேன்.

நானும் இந்திய அறிவியல் கழகத்திற்குத் தயாரானவன்தான். நானும் மூன்று பாடங்கள் படித்தவன்தான். நானும் முதுகலைப் பட்டம் பெற்றவன்தான். எடுத்து வைத்துப் பார்ப்போம், புரிகிறதா என்று. படித்த அப்பா அம்மா, கல்வியில் வலுவாக இருப்பவர்களே ஒன்றிய பாடத்திட்டத்தை வீட்டில் சொல்லித் தருவதற்குச் சிரமப்படுவார்கள். அதனால் தனிப்பயிற்சிக்குச் சென்றுதான் ஆக வேண்டும். பயிற்சி வகுப்புக்குச் சென்றுதான் ஆக வேண்டும். ஏனெனில் பாடம் கடினமான பாடம் இல்லை. பாடம் படிப்பதைக் கடினமானதாக எழுதி வைத்திருக்கிறார்கள். வேண்டுமானால் அடுத்த நேர்காணல் எடுங்கள். நான் பாடப்புத்தகத்தைக் கொண்டு வருகிறேன். என் தங்கையின் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கும், மற்ற குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கும், ஒருமுறை புத்தகத்தை எடுத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது. அவ்வளவு மோசமாக புத்தகத்தை எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஸ்டீபன் ஹாக்கிங் இயற்பியல் பற்றி ஒரு புத்தகம் எழுதினார். ஒரே வாய்ப்பாடாக இருந்தது. படித்துப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அப்போது அவர் அடுத்த ஒரு புத்தகத்தை எழுதினார்.

அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் என்ன எழுதினார் என்றால், “என்னுடைய முந்தைய புத்தகத்தை வாங்காதீர்கள்” என்று எழுதினார்.

அடுத்த புத்தகத்தில் வாய்ப்பாடே இல்லாமல் இயற்பியலை விளக்கியிருப்பார். அவ்வளவு அருமையான புத்தகமாக இருக்கும்.’ வானவில் எப்படித் தோன்றுகிறது’ என்று சொல்லி, ஒரு கட்டத்தை வைத்துக் காட்டுவார். இதை நான் பள்ளிக் காலத்தில், கல்லூரிக் காலத்தில் படித்துத் தெரிந்துகொண்டேன்.

அதே சமயத்தில் சோவியத்தில் ஒரு பாடத்திட்டம் இருந்தது. “பெரல்மான்” என்று ஒருவர் இருக்கிறார். “விளையாட்டு இயற்பியல்”, “விளையாட்டு கணிதம்”, “விளையாட்டு வேதியல்”, “விளையாட்டு வானவியல்” என்று புத்தகம் எழுதியவர். அவர் கணிதத்தில் அடுக்கு வடிவத்தை எப்படி விளக்குவார் என்றால், a, a², a³ என்று போய்க்கொண்டே இருக்கிறீர்களே, அது குறித்து அழகாக ஒன்று சொல்வார்.

“ஈ” இருக்கிறது. அது முட்டை போடுகிறது. அந்த முட்டைகளில் இருந்து லட்சம் ஈ வருகிறது. அந்த லட்சம் முட்டையும் பொரிந்து, அத்தனையும் ஈயாக மாறுகிறது என்று கணக்கு வைத்தால், ஆறு மாதத்திற்குள் ஈயை நிறுத்தி வைத்தால், இங்கிருந்து சனி கிரகம் வரைக்கும் நிற்கும் என்றார். இது உங்களுக்கு அடுக்கு வளர்ச்சி (exponential growth) என்றால் புரிகிறதா? ஒன்றில் இருந்து இரண்டு ஆகிறது. இரண்டில் இருந்து மூன்று ஆகிறது என்பது அடுக்கு வளர்ச்சி அல்ல. ஒன்றில் இருந்து இரண்டு ஆகிறது. இரண்டு நான்கு ஆகிறது. நான்கு பதினாறு ஆகிறது. பதினாறு முப்பத்திரண்டு ஆகிறது. இதுதான் அடுக்கு வளர்ச்சி. இதைவிட எளிமையாக ஒரு அறிவியலாளர் சொல்ல முடியுமா? இப்படிச் சொல்லித் தருவது போல ஒரு வார்த்தை கூட மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் கிடையாது. இதை வேண்டுமென்றே புரியாத மாதிரிதான் எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் சோவியத்தில் எப்படி இருந்தது? ஸ்டீபன் ஹாக்கிங் போன்றவர்கள் எப்படி இயற்பியலை எழுதினார்கள்? பாடங்கள் புரியவில்லை என்றால் படிக்கும் குழந்தைகளுக்கு அதன் மீது விருப்பமே வராது. அவர்களுக்கு (ஒன்றிய பாடத்திட்டம்) என்னவென்றால், யாரும் எளிதாக புரிந்து கொள்ளக் கூடாது, யாருக்கும் படிக்க வேண்டும் என்பதற்கான வாய்ப்பைத் தரப் போவதில்லை என்ற முடிவில்தான் இந்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், இந்தியப் பள்ளிக் கல்விச் சான்றிதழ் பாடத்திட்டங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டு திணிக்கப்படுகிறது.

600 பக்கம், 700 பக்கம் புத்தகத்தை ஒரு குழந்தை எப்படி எட்டு மாதத்தில் படிக்கும்? அதற்குப் பிறகு நீங்கள் நுழைவுத் தேர்வுக்குச் சென்றால் பயிற்சி எடுத்துத்தான் செய்ய முடியும். நமக்கெல்லாம் பயிற்சி ஆசிரியர்கள் சொல்லித் தருவார்கள். உதவி செய்வார்கள். “இது இப்படி இருக்கிறது, இப்படிப் புரிந்துகொள். ஒருங்கிணைப்பு இப்படி, வகையீடு இப்படி, dy/dx என்றால் இப்படி” என்று சொல்லித் தருவார்கள். ஆனால் பயிற்சி வகுப்பு என்பது உங்களைப் பழக்கப்படுத்துவது. அது குழந்தைகளை திரும்பத் திரும்பத் திரும்பப் பயிற்சி செய்ய வைக்கும்.

ஐஐடியில் நுழைவதற்கு பயிற்சிதான் முக்கியம். வினாவைத் தீர்க்கும் முறை தெரிந்தால் மட்டும் போதாது. அதே வடிவத்தில் 100 வினாக்கள் கொடுப்பார்கள். 100 வினாக்களைத் தீர்த்துத் தீர்த்து, நீங்கள் தானாகப் பழகிவிடுவீர்கள். கிட்டத்தட்ட மனப்பாடம் செய்வது போலத்தான். இவர்கள் சொல்வது போல மிக புத்திசாலித்தனம், அறிவு ஒன்றும் கிடையாது. முதலில் கோலம் போடுவது கடினமாக இருக்கும். தினமும் கோலம் போட்டு ஒரு வருடம் கழித்து எப்படி கோலம் போடுவீர்கள்? தரையைப் பார்க்காமலே போட முடியும். நம் பெண்கள் போடுகிறார்களே, அப்படி லாவகமாகப் போடுகிறார்கள். அதே மாதிரிதான் பயிற்சி.

தொகுப்பாளர்: கல்வி ரீதியாக சில விளக்கங்கள் கொடுக்கிறீர்கள். ஆனாலும் அதை ஏற்றுக்கொண்டு, அதைத் தர்க்கரீதியாகப் பார்க்கக்கூடிய ஒரு இளைய தலைமுறை உருவாகியிருக்கிறதா? ஏனெனில், நேற்று கூட இயக்குநர் அமீர் சொல்கிறார் – “தமிழ்நாடு மிக முற்போக்கான மாநிலம்” என்று நிறைய பேர் சொன்னார்கள். அதையெல்லாம் தூக்கிப் போட்டு வெகு நாளாகிவிட்டது என்று அவர் ஒரு கருத்தைச் சொன்னார். அதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமும் ஒரு பக்கம் இருக்கிறது.

திருமுருகன் காந்தி: ஆட்சி அதிகாரத்தை யார் கைப்பற்றுகிறார்கள் என்ற இடத்தை மட்டுமே வைத்து முடிவு செய்துவிட முடியாது. தேர்தலை எப்படி அணுக வேண்டும் என்று நமக்கு யாரும் சொல்லித் தரவில்லை. “எனக்கு இந்த நடிகரை மிகவும் பிடித்திருக்கிறது” என்று ஓட்டுப் போடுகிறார்கள். “இந்த பரோட்டா மாஸ்டரை எனக்கு மிகவும் பிடிக்கும்” என்பதற்காக பரோட்டா மாஸ்டருக்கு ஓட்டு போடுகிறார்கள்.

1991-இல் சந்திரசேகர் தேர்தலில் நின்றார். தேர்தல் முடிந்ததற்குப் பிறகு. “இந்தியா டுடே” இதழில் ஒரு கருத்துக் கணிப்பு எடுத்திருந்தார்கள். அப்போது “யாருக்கு ஓட்டு போட்டீர்கள்?” என்று தமிழ்நாட்டில் ஒருவரைக் கேட்கிறார்கள். அவர் சொல்கிறார், “சந்திரசேகருக்குப் போட்டோம்” என்று. “ஏன் போட்டீர்கள்? அது யார் என்று தெரியுமா?” என்று கேட்டால், “ பெயர் அழகாக இருந்தது, போட்டேன்” என்றார்.

அதாவது நமக்கு தேர்தலில், இதற்காகத்தான் தேர்தல் என்றும், இதற்காகத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எதுவுமே தெரியாது. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பொறுப்பு என்னவென்று சட்டமன்ற உறுப்பினருக்கும் தெரியாது. ஓட்டுப் போடும் நமக்கும் தெரியாது. நம் பாடத்திட்டத்தில் அது கிடையாது. எல்லாவற்றையும் படித்திருப்பீர்கள். அலெக்சாண்டர் எங்கே பிறந்தார், எங்கிருந்து வந்தார், அவர் குதிரையில் ஏறினாரா, கழுதையில் ஏறினாரா வரைக்கும் கேள்வி பதில் கேட்டிருப்பார்கள்.

ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பொறுப்பு என்ன? பாடத்திட்டத்தில் இருக்காது. ஒரு கல்வி அதிகாரியின் பொறுப்பு என்ன? பாடத்திட்டத்தில் இருக்காது. ஒரு காவல் துறையின் பொறுப்பு என்ன? பாடத்திட்டத்தில் இருக்காது. உங்களுக்கான அடிப்படை சட்ட உரிமைகள் என்ன? பாடத்திட்டத்தில் இருக்காது. அப்போது உங்களைத் திட்டமிட்டே இதெல்லாம் எதுவுமே சொல்லித் தராமல் வளர்த்த ஒரு கூட்டம், அரசியல் படிக்காத ஒரு கூட்டம். அவர்களுக்கு சினிமாதான் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அதன் வழியாக அவர்கள் அரசியலைப் பார்த்தார்கள். அரசியலைத் தேர்ந்தெடுத்தார்கள். இதை எதிர்த்துப் போராடுகின்ற ஒரு கூட்டம் நாமும் இருக்கிறோம் அல்லவா? அப்போது இந்தப் போராட்டம் நடந்துகொண்டேதான் இருக்கும். இதில் நம் போராட்டம் வெற்றி பெற வேண்டியிருக்கிறது. வெற்றி பெறுவோம்.

தொகுப்பாளர்: மே 17 இயக்கம் இன்றைக்கு ஒரு அமைதியான முற்றுகைப் போராட்டம் நடத்துகிறீர்கள். காவல்துறை அனுமதி பெற்று நடத்துகிறீர்கள்….

திருமுருகன் காந்தி: அனுமதி எல்லாம் பெறவில்லை. முற்றுகைப் போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது. நாங்கள் அங்கே செய்ய வேண்டும் என்று நினைத்ததால் சென்றுவிட்டோம். நம் எதிர்பைத் தெரிவிக்க ஒரு இடம் வேண்டும் இல்லையா? சாஸ்திரி பவனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக சாலிகிராமத்தில் போய் நிற்க முடியுமா? எங்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமோ அங்கே சென்று விடுவோம். அடிப்படை இதுதான்.

தொகுப்பாளர்: ”யாருக்கும் தொந்தரவு வரக்கூடாது. அனுமதி பெற்றுப் போராட்டம் நடத்துங்கள். தேவையில்லாத கைதுகளைத் தவிர்க்க வேண்டும். சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகப் போராட்டம் செய்தால் நாங்கள் கைது செய்வோம்” என்று அரசுத் தரப்பு விளக்கம் கொடுக்கிறதே!

திருமுருகன் காந்தி: சாதாரண காலங்களில் நாம் ஒரு போராட்டம் செய்யும்போது அனுமதி வாங்கி, அதற்கு நேரம் காலம் எடுப்பீர்கள். இன்னும் 20 நாள் கழித்துப் போராட்டம், ஒரு மாதம் கழித்துப் போராட்டம் என்று திட்டமிட்டு நம் கோரிக்கையை முன்னெடுப்பதற்காகச் செய்வோம். ஆனால் இன்றைக்கு இருக்கும் சூழல் அசாதாரணமான சூழல். காவல்துறை மாணவர்களையும் இளைஞர்களையும் அடித்து நொறுக்குகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுக்கு ஆதரவாக நாம் நிற்க வேண்டும் என்ற உள்ளுணர்வு இருக்கிறது. இதற்கு நீங்கள் அனுமதி கடிதம் எழுதிக் கொடுத்து, ஐந்து நாள் காத்திருந்து, ஐந்தாவது நாள் காவல்துறை வந்து உங்களைக் கூப்பிட்டு விசாரித்து, அதற்குப் பிறகு என்ன செய்யும்?

காவல்துறை அனுமதி என்பது என்ன கோரிக்கைக்காக என்பதல்ல, உங்கள் மைக் என்ன அளவு, அதன் ஒலிபெருக்கியின் அளவு என்ன என்பதை சரிபார்த்து, “அனுமதிக்கப்பட்ட மைக்” என்று அனுமதி கொடுப்பதற்குத்தான். ”இந்த ஒலி அளவை நீ பயன்படுத்தலாம்” என்று சொல்வதுதான் காவல்துறை அனுமதி. போராடலாமா? என்று கேட்பதற்கு காவல்துறை அனுமதி தேவையில்லை. காவல்துறைக்கு அந்த வேலையே கிடையாது.

இப்போது நான் “நீட் தேர்வு ரத்து” என்று சொல்லிப் போராட்டம் நடத்துகிறேன். நீட் தேர்வு என்னவென்று காவல்துறை ஆணையருக்குத் தெரியுமா? நீட் தேர்வைப் பற்றிய விவரங்கள் தெரியுமா? காவல்துறை ஆணையருக்கு நீட் தேர்வு விவரத்தைச் சொல்வாரா? அப்போது காவல்துறைக்குப் பாட அறிவு கிடையாது. நாளைக்கு நான் ஈழத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் வர வேண்டும் என்று சொல்கிறேன் என்றால், ஐக்கிய நாடுகள் சபையின் நடைமுறை என்னவென்று காவல்துறை அதிகாரிக்குத் தெரியுமா? அவர் பார்த்து, “இல்லை, ஐக்கிய நாடுகள் சபைக்கு நீங்கள் இதைச் செய்யலாம், அந்தத் தீர்மானத்தைத் தர முடியாது” என்று சொல்ல முடியுமா? அவர்களுக்கு அந்த பாட அறிவு கிடையாது. அவர்கள் பாட நிபுணர்கள் அல்ல. இந்த ஒலி அளவைக் கொண்ட இந்த மைக் செட்டை நீங்கள் பயன்படுத்தலாம் என்று மைக் செட்டுக்குக் கொடுக்கக்கூடிய அனுமதிதான் காவல்துறை அனுமதி.

இதை எல்லா அமைச்சர்களும் தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள். எல்லா காவல்துறை அதிகாரிகளும் தெரிந்துகொள்ளுங்கள். நான் என்ன போராட வேண்டும் என்பதை உங்களிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் ஒரு துறை. சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வந்தால்தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய விடயம். இப்போது டெங்கு பரவுகிறது என்றால், மருத்துவத் துறை களத்தில் இறங்குகிறதா இல்லையா? கரோனா என்றால் அந்தத் துறை களத்தில் இறங்கும். அது போலத்தான்.

தொகுப்பாளர்: இதெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தானே, உங்கள் போராட்டத்திலேயே “கோனி” எல்லாம் வைத்திருந்தார்கள். யாராவது தீக்குளித்துவிடுவார்களோ என்று!

திருமுருகன் காந்தி: யாரும் தீக்குளிக்க மாட்டார்கள். கொடும்பாவி கொளுத்துவோம் என்று காவல்துறை நினைத்திருப்பார்கள். ஆனால்  டெல்லியில் ஜந்தர் மந்தர் போனீர்கள் என்றால், கொடும்பாவி கொளுத்தப் போனீர்கள் என்றால், அதை காவல்துறையிடம் சொன்னால் அவர்களே ஏற்பாடு செய்து கொடுத்துவிடுவார்கள். அவர்களே, “யார் அதற்கான ஒப்பந்தம் பார்க்கிறது?” என்று கூறி விடுவார்கள். டெல்லியில் எங்கே போய் கோனியைத் தேடிக் கொண்டிருப்பது? ஆனால் அதற்கான ஆட்கள் இருக்கிறார்கள். “வருபவர் எதிர்ப்பு தெரிவிக்கப் போகிறார், சரி விடு” என்று சொல்கிறார்கள்.

இங்கே கொடும்பாவியை தடுப்பது என்பது காவல்துறை அரசியல்வாதியிடம் ஜால்ரா அடிப்பதற்காகச் செய்யும் வேலை. நாளைக்கு அந்த அமைச்சர் பார்த்து, “என்னய்யா இப்படியெல்லாம் செய்கிறார்களே” என்று கேட்டால், பணியிட மாறுதலோ, பதவி உயர்வோ கேட்க முடியாது, அல்லது வேறு எதையும் கேட்க முடியாது அல்லவா? அதற்குப் பயந்துகொண்டு இந்த வேலை நடக்கிறது.

தவெக அரசு என்ன செய்ய வேண்டும்? போராடுவதற்கு இப்படிப்பட்ட நெருக்கடி வரும்போது ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். “அங்கே நின்று போராடுங்கள்” என்று சொல்ல வேண்டும். மும்பைக்கு போனால், திலகர் மைதானத்தில் அனுமதி இல்லாமல் போய், மைக்கைப் போட்டுப் பேசி, உங்கள் கோரிக்கையைச் சொல்லிவிட்டு வந்துவிடலாம். ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் போய் நின்று பேசிவிட்டு வந்துவிடலாம். ஜந்தர் மந்தரில் காஷ்மீரில் காணாமல் போன தன் பிள்ளைக்காக, அம்மாக்களும், அப்பாக்களும், அப்பாவுக்காக உட்கார்ந்திருக்கும் பிள்ளைகளும், அங்கே ஏழு ஆண்டு, எட்டு ஆண்டு, 10 ஆண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நீங்கள் போனால் பார்க்கலாம். அங்கேயே வருடக்கணக்கில் உட்கார்ந்திருப்பார்கள். போராடினால் என்ன கெட்டுப் போய்விடும் நாட்டில்? “எங்களுக்கு நீதி எப்படித்தான் கிடைக்கும்?” போராடிதான் நீதி கிடைக்கும்.

தொகுப்பாளர்: ஒரு பக்கம் தமிழக அரசாக இருந்தாலும் சரி, கேரளாவில் காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி, “நாங்கள் நீட்டை எதிர்க்கிறோம்” என்று சொல்கிறார்கள். சுதீசன் போய் போராட்டத்திலேயே பங்கெடுக்கிறார். ஆனால் கேரளாவில் போராடுபவர்கள் மீது தண்ணீரைப் பீச்சி அடிக்கிறார்கள். தமிழ்நாட்டில் குண்டுக்கட்டாகக் கைது செய்கிறார்கள். லயோலா கல்லூரியில் ஒவ்வொரு மாணவர்களையும் சோதனை செய்துதான் அனுமதிக்கிறார்கள். மெரினாவை மூடுகிறார்கள். இதை எப்படிப் பார்ப்பது?

திருமுருகன் காந்தி: இது என்னவென்றால், காவல் துறையின் எல்லை என்னவென்று அரசாங்கம் வரையறை செய்யாமல், அவர்கள் எல்லா வேலைக்கும் காவல் துறையைப் பயன்படுத்துகிறார்கள். காவல் துறைக்கும் கடைசியில் ”தான் என்ன வேலைக்கு வந்தோம்” என்று தெரியாமல் இருக்கிறார்கள். ஒரு மாணவனுடைய பையைச் சோதனை செய்து என்ன செய்யப் போகிறார்கள்? காவல்துறைக்கு இதுதான் வேலையா? சட்டம் ஒழுங்குப்  பிரச்சினைக்குத்தான் காவல்துறை. ஆனால் காவல் துறையை எதற்குப் போஸ்டர் கிழிப்பதற்குப் பயன்படுத்துகிறீர்கள்? முன்னெச்சரிக்கை என்று அவனைக் கொண்டு போய் வைத்து அடைத்து வைப்பதற்குப் பயன்படுத்துகிறீர்கள். “பையைச் சோதனை செய், அதைச் சோதனை செய், இதைச் சோதனை செய்” என்று இதற்கெல்லாம் காவல்துறையை பயன்படுத்தக்கூடாது. காவல்துறையை தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உன் அரசியல் வேலை என்னவோ, அந்த வேலைக்குக் காவல்துறையைப் பயன்படுத்தினால், காவல்துறை “இது வேண்டாம், இதை நாங்கள் செய்ய வேண்டுமா?” என்று சொல்ல வேண்டாமா? வெளிநாட்டில் நீங்கள் உங்கள் விருப்பத்திற்குப் போகலாம், ஒரு வேலை செய்யலாம். ஆனால் பொதுமக்களை தொந்தரவு செய்யாத வரைக்கும் காவல் துறை உங்கள் மேல் கை வைக்கவே முடியாது. இங்கே காவல் துறையின் வரையறையை கட்சி தன் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்கிறது.

திமுகவினர் ஒரு கூட்டம் நடத்தப் போனார்கள். மண்டபம் எடுத்தார்கள். காவல்துறை அழுத்தம் கொடுத்து அந்த மண்டபத்தை ரத்து செய்ய வைத்தது. இது திமுக காலத்தில் நடந்திருக்கிறதல்லவா? திமுகவை விமர்சிக்கிறவர்களுக்கு நடந்திருக்கிறதா இல்லையா? திமுக, அதிமுக மாறி மாறி காவல்துறையை எல்லா ஒடுக்குமுறைக்கும் பயன்படுத்தினார்கள். கடைசியில் இன்றைக்கு அவர்களுக்கு எதிராக வந்து நிற்கிறது.

தொகுப்பாளர்: கடந்த காலங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது முதலமைச்சர் ஸ்டாலின் “கூலி” படம் பார்த்தார்.

இப்போது மாணவர்கள் போராடும்போது “ஜனநாயகன்” படத்தை முதலமைச்சரும் அமைச்சர்களும் பார்க்கிறார்கள். இப்போது இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை அல்லவா?

திருமுருகன் காந்தி: அரசியல் கட்சிகளுக்கு நீட் தேர்வைக் குறித்த பெரிய அக்கறை எல்லாம் இல்லை. திமுக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார்கள். சட்ட வரைவு கொண்டு வந்தார்கள். சட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக அரசும் அப்படிப்பட்ட நிலைப்பாடு எடுத்திருந்தார்கள்.

தவெக அரசு இங்கே போராட வரக்கூடியவர்களை அனுமதித்திருக்க வேண்டும். ஏனெனில் சட்டசபை தீர்மானத்திற்கு ஆதரவாகத்தான் மாணவன் வருகிறான். ஆனால் தவெக அரசுதான் சட்டவிரோதமாக நடக்கிறார்கள். மாணவன் சட்டத்திற்கு உட்பட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்காக, சட்ட வரைவிற்காகப் போராடுகிறான்.

இப்போது திமுக என்ன செய்திருக்க வேண்டும்? தவெக ஒன்றுமே செய்யவில்லை. அவர்கள் படம் பார்க்கப் போய்விட்டார்கள். அமைச்சர் முதற் கொண்டு எல்லோரும் இன்னும் ரசிகராகவே இருந்தால் என்ன செய்வது?

தொகுப்பாளர்: “கண்ணீர் விட்டு அழுகிறார்கள். இதுதான் கடைசிப் படம்” என்கிறார்கள்.

திருமுருகன் காந்தி: உங்களை எல்லாம் அமைச்சர் ஆக்கினோமே என்று நாம்தான் அழ வேண்டியிருக்கிறது. சினிமாப் படத்தைப் பார்ப்பதற்கு அவ்வளவு தூரம் அழ வேண்டிய அவசியம் இல்லை.

தொகுப்பாளர்: “கடைசி படம்” என்கிறார்களே!

திருமுருகன் காந்தி: என்னங்க “கடைசி படம்”? இதனால் என்ன வந்துவிடப் போகிறது? அமைச்சர்களாகவே கற்பனை செய்துகொண்டு அழுதுகொண்டு… ஒரு முதலமைச்சருக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படுகிறாரா? என்று எனக்குத் தெரியவில்லை. அமைச்சர்களுக்கு என்று ஒரு கண்ணியம் இருக்கிறது. சிறப்புக் காட்சி திரையிட்டு 107 சட்டசபை உறுப்பினர்களும் ஒன்றாக உட்கார்ந்து பார்த்துவிட்டு மொத்தமாக அழுங்கள்.

ஏன் எல்லாவற்றிற்கும் முன்னால் அழுது நாடகம் போடுகிறார்கள்? ஒரு அமைச்சர் அழுகிறார். சுற்றி கேமரா இருக்கிறது. அவருக்கு நன்றாகத் தெரியும், அழுததை எல்லாம் இவர்கள் காணொளி எடுத்துப் போடுவார்கள் என்று. இவர் அழுத செய்தி கேட்டு, இன்னொரு அமைச்சர் வேறு தியேட்டரில் அழுகிறார். “ஐயோ, அவன் அழுதுவிட்டான், நான் அழவில்லை என்றால் எனக்குக் கெட்ட பெயர் வந்துவிடும்” என்று மொத்தக் கூட்டமும் அழுதுகொண்டிருந்தால் என்ன செய்வது? எதற்கு வந்திருக்கிறீர்கள்? எதைச் செய்ய வந்திருக்கிறீர்கள்? உங்களை மக்கள் பார்க்கிறார்கள். இவ்வளவு நாளாக ரசிகராக இருந்தவர்கள், சினிமாவில் இருந்தவர்கள், எப்படிப் போய் ஆட்சி செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி இருந்ததல்லவா? இன்னும் உங்களை மாற்றிக்கொள்ளாமல் இதே ரசிகராகவே இருந்தீர்கள் என்றால், மக்கள் மதிப்பார்களா? இது துயரம்தான்.

தொகுப்பாளர்: ஜே.சி.டி. பிரபாகர் சொல்கிறார், “இது மூளையை மழுங்கடிப்பதற்காகச் செய்யவில்லை. இது போராட்டத்தைத் திசை திருப்புவதற்காகக் கொண்டாடவில்லை. இது மூளையைச் சுறுசுறுப்பாக்கும் ஒரு படம்” என்று விளக்கம் கொடுக்கிறார்.

திருமுருகன் காந்தி: அபத்தமாகப் பேசுகிறார்கள். “மூளையைச் சுறுசுறுப்பாக்கும்” என்றால், கடந்த காலத்தில் என்ன செய்தீர்கள்? விஜய் 60 படங்கள் நடித்தார். 60 படத்தில் மூளை சுறுசுறுப்பானதா? ஏதாவது கண்டுபிடித்தீர்களா? ராக்கெட் ஏதாவது விட்டீர்களா? என்ன செய்தீர்கள்? இதற்குள் போனால் அது வேறு தனிப்பட்ட விமர்சனமாகப் போகும். அதற்குள் நான் போக விரும்பவில்லை.

நான் சொல்வது: ஒரு அரசை நடத்துகிறீர்கள். 7 கோடி பேருக்கான ஆட்சியை நடத்துகிறீர்கள். அத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன. நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அரசுப் பணி நேரத்தில் போய் சினிமாப் படம் பார்க்கப் போனால், ஒரு மாணவன் பள்ளியை கட் செய்துவிட்டுப் போய்ப் படம் பார்க்க மாட்டானா? என்ன கற்றுத் தருகிறீர்கள்? நீங்கள் வேலையை முடித்துவிட்டு, மாலையில் இரண்டாவது காட்சிக்கோ, தனிக் காட்சி போட்டு, உட்கார்ந்து தனியாகப் படத்தைப் பார்த்துவிட்டுப் போங்கள். உங்களுக்கு முடியாத விடயமா?

தொகுப்பாளர்: இதில் முக்கியமாக, திமுக ஆட்சிக்குப் பிறகு இங்கே பாஜக எதிர்ப்பு மழங்கடிக்கப் பட்டிருக்கிறது. ஒரு இயல்பாக்கப்பட்டிருக்கிறது. “இங்கே பாசிசம் எடுபடாது” என்று. திரும்பவும் “பாசிச பாஜக எதிர்ப்பு, டெல்லியா தமிழ்நாடா” என்ற களமே கிடையாது, ஆனால் முடிவு வேறு மாதிரிதான் வந்திருக்கிறது என சொல்கிறார்களே?

திருமுருகன் காந்தி: ”பாஜக எதிர்ப்புதான் தமிழ்நாட்டின் மையப்புள்ளி”. அதிமுகவை நாம் ஏன் எதிர்த்தோம்? குறிப்பாக ஜெயலலிதா அம்மையாருக்குப் பிறகுதான், எடப்பாடியார் காலத்தில், ஓ.பி.எஸ் காலத்தில் தான் அதிமுக பொதுமக்களுடைய எதிர்ப்புக்கு உள்ளானது. காரணம், பாரதிய ஜனதா கட்சியோடு நெருக்கமாகவோ, இணக்கமாகவோ, அல்லது அமைதியாகவோ இருந்தது. திமுக காலத்தில் அங்கே பாஜகவை எதிர்த்து தொடர்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி சமயங்களில் நிறைய அறிக்கைகள் வந்திருக்கும், அவர்கள் கண்டித்திருப்பார்கள், அவர்கள் ஆட்கள் போயிருப்பார்கள், அங்கே ஏதோ நடந்திருக்கும்.

இப்போது தவெக அரசு, பாஜகவோடு எந்த முரண்பாடும் இல்லாமல், “எனக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லை” என்று உட்கார்ந்திருந்தால், கண்டிப்பாக எடப்பாடியார் காலத்தில் என்ன எதிர்ப்பு சம்பாதித்தார்களோ, அதையே தவெகவும் சம்பாதிப்பார்கள். டெல்லியில் மாணவனை அடிக்கிறார்கள். அப்போது தமிழ்நாட்டில் இருக்கிறவன் துடிக்கிறான். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்கிறான். இந்த சமயத்தில் தவெக அதைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், எந்த அறிக்கையும் கொடுக்காமல், ஒருமைப்பாடு காட்டாமல், போராடும் மாணவர்களை வந்து சந்திக்காமல், காவல்துறையை வைத்து அடித்துத் தூக்குவதும், கல்லூரிக்குள் போய்த் தூக்குவதும், இழுத்துகொண்டு போவதுமான வேலையைப் பார்த்தீர்கள் என்றால், மோசமாக நடந்துகொள்ளும் வேலையைப் பார்த்தீர்கள் என்றால், மக்களிடம் எடப்பாடியார் காலத்தில் என்ன நடந்ததோ, அதுதான் தவெகவுக்கும் நடக்கும்.

நான் சொல்வதனால் அவர்கள் எங்கள் மேல் வருத்தப்படலாம். ஆனால் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும். எப்படி எடப்பாடியார் மேல், அவர் ஆட்சி மேல் ஏன் வெறுப்பு வந்தது? எல்லாவற்றிற்கும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்துவதால் தான். டெல்லியில் காவல்துறை என்ன செய்ததோ, அதையே தமிழ்நாடு காவல்துறை செய்கிறது. முதலமைச்சரின் கீழ் இருக்கக்கூடிய தமிழ்நாடு காவல்துறை செய்கிறது. அப்போது வெறுப்பு வருமா வராதா?

தொகுப்பாளர்: இந்த அரசாங்கம் கொள்கையை முன்னிறுத்தாமல் இருக்கிறது. அமைச்சர் மரிய வில்சன் ஒரு இடத்தில் சொல்லியிருந்தார், “இனிமேல் கொள்கை அரசியல் எல்லாம் கிடையாது. இங்கே ’ஊழல் ஒழிப்பும், பெண்களுடைய பாதுகாப்பும் தான்’ தமிழ்நாடு அரசின் மையப்புள்ளியாக இருக்கும்” என்று.

திருமுருகன் காந்தி: ஊழல் ஒழிப்பும் ஒரு கொள்கை அரசியல்தான். தவெகவுக்கு ஐந்து ஆண்டுதான் ஆட்சி கொடுத்திருக்கிறார்கள். எத்தனையோ ஆட்சியைப் பார்த்துவிட்டோம். 1991, 1996-இல் ஜெயலலிதா அம்மையார் வந்தபோது, இனிமேல் நிரந்தரமாக இருக்கப் போவது போல நடந்துகொண்டார்கள். தவெக நிரந்தரம் எல்லாம் கிடையாது. ஐந்து ஆண்டுக்குள் கொள்கை அரசியல் என்னவென்று புரியவில்லை என்றால் வீழ்த்தப்படுவீர்கள்.

தவெக “திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரண்டு கண்கள்” என்று சொல்லிக்கொண்டு வந்ததனால்தான், ஏதோ ஒரு ஆதரவுத் தளம் வந்தது. “எங்களுக்கு(தவெக) இந்துத்துவாதான் அரசியல்” என்று சொல்லப் போகிறார்களா? கொள்கை அரசியல் பற்றிப் பேசாததனால்தான் கமல்ஹாசன் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தார். கொள்கைக்கு எதிர் அரசியல் செய்ததனால்தான் சீமான் இல்லாமல் போனார். கொள்கை அரசியல் மிக முக்கியமான அரசியல்.

தவெக பெரியார் சிலைக்கு மாலை போடுவது, அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுவது எல்லாம் செய்தீர்களே, அது என்ன அரசியல்? அவர்கள் இரண்டு பேரும் யார்? அமெரிக்கா, ஆப்பிரிக்காக்காரர்களா? இந்த ஊர் ஆட்கள்தானே. அதுதான் கொள்கை அரசியல்.

இப்போது அவர் (மரிய வில்சன்) இருக்கக்கூடிய துறையில், பொருளாதாரக் குழு கொள்கை பற்றிய ஒரு புரிதல் இல்லாமல் ஒரு வேலை செய்துவிட முடியுமா? பொருளாதாரக் கொள்கை பார்வை எல்லாம் இல்லாமல் செய்துவிட முடியுமா? சும்மா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறார்கள். இருக்கும் வேலையைச் செய்யுங்கள். ஊழல் ஒழிப்பு என்பதும் ஒரு கொள்கை பார்வையில்தான் வருகிறது. ஏழை எளிய மக்களுடைய அரசியல், அவர்களுக்கான பாதுகாப்பு, அவர்களுக்கான அதிகார அணுகல், இதெல்லாம் கொள்கை அரசியல். நான் தனியாக வகுப்பு எடுக்க வேண்டுமா? வேண்டுமென்றால் எடுக்கலாம்.

தொகுப்பாளர்: இறுதியாக, சோனம் வாங்சுக் தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திவிட்டார். இன்னொரு பக்கம் சிஜேபி, “தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை” என்ற தங்கள் உறுதிப்பாட்டைச் சொல்கிறார்கள். இன்றைக்கு ஒட்டுமொத்தமாக இந்தியா முழுக்க மாணவர்களுக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் பார்க்கிறோம். ஆனால் இந்தப் போராட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும்? காங்கிரஸ் ஒரு பக்கம், “பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் வரமாட்டோம், விவாதத்திலும் கலந்துகொள்ள மாட்டோம்” என்கிறார்கள். எப்படிப் போகும் என்று நினைக்கிறீர்கள்?

திருமுருகன் காந்தி: தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது ஒரு அடையாளம். இப்போது தமிழ்நாடு ஆளுநர், முன்னாள் ஆளுநருக்கும் இப்போது இருக்கும் ஆளுநருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? பாஜகவைப் பொறுத்த வரைக்கும் எல்லோரும் ஒரே மாதிரிதான் இருப்பார்கள். ஊழலோடுதான் இருப்பார்கள். ராமரைக் காட்டி, ஊழல் செய்தவர்கள்தான். “சாமி, கோயில், இந்து மதம்” என்று பேசிவிட்டு, “ஜெய் ஸ்ரீராம்” சொல்லிவிட்டு, அதிலேயே ஊழல் செய்தவர்கள்தான். ஊழலை அவர்களிடமிருந்து பிரிக்க முடியாது.

என்னவென்றால், ஒரு சிறிய கோரிக்கையாக ஆரம்பித்தது இன்றைக்கு ஒரு பெரிய அழுத்தத்தைக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது. நமக்கு “நீட் தேர்வு ரத்து” என்பதுதான் அதற்கான தீர்வு. வட இந்தியாவிற்கு நிலைமை வேறாக இருக்கலாம். அவர்களுக்கு நம் தமிழ்நாடு மாதிரி ஒரு வலிமையான கட்டமைப்பு கிடையாது. இப்போது பல மாநிலங்களுக்குப் போய் அவர்கள் படிக்கப் போக வேண்டிய சூழல் இருப்பதனால், அவர்கள் (Fair Neet) அதைக் கேட்கலாம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் “நீட் ரத்து” (Ban Neet) தான் நிரந்தரமான கோரிக்கை.

கோரிக்கைகளில் வேறுபாடுகள் இருக்கலாம். காரணங்கள் இருக்கலாம். கட்டமைப்பு வேறுபாடுகள் இருக்கின்றன. நமக்கு இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரி அளவுக்கு அவர்களுக்கு கிடையாது. நம்முடைய கட்டமைப்புகள் அவர்களுக்குக் கிடையாது. அதுதான் அதனுடைய வேறுபாடு. அதில்தான் கோரிக்கைகளில் மாறுபாடு வருகிறது. மற்றபடி, அந்தக் கோரிக்கையை முன்னெடுப்பதில், அவர்களுடைய எழுச்சி என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. அது தேர்தலில் வெளிப்படுமா இல்லையா என்று தெரியாது. ஆனால் இளம் தலைமுறை இந்தக் கட்சியை (பாரதிய ஜனதா கட்சி) வெறுக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிவிட்டார்கள். இந்த இளம் தலைமுறை மேல் கை வைத்தற்குப் பிறகு, அது வேறாக மாறிவிட்டது.

தொகுப்பாளர்: நிறைய விடயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி!

திருமுருகன் காந்தி: நன்றி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »