ஜனநாயக சக்திகளின் அணிதிரட்டல் இல்லாத மக்களிடம் சாதியத்தையும், மதத்தையும் தூண்டும் பிற்போக்கு சக்திகளே வெல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்த வகையான குஜராத் மாடலைத் தான் இந்திய ஒன்றியம் முழுக்க திணிக்க விரும்புகிறது மோடி அரசு. அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய நிதியை குஜராத்திற்கு மட்டும் தனித்துவமாக ஒதுக்கி குஜராத் மாடலுக்கு வலுவேற்றியிருக்கிறார் மோடி.
இந்திய ஒன்றிய அரசால் நேரடியாக வழங்கப்பட்ட நிதிகளால் உருவான குஜராத் மாடல்
இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியைப் பிடுங்கி குஜராத்தில் நடுவதற்குப் பெயர் தான் குஜராத் மாடல் என்பதை 2020 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத்தில் தணிக்கைக் குழு (CAG) தாக்கல் செய்த அறிக்கையே சொல்கிறது. குஜராத் அரசின் சட்டமன்றத்தின் வழியாக இல்லாமல் பல நிறுவனங்களுக்கு நேரடியாக இந்திய ஒன்றியத்திலிருந்து பல்லாயிரம் கோடிகள் நிதி குஜராத்தின் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கையின் படி வரவு செலவு திட்டம் இல்லாமல் செலவு செய்வது சட்டமன்ற விதிமீறல் என்னும் நிலை இருக்கும் போது, குஜராத்தின் அமலாக்க நிறுவனங்களுக்கு இந்த நேரடி பரிமாற்றம் 2019-20 வரை தொடர்ந்தது. 2015-16ல் ரூ.2,542 கோடியிலிருந்து 2019-20ல் ரூ.11,659 கோடியாக 350% வரை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் மாடலை ஊக்குவிக்க ஒன்றிய அரசிடமிருந்து நேரடியாக தனியார் நிறுவனங்களுக்கு 2019-20 ல் வழங்கப்பட்ட தொகை ரூ.837 கோடி நிதி என்று சிஏஜி அறிக்கை கூறுகிறது. இதே காலகட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் ரூ.17 கோடியும், அறக்கட்டளைகள் ரூ.79 கோடியும் பெற்றுள்ளன. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.18.35 கோடியும், சில தனிநபர்களுக்கு ரூ.1.56 கோடியும் மத்திய அரசு வழங்கியது. இந்த நிதியெல்லாம் குஜராத்தின் மாடலை நிறுவ தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகள். மற்ற மாநிலங்களிடமிருந்து சுருட்டி குஜராத்திற்கு அளித்த நமது வரிப்பணங்கள்.
தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசுத் துறை நிறுவனங்களுக்கும் சட்டமன்றத்தின் வரவு செலவு அறிக்கைகளில் வராமல் நிதிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசிடம் இருந்து நேரடியாக பெருமளவு நிதியைப் பெற்ற குஜராத்தில் செயல்படுத்தும் நிறுவனங்களில், மாநில அரசு நிறுவனங்கள் (ரூ. 3,406 கோடி), மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (ரூ. 3,389 கோடி), மத்திய அரசு நிறுவனங்கள் (ரூ. 1,826 கோடி) ஆகியவை அடங்கும்.) மற்றும் அரசு மற்றும் தன்னாட்சி பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் (ரூ. 1,069 கோடி) ஆகியவை அடங்கும் என்று ‘எக்ஸ்பிரஸ்’ அறிக்கை கூறுகிறது.
பெரு நிறுவனங்களின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக நிதிகளைத் தாரளமாக வழங்கி குஜராத் மாடலுக்கான கருத்துக்கணிப்பு சாதனமாக அவற்றை பயன்படுத்தும் வியூகத்தில் விளைந்ததே குஜராத் மாடல். ஆனால் அந்த வளர்ச்சி அந்த மக்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்ததா என்பதை அங்குள்ள ஊடகப் பெரு நிறுவனங்கள் விவாதமாக்கவில்லை. ஏனென்றால் அமெரிக்க அதிபராயிருந்த டிரம்ப் 2020 – ஆம் ஆண்டு வருகை தந்த போது 100 கோடி செலவழித்து குஜராத்தின் குடிசைப் பகுதிகளை துணி போட்டி அவசர அவசரமாக மறைத்ததைக்கூட வெளிப்படுத்தாதவர்கள் பெரும்பான்மையான பாஜக, ஆர்.எஸ் எஸ், சங்பரிவாரக் கும்பலின் ஆதரவு ஊடகங்கள்.
இது மட்டுமல்ல, மோடியின் குஜராத் சுற்றுப்பயணமும், அதில் குஜராத்திற்கான நலத்திட்ட அறிவிப்புகளும் முடிந்த பின்னர் தேர்தல் நாளினை அறிவிக்கலாம் என்று மறைமுகமாக மோடி ஆதரவின் படி இயங்கியது குஜராத்தின் தேர்தல் ஆணையம் என்று எதிர்க்கட்சியினரே குற்றம் சாட்டினர். அதன்படியே, ரூ16500 கோடி அளவிற்கான திட்டங்களை குஜராத் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணத்தின் போது அறிவித்தார் மோடி. அதற்குப் பிறகே தேர்தல் நாளை அறிவித்தது தேர்தல் ஆணையம். குஜராத் தேர்தல் முடிவிற்குப் பின்னர் கருத்து தெரிவித்த சிவசேனாவின் தலைவரும், மகாராசுடிராவின் முன்னாள் முதல்வருமான உத்தம் தாக்கரே, மகாராசுடிராவின் பல நலத்திட்டங்களை பறித்து குஜராத்திற்கு மோடி கொண்டு போய் விட்டார் எனவும், கர்நாடகா தேர்தல் வரப்போவதால் மகாராசுடிராவின் கிராமங்களைக் கூட கர்நாடகாவில் கொண்டு போய் சேர்த்து விடுவார் என்பதால் எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் ஊடகங்களிடம் பேசினார். இப்படியாக ஏனைய மாநிலங்களின் வளர்ச்சி பறிக்கப்பட்டு குஜராத்தில் நடப்பட்டது தான் குஜராத் மாடல்.
மக்களிடம் உருவாக்கப்படும் இந்துத்துவ ஆதிக்க மனநிலை
குஜராத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் படேல், ஜாட், மராத்தா போன்ற உயர்சாதியினர் நிலவுடைமையாளர்கள். வணிகத் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுபவர்கள். இருப்பினும் அவர்களும் இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தினர். அதற்காக பட்டேல் சாதியினரை அணிதிரட்டினார் ஹர்திக் பட்டேல் என்ற இளைஞர். அவர் பட்டேல் சமூகத்தினருக்கான முக்கியத் தலைமையாக உருவெடுத்தார். எங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுங்கள், இல்லையென்றால் எவருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்காதீர்கள் என்பதே அவரின் முழக்கமாக இருந்தது. பட்டேல் சமூக மக்களின் பெரும்பான்மையான ஆதரவு பெற்றதும், இறுதியில் அவரும் பாஜகவுடன் சேர்ந்து விட்டார். இவ்வாறு ஒவ்வொரு சாதியிலும் ஒரு பிம்பத்தை இவர்களே உருவாக்கி, அந்த சாதிப் பிரிவினரை வளைத்துக் கொள்ளும் நரித்தனத்தை திறம்பட செய்ததைத் தான் குஜராத் மாடல் என மோடிக் கும்பல் புகழ்கிறது.
இன்னமும் குஜராத்தில் தலித் மக்கள் ஆதிக்க உயர்சாதிகளால் துன்புறுத்தப்படும் நிலை தான் குஜராத் மாடல். நவ்சர்சன் என்கிற தன்னார்வு தொண்டு நிறுவனம் 1489 கிராமங்களில் நடைபெறும் தீண்டாமைக் கொடுமைகளை கணக்கெடுத்தது. அதன்படி ஆய்வில், உயர் ஆதிக்க சாதியினரின் கடைகளில் 96.8% பேர் தலித்துகளுக்கு தேநீர், உணவுப் பொருள் பரிமாற தனித்தனி பாத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். இந்த முறைக்கு ராம்பட்டர் என்று பெயர். இது மட்டுமல்ல தனிக் குடிநீர் தொட்டி, தனிக் கிணறு, தனி சுடுகாடு, இருக்கை பாகுபாடு எனத் தீண்டாமையின் பல வடிவங்களும் வழக்கத்திலுள்ளது. இந்த நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, மாநிலம் முழுவதும் தலித்துகளுக்கு எதிராக 98 வகையான தீண்டாமை உயர்சாதி சமூகங்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. தலித் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு 53.8% அரசு தொடக்கப் பள்ளிகளில் அதிகமாக இருப்பதாக அறிக்கை காட்டுகிறது. குழந்தைகள் மதிய உணவைப் பெறும்போது அவர்களை தனி வரிசையில் உட்கார வைப்பதும், பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதும் என தீண்டாமை குழந்தைகள் வரை தலைவிரித்தாடும் மாநிலத்தின் மாடல் தான் குஜராத் மாடல்.
பில்கிஸ் பானோ என்ற இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்முறை செய்து, 3 வயது குழந்தையை தரையில் அடித்தே கொன்ற கயவர்களுக்கு சில வருடங்களில் விடுதலையும், அதற்கு உற்சாகமான வரவேற்பும் அளிப்பது தான் குஜராத் மாடல். ஆயிரக்கணக்கான முசுலீம்களைக் கொத்து கொத்தாக இனப்படுகொலை செய்து, பெண்களை, குழந்தைகளை வன்கொடுமை செய்து சாகடித்தவர்கள் தண்டனைகளே இல்லாமல் திமிரோடு வலம் வருவது தான் குஜராத் மாடல். மக்களின் உயிரையும் பொருட்படுத்தாத வகையில் உறுதித் தன்மையற்ற மோர்பி பாலத்தை அமைத்து 130பேர் ஆற்றில் விழுந்து இறக்கக் காரணமானவர்களின் மீது எந்தக் கோவமும் ஏற்படாத மக்கள் பரிசளித்த வெற்றி தான் குஜராத் மாடல்.
பாஜக அறிவித்த இலவசங்கள்
ஒரு அரசு வழங்கும் இலவசம் என்பது ஏழை எளிய மக்களின் உரிமையாகும். ஆனால் அந்த இலவசங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சி சீரழிவதாக மிகவும் வருந்தியவர் தான் மோடி. அது மட்டுமல்லாமல் இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாசகவின் வழக்கறிஞரே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வளவு கடுமையாக எதிர்த்தவர்கள் தான் தேர்தல் அறிக்கையில் இலவசக் கல்வி, கிரைண்டர், சிலிண்டர், மருத்துவம், பெண்களுக்கு இலவச பைக், குறைந்த விலை எண்ணெய் என இலவசங்களை அள்ளியிறைக்கும் அறிவிப்புகளை வெளியிட்டது. கொஞ்சமும் கூச்சமேயில்லாமல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டே இருக்கும் மோடியும், பாசகவினரும் எழுப்பும் வீர முழக்கமே குஜராத் மாடல்.
பெரும்பான்மையான மக்கள் திரளை மதவாதம் என்னும் கூட்டுப் பரவசத்திற்குள் ஆட்படுத்தும் சமயத்தில், உண்மைத் தன்மைகளை விளக்கும் ஜனநாயக அமைப்புகள் வளர வேண்டும். தமிழ்நாட்டில் இப்படியாக ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்புகள் இந்த மதவாதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால் குஜராத் போன்ற இந்துக்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் மாநிலத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ், பச்ரங்தள் உள்ளடங்கிய சங்பரிவார கும்பல்கள் தான் அதிகமிருப்பதால் மக்களின் மனநிலையை இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையாக எளிதில் மாற்றி விடுகின்றன.
மோடி கும்பலின் குஜராத் மாடல், குஜராத் தேர்தலின் போது நடைபெற்ற இமாலயப் பிரதேசத்தின் தேர்தலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் எதிரொலிக்கவில்லை. அங்கெல்லாம் பாசகவினர் தோற்றிருக்கிறார்கள். அங்கும் மக்கள் காங்கிரசின் மீது கொண்ட நம்பிக்கையினால் அதனை வெற்றி பெற வைக்கவில்லை. பாசக ஆட்சியின் மீது ஏற்பட்ட வெறுப்பினால் காங்கிரசிற்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். தேசியக் கட்சிகளால் மாநில மக்களின் உண்மையான பிரச்சனைகள் எப்பொழுதும் தீர்க்கப்படப் போவதில்லை. மாநிலக் கட்சிகளும், மக்களின் பிரதிநிதிகளாக சனநாயக அமைப்புகளும் வலுவாக ஊன்றும் இடத்தில் தான் உண்மையான வளர்ச்சியும், ஏற்றத்தாழ்வற்ற சமூகமும் உருவாக முடியும். எனவே, இந்திய ஒன்றியத்தின் பன்மைத்துவத்தையும், நல்லிணக்கத்தையும், மதச்சார்பின்மையையும் அழிக்கும் மாடலே குஜராத் மாடல். அதனை பரவ விடாது தடுக்கும் விதமாக சனநாயக அமைப்புகளை வலுபடுத்துவோம். பாசிசத்தை வீழ்த்துவோம்.