
வருசநாடு மற்றும் மேகமலை பகுதி மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, செப்டம்பர் 02, 2026 அன்று, தேனி பங்களா மேட்டில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 98 கிராம மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும், அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் குறிப்பிடும் CEG குழுவின் அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும், Forest Rights Act, 2006 (FRA 2006) சட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு வன உரிமைப் பட்டா வழங்கக் கோரியும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரை:
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி எழுச்சியுடன் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கக்கூடிய, இந்த மேகமலை – வருசநாட்டுப் பகுதிவாழ் மக்களை, புலிகள் காப்பகம் அமைக்கிறோம் என்ற பெயரில், வெளியேற்றுகின்ற இந்த அரச அடக்குமுறைக்கு எதிரான இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கக்கூடிய, நாங்கள் பெரிதும் போற்றக்கூடிய மரியாதைக்குரிய ஐயா பி.வி. கதிரவன் அவர்களுக்கும், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கக்கூடிய, கொங்கு மண்டலத்தினுடைய செயல் வீரராக, தமிழ்நாடு தமிழ்த்தேசிய அரசியலின் ஒரு முன்னணி ஆற்றலாக இருக்கக்கூடிய மரியாதைக்குரிய தோழர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் தனியரசு அவர்களுக்கும், எங்களோடு போராட்டக் களங்களில் தொடர்ச்சியாகப் பங்கேற்று, டெல்டாவில் போராட்டங்களைக் கட்டி எழுப்பி, தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்காகப் போராடுகின்ற மரியாதைக்குரிய தோழர் தமிழக விடுதலைப் புலிகள் கட்சியினுடைய தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்களுக்கும்,இங்கே பெருந்திரளாக இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கக்கூடிய அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினுடைய பொறுப்பாளர்களுக்கும், ஏனைய தோழமை அமைப்புத் தலைமைகளுக்கும், நான் சார்ந்திருக்கக்கூடிய மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தத் திட்டமே, இந்தப் பகுதி மக்கள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் கொண்டுவரப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் இப்படிப்பட்ட தீர்ப்பைக் கொடுத்தது? என்பதற்கான எந்தவிதமான ஆய்வு அறிக்கையும் முன்வைக்கப்படவில்லை. அதுதான் இதன் முதல் பிரச்சனை. இது குறித்து மாவட்ட ஆட்சியாளர்& தமிழ்நாடு அரசும் இது குறித்து விளக்க வேண்டிய தேவை இருக்கிறது.

புலிகளைக் காப்பதைப் பற்றி அரசுகளை விட நமக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது, பங்கு இருக்கிறது. நாம் அதைச் செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இந்தப் பகுதியில் புலிகள் நடமாடிக் கொண்டிருக்கின்றன. புலிகளைக் காப்பாற்றுவதே மக்கள்தான். மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் புலிகளைக் காப்பாற்ற முடியாது.
புலிகள் காப்பகம் அமைப்பதற்கு ஒரு ஆய்வறிக்கை வேண்டும் அல்லவா? எந்த அடிப்படையில் இங்கு புலிகளுக்கான பாதுகாப்பு இடமாக இதை வைக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். அப்படியான எந்த விளக்கமும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. இந்தப் பகுதி மக்களுக்கான மறுவாழ்வு என்ன? என்பதை இந்த அரசாங்கமோ, உச்ச நீதிமன்றமோ தெளிவாகச் சொல்லவில்லை. இங்கு இருக்கக்கூடிய மக்களைக் குப்பைகளைப் போல வெளியே வீசுவதை நாம் என்றைக்கும் அனுமதிக்கக் கூடாது.
ஒன்றிய அரசிற்கும், மாநில அரசிற்கும், மாவட்ட ஆட்சியாளருக்கும் நாங்கள் சொல்லிக் கொள்வது என்னவென்றால், உங்களுக்குப் பெருங்காமநல்லூர் ஞாபகம் இருக்குமா? என்று தெரியாது. இந்த அரசுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், 120 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய அரசை அடித்து, இந்தப் பகுதியிலேயே ஓடவிட்டார்கள். அன்றைக்கு மாயக்காக்களாக நின்று, போராடுகின்ற மக்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுத்து போராட்டத்தை ஊக்குவித்த அந்த மாயக்காக்களாக இங்கு இத்தனை பெண்கள் திரண்டிருக்கிறார்கள். அந்த வீரத்திற்குச் சொந்தக்காரர்கள் இங்கே திரண்டிருக்கிறார்கள். இதைச் சோதிக்காதீர்கள்.
ஒரு இடத்தில் ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறீர்கள் என்றால், அந்தப் பகுதி மக்களோடு கலந்து பேச வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் எங்கோ உட்கார்ந்து கொண்டு உத்தரவு போடுவதற்கு என்ன ஆய்வறிக்கை இருக்கிறது? இந்தத் தேசத்தினுடைய குடிமக்களிடத்திலே உரையாடல் நடத்தாமல், அவர்களுக்கு என்ன வேண்டும் என்ற தேவையைப் பற்றி எந்தவிதமான ஆய்வையும் செய்யாமல், ஆட்சி நடத்துவதற்கு ஆட்சியாளன் தேவையில்லை, சர்வாதிகாரி போதும்.
ஒரு சர்வாதிகாரியைப் போல் உச்ச நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு அமைந்திருப்பதாக நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம். ஏனென்றால், இது எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் செய்யப்பட்ட வேலை இது.
நான் அரசாங்கத்திடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாடு அரசு ஒழுங்காக உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்லியிருக்க வேண்டும். புலிகள் காப்பகம் என்று தமிழ்நாட்டில் பல இடங்களில் உருவாக்கினீர்கள். தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மக்கள் ஒத்துழைப்பு இல்லாமலே அதிகரிக்கும்? மக்களின் ஒத்துழைப்பு இருக்கின்ற காரணத்தால்தான் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய புலிகள் காப்பகம் என்று இவர்கள்(அரசு) உருவாக்கிய இடத்தின் லட்சணத்தை நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கு மட்டுமல்ல, ஐந்து இடங்களில் புலிகள் காப்பகம் உருவாக்கினார்கள். சத்தியமங்கலம், முதுமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துறை என்று எல்லா இடத்திலும் உருவாக்கினார்கள். இதில் கடந்த 10 வருடத்தில் 70 புலிகள் இறந்திருக்கின்றன. இந்த 70 புலிகள் இறந்ததை மிகப்பெரிய பிரச்சனையாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். புலிகள் எப்படி இறந்தன என்று பார்த்தால், அரசு எங்கு புலி பாதுகாப்பு வட்டம் உருவாக்கினானோ, சரணாலயம் உருவாக்கினானோ, அதற்குள்ளேயே தான் 44 புலிகள் இறந்திருக்கின்றன. இது அரசாங்கத்தின் தரவு.

அரசே புலிகள் காப்பகத்திற்குள் 44 புலிகளைக் காப்பாற்ற முடியவில்லை. அந்த 44 புலிகள் வயதாகிச் சாகவில்லை, நோய் வந்து சாகவில்லை, புலிகள் வெளியே எங்கும் இறக்கவில்லை, அவற்றை அடித்துக் கொன்றிருக்கிறார்கள். அரசு கண்காணிப்பின் கீழ்தானே கொன்றார்கள்? அதை யார் கேட்பது? புலிகள் காப்பகம் உருவாக்குவாய், அதற்குள் வேட்டையாடுவதற்கு ஆள் வந்து வேட்டையாடுவான், புலியைக் கொல்வான், எடுத்துச் செல்வான். புலிகளின் எண்ணிக்கை குறையும். அதையெல்லாம் கேட்க மாட்டாய், சரி செய்ய மாட்டாய். ஆனால் மக்களை வெளியேற்றித்தான் புலிகள் காப்பகம் உருவாக்குவேன் என்றால், நீ செய்வது அயோக்கியத்தனம். இந்த மக்களை வெளியேற்றிவிட்டு, மறுபடியும் புலிகள் காப்பகம் கொண்டு வந்து புலிகளைக் காப்பாற்றுவாய் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
அந்தப் பட்டியல் என்ன சொல்லியிருக்கிறது என்றால்? மக்கள் இந்த வருசநாடு – மேகமலை மக்கள் புலி வளர்வதையும், புலி குட்டி போடுவதையும் தடுக்கிறார்கள் என்று சொல்லவில்லை. இந்த நிலத்துக்குச் சம்பந்தமில்லாத களைச் செடி இந்தக் காடுகளில் முளைத்து வளர்ந்திருக்கிறது என்று அரசாங்கம் சொல்கிறது. இந்த இடத்தில் ஏன் மான் இல்லை, புலிக்கு உணவாக இருக்கக்கூடிய பிற விலங்குகள் ஏன் வாழ முடியவில்லை, ஏன் ஓடிப் போகின்றன என்று. புலிக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால், புலி எதையெல்லாம் சாப்பிடுமோ அந்தப் பிராணிகளுக்கெல்லாம் இங்கு புல், செடி கொடி கிடையாது. இதையெல்லாம் நான் சொல்லவில்லை, அரசாங்கம் அறிக்கை போட்டிருக்கிறது.
ஆட்சியாளர் அவர்களே, தயவு செய்து அந்த அறிக்கையைப் படியுங்கள். இங்கே லெமன் கிராஸ் (lemon cross) என்கிறீர்கள். இந்த மலையில் புல் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள், உச்சி மலையில் புல்லாக இருக்கும். அந்தப் புல் இந்த நிலத்துக்குச் சம்பந்தமில்லாத புல். அந்தப் புல் இருந்தால் அதை மான் சாப்பிடாது, பிற பிராணிகள் சாப்பிடாது. அதனால் அந்தப் பிராணிகள் அங்கிருந்து ஓடிவிட்டன. மானுக்குச் சாப்பாடு இல்லை என்றால் புலிக்கு ஏது சாப்பாடு? புலிகளின் எண்ணிக்கை வளராமல் போனதற்கு அடிப்படைப் பிரச்சனை இதுதான். இதைத் தீர்க்காமல், இங்கிருக்கக்கூடிய மக்களை வெளியேற்றி, புலியைக் காப்பாற்றப் போகிறாயா? ஏன் பொய் சொல்கிறார்கள்?
நாங்களே தகவலை எடுத்து வருகிறோம். ஆட்சியாளர் வரட்டும், உச்ச நீதிமன்றத்தில் என்ன கமிசன் போட்டிருக்கிறீர்களோ அவர்கள் வரட்டும், உட்கார்ந்து பேசுவோம். எங்கு மக்கள் தொகையால் புலிகளின் எண்ணிக்கை குறைந்தது என்று பட்டியலைச் சொல்.
அதே சமயத்தில் நான் கேட்பேன், சத்தியமங்கலத்தில் இதே மாதிரி மக்களை எல்லாம் வெளியேற்றி அங்கு புலிகள் வனச் சரணாலயம் உருவாக்கினாயே, அதற்குப் பிறகு 44 புலிகள் இறந்துப் போயிருக்கின்றனவே, அதற்கு யார் பொறுப்பேற்பது? யாரைத் தண்டிப்பது? புலிகள் எண்ணிக்கை குறைந்து போனதற்கு உன்னைத்தான்(அரசுகள், நிர்வாக அதிகாரிகள்) தண்டிக்க வேண்டும்.
எங்கள் கொடியில் புலியைத் தூக்கி வந்திருக்கிறோம். எதற்கு? புலி என்பது தமிழனோடு காலம் காலமாக இருக்கக்கூடிய ஒரு விலங்கு, தமிழினுடைய அடையாளம். எல்லாப் புலியும் எங்கள் அடையாளம்தான். அது விடுதலைப் புலியாக இருந்தாலும் சரி, காட்டில் இருக்கும் புலியாக இருந்தாலும் சரி, எல்லாப் புலியும் எங்கள் அடையாளம்தான். எங்கள் புலிகள், எங்கள் மக்கள் எந்தப் புலிகளோடும், எந்த மக்களோடும் சண்டை போடுவதில்லை. புலிகள் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல, மக்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் அல்ல.

அப்போது நான் கேட்கும் கேள்வி, உன்னுடைய வனத்தைப் பாதுகாப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வனத்துறையைப் பாதுகாப்பதற்கு என்று வனப்பாதுகாப்பு அலுவலர்களை போட வேண்டும், அதையெல்லாம் வேலைக்கு எடுக்க மாட்டாய், அதற்கெல்லாம் ஆள் போட மாட்டாய், அப்புறம் எப்படி வனத்தைக் காப்பாற்றுவாய்?
நான் இன்னொரு கேள்வி கேட்கிறேன், எது வனம்? எது காடு என்ற எண்ணம் இருக்கிறதா? வரையறுத்தாயா? காடு என்று வரையறுத்து வேலி போட்டுடிருக்கிறாயா, அறிவிப்பு பலகை வைத்திருக்கிறாயா? அதைத் தாண்டி உள்ளே போகின்ற மக்களுக்கு எப்படிப் பட்டா கொடுத்தாய்? நான் கேள்வி கேட்க மாட்டேனா? அப்போது உன் வனத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? உன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ன செய்து கொண்டிருந்தது? அன்றைக்கே சொல்லியிருக்க வேண்டும் அல்லவா, இதுதான் வனத்துறைக்குச் சொந்தமான இடம், இது காடு, இது புலிகள் வாழும் இடம் என்று. சொல்லவில்லை.
உன் அரசாங்கம், உன் அதிகாரி செய்த தவறுக்கு மக்கள் பொறுப்பேற்க முடியாது. இது இயல்பாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் காட்டை விளைச்சல் நிலமாக மாற்றியிருக்கிறார்கள். அந்த விளைச்சல் நிலத்தில் வரி வாங்கியிருக்கிறாய், எல்லாப் பொருளுக்கும் வரி வாங்கியிருக்கிறாய். வரி கட்டாத விடயமே கிடையாது.
இப்படி இருக்கக்கூடிய நிலைமையில் இந்த மக்களை ஏன் வெளியேற்ற வேண்டும்? ஆய்வு செய், எது ஆக்கிரமிப்பு, எது பூர்வீகச் சொத்து என்று ஆய்வு செய். அதை ஏன் ஆய்வு செய்ய மாட்டேன் என்கிறாய்? எப்படி உச்ச நீதிமன்றத்திலிருந்து உத்தரவு போட்டால் நடைமுறைப்படுத்துவேன் என்று சொல்லி தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள முடியும்?
தமிழ்நாட்டினுடைய தலைமைச் செயலாளருக்கு நாங்கள் கேள்வி கேட்க விரும்புகிறோம், இந்தப் பகுதியில் சமூக தாக்கம் பற்றிய ஆய்வு (Social Impact Study) செய்தாயா? சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வு (Environmental Impact Study) செய்தாயா?
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியோ, வனப் பாதுகாப்பு பற்றியோ, மக்கள் பாதுகாப்பு பற்றியோ, மக்கள் வாழ்வாதாரம் பற்றியோ ஏதாவது ஆய்வறிக்கை தமிழ்நாடு அரசு நடத்தியதா? நடத்தினீர்களா? நாங்கள் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. சட்டசபையில் என்னென்னவோ பேசுகிறார்கள், பாட்டுப் பாடுகிறார்கள், எல்லாம் செய்கிறார்கள். மேக மலை பற்றி பேச வேண்டும், இதைப் பேசுவதற்குத்தான் சட்டசபை இருக்கிறது. எதற்கு வரி கொடுக்கிறோம்? இந்த மக்கள் பிரச்சனையைப் பற்றி இத்தனை நாள் பேசவில்லை.
கடந்த 15 நாட்களாக நடக்கும் சட்டசபையைப் பார்க்கிறீர்கள், ரீல்ஸ் ரீல்ஸாக வருகிறது. ஒரு ரீலில் கூட வருசநாடு பற்றிப் பேசவில்லை, மேகமலை பற்றிப் பேசவில்லை. அப்புறம் எதற்குச் சட்டசபை வைத்திருக்கிறாய்? எதற்கு வைத்திருக்கிறாய்? பாட்டுப் போடுவதற்கும், கலருக்குக் கலராக ரீல்ஸ் விடுவதற்குமா சட்டசபை நடக்கிறது? இங்கே ஏன் நடக்கிறது? இந்த மக்கள் பிரச்சனை பற்றிப் பேசுவதுதான் சட்டசபை இருக்கிறது.
அன்பானவர்களே, இப்போது ஆட்சியாளர் அலுவலகத்தை கண்டனம் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தியிருக்கிறோம். இதே நிலைமை போனால் நாளைக்குச் சட்டசபையை முற்றுகையிட வேண்டியிருக்கும். நீ (தவெக) ரீல்ஸ் போட்டுக் கொண்டே இருப்பாய், அங்கே உள்ளூரில் உன் சண்டையைத்தான் நடத்திக் கொண்டே இருப்பாய். உன் பிரச்சனைதான் உலகப் பிரச்சனை, உங்கள் கட்சிச் சண்டைதான் உலகக் கட்சிச் சண்டை, அதுதான் தமிழ்நாட்டு மக்களின் கட்சிச் சண்டை என்று எங்களை ஏமாற்ற முடியாது. உண்மையா இல்லையா? நம் பிரச்சனையைப் பேசுவதற்குத்தானே சட்டசபை இருக்கிறது? இல்லையென்றால் இழுத்து மூட வேண்டுமா இல்லையா? ஒரு பெரிய பூட்டுப் போட வேண்டுமா? திண்டுக்கல் பூட்டையே போட்டு விடலாம். அதைத்தான் செய்ய வேண்டும்.
மக்கள் பிரச்சனை ஏன் பேசவில்லை? எட்டாம் தேதி வரை வைத்திருக்கிறார்களா சட்டசபை? எட்டாம் தேதிக்குள் நீ இந்தப் பிரச்சனையைப் பேசி, இதை விவாதித்து, இதற்கான தீர்வை, மக்களுக்கான நல்ல தீர்ப்பைக் கொண்டு வருவதற்கான முயற்சி எடுப்போம் என்ற வாக்குறுதி தரவில்லை என்றால், சட்டமன்றத்தை நோக்கித்தான் நாங்கள் நடக்க வேண்டியிருக்கும். சட்டசபை பாகிஸ்தானில் இருக்கிறதா? சென்னையில் இருக்கிறது, ஏறினால் காலையில் இறங்கிவிடலாம். ஏற்கனவே சட்டசபைக்குள் சிங்கமாய், புலியாய் கர்ஜித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள், நம்மிடத்திலே இருக்கிறார்கள். அவர்கள் வழிகாட்டுவார்கள்.
எந்த நியாயமும் இல்லாமல், எது ஆக்கிரமிப்பு? எது ஆக்கிரமிப்பு இல்லை? எது மக்கள் வாழ்வது? எது காடு? புலி வாழ்வதற்கான எல்லை எது? புலிக்கான பாதுகாப்பு எது? புலியைக் காப்பாற்றுவதற்காக வனச் சரணாலயம் உருவாக்கினால், அதற்கு காவலாளி எத்தனை பேரைப் போட வேண்டும்? அலிவலர் எத்தனை பேர் போட வேண்டும்? ரேஞ்சர் எத்தனை பேர் போட வேண்டும்? எந்த வேலையுமே செய்யவில்லை இவர்கள். ஆக, இந்த அநியாயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
போராடினால்தான் தீர்வு என்றால் போராடுவோம். அது எந்த எல்லைக்கும் சென்று ஜனநாயக வழியில் எங்கள் போராட்டத்தை நடத்துவோம். முல்லைப் பெரியாறைக் காப்பாற்ற வேண்டும், பக்கத்து மாநிலத்தில் இருக்கக்கூடிய முல்லைப் பெரியாறைக் காப்பாற்ற வேண்டும். சொந்த நிலத்தைக் காப்பாற்ற வரமாட்டோமா? அன்றைக்கு மானத்திற்காகப் போராடினோம், இன்று நிலத்திற்காகப் போராடுகிறோம். இது நமக்கான போராட்டம் அல்ல, நம் சந்ததிகளுக்கான போராட்டம், நம் குழந்தைகளுக்கான போராட்டம். அவர்கள் எங்கே போய் வாழுவார்கள்?
ஏற்கனவே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு இப்படித்தான் மாஞ்சோலையிலிருந்து மக்களை வெளியேற்றினான். 2000 குடும்பங்கள், எந்த மறுவாழ்வையும் அந்த மக்களுக்குத் தரவில்லையே. அந்தக் கம்பெனிக்காரன் இருந்து ஒரு பைசா கூட ஒழுங்காக அந்த மக்களுக்குத் தர வேண்டிய நட்டஈடு கூட வாங்கித் தரவில்லை இந்த அரசு. வெளியே கொண்டு போய்க் குப்பை மாதிரி போட்டுவிடுவான்.
தமிழ்நாடு முழுவதும் நிலத்தைப் பிடுங்குவதே அரசாங்கத்திற்கு வேலையாக இருக்கிறது. ஆக, இந்த நிலத்தை விடக்கூடாது. போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்பு? ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்கு இப்படித்தான் போட்டுப் பூட்டினார்கள். அந்தப் பூட்டை உடைத்து ஜல்லிக்கட்டுக் காளை வெளியே வந்ததா இல்லையா? அதே மாதிரித்தான். மக்கள் திரண்டு நிற்பார்கள்.

மக்களுக்கான நிலம் பாதுகாக்கப்படும். இந்த இடத்தில் நாங்கள் புலியையும் பாதுகாப்போம், காட்டையும் பாதுகாப்போம், மக்களையும் பாதுகாப்போம், மண்ணையும் பாதுகாப்போம், வைகை ஆற்றையும் பாதுகாப்போம். எங்களுக்கு அரசாங்கம் தேவையில்லை. எங்களுக்கு எதற்கு அரசாங்கம்? நீ எதற்கு இருக்கிறாய்? நீ என்ன உதவி செய்திருக்கிறாய் எங்களுக்கு? இதுவரை என்ன உதவி உன்னால் நடந்திருக்கிறது எங்களுக்கு? நீ வந்து எங்களுக்கு உழைத்துப் போடுகிறாயா? இல்லை, வரி மட்டும்தான் வாங்குகிறாய். வேறு எந்த உதவியும் நீ செய்யவில்லை.
அவன் அறிக்கையில் போடுகிறான், பெரிய பெரிய சாலைகளை ஊருக்குள்ளே, காடுகளுக்குள்ளே போட்டதால் இதெல்லாம் அழிந்தது என்று. யார் போட்டது? அரசு தானே போட்டது. பணக்காரனுக்காகப் போட்டாய், பணக்காரன் ரிசார்ட்(Resort) கட்டுவதற்காகப் போட்டாய். அவனுக்குப் போட்டதற்கு, நீ செய்த தவறுக்கு நாங்கள் ஏன் பழி கொடுக்க வேண்டும்? எங்கள் நிலத்தை அதனால் நிச்சயமாகப் பழி கொடுக்கக்கூடாது.
அன்பானவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, மாயக்காக்களை நான் இன்றைக்கு மறுபடியும் பார்க்கின்றேன். அந்த வகையில் ஒரு பெரும் போராட்டத்தை நடத்திய பார்வர்டு பிளாக் கட்சி துணை இருக்கிறது. ஒரு பெரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். வெள்ளையனை எதிர்த்துப் போராடியவர்கள், கொள்ளையனை எதிர்த்துப் போராடாதா? சொல்லுங்கள், இந்த நிலக் கொள்ளையனை எதிர்த்துப் போராடுவதற்கு பார்வர்டு பிளாக் கட்சி இருக்கிறது. அவர்களோடு நாங்களும் துணை நிற்போம்.
கவலைப்படாதீர்கள், போராட்டத்தில் நாம் வெல்கிறோம், நம் நிலத்தை மீட்கிறோம், இவர்களை வெளியேற்றுகிறோம். வெளியேற்றப்பட வேண்டியது நாம் அல்ல, இந்த அரசும் அதிகாரிகளும்தான் என்பதை மறுபடியும் சொல்லி, போராட்டத்திலே பேசுவதற்கு வாய்ப்பளித்த அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.