
இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு கிடைக்கும் தீர்ப்பு பிற சமூக மக்களின் வழக்குகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதற்கு ‘சாஸ்திரா ஆக்கிரமிப்பு வழக்கு’ மற்றுமொரு சான்றாகி இருக்கிறது. பிற சமூக மக்களை குப்பைகளைப் போல அப்புறப்படுத்தும் அரசுத் துறைகள், அரசு நிலத்தையே ஆக்கிரமிப்பு செய்த பார்ப்பனர்களுக்கு வளைந்து கொடுப்பதும் தொடர்கதையாகி இருக்கின்றது.

தஞ்சாவூரில் 1984-ஆம் ஆண்டில் எஸ்.ராமச்சந்திர ஐயரால் ‘சண்முகா பொறியியல் கல்லூரி’ என்ற பெயரில் தொடங்கப்பட்டது சாஸ்திரா. பின்னாளில் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறிய இந்த கல்லூரி 232 ஏக்கர் (94 ஹெக்டேர்) நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1985இல் சாஸ்திரா மீது ஆக்கிரமிப்பு புகார்கள் எழுந்தன. மாநில அரசு சிறார் குற்றவாளிகளுக்கான சிறைச்சாலை ஒன்றை அமைப்பதற்காக சிறைத் துறைக்கு ஒதுக்கியிருந்த சுமார் 31.37 ஏக்கர் அரசு நிலத்தை சாஸ்திரா ஆக்கிரமித்ததாக வருவாய்த் துறை குற்றம் சாட்டியது. மேலும் அந்நிலத்தை காலி செய்யுமாறு அறிவிப்பும் அனுப்பியது. ஆனால் சாஸ்திரா நிறுவனம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்றது.
2017-ல், சென்னை உயர் நீதிமன்ற அமர்வு நான்கு வாரங்களுக்குள் வளாகத்தைக் காலி செய்யுமாறு பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. ‘தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் கீழ்’ சாஸ்திராவைக் காலி செய்யுமாறு மாநில அரசு கூறியும், அதைக் கேட்காமல் அரசு நிலத்தில் கட்டிடங்களைக் கட்டி விரிவாக்கம் செய்தது சாஸ்திரா.
2018 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றம் சாஸ்திராவை காலி செய்யுமாறு மீண்டும் அறிவிப்பு ஒன்றை அனுப்பியது. அப்போது ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களைத் தங்கள் பெயரில் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கூறியது சாஸ்திரா நிறுவனம். ஆனால் உயர் நீதிமன்றம் இதை நிராகரித்து, அந்த நிறுவனத்திற்கு நிலங்களை ஒதுக்கீடு செய்வதைத் தடுக்கும் அரசாணையை வெளியிட்டது.
வழக்கின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பிப்ரவரி 25, 2022 அன்று சாஸ்திராவை காலி செய்யுமாறு கூறியும் சாஸ்திரா காலி செய்யவில்லை. மீண்டும் வழக்கு தொடர்ந்த நிலையில், ஜனவரி 2026-ல், சென்னை உயர் நீதிமன்றம் சாஸ்திரா ஆக்கிரமித்த இடத்தை காலி செய்ய வேண்டுமென்ற உத்தரவை உறுதி செய்தது.
இந்த வழக்கில் தான் இப்போது உச்ச நீதிமன்றம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்திலிருந்து சாஸ்திராவை வெளியேற்றுவதற்குப் பதிலாக, அதற்கு மாற்று இடத்தை வழங்குவதைக் கருத்தில் கொள்ளுமாறு கூறி இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு வாதம் தற்போது பெரும் சர்சையைக் கிளப்பி இருக்கின்றது. ஏனெனில் அரசு நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்த ஒரு பார்ப்பன நிறுவனத்திற்கு ஆதரவாக இங்கு பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. (தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.)
செப்டம்பர் 21-ல் உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
சாஸ்த்ரா தரப்பு, அரசிடம் மூன்று மாற்று நிலங்களை முன்வைத்துள்ளதாக தெரிவித்தது. அதில் ஒரு நிலம் 86.8 ஏக்கர் நிலம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தமிழ்நாடு அரசு அந்த நிலங்கள் சிறைத்துறையின் தேவைகளுக்கு பொருத்தமானவை அல்ல என்று எதிர்த்தது. நிலத்தின் அமைவிடம், போக்குவரத்து, தொடர்ச்சியான பரப்பளவு உள்ளிட்ட காரணங்களால் அவற்றை ஏற்க முடியாது என்பதே அரசின் வாதம்.
அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு மாற்று வழியை முன்வைத்தார்.
அரசு தனது தேவைக்கேற்ற நிலத்தை அடையாளம் காணட்டும்; அந்த நிலத்தை சாஸ்த்ராவே வாங்கிக் கொடுக்கட்டும் என்பதுதான் அந்த யோசனை.
“ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை காலி செய்வதற்குப் பதிலாக, அதற்குப் பதில் வேறு நிலத்தை ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?” – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு தமிழ்நாடு அரசிடம் எழுப்பிய கேள்வி இது.
இந்தக் கேள்விதான் இப்போது ஒரு முக்கியமான விவாதத்தை உருவாக்கியுள்ளது.
ஏன் நீதிமன்றம் இந்த அணுகுமுறையை எடுத்தது?
நீதிமன்றத்தின் முக்கியமான கருத்து — இங்கு ஒரு கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது என்பதுதான்.
ரிசார்ட், வணிக வளாகம் அல்லது ஷாப்பிங் மால் இருந்திருந்தால் ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றியிருப்போம்; ஆனால் இங்கு மாணவர்கள் கல்வி கற்கும் பல்கலைக்கழகம் இயங்குகிறது என்பதால், நிறுவனத்தை பாதிக்காமல் தீர்வு காண முடியுமா என்று நீதிமன்றம் கூறி இருக்கின்றது.
தமிழ்நாடு அரசின் வாதம்:
ஒருவர் முதலில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து, அதில் கட்டிடங்களை அமைத்துவிட்டு, பின்னர் மாற்று நிலம் கேட்டால் அதை ஏற்றுக்கொள்வது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும், நாளை மற்ற ஆக்கிரமிப்பாளர்களும் இதே கோரிக்கையை முன்வைக்கலாம் என்பதுதான் கவலை என்று அரசு தெரிவித்தது.
மேலும், சாஸ்த்ரா ஏற்கனவே பல கட்ட சட்டப் போராட்டங்களில் தோல்வியடைந்துள்ளதாகவும், வழக்கு நிலுவையில் இருந்தபோதும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்ததாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு நீதிமன்றம், அரசின் உண்மையான நோக்கம் சாஸ்த்ராவை வெளியேற்றுவதா அல்லது திறந்தவெளிச் சிறை திட்டத்தை செயல்படுத்துவதா என்ற கேள்வியை எழுப்பியது.1985 முதல் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில், வேறு இடத்தில் அதை செயல்படுத்துவது குறித்து ஏன் பரிசீலிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கேட்டது.
இங்குதான் அனகாபுத்தூர், மாஞ்சோலை, மேகமலை போன்ற பகுதிகளில் மக்களை வெளியேற்றியதைக் குறித்து கேள்வி வருகிறது. சாஸ்த்ராவின் கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு மாற்று நிலத்தைப் பற்றி சிந்திக்க முடிந்த நீதித்துறையால் ஏழை மக்களின் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அதே மனிதநேய அணுகுமுறையை கடைபிடிக்க முடியவில்லை.
குறிப்பாக 2025-ல் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்த அனகாபுத்தூர் வழக்கில், சம்பந்தப்பட்ட நிலம் வருவாய் பதிவுகளில் நீர்நிலை — ஓடை என வகைப்படுத்தப்பட்டிருந்தது, அங்கு வசித்தவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று மனுதாரர்கள் கூறினர்.
ஆனால் அரசு தரப்பு, அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறியது நினைவிருக்கலாம். அனகாபுத்தூர் மக்கள் ஆற்று கரைகளை ஆக்கிரமித்தார்கள் என்பதற்கான போதுமான ஆதாரம் இல்லாமலேயே “நீர்நிலை பகுதிகளில் நீண்டகாலமாக மக்கள் வசிக்கிறார்கள் என்பதை மட்டும் காரணமாகக் கொண்டு அதை சட்டப்பூர்வமாக்க முடியாது” என்று உத்திரவிட்டது. அங்கு 50 ஆண்டுகாலம் குடியிருந்த ஏழை மக்களின் வீடுகளை “..இராணுவத்தை வைத்து அகற்றிட உத்திரவிடுகிறேன்’..” என்று கடந்த ஆண்டு உத்திரவிட்டு, வீடுகளை இடிக்க வைத்தது.
1985ல் தொடங்கிய சாஸ்திரா மீதான வழக்கு கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாஸ்திரா போன்ற பெரு நிறுவன ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற பெரிய அளவில் முயற்சிக்கவில்லை. ஆனால் அனகாபுத்தூர் வழக்கில் விசாரணையை காலையில் தொடங்கி பிற்பகலில் இடிக்க உத்திரவிட்டு மாலையில் 500 வீடுகளை இடித்து முடித்தனர். ஆனால் இதே போன்று மேகமலையில் 98 கிராமங்களையும் ஒரு லட்சம் தமிழர்களையும் வெளியேற்ற அரசு இராணுவ பலத்தைப் பயன்படுத்தலாம் என்ற தீர்ப்பை வழங்கியதும் இதே உச்ச நீதிமன்றம் தான்.
வட இந்தியாவில் சிறுபான்மை மக்களை குறி வைத்த பாபர் மசூதி வழக்கிலும் இவ்வாறுதான் நடந்தது. சர்ச்சைக்குரிய ராமர் கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளுக்காக அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் மாற்று இடம் கொடுக்கலாம் என்று கூறியது உச்ச நீதிமன்றம்.

“சட்டம் அனைவருக்கும் ஒரே அளவுகோலில் செயல்படுகிறதா?” என்ற கேள்வியைத் தான் மேலுள்ள நிகழ்வுகள் எழுப்புகின்றன. இதைத்தான் மே பதினேழு இயக்கமும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் முக்கிய கேள்வியாக முன்வைக்கின்றனர்.
“ஒரு பெரிய தனியார் கல்வி நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு நீதிமன்றம் சிந்திக்க முடிகிறது என்றால், ஏழை மக்கள் வசிக்கும் வீடுகள் அகற்றப்படும்போது அங்குள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்று ஏன் அவர்களுக்குத் தோன்றவில்லை?” என்பதே நம் கேள்வி.
அரசு நிலம் என்பது மக்களின் சொத்து. அதை யார் பயன்படுத்தினாலும், சட்டம் ஒரே மாதிரியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு மாற்று வழிகளைத் தேடுவது நீதியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
நீதியின் அளவுகோல் — யார் அதிகாரம் கொண்டவர் என்பதன் அடிப்படையில் மாறாமல், அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதுதான் முறை. ஆனால் இங்கு சாஸ்திராவிற்கும் அனகாபுத்தூருக்கும் வேறு வேறு அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காவிரி, நீட் தேர்வு, மீனவர் படுகொலைகள், இட ஒதுக்கீடு போன்ற வழக்குகளில் நமக்கு கிடைக்காத நீதி சாஸ்த்ரா போன்ற பார்ப்பன நிறுவனங்களுக்கு கிடைக்கிறது. இந்த நாட்டில் ஏழைகளுக்கான அநீதி தொடர்ந்து கொண்டிருப்பதை மீண்டுமொரு முறை நினைவுபடுத்தி உள்ளது ‘சாஸ்திரா ஆக்கிரமிப்பு வழக்கு.’