வங்கக்கடல் வென்ற சங்கத் தமிழோன் வ.உ.சி

இந்திய விடுதலைப்போரில் எண்ணற்றவர் பெயர்கள் இடம்பெற்றாலும் எவர்க்கும் இல்லா சிறப்பு ஒரு தமிழனுக்கு மட்டுமே உண்டு. ‘ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மட்டும் அகன்றால் போதும்’ என்றளவில் அனைவரும் போராடிய போது, ஆங்கிலேய பொருளாதாரத்திற்கு எதிராக கப்பல் வணிகம் நடத்திய சீரிய சிந்தனையாளர், செந்தமிழ் உணர்வாளர், ‘கோரல் மில்’ போராட்டத்தின் தலைமகன், கப்பலோட்டியத் தமிழர், “விரைவினில் திரும்புவேன்; விடாதீர் சுதேசியம்” கூறி சிறைபட்டு செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களே அத்தமிழர்.

தமிழ்நாடு பெற்றெடுத்த தன்னிகரில்லா தலைவர்களில் ஒருவரான வ.உ.சிதம்பரனாரின் நினைவுநாள் இன்று.

ஐயா வ.உ.சி அவர்கள் மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர்.  எளிய மக்களுக்கும் புரியும் வண்ணம் அரசியலை எடுத்துரைப்பதில் வல்லவர் என்பதை அவரது கட்டுரைகளை தொகுத்து வெளியிட்ட பொ. திருக்கூடசுந்தரம் பதிவிட்டுள்ளார்.  விடுதலை உணர்வை பொங்கி எழச் செய்யும் அவரது பேச்சை பற்றிக் கூறும்போது, “அந்நியர்களின் பொருளாதார சுரண்டலை தடுக்கும் படியும், நாட்டுப்பற்று அனைவருக்கும் எவ்வளவு இன்றியமையாதது என்பதையும் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவர் பேச, மக்கள் உவகையுடன் கவனித்து வந்தனர்” என்று ‘நான் கண்ட வ.உ.சி’ நூலை தொகுத்த எஸ்.வையாபுரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை கோரிக்கைகளை முன்னிருத்தி வ.உ.சி போராடிய காலத்தில் அவரது மேடை பேச்சுகளால் கவரப்பட்டு சுதேசி உணர்வு உருவான எளிய மக்கள் ஏராளம். அந்த காலகட்டதில் முடிதிருத்தும் தொழில் செய்துவந்த ஒரு ஏழை தொழிலாளியிடம் இரங்கசாமி ஐயங்கார் என்ற பார்ப்பனர் முகச்சவரம் செய்யவந்தார். அந்த பார்ப்பனர் ஒரு ஆங்கிலேய ஆதரவாளர்.  கோரல் மில் போராட்டத்திற்கு எதிரான கருத்து கொண்டவர். அந்தப் போராட்டத்தை அடக்க வெளியூர் காவல்துறையை கொண்டுவர வேண்டும் என்று அன்றைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கருத்து தெரிவித்திருந்தார். இதை இந்த பார்ப்பனர் ஆதரித்த செய்தி முடிதிருத்தும் தொழிலாளிக்கு தெரிந்துவிட்டது. அந்த பார்ப்பனரிடம் “இது உண்மைதானா?” என்று அத்தொழிலாளி கேட்டார். அதற்கு அந்த பார்ப்பனரோ ஆணவத்துடன் “இது உன் வேலையல்ல” என்று கூறவே, அத்தொழிலாளியும் “ உனக்கு சவரம் செய்வதும் என் வேலையல்ல” என்று கூறி மறுத்துவிட்ட செய்தி அன்றைய பத்திரிக்கையில் செய்தியாக வந்துள்ளது.  ஏழைத் தொழிலாளிக்கும் சுதேசி அரசியல் உணர்வு மிஞ்சிட காரணமாக இருந்தது வ.உ.சியின் மேடை பேச்சுகளே. 1908ம் ஆண்டு பின்ஹே என்ற ஆங்கிலேய நீதிபதி வ.உ.சியின் மேடை பேச்சுக்களை தன் தீர்ப்பில் குறிப்பிட்டே அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை தந்தார் என்றால் வ.உ.சியின் மேடை பிரச்சாரத்தின் வலிவை நாம் புரிந்து கொள்ள முடியும்.

தனித்தமிழ் நடைமேல் பெரும்பற்று கொண்டவர் வ.உ.சி.  பார்ப்பன பத்திரிக்கையான சுதேசமித்தரன் முன்நிறுத்திய ஆங்கிலம் கலந்த தமிழ் நடைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர்களில் வ.உ.சியும் ஒருவர். வடமொழி சொற்களை அதிகம் தெரிந்து வைத்திருப்பதும், தமிழோடு கலந்து பேசுவதும் உயர்வாகவும், அதுவே தமிழுக்கு அழகியல் என்றும் கருதப்பட்ட ‘மணிப்ரவாள நடை’ புழக்கதில் இருந்த காலகட்டம் அது. தமது வடமொழி பெயரான வ.வே. சூரிய நாராயண சாஸ்திரிகள் என்ற பெயரை தமிழில் மாற்றிக் கொண்ட பரிதிமாற் கலைஞர் கூட ஆங்கில மொழி சொற்களை வடமொழியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவதற்கு பதிலாக ஆங்கில சொற்களையே பயன்படுத்தலாம் என்றே குறிப்பிட்டாரே தவிர தனித்தமிழ் நடையை முன்நிறுத்தவில்லை (சான்று நூல்: தமிழ் மொழியின் வரலாறு, ஆசிரியர்:  பரிதிமாற் கலைஞர்). இத்தகைய காலகட்டத்தில் வ.உ.சி அவர்கள் தமிழ் மொழிவளத்தின் மேல் பெரும் நம்பிக்கை கொண்டவராக விளங்கினார். தமிழில் தொழிற்நுட்ப சொற்கள், கலைச்சொற்கள் உருவாக்கம் குறித்தான அவரது பார்வை இதனை வெளிப்படுத்திக்கிறது.

வ.உ.சி அவர்களின் சம காலத்தில் வாழ்ந்த சுப்பிரமணிய சிவா, பாரதியார், வ.வே.சு. ஐயர், இராஜாஜி ஆகியோர் புது சொற்களை உருவாக்குவதற்கு வடமொழி சொற்களை பயன்படுத்துதல் போன்ற முன்னெடுப்புகளையே கூறினர்.  வ.உ.சி அவர்களோ “ஒரு குறிப்பான பொருள்தரும் சொல்லை உருவாக்க நமது மொழியில் சொற்கள் இல்லை என்று இலக்கணம் படித்த எவரும் கூற முடியாது” என்று கூறுகிறார். அதற்கேற்றார் போல் வ.உ.சியின் பிற்காலத்தவராகிய மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் ‘தமிழ்மொழி வேர்ச்சொல் ஆய்வு’ தமிழிலேயே அனைத்து கலைச்சொற்களையும் உருவாக்க முடியும், அதற்கு வடமொழி என்ற களை தேவையில்லை என்று நிரூபித்துள்ளது.

பிற மொழி உச்சரிப்புகளை பயன்படுத்த முடியாத அளவுக்கு தமிழில் எழுத்துகளுக்கு (உச்சரிப்பின் அடிப்படையில்) குறைபாடு உள்ளது என்று பாரதியார் கூறியபோது அதை கடுமையாக மறுத்தவர் வ.உ.சி அவர்கள்.

“தேவபாஷை என்றும், பூரணபாஷை என்றும், எல்லா பாஷைகளுக்கும் தாய் பாஷை என்றும் சொல்லப்படும் சம்ஸ்கிருதத்திலும், பல புதுமைகளை கொண்டிருக்கும் பாஷை என்று சொல்லப்படும் வங்காள பாஷையிலும் ‘ழ, ற, ன, F, Z’ உள்ளிட்ட உச்சரிப்புகளை பயன்படுத்தும் அளவிற்கு மாற்றம் கொண்டு வந்த பின்பு தமிழில் மாற்றம் செய்யத் துணிவார்களாக” என்று எழுதினார்.

மேலும் “வட மொழி ஆகமங்களை ஏற்றுக் கொண்டு சிவாலயங்களில் நடத்தப்படுகின்ற வழிபாட்டு முறைகளிலிருந்து சைவர்கள் விடுபட்டு பார்ப்பனர்கள் பிடியிலிருந்து வெளியே வரவேண்டும். ஜாதி பேதமே காணாத திருக்குறள் தமிழ் மக்களிடத்தில் சென்று சேரவேண்டும்” என்று கூறியுள்ளார். திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரை அவருக்கு மனநிறைவைத் தரவில்லை. ஏனெனில் திருக்குறளை நேரிய பொருளோடும், பிழைகள் இன்றியும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். திருக்குறளை முற்போக்கு கருத்துள்ள மக்கள் இலக்கியமாக அவர் கருதியதால், எளிய நடையில் திருக்குறளுக்கு உரை எழுதினார் வ.உ.சி.

வ.உ.சிக்கு அமுதத் தமிழ் முகம் ஒன்று என்றால், அதிகாரத்திக்கு அடங்காத அரசியல் முகம் மற்றொன்று (ஆனால் அதிகார மற்றும் பதவி பற்று மட்டுமே கொள்கையாகக் கொண்ட காங்கிரஸில் அவர் பங்கெடுத்ததுதான் காலத்தின் கொடுமை. அன்று இந்திய விடுதலை போராட்டம் என்ற கருத்தில் நாடு முழுவதும் பரவி இருந்த ஒரே இயக்கம் காங்கிரஸ் என்பது அதற்கு காரணமாக இருக்கலாம்). பொருளாதாரத் தன்மையில் அன்னியர் சுரண்டலை தடுக்க சுதேசி வாணிபம் எனும் உள்நாட்டு பொருளாதார கொள்கையை உயர்த்திப் பிடித்து “சுதேசியம் ஒன்றே சுகம் பல அளிக்கும்” என்று அவருடைய தன்வரலாற்றில் எழுதினார்.

இதன் முத்தாய்ப்பாய் 1882ம் ஆண்டு ‘சுதேசி ஸ்ட்ரீம் நாவிகேஷன் கம்பெனி’ எனும் கப்பல் வணிக போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கினார்.  தமிழர்க் கடலாம் வங்கக் கடலில் தூத்துக்குடிக்கும், இலங்கை கொழும்புக்கும் இடையில் கப்பல் போக்குவரத்தை தொடங்கினார். ஆங்கிலேய கப்பல் நிறுவனம் கட்டணமின்றி சேவை தர தயாராக இருந்தாலும் தமிழர்கள் வ.உ.சியின் சுதேசி கப்பலையே நாடினர்.  வ.உ.சி அவர்களின் சொல்லுக்கும், பெயருக்கும் தமிழர்கள் இடையே அத்தகைய மதிப்பு இருந்தது.

அதன் பின் நடந்த கோரல் மில் போராட்டத்தில் வ.உ.சி காட்டிய ஊக்கம் ஆங்கிலேய அரசை அதிர்ச்சிக்குள்ளக்கியது.  வ.உ.சியை முடக்கிட முனைப்புடன் செயல்பட்டது.  அப்பொழுது ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டிருந்த விபின் சந்திரபால் விடுதலையை கொண்டாட 1908ம் ஆண்டு திருநெல்வேலி  மற்றும் தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டங்களில் வ.உ.சி பேசினார்.  அதனை காரணம் காட்டி வ.உ.சி அவர்களை தேசத்துரோக குற்றம் சாட்டி ஆங்கிலேய அரசு கைது செய்தது. வழக்கு இறுதியில் இரட்டை ஆயுள் தண்டனை தரப்பட்டது. அதுவரை இந்தியாவில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையை ஆங்கிலேய அரசு தந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின் உயர்நீதிமன்றத்தால் இந்த தண்டனை குறைக்கப்பட்டது.

தண்டனை காலத்தில் ஆங்கிலேய சிறை அதிகாரிகளால் அவர் கடுமையாக பழி வாங்கப்பட்டார். கோவை சிறையில் சணல் கிழிக்கும் எந்திரத்தை கைத்தோல் உரியும் அளவுக்கு சுற்றும்படி வேலை தரப்பட்டது.  எண்ணெய் ஆட்டும் செக்கு எந்திரத்தை மாட்டுக்குப் பதில் இழுக்கும் கொடுமைகளை அனுபவித்தார்.

நான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைவாசத்திற்கு பின் 1912ல் விடுதலை பெற்றார். தன் விடுதலைக்குப் பின் கடும் வறுமையை சந்தித்தார்.  வ.உ.சி சிறைபட்டிருந்த காலத்திலேயே அவரது பெரும் கனவான கப்பல் நிறுவனம் நொடிந்து போனது. கப்பல் நிறுவனத்தில் பங்குதாரராய் இருந்த பிற பணக்காரர்களுக்கு வ.உ.சி அவர்களுக்கு இருந்த சுதேசி கொள்கை இல்லை.  மாறாக அந்த நிறுவனத்தை இலாபம் கொழிக்கும் தொழிலாக மட்டுமே கண்டனர்.  அதன் விளைவாக தொடக்கத்தில் இருந்தே வ.உ.சியை அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் மீறினால் கப்பல் நிறுவன தலைமைப் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்தனர். வ.உ.சி சிறைப்பட்ட பின்பு அந்த பேரசைக்காரர்கள், எந்த ஆங்கிலேய கப்பல் நிறுவனத்தை எதிர்த்து வ.உ.சி கப்பல் நிறுவனம் தொடங்கினாரோ அதே ஆங்கிலேய நிறுவனத்திடமே சுதேசி கப்பல் நிறுவனத்தை விற்றனர்.

இவை அனைத்தும் வ.உ.சி அவர்களை வெகுவாக பாதித்தது.  ஆயினும் விடுதலை அடைந்த பின்பு அவர் சோர்ந்து விடவில்லை.  தனது வழக்கறிஞர் பணி மூலம் விடுதலை போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு வாதாடினார். தொழற்சங்கங்கள் உருவாகக் காரணமானர்.  சென்னையின் பழமையான தொழற்சங்களில் ஒன்றான தபால் ஊழியர் சங்கத்தின் உருவாக்கத்தில் வ.உ.சியின் பெரும்பங்கு உண்டு. 

வ.உ.சியின் தமிழ்த்தொண்டும், அரசியல் தொண்டும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு அடிப்படையானவை.  அவரது பொருளாதார பார்வையை உள்ளடக்கிய விடுதலை கொள்கை அதுவரை யாரும் கண்டிராத ஒன்று.  அதற்காக வெறுமனே பேசிக்கொண்டிராமல் அதற்கென ஒரு செயல் வடிவம் தந்தவர் வ.உ.சிதம்பரனார்.

1936 ம் ஆண்டு நவம்பர் 18 ம் நாள், தமது 64 வது வயதில் தமிழ்ச் சமூகத்தில் இருந்து இறுதி விடை பெற்ற ஒப்பற்ற தலைவர் வ.உ.சிதம்பரனார்.  எவர்க்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட அப்பெருமகனாரின் நினைவுநாளில் தற்சார்பு பொருளாதார தமிழ்தேசியத்தை மீட்டெடுப்போம் என்று உறுதி பேணுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »