இந்திய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்தில் 21-வது நாளை எட்டியப்போது உடல்நிலை கவலைக்கிடமானாலும், உண்ணாவிரதம் தொடர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை அடாவடியாக கைது செய்திருக்கிறது காவல்துறை. 21 நாட்களானாலும் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையில் பின்வாங்க மறுத்து, தற்போது கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர் அபிஜித் திப்கே, பிரதமர் மோடி பதவி விலகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் இளைஞர்கள் தங்களை “கரப்பான் பூச்சி கட்சி” (Cockroach Janata Party) என்று அழைத்துக் கொள்கிறார்கள். இந்திய தலைமை நீதிபதி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கும் இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” என்று இழிவுபடுத்திய கருத்தை, அவமானமாக அல்ல, எதிர்ப்பின் அடையாளமாக மாற்றிக் கொண்டுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில், ஆட்சியாளர்கள் இழிவாகப் பயன்படுத்திய சொற்களை அரசியல் அடையாளமாக மாற்றிய நிகழ்வுகள் புதிதல்ல. அந்த வரிசையில் இந்தப் பெயரும் நிற்கிறது.
இந்த இயக்கத்தின் முக்கிய முகமாக அறியப்படும் அபிஜித் திப்கே, வேலைவாய்ப்பின்மை, அரசு ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் ஏற்படும் தாமதங்கள், தேசியத் தேர்வுகளில் நிகழும் முறைகேடுகள், கல்வி அமைப்பின் மீதான நம்பிக்கைச் சிதைவு போன்ற பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த இயக்கத்தை முன்னெடுத்து வருவதாக கூறுகிறார்.
தற்போது இந்த இயக்கத்தின் முதன்மைக் கோரிக்கை, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும். தேசிய அளவிலான தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிர்வாகக் குறைபாடுகளுக்கும், மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த விவகாரங்களுக்கும் பொறுப்பை ஏற்று பதவி விலக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மகுவா மொய்த்ரா, எழுத்தாளர் அருந்ததி ராய், மூத்த வழக்குரைஞர்கள், முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பல மாணவர் அமைப்புகள், இளைஞர் இயக்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.
தர்மேந்திர பிரதான் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என நடக்கின்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மனித உரிமைப் போராளி சோனம் வாங்சுக் அவர்கள் தன்னிச்சையாக முன்வந்து பங்கெடுத்துக் கொண்டார்.
சோனம் வாங்சுக் சுற்றுச்சூழல் ஆர்வலர், பொறியாளர், கல்வியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். லடாக் மாநிலத்தைச் சேர்ந்த இவர் லடாக் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தியவர். பனியை கோபுரமாக உறைய வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்கிற தொழில்நுட்பத்தை கண்டறிந்தவர்.
லடாக்கிற்கு அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் உள்ளூர் மக்களுக்கே நிலம், வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என உண்ணாவிரதம் இருந்தவர். லடாக்கை கார்ப்பரேட் நிறுவனங்கள் விலைக்கு வாங்குவது அனுமதிக்க மாட்டோம் என்று மக்கள் திரள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தியவர். இதனால் அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து 170 நாட்கள் சிறையில் தள்ளியது ஒன்றிய பாஜக அரசு.
அவர் 21 நாட்களாக தொடரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 10 கிலோ எடை அளவுக்கு குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தும், பலரின் உடல் நிலை மோசமான பின்னும், மோடி அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கி வரவில்லை. அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. உலகம் எங்கிலும் இருந்து கண்டனக் குரல்கள் எழும்பவே, சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக காவல்துறையினரைக் கொண்டு அப்புறப்படுத்தியுள்ளது பாஜக அரசு.
டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டம், இன்னும் நாடு முழுவதும் பரவிய மக்கள் இயக்கமாக மாறவில்லை. குறிப்பாக தென்னிந்தியாவில் இதுகுறித்த விவாதம் குறைவாக இருப்பதாகவும், தேசிய அளவிலான கவனம் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.
இந்திய அரசியல் வரலாற்றைப் பார்க்கும்போது, நீண்டகால மக்கள் போராட்டங்கள் அரசின் கொள்கைகளையே மாற்றிய நிகழ்வுகள் உள்ளன. 2020–21 விவசாயிகள் போராட்டம் அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், நூற்றுக்கணக்கான விவசாயச் சங்கங்களின் தலைமையில் டெல்லி எல்லைகளில் ஓராண்டுக்கும் மேலாக போராடினர். பல எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சமூக இயக்கங்கள் அவர்களுக்கு ஆதரவளித்தன. இறுதியில், மத்திய அரசு மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. மக்கள் இயக்கம் அரசு கொண்டுவரும் மக்கள் விரோத திட்டத்தை மாற்ற முடியும் என்பதை அந்தப் போராட்டம் நிரூபித்தது.
பாஜக மோடி அரசினால் கல்வி, வேலைவாய்ப்பு, தேர்வு நிர்வாகம் போன்ற பல துறைகளிலும் கொள்கைகளும் திட்டங்களும் மாறவில்லை. நீட் தேர்வு, போட்டித் தேர்வு, சிபிஎஸ்சி தேர்வு குளறுபடிகள் போன்றவற்றினால் மாணவர்கள் மறுதேர்வு எழுதும் நிலைக்கு உட்படுத்தப்பட்டு கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர். இதனால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவ்வாறுஅனைத்து இடங்களிலும் புரையோடிப் போயிருக்கும் மோடி அரசின் இந்த கொள்கை முடிவுகளுக்கு தனிநபர் பதவி விலகுவது தீர்வாக முடியாது.
எனினும் கரப்பான் பூச்சி கட்சியின் தற்போதைய போராட்டம் அளவில் சிறியதாக இருந்தாலும், இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பும் ஒரு புதிய அரசியல் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. இப்போராட்டத்திற்கு வரும் இளைஞர்களை டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறது. இன்று (19.07.2026) நாடாளுமன்ற பேரணியை அறிவித்தது. டெல்லி காவல்துறை இப்பேரணி எதிராக கடுமையான நெருக்கடியை கொடுத்து வருகிறது.
ஒரு அமைச்சரின் பதவி விலகல் மட்டுமே கோரிக்கைக்கு நிரந்தரத் தீர்வாகாது. இன்று ஒருவர் பதவி விலகினாலும், நாளை மற்றொருவர் அந்தப் பொறுப்பில் அமர்ந்தாலும் இதே நிலைப்பாடுதான் தொடரும்.
மக்கள் இயக்கங்கள் தனிநபர்களை மாற்றுவதற்காக மட்டுமல்ல, தவறான கொள்கைகளை மாற்றுவதற்காகவும் வலுப்பெற வேண்டும். பாஜக ஆட்சியாளர்களை நோக்கி கேள்வி கேட்பதும், வெளிப்படையான நிர்வாகத்தை வலியுறுத்துவதும், நீண்டகால மக்கள் நலனை நோக்கிய கொள்கைகளை கோருவதும் ஜனநாயகத்தின் அடிப்படை.
இளைஞர் படையைக் கொண்ட கரப்பான் பூச்சி கட்சி, பதவிகள் மாறுவதால் பாஜக அரசின் கொள்கைத் திட்டங்கள் மாறாது என்பதை உணர வேண்டும். இந்திய பார்ப்பன பனியா அதிகார வட்டத்தைப் புரிந்து கொண்ட சித்தாந்தங்களின் வலுக்கொண்டு கோரிக்கைகளை வடிவமைக்க வேண்டும். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் அமைப்பாக கரப்பான் பூச்சி கட்சி அமைய வேண்டும் என்பதே தேவை.
ஒருவரை பதவி விலக வைக்கும் கோரிக்கையை மாற்றி ‘ஒன்றிய அரசின் தேர்வு முறைகள் ஒழிய வேண்டும், தேசிய தேர்வு முகாமையை கலைக்க வேண்டும், கல்வி மாநில பட்டியலுக்கு மாற வேண்டும் போன்ற கோரிக்கைகளை மையப்படுத்தினால் ஒழிய மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு தீர்வு ஏற்படாது என்பதை முன்வைத்து தமிழ்நாட்டில் பலவேறு போரட்டங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.