திருப்பரங்குன்ற விவகாரத்தில் தவெக அரசும் உறுதியாக நிற்க வேண்டும்! – திருமுருகன் காந்தி

மதுரை ”மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” ஒருங்கிணைக்கும் திருப்பரங்குன்றம் அநீதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் நவம்பர் 23, 2026 அன்று ஆற்றிய உரை:

மதுரை மதநல்லிணக்கக் கூட்டமைப்பைத் தீவிரமாக ஒருங்கிணைத்து நடத்தி வரும் மதிப்பிற்குரிய தோழர் ‘மீ.த பாண்டியன்‘ அவர்களுக்கும், வழக்கறிஞர் ‘வாஞ்சிநாதன்‘ அவர்களுக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் அமைதிக்கு எப்போதெல்லாம் அச்சுறுத்தல் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் முதலில் களத்தில் இறங்கும் மதிப்பிற்குரிய தோழர் ‘திருமாவளவன்‘ அவர்களுக்கும் எனது வணக்கங்கள். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அரசியலை அணுகும் பேராசிரியர் ‘ஜவாஹிருல்லா‘ அவர்களுக்கும், இங்கே கூடியிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றம் வழங்கும் ஒவ்வொரு தீர்ப்பையும் நாம் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டார்கள் என்பதற்காக, அதை நாம் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது நாட்டிற்கு நல்லதாக இருந்தால் மட்டுமே உண்மையான தீர்ப்பு என்று சொல்ல முடியும்.

நாட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகக் கொண்டுவரப்படும் அனைத்தையும், செல்லத்தக்க தீர்ப்பாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்த வகையில், இந்தத் தீர்ப்பை மாநில அரசு நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை; தேவையும் இல்லை.

இந்த நீதிமன்றமும், இந்த மலையும், இந்தக் கூட்டமும் நீதிமன்றங்கள் இங்கு வருவதற்கு முன்பே இருந்தவை. இந்த மலையில் ஒரு தர்கா இருந்தது. பிள்ளையார் கோயிலில் விளக்குகள் ஏற்றப்பட்டன. அங்கே முருகன் கோயிலும் இருந்தது. திருவிழாக்களும் நடைபெற்றன. மதுரை மக்கள் இதையெல்லாம் ஒன்றாகக் கொண்டாடி வந்தார்கள். இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை.

இனி ஒரு தீர்ப்பு பிரச்சினைகளை உருவாக்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படப் போகிறது என்றால், முதலில் நாம் செய்ய வேண்டியது அந்தத் தீர்ப்பைக் குப்பைத்தொட்டியில் தூக்கி எறிவதுதான். இதில் எந்தத் தவறும் இல்லை.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏதோ தெய்வீகக் கட்டளையைப் போல ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. தீர்ப்புகளை உண்மையாக மதித்து நடைமுறைப்படுத்தும் அரசாங்கமாக இருந்திருந்தால், காவிரியில் தண்ணீர் வந்திருக்க வேண்டும். இன்று தஞ்சாவூரில் குறுவை சாகுபடி இல்லாமல், நாம் அரைப்பஞ்ச நிலையை எதிர்கொண்டு நிற்கிறோம்.

இப்போது தமிழ்நாடு ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும். காவிரியில் நமக்குத் தண்ணீரைப் பெற்றுத் தர முடியாத, நமக்கு நீதியை வழங்க முடியாத இந்த நீதிமன்றங்களை நாம் ஏன் மதிக்க வேண்டும்?

இந்த மக்களின் பல ஆண்டுகால மரபுகளைக் கவனத்தில் கொள்ளாமல், அவர்களின் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல், தங்களுடைய விருப்பப்படியும் அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டப்படியும் ஒரு தீர்ப்பை வழங்கினால், அந்தத் தீர்ப்பை நான் மதிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

அந்த வகையில், மாநில அரசுக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். கடந்த ஆண்டு இந்த விளக்கு விவகாரத்தில் திமுக அரசு உறுதியாக நின்றதைப் போலவே, தவெக அரசும் இப்போது உறுதியாக நிற்க வேண்டும். அத்தகைய முடிவை அரசு எடுத்தால், அந்த விவகாரத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் உங்களுடன் துணை நிற்போம் என்று அறிவிக்கிறோம்.

உச்சநீதிமன்றம் என்ன கூறியிருக்கிறது? விளக்கை ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மட்டும் கூறவில்லை, துணை ராணுவப் படையினரைப் பயன்படுத்தி விளக்கை ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

இதற்குத் துணை ராணுவப் படையினர் எதற்காக? தமிழ்நாட்டில் காவல்துறை இருக்கிறது. உச்சநீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி, எல்லா விடயங்களிலும் தலையிடுகிறது. இந்தத் துணை ராணுவப் படைதான் — சிஆர்பிஎஃப் (CRPF) — 1992ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். கும்பல் சென்றபோது, துணை ராணுவப் படையினர் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பாத்து நின்றார்கள். அதே படையினரை இப்போது இதே செயலைச் செய்வதற்காக உச்சநீதிமன்றம் அனுப்புகிறது என்று நாம் குற்றம் சாட்டுகிறோம்.

நீங்கள் அவர்களை அனுப்புங்கள். அவர்களும் நின்று வேடிக்கைதான் பார்ப்பார்கள். அங்கே சிக்கந்தர் தர்காவை இடிக்க வேண்டும் என்றால், ”உத்தரப் பிரதேசத்தில் நடந்ததைப் போல நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்” என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம்.

நம்முடைய உயிர்கள் போனாலும் நமக்குக் கவலை இல்லையா? நமக்குப் பின்னால் வரக்கூடிய நமது குழந்தைகள் இந்த மதுரையில் அமைதியாக வாழ வேண்டும் என்றால், நம்முடைய உயிர்களைப் பொருட்படுத்தாமல் அங்கே நின்று போராடுவோம்.

உங்களை மீண்டும் எச்சரிக்கிறோம். மதுரை நீங்கள் யாரும் வருவதற்கு முன்பே இருந்த நகரம். கீழடி நம்முடைய 3,000 ஆண்டுகால வரலாற்றை எழுதியிருக்கிறது. அந்த வரலாற்றின் அடிப்படையில்தான் நாங்கள் அனைத்தையும் பார்க்கிறோம்.

இன்று நீதிமன்றங்கள் கொண்டுவரும் சட்டங்களுக்கும் தீர்ப்புகளுக்கும் ஏற்ப செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.

உச்சநீதிமன்றத்திற்கு இவ்வளவு உயர்ந்த அதிகாரம் இருக்கிறது என்றால், அதை முதலில் கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள். உங்களுக்கு உண்மையான துணிவும் நேர்மையும் இருந்தால், காவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசுக்கு எதிராக வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள். அந்தத் தீர்ப்பை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது.

கர்நாடக அரசிடமும் கேரள அரசிடமும் நீங்கள் காட்டாத அதிகாரத்தை, திருப்பரங்குன்றத்தில் மட்டும் நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

இதில் உறுதியான முடிவை தவெக அரசு எடுக்க வேண்டும். நாங்கள் கூறுவது: தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி நீங்கள் முடிவுகளை எடுங்கள். நாங்கள் உங்களுக்குத் துணையாக நிற்போம்.

இந்த மதுரை நகரம், இந்தப் பாண்டிய மண்டலம், இன்று மட்டுமல்ல; ஆயிரம் ஆண்டுகளாக மதநல்லிணக்கத்தில் உறுதியாக நின்று வந்திருக்கிறது. தெங்கம்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசல் எப்போது கட்டப்பட்டது? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்தப் பள்ளிவாசலைக் கட்டுவதற்கு பாண்டிய மன்னர்கள் ஆதரவு அளித்தார்கள்.

இவ்வளவு தூரம் ஏன் செல்ல வேண்டும்? மதுரையில் உள்ள பெரிய பள்ளிவாசலான காஜிமார் பள்ளிவாசலுக்கு நிலம் கொடுத்தது யார்? மாறவர்மன் சுந்தர பாண்டியன் அந்த நிலத்தை வழங்கினார். அவர்கள் கொடுத்த தங்கத்தையும் செல்வத்தையும் கொண்டு அந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டது.

திருப்பத்தூர் தர்காவுக்கு நிலம் அல்லது ஆதரவு கொடுத்தது யார்? மருது பாண்டியர்கள் வழங்கிய தங்கத்தையும் செல்வத்தையும் கொண்டு அது கட்டப்பட்டது.

ஏர்வாடி தர்காவாக இருந்தாலும், நாகூர் தர்காவாக இருந்தாலும், நாகூர் தர்காவுக்கு ஆதரவு கொடுத்தது யார்? தஞ்சாவூர் மன்னர்கள் அதற்கு ஆதரவு அளித்தார்கள்.

இந்தத் தர்காக்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை என்று நினைக்காதீர்கள். இவை தமிழர்களின் சொத்துகள். இவற்றை தொட்டால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.

இந்துத்துவ கும்பல் எங்களை முஸ்லிம்கள், இந்துக்கள் என்று பிரிக்கிறீர்கள். நாங்களும் அதற்கேற்ப பேச வேண்டுமா? இல்லை. அவர் எந்தக் கடவுளை வேண்டுமானாலும் வழிபடட்டும். அவர்கள் உண்மையான தமிழர்கள். ஒரு தமிழருக்குச் சொந்தமானதை நீங்கள் தொட்டால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். இது உத்தரப் பிரதேசம் அல்ல. பீகார் அல்ல. குஜராத் அல்ல. எச்சரிக்கையாக இருங்கள்.

இங்கே விடுதலைச் சிறுத்தைகள் இருக்கிறார்கள். புலிகள் இருக்கிறார்கள். நாங்களும் உங்களோடு இருக்கிறோம். சிவப்புச் சட்டைகள் இருக்கின்றன. கருப்புச் சட்டைகள் இருக்கின்றன. நீலச் சட்டைகள் இருக்கின்றன. இவர்கள் எல்லாம் இதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்க மாட்டார்கள்.

இந்த சங்கிகள் என்ன நினைக்கிறீர்கள்? விளையாடுகிறீர்களா? உங்கள் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா? நீதிமன்றத்தை உங்கள் கையில் வைத்துக்கொண்டு, சுவரொட்டிகளை ஒட்டி, உங்கள் பெருமையைப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டுமா?

முருகனின் குடும்பத்தோடு ஆரிய சனாதன இந்துத்துவ கும்பல்களுக்கு என்ன தொடர்பு? நான் சொல்கிறேன். எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறைகளாக முருகன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தச் சங்கிக்காரன் சொல்லட்டும். அதிகாரத்தின் பின்னால் மறைந்துகொண்டு மரியாதையை எதிர்பார்க்காதீர்கள். அவர்(சாமி நாதன்) ஒரு சங்கி என்றால், அவர் யாராக இருந்தாலும் எந்தத் தமிழரும் அவருக்கு மரியாதை கொடுக்க மாட்டார்கள். நம்முடைய மண்ணின் ஒற்றுமையைச் சீர்குலைக்க நீங்கள் வந்தால், நாங்கள் உங்களை எதிர்ப்போம்.

முருகனோடு உங்களுக்கு (ஆரிய சனாதன இந்துத்துவ கும்பல்) என்ன தொடர்பு? உங்கள் குடும்பத்தில் யாராவது முருகனுக்காகக் காவடி எடுத்திருக்கிறார்களா? எங்கள் குடும்பத்தினர் எடுத்திருக்கிறார்கள். உங்கள் குடும்பத்தில் யாராவது முருகனுக்காகப் பாதயாத்திரை சென்றிருக்கிறார்களா? எங்கள் குடும்பத்தினர் சென்றிருக்கிறார்கள்.

நான் ஒரு நாத்திகராக இருக்கலாம். ஆனால், நாங்கள் அனைவரும் முருகனை வழிபடும் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். உங்களைவிட எங்கள் குடும்பத்தர்களுக்கு முருகன் மீது அதிக பக்தி இல்லையா?

என்னமோ புதிதாக ஒரு முருகனைக் கண்டுபிடித்ததைப் போல, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அங்கிருந்து வந்து இங்கே கூட்டங்களை நடத்துகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நேற்று அறிக்கைகளை வெளியிடுகிறார். நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றினால் எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்த மாட்டோம் என்று கூறுகிறார்கள். எங்கே அதை நடைமுறைப்படுத்திப் பாருங்கள். நாங்கள் உங்களை விரட்டியடிப்போம்.

அந்த ஆர்.எஸ்.எஸ் சங்கி கும்பல் என்ன நினைக்கிறது? வடஇந்தியர்கள் எங்கள் ஊருக்கு வந்து சட்டத்தைப் பற்றிப் பேசுவதைப் பார்த்துக்கொண்டு நாங்கள் அனைவரும் அமைதியாக இருப்போம் என்று நினைக்கிறீர்களா?

அன்பான தோழர்களே, அவர் ஜனநாயக வழியில் செயல்பட்டால், நாங்களும் ஜனநாயக வழியிலேயே பதிலளிப்போம். அந்த வழியில்தான் எங்களுடைய அரசியலை நடத்துவோம். இதைத்தான் நாங்கள் கூற விரும்புகிறோம். சங்கிகளுக்கு இரண்டு கைகள் இருந்தால், எங்களுக்கும் இரண்டு கைகள் இருக்கின்றன. இதனை நாங்கள் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறோம்.

சங்கர மடத்தின் கீழ் ராவணனுக்குக் கோட்டை கட்ட வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறோம். விரைவில் அங்கே வந்து நிற்போம். நீங்கள் எங்கள் மீது கை வைத்தால், தமிழ்நாடு முழுவதும் உள்ள எங்கள் தோழர்கள் நான்கு மடங்கு வலிமையுடன் பதிலடி கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றிப் பேசுங்கள். நம்முடைய குழந்தைகளின் கல்வி உரிமைகளைப் பற்றிப் பேசுங்கள். நமக்கு எப்படித் தொழில் வளர்ச்சியையும் பொருளாதார வளத்தையும் கொண்டுவர முடியும் என்பதைப் பற்றிப் பேசுங்கள். அதை விட்டுவிட்டு, ஏன் சங்கி கும்பல் தொடர்ந்து கோயில்களுக்கும் தர்காக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

ஏனென்றால், தர்கா என்று அழைக்கப்படும் வழிபாட்டு மரபு தமிழர்களின் வழிபாட்டு மரபோடு ஆழமாகப் பின்னிப் பிணைந்திருக்கிறது. இங்குள்ள முஸ்லிம்கள் தமிழர்கள். தமிழ் பேசும் மக்கள். தூய தமிழர்கள்.

அவர்கள் தங்களுக்குப் பிடித்தமானதை வழிபடுகிறார்கள். அதில் நீங்கள் எப்படி தலையிட முடியும்? அதனால்தான் இத்தகைய செயல்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் உங்கள் மக்களைத் திரட்டுங்கள். நாங்கள் அனைவரும் ஒன்றாகத் திரள்வோம். யார் பெரியவர்கள் என்று பார்ப்போம். அவர்கள் பெரியவர்களா, நாங்கள் பெரியவர்களா! என்று பார்ப்போம்.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியைக்கூட வெல்ல முடியாத பாஜகவைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு ஆணவத்துடன் இருந்தால், எங்களுடைய கட்சிகளும், தோழர்களும், தொண்டர்களும், எங்களுடைய அரசியலும் எவ்வளவு வலிமையானவை என்பதை நாங்கள் காட்டுவோம். முழுச் சட்டமன்றத்தையும் நிர்வகிக்கும் அளவுக்கு எங்களுடைய அரசியல் வலிமை இருக்கிறது. அதை மக்களாகிய நாங்கள் காட்டுவோம்.

தமிழ்நாட்டைப் பாதுகாப்பதற்காக, கட்சி வேறுபாடுகளைக் கடந்து, கூட்டணி வேறுபாடுகளைக் கடந்து நாங்கள் ஒன்றாக நிற்கிறோம். இங்கே யாராவது கூட்டணியைப் பார்த்து வந்திருக்கிறார்களா? அவர்கள் மதுரையைப் பாதுகாப்பதற்காக வந்திருக்கிறார்கள். அந்தத் தலைவர்களைப் பாருங்கள். அவர்கள் தங்களுடைய கட்சி நலன்களைப் பார்த்து வரவில்லை. பல ஆண்டுகளாக மக்களுக்காக வீதிகளில் போராடியவர்கள் அவர்கள். வீதிகளில் நின்று, வியர்வையும் ரத்தமும் சிந்தி, மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள். நீங்கள் ஒருநாள் வந்து ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டீர்கள் என்பதற்காக, நாங்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டு போக முடியாது.

இன்று தமிழ்நாடு அரசு ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 400 வெவ்வேறு இடங்களில் இந்த அளவீட்டுக் கற்களை வைத்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். அங்கே சென்று விளக்குகளை ஏற்றுங்கள்.

இந்தப் பைத்தியக்காரர்கள் இதைச் செய்ய நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மதுரை இந்தக் குரங்குக் கூட்டத்தின் கைகளில் போய்விடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும், தோழர்களே அந்த வகையில், இங்கே கூடியிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில், ஒரே நாளில் ஆயிரக்கணக்கான தோழர்கள் இங்கே திரண்டிருக்கிறீர்கள்.

பாஜகவைப் போல நாங்களும் திட்டமிட்டு மக்களைத் திரட்டினால், மதுரையின் வீதிகளில் எத்தனை லட்சம் மக்கள் நடப்பார்கள் என்பதையும், யாருடைய கொடி உயர்ந்து பறக்கும் என்பதையும் காட்டுவோம்.

நாங்கள் சங்கப் பரிவார சக்திகளை எச்சரிக்கிறோம். நீங்கள் இதைத் தொடர்ந்து செய்தால், லட்சக்கணக்கான தோழர்களுடன் ஒரு படையைப் போல மதுரையைச் சுற்றி நின்று போராடுவோம். எங்கள் முருகனுக்காக நாங்கள் நிற்போம். எங்களுடைய நம்பிக்கையில், முருகன் வெறும் கடவுள் மட்டுமல்ல. அவர் இந்த மண்ணின் தலைவன். குறிஞ்சி நிலத்தின் தலைவன். முருகன் எங்களுடைய தலைவன் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அந்தத் தலைவனுக்காக நாங்கள் வந்து நிற்போம்.

எங்களுடைய வரலாறு இதனோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆறு படைவீடுகளிலும் நீங்கள் விளக்கேற்றாத நிலையில், இங்கே மட்டும் விளக்கேற்ற வேண்டும் என்று கூறுவதற்குக் காரணம், மதக் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான். அதுதான் ஒரே காரணம். அதுதான் சுவாமிநாதனின் நோக்கம். இப்போது உச்சநீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் நோக்கமும் அதுதான்.

நாங்கள்தான் அவர்களை “மதிப்பிற்குரிய நீதிபதி” என்று அழைக்கிறோம். ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிறீகாந்த் நீதிபதியை பெயரைச் சொல்லியே அழைக்கிறார். நாங்களும் உங்களை அதேபோலத்தான் அழைப்போம். நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதைக்கு ஏற்ப நடந்துகொள்ளவில்லை என்றால், உங்களுக்கு எத்தகைய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதைத் தமிழ்ச் சமூகம் அறிந்துள்ளது.

தமிழர்கள் உங்கள் தீர்ப்புக்கு முன்னால் ஒருபோதும் தலைகுனிந்து நிற்க மாட்டார்கள். எனவே, தமிழ்நாடு அரசு ஒரு துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் பிள்ளையார் கோயிலில் விளக்கேற்றியிருக்கிறீர்கள். அங்கே விளக்கேற்றுங்கள் என்று நாங்கள் கேட்கிறோம்.

பிள்ளையார் கோயிலில் முருகன் கோயிலுக்கான விளக்கை ஏற்றினால் என்ன தவறு ஏற்படப் போகிறது? அதுவும் ஒரு கோயில் அல்லவா? அதுவும் ஒரு தெய்வம் அல்லவா? “அங்கே விளக்கேற்றக் கூடாது. தர்காவுக்கு அருகில் விளக்கேற்றுங்கள்” என்று நீங்கள் கூறினால், அது முருகனை அவமதிப்பதாக இல்லையா? மற்றொரு வழிபாட்டுத் தலத்திற்கு அருகில் சென்று விளக்கேற்றுவது முருகனை அவமதிப்பதாக இல்லையா?

முருகனுக்குப் பிள்ளையார் கோயிலில் விளக்கேற்றும் தகுதி இல்லையா? என நான் சுவாமிநாதனிடம் கேட்கிறேன். விநாயகர் கோயிலில் விளக்கேற்றும் தகுதி இருக்கிறதா, இல்லையா? என பதில் சொல்லுங்கள்.யாரும் அப்படியொரு கோரிக்கையை வைக்கவில்லை. பிள்ளையார் கோயிலில் விளக்கேற்றக் கூடாது என்று யாராவது கேட்டார்களா? அப்படியொரு கோரிக்கை வந்ததா? அந்தக் கோரிக்கையை வைத்தது யார்? எனக்குச் சொல்லுங்கள்.

பிள்ளையார் கோயிலில் விளக்கேற்றுவதில் இவ்வளவு பெரிய பிரச்சினையா? முருகனுக்காக விளக்கேற்றுவதில் பிரச்சினையா? இந்த விவகாரம் ஒரு வகையில் முருகனை அவமதிப்பதாக இருக்கிறது.

நம் அனைவரையும் மதத்தின் பெயரால் பிரிப்பதாக இருக்கிறது. இதன் மூலம் அரசியல் ஆதாயத்தைப் பெற முயன்றால், அதற்காக எங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்போம், தோழர்களே. உயிரைப் பற்றிக் கவலைப்படாத ஒரு கூட்டம் நாங்கள்.

மாவீரர் மதிப்பிற்குரிய பிரபாகரன் அவர்கள் இதைச் சொல்லியிருக்கிறார். ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைந்த மக்களை, உலகில் எந்த சக்தியாலும் உடைக்க முடியாது என்று அவர் கூறியிருக்கிறார். அவருடைய பிறந்த மாதமான இந்தக் கார்த்திகை மாதத்தில் இதை நாங்கள் கூறுகிறோம். நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எங்களுடைய நோக்கத்தை ஒருபோதும் கைவிட மாட்டோம். தமிழ்நாட்டை ஒருபோதும் உடைக்க முடியாது என்று கூறி, இங்கே கூடியிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் எனது புரட்சிகரமான வணக்கங்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி. வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »