சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்த மே 17 இயக்கத் தோழர்கள்

ஆதிக்க இந்தியை எதிர்த்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மார்ச் 11, 2026 அன்று சென்னை பார்க் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்தார். அவரையும் உடன் சென்ற தோழர்களையும் காவல்துறை தடுக்க முயற்சி செய்தது. அதையும் மீறி இந்தி எழுத்துக்களை அழித்த மே 17 இயக்கத் தோழர்கள் ‘ஆதிக்க இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!’ என முழக்கம் எழுப்பினர். அப்போது இந்தி திணிப்பிற்கு எதிராக பொதுமக்களும் இணைந்து முழங்கினர்.

தொடர்ந்து ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தோழர் திருமுருகன் காந்தி கூறியவை:

” ரயில்வேயில் இந்தியை திணிப்பதை எதிர்த்து கடந்த தாய்மொழி நாளிலே போராட்டம் நடத்தினோம். ஆயினும் அவர்கள் இந்தியை நீக்கவில்லை. தமிழை முதன்மையாக வைத்திருந்த இடத்தில் இப்போது இந்தியை வைத்திருக்கின்றார்கள். இதை எதிர்த்து சென்னை, கோவை, சிதம்பரம் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினோம். இப்போது சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்குள் நுழைந்து இந்தி எழுத்துக்களை அழித்திருக்கின்றோம்.

எல்லா ரயில் நிலையங்களிலும் இந்தி பேசுபவர்களே பெரும்பான்மையாக பணிபுரிகின்றனர். தமிழர்களுக்கு அங்கு வேலை கிடைப்பதில்லை. இந்தியை திணிப்பதால் இந்தி பேசுபவர்களுக்கே அங்கு வேலை கிடைக்கிறது. தேர்வுகள் இந்தியில் நடந்தால் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேலை கிடைக்குமா அல்லது தமிழர்களுக்கு கிடைக்குமா? வங்கி, எல்.ஐ.சி, ரயில்வே என அனைத்துத் துறைகளிலும் இந்தி பேசுபவர்களுக்கே வேலை கிடைத்தால், வரி கொடுப்பது மட்டும்தான் தமிழர்களின் வேலையா? எங்கள் குழந்தைகளுக்கு, எங்கள் மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே நிலையங்களில் ஏன் எங்கள் தமிழுக்கு இடமில்லை? இதைத்தான் நாங்கள் கேள்வி எழுப்பினோம். இந்தியை எல்லா இடங்களிலும் அவன் திணிக்கும்போது கைகட்டி நிற்பதா எங்கள் வேலை? எல்லா இடங்களிலும் இந்தித் திணிப்பை அழிப்போம். இது வெறும் அரசியல் அல்ல. (மக்களை நோக்கி) எல்லா இடங்களிலும் இந்தியைத் திணித்தால் நம் குழந்தைகள் தேர்வில் வெற்றி பெற முடியுமா? தென்னிந்தியாவும் வரி கொடுக்கிறது, வட இந்தியாவும் வரி கொடுக்கிறது. ஆனால் அவர்கள் குழந்தைகளுக்கு மட்டும் வேலை கிடைக்கிறது. எப்படி? இந்த ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகள் பலரும் இந்திக்காரர்கள். நாம் ஒழுங்காக டிக்கட் எடுத்து பயணிக்கிறோம். வட நாட்டில் அவ்வாறு செய்வதில்லை. ஆனால் நமக்கு வேலை கிடைக்கிறதா? நம் பிள்ளைகள் பொறியியல் படித்துவிட்டு ஸ்விக்கி, சோமடோவில் வேலை பார்க்கின்றனர். ஆனால் எல்லா ரயில்வே, வங்கியில் இந்தி பேசுபவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இதை யார் கேட்பது? நீங்கள் கேட்க வேண்டும்? நாம் கேட்டால்தான் நம் பிள்ளைகளுக்கு வேலை. நாம் கடினமாக உழைத்து நம் பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கிறோமே! ஆனால் வேலை கிடைப்பதில்லை அதற்காகத்தான் கேட்கிறோம்.” என்றார்.

மே பதினேழு இயக்கம் தொடர்ச்சியாக இந்தி எழுத்து அழிப்புப் போராட்டங்களை செய்து வருகிறது.

கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இந்தி அழிக்கும் போராட்டம்:

1965 ஆம் ஆண்டு மொழிப்போரில் உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு என கடிதம் எழுதி நஞ்சுண்டு தன் உயிரை ஈக்கம் செய்த கல்லூரி மாணவர் மொழிப்போர் இயக்கிய ”பீளமேடு தண்டபானி” நினைவாக மே 17 இயக்கம் போராட்டtத்தை முன்னெசுத்தது. கோவையில் மார்ச் 1, 2026 அன்று மத்திய ரயில் நிலையத்தில் முன்பாக நடைபெற்றது.

இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் கு ராமகிருஷ்ணன் மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் இந்த போராட்டத்தின் தலைமை சிறப்புரை வழங்கினர். மேலும் கண்டன உரை ஆற்றிய தோழர்கள்: தோழர் கலையரசன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), தோழர் சேதுபதி (மதிமுக), தோழர் ராவணன் (ஆதித்தமிழர் பேரவை), தோழர் நேருதாஸ் (திராவிட சுயமரியாதை கழகம்), தோழர் அன்பு மகேஷ் (திராவிட விடுதலைக் கட்சி) மற்றும் முன்னிலை வகுத்த தோழர்கள்: தோழர் கணபதி செல்வராஜ் (மதிமுக), தோழர் கௌசல்யா (சமூக செயற்பாட்டாளர்), தோழர் உமர் ஷரீப் (எஸ்டிபிஐ), தோழர் மாறன் மற்றும் தோழர் ராஜன் (மக்கள் அதிகார கழகம்), தோழர் ஆனந்தி (விடுதலை தமிழ் புலிகள்), தோழர் ராஜீவ்காந்தி (மக்கள் விடுதலை முன்னணி).

    இப்போராட்டத்தில் பல கட்சி தோழர்களும், தோழமை அமைப்பு தோழர்களும் மற்றும் மே 17 இயக்கத் தோழர்களும் ஆதிக்க இந்தி மொழிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் காவல்துறையிரையால் கைது செய்யப்பட்டனர்.

    சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஆதிக்க இந்தி அழிக்கும் போராட்டம்:

    தாய்மொழி உரிமை போரில் ஆதிக்க இந்தியை எதிர்த்து போராடி உயிர்நீத்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர் ’இராஜேந்திரன்’ நினைவாக மே 17 இயக்கம் முன்னெடுக்க ஆதிக்க இந்தியை அழிக்கும் போராட்டம் மார்ச் 1, 2026 அன்று சிதம்பரம் ரயில் நிலையத்தில் முன்பாக நடைபெற்றது. இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ’தோழர் பிரவீன் குமார்’ தலைமையில், இயக்கத் தோழர்களும் இந்தி மொழிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு சிதம்பரம் ரயில் நிலையத்தில் முற்றுகையிட்டு, இந்தி எழுத்துக்களை அழிக்க முற்பட்டபோது காவல்துறையினார் கைது செய்யப்பட்டனர்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Translate »