மானுடகுல விரோத ‘சனாதனத்தை வேரறுப்போம்’

சனாதனத்தை ஒழிப்போம் என உதயநிதி கூறியது குறித்தும், அதற்கான எதிர்வினை குறித்தும் மே பதினேழு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை

மானுடகுல விரோத ‘சனாதனத்தை வேரறுப்போம்’. தமிழ்நாட்டு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் போக்கு கண்டனத்திற்குரியது! தமிழ் மொழியை, தமிழர்களை இழிவு செய்யும் காவி இந்துத்துவ பயங்கரவாதிகளை எச்சரிப்போம்! வடநாட்டான் தமிழ்நாட்டை மிரட்டும் போக்கை அனுமதியோம்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக கடந்த செப்டம்பர் 2 அன்று சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சனாதனம் என்பது டெங்கு, மலேரியா, கொரானா போன்று ஒழிக்கப்பட்ட வேண்டியது என்று குறிப்பிட்டார். சனாதனம் என்பது மனிதகுலத்திற்கே விரோதமானது, அது வேரறுக்கப்பட வேண்டியது என்ற அடிப்படையில், சனாதனம் குறித்த திரு. உதயநிதி அவர்களின் கருத்தை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது.

அதேவேளை, சனாதனவாதிகள் என அறியப்படும் பார்ப்பனர்களும் பார்ப்பனிய அடிவருடிகளும், சனாதனம் குறித்த திரு. உதயநிதி அவர்களின் கருத்தை திரித்து நாட்டிலுள்ள 80 விழுக்காடு இந்துக்களை இனப்படுகொலை செய்வதற்கான அழைப்பு என்று பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்சா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அமித் மால்வியா முதற்கொண்டு ஆர்எஸ்எஸ்-பாஜக இந்துத்துவவாதிகள் அனைவரும் இந்த நச்சுப் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதனோடு சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் முழுவதும், இந்த இந்துத்துவ ஆதரவு சக்திகள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய அரசின் நிர்வாகங்களும் இதில் இணைந்துகொண்டன.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் திரு. உதயநிதி அவர்களின் தலையை எடுப்பதற்கு 10 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் திரு. உதயநிதி அவர்கள் மீது டில்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த கலாச்சாரத்தை அழிப்பது இனப்படுகொலை தான் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். மராட்டியத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என மராத்திய பாஜக அமைச்சர் மிரட்டுகிறார். இவ்வாறு தமிழர்கள் மீது வெறுப்பை விதைக்கும் இந்துத்துவவாதிகளின் செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சனாதனம் என்பது சமூகத்தை வர்ணமாக, சாதியாக பிரித்து பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளையும் பேதங்களையும் மக்கள் மீது திணித்து, கடவுளின் பெயரால் தர்மம் என்று சமூகத்தை சுரண்டும் பார்ப்பனர்கள் உருவாக்கிய கட்டமைப்பே. இது, சாதியபடிநிலையையும் அதில் தீண்டாமையையும், இன்னார் இன்னா தொழிலை செய்ய வேண்டும் என்ற குலத்தொழிலையும், குழந்தை திருமணம், கைம்பெண் திருமணம் மறுப்பு, சதி எனும் உடன்கட்டை ஏறுதல், ஆணுக்கு கீழ் பெண் என்று பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கக்கூடியதாகவும், தமிழர்களை சூத்திரர்கள் என்று கூறி கல்வி கற்கவும் செல்வம் சேர்க்கவும் மறுத்தது, வேதத்தை காதால் கேட்கக்கூட கூடாதென மறுத்தது உள்ளிட்ட மனிதகுல விரோத கூறுகள் அனைத்தையும் உள்ளடக்கியது. இதனாலேயே சனாதனத்தை மனிதகுல விரோதமானது என்றும், அது வேரறுக்கப்பட வேண்டுமெனவும் கூறுகின்றோம்.

இப்படியான சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவதில் இந்துக்களுக்கே மாற்றுக்கருத்து இருக்காது. இந்த சனாதன கூறுகளை மறுத்து தான் சமூகம் முன்னேற்றதை கண்டுள்ளது. இந்த சமூகத்தை மீண்டும் பின்னோக்கி தள்ளி மக்களை பார்ப்பனியத்திற்கு அடிமையாக்குவதற்கே இந்துத்துவ பாசிசவாதிகளால் சனாதனம் முன்நிறுத்தப்படுகிறது. சனாதனவாதிகள் என்று கூறிக்கொள்வோரும், சனாதனத்தை ஆதரிப்போரும் சமூகத்திற்கு கேடானவர்கள். ஆர்எஸ்எஸ்-பாஜக இந்துத்துவவாதிகள் இதனை வெளிப்படையாக ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், சமூகநலனுக்காக சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவோர் மீது வன்முறையை ஏவும் வண்ணம் ஆதரவாளர்களிடையே வெறுப்பை விதைக்கின்றனர்.

கொலை மிரட்டல் விடுவது, காணொளியில் கத்தியை வைத்து படத்தை கிழித்துக்காட்டுவது போன்றவை வன்முறையை நிகழ்த்திக் காட்டுவதற்கு ஒப்பானது. மேலும் மராத்தியத்திற்குள் வர இயலாது என்றெல்லாம் மிரட்டல் விடுப்பது என்பது வன்முறை-ரவுடி அரசியலின் அப்பட்டமான வெளிப்பாடு. இந்த வன்முறை போக்கை இந்துத்துவ-ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு வளர்த்து வருகிறது. இந்த வன்முறை தமிழ்நாட்டின் மீதும், தமிழர்கள் மீதும் திணிக்கப்படுவது என்பது தந்தை பெரியார் கூற்றுப்படி வடநாட்டான் தமிழரின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி. மேலும், உயர் சாதிகளின் ஆணவத்திமிர் என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.

அடுத்தாண்டு ஒன்றியத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர் கூட்டணியில் உள்ள ஒரு கட்சித் தலைவரின் கருத்தை தேர்தல் ஆதாயத்திற்காக திரித்து கூறி எதிர் கூட்டணியை பலமிழக்க செய்வதோடு, மக்களிடையே வெறுப்பை விதைத்து வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சியாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்து கைது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், சனாதன ஒழிப்பில் அனைத்து முற்போக்கு ஜனநாயக ஆற்றல்களும் முழுவீச்சில் இறங்குவதோடு, இந்துத்துவவாதிகளால் திரித்து பரப்பப்படும் செய்திகளை முறியடிக்க தேவையான வழிமுறைகளை செயல்படுத்த வேண்டுமென கோருகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010
05/09/2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »