கறுப்பினத்தவர் அரசியலை திரில்லர் கதைக்குள் கடத்திய ‘சின்னர்ஸ்’ திரைப்படம்

கறுப்பினத்தவர்கள் உலகில் பல பகுதிகளில் நிறவெறியர்களால் கடும் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிரார்கள், இன்றும் அந்த நிலை நீடித்தது வருகிறது. வரலாற்று ரீதியாகவும், கறுப்பினத்தவர்களின் வலியையும் அவர்களின் வாழ்வியலையும் பிரதிபலிக்கும் பல படங்கள் உலகம் முழுதும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த படங்களை இயக்குவதில் ஒரு முக்கிய பங்கை சமீப காலங்களில் வகிப்பவர், ஜோர்டான் பீலே என்கிற கறுப்பின திரைப்பட இயக்குநர்.

கெட் அவுட் (Get Out), நோப் (Nope), அஸ் (Us) போன்ற படங்களை இயக்கியவர். இவர் இயக்கும் படங்கள் பொதுவாக திரில்லர் வகை படங்களாகவே வெகுஜன மக்களால் பார்க்கப்படுகிறது. ஆனால் இவர் ஒரு திரில்லர் கதைக்குள் கறுப்பின அரசியலை லாவகமாக கலந்து பார்க்கும் வெகுஜனங்களை மிக இயல்பாக தன்னுடைய திரைப்படங்கள் மூலம் கறுப்பின அரசியலை கடத்துவார். இத்தனைக்கும் படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் கறுப்பர்களே நடிப்பார்கள் ஆனால் அரசியல் வயப்படாமல் இவரின் திரைப்படங்களை பார்க்கும் மக்கள் ஒரு திரில்லர் படம் தான் பார்க்கிறோம் என்ற எண்ணத்தில் தங்களை அறியாமலேயே இந்த அரசியலை உள்வாங்கிக்கொள்கிறார்கள். 

இந்த பாணியில் தற்போது வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம் தான் சின்னர்ஸ் (Sinners). பிளாக் பாந்தர் (Black Panther) என்கிற திரைப்படத்தை இயக்கிய ரையன் கூக்லர் (Ryan Coogler) இந்த படத்தை இயக்க மைக்கேல் பி. ஜார்டன் இரட்டை வேடங்களில் தோன்ற மற்றும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் ‘சின்னர்ஸ்’. முதல் உலகப்போரில் சண்டையிட்டு பின்னர் சிகாகோ நகரின் குண்டர்களிடம் பணிபுரிந்து பின்னர் அவர்களின் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு 1932-ஆம் ஆண்டு மிசிசிப்பி (Mississippi) மாகாணத்தின் க்ளார்க்ஸ்டேல் (Clarksdale) நகரத்திற்கு வந்தடைகிறார்கள் கறுப்பின இரட்டையர்களாகிய ஸ்மோக் (Smoke) & ஸ்டாக் (Stack).

தாங்கள் கொள்ளையடித்து வந்த பணத்தை வைத்து கறுப்பர்களுக்கான ஒரு இரவு மதுபான மற்றும் கேளிக்கை விடுதியை ஜுக் ஜாயின்ட் (Juke Joint) எனும் பெயரில் தொடங்க முடிவு செய்து ஒரு இடத்தை வாங்குகிறார்கள். அந்த விடுதியில் இசைக்கருவிகள் இசைத்து ஆடிப்பாடி மகிழ தங்களது சித்தப்பா மகனான ஜேமியை கிட்டார் வாசித்து ப்ளூஸ் (Blues) ரக இசையை வாசிக்க அழைக்கிறார்கள். மேலும் டெல்டா ஸ்லிம் (Delta Slim) எனும் பியானோ கலைஞர், தங்களது விடுதியில் அனைத்து வேலைகளையும் செய்ய பல நண்பர்களை அழைக்கிறார்கள். அந்த விடுதியை அமைத்து, அன்றிரவு அவர்களின் முதல் ஒன்றுகூடல் வெற்றிகரமாக முடிந்ததா என்பதே மீதிக்கதை. 

இந்த திரைப்படம் ஒரு ஹாரர் (Horror) வகை திரைப்படமாகவே ஆரம்பம் முதலே சொல்லப்பட்டுவந்தது. ஆனால் இயக்குநர் ரையன் கூக்லர் கறுப்பின மக்களின் நாட்டுப்புற கதைகளை வைத்தும், அவர்களின் பாரம்பரிய நாட்டுப்புற இசையை பிரதானமான ஒரு கதாபாத்திரமாகவே சின்னர்ஸில் பயன்படுத்தியுள்ளார். உதாரணத்திற்கு, இரட்டையர்களின் மற்றுமொரு தம்பியான ஜேமி ஒரு தேர்ந்த ப்ளூஸ் பாடகர் மற்றும் கிட்டார் கலைஞர். அவரின் தந்தை ஒரு பாதிரியார். அவர் அடிக்கடி உன்னுடைய இசைக்கு பெரும் சக்தி இருக்கிறது, அது பல இடங்களிலிருந்தும், காலங்களிலிருந்தும் பல சக்திகளை ஈர்க்கும் வல்லமை படைத்தது என்று கூறுவார். காட்சிகள் நகர, அன்றிரவு ஜூக் ஜாயின்ட்டில் தனது முதல் மேடையில் அவர் தனது முதல் பாடலை பாட, அந்த இடத்தில் கடந்தகாலத்திலிருந்தும், எதிர்காலத்திலிருந்தும் இசை கலைஞர்கள் வரத்தொடங்க, அந்த விடுதியில் உள்ள அனைவரும் வசியம் செய்யப்பட்டது போல நடனமாட, இந்த மொத்த காட்சிக்கும் அமைத்திருக்கும் பின்னணி இசையை சேர்த்து இந்த காட்சியை இயக்குநர் அவர்கள் மாய எதார்த்தவாத (Magical Realism) பாணியில் மிகவும் அற்புதமாக படம்பிடித்து இருப்பார். 

இந்த திரைப்படத்தில் வில்லன்களாக வருவது ஒரு ஐரிஷ் வாம்பயர் (Vampire). தமிழகத்தில் எப்படி நாட்டுப்புற கதைகளில் எப்படி எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட மாயக்கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் உள்ளனவோ, அதே மாதிரி வட அமெரிக்காவில் வாம்பயர் எனும் இரத்தக்காட்டேரிக் கதைகள் பிரபலமான ஒன்று. இது ஒரு ஹாரர் திரைப்படம் என்பதால் அந்த கதையை பயன்படுத்தி வில்லனாக வரும் இரத்தக்காட்டேரியை ஒரு ஐரிஷ் இரத்தக்காட்டேரியாக காண்பித்திருப்பார். ஏன் இங்கு ஐரிஷ் வந்தது?

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அயர்லாந்திலிருந்து பஞ்சம் காரணமாகவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் அமெரிக்காவில் வந்து தஞ்சமடைந்தார்கள் அயர்லாந்து மக்கள். வந்த இடத்தில் அவர்கள் அமெரிக்கர்களால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் மெல்ல அந்த நிலையை சமாளிக்க ஆரம்பித்தவுடன், தங்களது வெள்ளை நிறத்தை பயன்படுத்தி அங்குள்ள கறுப்பர்களை அமெரிக்கர்கள் எப்படி ஒடுக்குகிறார்களோ அதே போல அயர்லாந்து மக்களும் கறுப்பர்களிடத்தில் நிறவெறியை வெளிப்படுத்தி அவர்களை துன்புறுத்தினர்.

இதனை பிரதிபலிக்கும் விதமாக அந்த வில்லனை ஒரு ஐரிஷ் இரத்தக்காட்டேரியாகவும், ஆனால் ஐரிஷ் மக்களும் அமெரிக்கர்களால் ஒரு காலத்தில் பாதிக்கப்பட்டதால் இந்த வில்லன் கதாபாத்திரம் இரத்தகாட்டேரியாக மாறி தன்னுடைய முன்னோர்களிடம் சென்று சேர முடியாத நிலை எனக்கு உள்ளது என்றும், இந்த விடுதியில் இசைக்கபட்ட இசை எப்படி எல்லா காலங்கலிளிருந்தும் நிறைய மக்களை அங்கு அழைத்ததோ, தானும் அந்த இசையால் ஈர்க்கப்பட்டுதான் உன்னை தேடிவந்தேன் என்று ஜேமியிடம் கூறி அவனை அழைத்துச் சென்று தன்னுடைய முன்னோர்களிடம் தொடர்புகொள்ள பயன்படுத்திக்கொள்வேன் என்று கூறுவார். ஒடுக்கப்டுகிறவன் பின்னாளில் அவனுக்கான உரிமைகள் கிடைத்தபின் எப்படி ஒடுக்குகிறவனாக மாறுகிறான் என்றாக இந்த கதாபாத்திரம் இருக்கிறது. 

இந்த திரைப்படத்தில் இசை மாபெரும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஒரு காட்சியில் மற்றொரு நபரை தங்களது விடுதியில் உதவிக்காக அழைக்க செல்லும் வழியில் ஒரு குழுவாக கறுப்பர்கள் சாலையோரம் பாட்டுப்பாடிக் கொண்டே பள்ளம் தோன்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களை பார்த்து பியானோ இசைக்களைஞனான டெல்டா ஸ்லிம் “தலைகுனிந்து அந்த பாடலை பாடாதீர்கள், தலைநிமிர்ந்து பாடுங்கள்” என்று கூற, ஜேமி அவரிடம் கேட்பான் “உங்களுக்கு அவர்களை ஏற்கனவே தெரியுமா” என்று. தெரியும் என்று டெல்டா ஸ்லிம் ஒரு கதையை கூறுவார். அந்த கதையும் முடிவில் டெல்டா ஸ்லிம் கூறுவார், “ப்ளூஸ் இசை இங்கு தோன்றிய இசை அல்ல, ஆப்ரிக்க நாடுகளில் நம் மக்கள் (கறுப்பின மக்கள்) அங்கு சுற்றித்திறந்த பொழுது பாடிய நமது இசையே, நம்மை இங்கு (அமெரிக்கா) கொண்டுவரும் பொழுது நாம் நம் இசையையும் இங்கு கொண்டு வந்து விட்டோம்” என்று கூறுவார். 

இறுதிக்காட்சியில் எல்லாம் முடிந்த பின்னர், தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று ஸ்மோக் நினைக்கும்பொழுது. அந்த இடத்தை உருவாக்க வேலை செய்த தன்னுடைய பல கறுப்பின நண்பர்களின் முகங்கள் சட்டென சில காட்சிகளாக நம் முன் வந்து செல்லும் பொழுது அனைத்தும் வீணாகிவிட்டதே என்கிற ஸ்மோக்கின் வலியை நம்மால் இங்கு உணரமுடிகிறது. அந்த ஏக்கத்துடன் நாம் படத்தை விட்டு வெளியே போகாமல் இருக்க திட்டமிட்டு தங்களை மறுநாள் காலை கூட்டாக கொலை செய்ய வரும், அந்த இடத்தை இரட்டையர்களுக்கு விற்ற வெள்ளை நிறவெறி அமைப்பான க்ளு கலக்ஸ் கிளானின் (Klu Klux Klan) தலைவன் மற்றும் அவனின் கூட்டாளிகளை ஸ்மோக் சுட்டு வீழ்த்தும் காட்சி நம்மை நிம்மதி பெருமூச்சு விடச்செய்கிறது. 

மிக ஆழமான உணர்வுகளை, தெளிவான அரசியலுடனும் வெகுமக்கள் இந்த கருத்துக்கள் அனைத்து சென்று செரும் வகையில் ஒரு ஹாரர் திரைப்படமாக சின்னர்ஸை உருவாக்கியதில் ரையன் கூக்லர் மற்றொரு கதவை கறுப்பின திரைப்பட இயக்குனர்களுக்கு திறந்துவிட்டிருக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »