தமிழ்நாட்டு கட்சிகள் காவிரி விடயத்தில் கூட ஒன்று சேராதது ஏன்? – திருமுருகன் காந்தி

கொளத்தூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் தோல்வி குறித்தும், இந்திய தேசியம்- தமிழ் தேசியம் குறித்தும், தமிழ்ச் சமூகத்தின் இறையாண்மை குறித்தும், ஈழ அரசியல் குறித்தும், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தின செய்தி ஊடகத்திற்கு ஆகத்து 16, 2026 அன்று வழங்கிய நேர்காணல்:

நெறியாளர்: நேயர்களுக்கு வணக்கம். இன்று நம்முடைய நேர்காணலில் மே 17 இயக்கத்தின் தலைவர் திரு. திருமுருகன் காந்தி அவர்களை நாம் சந்திக்கப் போகிறோம். வணக்கம் தோழர்!

திருமுருகன் காந்தி: வணக்கம்!!

நெறியாளர்: 2026 தேர்தலில் கொளத்தூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தோல்வி அடைந்தார். இப்போது அவர்கள் இந்த வாக்குப்பதிவை மறு ஆய்வு செய்ய சொல்கிறார்கள். அதில் இரு கருத்தும் இருக்கிறது. தேர்தல் ஆணையம் “எந்த பிரச்சனையும் இல்லை” என்று சொல்கிறது. திமுக “இதில் பிரச்சனை இருக்கிறது” என்கிறது. இதில் “மூன்று/ நான்கு ஈவிஎம் இயந்திரத்தில் பிரச்சனை இருக்கிறது” என்று சொல்கிறார்கள். இதை பற்றி உங்கள் கருத்து என்ன? உண்மையிலேயே ஈவிஎம் இயந்திரம் என்பது என்ன மாதிரியான ஒரு உண்மைத்தன்மை கொண்டது?

திருமுருகன் காந்தி: திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுடைய தொகுதி என்பது கவனத்திற்கு உள்ளான தொகுதி. அந்தத் தொகுதி மீண்டும் தேர்தலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, எங்களுக்கு அதில் ஒரு பெரிய நம்பிக்கை இல்லை. ஏனென்றால் எஸ்ஐஆரில் 70 ஆயிரம் வாக்குகள் அங்கு நீக்கப்பட்டன. தமிழ்நாட்டில் அதிகமாக வாக்குகள் நீக்கப்பட்ட தொகுதி கொளத்தூர் தொகுதி. திரு. ஸ்டாலின் அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்பது மோடியின் விருப்பமாக இருக்கும் பொழுது, அதே தொகுதியை தேர்ந்தெடுக்க வைத்ததில் எங்களுக்கு கேள்வி இருக்கிறது. திமுகவில் எப்படி அதை விட்டார்கள் என்கிற கேள்வி இருக்கிறது. இந்த இடத்தில் தேர்தல் தோல்வி நடந்திருக்கிறது என்றால், அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். நமக்குத் தெரியாது. ஆனால் அவர் தோற்றதை உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விடயமாகத்தான் நான் பார்க்கிறேன்.

மற்றபடி ஈவிஎம் இயந்திரம் பொறுத்தவரைக்கும் எங்களுக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. ஏனென்றால் அது இந்தியா முழுமைக்கும் பெரிய நம்பிக்கைக்குரிய பொருளாக இருந்ததில்லை. ஒரு பொறியாளராக பார்த்தால், அதை மீள் பொறியியல் செய்ய முடியும். இன்றைக்கு மீள் பொறியியல் செய்ய முடியாத விடயம் ஒன்றும் இல்லை. அது ஒரு மின்-இயந்திர கருவிதான். எலக்ட்ரோ மெக்கானிக்கல்- எலக்ட்ரானிக் கருவிதான் அது. அதை எங்கிருந்து வேண்டுமானாலும் மீள் நிரலாக்கம் (Reprogramming) செய்யலாம். அது இயந்திர கருவி கிடையாது. பட்டனை அழுத்தினால் மட்டும் வேலை செய்யக்கூடிய ஒரு இயந்திர கருவி கிடையாது. அது மின்னியல் மின்னணு கருவிதான். அதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கையாளுவதற்குரிய சாத்தியம் உள்ள இயந்திரம்தான் அது. அதை மோடி அரசு திரும்ப திரும்ப பயன்படுத்திக்கொண்டே இருக்கிறது என்றால், நிச்சயமாக சந்தேகத்திற்குரிய ஒரு விடயமாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

நெறியாளர்: இந்திய தேசியத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று நீங்கள் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறீர்கள். அது என்ன வகையான போராட்டம்? இந்திய தேசியமும் தமிழ் தேசியமும் எப்படி இரு வேறுபட்டு இருக்கின்றன? மொழியினால் மட்டும்தான் வேறுபட்டு இருக்கிறதா? அல்லது வேறு என்ன காரணங்கள்?

திருமுருகன் காந்தி: இப்போது இந்திய அரசாங்கம் என்று எதை சொல்கிறோம்? ஒன்றிய அரசு என்று சொல்கிறோம். மத்திய அரசாங்கத்தை சொல்கிறோம். ஒன்றிய அரசுக்கு மக்கள் கிடையாது, நிலப்பரப்பு கிடையாது, பண்பாடு கிடையாது, ஒரு மொழி கிடையாது, ஒரு சமூகத்தை குறிப்பது அல்ல.

ஆனால் தமிழ்நாடு என்பது ஒரு சமூகத்தை, ஒரு பண்பாட்டை, ஒரு மொழியை, ஒரு நிலப்பரப்பை, மக்களை குறிக்கிறது. அப்போது யாருக்கு இறையாண்மை வேண்டும் என்றால், எங்கே மக்கள் இருக்கிறார்களோ, எங்கே சமூகம் உயிர் வாழ்கிறதோ, எங்கே பொருளாதார உற்பத்தி நடக்கிறதோ, (”தமிழ் தேசியம்”) அங்குதான் இறையாண்மை வேண்டும்.

ஆனால் நம்முடைய இந்திய தேசிய கட்டமைப்பில் என்ன ஆயிற்று என்றால், இறையாண்மை என்பது ஒன்றிய அரசின் கையில் கொண்டு கொடுக்கப்பட்டது. நிலை இல்லாத ஒருவருக்கு, மனிதனாகவும் இல்லாத, சமூகமாகவும் இல்லாத ஒரு அதிகார கட்டமைப்பிற்கு கொடுக்கப்படுகிறது. அந்த அதிகார கட்டமைப்பை யார் வைத்திருக்கிறார்கள்? பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள். உயர்சாதிக்காரர்கள் வைத்திருக்கிறார்கள். அதானி, அம்பானி வைத்திருக்கிறார்கள். இந்தியாவினுடைய இறையாண்மை என்பது அதானி, அம்பானிக்கும் உயர்சாதிக்காரர்களுக்கும் இடையே கூறு போடப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசு அங்குதானே நிற்கிறது.

ஒன்றிய அரசு என்பது அம்பானி, அதானி, உயர்சாதிக்காரர்கள் போன்றோரின் அதிகார கட்டமைப்பு. அதில் தமிழ்நாட்டிற்கு என்ன பங்களிப்பு இருக்கிறது? தமிழ்நாட்டிற்கு என்ன விதமான பங்கு கிடைத்திருக்கிறது? ஒன்றுமே கிடைக்கவில்லை. நாம் மக்களை வைத்திருக்கிறோம், மொழியை வைத்திருக்கிறோம், வரலாறை வைத்திருக்கிறோம். நமக்கு ஒரு பண்பாடு இருக்கிறது. ஒரு பொருளாதார உற்பத்தி இருக்கிறது. இத்தனையும் வைத்திருக்கக்கூடிய நமக்கு எந்தவிதமான அங்கீகாரமும் இல்லாத ஒரு நிலை. நமக்கு நாமே முடிவெடுத்துக்கொள்வதற்கு கூட அங்கீகாரம் இல்லாத ஒரு நிலை. நம்முடைய ஊரில் நம்முடைய மொழியில், நம்முடைய தமிழ் தாய் வாழ்த்தைப் பாடுவதற்கு நாமே தீர்மானம் போட வேண்டியிருக்கிறது.

யோசித்துப் பாருங்கள். ஜப்பான்காரன், “ஜப்பான் மொழியில் நாங்கள் வாழ்த்து பாடுவதை எங்களுடைய உரிமையாக பெறுகிறோம்” என்று எவனாவது சட்டசபையில் தீர்மானம் போடுவானா? அதுவும் ஒவ்வொரு மாநில அரசும் நிறைவேற்றிக்கொண்டே வருகிறது. அப்போது இது எதை சொல்கிறது? உங்கள் ஊரில் உங்கள் மொழிக்கு பதிலாக வேறு எந்த ஒரு மொழியையும் முன் நிறுத்த முடியும். உங்கள் பண்பாட்டை தவிர வேறு யாரோ ஒரு பண்பாட்டை முன்னிறுத்திக்கொள்ள முடியும். உங்கள் அரசியலில் வேறு அரசியலை திணித்துவிட முடியும். அப்படியென்றால் இது எப்படி நமக்கான ஒரு அரசியலமைப்பு? திராவிடமும் தமிழ் தேசியமும் இந்த புள்ளியில்தான் முன்னுக்கு நகர்கின்றன.

நெறியாளர்: நீங்கள் சொல்ல வருவதை பார்த்தால் தமிழ் தேசியத்தில் ஒரு குரலாக தனி தமிழ்நாடும் இருக்கிறதா?

திருமுருகன் காந்தி: தேசியம் என்பதை பல்வேறு வகையில் புரிந்துகொள்ள முடியும். அதை ஒரு சின்ன விவாதத்தில் சொல்லி முடித்துவிட முடியாது. உங்களுடைய இறையாண்மை, தன்னாட்சி சுயஆட்சி, சுயநிர்ணய உரிமை, மாநில ஆட்சி… இப்படி எதுவாக சொன்னாலும், அதனுடைய இறுதி இலக்கு என்ன என்றால், “என்னுடைய எதிர்காலத்தை, என்னுடைய தலை எழுத்தை நான் முடிவு செய்கிறேன். வேறு எவனும் முடிவு செய்யக்கூடாது, வேறு எவனுக்கும் விருப்பப்பட்டதை என் தலையில் திணிக்க கூடாது”.

நல்லதோ கெட்டதோ நான் பார்த்துகொள்கிறேன். நான் சம்பாதிக்கிறேன். நான் உழைக்கிறேன். நான் சாப்பிடுகிறேன். என் தலைவிதியை நான் முடிவு செய்கிறேன். என் வழியை நான் முடிவு செய்கிறேன். நீ யார்? நான் இப்படி இருக்க வேண்டும். இந்த சட்டையை போட வேண்டும். இந்த சோற்றை திண்ண வேண்டும். இந்த பாட்டை பாட வேண்டும். இந்த மொழியில் பேச வேண்டும்” என்று சொல்கிறாய். நீ யார்? இவ்வளவுதான். இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

நெறியாளர்: திராவிட கழகங்கள் அதாவது அதிமுக, திமுக – இந்த இரண்டு பெரிய கட்சிகள் மீதும் உங்களுக்கு மாற்று கருத்துகள் இருக்கின்றன. நீங்கள் விமர்சனம் செய்துகொண்டு இருக்கிறீர்கள். அவர்கள் ஏதாவது செய்தால் அதற்கான விமர்சனங்களையும் அதற்கான போராட்டங்களையும் நீங்கள் முன்னெடுக்கிறீர்கள். ஆனால் இந்த திராவிட கட்சிகளுடைய ஆதிக்கமோ, அதனுடைய செயலாக்கமோ, அதனால் தமிழ்நாட்டில் 50, 60 ஆண்டுகளில் பங்களிப்பு இல்லவே இல்லை என்று மறுக்க முடியுமா?

திருமுருகன் காந்தி: திராவிட கட்சிகள் பெரும் பங்களிப்பை தமிழ்நாட்டில் செய்திருக்கிறார்கள். இந்திய சூழலுக்குள்ளாக, இந்திய அரசாங்கம் மாதிரி ஒரு அரசாங்கத்தை வைத்துக்கொண்டு, டெல்லிக்காரன் மாதிரி ஒரு கும்பலை வைத்துக்கொண்டு, நாம் இவ்வளவு மாற்றங்களை கொண்டு வருவது என்பது பெரும் போராட்டம். அதை செய்திருக்கிறார்கள். ஆனால் ”ஒரு மக்கள் இயக்கத்திற்கு ஒரு அரசை இன்னும் நேர்த்தியானதாக மாற்ற வேண்டிய பொறுப்பு இருக்கிறது” என்று கூற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போது அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை சொல்லி காட்ட வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. பாராட்டு பத்திரம் பாடுவதற்கு நாம் எதற்கு? அதற்கு அரசவை கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாராட்டு பாடுவார்கள்.

நெறியாளர்: இங்கே ஈழ அரசியல் சார்ந்து இருக்கின்ற பழ. நெடுமாறன் அவர்களை பற்றி உங்கள் கருத்து?

திருமுருகன் காந்தி: அவர் மிக நெருக்கமான ஒரு மூத்த தலைவர். அவர் மிக முக்கியமான நிகழ்விலும் பங்கெடுத்திருக்கிறார். அவருக்கு வயது அதிகம் என்பதனால் நாங்கள் எல்லா இடத்திலும் கேட்பதில்லை. மற்றபடி 10 வருடத்திற்கு முன் எங்கள் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அவர் வந்திருக்கிறார், ஐயா வெள்ளையன் வருவார், வீரசந்தானம் வருவார். எல்லோரும் இணைந்துதான் மே 17 இயக்கம் நடத்தியிருக்கிறோம். நாங்கள் சீமானையும் அழைத்திருக்கிறோம். அதில் வேறுபாடு இருக்க கூடாது என்று தான் விரும்பினோம். ஒரு கட்டத்தில் (15 ஆண்டுகளுக்கு முன்னால்) அவர்கள் எதிர்நிலை எடுக்கும் பொழுது நாங்கள் வெளிப்படையாக எதிர்நிலை எடுக்க வேண்டிய ஒரு நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டது. எங்களுடைய எல்லா நிகழ்சிகளிலும் தோழர் வேல்முருகன் பங்கெடுத்திருக்கிறார், தோழர் தனியரசு பங்கெடுக்கிறார், தோழர் அன்சாரி பங்கெடுக்கிறார், தோழர் ஜவாஹிருல்லா பங்கெடுப்பார், எஸ்டிபிஐ கட்சி வரும். இப்படி எல்லோருமே எங்களோடு இணக்கமாகத்தான் இருப்பார்கள்.

நாங்கள் வரலாறு மீட்பு மாநாடு நடத்தினோம். பாளையக்கார வரலாறை மீட்டெடுத்து, அதனுடைய தன்மை என்ன என்பதை சொல்லியிருக்கிறோம். 12 மாநாடு நடத்தியிருக்கிறோம். யார் அதை பற்றி பேசியிருக்கிறார்கள்? ஒரு செய்தி கூட வெளிவருவது கிடையாது. வரலாற்றில் இதுவரைக்கும் வெளியே வராத தகவல்களை எல்லாம் எடுத்து வெளியே கொண்டு வந்திருக்கிறோம். எல்லா கட்சிகளையும் அழைத்திருக்கிறோம். அதிமுகவையும் அழைத்தோம், திமுகவையும் அழைத்திருக்கிறோம். ஆனால் இரண்டு கட்சியும் வந்ததில்லை.

நான் சொல்வது: பொதுவான நிகழ்ச்சிகள் என்றால் எல்லாரும் ஒன்றாக வர வேண்டும். தமிழ்நாட்டினுடைய மாநில கட்சிகள், தேர்தல் சமயத்தில் சண்டை போடுங்கள், போட்டி போடுங்கள். அது தேர்தல். தேர்தல் முடிந்ததற்கு பின்னால் ஏன் அந்த எதிர்ப்புணர்வோடு, பகையோடு இருக்க வேண்டும்? பொது விடயங்களில் எல்லாம் ஒன்றாக சேரலாமே. காவிரி விடயத்தில் ஒன்றாக சேருவதில் என்ன இருக்கிறது? அந்த மாதிரி சேர வேண்டும் என்கிற ஒரு பண்பாடு இங்கே வர வேண்டும். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம். முடிந்த அளவு நாங்கள் விமர்சித்தாலும் கூட நாங்கள் மாநில கட்சிகளை, எல்லோரையும் அரவணைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அதில் காங்கிரஸ், பாஜகவை தவிர மற்றவர்களை அரவணைப்பதில் எங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் கிடையாது.

நெறியாளர்: காங்கிரஸ் என்று சொல்லும்போது, அது இங்கேயும் இருந்த ஒரு கட்சிதானே? நம் தமிழ்நாட்டிலும் இருந்த ஒரு கட்சி தானே?

திருமுருகன் காந்தி: பெரும் துன்பங்களை தமிழனுக்கு கொடுத்த கட்சி காங்கிரஸ். 300 பேரை மொழிப்போரில் சுட்டு படுகொலை செய்த கட்சி. ஈழ படுகொலையின் பொழுது ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்படுவதற்கான காரணமாக இருந்த கட்சி காங்கிரஸ். அதை ஒரு காலத்திலும் தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

நெறியாளர்: தமிழ் தேசியம் என்கிற ஒரு கொள்கையை இங்கே இருக்கிற சில தமிழர்களே ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அது பற்றியான உங்கள் கருத்து என்ன? (பாஜக, காங்கிரஸ் கட்சிகளை) எப்படி பார்க்கிறீர்கள்?

திருமுருகன் காந்தி: வெள்ளைக்காரன் காலத்தில் இங்கே போராடியவர்களை எல்லாம் அடித்து நொறுக்கியது நம் ஊர் போலீஸ்தான். அந்த போலீஸ் நம் ஊர்க்காரர்கள்தான். வெள்ளைக்காரன் கிடையாது. வெள்ளைக்காரன் அதிகாரத்தில் இருந்தான். அவனுக்கு கூலி வேலை பார்ப்பதற்கு ஒரு கும்பல் எப்போதும் இருந்தது. விடுதலைப் போராட்ட தியாகிகளை அடித்து நொறுக்கியது. என்றைக்குமே ஆளும் வர்க்கத்தோடு சேர்ந்து நிற்பதற்கு என்று ஒரு கும்பல் இருக்கும். அவர்களை தமிழர்களாகவோ அல்லது போராளிகளாகவோ பார்க்கவே முடியாது. ஆதாயத்திற்காக அதிகாரத்தோடு நிற்பார்கள். ஜாலியன்வாலாபாக்கில் துப்பாக்கியால் சுட்டவர்கள் எல்லோரும் வெள்ளைக்காரனா? இந்தியர்கள்.

வெள்ளைக்காரன் காலத்தில் பெருங்காமநல்லூரில் 17 பேரை அடித்துக் கொன்றார்கள். அதற்கு உத்தரவிட்டது எல்லோருமே தமிழ்நாட்டுக்காரர்கள் தானே? தமிழ் பேசுபவர்கள் தானே? அதை என்ன சொல்வீர்கள்? அவர்களை எல்லாம் என்ன சொல்வீர்கள்? இதில் நீங்கள் என்ன அரசியலை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் ஒருவரை தமிழனா இல்லையா என்று முடிவு செய்ய முடியும்.

ஈழப் படுகொலை நடந்த பொழுது ப. சிதம்பரம் உள்துறை அமைச்சர். அவரை தமிழர் என்று கொண்டாட முடியுமா? ஒரு இனம் அழிகிறது. தன்னுடைய இனம் அழிக்கப்படுகிறது. அதை பார்த்துக்கொண்டு, அதன் மேல் எந்தவிதமான ஈடுபாடும் இல்லாத ஒருவரை, அதற்கு எதிரான நிலைப்பாடு, ஈழப் படுகொலை நடப்பதற்குரிய அனைத்து உதவிகளையும் செய்யக்கூடிய ஒருவரை நீங்கள் தமிழர் என்று கொண்டாடுவதற்கான தேவையே இல்லை.

காணொளி: https://youtu.be/N0bHtNv75pY?si=3ytr_no54_3854-Q

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »