
GIG பொருளாதாரத்தின் பின்னால் இருக்கும் முதலாளித்துவ அரசியல் – ‘GIG’ குறும்படம் குறித்த திரைப்பார்வை.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அவமானப்படுத்துகிறான். பிறகு அவனிடமே மன்னிப்புக் கேட்கிறான். மீண்டும் அடுத்த நாளும் இன்னொரு மனிதனை அவமானப்படுத்தச் செல்கிறான். இது தான் அவனுக்கு (கிடைத்த?)வேலை. இந்த வேலையை செய்தால் தான் அவன் குடும்பம் பிழைக்கும். இன்னொரு மனிதனை அவமானப்படுத்துவது அவன் குணமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்ன செய்வது அது தான் அவனுக்கு வேலை.
இப்படி ஒருவரை எதிர்கொண்ட உங்கள் உறவினரையோ, நண்பரையோ நீங்கள் அறிந்திருப்பீர்கள், அல்லது அவர்கள் சொல்ல இப்படியான அனுபவத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஏன் உங்களுக்கே கூட இந்த அனுபவம் கிடைத்திருக்கும். இதுவரை இல்லை என்றால் எதிர்காலத்தில் நிச்சயம் கிடைக்கும். இப்படி சொல்வது சாபம் கொடுப்பது போல் இருக்கிறதா? ஆம் சாபம் தான். மணித உணர்வுகளை வியாபாரமாக மாற்றிவிட்ட முதலாளித்துவச் சாபம்.
எழுத்தாளர் ராஜசங்கீதன் அவர்கள் எழுதி இயக்கி உள்ள ‘GIG’ குறும்படம் அந்த சாபத்தின் அரசியலை பேசியுள்ளது. நம் சமூகத்தை சூழ்ந்து நிற்கும் சுரண்டல் பொருளாதாரத்தை எளிமையாக விளக்கியுள்ளது இந்த குறும்படம்.
ஒரு மனிதன் கடன் வாங்குகிறான். இன்னொரு மனிதன் அந்தக் கடனை வசூலிக்கிறான். கடன் வாங்கியவனிடம் பணம் இல்லை. வசூலிக்க வந்தவன் அவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்தாக வேண்டும். அதற்காகக் கடன் வாங்கியவனை அவமானப்படுத்துகிறான். தமிழில் உள்ள அத்தனை வசைச் சொற்களையும் வீசுகிறான். அவனுடைய குடும்பச் சூழலையோ, பொருளாதார நெருக்கடியையோ பொருட்படுத்தாமல் பணத்தைக் கேட்கும் தன்மையே கடன் வசூலிக்கும் நபரின் செயல்திறனாக, அந்த வேலையை கொடுத்த நிறுவனம் மதிப்பிடுகிறது.
ஆனால் அந்த வேலையை முடித்துவிட்டுச் செல்லும்போது, தான் பேசிய வார்த்தைகளுக்காக அதே மனிதரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறான். அந்த இடத்தில் முதலாளித்துவத்தின் கொடூர பசியை தன் உழைப்பின் மூலம் இட்டு நிரப்ப திணறும் இரண்டு உழைக்கும் மனிதர்களின் தவிப்பும் ஒரே தன்மையில் வெளிப்படுகிறது.
இந்த முரண்பாட்டின் அரசியலை நேர்த்தியான திரை மொழியின் மூலம் ராஜசங்கீதன் தன்னுடைய ‘GIG’ குறும்படத்தில் விவாதித்துள்ளார்.
”கடன்” என்பது மனித சமூகத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் பொருளாதாரப் பரிவர்த்தனை தான். ஆனால் நவீன முதலாளித்துவத்தில் அது மிகப்பெரிய வணிகக் கட்டமைப்பாக வளர்ந்திருக்கிறது. மக்களின் பொருளாதார நெருக்கடிகளே நிதி நிறுவனங்களின் சந்தை வாய்ப்புகளாக மாற்றப்படுகின்றன.
ஒரு குடும்பத்திற்கு திடீர் மருத்துவச் செலவு வருகிறது. ஒரு தொழிலாளிக்கு வேலை கிடைக்கவில்லை. ஒருவருடைய மாத வருமானம் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்குப் போதவில்லை. இன்னொருவருக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. இதுபோன்ற சூழல்களில் கடன் என்பது அவர்களுக்கான தற்காலிகத் தீர்வாக அமைகிறது.
ஆனால் கடன் வாங்கிய பிறகு அந்த மனிதனின் வாழ்க்கை இன்னும் அதிகமான பொருளாதாரக் நெருக்கடிக்குள் செல்கிறது. அவன் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதி வட்டியாகவும், அசல் தவணையாகவும் தொடர்ந்து செல்கிறது. அவனுடைய எதிர்கால உழைப்பின் ஒரு பகுதியை முதலாளித்துவம் இன்றே தனது நிதி மூலதனத்தின் ஒரு அங்கமாக்கிக்கொள்கிறது.
மார்க்சியப் பொருளாதாரத்தில் சொல்லப்படுகிற வட்டி மூலதனத்தை (Interest-bearing Capital) போல பணம் தானாகவே பணத்தை உருவாக்குவதாகத் தோன்றும் ஒரு பொருளாதார உறவு உருவாக்கப்படுகிறது. ‘Rich Dad poor Dad’ போன்ற புத்தகங்கள், Youtube திறந்தால் மூலதனத்தை திரட்டுவது எப்படி என்று கொட்டி நிரப்பும் பொருளாதார வல்லுனர்கள் எல்லாரும் சொல்வது ‘பணம் பணத்தை உருவாக்கும் வேலையை செய்ய வேண்டும்’ என்பது தான். ஆனால் அந்தப் பணத்தின் பின்னால் இருப்பது சமூகத்தின் உழைப்பும், உழைக்கும் மக்களின் எதிர்கால வருமானமும்தான் என்பதை பற்றி எந்த அக்கறையும் யாருக்கும் இல்லை. உழைப்பு குறித்து எந்த கருத்தும், மதிப்பும் இல்லாத சமூக உளவியல் ஒன்று நம்மிடம் உருவாக்கப்படுகிறது.
கடன் வாங்கியவன் திருப்பிச் செலுத்த முடியாதபோது, அவனுடைய நெருக்கடி இன்னொரு வணிக வாய்ப்பாக மாற்றப்படுகிறது. கடன் வசூலிப்பதற்கான தனித்துவமான நிறுவனங்கள், பணியாளர்கள், இலக்குகள் என ஒரு புதிய தொழில்துறை உருவாகிறது.
மனிதர்களின் வறுமை ஒரு சந்தையாக்கபடுகிறது. அவர்களின் இயலாமை ஒரு வணிக வாய்ப்பாகிறது.

இந்தக் குறும்படத்தின் மிக முக்கியமான அரசியல் அம்சம், கடன் வசூலிக்கும் தொழிலாளியை வெறும் வில்லனாகச் சித்தரிக்காமல், அவனுடைய பொருளாதார நிலையைப் பற்றியும் நம்மைச் சிந்திக்க வைப்பதுதான். மனித தன்மையற்று நடந்து கொண்டுதான் தனது இலக்கை அவன் முடிக்க வேண்டும். அவன் எதிரில் இருப்பது ஒரு மனிதன் என்பதைக் காட்டிலும், நிறுவனத்தின் கணக்கில் ஒரு நிலுவைக் கடனாகவே பார்க்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு உருவாக்கப்படுகிறது. அதனால் அவன் அடைந்த லாபம் என்னவென்றால் ஒன்றுமில்லை. உத்தரவாதம் இல்லாத கூலி மட்டும் தான். இங்கு கடன் வசூலிப்பவனின் உழைப்பும் சேர்ந்தே சுரண்டப்படுகிறது!
இது தான் மார்க்ஸ் சொல்லும் உழைப்புச் சக்தியின் விற்பனை (Sale of Labour Power). ஒரு தொழிலாளி தனது உழைப்புச் சக்தியை விற்று வாழ்கிறான். ஆனால் அந்த உழைப்பை எதற்குப் பயன்படுத்துவது என்பதை அவன் தீர்மானிப்பதில்லை. முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் அவனுடைய உழைப்பு, முதலாளியின் லாபத்திற்கான கருவியாக மாற்றப்படுகிறது.
படத்தில் உண்மையில் கடன் வசூலிக்கும் தொழிலாளியின் நிலை தான் கொடுமையானது. தனது உழைப்பை விற்பதோடு மட்டுமல்லாமல், தனது இயல்பான மனித உணர்வுகளுக்கு எதிராகவும் அவன் செயல்பட வேண்டியிருக்கிறது. தனது மனித இயல்பிலிருந்தே ஒரு தொழிலாளி அந்நியப்படுத்தப்படுகிறான்.
அதாவது அவனுடைய இயல்பான மனித உணர்வு, இன்னொரு மனிதனின் பொருளாதாரத் துயரத்தைப் புரிந்துகொள்ளச் சொல்லலாம். ஆனால் அவனுடைய வேலையானது அவனை அதற்கு நேர்மாறாகச் செயல்பட வைக்கிறது. ஒருவருடைய துயரத்தைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கே முதலாளித்துவம் அவனுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது.
எப்படி கூலி, ஊதிய உயர்வு போன்றவை தொழிலாளியின் உரிமையோ அப்படியே தனது வேலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக இதை செய்ய முடியாது என்று சொல்கிற சுதந்திரம் ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாக கருதப்பட வேண்டும். ஆனால் முதலாளித்துவம் அப்படி தொழிலாளர்கள் கோராமல் இருக்கவே நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாத GIG பொருளாதாரத்தை சுதந்திரமான தொழில் வாய்ப்பு என்று விளம்பரப்படுத்துகிறது.
ஒருவர் தனக்குப் பிடித்த நேரத்தில் வேலை செய்யலாம், தனக்கான வருமானத்தைத் தானே உருவாக்கிக்கொள்ளலாம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படுகிறது.
நிரந்தர வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற தொழிலாளர் உரிமைகளிலிருந்து விலக்கப்பட்டு, தேவைக்கேற்பப் பணியமர்த்தப்படும் (Hier and Feir) உழைப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. நிறுவனங்கள் தங்களது நேரடி வேலைவாய்ப்புப் பொறுப்புகளைக் குறைத்துக்கொண்டு, தொழிலாளர்களின் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்கின்றன.
தொழிலாளியே தனக்கான முதலாளி என்ற பிம்பம் போலியாக உருவாக்கப்படுகிறது. ஆனால் வேலையின் நிபந்தனைகள், ஊதியம், இலக்குகள், பணிச்சுமை ஆகியவற்றைத் தீர்மானிப்பது பெரும்பாலும் நிறுவனங்கள்தான். OLA, UBBER, SWIGGY, ZOMATO போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அரசின் தொழிலாளர் சட்ட விதிகளின் கீழ் எந்த உரிமையும் கோர முடியாது. ஏன் எனில் அவர்கள் அந்நிறுவனத்தின் தொழில் பங்காளர்கள்(Business Partners). அப்படி தான் அந்த நிறுவனங்கள் அவர்களை அழைக்கிறது.
படத்தில் கடன் வசூலிக்கும் தொழிலாளியின் நிலையும் இதே வடிவத்தில் புரிந்துகொள்ளலாம். கடன் வாங்கியவரும் கடன் வசூலிப்பவரும் இரண்டு வெவ்வேறு வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. பல நேரங்களில் இருவருமே உழைத்து வாழும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஒருவருடைய பொருளாதார நெருக்கடி கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளுகிறது. இன்னொருவருடைய பொருளாதார நெருக்கடி அந்தக் கடனை வசூலிக்கும் வேலைக்குத் தள்ளுகிறது.
இருவரும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் போராடுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் பகைமை உருவாக்கப்படுகிறது. இப்படி தான் பெரும் நிதி மூலதனம் சமூக வர்க்க உறவுகளை கையாளுகிறது. சுரண்டலை நியாயமான ஒன்றாக சமூகத்தில் அதை ஒரு பொருளாதார கட்டமைப்பாக மாற்றுகிறது.
கடன் வாங்கியவர் கடனைத் திருப்பிச் செலுத்த தான் வேண்டும் என்ற ஒற்றை அறநெறிக் கேள்விக்குள் இந்தப் பிரச்சினையைச் சுருக்கிவிட முடியாது. கடன் வாங்கியவரின் துயரமும் கடன் வசூலிப்பவரின் நிர்ப்பந்தமும் தனித்தனியான பிரச்சினைகள் அல்ல. அவை ஒரே பொருளாதார அமைப்பின் இருவேறு வெளிப்பாடுகள்.
எதிரி யார் என்பதை அடையாளம் காண்பதுதான் அரசியல் என்றால் அதை மிக எளிமையாக உணர்த்துவதில் தான் ‘GIG’ குறும்படம் கவனம் பெறுகிறது.