
அண்மையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது தவெக நிதி அமைச்சர் மரிய வில்சனின் சர்ச்சையான பேச்சு குறித்தும், வேளாண் துறை அமைச்சர் வேளாண் அறிக்கையை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்றது குறித்தும், கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் அவர்கள் கலந்து கொண்டது குறித்தும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் சர்மிளா டாக்கீஸ் ஊடகத்திற்கு ஆகத்து 12, 2026 அன்று வழங்கிய நேர்காணல்:
நெறியாளர்: சர்மிளா டாக்கீஸ் நேயர்களுக்கு வணக்கம். நம்மோடு இணைந்திருப்பவர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள். வணக்கம் தோழர்!
தோழர் திருமுருகன் காந்தி: வணக்கம்!!
நெறியாளர்: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மிகப் பரபரப்பான விவாதங்கள் தினமும் நடப்பதை பார்க்க முடிகிறது. நேற்று ஒரு முக்கியமான விடயம். கடையநல்லூர் திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் அவர்கள் பொறுமையாகவே சொன்னார். “நிதியமைச்சர் தன்னுடைய மொழியை கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். சில சொற்கள் விடுபட்டு போகிறது. தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டு அது இருக்கிறது” என்று ஒரு வேண்டுகோளாக அதை பேசினார். ஆனால் அதை கடும் கோபத்தோடு அணுகினார் நிதி அமைச்சர் மரிய வில்சன். “என்ன நக்கல் பண்றீங்களா?” என்று கேட்டார்.
அவர் அதை எதிர்த்து பேசியிருந்தால் கூட பிரச்சனை இல்லை. ஆனால் அவர் சொன்ன சில விடயங்கள்: “எனக்கு கிறிஸ்தவம் ஒரு மொழியை கற்றுக் கொடுத்திருக்கிறது. அன்பின் மொழி, இரக்கத்தின் மொழி, அமைதியின் மொழியை கிறிஸ்தவம் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நான் இப்படித்தான் பேசுவேன். இதுதான் என்னுடைய ”unique” (தனித்துவமானது) என்று சொல்கிறார். பலரும் அதை விமர்சனம் செய்கிறார்கள். நீங்களும் எக்ஸ் வலைதளத்தில் “Dear Minister Maria Wilson, I am born Tamilian and grown as a Communist” என்று பதிவு போட்டிருக்கிறீர்கள். இதில் உங்களுடைய பார்வை என்ன?
தோழர் திருமுருகன் காந்தி: அதாவது தமிழ் மொழியில் பேசுவது என்பது இலக்கிய நடையில்தான் பேச வேண்டும், அல்லது சங்கத்தமிழில்தான் பேச வேண்டும் என்று கேட்கவில்லை. பிறமொழி கலப்பு இல்லாமல் பேச வேண்டும் என்பது இயல்பான ஒன்று. அரசியலில் மிக முக்கியமான ஒன்று. நீங்கள் வணிகம் செய்கிறீர்கள் அல்லது ஒரு பயிற்றுவிக்கக்கூடிய இடத்தில் இருக்கிறீர்கள், வேறு எதிலாவது இருக்கிறீர்கள் என்றால் அதை பெரிதாக பார்க்க மாட்டார்கள். ஆனால் அரசியலில் இருக்கிறீர்கள். ஒரு பொறுப்புமிக்க அமைச்சராக இருக்கிறீர்கள். உங்கள் மாநிலம் மொழியை உயர்த்தி பிடிக்கக்கூடிய மாநிலம். அப்படி இருக்கும் பொழுது தமிழ்மொழி ஆளுமையோடு பேசுவது மிக முக்கியம்.
அதில் ஆங்கில கலப்போடு பேசுவது, பிறமொழி கலப்போடு பேசுவது என்பது ஏதாவது ஒரு இரண்டு வார்த்தைகள் வருவது வேறு. அத்தியாவசியமான வார்தைகளை பேசுவது என்பது வேறு. ஆனால் அதை ஒரு நடையாகவே எல்லா இடத்திலும் பயன்படுத்தும் பொழுது, நீங்கள் இரண்டு மொழியிலும் ஆளுமை இல்லாமல் இருக்கிறீர்கள். ஆங்கிலம் படித்தவனுக்கும் அது புரியாது. தமிழ் மட்டுமே தெரிந்தவனுக்கும் அது புரியாது. யாருக்குமே புரியாத இடத்திற்கு நீங்கள் கொண்டு நிறுத்துவது போல ஒரு இடம் வந்து நிற்கிறது. இதுதான் அடிப்படையில் இந்த மொழி கலப்பின் பிரச்சனை. அதனால் இந்த மொழியை பயன்படுத்தும் பொழுது நீங்கள் இயல்பான பேச்சு நடை, நடைமுறையில் என்ன இருக்கிறதோ அந்த மொழி நடையிலேயே நீங்கள் பேசலாம். நீங்கள் சுத்தமான தனித்தமிழில்தான் பேச வேண்டும் அல்லது சங்க தமிழில்தான் பேச வேண்டும், இலக்கிய தமிழில்தான் பேச வேண்டும் என்று இல்லை. இயல்பாகவே தமிழ் மொழியில் பேச முடியும்.
நெறியாளர்: எல்லா வார்த்தைகளும் நமக்கு தெரிந்த வார்த்தைகள்தான். அதை “unique-ஆன என்னுடைய method, style” என்று அவர் பேசுகிறார்.
தோழர் திருமுருகன் காந்தி: இரண்டு மொழி கலந்து பேசுவதில் என்ன unique இருக்கிறது? அது உங்களுக்கு மொழி அறியாமையைத்தான் காட்டுகிறதே ஒழிய, unique என்று சொல்ல எதுவுமே கிடையாது. இரண்டு மொழியை கலந்து பேசுவது பெருமையான விடயமா? இரண்டு மொழியுமே சரியாக கையாள தெரியவில்லை என்பதுதான் அதில் தெரிகிறது.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசும் பொழுது, பாராளுமன்ற உறுப்பினர் தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து பேசினால் சிரிக்க மாட்டார்களா? ஜப்பானுடைய பாராளுமன்றத்தில் இரண்டு மொழி கலப்பில் பேசினால் சிரிக்க மாட்டார்களா? அமெரிக்காவில் பேசினால் சிரிக்க மாட்டார்களா?
அமைச்சர் “மொழி கலப்பை குறைத்துக்கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு பேசலாம். அதில் “சிரமம் இருக்கிறது, நான் மாற்றிக்கொள்கிறேன்” என்று சொல்லலாம். அதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறோம். ஏனென்றால் இங்கே எல்லோருக்குமே ஒரு கட்டத்தில் மொழியை பயன்படுத்துவதில் சிக்கல் வந்தால், கற்றுக்கொள்ளும் முயற்சி எடுப்பதில் தவறு கிடையாது. அது கொலை குற்றமா என்று சொன்னோம்? அப்படி இல்லை. அது மக்களிடம் எளிய முறையில் போய் சேர வேண்டும்.
நெறியாளர்: இப்போது கூட அரசின் சில நிகழ்வுகளில் “Sports-ஐ எடு, Drugs-ஐ விடு” என்று சொல்லும்போது, சில ஆங்கில-தமிழ் கலப்புகள் மக்களுக்கு எளிதாக போய் சேரும் என்று கூட சிலர் நினைக்கிறார்கள் அல்லவா?
தோழர் திருமுருகன் காந்தி: எந்த audience-இடம் பேசுகிறீர்கள்? யார் கேட்கிறார்களோ அவர்களுக்கான வார்த்தைகளில், அது முழுமையான அர்த்தத்தில் புரியுமா என்கிற குழப்பம் இருக்கிற இடத்தில், ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வார்த்தைகளை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு “மட்டைப்பந்து” என்று சொல்வதை விட “Cricket” என்று சொல்கிறோம். “score” என்று சொல்கிறோம். ஏனென்றால் அதிகமாக புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள் அவை. அதனால் அது அப்படி வருகிறது. அந்த இடத்தில் அதை பயன்படுத்துகிறோம்.
ஆனால் அதற்கும் அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் பொழுது பேசுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. பள்ளிக்கூட தமிழ் தேர்வில் இரண்டு மொழியில் எழுதிவிடுவீர்களா? இல்லை. ஆங்கிலத்தில் இரண்டு மொழியில் எழுதிவிட முடியுமா? பள்ளி மாணவனுக்கே நாம் அதை ஒரு பாடமாக வைக்கிறோம் அல்லவா? ஒன்றாம் வகுப்பு படிக்கும் பையனுக்கோ, ஐந்தாம் வகுப்பு படிக்கும் பையனுக்கோ ஒரு மொழியில்தான் எழுத வேண்டும் என்று சொல்லி பாடத்தில் வைக்கிறோம். அதில் “இரண்டு மொழியிலும் இப்படித்தான் எழுதுவேன்” என்று சொன்னால் ஆசிரியர் மதிப்பெண் போடுவாரா? தோல்வி அடைந்தவர் என்று ஆக்கிவிடுவார்.
நெறியாளர்: ஆனால் அவர் மொழி குறித்து பேசியிருந்தால் கூட இங்கே பிரச்சனை இல்லை. “I am a born Christian, நான் அதுதான்” என்று கூறினாரே?

தோழர் திருமுருகன் காந்தி: அவர் பேசுவது மட்டுமல்ல, முதலமைச்சர் இப்படிதான் பேசுகிறார். அவர் இயல்பாக பேசவில்லை. நான் அதையும் சொல்கிறேன். முதலமைச்சர் வேண்டுமென்றே ஆங்கிலத்தை கலந்துதான் பேசுகிறார். அது இன்னும் அதிகமாக மக்களிடம் போய் சேரும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
100 ஆண்டுகளுக்கு முன்பு தனித்தமிழ் பயன்பாடு கிடையாது. 100 ஆண்டுகளுக்கு முன்பு வடமொழி சொற்கள்தான் அதிகமாக இருந்தன. எழுத்து நடையிலும் பேச்சு நடையிலும் வடமொழி சொல் அதிகமாக இருந்தது. அதை நாம் பேசி பேசித்தான் இன்றைக்கு தனித்தமிழில் கொண்டு வந்திருக்கிறோம்.100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பத்திரிகையை எடுத்துப் பாருங்கள். தினத்தந்தி வந்ததற்கு பிறகு இருக்கக்கூடிய எழுத்துகளைப் பாருங்கள். ‘விடுதலை’யில் எப்படி எழுத்துகள் இருந்தன? ஆங்கிலம் கலக்காமல், வடமொழி கலக்காமல் எழுதுவதை தந்தை பெரியார் பயன்படுத்தினார். அறிஞர் அண்ணா பயன்படுத்தினார். தினத்தந்தி ஆசிரியர் ஆதித்தனார் பயன்படுத்தினார். தனித்தமிழ் இயக்கம் என்று நமக்கு பெரிய இயக்க பாரம்பரியம் இருக்கிறது. தூய மொழியில் பேசுங்கள் என்று சொல்வதற்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. அது இன்றைக்கும் இருக்கிறது. பெருஞ்சித்திரனாரை இன்றைக்கும் நாம் நினைவு கூர்ந்து பேசுகிறோம். பெருஞ்சித்திரனார் வழியில் வந்தவர்கள் இன்றைக்கும் தூய மொழியில்தான் பேசுவார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? வார்த்தையை கற்றுக்கொள்ள போகிறீர்கள். அவ்வளவுதான். 10 முறை பேசினால் வந்துவிடும்.
“சந்தோஷம்” என்று சொல்லும் இடத்தில் “மகிழ்ச்சி” என்ற வார்த்தை வந்துவிட்டது. ஆங்கிலம் பயன்படுத்தி வந்த இடங்களில் தமிழில் சொல்ல பழகி விட்டோம் “enough” என்பதற்கு பதில் “போதும்”, “Congratulations” என்பதற்கு பதில் “வாழ்த்துகள்” என்று சொல்கிறோம். அதில் ஒரு கம்பீரம் தெரிகிறது. “Thanks” என்பதற்கு “நன்றி” என்று சொல்கிறோம். நாம் இயல்பாக ஆங்கிலம் பயன்படுத்திய வார்தைகளை தமிழாக்கி இருக்கிறோம். இது நடந்திருக்கிறது அல்லவா! திரைப்படத்தில் அதை பயன்படுத்தியவுடன், அது எல்லோரும் பயன்படுத்தும் நிலைக்கு வந்தது.
நெறியாளர்: “நமஸ்காரம்” என்பதிலிருந்து “வணக்கம்” வந்ததே ஒரு பெரிய மாற்றம்.
தோழர் திருமுருகன் காந்தி: இதெல்லாம் மாறி வந்திருக்கிறதல்லவா? இதை நம்மால் மாற்றி அமைக்க முடியும் என்கிற இடத்தில் முயற்சி செய்துகொண்டு இருக்கும்போது, “இல்லை இல்லை, வீம்புக்கு இவர்கள்(தவெக) ஆங்கிலம் கலந்து பேசுவது வேண்டுமென்றே பேசுகிறார்கள். இவர்களுக்கு பேச தெரியாது என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. இவர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், “நான் புதிய தலைமுறைகளோடு பேசுகிறேன்” என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலம் வேண்டும் என்று இளைய தலைமுறை வந்து தவெகவிடம் சொன்னதா? அப்படி எல்லாம் இல்லை. அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு, திராவிட பேச்சு நடையிலிருந்து மாறி காட்டுகிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சியினரை பார்த்தீர்கள் என்றால், தமிழ் பேசும்போது நிறைய வடமொழி வார்த்தைகளை சேர்த்துப் பேசுவார்கள். வடமொழி உச்சரிப்பிலேயே பேசுவார்கள். நீங்கள் “காஷ்மீர்” என்று சாதாரணமாக பேசினால், அவன் “கஷ்மீர்” என்பதை, அந்த “ஷ்” வை அதிகமாக அழுத்தி பேசுவான். அடிவயிற்றிலிருந்து வாந்தி எடுப்பது போல அந்த வார்தையை பேசுவான். எச்.ராஜா பேசும்போது பாருங்கள். ராஜா வேண்டுமென்றே ஆங்கிலத்தை கலந்து, திடீரென்று இரண்டு வார்த்தை பேசுவார். “What nonsense is this?” என்பார். என்ன்மோ அவர் ஆக்ஸ்போர்டில் படித்தவர் மாதிரி. அதே “nonsense” தான் தவெகவில் நடந்துகொண்டிருக்கிறது.
தவெக வருடா வருடம் தமிழ்நாட்டிற்கு பட்ஜெட் போட்டு பழகின ஆட்களா? இல்லையே. இன்றைக்குதானே போடுகிறீர்கள். கற்றுக்கொண்டீர்கள் அல்லவா? கற்க முடிகிறதல்லவா? அப்போது மொழியை கற்றுக்கொள்வதில் என்ன பெரிய சிரமம் வந்துவிட்டது? அதில் எதற்கு அவ்வளவு கோபத்தை எல்லாம் காட்டுகிறார். கோபத்தில் மைக்கை திருப்புகிறார். “என்ன கிண்டல் பண்றீங்களா?” என கேட்டால், ஆமாம் கிண்டல்தான் பண்ணுவோம். சட்ட சபையில் பண்ணாமல் இருக்கலாம். நான் சொல்கிறேன், கிண்டல் பண்ணுவோம். ராஜேந்திரன் எம்எல்ஏ குறையாக கூட சொல்லவில்லை. அவர் எடுத்துரைக்கிறார். “எடுத்துரைத்தல்” என்று ஒன்று இருக்கிறது. யாராவது சுட்டிக்காட்ட வேண்டும் அல்லவா? சுட்டிக்காட்டுகிறார்கள். அதற்கு “என்ன நக்கல் பண்றீங்களா?” என்கிறார். அவர் பண்ணவில்லை. நாங்கள் பண்ணுகிறோம்.
“உனக்கு ஒரு மொழியில் பேச தெரியாதா?” என்று கேட்க மாட்டார்களா? “உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லையா?” என்று கேட்பேன் நான். ஆங்கிலத்தில் தமிழை கலந்து பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு முழுக்க ஆங்கிலம் தெரியவில்லை, தமிழ் தெரியவில்லை என்பதுதான் அர்த்தம். “எனக்கு வரவில்லை” என்று சொல்லிவிட்டு பேசுகிறீர்கள். “ஆங்கிலம் தெரியவில்லை” என்று சொல்லிவிடலாம் அல்லவா? இதை கூட முயற்சி பண்ணுவதில் என்ன சங்கடம் வந்துவிட போகிறது? “ஆமா, நான் முயற்சி பண்ணுகிறேன்” என்று சொல்லிவிட்டு போய்விடலாம் அல்லவா?
இப்போது முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர் பேசியபோது கிண்டல் பண்ணியிருக்கிறோம். அவர் கோவப்பட்டாரா? இல்லையே. அவர் ஏதோ முயற்சி பண்ணிக்கொண்டிருந்தார். ஆனால் அது கிண்டலுக்கு உள்ளான ஒரு விடயமாகத்தான் இருந்தது. கற்றுக்கொள்ளுங்கள்” என்றுதான் சொல்கிறோம். நாம் பேசுவதில் தவறு ஒன்றும் கிடையாது.
நெறியாளர்: பிடிஆர்- உடைய நிறைய வீடியோக்கள் வைரல் ஆகியிருக்கின்றன.
தோழர் திருமுருகன் காந்தி: ஆமாம், நம் தமிழ் மொழியை சரியாக உச்சரிக்கவில்லை என்றால், யாராக இருந்தாலும் நாம் சொல்வோம். ஏன் மோடியை சொல்லவில்லையா? அவர் தமிழில் “உருட்றேன்” என்று சொல்லி உருட்டியதை பார்த்துவிட்டு கிண்டல் பண்ணவில்லையா? நமக்கு மொழிதான் முதன்மை. மற்றவர்கள் எல்லாம் மொழிக்கு முன்னாடி ஒன்றுமே கிடையாது.
நெறியாளர்: ஆனால் மொழியோடு மதத்தை தொடர்புப்படுத்துவது இருக்கிறதல்லவா? அதை நாம் எப்படி எடுதுக்கொள்வது? “எவ்வளவு தமிழ் படித்தாலும் பாதி பேருக்கு இது புரியாது. நான் பைபிள் படித்திருக்கேன்” என்கிறார்.

தோழர் திருமுருகன் காந்தி: பௌத்தமும் சமணமும் தமிழில் இருக்கிறது. சைவமும் வைணவமும் தமிழில் இருக்கிறது. ஆசீவகம் தமிழில் இருக்கிறது. இஸ்லாம் தமிழில் இருக்கிறது. இதெல்லாம் அன்பை சொல்லிக் கொடுத்திருக்கிறது அல்லவா? இன்றைக்கு திருவள்ளுவர் எதை பேசியிருக்கிறார்? அன்பைத்தானே பேசியிருக்கிறார். சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும் சொல்லி நாம் அன்பை பேசவில்லையா? அவர் (அமைச்சர்) தமிழ் படித்திருக்கிறாரா முதலில்? அவருடைய அன்பு என்ன என்பதை நாம் பார்திருக்கிறோம். (எப்படி ஒரு கட்டையை வைத்து அன்பு பேச முடியும் என்பதையும் காட்டியிருக்கிறார்) அதனால் இதை எதற்கு மதத்தோடு சேர்க்க வேண்டும்?
நெறியாளர்: பாதிக்கப்பட்டவர் போலக் காட்டிக்கொள்கிறாரா? (victim card play)
தோழர் திருமுருகன் காந்தி: அது இல்லை. இது பெருமிதத்தில் பேசுவது. “நான் born Christian” என்று ஒரு பெருமையில் பேசுகிறார். நாம் பிறப்பால் தமிழர்கள். இன அடையாளம்தான் நமக்கு. மத அடையாளங்கள் மாறும். நாளைக்கு வேறு ஒரு சமயத்தின் மேல் உங்கள் நம்பிக்கை சென்றது (பௌத்தத்திற்கு போகிறீர்கள்) என்றால், உங்கள் அடையாளம் மாறுகிறது. ஆனால் தமிழனாக பிறந்த அடையாளத்தை மாற்றிக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் பிறந்திருப்பது, தமிழனாக பிறந்திருப்பதுதான் உங்கள் அடையாளமாக இருக்கிறது. அதுவும் கூட மாறிய காலகட்டங்களில் இருக்கிறது. அதற்கும் மாறிய சமூகங்கள் எல்லாமே இருக்கின்றன.
நாம் மனிதனாக பிறந்திருக்கிறோம். நான் அமைச்சருக்கு பதில் அறிக்கையாக ஒரு செய்தி ஒன்று போட்டேன். “I am born Tamilian and grown as a Communist” என்று. என்ன காரணம் எனில், தமிழ்நாட்டுக்குள் என்ன அரசியல் பேசுகிறீர்கள்? தமிழ் மொழியை பற்றி பேசும்போது “தமிழனாக பிறந்தேன்” என்று சொல்வதில் தவறு கிடையாது. அது மரியாதைக்குரிய சொல். அதற்கு ஒரு அரசியல் அர்த்தம் இருக்கிறது. நான் ஒரு கம்யூனிஸ்டாக வளர்ந்தேன். என்னுடைய அரசியல் எதை பிடித்து நான் மேலே வளர்ந்தேன் என்பது. அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறேன்.

மார்க்சியம் என்பது உலக அளவிலான மனிதநேயத்திற்கான சொல்லாடல். அனைவரையும் தோழனாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல் இது. அதை நான் ஏற்றிருக்கிறேன். “தமிழனாக பிறந்து, சர்வதேச அரசியலுக்கான, சர்வதேச அளவில் மனிதநேயத்திற்கான மனிதனாக நான் மாறியிருக்கிறேன்” என்பதைத்தான் நான் அதில் சொல்கிறேன்.
“Born Christian” ஆக இருக்கிறவர்கள் எல்லாம் தமிழ் பேசுவது இல்லையா? அல்லது தமிழ் தெரியாதா அவர்களுக்கு? நீங்கள் என்ன ஒரு ஆங்கிலேயனாக பிறந்திருக்கிறீர்களா? ஒட்டுமொத்த மத நம்பிக்கை கொண்ட, கிறிஸ்தவ மத நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாருக்கும் பிரச்சனை ஆக்கி விடும். இது சங்கித்தனமானது.
“Born Hindu” என்று பேசுவதற்கும் “Born Christian” என்று பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இரண்டும் சங்கித்தனம். சங்கித்தனம் என்றால் மத அடிப்படைவாதம்தான். மதத்தையும் முன்னிறுத்தி, மதத்தினுடைய அனைத்து பிற்போக்குதனத்தையும் முன்னிறுத்தி, அதை பெருமையாக கொண்டாடுவதனுடைய வெளிப்பாடுதான். அடிப்படையில் ஒரு மதவெறி மனப்பான்மை கொண்டவர்கள் எப்படி பேசுகிறார்களோ, அதற்கு ஒப்பீடாகத்தான் நான் இதை பார்க்க முடியும்.
எப்படி நிதிநிலை அறிக்கையோடு ஜெபமாலையை தூக்கிக்கொண்டு வருகிறீர்கள்? எல்லோரும்தானே வரி கட்டியிருக்கிறான். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதை வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள்.
சட்டசபைக்குள் நுழைகிறீர்கள் என்றால், அனைத்து சமய நம்பிக்கை கொண்டவர்கள், சமய நம்பிக்கை அற்றவர்கள் அனைவரும் சேர்ந்து வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அங்கே இருக்கிறார்கள். ஏன் நீங்கள் உங்கள் தொகுதியில் போய் “ஜெபமாலை வைத்திருப்பவர்கள் மட்டும்தான் ஓட்டு போட வேண்டும்” என்று கேட்டீர்களா? இல்லையே. அங்கே எல்லோரும் ஓட்டு போடத்தான் கேட்டீர்கள். அப்புறம் ஜெபமாலையை தூக்கிக்கொண்டு வருகிறீர்கள். ஜெபமாலையை வைத்து கும்பிட்டால் என்ன? பைபிளை வைத்து கும்பிட்டால் என்ன? கீதையை வைத்து கும்பிட்டால் என்ன? எதுவாக இருந்தாலும் உங்கள் வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள். சட்ட சபையில் என்ன வேலை?

நெறியாளர்: குறிப்பாக ஒரு பக்கம் மேரிமாதா சிலையும் கொடுக்கிறார்கள். பெரியாருடைய புத்தகத்தையும் இந்து நலத்துறை அமைச்சர் ரமேஷ் முதலமைச்சரிடம் கொடுக்கிறார். அப்போது ஒரு புதுவிதமான அரசியலை எடுக்கிறார்களோ?
தோழர் திருமுருகன் காந்தி: இல்லைங்க, இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், “மதத்தை அரசியலோடு இணைக்கலாம், அதில் எந்த தவறும் கிடையாது” என்பதை உடனே தமிழ்நாட்டிற்கு கற்றுத் தர விரும்புகிறார்கள். இது சங்கியுடைய அரசியல்.
ஏன் பாரதிய ஜனதா கட்சியை நிராகரிக்கிறோம் என்றால், அது மதத்தை மையமாக வைத்து அரசியல் பேசுகின்றது. “இந்துத்துவ அரசியல் இங்கே எடுபடவில்லை” என்று ஆனவுடன், “சரி, இந்து மதத்தை சொல்லி அரசியலோடு சேர்த்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேங்கிறீர்கள். நான் கிறிஸ்தவத்தை அரசியலோடு சேர்க்கிறேன்” என்பது போல் இருக்கிறது. “தவெக கட்சிக்காரர்கள் யாராவது தேர்தலின்போது இது மாதிரி ஏதாவது பண்ணார்களா? அப்போது அவர் “ஜோசப் விஜய்” என்று பேசினாரா? என்றைக்காவது சினிமா படத்தில் இது போல் பேசினாரா? மத அடையாளத்தை திட்டமிட்டு அரசியலுக்குள்ளாக கலக்கின்ற வேலை என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு வழிவகுக்கக்கூடிய அரசியல். அதை கண்டிக்க வேண்டும். இதில் ஒதுங்கி கண்டும் காணாமல் போய்விட முடியாது.
ஒரு புது கட்சியாக வந்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு விடயத்தை நடத்தி காட்டட்டும் என்பதில் நாம் உடன்படுகிறோம். “பெரியாரை ஏற்றுக்கொண்டோம், அம்பேத்கரை ஏற்றுக்கொண்டோம்” என்றார்கள். திமுகவும் அதே மாதிரி “ஒன்றே குலம், ஒருவனே தேவன்” எல்லாம் சொன்னார்கள். நாம் “ஒரு முற்போக்கு அரசியலை கொண்டு வாங்க” என்று பேசுகிறோம்.
இன்றைக்கு திடீரென்று ஒரு மதத்தை கொண்டு வந்து அரசியலில் கலக்கும் வேலையை (இந்துத்துவ அரசியல்) வடநாட்டில் நடப்பதைப் போல அதே வேலையை இப்போது ” கிறிஸ்தவத்தை அரசியலோடு கலக்கிறேன்” என்றால், வேடிக்கை பார்த்துகொண்டு இருக்க முடியாது. அரசியல் நடவடிக்கை நடத்துங்கள். நல்லதாக இருந்தால் பாராட்டுகிறோம். அதை மக்களிடம் நாங்களே ஆதரித்து எடுத்துகொண்டு போகிறோம். உங்கள் சமய நம்பிக்கையை வீட்டோடு வைத்துக்கொள்ளுங்கள்.
நாத்திகனாக இருக்கக்கூடியவர்கள், இதற்கு முன் திமுகவில் இருந்தவர்கள் என்றைக்காவது தன் நாத்திக அரசியலை வெளிப்படையாக காட்டியிருக்கிறார்களா? ஜெபமாலையை தூக்கிக்கொண்டு வருவது போல, நாத்திகன் “எனக்கு இதில் நம்பிக்கை இல்லை” என்று சொல்லிவிட்டு சாமி சிலையை தூக்கி போட்டு உடைத்து விட்டு வரலாம் அல்லவா?
நெறியாளர்: ஆனால் கடந்த காலங்களில் இன்னொரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது…. “திமுக நாத்திகம் பேசுகிறது” என்று….
தோழர் திருமுருகன் காந்தி: திமுக நாத்திகம் பேசவில்லை. திமுகவுக்கும் தி.கவுக்கும் உள்ள வேறுபாடே அதுதான். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று கடவுள் நம்பிக்கையை அவர்கள் மறுப்பதில்லை. இப்போது திமுகவில் எத்தனை பேர் நாத்திகர்கள் இருக்கிறார்கள்?
நெறியாளர்: ஸ்டாலின் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று வேல் தூக்குகிறாரா? என்றெல்லாம் விமர்சனம் இருக்கிறது அல்லவா?
தோழர் திருமுருகன் காந்தி: ஸ்டாலின் அவர்கள் நாத்திகராக இருப்பது அவருடைய நம்பிக்கை. அரசாட்சியில் எங்கேயுமே “நாத்திகனாக இருக்கிறவனுக்கு சலுகை” என்று சொல்லி ஸ்டாலின் அறிவித்தாரா? ஏதாவது அறிவிப்பு திட்டம் வந்ததா? “மாணவர்கள் நாத்திகர்களாக மாறினால் உங்களுக்கு நான் இவ்வளவு தருவேன்” என்று சொன்னாரா? இல்லையெனில் அவர் (திமுக அமைச்சர்) பெரியார் புத்தகத்தை தூக்கிக்கொண்டு நிதிநிலை அறிக்கையோடு வந்தாரா? இல்லையே, “கடவுளை கற்பித்தவன் மூடன்” என்று சொல்லிவிட்டு ஒரு புத்தகத்தை தூக்கிக்கொண்டு நிதிநிலை அறிக்கையோடு வந்தால், பார்த்துக் கொண்டு சும்மா இருப்பீர்களா?
ஒரு நாத்திகனாக இருக்கிறவனுக்கு, “கடவுள் இல்லை” என்றால் எல்லா கடவுளும் இல்லைதான். அது இந்து கடவுள் இல்லை, இஸ்லாம் கடவுள் இல்லை, கிறிஸ்தவ கடவுள் இல்லை என்று தனித்தனியாக பிரித்து சொல்லவில்லை. “கடவுள் இல்லை” என்றால் அதோடு அது முடிந்து போகிறது. ஆக, அவர்களுடைய நம்பிக்கையை நாம் கொச்சைப்படுத்துவது இல்லை. நான் நாத்திகன். என் வீட்டில் நாத்திகர்கள் கிடையாது. என் அம்மா, என் தங்கை, என் மனைவி நாத்திகர்கள் கிடையாது. அதற்காக அவர்களுடைய நம்பிக்கையை நாம் உடைக்கிறோமா? நாத்திகன்தான் கோயிலை இடிக்காத ஒரே ஒருத்தன். மீதி எல்லா மத நம்பிக்கையாளனும் அடுத்தவர் வழிபாட்டு தளத்தை இடித்திருக்கிறான்.
இப்போது தவெக அரசு வேண்டுமென்று திட்டமிட்டு, பாரதிய ஜனதா கட்சியினுடைய அரசியலை கிறிஸ்தவத்தை வைத்து செய்கிறார்கள். கிறிஸ்தவத்தை இயல்பாக்குகிறார்கள். எதிர்க்காலத்தில் “அந்த அமைச்சர் ஜெபமாலையை தூக்கிக்கொண்டு போகவில்லையா? இப்போது நான் “சாய்பாபா படத்தை தூக்கிக்கொண்டு போகிறேன், நான் ஐயப்ப மாலையை தூக்கிக்கொண்டு போகிறேன்” என்று சொல்லி அடுத்தடுத்து வருவான்.
நெறியாளர்: “வேளாண் நிதிநிலை அறிக்கையை எடுத்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்கிறாரே அமைச்சர் (ஆர்.வினோத் அவர்கள்)?”

தோழர் திருமுருகன் காந்தி: அதைத்தான் சொல்கிறேன். திருப்பதி சாமி என்ன விவசாயியா? அவர் மலை மேலே உட்கார்ந்திருக்கிறார். அமைச்சருக்கு அது நம்பிக்கையாக இருந்தால் அவர் போகலாம், வரலாம். அதனை அரசு வேலையோடு இணைக்க கூடாது.
மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் நம்புகின்ற அரசியல் சாசனம்தான் இங்கே கடவுளாக இருக்க வேண்டும். முதன்மை பொருளாக இருக்க வேண்டியது எது? அரசியல் சாசனம்தானே.
உனக்கு சாமி பக்தி இருந்தால், அங்கே போய் உருளு, மொட்டையடி, காது குத்து…அது உன் தனிப்பட்ட பிரச்சனை. அரசை அதில் இழுக்க கூடாது. அது தவறு. இதே மாதிரி வேலையை திரும்ப செய்தால் கடுமையான எதிர்ப்பையும் போராட்டத்தையும் செய்தே ஆக வேண்டும். வேறு வழியே கிடையாது. இவர்களுடைய முட்டாள்தனத்திற்காக நாம் தமிழ்நாட்டினுடைய எதிர்காலத்தை நாசப்படுத்த முடியுமா? நாளைக்கு பாஜககாரன் இதை கலவரமாக்க எல்லாவற்றையும் செய்வான்.
நெறியாளர்: ஒருவேளை திமுக கிறிஸ்தவ அடையாளத்தை தூக்கியிருந்தால் (பாஜக) எச். ராஜா இன்றைக்கு அமைதியாக இருந்திருப்பாரா?
தோழர் திருமுருகன் காந்தி: அவர்கள் எந்த அடையாளத்தை தூக்கியிருந்தாலும் கத்தியிருப்பார்கள். பாஜக இதில் பேசவே இல்லை, அமைதியாக இருக்கிறது. எச். ராஜா வாயையே திறக்கவில்லை. எல்லாவற்றையும் அடக்கி அமைதியாக பாஜக உட்கார்ந்திருப்பது பாஜகவின் அரசியல். நாளைக்கு பாஜக இதையே பண்ணலாம் அல்லவா? அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு. இதை முன்னோட்டமாக பண்ண விடுவோம் என அமைதி காப்பார்கள். மரிய வில்சன் அமைச்சர் “born Christian” என்று சொல்லவில்லையா? இதன் தொடர்ச்சியாக “born இந்து”, “born வைஷ்ணவம்”, “born சைவம்”, அப்புறம் “born caste” எல்லாம் வரும் அல்லவா?
நிதிநிலை அறிக்கை போடுகிறீர்கள் என்றால், அதில் கவனம் செலுத்துங்கள். அதுதான் விடயம். அவருடைய உடல் மொழி எல்லாம் மிக பயங்கரமாக ஒரு சினிமா படத்தில் இருப்பது போல கொடுத்து கொண்டிருக்கிறார், கோபப்படுகிறார். ஒரு புது அரசாக வந்துள்ளீர்கள் என்பதால், “கடுமையான விமர்சனம் வைக்க கூடாது” என்கிற இடத்தில் இருந்தே எல்லோரும் பேசுகிறோம்.
இன்னும் ஒரு வருடம் கழித்து என்னவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டும் அல்லவா? போன வருடம் என்ன திமுக நிதிநிலை அறிக்கை போட்டுகொண்டிருந்தது. இந்த வருடம் தவெக போடுகிறீர்கள். அடுத்த வருடம் என்ன ஆக போகிறது என்று யாருக்கு தெரிய போகிறது. எல்லோரும் இதே இடத்தில் இருக்க போவதில்லையே. எடப்பாடியாரும் அங்கேதான் இருந்து அறிக்கை போட்டிருக்கிறார். ஸ்டாலின் அரசும் அங்கேதான் நின்றிருக்கிறது. இப்போது தவெக என மாறிக்கொண்டேதான் இருக்கிறது. எனவே கனிவு இருப்பது மிக முக்கியம். அப்படி இல்லாமல் இருந்தால், எல்லோருக்கும் ஒரு எதிர்ப்பு உணர்வை வளர்த்துவிடுகிறார்கள்.
நெறியாளர்: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. “கருக்கலைப்பை தடுக்க வேண்டும்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் அவர்கள் கலந்து உரையாற்றுகிறார். அதில் முக்கியமாக “இந்தியாவில் ஒரு கோடி 56 லட்சம் கருக்கலைப்புகள் ஒரு ஆண்டுக்கு நடைபெறுகின்றன. அதை நாம் தடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டது. இதில் என்ன முரண்பாடாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

தோழர் திருமுருகன் காந்தி: ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கிறிஸ்தவ அடிப்படைவாதிகள், மதவாதிகள் இந்த கருக்கலைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு வந்திருக்கிறார்கள். மத ரீதியாக இதை அணுகக்கூடியவர்கள் உடல் ரீதியாகவோ உரிமை ரீதியாகவோ பார்ப்பதில்லை. இப்போது கருவில் இருக்கக்கூடிய அந்த கரு எப்படிப்பட்டதாக வளருகிறது என்பதை பொறுத்து, அதன் வளர்ச்சி நிலையை பொறுத்து, கருவை கலைப்பது என்பதும் நடக்கிறது. “இதயம் அல்லது மூளை முழு வளர்ச்சி அடையவில்லை” – இதுபோல சில குறைபாடுகள் எல்லாம் இருக்கிறது என்றால் கருக்கலைப்பு நடக்கிறது. எதிர்காலத்தில் அந்த குழந்தையை வைத்து வளர்க்க முடியாது, பல சிக்கல்களோடு இருக்கும் அல்லது தாயினுடைய உயிருக்கு ஆபத்தானதாக மாறும் என்றுதான் கருக்கலைப்பு பெரும்பாலும் நடக்கிறது.
இவர்கள் (கருக்கலைப்பை எதிர்ப்பவர்கள்) என்ன சொல்கிறார்கள் என்றால், “எதுவாக இருந்தாலும் நீங்கள் குழந்தையை பெற்று வளருங்கள்” என்கிறார்கள். இப்போது நான் என்ன சொல்கிறேன் என்றால், “எதுவாக இருந்தாலும் குழந்தையை பெற்று வளர்க்க வேண்டும் என்றால், அந்த பொறுப்பை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்.” குழந்தையை வளர்த்து, படிக்க வைப்பதற்கும், அதற்கு வேலை வாங்கி கொடுப்பதற்கும், அது கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் பொறுப்பை எடுக்க, அரசு சட்டம் கொண்டு வரட்டுமே!
ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தை இருக்கிறது. மூன்றாவது குழந்தை வருகிறது என்றால் அது “வேண்டாம்” என்று நினைக்கிறார்கள். அதை வளர்க்க முடியாது. எல்லா செலவுகளும் அதிகமாக இருக்கிறது. அதனால் உடன்பாட்டோடு கருக்கலைப்பு செய்கிறார்கள். ஏனெனில் பொருளாதார சுமை இருக்கிறது.
இன்றைக்கு குழந்தை என்பதும் குடும்ப பொறுப்புகளில் ஒன்றாக இருக்கிறது. அதில் ஆணுக்கு பொறுப்பு குறைவு. பெண்ணுக்குதான் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. அந்த குழந்தை ஏதாவது ஒரு குறைபாடோடு வந்துவிட்டால், அந்த குழந்தையை வைத்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் அதற்காக செலவு செய்ய வேண்டிய ஒரு துயரம், நெருக்கடி இருக்கிறது. அதற்கு அரசு எந்த உதவியும் செய்வதில்லை.
ஒரு குழந்தையை சுமப்பது ஒரு பெண். அந்த பெண்தான் முடிவு பண்ண வேண்டும்- “அந்த குழந்தையை நான் வளர்ப்பதா/ “சுமப்பதா வேண்டாமா?” என்று முடிவு பண்ண வேண்டும். அது அந்த பெண்ணுடைய உரிமை. அதை குழந்தையோட உரிமையாக பேச முடியாது. அல்லது சமூகம் அதை திணிக்க முடியாது. மீறி கருக்கலைப்பைத் தடுத்தால் குழந்தை வளர்க்கும் பொறுப்பை அரசு எடுத்துக்கொள்கிறதா? இல்லை.
இன்றைக்கு மகப்பேறு என்பது விலை உயர்ந்த விடயம். மகப்பேறு காலத்தில் எத்தனை பேர் அரசு மருத்துவமனைக்கு போகிறார்கள்? எத்தனை பேர் தனியாருக்கு போகிறார்கள்? தனியாருக்கு போகக்கூடியவர்களுடைய செலவுகள் எவ்வளவு இருக்கிறது? இதையெல்லாம் பார்த்துதான் ஒரு குடும்பம் முடிவு செய்கிறது. ‘எதிர்பாராத கரு உருவாதல்’ என்கிற சமயம் வரும்போது குடும்பம் தயாராக இல்லாமல் இருக்கலாம். பெண் தயாராக இல்லாமல் இருக்கலாம். “பெண்ணின் உடல் சரியாக இல்லை” என்று வைத்துக்கொள்ளுங்கள். பலவீனமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது கரு தேவைஇல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள்.
இப்போது இன்னொன்று சொல்கிறேன். வயது குறைந்த சிறுமி/பெண்களை பாலியல் வன்புணர்வு உட்படுத்துகிறான். அதில் எத்தனை பேர் கர்ப்பம் ஆகியிருக்கிறார்கள்? அங்கே என்ன பண்ணுவீர்கள்? அதை வளர்த்து, “இயேசுநாதருக்கு கொடுக்கப் போகிறாயா”? இல்லை, பேராலயம் (church) எடுத்து வளர்க்க போகிறதா? இதே ஸ்டெல்லா மேரிஸ் காலேஜில் எத்தனை பேருக்கு இடம் தருவீர்கள்? எத்தனை குழந்தைக்கு படிப்பதற்கு இடம் தர முடியும் இந்த கல்லூரி நிர்வாகத்தால்?
கரு வைத்திருப்பதும் அழிப்பதும் பெண்ணின் உரிமை. ஆண்களா தூக்கி சுமக்கிறார்கள்? இவர்கள் மேல் என்ன மரியாதை இருக்கிறது நமக்கு? ஒரு பெண்ணுடைய உரிமைக்காக ஐரோப்பாவில் நடந்த போராட்டங்கள் எத்தனை தெரியுமா? ஐரோப்பாவின் இறக்குமதியை கொண்டு வந்து இங்கே வலதுசாரி, மதவெறியனைப் போலவே யோசிக்கிறார்கள். மத பற்றாளனைப் போலவே பார்க்கிறார்கள்.
மதம் என்று வந்துவிட்டாலே, மதத்தை அரசியலோடு கலக்கிறது என்று வந்துவிட்டாலே, மத சார்பான அரசியல் சட்டங்கள் கொண்டு வந்துவிட்டாலே, அது கழிசடையாகத்தான் இருக்கும்.
“கருக்கலைப்பு மூலம் குழந்தையை ஏன் சாகடிக்கிறாய்?” என்று கேட்கிறார்கள். இன்றைக்கு திருமணத்திற்கு அப்பாற்பட்ட ஒரு உறவு நிலையில் ஒரு குழந்தை உருவாகிறது என்றால், அந்த மாதிரி பெண்ணை நீ மரியாதையாக நடத்துவாயா? நடத்துகிறாயா? முதலில் அதற்கான உதவி செய்கிறார்களா? எத்தனை இழிசொற்கள்….அந்த பெண்ணுடைய வாழ்கையே முடிந்து போகிறது. பெண்ணுக்கான வேலைவாய்ப்புகள் எத்தனை இருக்கின்றன?
சும்மா “கரு கலைப்பு கூடாது, உயிரை காப்பாற்றுங்கள்” என்கிறார்கள்.”பாலஸ்தீனத்தில் கொல்வதை நிறுத்து” என்று இவர்கள் பேசுவார்களா? உங்கள் இரக்கம் ஏன் இதில் வரவில்லை? இரக்கத்தை பற்றி பேச வேண்டும் என்றால் வெளிப்படையாக நாம் பேச வேண்டியிருக்கிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீன் சண்டையில் இவர்களுடைய நிலைப்பாடு என்ன? பாலஸ்தீனுக்கு எதிரான நிலைப்பாடா? அல்லது இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடா? உங்கள் கருணையை அங்கே போய் வையுங்கள். வெளியே வந்து பேசுங்கள். போப் பேசினார். எத்தனை பேர் பேசினீர்கள்? எத்தனை ஆலய பாதிரியார்கள் “பாலஸ்தீனம் மீது திரும்ப தாக்குதல் நடத்தாதே” என்று ஊர்வலம் போனார்கள்? அங்கும் ஆலயத்தின் மீது குண்டு விழுந்ததே. உலகத்தில் மூன்றாவது பழைய church மீது குண்டு விழுந்தது. யார் குண்டு போட்டது? இஸ்ரேல். அப்போது கருணையுடைய மதவாதிகள் பேசினார்களா?
எல்லா இடத்திலும் மதவாதிகள்தான்….அது சங்கிகளாக இருந்தாலும் சரி, அது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருந்தாலும் சரி, பௌத்த அடிப்படைவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது இப்போது ஜைன மதத்தில் இருக்கக்கூடிய அடிப்படைவாதிகள் “சுத்த சைவம் (pure vegetarian)” பேசிக்கொண்டிருக்கிறார்களே, அந்த கும்பலாக இருந்தாலும் சரி…அவனுடைய கருத்தை அடுத்தவர் மேல் திணிக்கிற வேலையாக வைத்திருக்கிறான்.
மதத்தை அரசியலில் கலக்காதே. உன் நம்பிக்கை உன்னோடு வைத்துக்கொள். உனக்கு கருக்கலைப்பு வேண்டாம் என்று நினைக்கிறாயா? நீ பண்ணாதே. அது உன் விருப்பம். ஆனால் ஒரு பெண்ணுக்கு சட்டமாக திணிக்காதே. அந்த பெண் முடிவு பண்ணட்டும். அது அந்த பெண்ணுடைய உரிமை சம்பந்தப்பட்டது. ஒரு குழந்தை வேண்டுமா வேண்டாமா, வளர்க்க முடியுமா முடியாதா, அதனுடைய பொருளாதார சூழல், சமூக சூழல், வாழ்வியல் சூழல், அவருடைய இணையருடைய வாழ்கை முறை சம்பந்தப்பட்டது.
ஒருத்தன் போதை பொருளுக்கு அடிமைப்பட்டவனாக இருக்கிறான். அவனுக்காக ஒரு குழந்தையை பெற்றுக்கொண்டு எதற்கு வளர்க்க வேண்டும் என்று ஒரு பெண் நினைத்தால் அது சரிதானே? இதெல்லாம் அடிப்படையில் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய விஷமத்தனமான விடயங்கள். அதனால் இந்த கருக்கலைப்பு என்ற விடயத்தை வைத்துக்கொண்டு இவர்கள் பண்ணக்கூடிய அரசியலை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அது பெண் உரிமை சம்பந்தப்பட்டது.
நெறியாளர்: நிறைய விடயங்கள் பேசினீர்கள். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி.
தோழர் திருமுருகன் காந்தி: நன்றி!