உலக மீனவர் நாள் – தமிழரின் நெய்தல் வாழ்வு அன்றும் இன்றும்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21 ம் நாள் ”உலக மீன்வள நாள்” (World Fisheries Day) ஆக கருதப்படுகிறது. எவ்வாறு காடுறை சமூகம் இன்றி காடுகள் இல்லையோ, எவ்வாறு உழவர்கள் இன்றி கழனிகள் இல்லையோ அப்படி கடலோடிகள் இன்றி கடலும் இல்லை மீனவர் இன்றி மீன்வளமும் இல்லை. ஏனென்றால் தமிழர்களின் ஐந்துத்திணை நிலங்களில் கடலோடிகளின் நெய்தல் திணை மீதான பிணைப்பு எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு பின்னிப்பிணைந்தது.

தமிழர் மரபில் நெய்தல் திணை வாழ்வியல்

திணை என்பது ஓர் நிலவகை, அந்நிலம் சார்ந்த விலங்குகள், தாவரங்கள், மக்கள், அந்நிலத்துக்குறிய தொழில் மற்றும் உணவு மரபுகள், அந்நில மக்களின் அகப்புற உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.  திணை என்பது வெறும் நிலவியல் சார்ந்தது அல்ல, அது மானுடவியல் சார்ந்தது.

ஐந்துத் திணைகளிலும் நெய்தல் திணை முற்றிலும் மாறுபட்டது. சங்க இலக்கியத்தில் நெய்தல் குறித்த செய்திகள் நிரம்பிக் கிடக்கின்றன. தொல்காப்பியம் நெய்தல் நிலத்தை “வருணன் மேய பெருமணல் உலகம்” என்றே வருணிக்கிறது. கடலும் கடல் சார் நிலமுமே நெய்தல் என்று அறியப்பட்டாலும் கடலில் மனிதர்கள் நிரந்தர வாழ்வை மேற்கொள்ள முடியாது என்பதால் ‘பெருமணல் உலகம்’ என்று அழைக்கப்படும் கடற்கரையில் வசிக்கும் மக்களே நெய்தல் குடிகள் ஆவர்.

சங்க இலக்கியங்கள் கூற்றுப்படி மழை தெய்வமாக கருதப்படும் வருணனே நெய்தல் நிலக் கடவுளாக கருதப்படுக்கிறான். ஆயினும் நெய்தல் மக்களுக்கு மழையால் மருதத்திணைக்கு கிடைப்பது போல் பெரும் நன்மை கிடையாது.

மீன் பிடிப்பதும், உப்பு விளைவிப்பதுமே நெய்தல் மக்களின் முதன்மைத் தொழிலாக இருந்து வருகிறது.  இவை இரண்டுக்குமே மழை எதிரி என்பதால் மருதத்திணை மக்கள் கேட்பது போல ‘மாதம் மும்மாரியோ’ ‘திரண்டுவரும் காவிரியோ’ நெய்தல் திணையத்தவர் கேட்பதில்லை. சிறு அளவிலான நிலம் மட்டுமே வேளாண்மை செய்ய பயன்படும் என்பதால் பெரும் ஆறுகளோ, நீர் நிலைகளோ தேவையில்லை. பயன்பாட்டு நீர் ஆதாரமாக சங்க இலக்கியங்களில் ‘மணற்கேணி’  என்று அழைக்கப்படும் நீருற்றே காட்டப்படுகிறது.

நெய்தல் திணையில் ஆண், பெண் இருவருக்கும் சமமான சமூக நிலையே நிலவி வந்துள்ளது.  ஆண் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றுவிடுவதால், நெய்தல் சமூக அன்றாட ஒழுங்கு பெண்களை சார்ந்தே இருந்து வந்துள்ளது. மீனாக இருந்தாலும் சரி, உப்பாக இருந்தாலும் சரி இவற்றின் உற்பத்திக் கருவி (Means of Production) கடலாக இருப்பதால் மருதத்திணை போல் அல்லாமல் தனிச்சொத்துடைமை அற்ற சமூக அமைப்பாகவே நெய்தல் இருந்துள்ளது. சொத்துடைமை பேணாச் சமூகம்  என்பதால் சங்க இலக்கியம் கூறும் ‘வரைவின் மகளிர்’ கிடையாது. எனவே ஆணுக்கும் பெண்ணுக்கும் ஊடல் உண்டாவதில்லை. மாறாக கடலுக்கு செல்லும் ஆண் (தலைவன்) பத்திரமாக நிலம் திரும்ப வேண்டி பெண் (தலைவி) கவலை கொள்வதே நெய்தல் மகளின் மனஉணர்வாக சங்க இலக்கியங்களில் காட்டபடுக்கிறது. இதனை திணை உரிப்பொருள் என்று கூறுவர். நெய்தல் திணைக்கான உரிப்பொருள் ‘இரங்கல்’ (கவலைப்படுதல்) என்று கூறப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் புலவர் அம்மூவனார் பாடிய ஐங்குறுநூற்றில் 100 பாடல்கள் நெய்தல் திணை பாடல்களாகும். புலவர் நல்லந்துவனார் பாடிய கலித்தொகையில் 33 நெய்தல்கலிப் பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் வழியே நெய்தல்திணைத் தலைவன் துறைவன், சேர்ப்பன், புலம்பன், கொண்கன் ஆகியப் பெயர்களால் அழைக்கபடுகிறான் என்றும், நெய்தல் நில ஊர்ப்பெயர்கள் பட்டிணம், பாக்கம், குப்பம் என்ற விகுதியைக் கொண்டு அழைக்கபடுகின்றன என்றும் அறிகிறோம்.

நெய்தல் நிலத்தின் அழகியலை பற்றி சங்க இலக்கியம் வெகுவாக பாடியுள்ளது. கடற்கரையை நீண்ட மணல்வெளியை கொண்ட நிலம் என்பதாக ‘பெருமணல் உலகம்’ என்று தொல்காப்பியம் கூறுகிறது. மின்னக்கூடிய வெள்ளை முத்துக்கள் அலைகளால் கொண்டு வரப்பட்டு நிறைந்த மணல்வெளி என்ற பொருளில் ‘திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்’ என்று ஐங்குறுநூறு கூறுகிறது. கடல் நீரை ‘பெருநீர், நளிநீர் என்றும் குறிப்பிடுகிறது. கடற்கரையில் சிறு பெண்கள் வீடு கட்டி விளையாடுவதை ‘சிற்றில்கட்டி விளையாடல்’ என்று விளிக்கிறது. அந்த வீட்டை கடல் அலை வந்து சிதைப்பதை ‘வெண்தலைப் புணரி இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்” என்று அகநானூறு கூறுகிறது.

திரைப்படங்களில் கதையின் நாயகி ஒரு செடியின் சிறு கிளையில் இருக்கும் இலைகளை பறித்து எண்ணி ஒற்றைப்படையில் இருந்தால் தன் காதல் வெற்றிபெறும் என்பதாக அமைக்கப்பட்ட ‘ஒற்றையா, இரட்டையா’ என்ற காதல் உணர்வுகள் நெய்தல் நிலத்தின் தனித்தன்மை வாய்ந்த காதல் விளையாட்டேயாகும். கடல் மணலில் வட்டங்களை வரைந்து அவை இரட்டைப் படையில் அமைந்தால், கண்ணை மூடி வரையும் வட்டம் தொடங்கிய இடத்திலேயே சரியாக இணைந்தால் தலைவன் வருவான் என்ற விளையாட்டை நெய்தல் மகளிர் விளையாடியுள்ளனர். இதற்கு ‘கூடல் இழைத்தல்’ என்று பெயர்.

இது தவிர்த்து மீனை காயவைத்து கருவாடு தயாரிக்கும் ‘மீன் உணக்கல்’ சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கருவாடு மற்றும் உப்பு ஆகியவையே அன்றைய பண்டமாற்று முறையில் நெய்தல் பண்டமாக இருந்துள்ளது. இது தவிர்த்து மீன் உணவு சமைக்கும் ‘மீன்கறி ஆக்கல்’ என்பதும் சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

நெய்தல் மக்கள் இயற்கையை தங்கள் உறவாக பார்த்திருக்கின்றனர். கடற்கரையில் இருந்த புன்னை மரத்தின் நிழலில் தலைவியிடம் காதல் மொழி பேச தலைவன் துணிய தலைவி தடுப்பதாக நற்றிணை பாடல் ஒன்று கூறுகிறது. தலைவன் தோழியிடம் காரணம் விழையவே, “இந்த மரம் அவள் தாய் சிறுமியாக இருந்த போது விதையாய் வைத்தது. இந்த மரத்தை அவளின் தங்கை என்றே தாய் அறிமுகப்படுத்தினாள்.  அவள் தங்கை அருகில் காதல் மொழி பேச நாணுகிறாள்” என்று தோழி கூறுவதாக அப்பாடல் அமைந்துள்ளது. தலைவன் தன்மேல் கொண்டிருக்கும் அன்பை “கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே” என்று தலைவை கூறுவதாக ஐங்குறுநூறு கூறுகிறது. இவ்வாறு நெய்தல் நிலா சமூகத்திற்கு தமிழ் இலக்கியங்களில் தனி இடம் இருந்திருக்கிறது.

நெய்தல் நிலம் இன்று!

அமைதிக்கும், அழகுக்கும் எடுத்துக்காட்டான நெய்தல் திணை இன்று அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தாலும், பாராமுகத்தாலும், முதலாளித்துவத்தின் சுரண்டலாலும், ஏகாதிபத்திய புவிசார் அரசியல் கொள்கைகளாலும் அழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன.

ஒப்பீட்டளவில் பார்க்கும் போது சிறு தீவுகளை தவிர்த்து பெரும்பாலான தேசங்களில் கடல் சார் தொழிலை நம்பி கடற்கரையில் வாழும் சமூகத்தின் அளவு சிறியது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 90% கடலோடு தொடர்பற்ற நிலம். கடலோடு தொடர்புடைய நிலம் 10% மட்டுமே. இந்திய மக்கள் தொகையில் 15% வரை இந்த 10% நிலப்பகுதியில் வாழ்கின்றனர். ஆனால் அதில் 1% குறைவானவர்களே கடலோடி சமூகமாகவும், கடல் சார் தொழில் செய்யும் சமூகமாகவும் உள்ளனர்.

அதேநேரம் இந்தியாவின் GDP இல் 4% கடல் சார்ந்த பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் இருந்து கிடைக்கிறது. இதில் மீன் பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் வளர்ப்பு வழியாக மட்டுமே ரூபாய் 3.68 லட்சம் கோடி கிடைக்கிறது. இதில் 30% வரை அதாவது வருடத்திற்கு ரூபாய் 1.104 லட்சம் கோடி மீனவர்களின் கடல் மீன் பிடிப்பால் கிடைக்கிறது.

அதாவது இந்திய சமூகத்தை வாழ்விடம் சார்ந்து இரண்டாக பிரிப்போமானால் கடலற்ற நிலத்தில் வாழும் 99% மக்களின் தனிநபர் (Per-Person) சராசரி பொருளாதார பங்களிப்பை விட 1% க்கு குறைவாகவே வாழும் மக்களின் தனிநபர் (Per-Person) பங்களிப்பு 4 மடங்கு அதிகம். அதிலும் 0.35% மட்டும் உள்ள மரபு சார் மீனவர்களின் (Marine Fisherfolk) தனிநபர் பங்களிப்பு மட்டுமே கடலசாரா மக்களின் பங்களிப்பை விட 2.4 மடங்கு அதிகம்.

இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மீனவர்களின் நலன் மோடி அரசினால் வாழ்வியல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. சிறு மீனவர்களைக் கடலிலிருந்து அப்புறப்படுத்தும் மீன்வள மசோதா, இறால் பண்ணை மற்றும் மீன்வளர்ப்பு அதிகாரத்தை மாநிலத்திடமிருந்து பறிக்கும் சட்டம் என, தொடர்ச்சியாக மீனவர்களைக் கடலிலிருந்து வெளியேற்றி, கடலைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் சட்டங்களையே மோடி அரசு இயற்றி வருகிறது.

மீனவர்களின் உரிமையைப் பறிக்கும் அதேவேளையில், தமிழக மீனவர்களின் உயிரையும் பறிக்கும் இலங்கையின் இனவெறியைக் கேள்வி கேட்கவும் டெல்லி தயாராக இல்லை. 800-க்கும் மேற்பட்ட மீனவர்களைப் படுகொலை செய்த இலங்கை இனவெறி அரசை எதிர்த்து, டெல்லி அரசுகள் இதுவரை எந்தக் கண்டனக் குரலையும் எழுப்பவில்லை.

மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கும்போதெல்லாம், மே 17 இயக்கம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறது. 2021-இல் கோடியக்கரை மீனவர் ராஜ்கிரண் கொல்லப்பட்டபோது, முதன்முதலாக மீனவர் உடலைக் கூறாய்வு செய்ய வைத்ததில் மே 17 இயக்கத்தின் பங்கு முக்கியமானது.

மீனவர்களுக்கான தொடர் போராட்டக் களத்தில் மே 17 இயக்கம் :

https://share.google/KyuoRIAh4IQbFOvPF

அது மட்டுமல்ல, “இனி மீனவர்களைத் தாக்கினால், தமிழ்நாட்டில் உள்ள சிங்கள நிறுவனங்களை முற்றுகையிடுவோம்” என்று ‘தாம்ரோ’ நிறுவனத்தை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் முற்றுகையிடும் போராட்டத்தை மே 17 இயக்கம் நடத்தியது. அதற்குப் பிறகு மீனவர்கள் மீதான தாக்குதல் நடைபெறவில்லை என்பதே முக்கியமானது.

தமிழ்நாட்டின் நெய்தல் திணையின் விழுமியங்களை உணர்ந்தவர்களாக மட்டுமல்ல, மீனவர்களைக் காக்கும் போராட்டத்திலும் நிற்பது தமிழர்களின் கடமை. மீனவர்களின் நாளான இன்று அவர்களின் உரிமையை காக்கும் களத்தில் நிற்போம். நெய்தல் திணை உயிர்ப்பை பேணுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »