
கடந்த செப்டம்பர் 29, 2026 அன்று வருசநாடு மேகமலை மக்களை பாதுகாக்க கோரி கடமலைகுண்டு நகரில் நடந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் மே17 இயக்கம் கலந்து கொண்டது. அப்போது மக்களிடையே உரையாற்றிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் உரை:
வருசநாடு மேகமலையைப் பாதுகாப்பதற்காகத் தமிழ்நாடே திரும்பிப் பார்க்கின்ற வகையில் காத்திருப்புப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகச் சென்னையிலிருந்தும், கோவை, திருச்சி போன்ற நகரங்களிலிருந்தும் மே 17 இயக்கத் தோழர்கள் வந்திருக்கின்றோம். உங்கள் போராட்டம் தேனி மாவட்டத்தோடு மட்டும் நிற்கவில்லை. இன்றைக்குத் தமிழ்நாடே கவனித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு பெரிய போராட்டமாக மாறியிருக்கிறது. இப்போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிலே வரலாற்றை படைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டால் அதனை நடைமுறைப்படுத்தி விடுவோம் என்று ஏளனமாக கூறிய அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தியிருக்கிறீர்கள். “இந்த அதிகாரி சொன்னார் என்ற அநியாயமான செயல்களுக்கு உடன்பட மாட்டோம்” என்று வருசநாட்டு மக்கள், மேகமலை மக்கள் மறுத்து நிற்கிறீர்கள். போராட்டக் களத்தில் இருக்கக்கூடிய உங்களைச் சந்திப்பதிலே எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி. அதுவும் பெருந்திரளாகப் பெண்கள் வந்திருக்கிறார்கள். ஆண்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. பெண்கள் பெருந்திரளாக வந்தால் அந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். இந்த உண்மையைப் பல போராட்டங்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம்.
கடந்த பதினேழு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் இதுபோல நிலத்தைப் பாதுகாப்பதற்காக, வீட்டைப் பாதுகாப்பதற்காக, தங்களது மண்ணைப் பாதுகாப்பதற்காக நடந்த பல போராட்டங்களில் நேரடியாக நான் (திரு) பங்கு பெற்றிருக்கின்றேன். எந்தப் போராட்டத்திலெல்லாம் பெண்கள் பெருமளவிலே வந்து குவிகிறார்களோ, போராடுகிறார்களோ அந்தப் போராட்டமெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறது. காரணம், பெண்கள் இல்லாமல் இந்த அரசாங்கம் அசைய முடியாது. பெண்களை அசைத்துவிட்டு அரசாங்கம் வாழ முடியாது. இதுதான் உண்மை.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது, ஆட்சியர் சொல்லியிருக்கிறார், அமைச்சர் சொல்லியிருக்கிறார் என்று அஞ்சாதீர்கள்.
இந்த ஊர் உச்சநீதிமன்றம் வருவதற்கு முன்பே இருந்த ஊர். இந்த ஊர் இந்த ஆட்சியர் வருவதற்கு முன்பே பிறந்த ஊர். இந்த ஊரில் நமக்கான உரிமையைத் தடுப்பதற்கு எந்த அதிகாரிக்கும் அதிகாரம் கிடையாது. இந்த அதிகாரிகளெல்லாம் வருவதற்கு முன்பே, இந்த உச்சநீதிமன்றம் கட்டப்படுவதற்கு முன்பே, அந்த உச்சநீதிமன்றத்திற்குச் செங்கல் தூக்குவதற்கு முன்பே நாம் இந்த ஊரை வளப்படுத்தியிருக்கிறோம், பெரிதாக்கியிருக்கிறோம்.
திடீரென்று இன்றைக்கு முளைத்தவர்களெல்லாம் நமக்கு உத்தரவிட்டு வெளியேறச் சொல்வதற்கு அனுமதிக்க முடியாது. மிகச் சரியான முறையில் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். ஒரு காத்திருப்புப் போராட்டம்தான் அரசாங்கத்திற்கு அச்சத்தைக் கொடுக்கும். அரசாங்கத்தைப் பதில் சொல்ல வைக்கும். இன்றைக்குத் தமிழ்நாடு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும். ஆட்சியர் பதில் சொல்ல வேண்டும். வனத்துறை சார்ந்தவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்கிற நெருக்கடியைப் போராட்டத்தின் வழியாக உருவாக்கியிருக்கிறீர்கள்.
நமக்குப் பொதுவாகத் தோன்றும், என்ன காலையில் வரச் சொல்கிறார்கள், பந்தலில் உட்காரச் சொல்கிறார்கள், வருகின்ற தலைவர்கள் எல்லாம் பேசிவிட்டுப் போகிறார்கள், கேட்டுவிட்டு மாலையில் வீட்டிற்குப் போகிறோமே, இதனால் நமது ஊரைக் காப்பாற்றிவிட முடியுமா? என்கிற ஐயம் வரலாம். அதனைக் கண்டு ஐயப்படாதீர்கள். நீங்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து என்றைக்குத் தெருவிலே, வீதியிலே மக்களுக்காக, இந்த மண்ணுக்காக அமர்கிறீர்களோ அன்றைக்கு அரசாங்கம் உங்களைக் கண்டு அஞ்சும். நாம் எப்போதும் போல வீட்டிற்குப் போவோம், வேலைக்குப் போவோம், தொழிலைப் பார்த்துவிட்டு வருவோம் என்றால் அரசாங்கம் அஞ்சாது. எனக்குத் தொழில் முக்கியமில்லை, வீடு முக்கியமில்லை, என் மண்தான் முக்கியம் என்று மக்கள் வீதிக்கு வந்தால் அரசாங்கம் அஞ்சும்.

ஏனெனில் அரசாங்கத்திற்கு யார் தேவையென்றால் தினமும் சென்றோமா, வேலை பார்த்தோமா, சோறாக்கினோமா, கிரிக்கெட் போட்டியைப் பார்த்தோமா, தொலைக்காட்சித் தொடரைப் பார்த்தோமா என்று அமைதியாக இருக்கும் மக்கள்தான் பிடிக்கும். ஏனெனில் அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் எப்போது எனக்குத் தொலைக்காட்சி முக்கியமில்லை, சோறு முக்கியமில்லை, என் குழந்தை குடும்பமெல்லாம் முக்கியமில்லை, என் ஊர் முக்கியம், என் மண் முக்கியம் என்று மக்கள் வீதிக்கு வருகிறார்களோ, அன்றைக்கு அரசாங்கம் அஞ்சும்.
எப்படி சல்லிக்கட்டில் வென்றோம்? சல்லிக்கட்டுப் போராட்டத்திற்காக நான்கு ஆண்டுகளாகப் போராடியிருக்கிறோம். மே பதினேழு இயக்கமாக நாங்கள் போராடியிருக்கிறோம், கைதாகியிருக்கிறோம், வழக்கு வாங்கியிருக்கிறோம். 2017-இல் பெரிய போராட்டமாக வெடித்தது சல்லிக்கட்டுப் போராட்டம். நம் அண்ணன்மார்கள், அக்காமார்கள் சாதாரணமாக ஐந்து பேராக அமர்ந்த போராட்டம்தான் தமிழ்நாட்டில் ஐம்பது இலட்சம் பேர் வீதிக்கு வந்த பெரிய போராட்டமாக நடந்தது. உலக அளவில் மிகப்பெரிய போராட்டம் சல்லிக்கட்டுப் போராட்டம்.
சல்லிக்கட்டு மாட்டையே நான் பார்த்ததில்லை. ஆனால் அதற்காகப் போராட்டத்தில் அமர்ந்து வழக்கு வாங்கியிருக்கிறேன், சிறைக்குச் சென்றிருக்கிறேன். எதற்கு? தமிழன் மேல் கை வைத்தால் சும்மா இருக்க மாட்டோம். எங்கள் பண்பாட்டின் மீது நீ கை வைப்பாய் என்றால், அதை எதிர்த்து எந்த எல்லைக்கும் போக நாங்கள் தயார், என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க நாங்கள் தயார் என்கிற இடத்திற்குத் தமிழ்நாடு வந்தது. நீங்கள் அஞ்சாதீர்கள். உங்களோடு தமிழ்நாடு இருக்கிறது, தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ் மண்ணில் ஒரு பிடி மண்ணை எடுப்பதற்கு விடமாட்டோம்.
அரசு அதிகாரிகள் சொல்லக்கூடிய காரணமெல்லாம் நேர்மையான காரணம் கிடையாது. அவர்கள் புலியைக் காப்பாற்றுவதற்காக இங்கு வரவில்லை, காட்டைக் காப்பாற்றுவதற்காக வரவில்லை. நம்மிடமிருந்து இந்தக் காட்டைப் பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனக்காரனுக்குக் கொடுப்பதற்காக வந்திருக்கிறான். நான் ஆட்சியரையும் வனத்துறையையும் பார்த்துக் கேட்கிறேன், நீங்களெல்லாம் அவ்வளவு யோக்கியமான ஆட்களா? உங்கள் யோக்கியதை எங்களுக்குத் தெரியாதா? இதே இடத்தை காட்டை அழிக்கக்கூடிய எத்தனையோ நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துவிட்டு கைகட்டி வேடிக்கை பார்த்த கூட்டம்தானே நீங்களெல்லாம். இன்றைக்குச் சாமானிய மக்கள் வீட்டை இடித்துவிட்டுக் காட்டைக் காப்பாற்றப் போகிறாயா?
இந்த வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, நறியூத்து, மேகமலை மக்களையெல்லாம் வெளியேற்றிவிட்டுப் புலிகள் காப்பகம் கொண்டு வரப் போகிறான் என்று சொல்கிறான். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் காட்டில் புலிகள் காப்பகம் கொண்டு வந்தான். அன்றைக்கு இதே மாதிரி அங்கு இருக்கின்ற மக்களையெல்லாம் வெளியேற்றிப் புலிகள் காப்பகம் கொண்டு வந்தான். இது நடந்து பத்து, பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. பதினைந்து வருடங்கள் கழித்து இவன் உண்மையிலுமே புலியைக் காப்பாற்றினானா என்று நாம் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், மொத்தமாகக் கடந்த பத்து வருடத்தில் வயதான புலி தவிர அடித்துக் கொல்லப்பட்ட புலி, நஞ்சு வைத்துக் கொல்லப்பட்ட புலி, வேட்டையாடப்பட்ட புலி என்று கணக்கெடுத்தால் எழுபத்தி ஏழு புலிகள் இறந்து போயிருக்கின்றன. அவை வயதாகிச் சாகவில்லை, மனிதனால் கொல்லப்பட்ட புலிகள் எழுபத்தி ஏழு புலிகள்.
இந்தப் புலிகளையெல்லாம் காப்பாற்றுவதற்காக வனத்தில் புலிகள் காப்பகம் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொன்னானே, அப்படிப் பார்த்தால் எழுபத்தி ஏழு புலிகளில் நாற்பத்து நான்கு புலிகள் சரணாலயத்துக்குள்ளேயே கொல்லப்பட்டிருக்கின்றன. அதற்கு பெயர் சரணாலயமா? புலியைக் காப்பாற்றச் சொன்னாயே, நாற்பத்து நான்கு புலிகள் பத்து வருடத்தில் உன் சரணாலயத்தில், உன் காவலில், உன்னுடைய போலீசால் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள்ளேயே நாற்பத்து நான்கு புலிகள் செத்துப் போயிருக்கின்றனவே, அதற்கு என்ன கணக்கு? யாரால் கொல்லப்பட்டது? வேட்டையாடுபவனால் கொல்லப்பட்டது, புலித்தோலை எடுத்து வியாபாரம் செய்யக்கூடிய கடத்தல்காரனால் கொல்லப்பட்டது. இதையெல்லாம் கொல்வதற்கு விட்டுவிட்டு, வேடிக்கை பார்த்த உன் புலிகள் சரணாலயத்தை இன்றைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயம் என கொண்டு வந்து மக்களையெல்லாம் வெளியேற்று என்று சொன்னால் இந்தப் பித்தலாட்டத்தை நாம் அனுமதிக்கக்கூடாது.

அன்பானவர்களே, இந்த வழக்கு மிக முக்கியமான விடயம். நம்மையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்கிறது. ஆக்கிரமிப்பாளர் என்று சொல்லக்கூடிய அந்தச் சொல் மிக மிக மோசமான சொல். இதை பல தடவை நீதிமன்றத்தில் அதிகாரிகள் ”ஆக்கிரமிப்பாளர், ஆக்கிரமிப்பாளர்” என்று சொல்லித் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பை வாங்குவதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த ஆக்கிரமிப்பு என்கிற சொல்லுக்குப் பொருள் என்னவென்றால், அரசாங்க அனுமதி இல்லாமல் அரசாங்கத்தின் நிலத்திற்குள்ளாகச் சட்டவிரோதமாகக் குடியேறி இருக்கக்கூடிய மக்கள். இந்த மக்களை அப்படித்தான் சொல்கிறான்.
ஓட்டு கேட்டு வாங்கியபோது, வாக்காளர் அடையாள அட்டை கொடுத்தபோது, ஆதார் அடையாள அட்டை கொடுத்தபோது, மின்சார இணைப்பு கொடுத்தபோது, ஓட்டுக்கு வரி போட்டபோதெல்லாம் நாம் ஆக்கிரமிப்பாளராகத் தெரியவில்லை. இன்று ஆக்கிரமிப்பாளர் என்று கண்டுபிடித்து வந்து நிற்கிறான், ஏன்? ஏனெனில் ஒரு நிலத்தை அரசாங்கம் எடுக்கிறது. சாலை போடுவதற்கு எடுக்கிறது, நிறுவனம் கட்டுவதற்கு எடுக்கிறது, விமான நிலையம் கட்டுவதற்கு எடுக்கிறது, இப்படி எதற்காவது ஒன்றிற்கு எடுத்தால் அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிலத்தைக் கொடுக்கக்கூடிய மக்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். சந்தையில் என்ன மதிப்பு வருகிறதோ- அதனுடைய இரண்டு மடங்கு தர வேண்டும், கிராமமாக இருந்தால்/ நகரமாக இருந்தால்- மூன்று மடங்கு தர வேண்டும். ஆனால் ஆக்கிரமிப்பாளர் என்று சொல்லிவிட்டால் அரசாங்கம் இழப்பீடு தர வேண்டியதில்லை.
அது மட்டுமில்லாமல் பல இடங்களில் ஆக்கிரமிப்பாளர் என்று சொல்லி வீடு இடித்த போராட்டத்தில் நாங்கள் போராடி இருக்கின்றோம், அவர்களுக்காகச் சண்டை போட்டிருக்கிறோம். அந்த இடத்தில் என்ன செய்வான் தெரியுமா? இடித்த கூலிக்கும் நம்மிடம்தான் காசு வாங்குவான். இடிக்கின்ற கூலிக் காசு நம்மிடம்தான், இடித்த செங்கல்லை எடுத்துச் செல்கின்ற லாரிக் காசு நம்மிடம்தான் பிடுங்குவான். நமது பொருட்களை எல்லாம் எடுக்க விட மாட்டான். ஒரு குறிப்பிட்ட நாளில் இன்றைக்கு இடிக்கிறேன் என்று சொல்ல மாட்டான், எப்போது வேண்டுமானாலும் வருவான், எப்போது வேண்டுமானாலும் இடிப்பான். இதற்காகப் பயன்படுத்துகின்ற சொல்தான் ஆக்கிரமிப்பாளர். முதலில் அந்தச் சொல்லுக்கான கடுமையான கண்டனத்தை நாம் தெரிவிக்க வேண்டும்.
எங்களை ஆக்கிரமிப்பாளர் என்று சொல்வதற்கு நீ யார்? நாங்கள் எல்லாம் வந்ததற்குப் பின்புதான் நகராட்சி அலுவலகம் வருகிறது, ஊராட்சி ஒன்றிய அலுவலகமெல்லாம் வருகிறது. அதெல்லாம் எங்கிருந்து வந்தது? எந்த நேரத்தில் கட்டினாய்? ஏன் கட்டினாய்? நாங்கள் இந்த ஊரை உருவாக்கினோம். இந்த ஊரில் தொழில் செய்தோம். எங்கள் தொழில் வளம் தந்தது, அதனால் பேருந்து விட்டாய், வரி வாங்கினாய், மின்சாரம் கொடுத்தாய், எல்லா வேலையும் செய்தாய். நீ இலாபம் பார்த்தாய். உனக்கு வரி கட்ட வேண்டும், உன் அரசாங்கம் எங்களிடம் வரி வாங்கிக் கொண்டு தின்றதா இல்லையா? அன்றைக்கெல்லாம் எங்களைப் பார்த்து ஆக்கிரமிப்பாளர் என்று தெரியவில்லை, இன்றைக்குச் சொல்கிறான்.

அன்பானவர்களே, காட்டில் வசிக்கக்கூடியவர்கள், பழங்குடிகளாக இருக்கக்கூடியவர்கள் அல்லது காட்டை ஒட்டி வாழக்கூடிய மக்களுக்கு வாழ்வதற்கான உரிமையை வனச்சட்டம் கொடுத்திருக்கிறது. உங்கள் கிராம சபையில் நீங்கள் போடக்கூடிய தீர்மானத்திற்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தை உச்சநீதிமன்றம் கூட கேள்வி கேட்க முடியாது. அப்படிப்பட்ட சட்டப் பாதுகாப்பு உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதை முறையாகக் கவனமாக நாம் எடுத்துச் செய்ய வேண்டும்.
கிராம சபையை நடத்தச் சொல்ல வேண்டும். கிராம சபையில், இங்கு இந்த இந்த நபர் இந்த இடத்தில் இத்தனை வருடமாக வாழ்கிறார் என்று ஒத்துக்கொண்டால், அவருக்கான பட்டாவைக் கொடுக்க வேண்டும். அவரை ஆக்கிரமிப்பாளர் என்று சொல்ல முடியாது. அப்படி ஆட்சியரிடம் சொல்லி இங்கு நம் ஊரில் வசிக்கக்கூடிய எல்லா மக்களுக்குமான ஒப்புதல் பட்டாவை நாம் வாங்க வேண்டும். உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், சொல்லியிருக்கிறது அதை யாரும் பேசமாட்டேன் என்கிறார்கள். அந்த மக்கள் அங்குதான் வாழ்ந்தார்களா? என்பதற்கான ஆதாரங்களைப் பெற்று, கிராம சபைகளின் மூலமாக அவர்கள் ’அதிகாரப்பூர்வமான மக்கள்’ என்கின்ற ஆவணத்தை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. ஆனால் அதை அதிகாரி மறைத்துவிட்டான்.
இன்றைக்கு நாம் கேட்க வேண்டிய பல கேள்விகளில் ஒரு கேள்வி என்னவென்றால், கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஆட்சியர் உத்தரவிட வேண்டும். ஆட்சியர் உத்தரவிட்டால்தான் கிராம சபையில் நாங்கள் தீர்மானம் போடுவோம். இதெல்லாம் எங்கள் ஊர் என்று சொல்வதற்குரிய அதிகாரம் நமக்கு இருக்கிறது. அதைப் பண்ணாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள்.
நாம் அறிவுப்பூர்வமான சண்டையை நடத்துகிறோம். அறிவுப்பூர்வமான நியாயமான சண்டைக்கு நாம் தயாராக வேண்டும். அதற்கு இப்படிப் போராட்டம் நடத்துவதுதான் முதல் படி. இல்லையென்றால் என்ன செய்வான்? பல ஊர்களில் வீடுகளை இடித்திருக்கிறான். சிப்காட் கொண்டு வருகிறேன், நிறுவனத்தைக் கொண்டு வருகிறேன், விமான நிலையத்தைக் கொண்டு வருகிறேன் என்று பல இடங்களில் இடித்திருக்கிறான். பல இடங்களில் இடிக்க முடியாமல் மக்கள் தடுத்திருக்கிறார்கள். எந்த இடத்திலெல்லாம் தடுத்தார்கள், நான் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்.
திருவண்ணாமலையில் நிலத்தை சிப்காட் நிறுவனத்திற்குக் கொடுக்கப் போகிறேன் என்று எடுத்தான். திருவண்ணாமலையிலிருந்து அந்த ஊருக்குப் போவதற்குச் சரியான சாலையே கிடையாது. அந்தக் கிராம மக்கள் தினந்தோறும் போராட்டத்தில் உட்கார்ந்தார்கள். தங்கள் வேலையை முடித்துவிட்டு வந்து, ஊர்ப் பொது இடத்தில் தினம் வந்து உட்காருவார்கள். குழந்தைகள் அந்தப் பந்தலில்தான் வீட்டுப்பாடம் செய்யும், பாடம் படிக்கும். இப்படித் தினம் உட்கார்ந்தார்கள். எட்டு மாதம் உட்கார்ந்தார்கள். அந்த எட்டு மாதத்தில் அந்த நிலத்தை எடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக மக்கள் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது என்பதனால் அந்தத் திட்டத்தை இரத்து செய்துவிட்டான்.
நீங்கள் இந்த மாதிரி வந்து உட்காருவது ஏதோ ஒரு நாளோ, இரண்டு நாளோ, நான்கு நாளோ, பத்து நாளோ என்பது போதாது. அந்தத் திருவண்ணாமலை பகுதி மக்கள் பாலியப்பட்டு மக்கள் எட்டு மாதம் உட்கார்ந்தார்கள். அதேபோல சென்னைக்குப் பக்கத்தில் பரந்தூர் என்கிற கிராமம் குறித்து எல்லாச் செய்திகளிலும் பார்த்திருப்பீர்கள். விமான நிலையத்திற்கு எதிராக நான்காயிரம் ஏக்கர் விவசாய நிலத்தைப் பாதுகாப்பதற்காக அந்த மக்கள் தினம் பரந்தூரில் போராட்டம் செய்தார்கள். மற்ற ஊர்களில் நாங்களெல்லாம் உள்ளே போக முடிந்தது, பரந்தூரில் யாரும் உள்ளே போக முடியாது. காவல்துறை தடுப்புகள் போட்டு மறைத்துவிட்டது, உள்ளே போகின்ற எல்லோரையும் கைது செய்தது. அந்த மக்கள் அஞ்சவில்லை, சோர்ந்து போகவில்லை. ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, அவர்கள் ஊர் மந்தையில் தினம் உட்கார ஆரம்பித்து ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, நான்கு வருடம் உட்கார்ந்தார்கள். நான்கு வருடம் உட்கார்ந்து நிலத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரத்து முந்நூறு நாள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இன்றைக்கு நான்கு நாள் வெற்றிகரமாக நடத்திவிட்டீர்கள். அதற்கான தைரியமும் தெளிவும் இருப்பதாக அரசாங்கத்திடம் நிரூபித்துவிட்டீர்கள். “நாங்கள் உட்காருவோம், நாங்கள் ஒன்றுபட்டு நிற்போம், எங்களை உடைக்க முடியாது, எங்களைப் பிரிக்க முடியாது, எங்கள் போராட்டச் சக்தியை அழிக்க முடியாது” என்று இந்த வருசநாடு மேகமலை மக்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கைச் செய்தி சொல்லியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதல்வர் அவர்களே, எந்தக் கட்சிக்கும் நாம் எதிரி கிடையாது. எல்லாக் கட்சியும் நமக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்கின்றோம். தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த நண்பர்களிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாகத் தீர்மானம் போடச் சொல்லுங்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொல்லுங்கள். கட்சிப் பாகுபாடெல்லாம் பார்க்க வேண்டாம்.
இலட்சம் மக்களும் இங்கிருந்து வெளியேற்றி எங்காவது வைத்து வாழ வைக்கப் போகிறீர்களா? எங்கே ஓட வைக்கப் போகிறீர்கள்? எல்லாக் கட்சிக்கும் வாக்களித்த மக்கள் இங்கு இருக்கிறார்கள். மக்கள் வசிக்கக்கூடிய இந்தப் பகுதியில் காலம் காலமாக வசிக்கக்கூடிய மக்களுக்கான பட்டாவை கொடுப்போம், பட்டா இல்லாத மக்களுக்கும் பட்டாவைக் கொடுப்போம் என்று தமிழ்நாடு அரசு தீர்மானம் போடட்டும். இவர்களை ஆக்கிரமிப்பாளர் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்நாடு அரசாங்கம் அறிவிக்கட்டும்.
இதோ பக்கத்தில் இருக்கிற கேரளாவில் ஒரு தீர்மானம், ஒரு அரசாங்க அறிக்கை போட்டிருக்கிறது. அது என்னவெனில் மக்கள் அடர்த்தியாக வசிக்கக்கூடிய பகுதியை ”வனப்பகுதி” என்று சொல்ல மாட்டோம் என்று கேரள அரசு சொல்லியிருக்கிறது. போன வாரம் கர்நாடக அரசாங்கம் சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்டிருக்கிறது. நாங்கள் இதையெல்லாம் வனமாகப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்ன உச்சநீதிமன்றம் எந்த அறிக்கையை எடுத்ததோ, அந்தக் கஸ்தூரிரங்கன் அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று சொல்லி கர்நாடக அரசு தீர்மானம் போட்டிருக்கிறது. அவன் அறிக்கையை நிராகரிக்கச் சொல்லிவிட்டான். கஸ்தூரிரங்கன் அறிக்கையை வைத்துத்தானே நீதிமன்றம் பேசுகிறது, நான் கஸ்தூரிரங்கன் அறிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கர்நாடக அரசு சொல்லிவிட்டது.
தமிழ்நாடு அரசு ஏன் மௌனமாக இருக்கிறது? உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டம் போடுங்கள். இது மக்கள் வசிக்கக்கூடிய பகுதி. இந்த மக்களுக்குக் கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி, யாருக்கெல்லாம் பட்டா இல்லையோ, அவர்களுக்கெல்லாம் உடனே பட்டா கொடு. அதற்குத்தானே வரி வாங்குகிறாய், ஆட்சி நடத்துகிறாய்? பட்டா கொடுத்துவிட்டு இந்த மக்கள் எல்லாம் இந்த நிலத்திலே பூர்வீகமாக வாழக்கூடிய மக்கள், இவர்கள் வெளியேற்றப்பட வேண்டியதில்லை என்ற பதிலை அரசு உச்சநீதிமன்றத்தில் சொல்ல முடியும். இதைச் செய்கின்ற வரைக்கும் போராட்டக் களத்தை விட்டு வெளியே போகக்கூடாது. மக்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்யும் என்று சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்.
இந்தப் பதினேழு வருடத்தில் நான் பல ஊர்களில் இதே மாதிரி ஆற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள், வீடு இடித்திருக்கிறார்கள், நீர்நிலைப் புறம்போக்கை ஆக்கிரமித்து இடித்திருக்கிறார்கள், கந்தக நிலத்தை இடித்தது, சாலை போடுவதற்கு இடித்தது, எல்லாப் போராட்டத்திற்கும் நான் போயிருக்கிறேன். எங்கள் அமைப்பு, மே பதினேழு இயக்கம் எல்லா இடத்திற்கும் போய்ச் சண்டை போட்டிருக்கிறோம். அதில் ஒன்றே ஒன்று என்னவென்றால் நீதிமன்றத்தில் ஏனோதானோவென்று வழக்கு போட்டால் நிற்காது. எங்கள் வீட்டைக் கொடுங்கள் என்று சொல்லிக் கேட்டால் நீதிமன்றத்தில் நீதி கிடைக்காது. எல்லா மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும். கிராமமாக, ஊராகப் பல கட்சிகள் சேர்ந்து முடிவெடுத்து வழக்கு நடத்துவதற்கு வழி பார்ப்போம். நமக்கு வனப் பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு இடம் இருக்கிறது. அந்த அடிப்படையில் போவோம்.
சென்ற வருடம் சென்னையில் பல்லாவரம் பகுதியில் இருக்கக்கூடிய அனகாபுத்தூர் ஒரு ஊர். அடையாற்றின் பக்கத்தில் வசிக்கக்கூடிய மக்கள், அந்த மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் கிடையாது. ஆற்றங்கரையை ஆக்கிரமிக்கவில்லை. ஆற்றங்கரை என்னவென்று சொல்லி கல்லுக் கட்டியிருக்கிறான் நீர்வளத்துறைக்காரன். அதைத் தாண்டித்தான் அந்த மக்கள் வீடே இருக்கிறது. ஆனால் அதிகாரி என்ன செய்தான்? இதெல்லாம் ஆக்கிரமிப்பு என்று சொல்லி வீடு இடிப்பதற்கு வந்தான். நாங்கள் வழக்கு போட்டோம். என்ன வழக்கு தெரியுமா? முதலில் எது ஆறு என்று அளவீடு செய்து கொடு என்று சொல்லிக் கேட்டோம். ஆற்றை அளவீடு செய், ஆற்றின் மையப் பகுதி எது? ஆற்றங்கரை எது? என்று அளவீடு செய்து கல்லை நடு, அப்போதுதான் நான் ஆக்கிரமிப்பாளரா இல்லையா? என்று தெரியும். புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியதற்காக, பட்டா இல்லாததற்காக என்னை ஆக்கிரமிப்பாளர் என்று சொல்ல முடியாது. முதலில் நீ வரையறை கொடு, எது கிராமம், எது காடு என்று சொல்ல வேண்டும் என்று கேட்டோம். அரசாங்கம் பதில் சொல்ல முடியவில்லை, ஏனெனில் அளவீடு கிடையாது. இடிக்கக் கூடியவனை மூன்று வருடம் தடுத்து வைத்தோம்.
இதையெல்லாம் தெரியாத அப்பாவிகள் நான்கு பேர் என்ன செய்தார்கள் என்றால், நாங்கள் ஐம்பது வருடமாக இருக்கிறோம், எங்கள் வீட்டை இடிக்கக்கூடாது என்று சொல்லுங்கள் என்று சொல்லி நீதிமன்றத்தில் போய் வழக்கு போட்டார்கள், நீதி கேட்கப் போனார்கள். நீங்கள் யாரை வேண்டுமானாலும் நம்புங்கள், நீதிபதியை நம்பாதீர்கள். அந்த நீதிபதி இந்த ஆவணத்தையெல்லாம் பார்க்கவில்லை. உடனடியாக வழக்கை எடுத்து இடிப்பதற்கு உத்தரவிட்டு, காலையில் வழக்கு போகிறது, மதியம் இடிப்பதற்கு உத்தரவு, மாலையில் எல்லா வீட்டையும் இடித்துவிட்டான். நான்கு வீடு மட்டுமில்லை, அங்கிருந்த ஐந்நூறு வீடுகளை இடித்தான். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், பட்டா உள்ள நிலத்தையும் இடித்தான். அவன் அதை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் பட்டா நிலமா? பட்டா இல்லாத நிலமா? என்று பார்க்க மாட்டான்.
தயவு செய்து ஊரில் சொல்லுங்கள், எனக்குப் பட்டா இருக்கிறது, நான் இதில் பாதிக்கப்பட மாட்டேன் என்று யாராவது சொன்னால் அவர்களிடம் சொல்லுங்கள், நம்பாதே, பட்டா இல்லை என்று சொல்லிப் பெயரைக் கெடுப்பான், இடிப்பான். அதற்குப் பிறகு நடுத்தெருவுக்கு வருவான். உன்னைக் கேட்பது யார்? இன்றைக்கு ஊராக நின்றால்தான் வெல்ல முடியுமே ஒழியத் தனித்தனியாக நின்றால் வெல்ல முடியாது. இது ஒரு இடத்தில் மட்டும் இல்லை, பல ஊர்களில் நாங்கள் பார்த்துவிட்டோம். உங்களுக்குத் தேனியில் இரண்டு ஏக்கர் நிலத்தைத் தருவோம் என்று அரசாங்க உத்தரவாயிருக்கிறது, இரண்டு சென்ட் உத்தரவாயிருக்கிறது என்று சொல்லிவிட்டு உங்களுக்கு வேண்டுமென்கிறவர்களுக்கு டோக்கன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வான். இந்த இடத்தில் இருக்காதே, அங்கே போய் எப்படி இடிக்கத்தான் போகிறான் என்பான். அதை நம்பி நம் ஆள் நான்கு பேர் போய் டோக்கன் வாங்கினால் ஊருக்குள் குழப்பம் வரும். முதலில் இந்த நான்கு பேருக்கு டோக்கன் கிடைக்கும், பிறகு ஒரு பத்து பேருக்கு டோக்கன் தருவான், பிறகு ஐம்பது பேருக்கு எதுவும் தராமல் ஏமாற்றிவிட்டுப் போய்விடுவான். டோக்கன் வாங்குகிறவனுக்கு நிலம் கிடைக்குமா என்றால் கிடைக்காது.
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது, பார்த்திருப்பீர்கள், ஐம்பது வருடத்திற்கு மேல் இருக்கிறது. அது நாற்பது வருடத்திற்கு முன்பு நிலத்தை எடுத்தது, இன்றைக்கும் இழப்பீடு கிடைக்கவில்லை. ஜெயங்கொண்டத்தில் கிடைக்கவில்லை, நெய்வேலியில் கிடைக்கவில்லை, பரந்தூரில் கிடைக்கவில்லை. யார் கேட்பது? யார் கேட்க முடிந்தது? இது முதலை வாய்க்குள் போனது திரும்ப வராது. முதலை வாய்க்குள், யானை வாய்க்குள் விட்டால் திரும்ப எடுக்க முடியாது. அதுபோல உங்கள் ஊரைப் பாதுகாக்க வேண்டுமென்றால் ஊருக்குள் ஒற்றுமை வேண்டும். இந்தச் சாதிக்கு கொடுக்கிறேன், அந்தச் சாதிக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றுவான், நம்பாதீர்கள். இந்த அரசாங்க அதிகாரிகள் சொல்லக்கூடிய பொய் வாக்குறுதி எதையும் நம்பாதீர்கள்.
ஊரில் இருக்கக்கூடிய நூறு வீடு என்றால், நூறு வீட்டிற்கும் பாதுகாப்பு கொடு, ஒரு வீட்டிற்கு மட்டும் பாதுகாப்பு தருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லுங்கள். தொண்ணூறு வீடுகளை இடித்துவிட்டு மீதி பத்து வீடுகளை விட்டு வைக்க மாட்டான். அவன் திட்டமே மொத்தமாக எல்லாவற்றையும் இடிப்பதுதான். அவன் புலியைக் காப்பாற்றுவதற்கு வரவில்லை. அவனுக்கு என்ன தேவையென்றால் நாளை இங்கே சுரங்கம் தோண்ட வேண்டுமென்றால் மக்கள் வாழக்கூடிய பகுதியில் சுரங்கம் தோண்ட முடியாது. மக்களையெல்லாம் அப்புறப்படுத்தி ஊரே இல்லை என்று சொல்லிவிட்டு அவன் சுரங்கம் தோண்டலாம், அதை நிறுவனத்திற்குக் கொடுக்கலாம், அம்பானிக்குக் கொடுக்கலாம், அதானிக்குக் கொடுக்கலாம், எவனுக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்குத்தான் இன்றைக்கு மக்களை வெளியேற்றுகிறான். இது முப்பது, நாற்பது வருடத் திட்டம். திடீரென்று சொல்லுவான், அவன் என்றைக்கு வேண்டுமானாலும் இடிப்பான்.
இதையெல்லாம் எந்த அடிப்படையில் நீ சொல்கிறாய் என்று என்னைக் கேட்கலாம். நானும் பதினேழு வருடமாக எல்லா ஊர்களிலும் பார்த்துவிட்டேன். கோயம்புத்தூரில் பார்த்தாயிற்று, ஈரோட்டில் பார்த்தாயிற்று, ஆம்பூர், குடியாத்தத்தில் பார்த்தாயிற்று, சென்னையில் பார்த்தாயிற்று, எல்லா ஊர்களிலும் பார்த்தாயிற்று. மக்களை ஏமாற்றுகின்ற வழி: அந்தச் சமூகத்து ஆளுக்குக் கொடுக்கிறேன் என்பான், இந்தச் சமூகத்து ஆளுக்கு வராது என்று சொல்லுவான். அந்தத் தெருவுக்குக் கொடுத்திருக்கிறேன், இந்தத் தெருவுக்கு வராது என்று சொல்லுவான். அந்த ஊராட்சிக்குத்தான் பிரச்சினை, உன் ஊராட்சிக்குப் பிரச்சினை இல்லை என்று சொல்லுவான். சாலைக்குப் பக்கத்தில் இருக்கின்ற உனக்குப் பிரச்சினை இல்லை, உள்ளே இருக்கிறவனுக்குத்தான் பிரச்சினை என்று சொல்லுவான். ஓட்டு வீட்டிற்குத்தான் பிரச்சினை, காரை வீட்டிற்குப் பிரச்சினை இல்லை என்று சொல்லுவான். இப்படி எல்லாக் கதையும் சொல்லுவான், நம்பிவிடாதீர்கள். ஊர்க்காரர்கள் முடிவு செய்யுங்கள், ஊர் ஊருக்குக் குழு போடுங்கள். எந்த வழக்கையும் தனியாகப் போடாதீர்கள். வனப் பாதுகாப்புச் சட்டத்தில் பட்டா கொடுக்க வேண்டிய கடமை ஆட்சியருக்கு இருக்கிறது.

நன்றாக யோசித்துப் பாருங்கள். ஒரு ஐந்து வருடம், நான்கு வருடத்திற்கு முன்பு மேய்ச்சல் நிலத்தில் மேய்வதற்கு உரிமை இல்லை என்று சொன்னான். அப்படி என்றால் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேய்ச்சல் நிலத்தில் மேய்ப்பதற்கான உரிமை, வரலாற்று உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால் மதுரை நீதிமன்றம் உத்தரவு கொடுத்ததா இல்லையா? மேய்ச்சலுக்கு அன்றைக்கு அனுமதி மறுத்தான், இன்றைக்கு வாழ்வதற்கு அனுமதி மறுத்திருக்கிறான். ஒவ்வொரு நாளாக நிதானமாகத்தான் வருகிறான். ஒரே நாளில் எல்லாம் இடிக்க மாட்டான். ஐந்து வருடம், ஏழு வருடம் எடுத்துக் கொள்வான் இடிப்பதற்கு. ஒவ்வொன்றாக இடிப்பதற்கு வேலை பார்ப்பான். நம் மக்கள் சோர்ந்து போகாமல் போராட்டக் களத்தில் ஒன்றுபட்டு நில்லுங்கள். நின்றால்தான் ஊரைக் காப்பாற்ற முடியும். அப்படியான ஒரு போராட்டத்தை நீங்கள் நடத்தியே ஆக வேண்டும். நாங்கள் உங்களோடு எப்போதும் துணையாக நிற்போம்.
இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னையில் இதற்கான போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். மேகமலை, வருசநாடு போராட்டம் மேகமலை மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுடைய போராட்டம். தமிழ்நாடு முழுவதற்கான போராட்டத்தைக் கொண்டு செல்லக்கூடிய வேலையை நாங்கள் செய்வோம். இங்கே கை வைத்தால் சென்னையில் போராட்டம் வெடிக்கும், திருச்சியில் வெடிக்கும், கோயம்புத்தூரில் வெடிக்கும், மதுரையில் வெடிக்கும். தமிழ்நாடு முழுவதும் நடந்தால்தான் போராட்டம் வெல்லும். நீங்கள் எல்லோரையும் ஒன்றாக்குங்கள். ஊர்க் குழு போடுங்கள். தொண்ணூற்று எட்டு கிராமமா/நூற்று இரண்டு கிராமமா, எல்லா ஊரிலும் கருப்புக் கொடி ஏற்றுங்கள். அந்த அதிகாரிக்கு, ஊருக்குள் வருகின்ற அதிகாரிக்குத் தெரிய வேண்டும், நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம், எங்கள் ஊரில் வந்து ஒரு செங்கல்லை எடுத்துச் செல்வதற்கு ஒத்துக் கொள்ள மாட்டோம், ஒரு பிடி மண்ணை எடுத்துச் செல்வதற்கு ஒத்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லிக் கருப்புக் கொடியைக் கட்டுங்கள். முதலில் ஊருக்குள் வருகின்ற அதிகாரிக்குத் தெரிய வேண்டும், இந்த மக்கள் உஷாராக இருக்கிறார்கள், உள்ளே வந்து கல்லை நட முடியாது என்று. கல்லைப் பெயர்க்க வேண்டாம், உனக்கு வேலை இல்லை, வெளியே போ என்று சொல்லுங்கள். இவன் யார் அதிகாரி என்று பார்த்து பயப்படாதீர்கள். மக்களாகிய நீங்கள் இருந்தால்தான் அதிகாரம் செல்லுபடியாகும். மக்கள் அதிகாரம் இல்லையென்றால் அதிகாரத்திற்கு எந்த மரியாதையும் கிடையாது. எந்த அதிகாரியைப் பார்த்தும் பயப்படாதீர்கள்.

நாம் என்ன தவறு செய்தோம்? நம் மேல் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? ஒன்றும் எடுக்க முடியாது. இது என் நிலம், என் ஊர், என் மக்கள், என் இனம். இந்தக் காட்டைக் காப்பாற்றுவது நாங்கள்தான். இங்கு ஆட்டைக் காப்பாற்றுவது நாங்கள்தான், ஆடு மாட்டைக் காப்பாற்றுவது நாங்கள்தான். நீ சொல்கிற புலி ஒன்று இருக்கிறதா? அதை முதலில் காப்பாற்று, அப்புறம் இதைக் கொண்டு வரலாம். உன் புலிகள் சரணாலயத்தில்தான் புலி சாகிறது, என் ஊரில் எந்த மரமும் சாகவில்லை, நன்றாகத்தான் இருக்கிறது.
அன்பானவர்களே, கிராமம் கிராமமாகக் கருப்புக் கொடி கட்டுங்கள். ஊருக்கு வெளியிலும் ஊருக்குள்ளும் பலகை வையுங்கள். எங்கள் ஊரில் ஒரு இடத்தை, ஒரு வீட்டை, ஒரு செங்கல்லை, ஒரு தெருவை எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம், அரசாங்கம் எங்களை வெளியேற்றச் சொல்வதற்கு நாங்கள் ஒருபோதும் உடன்பட மாட்டோம் என்று சொல்லி ஒவ்வொரு ஊருக்கும் பேனர் வையுங்கள். தெரியட்டும்.
யோசித்துப் பாருங்கள், நான் சென்னையிலிருந்து வருகிறேன், எந்த ஊரிலாவது இதற்கு எதிர்ப்பு இருக்கிறதா என்று பார்த்தால் எந்த அடையாளமும் இல்லாமல் இருக்கிறது. இந்த ஊரே போராட்டக் களமாக வேண்டும். இந்த ஊருக்குள் வருகின்ற எல்லோருக்கும் தெரிய வேண்டும். தொண்ணூற்று எட்டு கிராமங்களிலும் கொடியை ஏற்றுங்கள், எல்லா வீடுகளிலும் கொடி ஏற்றுங்கள், எல்லா ஊர்களிலும் பலகை வையுங்கள், தட்டி வையுங்கள், சுவரொட்டி போடுங்கள். எங்கள் நிலம் கிடையாதா என்று சொல்லுங்கள்.
வன உரிமைச் சட்டத்தின்படி நாங்கள் வாழ்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று சொல்வதற்கு எல்லாச் சட்டப் பிரிவுகளும் இருக்கின்றன. சட்டம் இருக்கிறதோ இல்லையோ, சட்டம் எல்லாம் அப்புறம் வந்தது. நாங்கள்தான் முதலில் வந்தோம். நாங்கள்தான் முதலில் வந்தோம். நீ சொல்கிற இந்தியா வருவதற்கு முன்பு நாங்கள்தான் வந்தோம். இந்த மழை வந்தது, காடு வந்தது, வனவிலங்கு வந்தது, அதே நேரத்தில் என் தமிழன் வந்தான், இந்த மண்ணில் என் தமிழன் வாழ்ந்தான். என் தமிழனுக்கு வரலாறு இருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது. இந்த மண் என்னுடைய மண் என்று சொல்வதற்கு தில்லியில் உட்கார்ந்திருக்கின்ற எவனோ ஒருத்தன் என்னை உத்தரவு போட்டு வெளியே போகச் சொல்ல முடியாது என்று சொல்லுங்கள்.
யார் நீ? வெள்ளைக்காரனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ஏதோ ஒரு நீதிமன்றம் வைத்திருக்கிறேன் என்று சொல்கிறாயே, உன் நீதிமன்றத்திற்கும் என் ஊருக்கும் என்ன சம்பந்தம்? என் ஊரை நீ பார்த்திருக்கிறாயா? என் மக்களிடம் நீ பேசியிருக்கிறாயா? என்னுடைய குறை என்னவென்று கேட்டிருக்கிறாயா? என் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறாயா? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? வரி வாங்குகிறாய், நான் வரி கொடுக்கிறேன், அந்த வரிதான் உச்சநீதிமன்றமாக நடக்கிறது. அந்த வரியில்தான் ஆட்சியர் அலுவலகம் கட்டியிருக்கிறாய். ஆட்சியருக்குச் சம்பளமோ, அவன் காருக்குப் பெட்ரோலோ நான் கொடுக்கிற வரி. நீ எனக்கு அதிகாரி அல்ல, நான்தான் உனக்கு அதிகாரி. எந்த அதிகாரியின் மிரட்டலுக்கும் பயந்துவிடாதீர்கள். மக்கள் ஒன்றாக நின்று தீர்மானம் போட்டோம், தீர்மானத்தில் நிற்போம் என்று சொன்னால், ஊருக்குள் கருப்புக் கொடி கட்டினால் ஒருவன் உள்ளே வர முடியாது. செய்யுங்கள்.
நம் ஊரை, நம் வீட்டை வேறு யார் காப்பாற்றுவார்? நம் பிள்ளை எங்கே போகும்? நாளைக்கு எங்கே போய்ப் படிக்கும்? எங்கே போய்ப் பிழைக்கும்? யோசியுங்கள், எங்கே போய்ப் பிழைப்போம்? காலம் காலமாக இங்கு இருந்துவிட்டோம். எந்த ஊரில் போய்ப் பிழைப்பை நடத்த முடியும்? எந்த ஊரில் போய்க் குடியேற முடியும்? எந்தப் பள்ளியில் குழந்தை படிக்கப் போக முடியும்? நம் ஊரை விட்டால் வேறு இடம் கிடையாது. இது வாழ்வா சாவா சண்டை. இன்றைக்கு ஒரு அதிகாரி இருப்பான், நாளைக்கு ஒருவன் வந்துவிடுவான், அவன் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறவன்.

அதனால் அன்பான பெரியோர்களே, தாய்மார்களே, உங்களுக்குத் துணையாக எங்களுடைய மே பதினேழு இயக்கம் எப்போதும் நிற்கும். ஏதாவது பிரச்சினை வந்தாலும் கூட நிற்போம். இவன் பொக்லைனைக் கொண்டு வந்தால் மறிப்போம். நான் அதிகாரிகளுக்குச் சொல்கிறேன். இந்த மக்களை, இந்த இடத்தில் இந்த அதிகாரிகள் அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். அதிகாரிகள் இருந்தாலோ, உளவுத்துறை இருந்தாலோ கேட்டுக் கொள்ளுங்கள், போய்ச் சொல்லுங்கள், இந்த இடத்தைச் சட்டவிரோதமாகத்தான் நீங்கள் ஆக்கிரமிக்க நினைக்கிறீர்கள். யார் ஆக்கிரமிக்க நினைக்கிறது? இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமா இல்லையா? என்பதை என் மக்களிடம் கேட்பதற்கு நீ ஒரு மக்கள் கேட்புக் கூட்டத்தைக் கூட நடத்தவில்லை.
மக்களிடம் கேட்டாயா? இந்த இடம் ஆக்கிரமிப்பு என்று நீ சொல்கிறாயே, எந்த அடிப்படையில் சொன்னாய்? மக்களிடம் ஆவணம் கேட்டாயா? இல்லை, நீ ஆக்கிரமிப்பு என்று உத்தரவிட்டு வெளியே போகச் சொல்லி உத்தரவிட்டு, அதற்குப் பிறகு ஆவணம் கேட்க வருகிறாய். அதனால் அதிகாரிகளுக்கும் சொல்கிறோம், நீ சட்டவிரோதமாக இருக்கிறாய், என் ஊரை, என் நிலத்தை நீ ஆக்கிரமிப்பதற்கு வருகிறாய். அரசுதான் ஆக்கிரமிப்பாளரே ஒழிய நாம் கிடையாது. இவன் யார் நம்மை ஆக்கிரமிப்பாளர் என்று சொல்வதற்கு? அதனால் புரிந்து கொண்டு நில்லுங்கள்.
உங்களுக்குள்ளாகப் பிளவை ஏற்படுத்தி உங்களைப் பிரித்துவிடுவதற்கு நிறைய வேலை பார்ப்பான். தயவுசெய்து அதிகாரி சொல்வதையோ, உளவுத்துறை சொல்வதையோ, காவல்துறை சொல்வதையோ நம்பாதீர்கள். ஒன்றே ஒன்று கேளுங்கள், நம்பாதீர்கள். என் ஊரில் ஒரு செங்கல், ஒரு வீடு போகக்கூடாது என்று உத்தரவு வந்தால் சொல், இல்லையென்றால் வெளியே கிளம்பு என்று சொல்லுங்கள். தமிழ்நாடு அரசு தீர்மானம் போடட்டும், எல்லாக் கட்சியையும் கூட்டட்டும். முதல்வர், தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். நாங்கள் யாரும் உங்களுக்கு எதிராளி இல்லை. நீங்கள் தீர்மானம் போட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
நீங்கள் நீதிமன்றத்தில், மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய இந்தப் பகுதிகளெல்லாம் மக்கள் வாழக்கூடிய பகுதி, இது ஒரு நகரம், சிற்றூர், கிராமம், இங்கு குடியிருப்பதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. வனப்பகுதி என்பது தனியாக இருக்கிறது என்று எப்படிக் கேரளாக்காரன் சொன்னானோ, எப்படிக் கர்நாடகக்காரன் சொன்னானோ, எப்படி அவன் அவன் மக்களுக்கு நிற்கிறானோ, கேரள அரசு மலையாளிக்காக இருக்கிறது, கர்நாடக அரசு கன்னடனுக்காக இருக்கிறது, தமிழ்நாடு அரசு தமிழனுக்காக வர வேண்டுமா இல்லையா? அதை வரச் சொல்லுங்கள். நாம் வர வைப்போம். சேர்ந்து போராடுவோம். நீங்கள் போராட்டம் நடத்தக்கூடிய நாளில் நாங்களும் சென்னையில் போராட்டம் நடத்துவோம்.
இதோ தூத்துக்குடியிலிருந்து தோழர் எஸ்.ஆர். பாண்டியன் வந்திருக்கிறார். பல போராட்டங்களில் எங்களோடு துணையாக நின்றவர், எத்தனையோ போராட்டங்களை நடத்தியவர். அவர் தூத்துக்குடிக்காரர், அவர் உங்களுக்காக தூத்துக்குடியில் போராட்டம் நடத்துவார். நாங்கள் சென்னையில் நடத்துகிறோம், தமிழ்நாட்டில் எல்லா ஊர்களிலும் போராட்டம் நடத்துவோம், போராட்டம் வெடிக்கட்டும். உங்கள் சொந்தக்காரர்கள் எல்லாம் இருக்கிறார்கள், சொல்லுங்கள் அவர்களிடம், அந்தந்த ஊரில் இதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கிற வேலையைச் செய்வோம். இவன் ஏதோ அந்த மலைக்குள்ளே ஒருவரை மிரட்டி எல்லாவற்றையும் முடித்துவிடலாம் என்று நினைத்தால் விட முடியாது.

இது தமிழ்நாட்டுப் போராட்டம், தமிழருடைய வாழ்வுரிமைப் போராட்டம். இந்தப் போராட்டத்தை ஒரு எல்லைக்குள், ஒரு ஊருக்குள், ஒரு மாவட்டத்திற்குள் முடக்க அனுமதிக்கக்கூடாது. இங்கு இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தோழர்களைப் பார்த்துக் கேட்கின்றேன், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். நமக்குள் பல வேறுபாடுகள் இருக்கலாம். நாங்கள் தேர்தல் கட்சி கிடையாது, தேர்தலில் பங்கெடுக்கிற ஆள் கிடையாது. எங்களுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தலில் பங்கெடுக்கக்கூடிய நிறைய பேர் இருக்கிறீர்கள். தேர்தல் சமயத்தில் உங்கள் வேறுபாடுகள் இருக்கட்டும். ஆனால் மக்களைக் காக்க வேண்டுமென்றால் நாம் எல்லாம் ஒன்றாக நிற்போம். இன்றைக்கு எப்படி ஒன்றாக நிற்கிறோமோ அதுபோல நிற்போம். எல்லா ஊர்களிலும் போராட்டம் நடத்துவோம். கட்சி வேறுபாடு இல்லாமல், கட்சிக் கொடி வேறுபாடு இல்லாமல் தமிழர்களைக் காப்பதற்காக எல்லோரும் போராட்டத்தில் ஒன்றாக நிற்போம்.
தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டட்டும், தலைமைச் செயலாளருக்கு அவர்கள் பதில் கொடுக்கட்டும். என்ன ஆணை கொடுக்க வேண்டும் என்பதைத் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வரட்டும். சட்டசபையைக் கூட்டுங்கள், அவசரமாகக் கூட்டுங்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது. உச்சநீதிமன்றக்காரனுக்குத் தெரியாது நம் ஊர் எப்படி என்று. இந்த ஊரில் ஆறு ஓடுகிறதா, மரம் வளர்ந்திருக்கிறதா என்று அவனுக்கு என்ன தெரியும்? தில்லிக்காரனுக்கு என்ன தெரியும்? நம் அரசாங்கம் சொல்ல வேண்டும். நம் அரசாங்கத்தைச் சொல்ல வைப்பதற்குரிய அழுத்தத்தைக் கொடுப்போம். அமைச்சர்களையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ எந்தக் கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை, எல்லோரும் நமக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். எல்லோரும் சேர்ந்து, எப்படிக் கர்நாடக அரசு சொன்னதோ, எப்படிக் கேரள அரசு சொன்னதோ அதுபோல தமிழ்நாடு அரசு பதிலைச் சொல்ல வேண்டும் என்ற வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த வைப்போம்.
இந்த அதிகாரிக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் போராட்டத்தை நடத்துங்கள். நீங்கள் தினம் இங்கு வர முடியாமல் இருக்கலாம், நான்கு நாள் நடத்தியிருக்கிறீர்கள், ஒரு நாள், இரண்டு நாள் அல்ல, நான்கு நாள் போராட்டம் ஒரு பெரிய விஷயம். ஊர் கூடித் தேர் இழுத்திருக்கிறீர்கள். இதற்குப் பிறகு ஒவ்வொரு ஊரிலும் இதே மாதிரிப் போராட்டம் நடத்துங்கள், ஒவ்வொரு ஊரிலும் போராட்டத்தை நடத்துங்கள், அதை ஆவணப்படுத்துங்கள். எங்கள் ஊரில் மாலை ஆறு மணிக்கு உட்காருகிறோம். ஒவ்வொரு ஊரிலும் ஒரு மணி நேரம் உட்காருங்கள், குறைந்தபட்சம் நான்கு மணிக்கு உட்கார வேண்டும் என்று அவசியம் கிடையாது, வேலை எல்லாம் முடித்துவிட்டு வாருங்கள், மாலையில் உட்காருங்கள், அங்கே பேசுங்கள், அப்போதுதான் இந்த ஊரைக் காப்பாற்ற முடியும். நீங்கள் ஒன்றாகச் சந்திக்கவில்லையென்றால், ஒன்றாக உட்காரவில்லையென்றால் உங்களில் ஒருவருக்கு என்ன நடக்கிறது என்று இன்னொருவருக்குத் தெரியாது. அவன் அறிவிப்பைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவான். ஆனால் ஊர் ஒன்றாக நிற்க வேண்டுமென்றால் ஒவ்வொரு கிராமத்திலும் இதேபோல் காத்திருப்புப் போராட்டத்தை நடத்துங்கள். பல ஊர்களில் நடத்தியிருக்கிறோம், வெற்றி பெற்றிருக்கிறோம், அதனால்தான் சொல்கிறேன்.
எந்த ஊர்களெல்லாம், எந்தக் கிராமங்களெல்லாம், எந்தத் தெருக்களெல்லாம் காத்திருப்புப் போராட்டத்தை அவரவர் ஊரில் நடத்தினார்களோ அந்தக் கிராமங்களெல்லாம் வெற்றி பெற்றிருக்கின்றன. உங்கள் ஊரில் நடத்துங்கள்….. அம்மாக்கள் இருக்கிறீர்கள், தொலைக்காட்சியில் தொடர் போடுவான், அந்தத் தொடரில் குடும்பச் சண்டைதான் ஓடுகிறது. அதை எதற்குப் போய்ப் பார்த்துக் கொண்டு, நீங்கள் வீதியில் வந்து உட்காருங்கள். நாம் எதற்குக் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வேண்டும், மாலையானால் வீதியில் வந்து உட்காருவோம். ஊரில் ஒரு பொது இடத்தை எடுங்கள், அது கோயில் மந்தையோ, பொது இடமோ, ஏதோ ஒரு இடத்தை எடுத்து உட்காருங்கள். தினம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் உட்காருங்கள். இந்த ஊர் எங்களுடைய ஊர் என்று சொல்லுங்கள். அதை யார் கேட்கிறார்களோ இல்லையோ, ஊடகத்தில் காட்டுகிறானோ இல்லையோ, தொலைக்காட்சியில் காட்டுகிறானோ இல்லையோ அரசாங்கத்திற்குத் தெரியும். தொண்ணூற்று எட்டு கிராமங்கள் போராட்டம் நடத்துகின்றன என்று தெரியும்.
சென்னையில் இருக்கக்கூடிய எங்களுக்குத் தெரிகிறது என்றால் அரசாங்கத்திற்குத் தெரியாமலா இருக்கும்? தொண்ணூற்று எட்டு கிராமங்கள் உட்காரட்டும், தொண்ணூற்று எட்டு கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றுங்கள், தொண்ணூற்று எட்டு கிராமங்களில் பலகை வையுங்கள், சுவரொட்டி போடுங்கள், தொடர்ச்சியாக நடத்துங்கள், அப்போதுதான் நிலத்தைக் காப்பாற்ற முடியும். நூறு வருடங்களாக, இருநூறு வருடங்களாக, முந்நூறு வருடங்களாக இந்த மண்ணிலே நாங்கள் வாழ்ந்து இந்த மண்ணை நாங்கள் ஒரு பொன்னிலப் பூமியாக மாற்றியிருக்கின்றோம். எப்படி விட்டுப் போவோம் என்று இந்த அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்க வேண்டும்.

அன்பான பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் மீது எனக்குப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் போராட்டக்காரர்கள், இந்த மண் ஒரு போராட்ட பூமி, எவ்வளவோ பெரிய அடக்குமுறையை எதிர்கொண்டிருக்கிறீர்கள். வெள்ளைக்காரனை எதிர்கொண்ட மண் இது. நூறு வருடத்திற்கு முன்பு, 1920-ல் இதேபோல கைரேகைச் சட்டம் என்ற ஒரு மோசமான சட்டத்தை பெருங்காமநல்லூரில் கொண்டு வந்தான். அந்த மக்கள் ஒன்று கூடிச் சொன்னார்கள், “நீ சொல்லக்கூடிய ரேகைச் சட்டத்தை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது” என்று சொன்னார்கள், எதிர்த்து நின்றார்கள். எவ்வளவு கொடுமையான சட்டம், அன்றைக்கு வெள்ளைக்காரன் எவ்வளவு கொடுமை செய்தான். ஆண்கள் எல்லாம் ஊர் மந்தையில் வந்து மாலை ஐந்து மணிக்கு மேல் படுக்க வேண்டும், வீட்டிற்குப் போகக்கூடாது, பக்கத்து ஊருக்குப் போக வேண்டுமென்றால் ராதாரிச் சீட்டு வாங்கிக் கொண்டு போக வேண்டும். எவ்வளவு கொடுமைகள்? கோழி திருடன் என்று சொல்லி வழக்கு போட்டு நாடு கடத்திய வழக்கெல்லாம் நடந்தது. மரண தண்டனை, ஆயுள் தண்டனை, ஊர் கடத்துவது, நாடு கடத்துவது நடந்தது. இதை எதிர்த்து அந்த மக்கள் பல போராட்டம் செய்தார்கள்.
பெருங்காமநல்லூரில் ஒரு முடிவு கட்டுவோம் என்று சொல்லி அந்த மக்கள் வந்து நின்றார்கள், எதிர்த்து நின்றார்கள். அவன் துப்பாக்கியோடு வந்தபோது வெறும் கையோடு எதிர்த்து நின்றார்கள். அத்தனை மக்களையும் சுட்டுக் கொலை செய்தார்கள், பதினாறு, பதினேழு பேரைச் சுட்டுக் கொலை செய்தார்கள். அந்தப் போராட்டக் களத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருக்கக்கூடிய சமயத்திலே இந்தக் காவல்துறைக்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் அச்சப்படாமல் ”மாயக்காள்” என்கின்ற ஒரு வீரப் பெண் (நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், மாயக்காள் என்கின்ற அந்த வீரப் பெண், அவருடைய புகைப்படம் கிடையாது, ஆனால் மாயக்காள் என்கின்ற பெயருக்கான வரலாறு இதுதான்) வெள்ளைக்காரன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கும் பொழுது அடிபட்டு, துடித்து வீழ்ந்த போராட்டக்காரர்களை, இந்த மண்ணின் மைந்தர்களை, அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த மாயக்காள் என்கின்ற அந்த அம்மா தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஆளாகப் பார்த்து, பார்த்துத் தண்ணீரைக் கொடுத்தார்கள், உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடினார்கள். அந்த மாயக்காளை அடித்தார்கள், துப்பாக்கியில் இருக்கின்ற கத்தியால் குத்திக் கொலை செய்தார்கள். ஆனாலும் அந்த மண் தலை வணங்காமல் நின்றது, அந்த மண் தலை வணங்கவில்லை.
பெருங்காமநல்லூர் படுகொலையை முடித்ததற்குப் பிறகு அந்த மக்களை எல்லாம், கைது செய்யப்பட்டவர்களை எல்லாம், சங்கிலி கட்டி அதே உசிலம்பட்டி, திருமங்கலம் வழியே நடத்தியே கூட்டிப் போனான், மிரட்டினான், ஊர் கிராமத்தை மிரட்டினான், யாரும் ஆதரவு தரக்கூடாது என்று சொன்னான். ஆனாலும் அந்த மக்கள் திரண்டு நின்றார்கள், அந்தக் கருப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டினார்கள். அந்த வரலாறு நம் வரலாறு. வெள்ளைக்காரனையே பார்த்து விட்டோம், நீ யார்? நமக்கு வரலாறு இருக்கிறது. இது மாதிரி எத்தனையோ வரலாறு இருக்கிறது. இந்த மண்ணில் சாதி, மதம் கடந்து போராடியிருக்கிறோம்.

சாதி, மதம் கடந்து போராட்டக் களத்தில் நின்றிருக்கிறோம். வரலாறு சொல்ல வேண்டுமென்றால் ஒரு இரவு முழுக்க நான் சொல்ல வேண்டியிருக்கும். ஒருநாள் வருகிறேன், உங்கள் போராட்டத்திற்கு வந்து வரலாறு சொல்கிறேன். எப்பேர்ப்பட்ட போராட்ட வரலாறு நமக்கு இருக்கிறது, சாதி, மதம் கடந்து போராடிய வரலாறு, நமக்கான வரலாறு.
அன்பானவர்களே, எதற்கும் பயப்படாதீர்கள். தமிழன் எதற்கும் பயந்ததில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கே தன் நாட்டைக் காப்பாற்றப் பிரபாகரன் வழியில் நின்றார்களே, அதுதான் தமிழன். இந்திய அரசாங்கத்திற்குச் சொல்கிறோம், என் வரலாற்றைத் தோண்டிப் பார்க்காதே, எங்களை சீண்டிப் பார்க்காதே. எங்கள் வரலாறு வேறு, நாங்கள் எதற்கும் பயந்தவர்கள் கிடையாது. எல்லாச் சமூகமும் சாதி, மதத்தைக் கடந்து ஒன்றாக இருக்கிறது. எல்லோரும் ஒன்றாக நின்று போராட்டம் நடத்தியிருக்கிறோம், போர் புரிந்திருக்கின்றோம், சாதி, மதத்தைப் பார்க்கவில்லை, எல்லாச் சாதிக்காரனும் ஒன்றாகச் சண்டை போட்டிருக்கிறான். ஒரு பெரிய வரலாறு நமக்கு இருக்கிறது. அந்த வரலாற்று மண் இந்த மண், இந்த மண்ணை அவன் சீண்டிப் பார்க்கிறான், விட்டுவிட முடியாது. இந்த மண் எங்களுக்குச் சொந்தமானது, இந்த மண் எங்களுக்குச் சொந்தமானது, இதை ஒரு நாளைக்கும் விட்டுத் தர முடியாது, விட்டுத் தரக்கூடாது.
ஆக அன்பான பெரியோர்களே, தாய்மார்களே, நாம் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம், எந்த ஊர் வேண்டுமானாலும் இருக்கலாம், எந்தச் சமூகத்தைச் சார்ந்தும் இருக்கலாம், ஆனால் நாம் தமிழர்கள், இந்த மண் தமிழ்நாடு. இந்தத் தமிழ்நாட்டில் ஒரு பிடி மண்ணை நாம் கொடுக்க முடியாது. யார் இந்தத் தில்லிக்காரன்? நமக்கும் தில்லிக்காரனுக்கும் என்ன சம்பந்தம்? என்ன சம்பந்தம்? நாம் கடினப்பட்ட காலத்தில் அவன் வந்தானா? ஏரிக்குத் தண்ணீர் விடவில்லை, குறுவை சாகுபடி இல்லை, தஞ்சாவூர் டெல்டாவில் வறட்சி இருக்கிறது, வந்து கேட்டானா? முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்குக் கேரள அரசு நின்ற பொழுது தில்லிக்காரன் வந்து நின்றானா, கேள்வி கேட்டானா? எதற்காக இடிக்கிறாய், ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகிப் போய்விடும், கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் போய்விடுவார்கள் என்று கேட்டானா?
அன்றைக்குப் பெரும் பஞ்சம் வந்தபோது, அந்தப் பஞ்சத்திலே இந்த மக்கள் இலட்சம் இலட்சமாய் மடிந்தார்கள், அதைப் பார்த்துத்தானே அணை கட்டினார்கள். அன்றைக்கு ஒரு வெள்ளைக்காரன் மனம் ஈரமாகி, இந்த மலையேறி நமக்கென்று ஒரு அணையைக் கட்டி, அந்த ஆற்றைத் திருப்பித் தண்ணீரைக் கொடுத்து நம்மைக் காப்பாற்றினான். அந்த வெள்ளைக்காரனுக்கு இருக்கக்கூடிய ஈர மனம் இந்த உச்சநீதிமன்றத்திற்கு இல்லை. அந்த வெள்ளைக்காரன் நமக்காக நின்றான். இவனுக்கு என்ன? நாம் இந்தியன் என்று சொல்கிறான், நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம், விடுதலை அடைந்துவிட்டோம் என்று சொல்கிறானே, என்னுடைய நிலத்தை எதற்காக எடுக்கிறாய், என்னைக் கேட்காமல் ஏன் எடுக்கிறாய் என்று சொல்லுங்கள். நம் வரலாறு பெரிய வரலாறு.

ஆக அன்பானவர்களே, பெரியோர்களே, இந்த மண்ணைக் காக்கக்கூடிய போராட்டத்தில் நாங்கள் என்றைக்கும் கூட நிற்போம். என்னோடு தோழர்கள் வந்திருக்கிறார்கள், பல ஊர்களிலிருந்து வந்திருக்கிறார்கள், அவர்கள் யாரும் அந்த ஊரைப் பார்த்ததில்லை, ஆனால் அந்த ஊருக்காக உயிரைக் கொடுப்பார்கள், போராட்டம் நடத்துவார்கள். எங்களுடைய இயக்கத்திற்கு மே பதினேழு என்று ஏன் பெயர் வைத்தோம் என்றால், ஈழத்தில் ஒரு இலட்சம் தமிழர்களைத் துடிக்கத் துடிக்க இரண்டாயிரத்து ஒன்பதில் சிங்கள அரசு படுகொலை செய்தது. அதை மறந்துவிடக்கூடாது. எப்படிப் பெருங்காமநல்லூரில் நடந்ததோ, அதுபோல முள்ளிவாய்க்காலில் நடந்த அந்தப் பெரும் படுகொலையை நாம் மறக்கக்கூடாது என்று சொல்லி எங்கள் அமைப்புக்குப் பெயரே மே பதினேழு இயக்கம் என்று பெயர் வைத்துவிட்டோம். நாங்கள் வீதியிலும் பேசியிருக்கின்றோம், தலைநகரிலும் பேசியிருக்கிறோம், தில்லியிலும் பேசியிருக்கிறோம், ஐரோப்பாவில் இருக்கக்கூடிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அவையிலும் பேசியிருக்கிறோம்.
உள்ளூர் மட்டுமல்ல, உலக அளவிலும் பேசக்கூடிய எங்கள் அமைப்பு இந்தப் போராட்டத்தில் உங்களோடு துணை நிற்கும். என்ன பிரச்சினை வந்தாலும் உங்களோடு நிற்கும். வழக்கு வந்தால் ஏற்றுக் கொள்வோம். ஒன்றா இரண்டா, ஐம்பத்து ஆறு வழக்குகள் இருக்கின்றன. இதே மாதிரிப் போராட்டத்திற்காக ஐம்பத்து ஆறு வழக்குகள் போட்டிருக்கிறார்கள். ஒன்றும் பண்ண முடியவில்லை, ஒன்றும் பண்ண முடியாது. இந்த வழக்கிற்கு எந்த மரியாதையும் கிடையாது, பயந்துவிடாதீர்கள். எனக்குக் குடும்பம் இருக்கிறது, குழந்தை இருக்கிறது, அவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இவன் வழக்கு நம்மை ஒன்றும் செய்யாது. ஏனென்றால் நான்கு திசைகளிலும் வழக்கு போட்டான், பல வழக்குகள் போட்டான், நீதிமன்றத்தில் எதுவும் நிற்காது. எதற்கும் ஆதாரம் கிடையாது. ஏனென்றால் நம் மண்ணைக் காப்பாற்ற நாம் போராடுகிறோம். இவன் யார்? வழக்கு போடுவது வெள்ளைக்காரனா? இல்லை, கொள்ளைக்காரன். கொள்ளைக்காரன் போடுகின்ற வழக்கெல்லாம் நிற்காது.அதனால் பயப்படாதீர்கள், நாம் தைரியமாக நிற்போம், நாங்கள் உங்களோடு நிற்போம். இந்தப் போராட்டக் களத்திற்கு வருவோம், என்ன ஆனாலும் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம். அன்பான தோழர்கள் அனைவருக்கும், பெரியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், போராட்டக் களத்தில் இருக்கக்கூடிய போராளிகளுக்கும் எங்கள் மே பதினேழு இயக்கத்தினுடைய புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்து அமைகிறேன். நன்றி, வணக்கம்!!