அகதியாகும் இனப்படுகொலையாளன் கோத்தபயவும், கோட்டைவிடும் திமுகவும்

தலையங்கம் – ஆகஸ்ட் 12, 2022

இந்திய அரசின் நட்பு நாடாகவும், நண்பராகவும் விளங்கிய இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்தில் தஞ்சம் கோரி இருக்கிறார். கடந்த 2022 ஜூலை 14-ம் தேதியன்று சிங்கப்பூருக்கு தப்பிச்சென்ற கோத்தபய தற்போது தாய்லாந்து நாட்டில் தஞ்சம் புக இருப்பதான செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

இலங்கையில் சிங்கள மக்களிடத்தில் ஏற்பட்ட போராட்டம் கோத்தபயவை பதவி விலக வைத்தது. பதவியைக் கொண்டு பாதுகாப்பினைப் பெற்றுக்கொண்டிருந்த தமிழினப்படுகொலையாளன், பதவியை துறக்க நேர்ந்த உடன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். 2009-ல் தமிழர்கள் மீது கொடும்போரை நிகழ்த்திய கோத்தபய ராஜபக்சே சிங்களப் பேரினவாதிகளால் கொண்டாடப்பட்ட அரசியல் தலைவரானார். இந்தியாவின் துணையுடனும், அமெரிக்கா, இங்கிலாந்து வழிகாட்டுதலுடனும் ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலைப் போர் பற்றிய சர்வதேச விசாரணையை துவக்காத உலக நாடுகள், இப்போது கோத்தபயவை ஆசியாவிற்குள் பாதுகாப்பாக வைத்து பின்னர் இலங்கைக்குள் கொண்டு செல்ல விரும்புகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கோத்தபய புகலிடம் தேடிச்செல்லும் சமயத்தில் புலம்பெயர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் அவர் மீது வழக்கு தொடுத்து சர்வதேச நீதிவிசாரணைக்கு கோரிக்கை வைப்பார்கள். அமெரிக்கக் குடியுரிமைப் பெற்ற கோத்தபயவிற்கு இது நெருக்கடியை கொடுக்கும் என்பதால் ஆசியாவிற்குள் பாதுகாப்பாக நகரவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது தாய்லாந்திற்குள் தற்காலிகமாக தங்கி பின்னர் வேறு நாடுகளுக்கு செல்வதான திட்டம் வைத்திருப்பதாக தாய்லாந்து அரசு சொல்கிறது.

ஐ.நா.வின் மனித உரிமை அவையில் இலங்கை அரசு ஏற்றுக்கொண்ட வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றாத நிலையில் கோத்தபய மீது சர்வதேச விசாரணையை துவக்கும் முக்கிய காலகட்டத்தில் தமிழினம் நிற்கிறது. இந்நிலையில் இலங்கையின் துறைமுகத்திற்கு வர இருக்கும் சீனாவின் உளவுத்திறன் வாய்ந்த கப்பலை இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதே சமயத்தில் தமிழ்நாட்டின் மீனவர்கள் 9 பேர் இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்திய அரசின் அனுசரனையோடு தான் இலங்கை இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை சீனக் கப்பல் வருகை இரத்து என்பது தெரிவிக்கிறது. இதே போன்ற அழுத்தத்தை தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமை மீதும் அக்கரையோடு செயல்பட்டிருந்தால் இந்திய அரசு தமிழினத்தின் மீது கவனம் கொண்டிருக்கிறது எனலாம். ஆனால் தமிழீழ இனப்படுகொலைக்கும், தமிழக மீனவர் கொலைக்கும் நீதியை கைகழுவும் இந்திய அரசு, இலங்கையின் இனப்படுகொலை ஆட்சியாளர்களை தொடர்ந்து காத்து வருகிறது.

சிங்கள மக்களின் போராட்டங்கள் எவ்வகையிலும் தமிழின உரிமையை மீட்டுத் தராது என்பதை போராட்டம் தெளிவாகச் சொல்லுகிறது. வடக்கிலும், கிழக்கிலும் ஈழப்பகுதியில் நிலைகொண்டுள்ள இனவெறி சிங்கள இராணுவம் இன்றளவும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. சிங்களர்களின் போராட்டத்தை வைத்து ராஜபக்சே சகோதரர்களை அரசியலில் இருந்து அமெரிக்கா அப்புறப்படுத்திருக்கிறது. தமிழீழ தன்னாட்சி பிரதேசத்தை அழித்து, திரிகோணமலையை கைப்பற்றுவதற்கு ராஜபக்சே சகோதரர்களைப் பயன்படுத்திய மேற்குலகம், சீனாவின் ஆதிக்கம் நிலைபெறாமல் இருக்க இவர்களை அப்புறப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சிகளின் போக்குகள் இலங்கையின் அரசியல் எவ்வகையிலும் இந்திய பார்ப்பன கும்பலின் கையிலிருந்து விலகி அமெரிக்காவின் கைகளுக்கு சென்றுவிட்டதை காட்டுகிறது.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையை வரையறை செய்யும் தென்னிந்திய பார்ப்பனிய கும்பல்கள் இந்தியாவின் பாதுகாப்பினை மொத்தமாக அமெரிக்காவிடம் சரணடைய வைத்திருக்கிறார்கள். ஈழத்தில் எழுந்த தமிழ்த்தேசிய எழுச்சியை கண்டு அரண்டு போன தமிழகப் பார்ப்பனர்கள், பொய்ப்பிரச்சாரங்களின் மூலமாக விடுதலைப்புலிகள் மீது அவதூறுகளைப் பரப்பினார்கள். கடந்த மூன்று மாதங்களில் தி வயர், தி் இந்து, தி ப்ரிண்ட் உள்ளிட்ட ஆங்கில இதழ்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அவதூறு கட்டுரைகளை தமிழக பார்ப்பனர்கள் எழுதிக் குவித்தனர். IANS ஊடகத்தின் நாராயணசாமி முதற்கொண்டு பலர் எழுதிய பொய் செய்திகள் புலிகள் அழிக்கப்பட்டு பதிமூன்று ஆண்டுகள் கழித்தும் இந்தியாவின் ஊடகங்களில் பரப்பப்படுகிறது. பார்ப்பன கும்பலினால் உருவாக்கப்பட்ட இந்திய வெளியுறவுக்கொள்கையின் தோல்வியை மறைக்கவே இப்பிரச்சாரங்களை இன்றும் தொடர்கிறது. இல்லையெனில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை, பாதுகாப்புக்கொள்கையை வடிவமைத்த பார்ப்பனர்களின் யோக்கியதை இந்திய மக்களால் கேள்விக்குள்ளாகும்.

தற்போது கோத்தபய உள்ளிட்ட இராஜபக்சேக்கள், இரணில் விக்கிரமசிங்கே போன்றவர்களை சிங்களர்களே புறம்தள்ளி இருக்கிற நிலையில் இவர்களைச் சார்ந்து பொய்ச்செய்தி கட்டமைத்த தி இந்து இதழின் என்.ராம், ராதாகிருட்டிணன், மீரா சீனிவாசன், மாலன், நாராயணசாமி, அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசனின் சத்யமூர்த்தி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் சூரியநாராயணன் போன்றவர்கள் வாய்மூடி மெளனம் காக்கின்றனர். இவர்களது அடிவருடிகளாக செயல்பட்ட இதர ஊடக நிபுணர்கள், அரசியல் ஆளுமைகள் இந்தியாவின் இலங்கை மீதான அரசியல் தோல்விக்கு பதில் சொல்ல இயலாது நிற்கின்றனர்.

இந்த பார்ப்பனக் கும்பலின் தொங்கு சதையாக மாறி, விடுதலைப்புலிகள் பற்றிய பார்ப்பனர்களின் அவதூறுகளை பரப்பி ஆதாயம் தேட முயலும் திமுகவின் சமூக வலைதளக் குழுவினர், திமுகவினருக்கு திராவிடம் பற்றி கருத்துப் பயிற்சி செய்யும் பார்ப்பன அடிவருடிகள் பற்றிய எவ்வித விமர்சனமுமற்று பரிதாபமாக நிற்கிறது. ஆட்சியில் இருக்கும் திமுக, இலங்கை பற்றிய எவ்வித கொள்கை முடிவும் எடுக்காமல் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் அரிசி, உணவுப்பொருட்கள் மருந்துகளை அனுப்புகிறோமென அரசியல் புரிதலற்ற கடந்த கால அதிமுக ஆட்சியை தொடர்கிறது. இந்தியாவின் இலங்கை மீதான பார்ப்பனர்களின் தோல்வியடைந்த வெளியுறவுக்கொள்கையை அம்பலப்படுத்தி, தமிழினத்திற்கென சாதகமான, ஆளுமையான முடிவுகளை முன்வைத்து ஒன்றிய அரசினை தமிழர்கள் பக்கம் திருப்பும் வாய்ப்பு கிடைத்தும், திமுக அரசு வழக்கம் போல பார்ப்பனர்களுடனான சதுரங்க ஆட்டத்தில் கோட்டை விடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Translate »