
கெளரவ விரிவுரையாளர்கள் பலவேறு கோரிக்கைகளை முன்னிட்டு தொடர் போராட்டங்களை சென்னை சைதாப்பேட்டையில் நடத்தி வருகின்றனர். எனவே அவர்களுக்கு மே பதினேழு இயக்கம் ஆதரவு தெரிவித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது சமூக வலைதளத்தில் பிப்ரவரி 18, 2026 அன்று பதிவு செய்தது.
கெளரவ விரிவுரையாளர்கள் கிட்டதட்ட 8000 பேர், தொடர்போராட்டத்தில் உள்ளார்கள். சென்னை சைதாப்பேட்டையில் நடந்துவரும் போராட்டத்திற்கு மே17 இயக்கம் ஆதரவளித்து பங்கெடுத்தோம்.
இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 180+ கல்லூரிகளில் விரிவுரையாளராக பணி செய்கிறார்கள். இவர்களில் கடந்த 20 ஆண்டுகளாக பணி செய்பவர்களும் நிரம்ப உள்ளனர். கெளரவ (Guest Lecture)என அழைக்கப்பட்டாலும் முழுநேர பேராசிரியர்களின் பணிகளையே முழுநேரமாக செய்கிறார்கள். காலை முதல் மாலை வரையில் கல்லூரிகளில் வேலை செய்கிறார்கள். நிரந்தரமாக்கப்பட்ட பேராசிரியர்களுக்கு மாதம் அதிகபட்சமாக ரூ3 லட்சம் எனுமளவில் கொடுக்கப்படும் சூழலில், அவர்களுக்கு நிகரான வேலை செய்யும் முனைவர் பட்டம் பெற்ற இந்த பேராசிரியர்-விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ25,000 எனும் விகிதத்திலேயே சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் 11 மாதங்கள் மட்டுமே சம்பளம் கொடுக்கிறார்கள். பெண்களுக்கு மகப்பேறுகால விடுப்பு கிடையாது. இவர்களை பணி நிரந்தரம் Regularise செய்வதாக 2006 தேர்தலிலேயே இரு கட்சிகளும் குறிப்பாக திமுகவும் வாக்குறுதி கொடுத்து, இன்றுவரை இரு கட்சிகளும் நிறைவேற்றவில்லை. 2021 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்த திமுக ஆட்சியில் இப்பிரச்சனைகளை களைய எடுக்கப்பட்ட முயற்சிகள் போதுமானதாக இல்லை எனவும், அப்படி எடுக்கபப்ட்ட பரிந்துரைகளை அதிகாரிகள் மட்டத்தில் தடுக்கபப்ட்டதாகவும் போராட்டத்தின் நிர்வாகிகள் உட்பட பலரும் தெரிவித்தார்கள். மேலதிகாரிகள் மிக மோசமாக தம்மை நடத்துவதாக குற்றம் சாட்டுகிறார்கள். அதிகாரிகளின் மட்டத்தில் எதேச்சதிகாரமான போக்கு திமுக ஆட்சியாளர்களால் உறுதியான வகையில் கையாளப்படவில்லை.
திமுக அரசின் உறுதியற்ற போக்கு, சமூகநீதி கட்டமைப்பின் அடித்தளமான கல்வித்துறையில் பல நெருக்கடிகளை வளர்த்துக்கொண்டே செல்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியில் கல்லூரி கல்வித்துறையின் பங்கு மிக முக்கியமானது. இந்த திமுக ஆட்சியில் கிட்டதட்ட 10க்கும் மேற்பட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இது சிறப்பானது. ஆயினும், இந்தக் கல்லூரிகளுக்கான பெரும்பான்மையான ஆசிரியர்கள் கெளரவ விரிவுரையாளர்களாக இருக்கிறார்களெனில், இது எவ்வளவு பலவீனமானதென அறிய முடிகிறது. பெயரளவில் கல்விக்கட்டமைப்பாகவும், உள்கட்டமைப்பில் நிரந்தரமற்ற பணியாளர்களைக் கொண்டு நிரப்பப்பட்ட கட்டமைப்பாகவும் இயங்குகிறது. நிரந்தர பேராசிரியர்களின் சம்பளத்தில் பத்தில் ஒருவிகிதத்தை பெற்றுக்கொண்டு கல்வி கற்றுத்தர வேண்டிய நிலையில் பெரும்பான்மையான ஆசிரியர் சமூகம் நிறுத்தப்படுமெனில், கல்வி கற்றலுக்கான முக்கியத்துவம் தவிர்க்கப்படுறதென அர்த்தமாகிறது. கட்டிடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை போல, ஆசிரியப் பணிக்கு தேவையான நிதி ஒதுக்குவதில்லை என்பது அம்பலமாகிறது. இந்த ஆசிரியர்களை நிரந்தரம் செய்யவிடாமல் அதிகாரவர்க்கம் முட்டுக்கட்டை போடுகிறதெனில், தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பிற்கும், சமூகநீதி கொள்கைக்கும் எதிராக இருக்கிறதென அர்த்தம். UGC விதிகளின் படி மாதம் ரூ 55,000 கொடுக்கப்பட வேண்டுமென்பதை அதிகாரிகள் தமிழ்நாட்டில் தடுத்து வைத்துள்ளனர்.

கல்வியில் பின் தங்கிய மாநிலங்கள் எனப்படும் ஹரியானா, பீகார், ஆகிய மாநிலங்களில் கெளரவ விரிவுரையாளர்களுக்கு 50,000 கொடுக்கப்படும் பொழுது, கல்வித்தரத்தில் முதலிடம் என சொல்லிக்கொள்ளும் தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ரூ25,000 கொடுக்கப்படுகிறது? கேரளத்தில் ரூ50,000 கொடுக்கப்பட முடிகிறதெனில் தமிழ்நாட்டில் ஏன் இது சாத்தியமில்லை?
மிக முக்கியமாக, இந்த கெளரவ விரிவுரையாளர்களின் தகுதிச்சான்றிதழ்களை முன்வைத்தே பல கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் தொடங்க அனுமதி பெறப்படுகிறது. இவ்வாறாக இந்த விரிவுரையாளர்கள் வஞ்சிக்கப்படுவதை தடுக்காவிடில், கல்லூரி கல்வியின் தரம் சிதைக்கப்படும் எனும் பேரபாயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். திமுக அரசும், மாண்புமிகு முதலமைச்சரும் உடனடியாக தலையிட்டு இச்சிக்கலை தீர்த்திட வேண்டும். இந்நிலையில் மற்றுமொரு விடயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு வர மே17 இயக்கம் விரும்புகிறது. தமிழ்நாட்டின் தடயவியல் துறையில் கிட்டதட்ட 60 பேர் ஒப்பந்த ஊழியர்களாக சில மாதங்களுக்கு முன் இணைக்கப்பட்டார்கள். இவர்கள் 90+% வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் ரூ50,000 எனும் விகிதத்தில் சம்பளம் நிர்ணயித்திருக்கிறார்கள். இதுவும் தமிழ்நாட்டு அதிகாரிகளின் உத்தரவில் நடந்துள்ளது. வடநாட்டு பணியாளர்களுக்கு விதிகளை பின்பற்றி முறையான சம்பளம் கொடுக்க முடிந்த நிலையில், தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மட்டும் ஏன் வஞ்சிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கான பணியிடங்களை வடநாட்டான்களுக்கு தாரை வார்த்து, உரிய ஊதியத்தை உறுதி செய்யும் விசுவாசத்தை அதிகாரிகள் யாரிடம் கற்றார்கள். இந்த அதிகாரிகள் மீது இதுவரை திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அடிப்படை உரிமைகளை மறுக்கும் உயர் அதிகாரிகளை நீக்கிவிட்டு, சமூக பொறுப்புணர்வு கொண்டவர்கள் மூலம் கல்வித்துறை நிர்வாகம் செய்யப்பட வேண்டும். திமுக அரசு இந்த விடயங்களை தனது ஆட்சிக்காலத்தில் தீர்க்காமல் தோற்றிருக்கிறதெனும் நிலையை மாற்ற வேண்டுமெனில் உடனடியாக கொள்கை முடிவெடுத்து நடைமுறைப்படுத்திட வேண்டும்.
போராடும் தோழர்களின் கோரிக்கைக்கு மே17 இயக்கம் என்றும் ஆதரவளிக்கும். போராட்டம் வெல்லட்டும்.
மே பதினேழு இயக்கம்.