மக்களவை தேர்தலில் உத்திரப் பிரதேசத்தின் திருப்புமுனை – 2024

இந்திய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலில், இந்துத்துவத்தின் இதயமாக இருக்கும் உத்திரப் பிரதேசம் பாஜக-விற்கு எதிர்பாராத அதிர்ச்சியை வழங்கியிருக்கிறது. பாபர் மசூதியை இடித்து, வடமாநிலங்களை இரத்தச் சகதியில் மிதக்க விட்டு, இராமர் கோயிலைக் கட்டிய அயோத்தியின் மக்களவைத் தொகுதியில் பாஜக தோற்றிருக்கிறது.

உ.பி-யின் ஆன்மீக நகரமாகக் கருதப்படும் வாரணாசியில் போட்டியிட்ட மோடியே, முதல் மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் பின்னடைவையே சந்தித்தார். அதன் பிறகே வெற்றி பெற்றார். 

மேலும் ஒன்றிய அமைச்சர்களாக இருந்த ஸ்மிருதி ராணி, கெளசல் கிசோர், மகேந்திரநாத் பாண்டே, அஜய் மிஸ்ரா (இவரின் மகன் லக்கிம்பூர் கிராமத்தில் மூன்று விவசாயிகளை காரில் ஏற்றிக் கொன்றவன்), சஞ்சீவ் பால்யான், பானுசிங் வர்மா, சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோர் உ.பி தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்துள்ளனர். 

இராமரின் வீழ்ச்சியும், இராவணனின் எழுச்சியும் :

ஆர்.எஸ்.எஸ்-சின் நீண்ட நாள் கனவான இராமர் கோயில் கட்டப்பட்ட அயோத்தி பகுதி அமைந்திருக்கும் பைசாபாத் தொகுதியில் பாஜக வீழ்ந்திருக்கிறது. அதே சமயம் தன்னை இராவணன் என்று அழைத்துக் கொள்பவரும், பீம் ஆர்மி கட்சி தலைவருமான சந்திரசேகர் ஆசாத் மேற்கு உ.பி-யின் நாகினா தொகுதியில் வென்றிருக்கிறார்.

நாகினா தொகுதியில் 40% முஸ்லிம்கள் மற்றும் 20% தலித் மக்கள் இருக்கின்றனர். இங்கு போட்டியிட்டு 51%-த்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றிருக்கிறார் சந்திரசேகர் ஆசாத். தலித் உரிமைகளுக்காக கட்சி நடத்துபவர். குடியுரிமைச் சட்டத்தை (CAA) எதிர்த்து நின்றனர். இராமரை வைத்து இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வும், தீவிர இந்துத்துவாவும் கட்டமைத்த யோகி ஆதித்யநாத்தின் இராமர் அரசியலுக்கு மாற்றாக இராவணனாக நின்று தலித், இஸ்லாமியர்களின் வாக்குகளை அறுவடை செய்திருக்கிறார் சந்திரசேகர் ஆசாத்.

அரசியல் சூழல் :

இந்தியாவில் அதிகமாக 80 மக்களவைத் தொகுதியில் உள்ள உ.பி-யில் கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளும், காங்கிரஸ் 6 தொகுதிகளும் வென்றன. கூட்டணி கட்சிகளான பாஜக 33 தொகுதிகளிலும், ராஷ்டிரிய லோக் தளம் கட்சி 2 இடங்களிலும் வென்றன. சந்திர சேகர் ஆசாத் கட்சி 1 தொகுதியில் வென்றது. தலித் மற்றும் இசுலாமியர்களுக்கான கட்சியாக துவங்கப்பட்ட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இன்று உ.பி-யின் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியாத சூழலை அடைந்திருக்கிறது.

இந்தப் பகுதிகளில் நடைபெற்ற பரப்புரைகளில் மோடி தேர்தல் விதிமுறைகளை மீறி மதவாதத்துடன் பேசினார். இந்திய (l.N.D.I.A) கூட்டணி என்றால் இராமர் கோயிலை இடிப்பார்கள், இராமர் மீண்டும் கூடாரத்திற்கு மாற்றப்படுவார், தீர்ப்புகள் மாற்றப்படும் என ராமரை சுற்றியே பேசினார். மேலும் புல்டோசர் இடிப்புக்கு புகழ் பெற்ற யோகியிடம் எதை இடிக்க வேண்டும், எதை இடிக்கக் கூடாது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பரப்புரை செய்தார். ஆனால் இதற்கு மாற்றாக இந்திய கூட்டணி வேலைவாய்ப்பு, விவசாயம், வறுமை போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி பேசினர்.

தலித்கள் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி இந்திய கூட்டணியின் பக்கம் சாய்ந்திருக்கிறார்கள். மோடியின் வெறுப்புணர்வு பேச்சுகளால் இசுலாமியர்கள் ’இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணியை பாதுகாப்பென கருதி வாக்களித்திருக்கிறார்கள். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்வின் தேர்தல் வாக்குறுதிகளான, விவசாயிகள் கடன் தள்ளுபடி, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு போன்றவை மக்களை சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டியிருக்கிறது. மேலும் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய தொகுதி பங்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை அளித்து ஓட்டு பெற வைத்திருக்கிறது.

விவசாயப் பிரச்சனை :

உத்தரப் பிரதேசத்தில், பாஜக-வின் சரிவுக்கு முக்கியக் காரணமாக விவசாயிகளின் பிரச்சனை பேசப்படுகிறது. இங்கு சுமார் 2.5 கோடிக்கும் மேலான விவசாயிகள் உள்ளனர். மோடி அரசு அதானி போன்ற பெரும் வணிக நிறுவனங்கள் கொள்ளையடிக்க 2020-ம் ஆண்டு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயப் போரட்டத்தில் உ.பி விவசாயிகளும் அதிக அளவில் கலந்து கொண்டு பாஜக அரசை எதிர்க்கத் துவங்கி விட்டனர். ஒரு வருடமாக நடந்த விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தில் 600 விவசாயிகளை பலி கொண்ட பிறகே மோடி அரசு அந்த சட்டத்தை திரும்பப் பெற்றது.

இதன் பின்னர் 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நெல் கொள்முதலை தாமதப்படுத்தியதால் உ.பி.யின் லக்கிம்பூர் கேரி கிராமத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். இதில் 3 விவசாயிகள் மீது ஒன்றிய அமைச்சராக இருந்த அஜய் மிஸ்ராவின் மகனான ஆசிஸ் மிஸ்ராவின் கார் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த கார்கள் விபத்து ஏற்படுத்தி கொல்லும் நோக்கில் மோதிச் சென்றதால், நிகழ்விடத்தில் 3 விவசாயிகளும் மாண்டனர். மேலும் அதனால் ஏற்பட்ட கலவரத்தால் 8 விவசாயிகள் கொல்லப்பட்டனர். பாஜக அரசின் மீது கோவம் மேலும் அதிகமானது.

விவசாயப் பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்தக் கோரி 2024, பிப்ரவரியில் டெல்லியில் ‘டெல்லி சலோ‘ பேரணியை விவசாய சங்கங்கள் அறிவித்தனர். பஞ்சாப், அரியானா விவசாயிகளுடன் உபி விவசாயிகளும் கலந்து கொள்ளும் பேரணியாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதன் ஒவ்வொரு எல்லையிலும் கான்கிரீட் இரும்பு கம்பிகள் போட்டு தடைகள் ஏற்படுத்தப்பட்டது. உபி யில் 144 தடை விதிக்கப்பட்டது. இவையெல்லாம் பாஜக அரசின் மீது  விவசாயிகளின் கோவத்திற்கு காரணமாக இருந்தன.

மேலும், மேற்கு உ.பியில் கிரேட்டர் நொய்டா பகுதியில், “கிரேட்டர் நொய்டா தொழில் மேம்பாட்டு ஆணையம் (GNIDA)” அருகிலுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் நிலம் கையகப்படுத்தியதற்காக அதிகபட்ச இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை கோரி, மேற்கு உத்திரப் பிரதேசத்தின் கவுதம் புத் மாவட்டத்தில் ஜூலை 2023-ல் 61 நாட்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

உ.பி  தொழில்துறை வளர்ச்சி 1976 சட்டத்தின்படி, 124 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. தொழில் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உறுதியளித்து இவை வாங்கப்பட்டன. 1991-லிருந்து துவங்கப்பட்ட இத்திட்டத்தினால் ஏற்கெனவே 39 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக மீண்டும் 45 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் நிலையில்தான் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கிறது.

ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 3000 கொடுத்து தங்களிடம் வாங்கப்பட்டு, ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு 72 ஆயிரத்திற்கு விற்கப்படுவதை அறிந்த பின்னரே தங்களின் ஏமாற்றத்தை விவசாயிகள் உணர்ந்தனர். தொழில் வளர்ச்சி என பிடுங்கப்பட்ட இடத்தில் உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வெளியூர் காரர்களுக்கே வழங்கியதால் விவசாயிகள் தாங்கள் அளித்த நிலங்களுக்கு அதிக இழப்பீடு கோரி போராட்டத்தில் குதித்தனர்.

இதனால்தான், நிலத்தின் மதிப்பு வளர்ச்சியடைந்த இடங்களில் 10% கொடுக்கப்பட வேண்டும், GNIDA-ன் கீழ் ஒதுக்கப்படும் வீட்டு மனைகளில் 17.5% நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து போராடினர். இப்பகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களால் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. இதனால் இங்கு நடந்த  உள்ளாட்சி தேர்தலில் 5-ல் 2 இடம் மட்டுமே பாஜக வென்றது. விவசாயிகளின் இந்தப் போராட்டம்  மீண்டும், பிப்ரவரி 13, 2024 அன்று நொய்டா – டெல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்துமளவு தொடர்ந்தது.

இவ்வாறு, குறைந்தபட்ச ஆதார விலைக்கான உறுதி மற்றும் தங்களின் விவசாய நிலத்திற்கு அதிக இழப்பீடு கோரும் விவசாயிகளின் போராட்டம் உ.பி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலை வாய்ப்பின்மை :

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்திய வேலைவாய்ப்பின்மை சராசரியான 7.1% த்தில் உ.பி- யின் மட்டுமே இதன் சராசரி 4.2% ஆக உள்ளது. இளைஞர்களின் வேலை வாய்ப்பு பங்கேற்பு விகிதம் 2019-ல் 47%-த்திலிருந்து 2022-ம் ஆண்டிற்குள் 28% சதவீதமாக சரிந்து கிடக்கிறது. ஒன்றிய தரவுகளின் படி இவ்வாறிருக்க, அடுத்த நான்கு ஆண்டுகளில் 2 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதி அளித்தார் யோகி ஆதித்யநாத். அதற்கு அகிலேஷ் யாதவ் தனது X தளத்தில்,  ‘அப்படியானால் ஒரு நாளைக்கு 13700 வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கான புள்ளி விவரங்களை ஒவ்வொரு நாளும் வெளியிட வேண்டும்’ என்று பதிவிட்டு யோகியின் பொய்யை தோலுரித்தார்.

யோகியின் மிகைப்படுத்தப்படும் பொய்கள், வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, கொரோனா நோய்த் தொற்றின் போதே மக்கள் உணர்ந்தவை. மருந்து, சிலிண்டர் தட்டுப்பாடுகள் இல்லை என்று சொன்ன பொய்களை, குவியல் குவியலாக கங்கை ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட பிணங்களைச் சுற்றியிருந்த காவித் துணிகள் அம்பலப்படுத்தின. பொய்களை அடுக்குவதில், மோடிக்கு சளைத்தவரல்ல என்பதையே அனைத்திலும் நிரூபிப்பவராக யோகியின் ஆட்சி உ.பி-யில் நடக்கிறது. 

கிழக்கு.பி-யின் வறுமை நிலை :

உத்தரப் பிரதேசம் 20 கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலம். இதில் சுமார் 5 கோடி மக்கள் அடிப்படை வசதிகளே இல்லாத வறுமையில் இருப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் 50% மேலான மக்கள் வறுமைக் கோட்டிலேயே வாழ்கின்றனர் என ஒன்றிய அரசின் நிறுவனமான நிதி ஆயோக் கூறுகிறது.

உ.பி-யின் பல மாவட்டங்களில் உயர் கல்வியறிவின்மை விகிதம், குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு, தரமற்ற கல்வி வசதிகள், ஒழுக்கமான வேலை வாய்ப்புகள் இல்லாமல் மோசமான உட்பட்ட அமைப்பு மற்றும் மோசமான சுகாதாரம் என பல வகையிலும் வறுமையுடன் (Multi Dimentional poverty) இருப்பதாக  நிதி ஆயோக் பட்டியலிட்டிருக்கிறது. இப்பகுதியின் வறுமை ஒழிப்புக்கு அகிலேசு யாதவ் முன்வைத்த வாக்குறுதிகள் பலவும் மக்களை ஈர்த்து வாக்களிக்கச் செய்திருக்கிறது.  

யோகி ஆட்சி பணம் படைத்தவர்களுக்கான ஆட்சியாக நடப்பதை மக்கள் உணர்ந்து கொண்டு வருகிறார்கள். அயோத்தி தோல்வியே இதற்கு சான்றாக இருக்கிறது. இப்பகுதியின் சுற்றுப்புறப் பகுதிகளில் வசித்த மக்களை, பெரிய வணிக நிறுவனங்கள், ஆடம்பர விடுதிகள் கட்டுவதற்காக வீடுகளை புல்டோசரால் இடித்து சொற்ப அளவான இழப்பீடு கொடுத்து துரத்தப்பட்டனர். ராம் பாதை என்று சாலைகள் விரிவாக்கத்திற்கு, விமான நிலையம் அமைப்பதற்கும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேலான சிறு வணிகர்களை விரட்டியிருக்கின்றனா கோவிலைச் சுற்றி 5 கி.மி அளவுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டது. உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, வெளியூர் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தும் யோகி ஆட்சியின் செயல்பாடுகள் உ.பி மக்களை விழிக்கச் செய்திருக்கிறது.

ஒரு இந்து கொல்லப்பட்டால் முஸ்லிம் பெண்களை கல்லறையில் இருந்து தோண்டி எடுத்து கூட வன்புணரலாம் என்று வெறியுடன் யுவவாகினி அமைப்பைச் சார்ந்தவன் பேசும் போதும் மேடையில் இருந்து எந்த எதிர்ப்பும் காட்டாதவரே இந்த யோகி. தலித் பெண்கள் மீதான வன்புணர்வுகள், மாட்டுக்கறி வைத்திருந்தால் கொலைகள், ஜெய் ஸ்ரீராம் சொல்லவில்லை என்றால் கொலைகள் என ஆர்.எஸ்.எஸ்-சின் உதிரி அமைப்புகள் வெறியாட்டம் நடத்தும் போதும் அமைதியாய் இருந்தவர்.

தீவிர இந்துத்துவத்தை பரப்பினாலே, மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்கிற பாஜக-வின் எண்ணத்திற்கு மக்கள் சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள் என்பதையே உத்திரப் பிரதேசத்தில் பாஜக-வின் சரிவுகள் காட்டுகின்றன. மக்களை அறியாமையில் மூழ்கடித்து, பக்திப் போதையில் ஆழ்த்தி, மத வெறுப்புணர்வைப் பரப்பி ஆட்சியை இனியும் தக்க வைக்க முடியாது என்பதை உ.பி மக்கள் இத்தேர்தலின் மூலமாக யோகி அரசுக்கும், மோடிக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »