
திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக விளக்கேற்றும் உச்சி பிள்ளையார் கோவில் தவிர, நில அளவைக் கல்லில் விளக்கேற்ற மதுரை மக்களே கேட்காத போது இந்துத்துவவாதிகள் கேட்டது ஏன்? மதவாத அரசியல் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்டதன் அறிகுறியா? “நாங்கள் தான் முருகனுக்கு உரிமையானவர்கள்” என்று சொல்லும் இந்துத்துவ அமைப்புகளுக்காக சொல்லப்பட்ட தீர்ப்பா? என அண்மையில் உச்ச நீதிமன்றம் கொடுத்திருக்கும் இடைக்கால உத்தரவு என்பது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ள உத்தரவின் படி, வரும் நவம்பர் 24 கார்த்திகை தீபம் அன்று மட்டும் சர்ச்சைக்குரிய எல்லைக்கல்லில் தீபம் ஏற்றலாம், அதற்கு மாவட்ட ஆட்சியரே ஆட்களை முடிவு செய்து, CISF எனும் துணை ராணுவப் படையின் துணையுடன் தீபம் ஏற்ற துணை புரியலாம் என்று கலெக்டருக்குப் பணியை கொடுத்துள்ளது உச்ச நீதி மன்றம்.
தமிழ்நாட்டின் காவல்துறை இருக்கும்போது தமிழ் நாட்டு அரசை அசட்டை செய்வது போலவும் மாநில அரசின் மீதான நம்பிக்கையின்மையை காட்டி அவமானப்படுத்தும் விதமாகவும், ஒன்றிய அரசின் துணை ராணுவப் படையை அழைப்பதற்கு அப்படி என்ன அவசரம், அவசியம் என சமூக ஆர்வலர்கள் தற்போது கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், கோவில் நிர்வாகத்தினரே இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு இடங்களில் தீபம் ஏற்றுவது ஆகம விதிப்படி தவறு என்பதே கோயில் நிர்வாகத்தினரின் கருத்து. இரண்டு இடங்களில் ஏற்றச் சொல்வது என்பது, ஒரே கோயிலுக்கு இரண்டு மூலவர் என்று சொல்வது போலாகும். எந்த ஆகமத்திலும் இரண்டு தீபத்தூண்கள் கிடையாது. ஒன்று உண்மையான தீபம், இன்னொன்று வெறும் காட்சிக்காக ஏற்றப்படும் தீ என்று ஆகிவிடும் என்பதுதான் கோயில் நிர்வாகத்தினரின் வாதம். அவர்களே இப்படி சொல்லும் போது, உச்சநீதிமன்றம் கூறியுள்ள இந்த தீர்ப்பு யாருக்கானது என்கிற கேள்வியும் எழுகிறது. மேலும் இந்த எல்லைக்கல்லில் தீபம் ஏற்றவேண்டுமென்றால் தர்காவிற்கு சொந்தமான படிகள் வழியாகத்தான் மேலேறி செல்லவேண்டும், என்பதை ஏன் வழக்கறிஞர்கள் எடுத்துச்சொல்லவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத்தின் போது, உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றுவது இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாத வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு, இந்து முன்னணியைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், மலையில் உள்ள தூணில் தான் (அது எல்லையைக் குறிக்கும் அளவைக்கல்) தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் சென்றார். ஆனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்பதால், கடந்த திமுக ஆட்சியில் அதை அனுமதிக்கவில்லை.
இந்த ஆண்டு, ஒரு நாள் தீபத்தின் போது மட்டும், அவர்கள் கேட்டபடி உச்சிப்பிள்ளையார் கோயிலிலும், கல்தூணிலும் தீபம் ஏற்றலாம், CISF துணையுடன் ஏற்றலாம் என்று தீர்ப்பு வந்துள்ளது. ஆனால் இது நிரந்தரத் தீர்ப்பு அல்ல, மீண்டும் இவ்வழக்கு குறித்து வாதங்கள் நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் அவசரமாக உத்தரவு கொடுத்துள்ளது.
ஏன் இந்த ஒருதலைப்பட்ச அவசர உத்தரவிட்டது என்ற சந்தேகம் சாமானியனுக்கும் வந்திருப்பதால், உச்சநீதிமன்றத்தின் மீது பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.
கோவிலில் இரண்டு இடங்களில் தீபம் ஏற்றுவது ஆகமவிதிப்படி தவறு என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டு கோவில்களின் ஆகமவிதியையோ, மதநல்லிணக்கத்தையோ பற்றிய புரிதல் டெல்லியில் இருப்பவர்களுக்கு இருக்குமா? இது நிரந்தரத் தீர்ப்பு இல்லை என்றாலும், இதை அடிப்படையாக வைத்தே, “நாங்கள் அந்தக் கல்லில் தீபம் ஏற்றிய வரலாறு இருக்கிறது” என்று சங்கிகள் வாதாட ஏதுவாகாதா?
தூண் அருகே சிக்கந்தர் தர்கா இருக்கிறது. அதற்கு எந்த இடையூறும் வரக்கூடாது. சிறுபான்மையினர் பாதிக்கப்படக்கூடாது. மத நல்லிணக்கம் காக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரலாம் என்பதை ஆராய்ந்து பார்த்துத் தானே தீர்ப்பு கொடுக்க வேண்டும்?
ஏற்கனவே பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்ற கொடுத்த தீர்ப்பில் இந்துத்துவ கும்பல்கள் வன்முறையை நிகழ்த்தி மசூதியை இடித்து தரை மட்டமாக்கியது. தற்போது திருப்பரங்குன்றத்தில் வழக்கில் இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாதது ஏன்?
- தமிழ்நாட்டு மக்களுக்குக் காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகத்தை நோக்கி, இப்படி ராணுவப் படை துணையுடன் அணையைத் திறக்கச் சொல்லாத உச்ச நீதிமன்றம், கலவரக் கும்பல்களின் வேண்டுதலை மட்டும் நிறைவேற்ற ஏன் துடிக்கிறது?
- கேரளத்தில் சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்பு என்ன ஆனது? அதை ஏன் உச்ச நீதிமன்றம் உடனடியாக CISF வைத்து அமல்படுத்த முன்வரவில்லை?
- மேலும், பல ஆண்டுகளாக வரலாற்றுத் தூணாக இருக்கும் எல்லைக்கல்லின் மீது எண்ணெயை ஊற்றித் தீபம் ஏற்றினால், அது தாங்காது, பழுதடையும் என்று தொல்லியல் வல்லுநர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், தர்காவுக்கும் தூண் உள்ள இடத்திற்கும் உள்ள இடைவெளித் தூரத்தைத் தவறாகச் சொல்லியிருப்பதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதைப் பற்றி எந்த ஆய்வும் நடத்தவில்லை உத்தரவிட்டது ஏன்?
இந்த எல்லைக்கல்லில் தீபம் ஏற்ற வேண்டுமென்றால், தர்காவுக்குச் சொந்தமான படிகள் வழியாகத்தான் மேலேறிச் செல்ல வேண்டும். அவர்களின் அனுமதி பெற்று தான் படிக்கட்டில் ஏற வேண்டும். அவர்களுக்கு எதிரான தீர்ப்பை கொடுத்துவிட்டு அவர்களிடமே அனுமதி பெறுவது என்பதைப் பற்றி நீதிமன்றம் அக்கறை கொள்ளவில்லை.
இப்படி பல பிரச்சனைகள் இருக்கும் போது ஆகம விதிகளை மீறி, சங்கிகளின் பாசம் நீதிதேவதையின் இரு கண்களிலும் காவித் துணியை வைத்து மறைத்துவிட்டதாகவே இந்த இடைகால உத்தரவு அமைந்துள்ளது என்பதே ஜனநாயக சக்திகளின் கருத்தாக இருக்கிறது.
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இங்கு இசுலாமிய மக்களும் தமிழர்களும் ஒற்றுமையாக, சகோதர மனப்பான்மையுடன் வாழ்கிறார்கள். இதை ஏற்க விரும்பாத இந்துத்துவக் கூட்டம், மத மோதலை உருவாக்கி RSS – பாஜகவின் அஜெண்டாவைக் கையில் எடுக்க ஆயத்தமாகிவிட்டது.
இதற்குத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று அனைத்து ஜனநாயக இயக்கங்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் கோயிலும் , தமிழர்களின் மரபும் காக்கப்பட வேண்டும். சிக்கந்தர் தர்காவையும் காக்க, தமிழ்நாடு அரசு உடனடியாகச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். மேலும் தமிழ்நாடு மதமோதல்களை ஒருபோதும் அனுமதிக்காத மாநிலமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற முயலும் இந்து மதவெறி கும்பல்களின் முயற்சியை முற்போக்கு அமைப்புகளுடன் மக்கள் இணைந்து முறியடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களை அமைதியாக வாழ வைக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது மே 17 இயக்கம்.