Welcome to மே 17 இயக்கக் குரல்   Click to listen highlighted text! Welcome to மே 17 இயக்கக் குரல்

மே பதினேழு இயக்கத்தின் வெற்றிக் கொண்டாட்டம்

உழுபவர்களுக்கு விளைச்சலைக் காணும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாக  நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மே 17 இயக்கத்திற்கு அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவினர் ஒரு மக்களவை தொகுதியைக் கூட வெல்லக் கூடாது என கடுமையாக  தேர்தல் வேலைகள் செய்தது மே 17 இயக்கம். தமிழ்நாட்டில் இரட்டை இலக்கத்திலான தொகுதிகளைப் பிடிப்போம் என்ற பாஜக-வினரின் கனவு, ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாமல் தகர்ந்திருக்கிறது. இந்திய அளவிலும் தனி பெரும்பான்மை கிடைக்காமல் மாநில கட்சிகளின் தயவை எதிர்பார்க்கும் நிலைக்கு பாஜக-வினர் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். 

பல கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடந்தது. மே பதினேழு இயக்கம் அடக்குமுறையை சந்தித்த போதெல்லாம் பக்க பலமாக நின்று குரல் கொடுத்த தோழமை இயக்கங்களான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியோருக்கு இயக்கத்தின் சார்பில் பரப்புரையில் முன்னெடுப்பது என்று முடிவெடுத்து இருந்தோம். அது தவிர்த்து பாஜக-வின் அடையாளமாக கூறி கோயமுத்தூரில் வேட்பாளராக நின்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நீலகிரியில் வேட்பாளராக நின்ற ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் மற்றும் தென் சென்னை தொகுதியில் வேட்பாளராக நின்றிருந்த இரண்டு மாநில ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரையும் எதிர்த்த பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்திருந்தோம்.

சென்னை மயிலாப்பூர் அடுத்துள்ள முண்டக கண்ணியம்மன் கோயிலில் ஆடு நேர்ந்து விட்டு, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பிரச்சாரத்தை தொடங்கினோம். ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது மூன்று நாட்களென்றும், சில தொகுதியில் பரப்புரை முடிவடையும் வரையிலும்கூட கடுமையான பிரச்சாரங்களை முன்னெடுத்தோம். மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அத்தனை தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக-விற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

தென் சென்னை தொகுதியில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன்குமார் அவர்கள் பரப்புரைக்கு  தலைமை தாங்கி நடத்திக் காட்டினார். இயக்கத் தோழர்கள் தொடர்ச்சியாக பரப்புரையில் ஈடுபட்ட வண்ணமே இறுதிவரை இருந்தனர். மதிமுக-வின் முதன்மை செயலாளர் தோழர் துரை.வைகோ அவர்களுக்காக திருச்சியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்காக சிதம்பரம் தொகுதியிலும், மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோயமுத்தூர், நீலகிரி ஆகிய தொகுதிகள் பாஜக-வின் கோட்டை என்றும் ஆர்.எஸ்.எஸின் ரகசிய கூட்டங்கள் நடக்கும் இடம் என்றும் கூறிவந்த நிலையில், அங்கு பிரச்சாரம் செய்ய மே பதினேழு இயக்கத் தோழர்கள் முழு ஆயத்த நிலையில் சென்று இருந்தோம். எப்படியாவது நம் பிரச்சாரத்தை தடுத்துவிட வேண்டும் என்று நோக்கத்தில் காவல்துறை மற்றும் தேர்தல் ஆணைய உதவியுடன் முட்டுக்கட்டைகள் போட பார்த்தனர். அதை முறியடித்து பிரச்சாரத்தை முன்னெடுத்த பொழுது நேரடியான தாக்குதலுக்கு தயாரானார்கள்.

கோயம்புத்தூரில் சங்கிக்கும்பல் கூச்சலிட்டு குழப்பம் செய்யப் பார்க்கவே, “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழக்கமிட்டு தோழர் திருமுருகன் காந்தி பரப்புரையின் முக்கிய கட்டத்தை எட்டினார். அதுவரையில் நமது பிரச்சாரத்தை பொறுமையாக கவனித்தவர்கள் கூட இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு மே 17 இயக்கத்தின் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளிக்க வந்தனர். தோழமை இயக்கங்களின் ஒத்துழைப்பாலும் தோழமைக் கட்சி பொறுப்பாளர்களின் அளப்பரிய அன்பாலும் மே 17 இயக்கத்தின் பிரச்சாரம் வெற்றிகரமாக முடிவுற்றது.

பிரச்சாரம் தொடங்கிய போதே தமிழ்நாட்டில் பாஜக முழுமையாக தோல்வி அடையும்” என்று தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் கூறினார். அதை உறுதி செய்யும் வகையில் நேற்று வெளிவந்த தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்துள்ளன. ஊடகங்களால் பெரிய தலைவர் போல் கட்டமைக்கப்பட்ட அண்ணாமலை படுதோல்வி அடைந்ததும், ஒன்றிய அமைச்சராக இருந்து அதிகாரத்தை தன் கையில் வைத்திருந்த போதும் கூட எல். முருகனால் வெற்றி அடைய முடியாததும், பாண்டிச்சேரி ஆளுநராக இருந்து அங்கு நடக்கின்ற ஆட்சியை முடக்கி வைத்த ஆளுநர் தமிழிசையின் வெற்றிக் கனவு மண்ணோடு மண்ணானதும்  பெரும் மகிழ்ச்சியை நமக்கு தந்துள்ளது.

தேர்தலில் கட்சிகளை தாண்டி இயக்கங்கள் என்ற முறையில், இத்தனை தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்ட இயக்கம் என்ற வகையில் மே 17 இயக்க தோழர்கள் உவகையில் ஆழ்ந்துள்ளோம். அதற்கேற்றார் போல் ஒன்றியத்தில் பாஜக-வின் ஆட்சி பழைய ஆணவ அகம்பாவத்துடன் அமைவது சாத்தியம் இல்லை என்ற செய்தியும் இரட்டிப்பு நிம்மதியை கொடுத்துள்ளது.  இதைக் கொண்டாடவே ஜுன் 4, 2024 இரவு 7.30 மணிக்கு மேல் தந்தைப் பெரியாரின் இறுதி பேருரை நடந்த, தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினோம். 

இதில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் கே.எம். சரீப் அவர்களும், அக்கட்சியின் துணை பொது செயலாளர் தோழர் சண்முகராஜா அவர்களும், த.பெ.தி.க சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன் அவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர். “பாஜகவை அடியோடு ஒழிப்போம், ஆர்.எஸ்.எஸ் மதவாத சக்திகளை வேரோடு அகற்றுவோம்” என தோழர்கள் முழக்கமிட்ட பெரும் ஆரவாரத்துடன் பாஜகவின் தோல்வி கொண்டாடப்பட்டது.

விளைச்சலைக் கண்ட உழவன் மகிழ்ந்திருந்தாலும் அது இலாபத்தை தரும்போது தான் தொடர்ந்து விளைய வைக்க முடியும் என்பதுதான் உண்மை. அதேபோல் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் அனைவரும் பாஜகவின் மதவெறியை தத்துவார்த்த தளத்திலிருந்து எதிர்க்கத் தொடங்கி, இதன் பலன் இந்த சமூகத்தில் நிரந்தரமாக நிலைத்து நிற்பதற்கு வழி செய்தால் மட்டுமே நமது மகிழ்ச்சி முழுமை அடைந்து நீடிக்கும். பாசிசத்தின் முகமாக விளங்கும் பாஜகவை வீழ்த்த அவர்களுக்கு நேர் எதிரான சமத்துவ சமூகநீதி தத்துவார்த்த கருத்தை மக்களிடையே பரப்புவதுதான் சரியான வழியே தவிர, அவர்களுக்கு மாற்றாக இன்னொருவரை அமர வைப்பது தீர்வாக அமையாது.

மே பதினேழு இயக்கத் தோழர்கள் எந்த கட்சியின் துணையும் இல்லாமல், தங்களின் சொந்த செலவில் பிரச்சாரங்களை மேற்கொண்டோம்.  பாஜக-வினரும், காவல் துறையினரும் அளித்த அடக்குமுறைகளை மீறி களத்தில் நின்றோம். லட்சக்கணக்கான துண்டறிக்கைகளை, புத்தகங்களை விநியோகித்தோம். அந்த உழைப்பின் வெற்றியைக் கொண்டாட, தமிழ்நாடு என்றுமே பெரியார் மண் என்று பெரியார் சிலையின் முன்னால் கூடி உரத்து முழங்கினோம்.

’தமிழ்நாடு தமிழருக்கே’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »
Click to listen highlighted text!